Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NENA 16.1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 16

ராஜேஷ் ரூபிணியின் கண்ணீரை பார்த்தும் மனம் இரங்கவில்லை. அவனுக்கு அவள் மீது அவ்வளவு கோபம். இவளுக்குத்தான் செய்ய இருந்த காரியம் எவ்வளவு பெரிய ஆபத்தில் அவளை மாட்டிவிட இருந்தது என்பதை அவளுக்குப் புரிய வைத்து விட வேண்டும் என்று நினைத்தான்.

ரூபினியால் ராஜேஷ் சொன்னதை இன்னும் நம்பமுடியவில்லை... ஆனால் அப்படி நடந்திருக்குமோ என்று மனம் பதைக்கவும் செய்தது. ஏனென்றால் அவள் குளிக்கும்போது அவள் உடலில் ஒட்டியிருந்த மண்ணும், ஆடைகள் அவள் அணிந்தது போல் இல்லாததும் இப்போது யோசிக்கும் போது... ராஜேஷ் சொன்னது உண்மையோ என்று எண்ணி கலங்க ஆரம்பித்தாள்.

எவ்வளவு யோசித்தும் அவளுக்கு முன் தினம் நடந்ததை ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியவில்லை... இழக்க கூடாததை இழந்துவிட்டோம் என்று வாய்விட்டு அழுதாள்.

சிறிது நேரம் அவளை அழவிட்டு வேடிக்கை பார்த்த ராஜேஷ். உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல ஆரம்பித்தான். ஆனால் அவன் விஜயை பற்றிச் சொல்லவில்லை... அவனும் வடிவேலும் அவள் சென்ற காரை பின் தொடர்ந்து வந்ததால்... எதுவும் நடக்காமல் அவளைக் காப்பாற்றி அழைத்து வந்து விட்டதாகச் சொன்னான்.

ரூபிணிக்கு இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்ததைப் போல உணர்ந்தாள். ஆனால் ராஜேஷ் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருக்கவில்லை என்றால் தன்னுடைய நிலைமை... மூன்று பேரிடம் சீரழிந்து தானே போய் இருப்போம் என்று நினைத்த போது… அவள் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.

அவளின் நிலை உணர்ந்த ராஜேஷ் பரிவாக அவளைப் பார்த்து “எதுவும்தான் நடக்கலை இல்ல... இனி கவனமா இருந்துக்கோ.” என்றான்.

ராஜேஷ் சமாதனம் செய்த போதும் ரூபிணிக்கு மனம் ஆறவில்லை. அவள் நடந்ததை நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.
“இப்ப இவ்வளவு வருத்தபடுறதுக்கு முன்னாடியே ஒழுங்கா இருந்திருக்கலாம். முதல்ல உன் அம்மா அப்பாவை நீ மதிக்கணும். அவங்களோட நீ சந்தோஷமா சிரிச்சு பேசி நான் பார்த்ததே இல்லை... இனியாவது அவங்ககிட்ட ஒழுங்கா நடந்துக்கோ.” என்றான்.

ராஜேஷ் சொன்னதைக் கேட்ட ரூபிணியின் அழுகை நின்று முகம் கோபத்தில் சிவக்க... அவளை ராஜேஷ் புரியாமல் பார்த்தான்.

“நான் அவங்ககிட்ட ஒழுங்கா நடந்திக்கனுமா... முதல்ல அவங்களை ஒழுங்கா நடந்துக்கச் சொல்லு... இதெல்லாத்துக்கும் காரணம் அவங்கதான்.” ஆத்திரமாக ரூபிணி சொல்ல... ராஜேஷ்க்கு எதோ காரணமாகத்தான் ரூபிணி அப்படி நடந்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது.

