Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 18.1

Advertisement

நதியோட்டம் – 18(1)

ஹர்ஷூவின் முகத்தில் தெரிந்த தீவிரமே அவள் இதை விளையாட்டிற்கு கூறவில்லை என்பது தெளிவாகியது மற்ற இருவருக்கும்.
தீட்சண்யா நிஷாந்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஹர்ஷூவிடம் திரும்பி, “உனக்கு என்னாச்சு ஹர்ஷூ, திடீர்னு உளற ஆரம்பிச்சுட்ட?...”
கொஞ்சம் அழுத்தமாக தனக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்பதை மறைமுகமாகவே கோடிட்டு காட்டினாள்.
அதற்கெல்லாம் அசருபவளா ஹர்ஷூ?
“நான் உளறலை. அது உனக்கும் தெரியும். தெரிஞ்சுட்டே இப்படி கேட்காதே தியா. உனக்கு நான் கேட்டது பிடிக்கலை. அதுக்காக நீ எனக்கிட்ட சுத்தி வளைச்சு பேசவேண்டாம். இந்த நிமிஷம் எனக்கு தோணினதை நான் சொன்னேன். அதுக்குன்னு உன்னை நான் போர்ஸ் பண்ணலை. புரியுதா?...”
பொட்டில் அடித்தது போல பேசிய ஹர்ஷூவை பார்த்து அசந்து போன தீட்சண்யா நிஷாந்திடம் இவளை எப்படி சமாளிக்கிறாயோ என்பது போன்ற பார்வை ஒன்றை வீசினாள்.
நிஷாந்த் சங்கடத்தோடு நெளிந்தவன், “உனக்கென்ன பைத்தியமா ஹரி? அறிவில்லாம பேசிட்டு இருக்க?...” என அடிக்குரலில் சீறினான்.
நிஷாந்திற்கு தீட்சண்யா முன்னால் ஹர்ஷூ இப்படி பேசிவிட்டாளே? அதுவும் முதல் சந்திப்பிலேயே? அவள் தன்னை பற்றி என்ன நினைப்பாளோ? என கவலைக்குள்ளானான்.
அந்த கல்லூரியில் தீட்சண்யா இளநிலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்போது மேல் படிப்பையும் அங்கேயே தொடர்ந்துகொண்டிருப்பவள்.
அங்கிருக்கும் அனைவருக்குமே தீட்சண்யா என்றால் அப்படி ஒரு மரியாதையை கலந்த அன்பு. ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை இப்படி ஒரு மதிப்பை எப்படி பெற்றாள் என நிஷாந்த் வியக்காத நாளில்லை.
அவளின் அழகில் கவரப்பட்டதை விட குணத்தில் கவரப்பட்டு அவளிடம் காதலை கூறிய எத்தனையோ பேர்களிடம் கனிவான குரலில் கண்டிப்பு கலந்த வார்த்தையில் மறுத்துவிடுபவள், தன்னுடைய கம்பீரமான ஒற்றை பார்வையில் அவர்களாகவே தள்ளி நிற்கும் படி செய்துவிடுவாள்.
அவளின் மேல் உள்ள மரியாதையால் தான் ஹர்ஷூவை கூட அந்த மாணவர்கள் பிரச்சனையை வளர்க்காமல் விட்டுவிட்டு ஒதுங்கி சென்றுவிட்டனர்.
யாரிடமும் அகம்பாவமோ அலட்சியமோ மதியாத தன்மையோ எதுவும் இல்லாத நிறைகுடத்தை போன்ற அவளை பிடிக்காதவர்கள் எவருமில்லை. எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தீரக்கமானவயாகவும் தெளிவானதாகவும் இருக்கும். அவள் காதலை வெறுப்பவளும் இல்லை.
அவளுக்கென ஒரு லட்சியம். நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து தன்னுடைய குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்பதை தவிர சிந்தையில் வேறெந்த நினைவும் இல்லை.
அனைவரும் நட்பு பாராட்ட முயன்றாலும் அளவோடு பழகும் தன்மை கொண்டவள் நிஷாந்தின் கண்ணியத்தில் அவனிடம் கொஞ்சம் அதிகப்படியான நட்போடே இருந்தாள் என்பது மறுப்பதற்கில்லை.
