Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 118

Advertisement

SHALU shalu

Well-known member
Member
“என்ன இப்படி எல்லாம் பேசி இருக்காங்களா? அவனுங்களைச் சும்மா விட்டிருக்கக் கூடாதுடா! இன்னும் நல்லா அடிச்சா அனுப்பி இருக்கனும்! காஷ்மீரன் தம்பி பண்ணது தான் சரி! அவனுங்க ஒரு ஆளு, அவங்க சொன்னதைக் கேட்டுட்டு நீ மருமக கிட்டே மூஞ்சியைத் திருப்பிக்கிட்டு இருந்தியா? கூறுகெட்டவனே!” என்று மகனையும் நன்றாகத் திட்டினார் கவிபாரதி.

அவரது மனம் அமைதி அடையவே இல்லை. தன் கணவர் இறந்த பிறகு மகனுக்கு எந்தக் கெட்டப் பழக்கங்களும் வர விடாமல் அவனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கி, வாழ்க்கையில் உழைத்து வாழ வேண்டுமென்ற மந்திரத்தையும் போதித்திருந்தார்.

அப்படியிருக்க, தங்களது நெருங்கிய உறவினர்களின் பிள்ளைகளே இப்படி தகாத வார்த்தைகளால் தன் மகனையும், மருமகளையும் தாக்கிப் பேசியது கவிபாரதிக்கு எள்ளளவும் பிடிக்கவில்லை. அவர்களது தாய்மார்களுக்கும் அந்த விஷயம் தெரியாது போலும்! அதனால் தான் அந்த இளைஞர்கள் மண்டபத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிச் சென்றது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.

இனிமேல், தன் மகனுடைய திருமணத்திற்கு அவர்கள் குடும்பத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும் அழைத்து விடக் கூடாது என்று முடிவெடுத்து விட்டு,

“இனிமேல் இப்படி யாராவது பேசினால் பதில் சொல்லிப் பழகு ஸ்வரூபா! அமைதியாக இருந்துடாதே!” என்று மகனுக்கு அறிவுறுத்தினார் கவிபாரதி.

“சரிம்மா” என்று அவரிடம் கூறி விட்டான் ஸ்வரூபன்.

அதன் பிறகு, வேறு சில பேச்சுக்களுடன் அவர்களது பயணம் தொடர்ந்தது.

சில மணி நேரங்களுக்குப் பின்னர், அவர்கள் இருவரும் இறங்க வேண்டிய நேரம் வந்து விட, அதை முன்னரே ருத்ராக்ஷி மற்றும் காஷ்மீரனிடம் தெரிவித்து இருந்தான் ஸ்வரூபன்.

அதனால், அவர்களை அழைத்து வரத், தானே பேருந்து நிலையத்திற்குப் போய் விட்டான் ருத்ராக்ஷியின் தமையன்.

அங்கே காத்திருந்த கொஞ்ச நேரத்திலேயே ஸ்வரூபனும், கவிபாரதியும் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தனர்.

உடனே அவ்விடத்திற்குச் சென்று,“வாங்க அத்தை. வாங்க மாப்பிள்ளை! எப்படி இருக்கீங்க?”என்று அவர்களுடைய நலத்தையும் விசாரித்துக் கொண்டான் காஷ்மீரன்.

“நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. நீங்க எல்லாரும் சௌக்கியமா?” என்றார் கவிபாரதி.

“ஹாங். எல்லாரும் நல்லா இருக்கோம் அத்தை. காரில் ஏறுங்க” என்று அவர்களைத் தன்னுடைய மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்குப் பயணம் செய்யும் போதே, தங்கை மற்றும் தந்தைக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்து விட்டவன்,

அவர்களைத் தங்களது விருந்தினர் இல்லத்தில் தங்க வைத்து விட்டு, சந்திரதேவ் மற்றும் மஹாபத்ராவைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தான் காஷ்மீரன்.

“நீங்க ஒவ்வொரு தடவை இந்த ஊருக்கு வரும் போதும், உங்களை இங்கேயே தங்க வைக்கிறோம்ன்னுத் தப்பா எடுத்துக்காதீங்க!” என அவர்களிடம் தர்மசங்கடத்துடன் கூறினார் சந்திரதேவ்.

“நாங்க அப்படியெல்லாம் நினைக்கலை சம்பந்தி. மருமகளைப் பார்க்க முடியலைன்னுத் தான் வருத்தமாக இருக்கு!” என்றுரைத்தார் கவிபாரதி.