ராஜேஷ்க்கு மேலும் அவளின் சொந்த விஷயத்தில் தலையிட விருப்பம் இல்லை. அதனால் அவன் அமைதியாக இருக்க. ஆனால் ரூபிணியால் அமைதியாக இருக்க முடியவில்லை. அவள் தன் மனதிலிருப்பதைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“எல்லோருக்கும் அவங்க அம்மா அப்பாதான் ரோல் மாடல். நானும் அப்படித் தான் நினைச்சிட்டு இருந்தேன். நாங்க ஒன்னும் பிறவி பணக்காரங்க இல்லை. சாதாரணக் குடும்பம்தான். ஆனா அப்ப நாங்க ரொம்பச் சந்தோஷமா இருந்தோம். பணம் மட்டும்தான் இல்லை. மத்தபடி நாங்க ஒருத்தர் மேல் ஒருத்தர் பாசமா இருந்தோம்.”



“நான் நாலாவது படிச்சிட்டு இருந்த போது... எங்க அப்பா எதோ வேலைக்குப் போய்ட்டு இருந்தார். அம்மா வீட்டை பார்த்துகிட்டு இருந்தாங்க. அப்ப எங்க அப்பா அரசியல் கட்சியில போய்ச் சேர்ந்தார். ”

“அடிமட்ட தொண்டனா இருந்தவர், ஒரு நாள் கட்சி தலைவரோட பிறந்த நாளுக்கு எங்களையும் அழைச்சிட்டுப் போனார். இப்ப எங்க அப்பா யாரோட பினாமியா இருக்காரோ... அவரை எங்க அப்பா அன்னைக்குதான் முதல் தடவை சந்திச்சார்.”

“அப்பவே அவர் ஒரு M.L.A., அவாரோட ஆதரவு இருந்ததுனால... எங்க அப்பா அரசியல்ல முன்னேற ஆரம்பிச்சார். இப்ப வந்தவர் கட்சியில முக்கிய இடத்துக்கு வந்ததும், கட்சியில எல்லோருக்கும் எங்க அப்பா மேல பொறாமை.”

“எல்லோரும் எங்க அப்பா மேல இருக்கிற அக்கறையிலதான் அந்த M.L.A உதவுறாருன்னு நினைச்சாங்க. ஆனா அவர் எங்க அம்மா மேல இருந்த ஆசையிலதான் எங்க அப்பாவுக்கு உதவுனார்ன்னு பின்னால தெரிஞ்சது.”

“அப்பா கட்சி வேலைக்காக ஊர் ஊரா சுத்திட்டு இருக்கும் போது... அந்த M.L.A எங்க வீட்டுக்கு நடுராத்திரி யாருக்கும் தெரியாம வந்து போக ஆரம்பிச்சார். அதுக்கு வசதியா எங்களுக்கு ஊருக்கு வெளியில வீடு வாங்கிக் கொடுத்திருந்தார்.”

“நான் அப்ப எட்டாவது படிச்சிட்டு இருந்தேன். ஒருநாள் நடுராத்திரி தண்ணி குடிக்க வெளிய வந்த போது... எங்க அம்மா அறைக்குள்ள அவர் போறதை பார்த்தேன். எங்க அம்மா சிரிச்சிட்டே கதவை மூடினதையும் பார்த்தேன்.”

“அப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லு... பூமிக்குள்ள அப்படியே புதைஞ்சு போய்ட மாட்டோமான்னு இருந்தது. அன்னைக்கு நைட் எல்லாம் நான் தூங்கவே இல்லை... அழுதிட்டே இருந்தேன்.”

“எனக்கு என்னோட அப்பாகிட்ட நான் பார்த்ததைச் சொல்லிடனும்ன்னுதான் இருந்தது. ஆனா அதனால எங்க அப்பாவும் அம்மாவும் பிரிஞ்சிடுவாங்கலோன்னு பயமா இருந்தது. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை...”

“அதுக்குப் பிறகு எனக்கு எங்க அம்மாவோட முகம் கொடுத்து பேச வரலை... நான் அவங்ககிட்ட இருந்து ஒதுங்க ஆரம்பிச்சேன். என்னோட அப்பாவையும் அரசியல் வேண்டாம்பான்னு தொல்லை பண்ண ஆரம்பிச்சேன்.”

“எங்க அம்மாவுக்குச் சந்தேகம் வந்திருக்கணும். என்னைப் பெரிய ஸ்கூல்ல சேர்கிறதா காரணம் சொல்லி ஹாஸ்டல் அனுப்பிட்டாங்க.”

