அத்தியாயம் 2

Advertisement

Arpitha

New member
Member
பூமிப்பந்து மீண்டும் ஒருமுறை சுழன்று, தன் ஒற்றைச் சாட்சியான சூரியனின் கதிர்களை வரவேற்கத் தயாரானது. நேற்று அந்தப் பெசன்ட் நகர் கடற்கரையின் அலைகளோடு அழுது தீர்த்து, சூர்யாவின் நெஞ்சில் சாய்ந்து அமைதி தேடிய யாழினியின் இதயம், விதியின் கொடூரக் கரங்களால் இரவோடு இரவாக மீண்டும் துடைத்தழிக்கப்பட்டிருந்தது. காலத்தின் விசித்திரமான விதிகளுக்குக் கட்டுப்பட்டு, நேற்றைய ஒட்டுமொத்தக் காதலையும், சூர்யா தந்த அந்தப் பேராதரவையும் ஒரு கனவு போலத் தன் நினைவடுக்கிலிருந்து முழுமையாகத் தொலைத்திருந்தாள் யாழி.

இளங்காலைப் பொழுதின் மெல்லிய வெளிச்சம் அவளது அறையின் ஜன்னல் திரைச்சீலைகளைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. படுக்கையில் மெல்லப் புரண்டு கண் விழித்த யாழினியின் விழிகளில், நேற்றைய நிம்மதியின் வடுக்கள் கூட எஞ்சியிருக்கவில்லை.

மாறாக, ஒவ்வொரு காலையும் அவளை வாட்டும் அதே மிரட்சியும், விவரிக்க முடியாத பயமும் அவளது முகத்தில் குடியேறின. தன் இடது கை மோதிர விரலில் மின்னும் அந்த வைரம் பதித்த மோதிரத்தைப் பார்த்த நொடி, அவளுக்குள் அதே பழைய நெருடலும் குழப்பமும் மீண்டும் தலைதூக்கின.
அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது, அறையின் அதே மூலையில், அதே மர நாற்காலியில், நேற்றும் உறங்காமல் தன் காதலியின் விடியலுக்காகத் தவம் கிடந்த சூர்யா அமர்ந்திருந்தான். அவனது கண்கள் நேற்றைய தவிப்பாலும், தூக்கமின்மையாலும் மேலும் சிவந்திருந்தன.அவனை கண்டவள் அதே மிரட்சியோடு,

"யார்... யார் நீங்க? என் அறைக்குள்ள எப்படி வந்தீங்க? நான் ஏன் இங்கே இருக்கேன்?" என்ற அதே மூன்று கேள்விகள், நேற்று அவனது நெஞ்சில் சாய்ந்த அதே உதடுகளிலிருந்து மீண்டும் ஒரு அந்நியக் குரலில் வெளிப்பட்டன.

சூர்யா தன் இதயத்தின் ஆழத்தில் ஏற்பட்ட அந்தப் பழகிப்போன ஈட்டிப் பாய்ச்சலைத் தாங்கிக்கொண்டு, முகத்தில் ஒரு இதமான, மென்மையான புன்னகையை வரவழைத்துக் கொண்டான். இது அவனது தினசரிப் போர். ஒவ்வொரு நாளும் தன் காதலி தன்னை ஒரு குற்றவாளியைப் போலப் பார்ப்பதை எதிர்கொள்ளும் அக்னிப் பரீட்சை. அவன் மெதுவாக எழுந்து, அவளுக்குப் பாதுகாப்புத் தரும் தூரத்தில் நின்று கைகளை உயர்த்தி, அவளது பயத்தைத் தணிக்க முயன்றான்.

"பயப்படாதே யாழி... என் பெயர் சூர்யா. உனக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதோ, இந்த டைரியை வாங்கி இதோட முதல் பக்கத்தையும், நேற்றைய பக்கத்தையும் படி. உனக்கே எல்லாம் புரியும்," என்று கூறி, அவளது நினைவுகளின் அஸ்திவாரமாக இருக்கும் அந்தப் பழைய கறுப்பு நிற டைரியை அவளிடம் நீட்டினான்.

