Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Rishiram's kaathal pookkum kaalam chapter one

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 1

சம்யுக்தா, சம்பதா இருவரும் செல்போன் அலாரத்தை ஆஃப் செய்து விட்டு குட் மார்னிங் சொல்லிக் கொண்டனர் கொட்டாவியோடு. பின்னர் எழுந்து அமர்ந்து கைகளைத் தலைக்கு மேல் தூக்கி நெளித்துக் கொண்டனர்.முகத்தின் முன் பக்கம் படர்ந்திருந்த முடியைப் பின்புறம் ஒதுக்கி விட்டு கட்டிலை விட்டு எழுந்தனர். இருவரும் நைட் கவுனில் இருந்தனர். தூங்கிஎழுந்தாலும் இன்று தான் பூத்த பூ போல் ப்ரெஷாய் இருந்தனர். அழகாய் இருப்பவர்கள் மேக் அப் போடாமலும் அழகாய் இருப்பர். காலை எழுந்தாலும், ஏன் கொட்டாவி விடுவது கூட அழகாய் இருக்கும். அப்படியே அவர்கள் இருந்தனர்.
ஹாங்கரில் இருந்த பூத் துவாலை ஒன்றை எடுத்து தோள்களில் போட்டுக் கொண்டு சம்யுக்தா அட்டாச்டு பாத்ரூமில் நுழைய, சம்பதா ரூமின் கதவைத் திறந்து வெளியே வந்து பக்கத்து அறைக் கதவைத் திறந்தாள். லைட்டைப் போட்டாள். பெட்டில் அம்மா இல்லை. மெல்ல வெளியே வந்து கிச்சனைப் பார்த்தாள். லைட் எரிந்தது. அஞ்சு மணிக்கு முன்பே எழுந்து விட்டாள். டக் என்று அம்மாவின் அறைக்குள் நுழைந்து பாத்ரூமில் புகுந்தாள்.
சிறிது நேரம் கழித்து வெளியே வந்து கிச்சனில் நுழைய அங்கே சம்யுக்தா டீ கப்புடன் சமையல் அறை திண்டில் உட்கார்ந்து காலை ஆட்டியபடி குடித்துக் கொண்டிருந்தாள். சம்பதா வருவதைப் பார்த்த வசந்தி அவளிடம் ஒரு கப்பை எடுத்து நீட்டி தானும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டாள்.
'எத்தனயோ கடைகள்ல சாப்டுருக்கோம். ஒன் டீ மாதிரி வரதில்லம்மா.'
'ஆமாம்மா'
வசந்தி சிரித்தாள்.
'என்ன அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஐஸ் வைக்கிறீங்க? காலேஜ் போற மொத நாளே கட் அடிச்சிட்டு படம் போக ஏதாவது ப்ளானா? காசு ஏதும் வேணுமா?'
'அம்ம்ம்ம்மா.' என்று சம்யுக்தா சிணுங்க, சம்பதா சொன்னாள்.
'ஏம்மா! நாங்க காசு கேட்கற மாதிரி என்னைக்காவது நடத்தி இருக்கீங்களா? எங்க தேவ அறிஞ்சு செய்ற உங்கள ஐஸ் வச்சு தான் நாங்க காரியம் சாதிக்கணுமா? உண்மையிலேயே உங்க டீ தான் பெஸ்ட் இன் த வர்ல்ட்.'
'சரி சரி. சீக்கிரம் டீ குடிச்சிட்டு தலைக்கு குளிச்சிட்டு வாங்க. கோயிலுக்கு போயிட்டு அப்புறம் காலேஜுக்கு போலாம்.'
'சரிம்மா' இருவரும் கோரஸாய் சொன்னார்கள்.
ஒரு கணம் அவர்களைப் பார்த்த வசந்திக்கு ஆயாசமாய் இருந்தது.
அதற்குள் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள்! இப்ப தான் 'ஒனக்கு ட்வின்ஸ் பொறந்துருக்கும்மா' என்று டாக்டர் ரெண்டு கையிலேயும் ரெண்டு பஞ்சு பொதிகள் போல் இருந்த இவர்களைக் காண்பித்தது மாதிரி இருந்தது. அதற்குள் வளர்ந்து இன்று காலேஜ் செல்லும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். எப்பேர்ப்பட்ட விஷயத்தை செய்து முடித்திருக்கிறோம். அவர்களையே கண் கொட்டாமல் பார்த்தாள்.