“என்னோட அப்பாவுக்குப் பணமும், அம்மாவுக்கு அவங்க சந்தோஷமும்தான் பெரிசா தெரிஞ்சது. என்னைப் பத்தி அவங்க ரெண்டு பேருமே கவலைப்படலை....”

“எனக்கும் இங்க இருக்கவே பிடிக்கலை... ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் காலேஜ் படிக்கச் சிங்கப்பூர் போயிட்டேன். அங்க எங்க அப்பாவோட அண்ணன் குடும்பம் இருக்காங்க. நான் அவங்களோட இருக்கேன். அவங்க என்னை லீவுக்கு வற்புறுத்தி அனுப்பும் போது... வேற வழியில்லாமதான் இங்க வரேன்.”



ரூபிணி சொன்னதைக் கேட்ட ராஜேஷ்க்கு அவளை நினைத்து மிகவும் பரிதாபமாக இருந்தது. தங்கள் பிள்ளைகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து உருகும் பெற்றோரைத்தான் அவன் இதுவரை பார்த்து இருக்கிறான். ரூபிணியின் பெற்றோரை நினைத்தால் கோபம்தான் வந்தது.

அவர்களைப் பற்றி நினைத்து என்ன பயன்? இனி அவர்கள் திருந்தினால் என்ன? திருந்தாவிட்டால் என்ன? இப்போது ரூபிணிதான் முக்கியம். இப்படி ஒரு பெற்றோருக்கு மகளாக இருப்பது கொடுமைதான். அவள் மனம் எவ்வளவு கஷ்ட்டப்படும் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது.


“உங்க அம்மா அப்பா பண்றது தப்புதான் ரூபிணி. ஆனா அவங்க தப்பான வழியில போறாங்கன்னு, நீயும் உன்னை அழிச்சிக்க முடிவு பண்ணிட்டியா... ”

“பெத்தவங்க சரியில்லைன்னா அவங்க வளர்க்கிற பிள்ளைகளும் சரி இருக்காதுன்னு நீ நிரூபிக்கப் போற இல்லையா...” ராஜேஷ் கேட்பதில் இருக்கும் உண்மை புரிந்ததால்....

“இனி இப்படி நடந்துக்க மாட்டேன். என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி ஆகிடுச்சுன்னு? மனசுல ஒரு வெறுப்பு.” ரூபிணி சொல்வது ராஜேஷ்க்குப் புரிந்தது.

இப்போது என்ன செய்வது நடந்ததை ரூபிணியின் தந்தை வசந்தனிடம் சொல்வதா வேண்டாமா என்று அவன் யோசிக்க... வேண்டவே வேண்டாம் தவறு தன் பக்கமும் இருப்பதால்.....நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் ரூபிணி.

ராஜேஷ் இருக்கும் போதே... அவள் தன் தோழி ரியாவை அழைத்தாள். ரியா அவளுக்கு எதுவும் தெரியாது போல் பேச...

“சும்மா நடிக்காத இன்னைக்குச் சனிக்கிழமை. நீங்க நாலு பேரும் ஒண்ணாத் தான் சுத்துவீங்கன்னு எனக்குத் தெரியும். எனக்கு அவனுங்ககிட்ட கொஞ்சம் பேசணும் போன்னை ஸ்பீக்கர்ல போடு.” என்றாள் ரூபிணி அதிகாரமாக...

ரியா தன் நண்பர்களிடம் சொல்ல... அவர்கள் போடு என்பது போல் ஜாடை செய்ய... அவள் போன்னை ஸ்பீக்கரில் போட்டாள்.
“உங்களை நல்ல பசங்கன்னு நம்பி தான உங்களோட வந்தேன். நேத்து நீங்க மூன்னு பேரும் என்னை என்ன செய்யப் பார்த்தீங்க? நான் மட்டும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா?...” ரூபிணி மிரட்ட...

