Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 6.2

Advertisement

இரவு நெருங்க நெருங்க அனைவரையும் பயம் கவ்விக்கொண்டது. இதுவரை அனைத்தும் சரியாக நடந்தாலும் இனிமேல் தானே முக்கியமான சடங்கு இருக்கிறது. இவள் அதில் என்ன பிரச்சனை செய்ய காத்திருக்காளோ என பயந்துகொண்டே இருந்தனர்.

ஷக்தியின் இயல்பான நடவடிக்கையே இவனை ஏதாவது செய் செய் என ஹர்ஷூவை படுத்திக்கொண்டே இருந்தது. இவளிடம் இருந்து காப்பது போல அனைவரும் ஆள் மாற்றி ஆள் அவனை விட்டு நகராமல் சுற்றியே இருந்தனர். அதை உணர்ந்தும் மறுக்காமல் ஷக்தி இருக்க அதில் மேலும் எரிச்சலாகி கடுகடுத்த முகத்தோடே உலவினாள்.

இரவு சாப்பாடு முடிந்ததும் நிஷாந்தோடு தோட்டத்தில் உலாவ சென்றுவிட்டான் ஷக்தி. இரவு சடங்கிற்கு ஹர்ஷிவ்தாவை ரெடி பண்ண சரஸ்வதியும் நெருங்கவில்லை. சகுந்தலாவும் முயலவில்லை.

பரணி அவளை அழைத்து புடவை கட்ட சொல்ல அவரை முறைத்துவிட்டு தானே தயாராகி வரவும் அனைவருக்கும் கொஞ்சம் நிம்மதி உண்டாகியது. ஷக்தியோடு சேர்ந்து பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் ஹர்ஷூ.

மற்றவர்கள் தங்களறைக்கு செல்ல அந்நேரம் பார்த்து ஷக்திக்கு மொபைலில் முக்கியமான அழைப்பு வர தான் பேசிவிட்டு வருவதாக கூறி வெளியே சென்றான்.

சரஸ்வதியோடு தன்னுடைய அறைக்குள் சென்றவளின் முகம் ஆச்சர்யத்தை சூடிகொண்டது. கேள்வியாக சரஸ்வதியை பார்க்க,

“அது ஒண்ணுமில்லை ஹர்ஷூம்மா, மாப்பிள்ளைதான் எதுவும் அலங்காரம் செய்யவேண்டாம்னு சொன்னாரு. உன்னோட ரூம் எப்டி இருக்கோ அப்டியே இருக்கட்டும்னு சொல்லிட்டாரு. பார்த்துக்கோடா...” என சொல்லியதும் வெளியேறிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து ஹர்ஷூவின் அறைக்குள் நுழைந்தவன் நேராக பாத்ரூம் போய் முகம் அலம்பிவிட்டு வேறு உடையை மாற்றிக்கொண்டு வந்து படுக்கையில் சாய்ந்துவிட்டான்.

அவன் வரும் முன்பே தன்னுடைய அலங்காரத்தை கலைத்துவிட்டு த்ரீபோர்த் பேண்ட்டும், டி ஷர்ட்டுமாக நைட் சூட்டில் இருந்தவள் தன்னுடைய லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.

தன்னை இப்படி கண்டதும் ஷக்தியின் முகம் எப்படி மாறுமென பார்க்க ஆவலாக இருந்தவளது எண்ணத்தில் மண்ணை போட்டான் ஷக்தி. அவளை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், “நீ எப்படி வேண்டுமென இருந்தாலும் எனக்கு கவலையில்லை...” என்பதுபோல நடந்துகொண்டு அவளை வெறுப்பேற்றினான்.

கையையும், வாயை வைத்துகொண்டு சும்மா இருக்க ஹர்ஷூ என்ன சாதாரணப்பட்டவளா?

