Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 6.1

Advertisement

தடையில்லை நதியே பாய்ந்தோடு


நதியோட்டம் – 6


விடிந்ததுமே மண்டபத்தில் சொந்தபந்தங்களும் உறவினர்களும் கூட ஆரம்பித்தனர். பரமேஷ்வரனின் குடும்பத்தாருக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளி ததும்பியது. வந்தவர்கள் அனைவரையும் நன்றாக கவனிப்பதில் ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் சுழன்று கொண்டே இருந்தனர்.


காலையில் யாரிடமும் எந்த வம்பும் வளர்க்காமல் மணப்பெண்ணாக தயாராவதற்கு அமைதியாக ஒத்துழைத்து பரமேஷ்வரன், பரணி தம்பதிகளின் வயிற்றில் பாலை வார்த்தாள் ஹர்ஷிவ்தா. மணமேடைக்கு பெண்ணை அழைத்து வர சொல்லும் வரை அனைத்துமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.

சிறிது நேரத்திலேயே நிஷாந்த் படபடப்போடு பரணியின் அருகில் வந்து, “பரணிம்மா, இந்த ஹரி தன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டா. அவ ரூம் கதவை பூட்டிட்டு திறக்கமாட்டேன்னு பிடிவாதமா இருக்கா. நீங்களாவது வந்து சொல்லுங்க. ஐயர் இந்த வாலை கூட்டிட்டு வர சொல்லிட்டு இருக்காரு. அத்தான் வேற தயாராகிட்டாங்க...” என அவரை இழுத்துக்கொண்டே ஹர்ஷிவ்தாவின் அறையை நோக்கி ஓடினான்.

பதட்டத்தோடு பரணி அறைக்கதவை தட்ட, “ஹர்ஷூம்மா, சொல்றதை கேளுடா. இத்தனை பேர் முன்னாலையும் இப்டி செய்யாத. வெளில வா. முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுதுடா...” என்றவர் அவளுடன் இருந்த உறவுக்கார பெண்ணிடம்,

“நீ எதுக்கு பிரேமா அவளை விட்டுட்டு வெளில வந்த?...” என ஆற்றாமையோடு கேட்க,

“ஹைய்யோ அத்தை, ஹர்ஷூதான் அவளே புடவையை கட்டிக்கறேன்னு சொல்லி என்னை அஞ்சு நிமிஷம் வெளில இருன்னு சொன்னா. இப்படி செய்வான்னு நானும் எதிர்பார்க்கலையே?...” என கையை பிசைந்துகொண்டு கவலையோடு பேச அதற்குள் நிஷாந்த் ஷக்திக்கு தகவலை கூறிவிட்டிருந்தான்.

ஷக்தி உடனடியாக வந்ததும், “அத்தை நீங்க எல்லாருமே இங்க இருந்து போங்க. நான் பேசிக்கறேன். ஒன்னும் பிரச்சனை இல்லை. உங்களை காணோமேன்னு தேடபோறாங்க. அப்புறம் இங்க தேடி வந்தாங்கன்னா தேவையில்லாம பேச்சு எழும்பும். நான் உங்க பொண்ணை கூட்டிட்டு வரேன்...” என அவருக்கு சமாதானம் கூறி அனுப்பிவைத்தவன் அந்த பெண்ணையும் உடன் செல்ல சொல்லிவிட்டான்.

ஷக்தியை தேடிவந்த சகுந்தலா, “இவளை என்ன தான் செய்யறது ஷக்தி?, நேரம் வேற ஆகிட்டு இருக்கே?...” என படபடக்க,

“கொஞ்சம் அமைதியா இருங்கத்தை, நிஷாந்த் நீ கவலை படாத...” என கூறிவிட்டு தன் மொபைலில் இருந்து ஹர்ஷிவ்தாவிற்கு அழைத்தான்.

இரண்டு முறை அழைத்தும் அவள் எடுக்காமல் போக பொறுமை இழந்தவன் மீண்டும் ஒருமுறை அழைத்தான். அவளது நல்லநேரமோ என்னவோ, போனால் போகிறதென்று அழைப்பை எடுத்தவள்,

“என்ன, எதுக்காக சும்மா சும்மா கால் பண்ணிட்டே இருக்கீங்க?.இப்போதான் என்னோட நம்பர் தெரிஞ்சதா?...”என ஒன்றுமே தெரியாதது போல வினவ,

“ஓஹ் நான் எதுக்கு கால் பண்ணினேன்னு தெரியாது தானே உனக்கு?...”

