Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 7

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 7
வால்பாறையை விட்டு இறங்கியதுமே முதலில் தென்பட்ட மருத்துவமனையில் நிறுத்தினான் லோகு. அது ஒரு 24 மணி நேர சேவை கொண்டது.
முதலில் வண்டியிலிருந்து இறங்கிய சமர்த், “சார், இவர் ஒரு மத்திய மந்திரி, இவரைப்பற்றி கண்டிப்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கணும்.”
“சார் நீங்க சொல்கிறது நியாயம் தான் ஆனாலும்..” என்று இழுத்த விஸ்வநாதனை நிறுத்தினான் சமர்த்.
“நான் இந்த மாவட்ட ஆட்சியர், ஒரு அரசாங்க ஊழியன்.. என்னால அரசாங்கத்துக்கு எதிரா ஒண்ணும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டேன்.”
தன்னை ‘மாவட்ட ஆட்சியர்’ என்று சொல்லிக்கொண்ட சமர்த்தை லோகு ஆச்சர்யத்துடன் நோக்கினான். விஸ்வநாதனுக்கு அது போல் எல்லாம் எதுவும் தோன்றவில்லை. பத்திரிகை துறையில் இருப்பவருக்கு இவ்விஷயம் தெரிந்தது ஒன்றும் பெரிதும் அல்ல..
“இப்போ உங்களை அரசாங்கத்துக்கு எதிரா எதுவும் செய்ய சொல்லல சார், சொல்ற தகவலை கொஞ்ச நேரம் தள்ளி போட சொல்றேன். சார் ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்..” என்ற விஸ்வநாதனுடன் இணைந்து தலையை ஆட்டி வினவுவது போல் செய்தான் லோகு.
அவருக்கு விக்கி கூறியதைப் பற்றி சிறிது யோசிக்க வேண்டியிருந்தது. அதற்காக அவருக்கு பயம் என்று சொல்ல முடியாது. விக்கியையும், சகாயத்தையும் ஒரே நேரத்தில் கைது செய்ய என்ன செய்வதென்று யோசித்து செயல்படும் நேரம் என்பதால், அதைப்பற்றி சிந்திக்க அவருக்கு சிறிது கால அவகாசம் தேவை. அதற்காகத்தான் சமர்த்திடம் பேசிக்கொண்டிருந்தார்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மருத்துவமனை ஊழியர்கள் சகாயத்தை உள்ளே கொண்டு வந்திருந்தனர். சமீராவையும் வீல் சேரில் அமர்த்தி கொண்டு வந்தார்கள்.

சகாயத்தைப் பரிசோதித்த செவிலியப் பெண், “எப்படி சார் அடிப்பட்டது, என்ன ஏதாவது விபத்தா, போலிசுக்கு சொல்லியாச்சா?” என்றாள்.
அப்பெண் அவ்வாறு கேட்டதும் சமர்த் விஸ்வநாதனைப் பார்த்தான்.
“இல்லைம்மா இனிமே தான் சொல்லணும்.. நீங்க முதலுதவி செய்ங்க இதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.. நாங்க எல்லாம் ப்ரெஸ்காரங்க தான் உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை வராது.” என்றார் விஸ்வநாதன்.
“சரிங்க, ட்யூட்டி டாக்டர் வந்துட்டு இருக்காங்க. வெயிட் செய்ங்க.” என்று சொல்லிவிட்டு சமீராவையும் பரிசோதித்து விட்டு சென்றாள்.
டாக்டரின் வருகைக்காக காத்திருக்க வெளியே வந்தனர் மூவரும்.. “கலெக்டர் சார் என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?, இப்போ நாம காவல் துறைக்கு போனாலுமே இந்த சகாயத்தோட உயிருக்கு உத்தரவாதம் இல்லை.. காவல்துறையிலேயும் விக்கிக்கு ஆட்கள் இருக்காங்க.. கண்டிப்பா இவனை முடிச்சுடுவான்.. அதான் கொஞ்சம் யோசிக்க சொல்றேன்... இப்போதைக்கு அவன் மயக்கத்தை தெளிய வச்சு நம்ம இடத்துக்கு கொண்டுபோகலாம்.. போலிஸ்க்கு சொல்வதை அங்க போய் முடிவெடுத்துக்கலாம்..” என்றார் விஸ்வநாதன்.
லோகு இதிலெல்லாம் தலையிடாமல் ஓரமாக ஒதுங்கி நின்றுக் கொண்டு சமர்த்தை ஆராயத் தொடங்கினான்.
