Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 89

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அப்படியே மிருதுளா மற்றும் ருத்ராக்ஷியின் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, அவர்கள் இருவரும் அவ்வப்போது அவளது வீட்டார் எங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

ஸ்வரூபனும், அவனது அன்னையும் சேர்ந்து அவர்களது வீட்டைச் சுத்தம் செய்து வைத்ததையும், சமைப்பதற்கு என்று காய்கறிகள் வாங்கியதையும் அறிந்து கொண்ட ஊர்மக்கள் சிலர் என்ன தான் செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.

தாங்கள் அவ்வூரை நெருங்கி விட்டதாக அவர்களுக்காக காத்திருந்த அனைவருக்கும் தகவல் தெரிவித்து விட்டனர்.

அதைக் கேள்வியுற்றதும், உடனே தாமதிக்காமல் சமையல் செய்யத் தொடங்கினார் கவிபாரதி.

“என்ன சாப்பாடு எல்லாம் செய்யப் போறீங்க ம்மா?” என்று தனது தாயிடம் விசாரித்தான் ஸ்வரூபன்.

“முதல் முறையாக அவங்க நம்ம வீட்டுக்கு வர்றதால் சைவ சாப்பாடு செய்யப் போறேன். சாதம், வெந்தயக் குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், வடை, மாங்காய் ஊறுகாய்” என்று விருந்து சாப்பாட்டைச் சமைக்கப் போவதாக அவனிடம் உரைத்தார் கவிபாரதி.

“என்னம்மா! இவ்வளவு ஐட்டம்ஸ்ஸா செய்யப் போறீங்க?” என்று தன் அன்னையிடம் கேட்டான் அவரது மகன்.

“ம்ம். ஆமாம் ப்பா” எனப் பூரிப்புடன் கூறினார் அவனுடைய தாய்.

“சரி. இதையெல்லாம் சீக்கிரம் சமைச்சிட முடியுமா?” என்று அவரிடம் வினவினான் ஸ்வரூபன்.

“முடியும் ப்பா. எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். சமைக்க ஆரம்பிச்சிட்டா எல்லாம் மளமளன்னு தயாராகி முடிஞ்சிரும்” என்று மகனிடம் சொன்னார் கவிபாரதி.

“அப்போ நானும் உங்களுக்கு ஒத்தாசைப் பண்றேன் ம்மா. சமையல் சீக்கிரம் முடிஞ்சிரும்ல?” என்றான் அவருடைய புத்திரன்.

“சரிப்பா. நான் என்னென்ன செய்யனும்னு சொல்றேன்” என்று அவனுக்கான வேலைகளை ஒதுக்கிக் கொடுத்து விட்டுக் குழம்பு வைப்பதைப் பார்க்க ஆரம்பித்து விட்ட அவனது அன்னையோ, அதற்குள்ளாக, மிருதுளாவிற்குச் செல்பேசியில் அழைத்துச் சாப்பாடு தயாராகி கொண்டு இருப்பதை அவரிடம் கூறவும்,

“எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டா, நாங்க எல்லாம் சும்மாவே இருக்கிறதா? நான் எல்லாருக்கும் குடிக்கிறதுக்குச் சர்பத் இல்லைன்னா ஏதாவது ஜூஸ் செஞ்சு வைக்கிறேன்” என்றார்.

“உன் இஷ்டம் போல பண்ணும்மா” என்று அவருக்கு அனுமதி கொடுத்து விட்டு அந்த அழைப்பைத் துண்டித்து விட்டார் கவிபாரதி.

எனவே, அதை ருத்ராக்ஷியிடம் சொல்லவும்,”ஏன் க்கா இவ்வளவு வேலை பார்க்கிறீங்க? நமக்குத் தேவையானதை எல்லாம் கடையில் வாங்கிக்கலாமே?” என்று அவரிடம் கூறினாள்.

“ஹேய்! நீ என்ன இப்படி சொல்ற? நம்ம வீட்டு ஆளுங்களுக்கு வெளியே இருந்து சாப்பிடு, ஜூஸ் எல்லாம் வாங்குறதா? நாம தான் செய்யனும், அதில் தான் நமக்கு ஒரு சந்தோஷமும், நிறைவும் கிடைக்கும்” என்று அவளுக்கு எடுத்துச் சொன்னார் மிருதுளா.

