Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 90

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்கள் பேசியதைக் கேட்டதும், மிருதுளா, கவிபாரதி மற்றும் ருத்ராக்ஷியைத் தவிர, அங்கேயிருந்த மற்றவர்களின் முகங்களில் அதிர்வுகளுக்கான சாயல்கள் தென்பட்டது.

இவையெல்லாம் தங்களுக்குப் பழக்கப்பட்டவையே என்ற பாவனையுடன் அமர்ந்திருந்த தனது நாத்தனாரைச் சங்கடமாக ஏறிட்டாள் மஹாபத்ரா.

உடனே அவளது கையை அழுத்திக் கொடுத்த ருத்ராக்ஷியோ,”நீங்க அமைதியாக வேடிக்கை மட்டும் பாருங்க அண்ணி. மத்ததை நம்ம மிருதுளா அக்காவும், கவிபாபரதி அம்மாவும் பாத்துக்குவாங்க” என்று அவளிடமும், தன் தமையன் மற்றும் தந்தையிடமும் முணுமுணுத்து விட்டு நிமிர்ந்தாள்.

“ங்கே! உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லி சொல்லியே பண்ணனும்னு நீங்க எங்களுக்கு ஏதாவது சட்டம் போட்டு இருக்கீங்களா என்ன?” என்று அவர்களைப் பார்த்து தன் மூக்கு விடைக்க கேட்டார் மிருதுளா.

அந்தக் கேள்வியில் வெளியே நின்றிருந்தவர்கள் திடுக்கிட்டுப் போய் விட்டனர்.

ஆனாலும்,”நாங்க அப்படி எதுவும் சொல்லலை க்கா! எல்லாரும் ஒன்னு மன்னாகத் தான், கிளாஸூக்கு வர்றோம், போறோம்! எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமேன்னு தான் கேட்கிறோம். அதுக்குப் போய், நீங்க இப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சுப் பேசலாமா?” என்றார் ஒரு பெண்மணி.

“அவங்க வீட்டுப் பொண்ணைப் பார்க்கிறதுக்காக அவங்க மூனு பேரும் வந்திருக்காங்க! அதை என்னன்னு உங்களுக்குத் தகவல் சொல்லனும்?” என்று அவர்களது பாணியிலேயே பதிலளிக்கவும்,

“ஓஹ்ஹோ! அதுக்குத் தான் வந்திருக்காங்களா? நாங்க கூட வேறெந்த விஷயத்துக்கோ வந்திருக்காங்கன்னுல்ல நினைச்சிட்டு இங்கே வந்துட்டோம்!” என்று தங்களது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறினர்.

“அதான், என்ன விஷயம்ன்னே தெரியாமல் நீங்க இங்கே வந்து ரவுண்ட் கட்டி கேள்வியாக கேட்டுட்டு இருக்கீங்க!” என்று அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்தார் மிருதுளா.

அவரது பேச்சு சாமர்த்தியத்தைப் பார்த்து அந்த வீட்டிலிருந்த மனிதர்கள் யாவரும் வியந்து, அவரை மெச்சும் பார்வை பார்த்தார்கள்.

“ஹிஹி! அது வந்து, உங்க வீட்டுக்குப் புது விருந்தாளிங்க வந்திருக்காங்களே! அதுவும் நமக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிற ருத்ரா பொண்ணோட வீட்டு ஆளுங்களாக இருக்கும் போது நாங்களும் அவங்களைப் பார்க்க வர்றது தானே மரியாதை! நாங்க அதுக்காகவும் தான் வந்ததே!” என்று அவர்களோ ஏதோ ஒன்றை சொல்லிச் சமாளிக்கவும்,

“கொஞ்ச நேரம் கழிச்சு அவங்களே அந்த வீட்டுக்கு வருவாங்க. அப்போ உங்க எல்லாரையும் அறிமுகப்படுத்தி வைக்கிறோம்” என்று அவர்களிடம் கறாராக உரைத்தார் மிருதுளா.

