Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 95

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அன்றைய தினத்திலிருந்து, ஆன்லைன் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தம் செய்யாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது.

அவள் ஊருக்குச் சென்று விட்டாலும், இப்படி தங்களுக்குப் பயிற்சி கொடுப்பதை எண்ணி திருப்திப்பட்டுக் கொண்டே வகுப்பைக் கவனித்தார்கள் அந்தப் பெண்மணிகள்.

அதே மாதிரி, தனது வருங்கால மருமகளின் சாமர்த்தியத்தை எண்ணி மெச்சிக் கொண்டார் கவிபாரதி.

எப்படியும் இந்த வகுப்பு ஒரு நாளைக்கு மூன்று மணி நேரங்கள் நடைபெறுகிறது என்பதால், அவள் செல்பேசியையே பார்த்துக் கொண்டு இருந்தால் கண் எரியும். எனவே, தான் அவளுடன் பேசும் நேரங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென நினைத்தான் ஸ்வரூபன்.

ஆனால்,”அப்படியெல்லாம் நாம் ஒன்னும் ரொம்ப நேரம் பேசிக்கிறதும் இல்லை, நாள் பூராவும் மெசேஜ் பண்ணிக்கிறதும் இல்லை. சோ, நீங்க இப்படி பண்ணனும்னு அவசியமில்லை” என்று அவனிடம் அழுத்தமாக உரைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

தான் மட்டும் இப்படி ஊருக்கு வந்தும் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்க மற்றவர்களை மட்டும் எங்கேயும் செல்லக் கூடாது எனத் தடை விதிப்பது தவறு எனப் புரிந்து கொண்டவளோ,”நீங்க ஆஃபீஸூக்குப் போயிட்டு வாங்க” என்று கூறி அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.

“ஹேய்! இட்ஸ் ஓகே டா. நம்மக் கம்பெனிஸ் தானே? வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கிறோம்” என்று அவளிடம் சொல்லி விட்டனர் காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்.

இவர்களுடன் சேர்ந்து மஹாபத்ராவும் கூட, அவ்வப்போது வொர்க் ஃப்ரம் ஹோம் பார்த்துக் கொண்டாள்.

தான் சொன்னதைப் போலவே, அவர்கள் மூவருக்கும் தோதான நாளில் வந்து ருத்ராக்ஷியைப் பார்த்து நலம் விசாரித்து விட்டுச் சென்றார் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

இப்படியாக சில நாட்களில், பூ வைக்கும் சடங்கிற்கான நாளையும் குறித்து விட்டிருந்தார் கவிபாரதி.

அதைச் சந்திரதேவ்விற்குக் கால் செய்து சொல்லி விட,”மஹா ம்மா. உன்னோட அப்பா, அம்மாவுக்கும் நான் இதைச் சொல்லிட்றேன்” எனத் தன் மருமகளிடம் தெரிவித்து விட்டுப் பிரியரஞ்சனிடம் விஷயத்தை உரைத்தார்.

“ரொம்ப சந்தோஷம் ங்க சம்பந்தி. நாங்களும் கண்டிப்பாக வர்றோம்” என்று அவரும் கூறி விட்டார்.

இந்தப் பூ வைக்கும் வைபவத்திற்கு, ஊரிலிருக்கும் பெண்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுச் செல்ல முடிவெடுத்தனர் கவிபாரதியும், மிருதுளாவும்.

ஏனெனில், ருத்ராக்ஷி ஊருக்குச் சென்றதில் இருந்து,”அவளுக்குக் கல்யாணம் முடிவானா அது உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அதையாவது எங்களுக்கு மறைக்காமல் சொல்லுவீங்களா?” என்று அவர்களிடம் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

“உங்களுக்குச் சொல்லாமலா? அவளுக்குக் கல்யாணம் முடிவு ஆனதுமே சொல்லிடுவோம்” என்று கூறியவர்களோ, ருத்ராக்ஷியின் நிச்சயத்தின் போது தான் அவளுக்குப் பார்த்திருக்கும் மணமகனைப் பற்றி மூச்சு விட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர் இருவரும்.

அதன் பின்னர், தன் மகனிடம் வந்த கவிபாரதியோ,”நாம தான் பூ, பழம் இதையெல்லாம் தட்டில் வச்சு அங்கே கொண்டு போகனும் ப்பா. அதை இங்கே இருந்தே வாங்கிட்டுப் போக முடியாது இல்லையா? அங்கே போயே வாங்கிக்கலாமா?” என்றார்.

“சரிங்க ம்மா. என்னென்ன தேவைன்னு எழுதி வச்சிடுங்க. நாமப் போறப்போ பஸ்ஸை விட்டு இறங்கினவுடனே அதையெல்லாம் வாங்கிடலாம்” என்று அவரிடம் கூறி விட்டான் ஸ்வரூபன்.

ஆனால், இவர்கள் தங்களுடன் எந்த உறவுமுறையிலும் இல்லாமல் இருக்கும் போதே, காஷ்மீரனின் திருமணத்திற்கு வண்டி அனுப்பி வரவழைத்து திருப்தியாக உபசரித்து அனுப்பி வைத்தவர்களோ, இப்போது தங்களது சம்பந்தி ஆகப் போகிறவர்களைப் பேருந்தில் வர அனுமதித்து விடுவார்களா என்ன?

அவர்களுக்காக எந்த வண்டியை அனுப்பினால் சௌகரியமாக இருக்கும் என்றெல்லாம் எப்போதோ முடிவு செய்து வைத்து விட்டனர் சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

“அவங்க எத்தனை மணி பஸ்ஸில் ஏறி வரலாம்னு பேசிட்டு இருக்காங்க ருத்ரா” என்று அவளிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் மிருதுளா.