“இல்லை க்கா. உங்க எல்லாருக்கும் எங்களால் சிரமம் தானே?” என்றாள் ருத்ராக்ஷி.

“அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ சும்மா இரு” என இவளிடமும், கவிபாரதியிடமும், தான் சொன்னதைப் போலவே, பழச்சாறு தயாரிக்கத் தேவையானப் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து அதைச் செய்து கொண்டே அவளுடன் அளவளாவத் தொடங்கி விட்டார் மிருதுளா.

அதன் பின்னர், அவரும், ஸ்வரூபன் மற்றும் அவனது அன்னையும் சேர்ந்து, சுவையான உணவையும், பழச்சாறுகளையும் செய்து முடித்தார்கள்.

“ஹப்பாடா! எல்லாத்தையுமே செஞ்சு முடிச்சாச்சு. இனிமேல் அவங்க வந்தப் பிறகு சுடச்சுட சாதம் வச்சா போதும்” எனக் கூறி விட்டனர் அனைவரும்.

சிறிது நேரத்திற்குப் பின்னர், அந்த ஊரை அடைந்திருந்தார்கள் சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

“ஊருக்குள்ளே வந்தாச்சு ம்மா” என்று ருத்ராக்ஷியிடம் அறிவித்ததும், அவளும் அந்தச் செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டாள்.

“நல்ல உடுப்பாக மாத்திட்டு வா” என்று மகனிடம் சொல்லி அனுப்பி வைத்து விட்டு,

தானும் தன்னிடம் இருந்தப் புடவைகளிலேயே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் ஒன்றை எடுத்து உடுத்திக் கொண்டார் கவிபாரதி.

தனக்குக் கைப்பேசி அழைப்பு வரவும் அதை அட்டெண்ட் செய்து பேசி விட்டுச் சில நிமிடங்கள் கழித்து வந்து,”ம்மா! அவங்கப் போய் ருத்ராக்ஷியைக் கூட்டிட்டு இங்கே வர்றாங்களாம்” என்று தன் அன்னையிடம் தெரிவித்தான் அவரது மகன்.

“சரி ஸ்வரூபா” என்று அவனிடம் சொல்லி விட்டார்.

தன் வீட்டின் முன்னே வந்து நின்ற மகிழுந்தைப் பார்த்ததும் அதை நோக்கி ஓடோடிச் சென்றாள் ருத்ராக்ஷி.

அதிலிருந்து இறங்கிய தனது ரத்த சொந்தங்களைக் கண்டதும், “ப்பா! அண்ணா! அண்ணி!” என்று கூறி அவர்களை எதிர்கொண்ட பேதையவளுக்குக் சந்தோஷக் கண்ணீர் ஊற்றெடுத்தது.

“ருத்ரா ம்மா!” என அவளை மூவரும் சமாதானம் செய்தார்கள்.

“எப்படி ம்மா இருக்கே?” என்று அதற்கிடையில், மிருதுளாவின் நலனையும் கேட்டறிந்து கொண்டனர்.

“நல்லா இருக்கேன் ங்க‌. நீங்க மூனு பேரும் எப்படி இருக்கீங்க?” என்று தானும் அவர்களை விசாரித்துக் கொண்டார் மிருதுளா.

அவர்களிடமிருந்து பிரிந்த ருத்ராக்ஷியோ,”சாரி. உங்களை வீட்டுக்குள்ளோ கூப்பிட்டு உட்கார வைக்காமல் நான் பாட்டுக்கு அழுதுட்டு இருக்கேன் பாருங்க” என்றவளோ, அவர்கள் மூவரையும் தன்னுடைய வீட்டினுள் நுழைய அனுமதித்தாள்.

“அக்கா! நீங்களும் வாங்க” என்று தன்னை அழைத்தவளிடம்,

“இருக்கட்டும் டா. நீ இவங்க கூடப் பேசிட்டு இரு. நான் என் புருஷனுக்குக் கால் செஞ்சு இன்ஃபார்ம் பண்ணிட்டுக் கவிபாரதியம்மா வீட்டுக்குப் போய் வெயிட் பண்றேன்” என்று கூறி விட்டுத் தனது கணவனுக்கு அழைத்து விபரத்தைச் சொல்லிய பின்னர், தான் செய்து வைத்திருந்தப் பழச்சாறுகளை எடுத்துக் கொண்டு ஸ்வரூபனின் வீட்டிற்குப் போனார் மிருதுளா.