லேப்டாப்பில் ஆங்ரிபேர்ட் விளையாடி கொண்டிருந்தவள் வால்யூமை கூட்டி ஃபுல்லாக வைத்து விளையாடினாள். அந்த சத்தத்தில் கலைந்தவன் அவள் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஷக்தி தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் விளையாட்டில் கவனம் சிதறி அவள் வைத்த குறிகள் அனைத்தும் தப்பிப்போக,

“ஒரு ஆங்ரிபேர்ட் கூடவா விளையாட தெரியாது உனக்கு? வாயை கேளு. எப்போ பாரு எண்ணையில போட்ட அப்பளமாட்டம் பொரியிறது...” என அவளது லேப்டாப்பை தன் புறம் திருப்பி அவன் விளையாட தொடங்கினான். அதில் மேலும் பொங்கியவள் லேப்டாப்பை பிடுங்கி மூடி பக்கவாட்டில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு படுத்துவிட்டாள்.

அவளின் செயலில் புன்னகைத்தவன், “ஏய் சண்டிராணி, இன்னும் இருக்கு உனக்கு. என்கிட்டையேவா?...” என்பது போல நினைத்துகொண்டு தானும் படுத்துவிட்டான்.

ஒருமணி நேரம் முழுதாக கடந்ததும் ஏதோ அரவம் கேட்டதில் மெல்ல கண்விழித்து பார்த்தான் ஷக்தி. அங்கே ஹர்ஷிவ்தா ஜெர்கினை எடுத்து போட்டுகொண்டு தலையில் கேப்பை மாட்டிக்கொண்டிருந்தாள்.

“இந்நேரம் இந்த மங்கி குல்லா என்ன செய்யுது?...” என தூக்க கலக்கம் முழுவதும் அகலாமல் அரைகுறையாக பார்த்துக்கொண்டிருக்கும் போதே, ஜன்னலை திறந்து பால்கனியில் குதித்தவள், அங்கிருந்து பைப் வழியாக கீழே சரசரவென இறங்க ஆரம்பித்தாள்.

அதில் திடுக்கிட்டு எழுந்தவன், “அடிப்பாவி சொந்த வீட்லையே இப்டி யாருக்கும் தெரியாம வெளில போறாளே? இதைத்தான் சொன்னாளா நம்மக்கிட்ட. ஷக்தி இனி நீ தூங்கின மாதிரி தான்...” என புலம்பிக்கொண்டே தானும் அவளை பின்பற்றி பைப் வழியாக இறங்க முயற்சித்து பயத்தில் முடியாமல் போக,

“கிராதகி, எப்டி தான் மின்னல் வேகத்துல ஏறி இறங்குறாளோ? சரியான முகமூடி திருடி. இப்டி அர்த்தராத்திரில புலம்ப வச்சுட்டாளே?. இவளை ஃபாலோ பன்றதுக்கே முதல்ல நாம பைப் ஏறி இறங்கி பழகனும் போல?...” என நொந்துகொண்டே மீண்டும் தட்டுத்தடுமாறி மேலே வந்தவன் யாரும் பார்த்துவிடாமல் இருக்க வாசல் வழியாகவே வெளியே வந்து பார்த்தால் அவள் கீழே வந்ததற்கான சுவடே இல்லை.

அதற்குள் எங்கே சென்றிருப்பாள் என யோசிக்கும் போதே பின் பக்கம் சலசலக்கும் சத்தம் கேட்க அங்கே சென்று பார்த்தான். செடிகளுக்கிடையே கிடந்த ஏணி ஒன்றை எடுத்து காம்பவுண்ட் சுவரில் சாற்றி அதில் ஏறி பட்டென்று மறுபுறம் குதித்துவிட்டாள் அவனவள்.

இப்படி ஜாமத்தில் அவள் செல்வது அதுவும் திருமணமான அன்றே இப்படி செல்வது பிடித்தமில்லை என்றாலும் இதையும் பார்த்து ரசித்து விரும்பித்தானே அவளை பற்றி எல்லாம் அறிந்துதானே பிடிவாதமாக அவளை மணந்தாய். என அவனின் மனசாட்சி சுட்டிக்காட்டியதில் அடங்கிப்போனான்.