“பத்திரிக்கையைப் பிரிண்ட் பண்ணக் கொடுக்க அவளும் வருவாளே ம்மா. அப்போ அவளை உங்க கூடவே வச்சுக்கோங்க” என்று சொல்லி அவரைச் சமாதானம் செய்தாள் மஹாபத்ரா.

“சரிம்மா” என்று கூறிப் புன்னகைத்தார் கவிபாரதி.

தனக்கும், ருத்ராக்ஷியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும், ஆசையும் இருந்தாலும், அடக்கி வாசித்துக் கொண்டு இருந்தான் ஸ்வரூபன்.

“நாளைக்கு நாள் நல்லா இருக்கு. நாம போய்ப் பத்திரிக்கையை அடிக்கக் கொடுத்துட்டு வந்துடலாமா சம்பந்தி?” என்றார் சந்திரதேவ்.

“சரிங்க சம்பந்தி” என்றவரோ,”ஸ்வரூபா! அந்தப் பேப்பரை எடுத்து சம்பந்திகிட்டே கொடு” என்று தன் மகனிடம் சொன்னார் கவிபாரதி.

உடனே தன்னிடமிருந்த தாளை எடுத்து தன் வருங்கால மாமனாரிடம் தந்தான்.

அதை வாங்கிப் பார்த்து விட்டுத் தன்னிடம் பத்திரமாக வைத்துக் கொண்டார் சந்திரதேவ்.

அன்றைய நாள் முழுவதும் ஸ்வரூபன் மற்றும் கவிபாரதியை ஓய்வு எடுத்துக் கொள்ளப் பணித்து விட்டு அவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தங்களது வீட்டிற்குச் சென்று விட்டனர் மூவரும்.

“அந்தப் பேப்பரில் இருந்த பெயர்களை எல்லாம் இன்னும் நல்லா சரி பார்த்துட்ட தானே? அந்தக் கேடுகெட்டவங்களோட பேர் இல்லை தானே?” என்று மகனிடம் கேட்டார் கவிபாரதி.

“ஆமாம் மா. அவங்க பேரையும் போடலை, நாம அவங்களைக் கல்யாணத்துக்கு வரச் சொல்லி அழைக்கவும் போறது இல்லை!” என்று அவரிடம் உறுதியாக கூறினான் ஸ்வரூபன்.

“அப்போ சரி” என்று கூறி விட்டார் கவிபாரதி.

இங்கே தங்கள் இல்லத்தில், தன் நாத்தனாரிடம் பேசிக் கொண்டு இருந்த மஹாபத்ராவோ,”உன் மாமியார் உன்னைப் பார்க்க முடியலைன்னு ரொம்ப வருத்தப்பட்டாங்க ருத்ரா” என்றாள்.

“அச்சோ! நாளைக்கு முழுசும் அவங்க கூடத் தான் டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறேன் அண்ணி” என்று அவளிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“அப்போ உன் வருங்கால கணவரோட நிலைமை என்ன ஆகும்ன்னு யோசிச்சுக்கோ” என்று குறும்புடன் கூறிச் சிரித்தாள் அவளது அண்ணி.

“நான் அவரைச் சமாளிச்சுடுவேனே! ஏன்னா, நாங்க தான் அடிக்கடி வாட்சப்பில் மெசேஜ் பண்ணிப் பேசிக்கிறோமே!” என்று கூறவும்,

“ம்ம். எல்லாம் உன் சாமர்த்தியம் தான்!” எனச் சொல்லி விட்டாள் மஹாபத்ரா.

அன்றைய இரவு நீங்கி விடியல் வந்ததும், வழக்கம் போலவே, மூவரும் சீக்கிரம் எழுந்து விட்டார்கள்.

“நீங்க எத்தனை மணிக்குப் போகலாம்ன்னு சொல்லுங்க. அப்போவே கிளம்பலாம்” என்று ஸ்வரூபனுக்கு அழைத்துக் கேட்டான் காஷ்மீரன்.

“எல்லாருக்கும் சௌகரியமாக இருக்கிற நேரத்திலேயே போகலாம் சார்” என்று அவன் கூறி விட,

அதனால், பத்து மணிக்கு மேல் கிளம்பி கல்யாணப் பத்திரிக்கை அச்சடிக்கும் அலுவலகத்திற்குப் போகலாம் என்று முடிவெடுத்துத் தயாராகினர் அனைவரும்.

கவிபாரதி மற்றும் ஸ்வரூபனும் விருந்தினர் இல்லத்திலிருந்து வந்ததும், பரஸ்பர விசாரிப்புகள் முடிந்து, வீட்டிலிருந்து புறப்பட ஆயத்தம் ஆயினர்.