“சரி.அவங்கப் பொண்ணைப் பார்த்துட்டுப் போறதுக்குத் தான் வந்து இருக்காங்கன்னு சொல்றீங்களே க்கா? அப்பறம் எதுக்கு இந்த வீட்டுக்கு வந்திருக்காங்க?” என்ற வினாவை எழுப்பினார் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர்.

“அது அவங்க விருப்பம் ங்க. உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்? நீங்கப் போய் அந்த வீட்டில் காத்திருங்க. வெயில் தாழ்ந்ததும் நாங்க எல்லாருமே அங்கே வருவோம்” என்று ஒருவாறாக பேசி அவர்களை அனுப்பி விட்டு வந்தவரிடம்,

“நான் அவங்ககிட்ட கேட்கனும்னு நினைச்சதை எல்லாம் நீயே கேட்டுட்ட ம்மா” என அவரைப் பாராட்டினார் கவிபாரதி.

“பின்னே! இதை இப்படியே விட முடியாதுல்ல ம்மா?” என்று அவரிடம் சொன்னார் மிருதுளா.

“கூல் க்கா! ஆனால், நீங்க சூப்பராகப் பேசினீங்க!” என்றாள் மஹாபத்ரா.

“இந்த ஊரில் இருக்கிற எல்லாருமே இப்படித் தான் மனசில் இருக்கிறதை மறைக்காமல் அப்படியே பேசிடுவாங்க அண்ணி” என்றுரைத்தாள் ருத்ராக்ஷி.

“உன்னைப் பத்தி தெரிஞ்சும் உங்கிட்ட வாயைக் கொடுக்குறாங்க பாரு!” என்று தன் மனைவியிடம் கூறினார் வித்யாதரன்.

“ஆமாங்க!” என்று சிரிப்பொன்றை உதிர்த்தார் மிருதுளா.

“சரி. சாப்பிட வாங்க” என அனைவரையும் அழைத்தார் கவிபாரதி.

அவர்களை அமர வைத்து உணவு பரிமாறுவதற்குத் தங்கள் வீட்டில் டைனிங் டேபிள் இல்லை என்பதை அதற்குப் பிறகு தான், அறிந்து கொண்ட அவரும், அவரது மகனும் சங்கடம் மற்றும் வருத்தம் மேலிட ருத்ராக்ஷியைப் பார்த்தனர்.

அதைக் கண்டு கொண்டவளோ, தான் பார்த்துக் கொள்வதாக, அவர்களுக்குக் கண்ணைக் காட்டி விட்டுத் தன் சொந்தங்களிடம் சென்று அவர்களிடம் விஷயத்தைச் சொன்னவுடன்,

“ஒன்னும் பிராப்ளம் இல்லைடா. பாயை விரிச்சு, இலையைப் போட்டுப் பரிமாறச் சொல்லு!” என்று அவளிடம் கூறி விட்டார்கள் மூவரும்.

அதில் புன்னகைத்தவளோ, அவர்கள் சொல்லி விட்டதைக் கவிபாரதி மற்றும் ஸ்வரூபனிடம் தெரிவித்தாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டதும் தான், அவர்களுக்கு இருந்த சங்கடம் விலகி,“சரிடா ம்மா” என்று அவள் கூறியதைப் போலவே, தரையில் இரண்டு பாய்களை விரிக்க,

அதில் அவர்கள் அமர்ந்ததும், தாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த சுத்தமான வாழையிலைகளை எடுத்துக் கொண்டு வந்து அவர்களுக்கு முன்னால் வைத்தான் ஸ்வரூபன்.

அந்த இலைகளில் நீரைத் தெளித்து விட்டுக் காத்திருந்தவர்களுக்கு உணவைப் பரிமாறினார்கள் தாயும், மகனும்.

