Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 101

Advertisement

SHALU shalu

Well-known member
Member
எந்த ஞாபகங்கள் யாவற்றையும் உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வேறு ஊருக்குச் சென்று தங்கினாளோ, இப்போது அவையனைத்தும் கணக்கில்லாமல் நினைவிற்கு வந்து அவளது இயல்பைக் குலைத்துக் கொண்டிருந்தது.

தனது தாயின் பிம்பங்கள் யாவும் ஆங்காங்கே பிரதிபலிப்பதைப் போன்ற பிரம்மை உருவாகுவதை உணர்ந்தாள் ருத்ராக்ஷி.

கட்டிலில் அமர்ந்து இருந்தவளோ, அன்னையின் புகைப்படத்தை எடுத்து அதை நிர்மலமான முகத்துடன் ஏறிட்டாள்.

அதில் தெரிந்த நீலாம்பரியின் சாந்தமான பார்வையும், புன்னகையும் தான், தனக்கும் வந்திருக்கிறதோ என்று இப்போது யோசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ருத்ராக்ஷி.

தன் மேல் தகப்பனுக்கும், தமையனுக்கும் அதீதமான பாசம் இருக்கிறது தான்! ஆனால், அதற்கு இன்னொரு காரணம், இவளுக்குத் தாயைப் போன்ற முகம் மற்றும் குணாதிசயங்கள் அமைந்து இருப்பது தான்!

இதனால் தான், தன் மீது கூடுதலான பரிவு மற்றும் பாசம் வைத்திருக்கிறார்களா இருவரும்? என்று கூட தற்போது எண்ணிப் பார்த்தவளுக்கு, அது தவறான யோசனையாகப்பட்டது.

ஏனென்றால், தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னைச் சுட்டிக்காட்டி இவள் நீலாம்பரியைப் போன்று இருக்கிறாள் என்று சந்திரதேவ் மற்றும் காஷ்மீரன் வேறு யாரிடமும் சொல்லிக் கேட்டதில்லை அவள்.

“நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன்?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அந்தக் கேள்விக்கு அவளிடம் எந்த பதிலும் இல்லை. ஆனாலும், அதைக் கண்டுபிடிக்க முயன்றவளோ,

தாயின் அருகாமையில் தான் அவ்வளவாக இல்லாமல் இருந்தாலும் கூட அவரைப் பற்றிய எண்ணங்களும், உணர்வுகளும் தன்னை ஆட்படுத்திக் கொள்வதை அவளால் உணர முடிந்தது.

தன் அன்னையின் புகைப்படத்தைக் கையில் வைத்துக் கொண்டு பலத்த யோசனையில் ஆழ்ந்து இருந்தவளை அறையின் வெளியிலிருந்து கண்ணுற்றவனோ,

“ருத்ரா ம்மா” என்று அவளை அழைத்தான் காஷ்மீரன்.

“ஹாங்! அண்ணா!” என்று தனது புருவச் சுருக்கத்தை அவனிடமிருந்து மறைத்துக் கொண்டு அவனைப் பார்த்துக் கூறினாள் ருத்ராக்ஷி.

“உள்ளே வரலாமா டா?” என்றான் அவளது தமையன்.

“வாங்க ண்ணா” என்று தனக்கு அனுமதி கிடைத்தவுடன், அறைக்குள் நுழைந்து அவளருகே அமர்ந்து கொண்டு,”என்னடா பண்ற?” எனக் கேட்டபடியே அவளது கையிலிருந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தான் காஷ்மீரன்.

“அம்மாவைப் பத்தின தாட்ஸ் வந்திருச்சு ண்ணா” என்றாள் ருத்ராக்ஷி.