அந்த மூவரையும் உட்கார வைத்து விட்டு அவர்களுக்குப் பருக நீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் ருத்ராக்ஷி.

அதை வாங்கிக் குடித்து முடித்ததும்,”மாப்பிள்ளை வீட்டுக்குப் போகலாமா?” என்று பேச்சை ஆரம்பித்தார் சந்திரதேவ்.

“ம்ம். ஓகே ப்பா. ஆனால் அதுக்கு முதல்ல நீங்களும், அண்ணியும் சேர்ந்து இந்த வீட்டைச் சுத்திப் பார்த்துட்டு வாங்க” என்றாள் அவரது மகள்.

“ஆமால்ல!” என்று தண்ணீர்ச் சொம்பை வைத்து விட்டு எழுந்தாள் மஹாபத்ரா.

அவளுடன் இணைந்து, சந்திரதேவ்வும் சென்று அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து முடித்தனர் அவ்விருவரும்.

அவர்கள் வந்த பிறகு,”இப்போ சம்பந்தி வீட்டுக்குப் போவோம்” என நால்வரும் கிளம்பி ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியின் இல்லத்திற்குச் சென்றார்கள்.

அங்கே எப்போதோ வந்து விட்டிருந்தார்கள் மிருதுளா மற்றும் வித்யாதரன்.

அவர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்துக் கொண்டு இருக்கும் போதே, இவர்களது வருகையை அறிந்து கொண்ட அவ்வூர் மக்களோ, அந்த வீட்டின் முன்னால் குழுமி விட்டு, ஏதோ கண்காட்சியைப் பார்ப்பதைப் போல அவர்களையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருப்பதைக் கண்டு வந்தவர்களுக்குச் சற்று கூச்சமாக இருந்தது.

அப்படியிருந்த போதும் கூட, அவர்களை எல்லாம் கண்டு கொள்ளாமல், சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவிற்குப் பழச்சாறு கொடுத்து உபசரித்தார் மிருதுளா.

“ஏன் ம்மா! உங்கிட்டேயும், கவியக்கா கிட்டேயும் நாங்க எத்தனை தடவை கேட்டோம்! அப்போ எல்லாம் ஒன்னுமே தெரியாத மாதிரியே சமாளிச்சிட்டு, இப்போ இப்படி கமுக்கமாக விருந்தாளிகளை வரவழைச்சுப் பேசிட்டு இருக்கீங்களே? இது உங்களுக்கு நியாயமாகத் தெரியுதா?” என்று ருத்ராக்ஷியிடம் மெழுகுவர்த்திகள் செய்யப் பயிற்சி எடுக்கும் பெண்கள் அவர்களிடம் முறையிட்டனர்.


- தொடரும்
 
உலை வாயை மூடிறலாம்.ஊர் வாய ஊசி வச்சா தைக்க முடியும் 🤔 எப்படியோ ஒரு வழியாக ஸ்வரூபன மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிச்சாச்சு. மஹா மா நீ மாப்பிள்ளைக்கு ஆடத்தெரியுமா,பாடத்தெரியுமா,
சமைக்கத் தெரியுமானு நல்லா விசாரிச்சுக்கோமா.😃😃😃😃😃
 
உலை வாயை மூடிறலாம்.ஊர் வாய ஊசி வச்சா தைக்க முடியும் 🤔 எப்படியோ ஒரு வழியாக ஸ்வரூபன மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பிச்சாச்சு. மஹா மா நீ மாப்பிள்ளைக்கு ஆடத்தெரியுமா,பாடத்தெரியுமா,
சமைக்கத் தெரியுமானு நல்லா விசாரிச்சுக்கோமா.😃😃😃😃😃
Haha adhellam suthi irukavanga apdi dha pesuvanga sis... Adhuvum nalla entertainment dha namaku.. adhellam nama kanduka kudadhu.. sirichutu poidanum... Mappilai parkum padalam Chinnadha mudinchu sis.. thank you so much ❤️
 
Top