“ஏன் தெரியாம?... எல்லாம் தெரியும், தெரியும். என்ன சார் ரொம்ப டென்ஷன்ல இருக்கீங்களோ?... கல்யாணம் நடக்குமோ நடக்காதோன்னு பயம் வந்திடுச்சா?. நேத்தே வந்துட்டு என் கண்ணுல சிக்காம ஆட்டமா காட்டினதானே நீ. இப்போ அனுபவி...” ஹர்ஷிவ்தாவின் குரலில் கேலி கொப்பளித்தது.

அதுவரை கோவமாக இருந்த ஷக்திக்கு ஹர்ஷிவ்தாவின் பேச்சில் உல்லாசம் குடிகொண்டது. “ஓஹ் என்னை தேடிருக்க போல? அப்போ நீயே வந்து பார்த்திருக்க வேண்டியதுதானே?, என்ன சொன்ன?... பயமா? எனக்கு பயம்னு கனவு வேற கண்டுட்டு இருக்கியா நீ? நினைப்புத்தான். சரி, மேடம் எப்போ வெளில வருவீங்க?...”

தன்னை கண்டுகொண்டானே என நினைத்தவள் பேச்சை மாற்றி, “நான் எதுக்கு வெளில வரனும். நான் மாட்டேன்னு சொல்ல சொல்ல நீங்க தானே கேட்காம கல்யாணத்தை முடிவு பண்ணுனீங்க. எல்லா முடிவையும் நீங்களே எடுத்துட்டா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?... என் சம்பந்தமான முடிவுகள்ல நீ தலையிட்டா என்ன நடக்கும்னு நீ தெரிஞ்சிக்கனுமே?...”என அவனை பன்மையிலும் ஒருமையிலுமாக அழைத்து குழப்பியடித்தாள்.

“ஓஹோ, பழிக்கு பழியா?...”

இருவரும் பேசியதை கேட்டு சகுந்தலாவிற்கும் நிஷாந்திற்கும் தலைவலி வந்தது தான் மிச்சம். “அவளை வெளில வர சொல்றதை விட்டுட்டு இப்டி அவ கூட மல்லுக்கு நின்னுக்கிட்டு பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்கானே?...” என நொந்து போனார் சகுந்தலா.

“அப்போ உன்னால வெளில வர முடியாது?...” என மீண்டும் கேட்க நிஷாந்த் பொறுமை இழந்து கதவை உடைக்க போனான். அவனை தடுத்தான் ஷக்தி.

“ஆமா, உங்களால முடிஞ்சா என்னை வர வைங்க பார்ப்போம்...”

“உன்னை கூப்பிட உன்னோட செல்லத்தை அனுப்பறேன். அப்போ நீயே தானா வெளில வந்திடுவ...”

“என்னோட செல்லமா? அது யாரு? அதுவுமில்லாம நான் கதவை திறந்தா தானே யாரும் உள்ளே வரமுடியும்?...”

“எத்தனுக்கு எத்தன் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்வான் போல? பாரேன், நீ பயப்படவும் ஒரு இனம் இருக்கு...” என்றவன்,

“அவங்களுக்கு கதவெல்லாம் திறக்க வேண்டாம் ஹர்ஷிவ்தா. கிடைக்கிற கேப்ல உள்ளே புகுந்துடுவாங்க. புரியலையோ. தவளைம்மா, தவளை, தவளை...” எனவும் அரண்டுபோனாள் ஹர்ஷூ. நிஷாந்தின் பார்வையில் பாராட்டு தெரிய சகுந்தலா தலையில் அடித்துகொண்டு அங்கிருந்து நிஷாந்தை அழைத்துகொண்டு சென்றுவிட்டார்.

ஹர்ஷூவிற்கு தவளை என்றால் அலர்ஜி. சிறுவயதில் ஒரு முறை அது அவளின் மேலே ஏறியதும் பயத்தில் அவளை காய்ச்சலில் வைத்துவிட்டது. அதிலிருந்து தவளையை அருகில் பார்த்தாலே ஹர்ஷூவின் உடலில் ஊறல் எடுத்து உடலெல்லாம் ரத்தமாக சிவந்துவிடும். அதனாலேயே தவளையை பற்றி நினைக்ககூட விரும்பமாட்டாள். எப்போதோ நிஷாந்த் சொல்லிய விஷயம் இப்போது ஷக்திக்கு கைகொடுத்தது.