“என்னாச்சு டா? இப்போ ஏன் அவங்களைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கிற?” என்று அவளிடம் கனிவுடன் வினவவும்,

“தெரியலை ண்ணா‌. திடீர்னு வருது. அதுவும் இங்கே வந்ததில் இருந்து தான் ஆரம்பிச்சது” என்று அவனுக்குப் பதிலளித்த தங்கையின் தலையை மெல்லக் கோதி விட்டவனோ,

“நீ ரொம்ப மாசத்துக்கு அப்பறம், நிறைய நாள் இங்கே வந்து தூங்கிட்டு இருக்கியா! அதனால் கூட இருக்கலாம்” என்றான் காஷ்மீரன்.

ஆமாம்! அவன் சொல்வதும் ஒரு வகையில் உண்மை தானே? அவள் பிறந்ததில் இருந்து தந்தை மற்றும் அண்ணனின் பாச மழையில் நனைந்தாலும் தாயின் நினைவுகள் துரத்தியதால் தானே வேறு ஒரு ஊருக்குச் சென்று அங்கே தங்கி இருந்தாள்.

எனவே,“அப்படியும் இருக்கலாம் ண்ணா” என்று அவன் சொன்னதை தானும் ஒப்புக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“உன்னோட கல்யாணம் நெருங்க நெருங்க இப்படி தாட்ஸ் வர்றது சகஜம் டா. அதனால் நீ எதையும் நினைச்சு ஃபீல் பண்ணாதே ப்ளீஸ்!” என்று தங்கையிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டான் காஷ்மீரன்.

“ம்ஹ்ம். புரியுது அண்ணா. நம்ம அம்மா யூஸ் செஞ்ச வேறெந்தப் பொருளும் இங்கே இருக்கா?” என்று அவனிடம் கேட்டாள் அவனுடைய தங்கை.

“அவங்க யூஸ் பண்ணப் பொருள் எல்லாத்தையும் எரிச்சிட்டோம் டா. எதுவும் இல்லையே!” என்று அவளிடம் கூறி விடவும்,

“ப்ச்! ஒன்னுமே இல்லையா அண்ணா? தேடிப் பார்த்தீங்களா?” என்று மீண்டுமொரு முறை அவனிடம் கேட்டுப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் டா. உனக்கு மட்டுமில்லை எனக்கும், அப்பாவுக்கும் கூட அம்மாவோட பொருட்களைப் பார்த்தாலே அவங்களோட ஞாபகங்கள் வந்துச்சு. அதனாலேயே நாங்க அதையெல்லாம் எரிச்சிட்டோம்” என்று அவளிடம் அழுத்தமாக உரைத்தான் காஷ்மீரன்.

“ஓஹ்! ஓகே ண்ணா” என்று கூறியவளுக்கு அதீதமான ஏமாற்றம் ஏற்பட்டதை தானும் உணர்ந்து கொண்டவனோ, ஆனாலும் தன் தங்கையிடம் உண்மையைச் சொல்ல ருத்ராக்ஷியின் தமையனுக்கு மனம் வரவில்லை.

அதனால் அவளிடம் அந்தப் பதிலைச் சொல்லி விட்டுத் தனக்கு அலுவலக அறையில் வேலை இருப்பதாக கூறி அங்கேயிருந்து அகன்று விட்டான் காஷ்மீரன்.

அவனுக்கு வேலை இருக்கிறது என்று சொன்னது வேண்டுமென்றால் பொய்யாக இருக்கலாம். ஆனால், அவன் நேராகச் சென்றது என்னவோ, அலுவலக அறைக்குள் தான்!

அங்கே தன்னுடைய தந்தையையும் பேசுவதற்காக அழைத்திருந்தான் காஷ்மீரன்.

அந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவரோ, மகனது முகத்தைக் கூர்ந்து நோக்கியவாறு தான், அவனுக்கு எதிராக இருந்த நாற்காலியில் அமர்ந்து,

“என்னாச்சு டா?” என்று அவனிடம் வினவினார் சந்திரதேவ்.