அதேநேரத்தில் உள்ளேயிருந்த சமீரா கண்விழித்தாள். கண்விழித்ததுமே சுற்றும்முற்றும் பார்த்தாள். அருகில் யாரும் இல்லையென்பதை உறுதி செய்துவிட்டு எழுந்து உட்கார்ந்தவள், திடீரென்று வெளியே நடக்க தொடங்கினாள்.
வெளியே வந்தவள் அங்கிருப்பவர்களை கவனிக்காமலே அவர்களின் எதிர் புறம் நடக்க ஆரம்பித்தாள். இதை எதேச்சையாக கவனித்த சமர்த், “அய்யோ! சார் இவங்க எங்க போறாங்க?” என்று கேட்டபடியே அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான். லோகுவும் பின்தொடர முற்பட்டான். அவனைக் கை பிடித்து நிறுத்திய ஆசிரியர், சமர்த்தும், சமீராவும் செல்வதைப் பார்த்தார்.
பின் லோகுவிடம் திரும்பிய விஸ்வநாதன், “நாம பேசும்போதே சமீராக்கு முழிப்பு வந்து இருக்கணும்.. அதான் அவரை(சமர்த்) திசைத்திருப்ப இவ்வாறு செய்கிறாள். வா, நாம உள்ளே போகலாம்.. இனிமே சமீரா பார்த்துக்கும்.”
சிறிது தூரம் சென்றிருந்த சமீரா, மிக அருகிலேயே சமர்த் வந்துவிட்டான் என்றறிந்ததும் ஓடத்தொடங்கினாள்.
திடீரென்று ஓடும் அவளைப் பார்த்து அதிர்ந்த சமர்த், “இவளுக்கு பைத்தியம் தான் பிடிச்சுடுத்து.. ஹே மீரா! நில்லு ஓடாதே.. சொல்லிட்டே இருக்கேன்ல ஓடாத. ஹே! யூ! ஓடறதுதான் ஓடற இந்தப்பக்கமா ஓடினா ஊராவது போய் சேரலாம்..” என்றபடியே அவளை துரத்தினான்.
சமீரா திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடும் போது கல் தடுக்கி கீழே விழுந்தாள். வேகமாக சமீராவின் அருகில் வந்த சமர்த், “உனக்கு அறிவிருக்கா? நாங்க பேசிட்டு தானே இருக்கோம்.. போலீஸ்க்கு இன்னும் சொல்லலையே அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்..?” என்றான் கோபமாக.
“ஓ! நான் அதுக்காகத்தான் ஓடினேன்னு புரிஞ்சுடுச்சா? பரவாயில்லை நீங்க கொஞ்சம் அறிவாளியாத்தான் இருக்கீங்க.”
“கூட கூட்டிவந்தப் பொண்ணு தனியா எங்கயோ போகுதேன்னு பதறி அடிச்சுக்கிட்டு ஓடிவராம அங்கேயே நின்னுட்டு இருந்தா, எனக்கு என்ன, சின்ன குழந்தைக்கு கூடப் புரியும்.” என்று விஸ்வநாதனையும், லோகுவையும் குற்றம் சாட்டினான் சமர்த்.
“லூசு மாதிரி நடந்துகிறதை விட்டுட்டு கொஞ்சமாச்சும் மெச்சுர்டா பீகேவ் பண்ணு.. வா நாம அங்கப் போகலாம்..” என்றவாறே அவளுக்கு கைகொடுத்தான் சமர்த்.
கையைப்பிடித்த சமீராவிற்கோ, சமர்த்திற்கோ மனதில் எந்த வித எண்ணங்களும் எழவில்லை. அவர்களின் மனம் முழுவதும், இருக்கும் நிலையை எப்படி சீராக்குவது என்று மட்டுமே இருந்தது. மெளனமாக இருவரும் மருத்துவமனையை நோக்கி நடந்தனர்.
“மீரா, நீங்க எதுக்கு மந்திரியைப் போட்டு இப்படி அடிச்சீங்க?”
சமர்த் தன்னை மீரா என்று அழைத்ததும் ஒரு நொடி அதிர்ந்து, பின் தன்னை அப்படி அழைக்கும் ஒரே ஜீவனான தந்தையை நினைவுப்படுத்தியது அவளுக்கு.
“சொல்லு மீரா..”
தன்னை ஒருமையிலும் பன்மையிலும் மாறி மாறி அழைக்கும் சமர்த்திற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாகவே வந்தாள்.
“இவ பதில் சொல்லிட்டாலும்..” என்று மனதில் நொடித்துக்கொண்ட சமர்த், “சரி அதைவிடு, காலையில் நீ என் பேரைப் பற்றி கேட்டியே...! என்னை உனக்கு தெரியுமா? எனக்கு உன்னைப் பார்த்ததாகவே தெரியலையே..! சொல்லு மீரா..”