இப்படிப்பட்டவளிடம் வந்து ஹர்ஷூ ஏடாகூடமாக பேசி அந்த நட்பிற்கே உலைவைத்து அரிசியை களைந்து போடட்டுமா என கேட்பது போல சொதப்பிக்கொண்டிருப்பவளை பார்க்க பார்க்க காண்டாகிற்று நிஷாந்திற்கு.
அதுவும் தனக்கும் தீட்சண்யா மீது அப்படி ஒரு எண்ணமே இல்லாமல் இருக்கும் போது, கனவில் கூட நடக்க வாய்ப்பே இல்லாத ஒன்றை ஹர்ஷூ வந்து தேவையில்லாமல் இப்படி அபத்தமாக பேசுவது எரிச்சலை கிளப்பியது.
ஏற்கனவே க்ளாஸ்ரூமில் தனக்கு ஆள் செட்டிலாகி இருப்பதாக ஒரு வாய்விட்டு தன்னை சிக்கவைத்திருப்பவளை என்ன செய்யவென யோசித்திருக்க, இப்பொது அதை விட பெரிய சோதனையை ஏற்படுத்தியவளை தீட்சண்யாவின் முன்பு கண்டிக்க முடியவில்லை.
ஆனாலும் தீட்சண்யாவிடம் மன்னிப்பை கோரும் விக்தமான பார்வையை சங்கடப்பட்டுக்கொண்டே வீச அதை தாங்கியவள்,
“விட்டு நிஷாந்த், ஹர்ஷூ விளையாட்டு பொண்ணுன்னு நீ அடிக்கடி சொல்லுவா. அது உண்மைன்னு காண்பிச்சுட்டா...” என இலகுவாக அவனின் மனகிலேசத்தை போக்கியவள் ஹர்ஷூவின் புறம் திரும்பி,
“ஹர்ஷூ, நீ நினைக்கிறது போல இது சாதாரண விஷயம் இல்லை. காதல் அது தானா வரனும். நீ ஆசைப்பட்டா மட்டும் நடக்ககூடியதில்லை. நானும் நிஷாந்தும் நல்ல ப்ரெண்ட்ஸ். அவ்வளோ தான். அதுக்கு மேல ஏதும் இல்லை...”
“கூல் தியா. உன்னை பத்தி நிஷூ சொல்லும் போதே அவ்வளோ இம்ப்ரெஸ் ஆகிட்டேன். நானும் இப்போவே கல்யாணம் செய்துக்கோங்கன்னா சொல்றேன். ஆனா நீங்க சேர்ந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்...”
அவளது பேச்சை கேட்டவள் சிரித்துக்கொண்டே, “ யூ ஆர் இம்பாஸிபிள் ஹர்ஷூ. நான் என்ன சொன்னாலும் நீ நினைக்கிறதிலையே நிலையா நிக்கிற? நிஷாந்த் வேற கோவமா இருக்கான். அது நடக்கும் போது பார்ப்போம். இப்போ அந்த பேச்சை விட்டு வேற பேசலாம்...”
“அவனுக்கு வேற வேலையில்லை. நாம பேசலாமே?...” என கூறியவள் நேரம் போவது தெரியாமல் சலசலத்துகொண்டே இருக்க அதை சுவாரஸ்யமாக கேட்டுகொண்டிருந்தாள் தீட்சண்யா.
“இன்னும் எதுக்கு நிஷாந்த் கோவமா இருக்க? அவ பேசினதை விட்டுட்டு ரிலாக்ஸா இரு...” என தீட்சண்யாவே சமாதானம் செய்ய நிஷாந்திற்கு அங்கே எந்த வேலையும் இல்லாது போய்விட்டது.
நிஷாந்திற்கும், ஹர்ஷூவிற்கும் இன்னமும் நெருக்கமாக ஆகிவிட்டாள் தீட்சண்யா. அன்றிலிருந்து அவர்களுக்கிடையில் கண்ணுக்கு தெரியாத ஒரு பிணைப்பு நாளுக்கு நாள் இறுகிக்கொண்டே போனது.
