Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 93

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“ம்ஹ்ம்! மருமக ஊருக்குக் கிளம்பியாச்சு. அப்பறம் உங்களுக்கு இனிமேல் வேலையே ஓடப் போறது இல்லை. அப்படித் தானே ம்மா?” எனக் கேட்டவரிடம்,

“ருத்ரா ஊருக்குப் போறது நமக்குப் புதுசா என்ன மிருதுளா ம்மா? இந்த தடவை இங்கே திரும்பி வர்றதுக்கு கொஞ்சம் அதிகமான நாள் ஆகும். அவ்வளவு தான்? ஆனாலும், பூ வைக்கிறது, புடவை எடுக்கிறது, நிச்சயம்ன்னு எல்லாத்துக்கும் நாமளும், அவங்களும் அங்கேயும், இங்கேயும் வந்துட்டுப் போயிட்டுத் தானே இருக்கப் போறோம்?” என்று அவரிடம் வினவினார் கவிபாரதி.

“அதுவும் வாஸ்தவம் தான் ம்மா” என்று அவர் கேட்டதை ஆமோதித்துப் பேசினார் மிருதுளா.

“சரி, சரி. அம்மா, ஸ்வரூபா! நீங்கப் பாத்துக்கோங்க! எதுனாலும் எங்ககிட்ட சொல்லுங்க. இப்போ நாங்க எங்க வீட்டுக்குப் போயிட்டு வர்றோம்” என்று அவர்களிடம் சொல்லி விட்டுத் தன் மனைவியுடன் சேர்ந்து தங்களது இல்லத்திற்குச் சென்று விட்டார் வித்யாதரன்.

அவர்கள் மூவரும் அவ்வாறு பேசிய சமயத்தில், தன்னவளுடைய விழியசைவில் தொலைந்து, அவளுடைய பிரிவில் துவண்டு போயிருந்தவனோ,

இனிமேல் அவளுடன், தான் செல்பேசியில் உரையாடப் போகும் நேரங்களில் மட்டும் தான் தன்னுடைய மனம் பூரிப்படையப் போகிறது என நினைத்து தன்னைத் தேற்றிக் கொண்டான் ஸ்வரூபன்.

இதே நினைவுகளுடன் தான் தன் தந்தை, தமையன் மற்றும் அண்ணியிடம் இணைந்து காரில் பயணித்துக் கொண்டிருந்தாள் ருத்ராக்ஷி.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்த காஷ்மீரன் மற்றும் அவனது அருகிலிருந்த மஹாபத்ராவும் அந்த ஊரைப் பற்றிய சம்பாஷணைகளில் மூழ்கிக் கிடக்கப், பின் சீட்டில் உட்கார்ந்து இருந்த சந்திரதேவ்வோ, உறங்கிக் கொண்டிருந்தார்.

அதனால், தன்னுடைய கைப்பேசியில், புலனத்தில் ஸ்வரூபனின் எண்ணைத் தேடி எடுத்து,’ஹாய்!’ என்றதொரு குறுந்தகவலையும் அனுப்பி விட்டுக் காத்திருந்தாள் ருத்ராக்ஷி.

அதைப் பார்த்தவுடன் அவனது முகம் பிராகாசித்துப் போயிற்று.

உடனேயே,’ஹாய் ங்க’ என்று தானும் அனுப்பினான் ஸ்வரூபன்.

‘கார்ல போயிட்டு இருக்கோம்’ என்று இவள் சொல்ல,

‘ஆமால்ல. காஷ்மீரன் சார் தானே வண்டி ஓட்டுறார்?’ என்று தட்டச்சு செய்து அவளுக்கு அனுப்பி வைத்தான்.

‘யெஸ்’ எனப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

‘அவங்க மூனு பேரும் ஊருக்குள்ளே வர்றப்போ எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வந்தாங்களே? இப்போ எப்படி தனியாகப் போயிட்டு இருக்கீங்க?’ என்று அவளிடம் கேட்டான் ஸ்வரூபன்.

‘அதெல்லாம் வர்ற அப்போவே பக்காவானப் பாதுகாப்புப் படலத்தோட தான் வந்திருக்காங்க. ஆனால் அவங்களை எல்லாம் இந்த ஊரோட எல்லையில் வெயிட் பண்ண வச்சிட்டு அவங்க மட்டும் ஊருக்குள்ளே வந்திருந்தாங்க. இப்போ, செக்யூரிட்டீஸ் கூடத் தான் ஊருக்குப் போயிட்டு இருக்கோம்’ என்று அவனுக்கு விளக்கிக் கூறினாள் காஷ்மீரனின் தங்கை.

‘பார்றா!’ என்று ஆச்சரியக்குறியுடன் குறுஞ்செய்தியை அனுப்பவும்,

ருத்ராக்ஷி,‘ஹாஹா! ஆமாம் ங்க’

இரவு நேரம் வந்ததும்,’சரிங்க‌. இப்போ தூங்குங்க. ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணுங்க’ என்று அவளுக்கு அறிவுறுத்தினான் ஸ்வரூபன்.

‘ஓகே ங்க’ எனக் கூறி அந்தக் குறுஞ்செய்தி பரிமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

இதையெல்லாம் அறியாத காஷ்மீரனோ, வண்டியை ஓட்டிக் கொண்டே,”பேசினது போதும் மா. நீ ரெஸ்ட் எடு” என்று தன் மனைவியிடம் அக்கறையாக உரைத்தான்.