யாழி சந்தேகத்துடனும் நடுங்கும் கரங்களுடனும் அந்த டைரியைப் பெற்று, அதன் பக்கங்களைப் புரட்டினாள். முதல் பக்கத்தில் இருந்த தன் சொந்தக் கையெழுத்தைப் பார்த்தவள், அடுத்து சூர்யா நேற்றிரவு கண்ணீரால் எழுதியிருந்த 'நாள் 1' பதிவைப் படித்தாள். 'கடற்கரை, அரசுத் தேர்வு, தோளில் சாய்ந்த அமைதி' என அனைத்தும் அவளது இதயத்தை ஏதோ ஒரு புள்ளியில் சுரீரெனத் தாக்கின.ஒருபுறம் அனைத்தையும் நம்ப மறுக்கும் அவளின் மூளையும்,மறுபுறம் சூர்யாவின் பால் ஏற்கப்படும் மனதின் நிலையிலும் குழம்பி,தவித்தவள்

"நான்... நான் நிஜமாவே நேத்து உங்ககிட்ட இவ்வளவு பேசினேனா சூர்யா? எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. ஆனா, இந்த எழுத்துக்கள் என்னோடதுதான். என் மூளை உங்களை அந்நியனா பார்த்தாலும், இந்த டைரி உங்களை என் உலகம்னு சொல்லுது. இந்த முரண்பாடு எனக்குள்ள ஒரு பெரிய வலியைத் தருது," என்று கூறி, தன் கண்களில் தேங்கிய கண்ணீரைத் துடைக்காமல் சூர்யாவின் முகத்தைப் பார்த்தாள் யாழி.

அவளுக்குள் ஒரு மெல்லிய தளர்வும், சூர்யாவின் மீதான முதல் நம்பிக்கையும் மீண்டும் துளிர்க்கத் தொடங்கிய தருணம் அது.

யாழி டைரியைப் படித்து முடித்து சற்றே அமைதியானதும், சூர்யா அவளுக்குப் பழகிய சுவையுடன் கூடிய காபியைத் தயாரித்து நீட்டினான். முகத்தில் குழப்ப ரேகைகள் ஓட அமர்ந்து இருந்தவளை பார்த்தவன்,

“இன்றும் உனக்கு ஒரு புது நாள்தான் யாழி. எல்லாமே புதுசா இருந்தாலும், உன்னோட இந்தச் சூர்யா உனக்காக எப்பவுமே கூடவே இருப்பான்.உன்னோட குழப்பம் எல்லாத்துக்கும் பதில் சொல்லுவான்.எதையும் யோசிக்காம இந்த காபியை குடி " என்றான் அவளது பதற்றத்தைத் தணிக்கும் குரலில்.

காபியைக் குடித்துக்கொண்டே, நேற்று அவனிடம் கேட்ட அதே கேள்விகளைத் தன்னுள் எழுப்பி, தன் காதலின் ஆழத்தை மனதிற்குள் அளவிட முயன்றாள் யாழி.

“இவன் ஏன் எனக்காக தினமும் இந்தத் துயரத்தைச் சுமக்கிறான்? இவனுக்கு என்னிடம் என்ன ஆதாயம்?' என்ற கேள்விகள் அவளது மௌனத்தில் விஸ்வரூபமெடுத்தன.

அவளது மன ஓட்டத்தை உணர்ந்த சூர்யா, "நேத்து நாம கடற்கரைக்குப் போயிருந்தோம் யாழி. இன்னைக்கு உனக்கு ரொம்பப் பிடிச்ச, உன்னோட ஆன்மாவான ஒரு இடத்துக்கு உன்னைக் கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறேன். போலாமா?" என்று மென்மையாகக் கேட்டான்.

யாழி மெதுவாகத் தலையசைத்தாள். அவள் சூர்யாவின் வழிகாட்டுதலின்படி, அவளது வீட்டின் பின்புறம் இருந்த ஒரு பெரிய, பூட்டப்பட்ட அறைக்கு முன்னால் வந்து நின்றாள்.
சூர்யா தன் கையில் இருந்த பழைய சாவியால் அந்த அறையைத் திறந்தான். கதவு திறந்ததும், உள்ளே இருந்த அந்தப் பிரம்மாண்டம் யாழியை உறைந்து போகச் செய்தது. அது ஒரு பழைமையான, நேர்த்தியான இசைக்கூடம்.