அவன் அப்படிக் கேட்டதும் அவளுக்கு பழைய ஞாபகங்கள் வந்தது. சமர்த்தின் கேள்விகளுக்கு பதிலேதும் கூறாமல் வந்தவள், சாலையிலிருந்து சற்று தள்ளியிருந்த சிறு கல் பாறை மேல் குத்துக்காலிட்டு அமர்ந்தாள். பின் கைகளை முழங்காலோடு இணைத்து தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
“மீரா, இங்கப் பாருங்க வாங்க போகலாம் நான் ஒண்ணும் கேட்கலை.. இப்போ வாங்க போகலாம்”
“ப்ளீஸ் சார், என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க..”
“இந்த இடம் பாதுகாப்பா இல்லை மீரா புரிஞ்சுக்கோ..”
“நான் பார்த்துகிறேன்.. ப்ளீஸ்.” என்றுவிட்டு மறுபடியும் தன் மோன நிலைக்கே சென்றாள் சமீரா.
அவள் அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றதும் சற்று தள்ளி அவளுக்கு பாதுகாப்பாக நின்றுக்கொண்டு, “பிடிவாதத்துக்கு பிறந்தவளா இருக்காளே..! ஒருத்தன் நல்லது சொல்றானேன்னு கேட்க தோணுதா..! திமிர் பிடிச்சவள்..” என்று மனதினுள் திட்டிக்கொண்டான்.
தலை கவிழ்ந்திருந்த சமீராவிற்கோ மனது முழுவதும் பழைய எண்ணங்களே வியாப்பித்திருந்தது.
நாம் அவளின் எண்ணங்களுக்கு சற்று முன்னதாகவே பயணிப்போம்.
குழந்தை சமீராவுடன் வந்த பேகத்தை, அவரின் உறவினர்கள் மிகுந்த உற்சாகத்துடனேயே வரவேற்றார்கள். அவர்களிடம் குழந்தையை தத்து எடுத்ததாக பேகம் கூறி விட்டதால் வேறு பேச்சுக்கே வழியின்றி போனது.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த இப்ராஹீம் தன்னுடைய வேலைகளை மட மடவென்று முடிக்க ஆரம்பித்தார். இரு ஜீவன்கள் தங்கள் குழந்தையை தொலைத்து உயிரற்ற ஜடமாக இருப்பதை சற்றும் சிந்திக்காமல் இருந்தார். சில நேரங்களில் அவர்களைப் பற்றி தோன்றினாலும் உடனேயே மனதில் மனைவியின் அழுத முகத்தை கொண்டு வந்ததால் மீராவின் பெற்றவர்களை மறக்க முடிந்தது. ஆனால் தான் செய்த பிழைக்கு அல்லாவிடம் மன்னிப்பு கேட்காமல் அவருக்கு பொழுது விடிந்ததில்லை..
அவருடைய கடின உழைப்பால் ஒரு மாதத்தில் முடிய வேண்டிய வேலையை இருபதே நாட்களில் முடித்து மூட்டை முடிச்சுகளை கட்டி ஊரைவிட்டே சென்றதால், மீராவை பெற்றவள் காலமானது குறித்து அறிந்துக் கொள்ள முடியாமலே போனது..
குழந்தை சமீராவின் வரவினால் வெகு ஆனந்ததிலிருந்த பேகத்துடனான தாம்பத்தியம், மிகுந்த இன்பத்தையே இப்ராஹிமீற்கு தந்தாலும், மாதா மாதம் வரும் பேகத்தின் மாதவிடாய் காலங்களை சமாளிப்பது மிகுந்த சவாலாகவே இருந்தது அவருக்கு.
ஒரு வருடம் கடந்தும் குழந்தை உருவாகததால், குழந்தையைப் பெற்றவர்களிடம் சேர்த்து விடுவது பற்றி பேகத்திடம் பேசினார் இப்ராஹீம்.
“என்னங்க அதான் குழந்தையை தேடி யாரும் வரலையே.. இப்போ அவளைக்கொண்டு விட்டு என்ன ஆக போகுது..? அவங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கும்ங்க.. சமீராவை மறந்தே போய் இருப்பாங்க.. என் வயித்துலயும் கரு வளரும்ன்னு எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை.. சமீரா நம்ம கிட்டேயே வளரட்டும்ங்க.. அவ இருக்கிறதுனால தான் எனக்கு கவலையே தெரியலை.. இது தாங்க அல்லாவின் விருப்பம்ன்னு எனக்கு தோணுது. இல்லன்னா, அவளைப் பெத்தவவுங்க இந்நேரத்துக்கு இங்க வந்திருக்கணுமே.” என்று ஏதேதோ பேசி ஒத்துக்கொள்ள வைத்தார் பேகம்.