“சரிங்க‌. உங்களுக்குக் காரோட்டும் போது கை வலிச்சதுன்னா என்னை எழுப்பி விடுங்க. நான் ஓட்றேன்” என்று அவனிடம் சொல்லி விட்டு உறக்கத்தை மேற்கொண்டாள் மஹாபத்ரா.

அதைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, தானும் இருக்கையில் சாய்ந்து கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பயணம் செய்த தமக்கையிடம்,”நீயும் தூங்கு டா!” என்று அவளிடம் வலியுறுத்திச் சொன்னான் காஷ்மீரன்.

“இல்லை ண்ணா. எனக்கு இப்போ தூக்கம் வரலை” என்றுரைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா” என்றவனோ, அவளிடம் அவ்வப்போது பேச்சுக் கொடுத்துக் கொண்டே வண்டியை இயக்கினான் அவளது அண்ணன்.

சில மணி நேரங்கள் கடந்ததும், அவர்களது கார் அந்த ஊர் எல்லைக்குள் நுழைந்து விட்டிருந்தது.

தன்னைத் தவிர, காரிலிருந்த மூவரும் உறங்கிக் கொண்டு இருப்பதால், வண்டியை ஒதுக்குப்புறமாக நிறுத்தி விட்டு,”மஹா ம்மா!” என்று தனது மனைவியை மென்மையான குரலில் எழுப்பினான் காஷ்மீரன்.

“ஹாங்! என்னங்க?” என்று அவனிடம் வினவினாள் மஹாபத்ரா.

“நாம ஊருக்குள்ளே வந்துட்டோம். இன்னும் கொஞ்ச தூரம் போனால், நம்ம வீட்டுக்குப் போயிடலாம்” என்று அவளிடம் சொன்னான் அவளது கணவன்.

“ஓஹ்! சரிங்க. அப்போ மாமாவையும், ருத்ராவையும் எழுப்புவோம்” என்று பின் சீட்டில் இடம் பெற்றிருந்த இருவரையும் எழுப்பி நேராக அமரச் செய்து தன் கணவன் கூறியதை அவர்களிடம் தெரிவித்தாள் காஷ்மீரனின் மனைவி.

“நல்லத் தூக்கம்!” என்று சந்திரதேவ்வும், ருத்ராக்ஷியும் பேசிக் கொண்டார்கள்.

“அப்படின்னா, இவ்வளவு நேரமும், தூரமும் தூங்காமல் வண்டியை ஓட்டிக்கிட்டு வந்தது என்னோட புருஷன் மட்டும் தானா?” என்று தன்னுடைய கணவனைப் பார்த்துக் குறும்புடன் கூறினாள் மஹாபத்ரா.

“ஆமாம்‌. அந்தப் பரிதாபமான ஜீவன் நான் தான் ம்மா” என்றான் காஷ்மீரன்.

“வீட்டுக்குப் போனதும் உங்களுக்கு ஸ்ட்ராங் ஆக ஒரு காஃபி போட்டுத் தர்றேன். அப்பறம் நானே என் கையால் சமைச்சுக் கொடுக்கிறேன்” என்று அவனுக்கு வாக்கு அளித்தாள் அவனது இல்லாள்.

“கடைசியில் எனக்கு அது தான் மிஞ்சும் போலிருக்கு ம்மா!” என்று கூறியவாறே காரைத் தங்களது வீட்டை நோக்கிச் செலுத்தினான் மஹாபத்ராவின் கணவன்.

“யாரும், எதுவும் செய்ய வேண்டாம் மா. நான் ஏற்கனவே சமையல்காரவங்க கிட்ட சொல்லிட்டேன். நாம போறப்போ சுடச்சுட சாப்பாடு தயாராக இருக்கும்” என்று அவர்களிடம் தெளிவாக உரைத்தார் சந்திரதேவ்.

“ஓகே மாமா” என அவருக்குச் சமர்த்தாகப் பதில் சொன்னாள் அவரது மருமகள்.

இவர்களது குறும்புப் பேச்சுக்களை மௌனமாக அமர்ந்து கொண்டு பார்த்திருந்தாள் ருத்ராக்ஷி.

“நீ என்ன எதுவுமே சொல்லாமல் வர்ற?” என அவளிடம் தன் ஐயத்தைக் கேட்டாள் மஹாபத்ரா.

“ஹாஹா! ரொம்ப நாள் கழிச்சு உங்க கூட எல்லாம் டிராவல் பண்ணிட்டு வர்றேனா? அந்தச் சந்தோஷத்தில் எதுவும் பேசத் தோனலை அண்ணி” என்றாள் அவளுடைய நாத்தனார்.

“ஆஹான்! அப்போ உனக்குப் பசிக்கலையா?” என வினவினாள் அவளது அண்ணி.

“ஊஹூம்! இல்லை ண்ணி” என்று கூறினாள் ருத்ராக்ஷி.

அவர்கள் வீட்டை அடைந்த போது, நால்வருக்கும் கொலைப்பசி! எனவே, உள்ளே சென்றதும், டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டனர்.

அவர்களது பசியை உணர்ந்து கொண்ட வேலையாட்களும் அவர்களுக்கு உணவைப் பரிமாறினர்.

அதை உண்டு முடித்ததும் தான், தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு தத்தமது அறைக்குள் போய் கட்டிலில் விழுந்து விட்டார்கள் நால்வரும்.

அதில், தாங்கள் வீட்டை அடைந்து விட்டதை ஸ்வரூபனுக்குத் தகவல் தெரிவித்து விட்டு உறக்கத்தைத்
தொடர்ந்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்

சனி & ஞாயிறு லீவ். திங்கட்கிழமை பார்ப்போம் ஃப்ரண்ட்ஸ்!
 
Top