சுவர்களில் உலகின் புகழ்பெற்ற வயலின் கலைஞர்களின் புகைப்படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அறையின் மையத்தில் ஒரு பட்டுத் துணியால் மூடப்பட்ட மேஜையின் மேல், ஒரு பளபளப்பான, விலையுயர்ந்த வயலின் வைக்கப்பட்டு, அதன் அருகில் சில இசைக் குறிப்புகள் சிதறிக்கிடந்தன.அவை அனைத்தையும் ஆர்வத்துடனும், ஆசையுடனும் ஆராய்ந்து கொண்டு இருந்த யாழியை கண்டவன்,

"இதுதான் உன் உலகம் யாழி. நீ வெறும் யாழினி இல்லை, பல மேடைகளில் ஆயிரக்கணக்கான மக்களை உன் இசையால் கட்டிப்போட்ட மாபெரும் வயலின் கலைஞர். இந்த விபத்து உன் நினைவுகளைத் திருடியிருக்கலாம், ஆனா உனக்குள்ள இருக்கிற இசை ஞானத்தைத் திருட முடியாது," என்றான் சூர்யா, அவளது கைகளைப் பற்றி அந்த வயலினுக்கு அருகில் அழைத்துச் சென்ற படி

யாழி அந்த வயலினைத் தொடுவதற்காகத் தன் கைகளை நீட்டிய அந்தத் துல்லியமான தருணத்தில், அந்த அறையின் அமைதியைக் குலைக்கும்படி ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. வீட்டின் பிரதான கதவு பலமாகத் தள்ளப்பட்டு திறக்கப்பட, உள்ளே மதனும் ராகுலும் ஆவேசமாக நுழைந்தனர். ராகுலின் கண்களில் வக்கிரமும், மதனின் முகத்தில் ஒருவித வன்மமும் அப்பட்டமாகத் தெரிந்தன. கோவம் கொண்ட குரலில்,சூர்யாவை கண்டவன்

"நிறுத்து சூர்யா! உன்னோட இந்த நாடகத்தை இத்தோட நிறுத்திக்கோ!" என்று கத்தினான் ராகுல். அவன் நேராக யாழியின் அருகில் வந்து அவளது கையைப் பலவந்தமாகப் பற்றினான். "யாழி, இவன் சொல்றதை எதையும் நம்பாதே. இவன் ஒரு ஏழை, தெருவில் பாட்டுப் பாடுறவன். உன்னோட இந்தத் தற்காலிக மறதியைப் பயன்படுத்தி, உன் அப்பா சிவராமன் மாமாவின் கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறான். உன்னை லண்டன் கூட்டிட்டுப் போய் குணப்படுத்த வேண்டியது என் பொறுப்பு. வா என்னோடு!" என்று அவளை இழுத்தான்.

யாழி பயத்தில் நடுங்கிப்போய், ராகுலின் பிடியிலிருந்து தன் கையை உதறிவிட்டு, சூர்யாவின் பின்னால் ஓடிவந்து அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். சூர்யா தன் காதலியைத் தன் உடலால் மறைத்து, ஒரு சிங்கத்தைப் போல ராகுலின் முன்னால் வந்து நின்றான். அவனது முஷ்டிகள் கோபத்தால் இறுகின.

“ராகுல்! கையை இறக்கு. சிவராமன் மாமா எனக்குக் கொடுத்திருக்கிற ஒப்பந்தத்தின்படி, யாழினியைத் தொடும் உரிமை கூட உனக்குக் கிடையாது. இன்னும் சில நாட்கள் அவ என்னோடுதான் இருப்பாள். அவளோட நினைவையும் இசையையும் மீட்டெடுப்பது என் வாழ்நாள் வாக்குறுதி. மரியாதையாக இங்க இருந்து போய்டு !" என்று சூர்யா கர்ஜித்தான்.