“யோசிக்க நேரமில்லை. அவளை பிடித்து என்னவென கேட்டாலும் ஒழுங்கான பதில் வரப்போவதில்லை...” என நினைத்தவன் என்னதான் செய்யறான்னு பார்க்கலாமே என நினைத்து தானும் அவளை பின்பற்றி அதே ஏணியில் ஏறி அவளின் கவனத்தை கவராமல் பின்தொடர்ந்து சென்றான்.

இரண்டு தெரு சென்றதும் நிஷாந்தின் வீட்டின் பின்புறம் சென்றவள் அங்கிருந்த சிறிய கேட்டை தன்னிடம் உள்ள சாவியால் திறந்துகொண்டு மீண்டும் பூட்டிவிட்டு உள்ளே சென்றாள். எப்படியும் அவனோடுதானே வெளியில் வரவேண்டும் என எண்ணிக்கொண்டு அங்கேயே காவல் இருந்தான் ஷக்தி.

“உனக்கு தேவையாடா ஷக்தி இது? இதுவரைக்கும் மிரட்டினது போல இப்போவும் என்னோட சேர்ந்து வாழ ஆரம்பின்னு சொல்லி இன்னைக்கு அவக்கிட்ட உன்னோட உரிமையை காட்டுறதை விட்டுட்டு இப்டி வெட்டவெளில வாட்ச்மேன் வேலை பார்க்க வந்துட்டியே? த்தூ...” என காறி உமிழ்ந்தது அவனது மனசாட்சி.

“உன் கிட்ட ஐடியா கேட்டேனா? எனக்கு எதிரி வெளில வேண்டாம். என்னோட மனசாட்சியான நீயே போதும். என்னோட சோலியை மொத்தமா முடிக்கனும்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கிறதை விட்டுட்டு அடக்கவொடுக்கமா மனசுக்குள்ளயே இருக்கிற வழியை பாரு...” என அதை அடக்கியவன் மீண்டும் மனசாட்சியின் குரலுக்கு காதுகொடுக்காமல் உள்ளே சென்றவள் எப்போது வருவாள் என பார்த்துகொண்டிருந்தான்.

இங்கே ஹர்ஷூவோ வழக்கம் போல தன் பாணியிலேயே பைப் ஏறி நிஷாந்தின் அறைக்குள் வர அவன் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

“நிஷூ...” என மெல்ல அவனை அசைக்க அவனோ, “ம்ம் நஸூ, ஆனாலும் என்னை நீ இப்டி ஏமாத்திருக்க கூடாது டார்லிங். இப்டி என்னை அம்போன்னு விட்டுட்டு அந்த அரை மண்டையனை கல்யாணம் செய்துக்கிட்டியே. உன்னோட லைப்பே வேஸ்டா போச்சே. ஐ மிஸ் யூடா நஸூ...” என தூக்கத்தில் பிதற்ற,

“நிஷூ...” என கொஞ்சம் அழுத்தமாவே அவனை எழுப்ப முயன்றாள் ஷர்ஷூ. பின்னே கொஞ்சம் சத்தம் கேட்டாலும் சரஸ்வதியோ செல்வமோ எழுந்து வந்துவிடுவரே. அவளிடம் அதிகம் பேசாமல் பார்வையிலேயே மிரட்டும் செல்வத்திற்கு கொஞ்சம் பயப்படத்தான் செய்வாள் ஹர்ஷூ. இப்போது இந்த நேரத்தில் தான் வந்திருப்பதை அவர் அறிந்தால்? அதற்கு தான் இந்த அடக்கிவாசிப்பு.

நிஷாந்தின் வாயை கைகளால் இறுக்க மூடியவள் ஓங்கி தலையில் ஒரு போடு போட்டாள். அதில் அலறகூட முடியாமல் பயந்து போய் எழுந்தவன் ஹர்ஷூவை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.