'என்னம்மா புதுசா பாக்கற மாதிரி பாக்குறீங்க?'
சம்பதா கேட்க நினைவுக்கு வந்தாள்.
'ஒண்ணும் இல்லம்மா. இது வர ஸ்கூல். இனி காலேஜ். அம்மா சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல்ல.'
'ஏம்மா. காதல்லாம் காலேஜ்ல வரது உங்க காலம். இப்ப ஸ்கூல்லயே வர ஆரம்பிச்சிடிச்சி. என் பிரண்ட்ஸ் நெறய பேரு ஸ்கூல்லயே பாய் பிரண்ட் வச்சி பாய் பிரண்ட் மாத்தி ரெண்டு மூணு பாய் பிரண்ட்ஸ ஒரே டைம்ல மேனேஜ் பண்ணின்னு ஸ்கூல்லயே எல்லாம் வந்துருச்சும்மா. அங்கருந்தே தப்பிச்சு வந்த நாங்க காலேஜ்லயா விழப் போறோம்.'
'இல்ல சம்பதா. ஸ்கூல்னா ஒரு சின்ன க்ரூப் தான். காலேஜ்னா நெறய க்ரூப்ஸ். நெறய பசங்க. வெவ்வேற வில்லேஜ், சிட்டி, ஸ்டேட் ஏன் கன்ட்ரின்னு வெவ்வேற இடங்கள்ல இருந்து பசங்க வருவாங்க. அதுவும் வெளம்பரத்துல இருந்து படம், வெப் சீரிஸ் வர எல்லா எளவுலயும் பொம்பளைங்கன்னாலயே ஏதோ பாய் பிரண்ட் வச்சே ஆகணும்னு அழுத்தம் குடுத்துட்டு வராங்க. அப்புறம் நானும் உங்க வயச தாண்டி தானே வந்திருக்கேன்.'
வசந்தியின் கண்கள் கலங்கத் தொடங்க, பதறிப் போயினர் சம்பதாவும், சம்யுக்தாவும்.
சம்பதா அம்மாவின் கண்ணீரைத் துடைக்க சம்யுக்தா சொன்னாள்.
'ஏம்மா கண் கலங்கறீங்க? நாங்க வேணா காலேஜுக்கே போகல. கரஸ்ல படிச்சுக்கறோம். அல்லது கல்யாணம் பண்ணி வச்சிருங்க. அங்க போயி படிச்சுக்கறோம். அதுக்காக இப்படி ஆயிருமோ அப்படி ஆயிருமோன்னு கலங்காதீங்கம்மா. எங்களால தாங்க முடியாது.'
வசந்தி மெதுவாய் புன்னகைத்தாள்.
'சம்ஸ், ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. மாடில இருந்து விழுந்தா கால் ஒடயும்னு விழுந்து பாத்து தெரிஞ்சுக்கக் கூடாது...'
தொடர்ந்தாள் சம்யுக்தா.
'கத்தி அறுத்துதுன்னா ரத்தம் வரும்னு கத்திய அறுத்துப் பாத்து தெரிஞ்சுக்கக் கூடாது.'
சம்பதா தொடர்ந்தாள்.
'ஈரக்கையோட கரண்ட தொட்டா ஷாக் அடிக்கும்கறத தொட்டுப் பாத்து தெரிஞ்சுக்கக்கூடாது. அவ்ளொ தானேம்மா? எங்களுக்கு மனப்பாடமே ஆயிப் போச்சு.'
மூவரும் சிரித்தார்கள்.
'ஏதோம்மா. டேக் கேர் ஆஃப் யுவர்செல்ஃப். அவ்ளொ தான் சொல்லிட்டேன்.'
சம்பதா சொன்னாள்.
'ஏம்மா, ஒன் கஷ்டங்கள பக்கத்துலெயெ இருந்து இத்தன வருஷமா பாத்துகிட்டு இருக்கோம். அதுக்கு மேல நீங்க தான் எங்க தேவ அறிஞ்சு எல்லாம் வாங்கித் தரீங்க. மாப்பிள்ளையும் எங்களுக்குப் புடிச்ச மாதிரி பாக்க மாட்டிங்களா என்ன? நீங்களே அந்த பொறுப்பும் எடுத்துக்கங்க.'
வசந்தி பெருமையாய் அவர்களைப் பார்த்தாள்.