“நீங்களும் சாப்பிட உட்காரலாமே?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் சந்திரதேவ்.

“உங்களுக்குப் பரிமாறிட்டு நாங்க சாப்பிட்றோம் சம்பந்தி” என்றார் கவிபாரதி.

அதன் பிறகு, அனைவருடைய இலைகளிலும் உணவை வைத்து விட்டுத் தங்களுக்கும் பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்கினார்கள் இருவரும்.

“வாவ்! சூப்பர்! அதுவும் இந்தக் குழம்பு! சான்ஸே இல்லை!” என்று பாராட்டியவாறே உணவுண்டாள் மஹாபத்ரா.

அவளைப் பின்பற்றி ருத்ராக்ஷியும், அவளது வீட்டாரும், மிருதுளா மற்றும் அவரது கணவரும் சாப்பிட்டு முடித்தனர்.

“இப்போ கல்யாணப் பேச்சை எடுக்கலாமா?” என்று அங்கே இருப்பவர்களிடம் வினவினார் மிருதுளா.

“ஹாங்! பேசலாமே ம்மா!” என்ற சந்திரதேவ்வோ,”எங்க வீட்டுப் பொண்ணு ருத்ராவுக்கும், உங்கப் பையனுக்கும் ஒருத்தரையொருத்தர் கல்யாணம் செஞ்சுக்க விருப்பமான்னு இப்பவும் ஒரு தடவை கேட்ருவோம்ங்க” என்றபடியே, சம்பந்தப்பட்ட இருவரையும் பார்த்தார்.

“இதில் நாங்க மனப்பூர்வமாக சம்மதிக்கிறோம்” என்று ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் ஒரு சேரக் கூறினார்கள்.

“அப்போ ஓகே! இவங்களோட கல்யாண சடங்கு, சம்பிரதாயங்களை ஆரம்பிச்சிடலாம்” என்று குதூகலத்துடன் சொன்னாள் மஹாபத்ரா.

“என்ன ஒரு ஆனந்தம் உனக்கு!” என்று அவளிடம் கூறிச் சிரித்தான் காஷ்மீரன்.

“ஆமாம் ங்க!” என்று கூறிப் புன்னகை புரிந்தாள் அவனுடைய மனைவி.

“அப்போ பூ வைக்கிற சடங்கை எப்போ வச்சிக்கலாம்?” என்றார் வித்யாதரன்.

“இவங்களோட கல்யாணம் முடியிற வரைக்கும் ருத்ரா அங்கேயே இருக்கட்டும் ங்க. ஒரு நல்ல நாளாகப் பார்த்து நாங்க அங்கே வந்து பூ வச்சிட்டு வர்றோம்” என்று அனைவரிடமும் சொன்னார் கவிபாரதி.

“ஆனால், நான் எதுக்கு ஊருக்குப் போறேன்னுக் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்துட்டுப் போனவங்க கேட்பாங்களே?” என்று அவரிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“அதுக்குப் பதில் சொல்லத் தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்ல? நீ கவலையை விடு” என்றுரைத்தார் மிருதுளா.

“ஹாஹா! சரிங்க அக்கா” என்று அதற்குப் பிறகு அவர்கள் சொல்லிய நியாயமான விஷயங்களுக்கு எல்லாம் ஒப்புதல் அளித்து விட்டாள்.

“ஆமாம்! அந்த வீட்டில் எல்லாரும் காத்துட்டு இருப்பாங்களே? அவங்களை எப்போ பார்க்கப் போகலாம்?” என்று சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவிடம் வினவினார் வித்யாதரன்.

“மிருதுளா ம்மா சொன்ன மாதிரியே அவங்களைப் போய்ப் பார்த்துட்டு வந்துடலாம். இப்போவே கிளம்புங்க” என்று அவர்களை அழைத்துக் கொண்டு அந்த வீட்டிற்குச் சென்றனர்.

- தொடரும்
 
Top