“அடிப்பாவி, ஹரி, என்னடா இந்த நேரத்துல வந்திருக்க? இன்னைக்குமா?. இன்னைக்கு என்ன நாள்னு தெரிஞ்சும் இப்டி வந்திருக்கியே?...” என பயத்தில் வியர்க்க ஆரம்பித்தது.

“பொறுப்பில்லாம பேசாதே நிஷூ, கடமைக்கு முன்னால எனக்கு பர்ஸ்ட்நைட் ரொம்ப முக்கியமா?...”

“என்னாது கடமையா?...” என பேந்த பேந்த விழித்தவனிடம்,

“ஹைய்யோ அதுக்குள்ளே மறந்துட்டியா? போன வாரம் தானே நாம ஒரு அசைமண்ட்க்கு ப்ளான் பண்ணினோம். நம்ம ராமன் அங்கிள் பொண்ணு மீனுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறதா பேசிக்கிட்டாங்கள்ள. அந்த மாப்பிள்ளை தினேஷ் பத்தி டீட்டயில்ஸ் வேற நிறைய கலெக்ட் பண்ணனும். தலைக்கு மேல வேலை இருக்கு. வா வா போகலாம்...” என அழைத்தவளை பார்த்து கொலைவெறியானான் நிஷாந்த்.

கல்யாண வேலையில் ஹர்ஷூ சொன்னதை அரைகுறையாக கவனித்து அப்போதைக்கு அவளிடம் விவாதம் வேண்டாமென நினைத்து இந்த அசைமன்ட்டிற்கு சரி என்றும் ஒப்புக்கொடுத்திருந்தான்.

“நான் ஒன்னும் ப்ளான் போடலை, நீதான் எல்லாம் முடிவு பண்ணிட்டு எனக்கிட்ட சொன்ன...”

“ஆமா நான் தான் ப்ளான் பண்ணினேன். அதுக்கென்ன? இப்போ வா போகலாம்...” என அவனை கையை பிடித்து எழுப்ப பார்க்க,

“லூஸா ஹர்ஷூ நீ?... இன்னைக்குதான் கல்யாணம் ஆகிருக்கு. முக்கியமான நேரத்துல இப்டி வந்திருக்க? அத்தானுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாரு?. முதல்ல வீட்டுக்கு போ. இல்லைனா வா நானே கொண்டு வந்து விடறேன். அத்தான் முழிச்சுக்கறதுக்குள்ள உங்களோட ரூம்க்கு போய்டு...” என அவளை கிளப்ப,

“அப்போ நீ என்னோட வரமாட்ட? அப்டித்தானே...” என்றவளை பார்த்து மறுப்பாக தலையசைக்க,

“எனக்கு தெரியும்டா, நீ இப்டி எதாச்சும் செய்வன்னு. சரி அப்போ இந்த வீடியோவை நான் சித்தி, சித்தப்பா, அப்புறம் முக்கியமா உன் பரணிம்மாக்கிட்டையும் காட்டப்போறேன். உன் நஸூவை பத்தியும் போட்டுக்கொடுக்கேன்...” என வீடியோவை ஓடவிட்டு காண்பிக்க ஹர்ஷூ நிஷூவின் அறைக்குள் வந்ததிலிருந்து அவன் தூக்கத்தில் உளறியது வரை அனைத்தும் ரெக்கார்ட் ஆகியிருந்தது.

இன்னொரு வீடியோவில் நிஷாந்த் அவசர அவசரமாக தனது வாட்ரோபில் இருந்து சில புகைப்படங்களை எடுத்து அரை முழுவதும் ஒட்டுவது இருந்தது. இதையெல்லாம் பார்த்த நிஷாந்திற்கு பேயறைந்தது போல ஆகிவிட்டது.

இனி நிஷூவின் நிலை?


நதி பாயும் ...
Super sis
 
Top