சூர்யாவின் ஆவேசமான பேச்சைக் கேட்டு மதன் வஞ்சகமாக, ஏளனமாகச் சிரித்தான். அவன் ராகுலின் தோளைத் தொட்டு அமைதிப்படுத்திவிட்டு, சூர்யாவிற்கு மிக அருகில் வந்து தன் நச்சு வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினான்.

“சூர்யா... நீ என்ன பெரிய நீதிமானா? இந்த ஒப்பந்தம்னு மாமா சொன்னதை நாங்க ஏதோ ஒரு விளையாட்டுக்காகத்தான் சம்மதிச்சோம். ஆனா, நிஜ நிலவரம் என்ன தெரியுமா? சிவராமன் மாமாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிட்டு இருக்கு. அவர் இன்னும் சில வாரங்கள்ல லண்டன் மருத்துவமனைக்கு மாத்த போறாங்க.அதுக்கப்புறம் இந்த யாழினியும், அவளோட இந்த ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் ராகுலோட கைக்குத்தான் வரும்," என்றான் மதன்.

ராகுல் தன் கைகளில் இருந்த சில மருத்துவ ஆவணங்களைச் சூர்யாவின் முகத்திற்கு நேராக நீட்டினான். "இதோ பார் சூர்யா, இது லண்டன் மருத்துவர்கள் கொடுத்த அறிக்கை. யாழினிக்கு ஏற்பட்டிருக்கிற இந்த வியாதியை இந்தியாவில குணப்படுத்த முடியாது. இவளை இங்கேயே வச்சிருக்கிறது இவளோட உயிருக்கே ஆபத்து. நீ காதலிக்கிறேன் என்ற பேர்ல இவளோட உயிரோட விளையாடிட்டு இருக்க. நீ ஒரு சுயநலவாதி," என்று பழி சுமத்தினான்.

அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் யாழினியின் காதுகளில் விழுந்தபோது, அவளது தலை பலமாகச் சுற்றியது. 'சொத்து, லண்டன், தந்தையின் மரணப் படுக்கை' என்ற வார்த்தைகள் அவளுக்குள் ஒரு பெரும் குழப்பத்தையும் பயத்தையும் உருவாக்கின.

தனக்கு விபத்து எப்படி ஏற்பட்டது? தன் தந்தை உண்மையில் எங்கே இருக்கிறார்? சூர்யா தன்னை ஏமாற்றுகிறானா? என்ற சந்தேகப் புயல் அவளது நெஞ்சில் வீசியது. ஆனால், தன் முன்னால் அரணாக நின்று தங்களைக் காக்கும் சூர்யாவின் அகன்ற தோள்களும், அவனது உடலிலிருந்து வெளிப்பட்ட அந்தத் தூய்மையான கோபமும் அவளுக்குள் ஏதோ ஒரு விசித்திரமான தைரியத்தைத் தந்தன.

யாழி சூர்யாவின் பின்னால் இருந்து மெதுவாக வெளிப்பட்டு, ராகுலையும் மதனையும் நேருக்கு நேராகப் பார்த்தாள். அவளது கண்கள் பயந்திருந்தாலும், அவளது குரலில் ஒரு தீர்க்கம் இருந்தது.

“நிறுத்துங்க! எனக்கு உங்களை யாருன்னே தெரியாது. நீங்க சொல்ற சொத்து, பணம் எதைப்பத்தியும் எனக்குக் கவலை இல்லை. ஆனா, இன்னைக்கு காலைல நான் கண் விழிச்சப்போ என் கையில் இருந்த டைரி எனக்கு ஒரு உண்மையைச் சொல்லுச்சு. சூர்யாவைத் தவிர நான் வேற யாரையும் நம்பக் கூடாதுன்னு என் சொந்தக் கையெழுத்துல நானே எழுதியிருக்கேன். ஒரு அந்நியனைப் பத்தி நானே அப்படி எழுதியிருக்கேன்னா, அவன் என் உயிருக்கு நிகரானவனாத்தான் இருக்க முடியும். தயவுசெய்து என் வீட்டை விட்டு வெளியே போங்க!" என்று கத்தினாள் யாழினி.