யாரிடமும் குழந்தையைப் பற்றி தெரிவிக்காதது குறித்து அந்த சமயத்தில் வசதியாக மறந்து போனது அவ்விருவருக்கும்.. குழந்தைக்காக ஏங்கி தவித்த இரு உள்ளங்கள், தாங்கள் செய்வது மிகவும் தவறு என்று தெரிந்தே தவறியவர்களின் விருப்பம் மட்டுமே அன்றி, இது அல்லாவின் விருப்பமோ இல்லை அந்த பரந்தாமனின் விருப்பமோ கிடையாது. இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்களா? காலம் மட்டுமே பதிலுரைக்கும்.
மனதில் குற்ற உணர்ச்சி இருந்தாலும் குழந்தை சமீராவை மிக நன்றாக வளர்த்தார் இப்ராஹீம்.
அவளின் பிறப்பின் இரகசியம் அறிந்ததினால் குழந்தையை ‘சமீரா’ வாக மட்டுமில்லாமல் சில நேரங்களில் ‘மீரா’ வாகவும் வளர செய்தார்.
ஆனால் பேகமோ இதற்கு முற்றிலும் மாறாக நடந்துக்கொண்டார். அவர்கள் மதத்தின் அடையாளத்தை சிறிதளவும் மாற்றுவதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் பேகம். இதற்காக இப்ராஹீமிடம் மிகுந்த கோபம் கொள்வார். ஆனால் சமீராவை கோபிக்க மனம் வராது அவருக்கு.
இப்ராஹீமின் நடவடிக்கையைப் பார்த்து, சமீராவின் பிறப்பின் இரகசியத்தை அவளிடம் தெரிவிக்க கூடாது என்று அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார் பேகம்.
சமீராவாகவே பல நேரங்களில் இருந்தாலும் தந்தையின் உதவியால் சில நேரங்களில் மீராவாக இருப்பது அவளின் மனதிற்கு ஏனோ இதமாக இருக்கும்.
குழந்தையின் இரத்தத்திலேயே கலந்திருந்த இறை பக்தி, இப்ராஹீம் மற்றும் பேகத்தின் உதவியால் இறைவனின் மீது மிகுந்த பக்தி வளர்ந்தது சமீராவுக்கு. பெற்றவர்களுடன் இருந்திருந்தால் கண்ணனையும், கீதையையும் கற்றிருப்பாள். வளர்த்தவர்களுடன் இருந்ததால் அல்லாவையும், திருகுரானையும் கற்று அதன் வழியிலேயே நடந்தாள் சமீரா. இந்துவாக பிறந்த மீரா, இஸ்லாமிய சமீராவாக மிக நன்றாகவே வளர்ந்தாள்.
இறைவன் என்றும் ஒருவனே அவர் ஜாதி, மத, இன பேதங்களை என்றும் பார்ப்பதில்லை. சில மனித மிருகங்களின் நடவடிக்கையால் ஏற்படும் இன வெறி படுகொலைகளை வைத்து, இறைவனையும், இறை பக்தியையும் குறை சொல்லுவது எள்ளளவும் நியாமில்லை.
அவளின் குரல் வளம் நன்றாக இருந்ததினால் பேகம் அவளை கர்நாடக இசையை கற்க அனுமதி அளித்தார். அங்கு தான் அவளை விட சில வயது மூத்தவளான அம்ருதாவின் நட்பு கிடைத்தது.
அம்ருதாவின் நட்பினால் தான் பின்னாளில் சமர்த்தை ‘சமீர்’ ஆக சந்திக்க அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது சமீராவுக்கு தெரிய வாய்ப்பில்லை. தெரிந்து இருந்தால் அவளிடம் இந்த அளவு நெருக்கமாக பழகியிருப்பாளோ, என்னமோ? தெரியாது.
காலத்தின் நடவடிக்கையை முன்னரே அறிய நேர்ந்தால் வாழ்க்கையில் சுவாரசியம் என்ற ஒன்றே சுத்தமாக இல்லாமல் போய்விடும்.
அந்த காலனின் நாடகத்தால் அம்ருதாவும் ஒரு நாள் காதலில் விழுந்தாள். (இக்கதையில் அம்ருதாவின் வருகை குறைந்த அளவே வரும் என்பதால், அவள் எப்படி காதலில் விழுந்தாள்? அவன் யார், எந்த ஊர் , என்ன சொந்தம், அவர்களின் காதலுக்கு எதிரி யார்? என்பதெல்லாம் சுருக்கமாக கதையின் போக்கிலேயே வரும்)
அந்த காதலினால் அம்ருதாவுடன் இணைந்து காஞ்சிபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது சமீராவுக்கு.