எங்கம்மா என்னை வளர்த்ததை விட நான் இவர்களை நல்ல முறையில் தான் வளர்த்திருக்கிறேன். இந்த காலத்தில் எப்படி கிடைக்கும் இவர்கள் போன்ற பெண்கள்! சினிமாவில் பார்ப்பது போல் முடி நிறைய வைத்த அல்லது தாடி வைத்து கூலிங் க்ளாஸ் போட்டு வீலிங் செய்கிற அல்லது கேடிஎம் பைக் வைத்து டுர் என்று பறக்கும் பையன்களைப் பார்த்தாலே ஏதோ காணாதது கிடைத்த மாதிரி விட்டில் பூச்சிகளாய் ஏமாந்து போகும் பெண்கள் மத்தியில்.. சே! நம் கண்ணே பட்டு விடும் போல் இருக்கிறது. சுற்றிப் போட வேண்டும்.
'சரி சரி. ரெண்டு பேரும் குளிச்சு நல்ல சுடிதார் போட்டுட்டு வாங்க. மொத நாள்லயே ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்டு காலேஜ கதி கலங்க வச்சிராதீங்க.'
'சரிம்மா' என்று இருவரும் சொல்லி விட்டு குளியலறையில் நுழைந்தனர்.
வெளியே வந்தபோது டைனிங் டேபிளில் சுடச் சுட தட்டுகளில் ஆவி பறக்கும் இட்லிகளும் பக்கத்திலேயே புதினா சட்னியும் இருந்தன. இருவரும் 'வாவ்' என்று அப்படியே உட்காரப் போக, 'மொதல்ல போய் பூஜா ரூம்ல நுழைங்க. கந்த சஷ்டி கவசம் பத்து வரியாவது சொல்லிட்டு வாங்க' என வசந்தி கத்த, பூஜா ரூமிற்குள் நுழைந்து ஆளுக்கு பத்து வரிகள் சொல்லி விட்டு இட்லிகளைப் பதம் பார்த்தனர். அவர்களோடு சேர்ந்து வசந்தியும் சாப்பிட்டாள்.
'இங்க பாருங்க கண்ணுங்களா! க்ளாஸ் பங்க் பண்ணுங்க. ப்ரெண்ட்ஸோட ஜாலியா இருங்க. படம் பாக்க போங்க. ஆனா எல்லாம் எனக்குத் தெரிஞ்சு தான் நடக்கணும். ஏதாவது கம்ப்ளைண்ட் வந்தா என் கிட்ட சொல்லிட்டு தான் போனாங்கன்னு நான் சொல்ற மாதிரி நடந்துக்கங்க. ஒரு வாட்ஸ் அப் போதும்.'
'என் செல்ல அம்மா. எந்த வீட்ல இப்படி அட்வைஸ் பண்ணுவாங்க. என் க்ளாஸ்மேட் பவித்ரா என் கூட தான் இந்த காலேஜ்ல படிக்கப் போறா. அவங்க அம்மா, அப்பா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி அப்படின்னு ஒரு கூட்டமே அட்வைஸ் மழை பொழிஞ்சு..அவ ஆடியோ ரெக்கார்ட் பண்றது கூட தெரியாது பேசிட்டே இருந்திருக்காங்க. அவ எனக்கு வாட்ஸ் அப் பண்ணி எரிச்சல் ஸ்மைலியா போட்ருக்காம்மா...' என்று சொன்ன சம்பதா அம்மா முகம் வாடுவதைக் கண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திணற, சம்யுக்தா உதவிக்கு வந்தாள்.
'அம்மா. ஏம்மா இப்படி இருக்க. அப்ப இதெல்லாம் நாங்க ஒங்க கிட்ட சொல்லக்கூடாதா?'
சுதாரித்த வசந்தி வலிய சிரித்தாள்.
'அப்படி இல்லம்மா. நீங்க சொல்லலாம்.'
அப்போது அவளது செல்போன் 'நாங்க வேற மாறி..' என்று அலற எடுத்தவள் 'ம்ம். தாங்க்ஸ். போன் குடுக்குறேன். நீங்களே சொல்லிடுங்க.' என்றவள் 'சம்யுக்தா. நீ பேசு மொதல்ல.' என்றாள்.
'யாரும்மா போன்ல' என்று சைகையால் கேட்டாள் சம்யுக்தா.

(தொடரும்)


 
  • Like
Reactions: Ums
Top