யாழினியின் வாயிலிருந்து வெளிவந்த அந்தத் தீர்க்கமான வார்த்தைகள் ராகுலையும் மதனையும் உறைந்து போகச் செய்தன. சூர்யாவின் முகத்தில் ஒரு மாபெரும் வெற்றியின் புன்னகை அரும்பியது. தன் காதலிக்குத் தன்னை நினைவில்லாவிட்டாலும், அவளது ஆன்மா அவனைக் கைவிடவில்லை என்பதை அவன் உணர்ந்தான்.
மதன் கோபத்துடன் பற்களைக் கடித்தபடி, "பார்க்கலாம் சூர்யா... உன்னோட ஒப்பந்த நாள் முடியட்டும். மாமாவோட கையெழுத்தோட வந்து இந்த யாழினியை சட்டப்பூர்வமாக நாங்க லண்டன் தூக்கிட்டுப் போறோம். அப்போ உன்னால என்ன செய்ய முடியும்னு நாங்களும் பார்க்கிறோம்," என்று மிரட்டிவிட்டு, ராகுலை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான். அவர்கள் சென்ற பின், அந்த இசைக்கூடத்தின் வாசல் காற்றில் ஒரு தற்காலிக அமைதி நிலவியது, ஆனால் ஒரு பெரிய புயலுக்கான எச்சரிக்கையாக அது இருந்தது.

ராகுலும் மதனும் சென்ற பிறகு, யாழினியின் உடல் முற்றிலும் பலமிழந்து நடுங்கத் தொடங்கியது. அவளது கைகள் சூர்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டன.

"சூர்யா... அவர்கள் சொன்னது உண்மையா? என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் ஏன் இப்படி இருக்கேன்? எனக்கு ஏதோ ஒரு பெரிய ஆபத்து வர்றது போல பயமா இருக்கு சூர்யா," என்று கூறி அவனது நெஞ்சில் சாய்ந்து விம்மி அழுதாள்.

சூர்யா அவளது கண்ணீரைத் தன் விரல்களால் மென்மையாகத் துடைத்தான். "யாழி... என் முகத்தைப் பார். உனக்கு என்னை ஒரு அந்நியனாத் தெரிந்தாலும், என் கண்கள்ல இருக்கிற காதலை உன்னால உணர முடியுதா? உன் அப்பா பாதுகாப்பாகத்தான் இருக்கிறார். அந்த ராகுலும் மதனும் உன்னோட சொத்துக்காக ஆசைப்படுற துரோகிகள். உனக்கு விபத்து ஏற்பட்டதே அவங்களால்தான். இந்தச் சூர்யா உயிரோடு இருக்கிற வரை உன்னை யாரும் லண்டன் கூட்டிட்டுப் போக முடியாது. உன்னை யாரும் காயப்படுத்த முடியாது. என்னை நம்பு யாழி," என்று அவளது நெற்றியில் ஒரு இதமான முத்தத்தைப் பதித்தான்.

அவனது ஸ்பரிசமும், அந்த வார்த்தைகளும் யாழினிக்குள்ளும் நேற்றைய கடற்கரையின் நினைவை மங்கலாகத் தூண்டின. அவள் மெதுவாகத் தலைநிமிர்ந்து, அந்த மேஜையின் மேல் இருந்த வயலினைப் பார்த்தாள்.

"சூர்யா... எனக்கு இசை தெரியாதுன்னு என் மூளை சொல்லுது. ஆனா, இந்த வயலினைப் பார்க்கும்போது என் விரல்கள் ஏதோ ஒரு ராகத்தைத் தேடுது. எனக்கு இதை வாசிக்கக் கற்றுக்கொடுப்பாயா?" என்று ஆசையுடன் கேட்டாள்.

சூர்யாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. "கற்றுக்கொடுப்பதா யாழி? நீதான் எனக்கு இசையோட இலக்கணத்தையே சொல்லிக்கொடுத்தவள். இதோ..." என்று கூறி, அவளது கைகளில் அந்த வயலினை ஏந்தச் செய்தான். அவளது இடது கையை வயலினின் நரம்புகளின் மேலும், வலது கையில் வில்லையும் பிடிப்பதற்கு உதவி செய்தான். சூர்யா அவளுக்குப் பின்னால் நின்று, அவளது கைகளைத் தன் கைகளால் மென்மையாகத் தாங்கிப் பிடித்தான்.