அம்ருதாவிற்கு அவளின் வீட்டிற்கு தெரியாமல் காஞ்சிபுரத்தில் இருக்கும் காதலனை கைப்பிடிக்க சமீராவின் உதவி தேவைப்பட்டது. சமீராவின் இசைப் பள்ளியிலிருந்து மார்கழிமாத கச்சேரிக்கு காஞ்சிபுரம் செல்ல இருந்தனர். அம்ருதாவின் வீட்டில் அக்கச்சேரிக்கு சமீராவும் சென்றால் மட்டுமே அனுமதிப்போம் என்று கூறி விட்டதால், அந்த இடத்திலிருந்தே அவளுக்கு சமீராவின் உதவி தேவைப் பட தொடங்கியது. பேகத்தின் அனுமதியுடன் (இப்ராஹீம் எப்போதுமே எதற்கும் தடை விதிப்பதில்லை.) சமீராவும் அம்ருதாவுடன் காஞ்சிபுரம் சென்றாள். பேகத்தின் அனுமதிக்கு அம்ருதாவின் சில பல வேலைகளே காரணம் என்றால் அது மிகையில்லை.
மூன்று நாட்கள் காஞ்சிபுரத்தில் கச்சேரி இருந்தது. இப்ராஹீம் தம்பதியினருக்கு கச்சேரியைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், காஞ்சிபுரம் செல்ல மனம் இல்லாத காரணத்தால் சமீராவை மட்டும் அனுப்பி வைத்தனர்.
முதல் இரண்டு நாட்கள் இரு வேளையும் கச்சேரி இருந்ததினால், தன்னை மிக நல்லவளாகவே காட்டிக்கொண்டாள் அம்ருதா.
மூன்றாம் நாள் காலை கச்சேரி எதுவுமில்லாத காரணத்தால், சமீராவை தன்னுடன் வெளியே அழைத்து செல்வதாக இசை ஆசிரியரிடம் கூறி விட்டு வெளியேறினாள் அம்ருதா.
அவளின் உள் நோக்கம் அறியாத சமீரா, பச்சை வண்ண பட்டு பாவாடை தாவணியில், தலை நிறைய பூ வைத்து, நெற்றியில் அழகாக திலகம் இட்டு, காதுகளுக்கு பச்சைக்கல் பதித்த குடை ஜிமிக்கி அணிந்து, கைகளில் பச்சை வண்ண கண்ணாடி வளையல்கள் சிலது அணிந்து ஏதோ கல்யாணத்திற்கு செல்வதைப் போலவே கிளம்பினாள்.
முதல் இரு நாட்கள் அவள் மதத்தின் அடையாளத்துடனேயே கச்சேரியில் பாடினாள். இன்று இப்படி கிளம்புவதற்கு முன் கூட அவ்வேளையின் தொழுகையை மறக்காமல் உள்ளன்போடு செய்துவிட்டு தான், தன்னை இவ்வாறு அலங்கரித்துக் கொண்டாள் சமீரா.
இப்படி அலங்கரித்து வந்தது அம்ருதாவிற்கு வசதியாய் போனது. அவளை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வாசலுக்கு அழைத்து சென்றாள். சமீராவோ உள்ளே வர மறுத்துவிட்டாள். சமீராவிற்கு உள்ளூர ஆசையிருந்தாலும் மனதில் தாய் பேகத்தின் குரல் கோபமாக ஒலித்ததால், உள்ளே செல்ல பயம் வந்தது.
சமீராவின் மறுப்பை அலட்சியம் செய்துவிட்டு அங்கேயே யாருக்காகவோ காத்திருக்க ஆரம்பித்தாள் அம்ருதா.
“அம்ருக்கா! என்ன உள்ள போகலையா?”
“இல்லை மீரா, கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.”
எப்பொழுதுமே சமீரா என்றழைக்கும் அம்ருதா, இன்று தன் தந்தை அழைப்பதுபோல் ‘மீரா’ என்றழைக்கவும் தான் அவளை உற்று கவனிக்க ஆரம்பித்தாள் சமீரா.
அம்ருதா சற்றும் அமைதியில்லாமல், ஏதோ தவறு செய்ய போகும் தோற்றத்தில் நகங்களை பற்களில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்தாள்.