“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ருத்ரா கிட்டே பேசினேன் ப்பா” என்று அவளுடனான உரையாடலை ஆதி முதல் அந்தம் வரை அவரிடம் பகிர்ந்து கொண்டான் காஷ்மீரன்.

அதைக் கேட்டதும் அவருடைய விழிகளில் வலி தோன்றியது.

“அவ அப்படிக் கேட்கும் போது எனக்கும் இப்படித் தான் இருந்துச்சு ப்பா” என்றவனிடம்,

“என்ன சொல்றதுன்னே தெரியலை ப்பா” என்று அவனிடம் கூறி வருத்தப்பட்டார் சந்திரதேவ்.

“நான் எதையோ சொல்லி சமாளிச்சுட்டேன். இப்போ என்னப் பண்ணலாம் ப்பா?” என்றான் காஷ்மீரன்.

“அவகிட்ட சொன்னப் பொய்யை உண்மையாக மாத்திடலாமா?” என்று தன்னுடைய மகனிடம் கேட்கவும்,

உடனே அதிர்ந்து போனவனோ,”என்னப்பா சொல்றீங்க?” எனக் கேட்டான்.

“ஆமாம் டா. நாம இது நாள் வரைக்கும் அவளை ஏமாத்திட்டு இருக்கோம். இனிமேலாவது அவளுக்கு உண்மையாக இருப்போம்” என்றார் சந்திரதேவ்.

“அதையொல்லாம் அப்பப்போ பார்த்துட்டு இருக்கிறதால் தானே உங்களுக்கு அம்மாவோட அருகாமை இருக்குதுன்னு சொல்வீங்களே? நீங்களா இப்படி பேசுறது?” என்று கேட்டுத் திகைத்தவனிடம்,

“ஆமாம் ப்பா. ஆனால், அதனால் ருத்ராக்ஷிக்கு எந்தப் பாதிப்பும், அழுத்தமும் வந்துடக் கூடாதே! அதான் சொல்றேன்” என்று அவனிடம் சொன்னார் அவனது தந்தை.

“அவளுக்குக் கொஞ்ச நாளில் கல்யாணம் ஆகிடுமே ப்பா. அப்பறம் அங்கே செட்டில் ஆகிடுவா. எப்போதாவது தான் இந்த ஊருக்கும், நம்ம வீட்டுக்கும் வருவா. அதுக்காகவா இப்படி ஒரு முடிவு எடுக்கிறீங்க?” என்று அவரிடம் வினவினான் காஷ்மீரன்.

சந்திரதேவ்,“வேற‌ வழி?” என்று கூறியவருக்குச் சொல்வது எளிது, அதைச் செய்வது மிக கடினமாக இருக்கும் என்பது நன்றாகவே தெரியும்!

- தொடரும்

எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. எப்போ முடியும்ன்னுத் தெரியலை. சோ, என்னால் அடுத்த யூடியை நாளைக்குப் போஸ்
ட் பண்றது டவுட் தான். அதனால் சனிக்கிழமை ஒரு எக்ஸ்ட்ரா அப்டேட் கொடுக்கிறேன் ஃப்ரண்ட்ஸ் 🙏
 
Last edited:
நீலாம்பரி அப்போ உயிரோடுதான் இருக்காங்களா?????? அப்பாவும் ,பிள்ளையும் அவங்களுக்கு பத்தின எந்த உண்மைய மறைக்கிறார்கள்🤔🤔
 
கடைசி paragraph இல் காஷ்மீரன் உரையாடல்ல எழுத்துப்பிழை இருக்கு சரி செய்யுங்க மா
 
நீலாம்பரி அப்போ உயிரோடுதான் இருக்காங்களா?????? அப்பாவும் ,பிள்ளையும் அவங்களுக்கு பத்தின எந்த உண்மைய மறைக்கிறார்கள்🤔🤔
Neelambari uyiroda ila sis. Avangaloda things ah dha erikanum nu nenaikranga idhula endha suspense yum ila. Thank you so much sis ❤️
 
Top