“இதெப்படி உங்களுக்கு தெரியும்?... என்ன பூச்சாண்டி காட்டுறீங்களா? அவ்வளோ சீக்கிரம் என்னை மடக்க முடியாது. அதுமட்டுமில்லாமல், அதை பார்த்தா எனக்கு என்னாகும் தெரிஞ்சிருக்குமே?... இப்போது எனக்கு காய்ச்சல் வந்துடுச்சுனா அதை வச்சே இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்...” என பயத்தை வெளிக்காட்டாமல் கோபமாக பேச,

“ஈஸிட், உனக்கு இப்டி வேற நினைப்பா?, என்னை ரொம்ப ஈஸியா எடை போட்டுடாதே. காய்ச்சல் வந்தா மட்டும் விட்டுடுவாங்களா? என்ன ஆனாலும் சரி இந்த மண்டபத்தை விட்டு போகும் போது நீ என்னோட மனைவியா மிசஸ் கௌரவ் ஷக்திவேலாதான் இங்க இருந்து வெளில அடியெடுத்து வைப்ப...” என்றவனின் பேச்சில் ஹர்ஷூவின் இதழ்களில் சிறு முறுவல் தவழ்ந்தது.

“காய்ச்சல்ன்னு வந்துட்டா உன்னால எதையும் கண்ட்ரோல் பண்ண முடியாது. இப்போ கல்யாணம் நடக்கும், அடுத்து என்னனென்ன நடக்கும்னு உனக்கு நான் சொல்லித்தான் தெரியனுமா? என்னை எதிர்த்து போராட கூட உனக்கு தெம்பிருக்காது மிசஸ் கௌரவ் ஷக்திவேல். இப்போ கூட கதவை உடைச்சிட்டு உள்ளே வந்து உன்னை கூட்டிட்டு போக முடியாமலா இப்டி பேசிட்டு இருக்கேன்?...”

“எனக்கு அதுல விருப்பம் இல்லை. நீயா தானே கதவை பூட்டிக்கிட்ட. அப்போ நீயாதான் வெளில வரனும். என்னை பத்தி இத்தனை நாளில் உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். இன்னும் பைவ் மினிட்ஸ்ல நீ வெளில வரலைனா இந்த ரூம்க்குள்ள தவளையோட தவளையா தான் நீயும் இருப்ப. நான் சொன்னா சொன்னதை செய்வேன். தென் உன்னோட விருப்பம்...” என கூறியவன் இணைப்பை துண்டித்து விட்டு கதவின் அருகில் சாய்ந்து நின்றான்.

இரண்டு நொடிகளில் கதவை திறந்தவள், “இதுக்கெல்லாம் சேர்த்து உன்னை வச்சிக்கறேன்...” என மூச்சுவாங்க பேசியவளை பார்த்து வாயடைத்து போனான் ஷக்தி.

ஆனாலும், “வச்சிக்க, வச்சிக்க, அதற்காகத்தானே காத்திருக்கிறேன் மை லைஃப்...” என சிரித்தவாறே அவளை சீண்டியவன் அவளை தலை முதல் கால் வரை அளவிட்டுவிட்டு,

“அடிப்பாவி, ரெடியாகிட்டு தான் இந்த ஆட்டம் காட்டினையா?...” என்றவனை நன்றாக முறைத்துவிட்டு,

“அதான் தெரியுதுல வா போகலாம்...” என அவனை முந்திக்கொண்டு நடக்க,

“ஹேய் இப்போ எதுக்கு நீ பாட்டுக்கு போய்ட்டே இருக்க?, நீ இங்கயே இரு. நம்மை அழைச்சிட்டு போக வருவாங்க...” என அவளை தடுக்க பார்க்க,

“ஏன் உனக்கும், எனக்கும் காலில்லையா? வா போகலாம். கவலை படாதே, உன்னை நான் பத்திரமா யார் கண்ணும் படாம அழைச்சிட்டு போறேன். என்னோட வருவியா, இல்லையா?...” என பிடிவாதமாக கேட்க வேறு வழியின்றி தனது வலது கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.