நகங்களை எச்சில் செய்யும் பழக்கத்தை அறவே வெறுப்பவள் சமீரா. அதனால் அம்ருதாவின் கைகளை தட்டி விட்டு, “என்ன அம்ருக்கா, என்ன தப்பு செஞ்சீங்க? உங்க கண்ணுல தெரியுதே? என்று சரியாக கவனித்துக் கேட்டாள்.
“இன்னும் செய்யல, ஆனா..!” என்று நிறுத்தி சற்று தள்ளி வந்துக்கொண்டிருந்தவனை கை காட்டி, “செய்ய போறேன்!” என்றாள் அம்ருதா.
“புரியலைக்கா. யாரு அது?”
“ம்ம் அது நான் கல்யாணம் பண்ணிக்க போற ஸ்ரீனி! ஸ்ரீனிவாசன்!! என்னோட மாமா பையன்.”
“ஓ! சரி நீங்க பேசிட்டு இருங்க..” என்று சற்று தள்ளி நின்று கொண்டாள் சமீரா.
ஸ்ரீனியோ நேராக சமீராவிடம் சென்று “சிஸ்டர்! இன்னிக்கு எங்க கல்யாணத்துக்கு இவ சார்புல சாட்சி கையெழுத்து போடணும் ப்ளீஸ் .” என்று பேசி சமீராவை அதிர வைத்தான்.
சில நொடிகள் அதிர்ந்தாலும் பின் அவனின் கண்களை நேராக நோக்கி “ நான் இன்னும் மேஜர் ஆகல.. அதனால என் சைன் செல்லாது.” என்றாள் சமீரா.
“மீரா! போன மாசம் உன்னோட பதினெட்டாவது பிறந்த நாளை நீ எதிர் பார்த்தாயோ என்னமோ எனக்கு தெரியாது.. ஆனா நான் ரொம்ப எதிர் பார்த்துட்டு இருந்தேன். எதுக்கு தெரியுமா? இந்த சந்தர்ப்பத்திற்காக மட்டும் தான். இவர் என் மாமா பையன் தான். ஆனா சொந்த மாமா இல்லை ஒன்று விட்ட மாமா பையன்.
இவங்க குடும்பத்துக்கும் என் குடும்பத்துக்கும் ஒரு மூணு வருஷமா ரொம்ப பயங்கரமா சண்டை போயிட்டு இருக்கு.. எதுக்காகன்னு எல்லாம் இப்போ சொல்ல முடியாது. எங்க கல்யாணத்திற்கு எங்க வீட்டில் சம்மதம் கிடைக்கலை.. அதான் இப்படி ஒரு முடிவு..
இதில உன்னை இழுத்து விட எனக்கு மனமில்லை தான்.. ஆனா என் அம்மா, உன் கூட மட்டும் தான் என்னை வெளியே அனுப்பறாங்க.. ஏன்னு கேட்டா, உன் கிட்ட தான் அறிவு, அழகு, பொறுமை, மரியாதை, தைரியம் , நிதானம் எல்லாம் இருக்குன்னு சொல்றாங்க. அது உண்மை தான் ன்னு எனக்கும் புரிஞ்சு தான் இருந்தது. மனசுல எந்த வித பொறாமை உணர்வும் இல்லாம சொல்றேன் மீரா, நீ என் பிரண்டா கிடைச்சதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்.
உன் கிட்ட முன்னாடியே சொல்லமா இருந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் மீரா, ப்ளீஸ் எங்க கல்யாணத்துக்கு சைன் பண்ணுடி..” என்று நீளமாக வசனம் பேசினாள் அம்ருதா.
“அம்ருக்கா! என்னால் முடி....” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே “ஸ்ரீனி! எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன். நாம போலாமா?” என்று ஒருவன் வந்து நின்றான்.
பதின்வயதில் இருக்கும் சமீராவிற்கு அவனைப் பார்த்ததும் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது.
(என்னைப் பொருத்த வரை இது இறைவனின் விளையாட்டு(அருளே!). தன் பிறப்பு குறித்து ஒன்றுமே அறியாமல் இருக்கும் சமீராவை அவளின் குடும்பத்தினருடன் இணைப்பதற்கு இறைவன் நடத்தும் நாடகமே இவ்விளையாட்டு. ஏனென்றால் இதுவரை இது போன்ற சலனங்கள் சமீராவுக்கு ஏற்பட்டதில்லை.)
“டேய் சமீர்!! தேங்க்ஸ் டா.!” என்ற ஸ்ரீனியின் வாரத்தைகளில் அவனின் பெயர் அறிந்ததும் மனதில் மகிழ்ச்சி ப்ரவாகம் ஊற்றெடுத்து ஓடியது. சிறு சலனம் பெரிதாகி அவளின் அடி ஆழம் வரை இனிக்கிறது.