“ஓஹ்ஹோ! நான் அவர்கிட்டேயும், அத்தை கிட்டேயும் பேசி வண்டியில் வர சொல்லிடறேன் க்கா. நீங்களும், உங்க வீட்டுக்காரரும், அதிலேயே வந்துரனும். சரியா?” என்று அவரிடம் வலியுறுத்திக் கூறினாள் ருத்ராக்ஷி.

“உத்தரவு ம்மா” என்று போலியானப் பணிவுடன் உரைத்து விட, இருவரும் இணைந்து நகைத்தனர்.

அதற்குப் பின்னர், ஸ்வரூபனுக்கு அழைத்து, இதை அவனிடம் தெரிவித்தாள் ருத்ராக்ஷி.

அவனோ,“நாங்களே வந்துடுவோம் மா. உங்களுக்கு எதுக்குச் சிரமம்?” என்று அவளிடம் மென்மையாக கூறி மறுத்துப் பார்த்தான்.

“அப்படியா? அப்போ நாமெல்லாம் ஒரே குடும்பம் இல்லையா ங்க?” என்று அவனிடம் வருத்தத்துடன் வினவிய பெண்ணவளிடம்,

“அச்சோ! அப்படியெல்லாம் நான் சொல்லலையே ம்மா!” என்று பதறிப் போய்க் கூறினான் ஸ்வரூபன்.

“அப்பறம் ஏன் இப்படி பேசுறீங்க? உங்க ரெண்டு பேரையும் நல்லா பாத்துக்கிறது எங்களோட பொறுப்பு தானே ங்க?” என்று அவனுக்கு விளக்கிச் சொன்னாள் ருத்ராக்ஷி.

“இல்லைம்மா. அங்கேயிருந்து வண்டி அனுப்பி, அப்பறம் நாங்க கிளம்பி வந்து… இதெல்லாம் எதுக்குன்னு தான். நைட் பஸ் ஏறினால் காலையில் வெள்ளனவே வந்துட்டுப் போறோம்!” என்று அவளிடம் சொல்லிப் பார்த்தான்.

“ம்ஹூம்! முடியவே முடியாது ங்க‌. நாங்க உங்களுக்கு ஆர்டர் போட்றோம். எங்களோட பணக்காரத் திமிரைக் காட்றதுக்கு இப்படியெல்லாம் பண்றோம்னு தயவு செஞ்சு தப்பாக நினைச்சிடாதீங்க! எங்களுக்கு உங்களோட சேஃப்டி, சௌகரியம் முக்கியம். அதனால் தான், இப்படி கேர் எடுத்துச் செய்றோம் ங்க” என்று அவனுக்குத் தங்களது எண்ணத்தை வார்த்தைகளை உபயோகித்து உணர்த்த முயன்றவளிடம்,

“உங்களைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா ம்மா? நாங்க அப்படி நினைக்கவும் மாட்டோம்! சிரமம் வேண்டாம்னு தான் நானும் நீ சொன்னதை மறுத்தேன்” என்று இவனும் கூற,

“இனிமேல் எந்தப் பேச்சும் கிடையாது. நாங்க வண்டி அனுப்புவோம். நீங்க அதில் தான் வர்றீங்க. மிருதுளா அக்காவும், அவங்க ஹஸ்பெண்ட்டும் உங்க கூட வருவாங்க” என்று அவனுக்கு உரிமையாக கட்டளையிட்டாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா. உங்க விருப்பம்” என்று கூறியவனோ, அதைத் தன் தாயிடம் உரைக்கவே, அவரும் கூட,”அவங்க இதைப் பண்ணுவாங்கன்னு எனக்குச் சந்தேகம் இருந்துச்சு ப்பா” என்று மகனிடம் கூறிப் புன்னகைத்தார் கவிபாரதி.

“ஹாஹா! நான் இதை யோசிக்கவே இல்லை ம்மா” என்றவனோ,

மிருதுளாவின் கணவன் வித்யாதரனைச் சந்தித்து ஊருக்குச் செல்வதைப் பற்றிப் பேசினான் ஸ்வரூபன்.

“அவங்களுக்கு உடுப்பு எடுத்துட்டுப் போய்க் கொடுக்கலாம்ல?” என்று அவனிடம் உரைத்தார் வித்யாதரன்.

“ஆமாம் ண்ணா. இங்கே இருக்கிற துணிக்கடையில் பார்க்கலாமா? இல்லை, அங்கே போய் எடுத்துத் தரலாமா?” என்று தன்னிடம் யோசனை கேட்டவனிடம்,

“இங்கேயே எடுத்துரு. அந்த ஊருக்குப் போனால், உங்களை எந்தச் செலவும் செய்ய விட மாட்டாங்க” என்று அவர்களது நல்ல மனதைப் பற்றி அறிந்து கொண்டவரோ அவ்வாறு சொல்லவும்,

“அப்போ நாம நாலு பேருமே போய் எடுத்துடலாம்” என்று கூறியவனோ,

அடுத்து வந்த நாட்களிலேயே, அதைச் செய்து முடித்தனர்.

தாங்கள் போட்டத் திட்டத்தின் படியே, ஊர் மக்களுக்கு எதையும் தெரிவிக்காமல் ஊருக்குச் செல்லத் தயாராகி விட்டார்கள் கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் மிருதுளா, வித்யாதரன்.

- தொடரும்
 
Top