அவளது காலேஜில் கூட அவளுடன் படிப்பவர்களுடன் ஒரு எல்லையோடு பழகியவள் ஹர்ஷூவின் அபரிமிதமான அன்பிலும் பாசத்திலும் எந்த எல்லைகளையும் வகுக்காமல் பழக ஆரம்பித்தாள்.
ஹர்ஷூவின் வீட்டில் பரணியும், பரமேஷ்வரனும் தீட்சண்யாவை எந்தவிதமான பாகுபாடுமின்றி தன்னுடைய இன்னொரு மகளாகவே பார்த்தனர். ஹர்ஷூவின் அபிமானம் ஒன்றே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது.
பலநாட்கள் பரணியே ஹர்ஷூவிடம் ஏதாவது சொல்வதற்கு தீட்சண்யாவை நாடியிருக்கிறார். ஏனோ ஹர்ஷூவால் தீட்சண்யாவின் பேச்சை மட்டும் மறுக்கவோ, ஒதுக்கித்தள்ளவோ முடியாமல் போனது. அந்தளவிற்கு ஹர்ஷூ தீட்சண்யாவிற்கு உயிருக்கும் மேலான ஒரு இடத்தை கொடுத்திருந்தாள்.
நிஷாந்த் வீட்டில் அப்படியில்லை என்றாலும் மகனின் தோழி என்றளவில் தீட்சண்யாவிடம் நன்றாகவே பழகினார்கள். அவளது பழகும் விதமும் கூட சரஸ்வதியை அவள்பால் வெகுவாக ஈர்த்தது.
ஆனால் தீட்சண்யா வீட்டில் ஹர்ஷூவின் வசதியும் வளமுமே அவளை சேர்த்துக்கொள்ள போதுமானதாக இருந்து. அளவிற்கதிகமாக ஹர்ஷூவை பசப்பலான பேச்சில் குளிப்பாட்ட ஹர்ஷூவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தீட்சண்யாவிற்கடுத்து அந்த வீட்டில் இயல்பாக பழகுவது மஞ்சரியிடம் மட்டுமே.
சுசீலாவும், நடேசனும் ஹர்ஷூவிடம் காட்டும் அந்த செயற்கையான பாசம் கூட நிஷாந்திடம் காட்டவில்லை. ஆனாலும் அவனிடம் எந்தவிதமான முகத்திருப்பாலும் இல்லை. அதுவும் ஹர்ஷூவின் சகோதரன் என்பதால் மட்டுமே.
இதுவரை தன்னுடைய பெற்றோர்கள் இந்தளவிற்கு யாருக்கும் முக்கியத்துவம் குடுத்ததில்லையே என்பது மனதிற்கு நெருடலாக இருந்தாலும் தானும் வீட்டிற்கு கூட்டி வரும் அளவிற்கு தானும் யாரிடமும் நெருக்கமாக பழகவில்லை என்பதும் உண்மை.
அதனாலேயே அவளுக்குள் தோன்றிய சிறு சந்தேகம் கூட வந்த சுவடில்லாமல் போனது.
ஹர்ஷூ தனது மூன்றாம் வருட படிப்பை முடித்துக்கொண்டு நிஷாந்த் படிக்கும் கல்லூரியில் சேர்ந்துவிட்டாள். ஹர்ஷூவிற்கு முதல் வருடமும், தீட்சண்யா நிஷாந்த் இரண்டாம் வருடமும் பாதி முடிந்த நிலையில் தீட்சண்யா ஆகாஷை சந்திக்கும் வரை அவர்களது வாழ்க்கை ஓவியமாகத்தான் இருந்தது.
அன்று கல்லூரி முடிந்து ஒன்றாக கிளம்பி வெளியில் வரும் போது காரில் சாய்ந்து ஒருவன் தங்களையே நோட்டமிடுவதை பார்த்த ஹர்ஷூவினுள் இருக்கும் வீரமங்கை விழித்துக்கொள்ள வேகமாக அவனை நோக்கி சென்றாள்.
Nice
 
Top