"யாழி... கண்களை மூடிக்கொள். மூளையால் யோசிக்காதே. உன் இதயத் துடிப்பைக் கவனி. நாம் முதன்முதலில் சந்தித்த அந்தப் பெசன்ட் நகர் கடற்கரையின் அலைகளின் ஓசையை நினைத்துப் பார். அந்த அலைகள் கரையைத் தொட்டுச் செல்லும் தாளத்தில் உன் வில்லை அசை," என்று அவளது காதருகில் மென்மையாக முணுமுணுத்தான்.

யாழி தன் கண்களை மூடினாள். சூர்யாவின் மூச்சுக்காற்று அவளது கழுத்தில் பட்டபோது, அவளுக்குள் ஒரு புதிய மின்சாரம் பாய்ந்தது. அவளது விரல்கள் மெதுவாக நகர்ந்தன. வில்லை வயலின் நரம்புகளின் மேல் மென்மையாக இழுத்தாள். அந்த இசைக்கூடத்தின் காற்றில் ஒரு கீச்சொலி எழுந்தது, ஆனால் அடுத்த நொடியே, அவளையறியாமல் அந்த நரம்புகளிலிருந்து ஒரு அழகான, மெல்லிய 'கல்யாணி' ராகத்தின் நாதம் வெளிப்பட்டது. அது முழுமையான இசையாக இல்லாவிட்டாலும், அவளது ஆன்மா இன்னும் இறக்கவில்லை என்பதற்கான ஒற்றைச் சான்றாக அங்கே ஒலித்தது. யாழியின் முகத்தில் ஒரு விவரிக்க முடியாத புன்னகை பூத்தது. சூர்யா அவளை இன்னும் இறுக்கமாக அணைத்துக்கொண்டு, அந்த இசையின் அதிர்வில் திளைத்தான்.

மாலை நேரம் வந்தது. மேற்கு வானில் சூரியன் தன் செந்நிறக் கதிர்களைப் பரப்பி, விடைபெறத் தயாராகிக் கொண்டிருந்தான். பூமி கண்ட அத்துணை துயரங்களுக்கும் சாட்சியான அந்தச் சூரியன், இன்றும் யாழியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த மௌனப் போராட்டத்தைக் குறித்துத் தன் நாட்குறிப்பில் எழுதிக்கொள்வது போல மெல்ல மறைந்தான். அந்தி சாயும் வேளையில், யாழியின் முகம் மீண்டும் மெதுவாக வாடத் தொடங்கியது.

பூந்தோட்டத்தில் அமர்ந்து அந்தச் செவ்வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த யாழி, சூர்யாவின் கைகளைத் தன் கைகளில் கோர்த்துக்கொண்டாள். அவளது விரல்கள் மீண்டும் நடுங்கத் தொடங்கின. டைரியின் பக்கங்களும், நேற்றைய மறதியின் யதார்த்தமும் அவளது மனக்கண்ணில் தோன்றி அவளை அச்சுறுத்தின.

"சூர்யா... எனக்கு ரொம்பப் பயமா இருக்கு," என்றாள் யாழி, அவனது தோளில் தன் தலையைச் சாய்த்துக்கொண்டு.

"எதுக்கு பயப்படுற அம்மு? உன்னோட சூர்யா எப்பவும் உன் கூடவே இருப்பான்," என்றான் சூர்யா, அவளது தோள்களை வருடியபடி.