“நாங்க ஒன்னும் உன்னைப் போர்ஸ் பண்ணி எங்களோட கூடிட்டு போகலை... நீயாதான் எங்களோட வந்த... விருப்பபட்டு வந்திட்டு கதைய மாத்திறேன்னு நாங்களும் சொல்வோம்.”

“நைட் மூன்னு ஆம்பிளைங்களோட அதுவும் போதையில இருக்கிறாங்கன்னு தெரிஞ்சும் வந்தது நீதான். உனக்கும் விருப்பம்ன்னு நினைச்சுதான் நாங்க முயற்சி பண்ணோம். அப்படித்தான் போலீஸ் கேட்டா சொல்வோம்.” அந்த மூன்று பேரில் ஒருவனான ஜான்சன் அசராமல் பதில் கொடுத்தான். நேற்று அவன்தான் ரூபிணியைக் காரில் இருந்து இழுத்து போட்டு விட்டு விஜயை தாக்கியவன்.

ரூபிணிக்கு மிகவும் அவமானமாக இருந்தது. மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் மெளனமாக இருக்க... அவளிடம் இருந்து போன்னை வாங்கிய ராஜேஷ் “டேய் போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் கொடுக்க மாட்டோம். ரூபிணியோட அப்பா யார் தெரியுமா?” என்றவன், அவரைப் பற்றிய விவரம் சொல்லி “அவர்கிட்ட சொன்னா போதும், நீங்க இந்த உலகத்தில இருந்ததுக்கான்ன அடையாளமே இருக்காது...” என்றதும்,

ஜான்சனுக்கே கொஞ்சம் பயம் வந்தது என்றால் மற்றவர்களைப் பற்றிக் கேட்க வேண்டாம்.

“வேண்டாம் சார் விட்டுடுங்க. நேத்துதான் எங்களை நல்லா அடிச்சீங்களே... நாங்க இனி இது போல் நடந்துக்க மாட்டோம். ரூபிணிக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டோம்.” என்றனர் மற்ற இருவரும், பேசுவது விஜய் என்று நினைத்து. ராஜேஷ் அவர்களை எச்சரித்து விட்டுப் போன்னை வைத்தவன், ரூபிணியைப் பார்க்க அவள் அழுது கொண்டிருந்தாள்.

இவள் இப்படியே அழுது கொண்டே இருப்பாள் என்று நினைத்தவன், தனியே விட மனமில்லாமல் அவளை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான். அவள் மனதுக்கு ஒரு மாறுதலாக இருக்கும் என்று நினைத்தான்.

அவன் அக்கா ரோஸிக்கும் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தாள். ரோஸி முதலில் அவர்கள் இருவரையும் குறுகுறுவென்று பார்த்தவள், தன் தம்பியின் முகம் இயல்பாக இருப்பதைப் பார்த்து, வேறு எதுவும் இருக்காது என்று முடிவுக்கு வந்தாள்.

ரூபிணிக்கு ராஜேஷ் வீட்டினரை மிகவும் பிடித்தது. தன் வீட்டில் கிடைக்காத அன்பும் அரவணைப்பும் அவளுக்கு அங்கே கிடைத்தது. ராஜேஷின் முதலாளியின் மகள் என்பதால்... அவன் வீட்டில் ரூபிணியை நன்றாகப் பார்த்துக்கொண்டனர்.

ரூபிணிக்கு ராஜேஷ் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் உருவாகியது. தன்னைப் பற்றித் தெரிந்தும் அவன் தன்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தது, அவனைப் பற்றி உயர்வாக எண்ண வைத்தது. பதிலுக்கு அவனுக்கு எதாவது செய்து விட வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருந்தாள்.

இவள் ஆர்வகோளாறில் செய்யப்போகும் செயல் ஜெனியை பாதிக்கப் போவது பற்றி ராஜேஷுக்கு தெரிந்தால்....

விஜய் அன்று மதியம்தான் உறக்கத்தில் இருந்து கண்விழித்தான். அவனுக்கு மிகவும் அசதியாக இருந்தது. காயம் சிறியதுதான் என்பதால் அதிக வலி இல்லை... ஆனால் லேசான வலி இருந்தது.
 
Top