தன் தாய் பேகத்திடம் முறையாக அனுமதி வாங்கி சமீரை நிக்காஹ் செய்ததுப் போன்ற காட்சிகளை மனதிலே ஓடவிட்டுக்கொண்டிருந்தாள் சமீரா. இதையெல்லாம் சில நொடிகளிலேயே நினைத்துப் பார்த்த சமீராவிற்கு இன்ப மேகம் அவளை சூழ்ந்ததைப் போன்றே இருந்தது. சுற்றி நிற்பவர்கள் பேசுவது எதுவும் காதில் விழவில்லை அவளுக்கு.
அதற்காக சமர்த்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் என்று சொல்ல முடியாது.. தங்கள் குடும்பத்தினரின் அனுமதியுடன் நிக்காஹ் முடித்துவிட்ட இருவரும் எல்லோரிடமும் மிகுந்த உற்சாகத்துடன் அளவளாவுவது போலவே கனவு கண்டு கொண்டிருந்தாள் சமீரா.
 
சமர்த்தை பார்த்தவுடனே அவளின் அடி மனது வரை தோன்றியிருக்கும் இந்த சலனம் இன்னும் சில மணி துளியில் அதள பாதாளத்திற்கு கொண்டு சென்று அவளை புதைக்கும் என்று தெரியாமலே இருந்தாள் சமீரா.
அதற்காக கண்ணீர் விட்டு அழ கூட அவளுக்கு நேரமற்று போகும் என்பது அவளைப் படைத்த இறைவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
கனவுலகில் சஞ்சரிக்கும் சமீராவின் தோளை தொட்டு திருப்பிய அம்ருதா, “ப்ளீஸ்டீ!!! எனக்காக சைன் பண்ண ரெஜிஸ்டர் ஆபிஸ் வாடி!! என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள்.
“அம்ருக்கா! வேண்டாம்..” என்று ஏதோ சொல்ல வந்தவளின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டே போனாள் அம்ருதா.
இவ்வளவு ஏற்பாடு செய்த ஸ்ரீநிவாசனால் அம்ருதாவிற்காக கையெழுத்திட வேறொரு ஏற்பாடு செய்திருக்க முடியும். அம்ருதாவின் காதலுடன் கூடிய கோரிக்கைகாக மட்டுமே சமீராவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் அவன்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்ரீநிவாசன் - அம்ருதா ஜோடியின் பதிவு திருமணம் நண்பர்களின் உதவியால் இனிதாக நடந்தேறியது.
பெற்றவர்களின் அனுமதி பெறாமலே முதலும் கடைசியுமாக செய்த தவறால் சமீராவிற்கு பயமாக இருந்தாலும் சமீரின் இருப்பு மனதிற்கு இதமாகவே இருந்தது.
“ஸ்ரீனி!! அவாளோட சேர்ந்து ஆத்துக்கு வா. நான் எங்காத்துல சொல்லிட்டு தான் வந்தேன். நான் முன்னாடி போறேன்” என்று ஸ்ரீநியிடம் சொல்லிவிட்டு அகன்ற சமர்த்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் சமீரா.
அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்த சமீராவிற்கு அவர்களின் பேச்சு காதில் விழாவில்லை. அவன் போவது மட்டும் அவளின் மனதிற்கு உவப்பானதாக இருக்கவில்லை.
“அம்ருக்கா நான் போகவா?” என்றாள் சமீரா.
“இரு மீரா! எங்களோட சேர்ந்து சமீர் வீட்டுக்கு வா! இன்னும் கொஞ்ச நேரம் ஸ்ரீனியோட டைம் ஸ்பென்ட் பண்ணிக்கறேன் ப்பா ப்ளீஸ். தேர்ட்டி மினிட்ஸ் லே நம்ம ரெண்டு பேரும் கிளம்பலாம்.
“என்னது அவங்க வீட்டுக்கா?! என்று அதிர்ச்சியுடன் வினவினாள் சமீரா.
“எதுக்கு மீரா இவ்ளோ அதிர்ச்சி?”
“இல்லக்கா இந்த ட்ரெஸ் போட்டுகிட்டு எப்படி அவங்க வீட்டுக்கு போவது?” என்ற சமீராவிற்கு, தங்கள் மதத்தின் அடையாளம் இல்லாத உடை அணிந்து சமீரின் வீட்டுக்கு முதன்முதலாக செல்ல மனம் வரவில்லை.
“ஏன் மீரா? இந்த தாவணி நல்லா தானே இருக்கு.”