"இல்லை சூர்யா... இன்னும் சில மணி நேரங்கள்ல நான் தூங்கிடுவேன். நாளைக்குக் காலை நான் கண் விழிக்கும்போது, இந்த அழகான மாலைப் பொழுதும், நீ எனக்குக் கொடுத்த இந்த தைரியமும், இந்த வயலினோட நாதமும் எனக்கே தெரியாம அழிஞ்சு போயிருக்கும். நாளைக்கும் நான் உன்னை ஒரு அந்நியனாப் பார்த்து,

“யார் நீங்க'ன்னு கேட்டு உன் இதயத்தைக் காயப்படுத்துவேன். நீ என்மேல் இவ்வளவு அன்பு வச்சிருக்க, ஆனா என்னால அதை ஒரு நாள் கூடத் தக்க வச்சுக்க முடியல. நான் உனக்கு ஒரு பெரிய சுமையா இல்லையா சூர்யா?" என்று கூறி, அவனது நெஞ்சில் தன் முகத்தைப் புதைத்து விம்மி அழுது தீர்த்தாள் யாழி.

சூர்யா அவளது முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, அவளது கண்களை நேராகப் பார்த்தான். அவனது விழிகளில் எல்லையற்ற காதலும், துரோகங்களை வெல்லும் துணிவும் தெரிந்தன.

“யாழி... இது நான் உனக்குக் கொடுத்திருக்கிற வாழ்நாள் வாக்குறுதி. நீ தினசரி காலையில் என்னை மறந்தாலும், தினசரி உன்னை என் காதலில் மூழ்கடிச்சு, உன்னை என்வழியா மீட்டெடுப்பேன். நீ எனக்கு ஒருபோதும் சுமை இல்லை யாழி. நீதான் என் சுவாசம். நாளை காலை நீ என்னை எப்படிப் பார்த்தாலும், இதே புன்னகையோடு உனக்காகக் காத்திருப்பேன்," என்று அவளது நெற்றியில் தன் காதலின் முத்திரையைப் பதித்தான்.

அவர்கள் வீட்டிற்குள் சென்று இரவு உணவை முடித்தனர். யாழி படுக்கைக்குச் சென்றாள், ஆனால் அவளது கண்களில் உறக்கம் வர மறுத்தது. நாளை வரப்போகும் அந்தப் புதிய மறதியைக் கண்டு அவளது இதயம் அஞ்சியது. சூர்யா அவளருகிலேயே அமர்ந்து, அவளது கைகளைப் பற்றிக்கொண்டு, அவர்கள் கடற்கரையில் சந்தித்த கதையை மீண்டும் ஒருமுறை மென்மையாகச் சொல்லத் தொடங்கினான். அவனது குரலின் இதத்தில் யாழினியின் இமைகள் மெல்ல மூடின. உறக்கத்தின் பிடிக்குள் அவள் நழுவும் அந்தக் கடைசி நொடியில்,

“சூர்யா... நாளைக்கும் என் கூடவே இரு... நான் கண் விழிச்சுப் பார்க்கிற முதல் முகம் நீயாத்தான் இருக்கணும்..." என்று முணுமுணுத்தபடி உறங்கிப்போனாள்.

யாழி முழுமையாக உறங்கியதை உறுதி செய்த பின், சூர்யா அந்த மேஜை மீது இருந்த கறுப்பு நிற டைரியை எடுத்தான். அவனது கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அந்தப் பக்கத்தில் விழுந்து காய்ந்தது. அவன் பேனாவை எடுத்து எழுதத் தொடங்கினான்:

'நாள் 2: இன்று துரோகிகள் நம்மைப் பிரிக்க வந்தனர். ஆனால், அவளது இதயம் மீண்டும் என்னையே அரணாகத் தேர்ந்தெடுத்தது. அவளது விரல்கள் வயலின் நரம்புகளைத் தொட்டிருக்கின்றன. நாளுக்கு நாள் அவளது இசை மீண்டு வருகிறது. நாளை அவளை நம் காதலின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வேன். அவளது நினைவுகளை மீட்டெடுக்கும் வரை இந்தச் சூர்யா உறங்க மாட்டான்.'
எழுதி முடித்துவிட்டு டைரியை மூடியவன், விளக்கை அணைத்துவிட்டு, இருட்டிலும் தேவதையாகத் தெரிந்த தன் காதலியின் முகத்தையே பார்த்தபடி, அடுத்த விடியலின் போராட்டத்திற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டான்.
 
லூப் மோட்டில் போய் கொண்டிருக்கும் காட்சிகள் எப்போது மாறுமோ....!!???
 

Advertisement

Advertisement

Back
Top