அப்போது,”அத்தை! இன்னைக்கு ஃபுல்லா நான் உங்க கூடத் தான் இருக்கப் போறேன்” என்று தன் வருங்கால மாமியாருடன் ஒட்டிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அதைக் கண்ட ஸ்வரூபனுக்கு, ஏமாற்றம் மற்றும் பொறாமை வருவதற்குப் பதிலாகப் புன்னகை தான் அரும்பியது. மற்றவர்களும் புன்னகைத்துக் கொண்டே காரில் ஏறிக் கொண்டார்கள்.

பத்திரிக்கைப் பதிப்பிக்கும் அலுவலகத்தை அடைந்து உள்ளே சென்றதும், அவர்களை அங்கேயிருந்த ஊழியர்கள் வரவேற்று அமர வைத்தனர்.

ருத்ராக்ஷியையும், ஸ்வரூபனையும் ஒன்றாக அமர வைத்து அவர்களுக்குப் பிடித்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள் மூத்தவர்கள்.

“கிராண்ட் ஆக எடுக்கலாமா? சிம்பிளாகப் போதுமா? உனக்கு எப்படி வேணும் ருத்ரா?” என்று தன்னவளிடம் வினவினான் ஸ்வரூபன்.

“ரெண்டையுமே பார்ப்போம் ங்க. எது பிடிக்குதோ? அதை எடுத்துக்கலாம்” என்று அவ்விருவரும் அனைத்து வடிவமைப்புகளையும் பார்வையிட்டனர்.

வெகு நேரத் தேடலுக்குப் பிறகுத் தங்களுடைய இஷ்டமான வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் இருவரும்.

“இது ஓகேவா?” என்று மற்றவர்களிடமும் காட்டிக் கேட்டனர் ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷி.

“சூப்பர் டிசைன்! கிராண்ட் ஆகவும் தெரியுது. ஆனாலும், இந்த டிசைன் ரொம்ப அடிக்கிற மாதிரியும் இல்லை” என்று கூறி, அதையே அடித்துக் கொடுக்குமாறு பெயர்கள் அடங்கிய குறிப்புத் தாளையும் கொடுத்து விட்டனர்.

உடனே,”நான் இதை ஃபோட்டோ எடுத்துக்கிறேன். அம்மாவுக்கு அனுப்பி வைக்கனும்” என அந்த மாதிரிப் பத்திரிக்கையைப் புகைப்படமாக எடுத்துக் கொண்டாள் மஹாபத்ரா.

“இதை எங்களுக்கும் அனுப்பும்மா” என்றார் சந்திரதேவ்.

“இதோ இப்போவே அனுப்பிட்றேன் மாமா” என்று அந்தப் புகைப்படத்தை அவர்களுக்கு அனுப்பி வைத்து விட்டாள் அவரது மருமகள்.

அனைவரும் வீட்டிற்கு வந்ததும், திருமணம் மாப்பிள்ளையின் சொந்த ஊரில் நடக்கும் என்பதால், அங்கே இருப்பதிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த மண்டபத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பதாக ருத்ராக்ஷியின் வீட்டாரிடம் சொன்ன கவிபாரதி,”உங்களுக்கு வேணும்னா நீங்க நேரில் வந்து கூடப் பார்த்துட்டு சொல்லுங்க” என்கவும்,

“நீங்கப் பார்த்ததுக்கு அப்பறம் நாங்கப் பார்த்து முடிவு பண்ணனும்னு இல்லை சம்பந்தி. அது நிச்சயமாக நல்லதாகத் தான் இருக்கும்!” என்று ஒரேயடியாக கூறி விட்டனர் ருத்ராக்ஷியின் குடும்பத்தினர்.

- தொடரும்
 
அருமையான பதிவு 😍😍😍😍😍

கல்யாண நாள் எப்போ வரும்னு ஆவலாக இருக்கு 🤗🤗

கவிபாரதி மா கல்யாணத்தை எல்லோரும் மெச்சுகிற மாதிரி சிறப்பா செஞ்சி உங்கள ஏளனம் பண்ணினவங்க மூக்க உடைங்க.
 
அருமையான பதிவு 😍😍😍😍😍

கல்யாண நாள் எப்போ வரும்னு ஆவலாக இருக்கு 🤗🤗

கவிபாரதி மா கல்யாணத்தை எல்லோரும் மெச்சுகிற மாதிரி சிறப்பா செஞ்சி உங்கள ஏளனம் பண்ணினவங்க மூக்க உடைங்க.
Seekram vandhurum sis. Adhe dha... Thank you so much sis ❤️
 
Top