மறுக்காமல் பற்றிக்கொண்டவள் அவனோடு மணமேடை நோக்கி இணைந்து செல்ல அங்கிருந்தவர்கள் கண்கள் நிறைக்க வியந்து பார்த்தனர் அவர்களின் ஜோடிப்பொருத்தத்தை.

இதை கண்டு கிசுகிசுப்பான, “பாரு கௌரவ், உன்னை ஏதோ ஜூ ல இருந்து வந்ததை பார்க்கிறது போல வித்யாசமாக பார்க்காங்க. இதுக்குதான் சொன்னேன் ஓவரா மேக்கப் போட்டுக்காதன்னு...” என வம்பிழுக்க,

“ம்ம் ஆமாமா. உன்னையும் கூடதான் பார்க்காங்க. நீ சொல்லிட்ட, நான் சொல்லலை. அவ்வளோ தான் வித்யாசம்...” என அவளின் மூக்கை உடைத்தான்.

அதில் ஹர்ஷிவின் முகம் கோவத்தில் சிவக்க, “ஹ்ம் நீ கோவத்தில் கூட கொஞ்சம் பார்க்கிற மாதிரிதான் இருக்க. நாட் பேட்...” என ஷக்தி அதற்கும் காம்ப்ளிமென்ட் கொடுக்க கூட்டத்தை மறந்தவளாக அனைவரின் முன்பும் அவனின் தோளில் கிள்ளவும் அதை சிரிப்போடு ஏற்றுக்கொள்ள தானும் அதில் புன்னகையோடு அவனோடு இணைந்துகொண்டாள். பார்த்த அனைவருக்குமே அந்த காட்சி ரசிப்பை ஏற்படுத்தியது.

சகுந்தலாவோ, “பரணி புள்ளைங்களுக்கு சுத்தி போடனும். திருஷ்டி படுது பாரேன்...” என கூறி மகிழ பரணிக்கு சந்தோஷத்தில் கண்ணீரே வந்துவிட்டது.

“என்ன பரணி இது நல்லநாள் அதுவுமா? சரி சரி வா மேடைக்கு போகலாம்...” என பரமேஷ்வரன் வந்து அழைத்து செல்ல அனைவரும் மணமக்கள் அருகில் சென்று நின்றனர்.

மந்திரம் சொல்லி திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்ததும் அதை கையில் வாங்கியவன் ஹர்ஷிவ்தாவின் முகத்தை பார்க்க,

“என்ன கௌரவ், எழுந்து ஓடிடலாம்னு ப்ளான் பண்ணிட்டு இருக்கியா?...” என சின்ன சிரிப்போடு கேட்க,

“நீ அடங்கவே மாட்ட இல்ல...” என்றவனின் முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு.

“நீ தான் ட்ரை பண்ணி பாரேன். இப்போ கூட உனக்கொரு சான்ஸ் தரேன். எழுந்து ஓடிப்போ...” என சொல்லி முடிப்பதற்குள் அவள் கழுத்தில் மாங்கல்யத்தை மூன்று முடிச்சிட்டு பூட்டியவன்,

“வா சேர்ந்தே ஓடிப்போலாம்...” என சிரிக்கும் கண்களோடு கேட்க அவனை முறைத்தாள் ஹர்ஷிவ்தா.

ஒருவழியாக திருமணம் முடிந்து வந்திருந்தவர்கள் அனைவரும் தங்களின் வாழ்த்தை தெரிவித்துவிட்டு கலைந்து செல்ல மண்டபத்திலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டனர். அவ்வப்போது அவளது அலட்சியபோக்கு தலைதூக்குவதுமாக அதை ஷக்தி அடக்குவதுமாகவே பொழுது சாய்ந்துவிட்டது.

யாராலும் அவளை எதுவும் செய்யமுடியவில்லை. ஷக்தி அனைத்தையும் இன்முகமாகவே ஏற்றுக்கொண்டது ஒருவிதத்தில் நிம்மதியளித்தாலும் எத்தனை நாள் இந்த பொறுமை இருக்குமோ என கவலைப்படாமலும் இருக்க முடியவில்லை.
Nice
 
Top