“அக்கா! அவங்க வீட்டுக்கு இந்த டிரஸ் போட்டுக்கிட்டு வர எனக்கு இஷ்டம் இல்லை.. “
“நீ இந்த டிரஸ் போட்டிருப்பதால் தான் உன்னை அங்கேயே கூட்டிக்கிட்டே போறேன்.. இல்லன்னா அப்படியே கழட்டி விட்டிருப்பேன் மீரா.” என்றாள் அம்ருதா மிகவும் சாதரணமாக.
“அம்ருக்கா எனக்கு புரியலை.. ஆமாங்க்கா இதென்ன என்னை ‘மீரா’ன்னு சொல்றீங்க? எப்பவும் சமீரான்னு தானே சொல்லுவீங்க?” என்ற சமீராவைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தாள் அம்ருதா.
“எனக்கு பதில் சொல்லாம எதுக்கு இப்படி சிரிக்கறீங்க?”
“நான் உன்னை மீரான்னு ஏன் கூப்பிடறேன்னு இன்னுமா உனக்கு புரியல.. உன்னை ஹிந்துவாக மட்டுமே காட்ட தான் எனக்கு விருப்பம்.”
“ஏன்?”
“அது அப்படித்தான் மீரா! இப்போ இந்த பேச்சை விடு.. ஊருக்கு போகும்போது விளக்கமா எல்லா விஷயத்தையும் சொல்றேன்.. இப்போ வா! ஸ்ரீனியோட நாம சமீர் வீட்டுக்கு போகலாம்.” என்றவாறே நடக்க ஆரம்பித்தாள் அம்ருதா.
“நான் வரலை... ரூம்க்கு போறேன்..” என்ற பதிலில் திரும்பிய அம்ருதா, சமீரா அதே இடத்திலேயே நின்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து அவளின் அருகில் சென்றாள்.
“இங்கப்பாரு மீரா!! ப்ளீஸ்டி!! நீயும் இல்லன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.. எனக்காக வாடி.”
கொஞ்சம் முன்னாடி நடந்துக்கொண்டிருந்த ஸ்ரீனி பின்னால் அவர்கள் வரும் அரவம் கேளாததால் திரும்பிப் பார்த்தான். அங்கே அம்ருதா மீராவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஏதோ கேட்டுக்கொண்டிருப்பது கண்களில் விழுந்தது.
“அம்மு! என்னாச்சு?” என்றான் அம்ருதாவிடம்.
“இல்லை ஸ்ரீனி! இவ சமீர் ஆத்துக்கு வர மாட்டேங்கறா.”
“ஏன் சிஸ்டர்?” என்றான் சற்றே சிந்தித்தவாறே.
“ஓ காட்! சிஸ்டர்! அவன் பேரை வச்சு தப்பா நினைச்சுட்டேள்ன்னு நினைக்கிறேன். அவாளும் நம்மளவா தான்.”
ஸ்ரீனி என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை சமீராவிற்கு. ஆனால் அம்ருதாவோ சமீராவை ஒரு நொடியில் புரிந்துக்கொண்டாள்.
சமீரை அவள்(சமீரா) இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவனாக நினைத்து தான் இந்த உடையுடன் அவர்களின் வீட்டிற்கு வர தயங்கியிருக்கிறாள் என்று புரிந்துக்கொண்டாள் அம்ருதா.
“ஆமா மீரா! நம்மளவா தான்.” என்று ஸ்ரீனிக்கு ஒத்து ஊதினாள் அம்ருதா.
“அம்ருக்கா!!” என்ற சமீராவின் பார்வை ஒன்றும் புரியாத பாவனையையே காட்டியது,
இதைப் பார்த்த ஸ்ரீனி சமீராவுக்கு புரியும்படி சொல்ல ஆரம்பித்தான்.
“மீரா சிஸ்டர்!! அவனோட முழு பேரு சமர்த்.. அவா எல்லாம் வரதராஜ பெருமாள் சன்னதிக்கு பக்கத்துல இருக்கற அக்ரஹாரத்துல தான் இருக்கா. சமீரோட தாத்தா. மாமா எல்லாம் ஸ்லோககிளாஸ் எடுக்கறவா.. சமீர எப்போவுமே நீங்க நாமம் இல்லாம பார்க்க முடியாது.. இன்னிக்கு கூட இட்டுண்டு தான் வந்தான். ரொம்ப வேர்த்துடுத்துன்னு தொடச்சிட்டான். இப்போ கூட நெத்தி(நாமம்) இட்டுக்க தான் சீக்கிரமே ஆத்துக்கு போறான். நீங்க தயங்காம எங்களோட அவா ஆத்துக்கு வரலாம்.” என்று சமீராவின் தலையில் இடியை இறக்கினான் ஸ்ரீனி.
 
Top