Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 5

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 5


விதா சொல்வதையே உற்று கேட்டுக்கொண்டிருந்த சமீராவுக்கு எரிச்சல் தான் அதிகமானதே ஒழிய, அவளுக்கு உதவி செய்யவேண்டும் என்று சற்றும் தோன்றவில்லை.
“சமீரா, ப்ளீஸ் ஹெல்ப் செய்யறீங்களா?” என்றாள் கவிதா.
அவளை ஒரு அற்ப புழு போல் பாவித்து பதிலேதும் கூறாமல் அவளுடைய அறைக்கு சென்றாள் சமீரா.
கவிதாவின் அருகே வந்த விமலா, “ஹேய்! உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்காடி?, அவ பெரிய இவ, உண்மையான காரணத்தை கேட்டதும், நீ அப்படியே சொல்லணுமா, என்ன?, இங்கப் பாரு இனிமே நீ என்ன முயன்றாலும் அவளிடம் எடுபடாது.. நீ வேற ஐடியா ஏதாவது வச்சிருக்கியா?”
இல்லையென்று தலையாட்டிய கவிதாவை பார்த்து சிரித்தாள் விமலா.
“விமல் இப்போ எதுக்கு சிரிக்கற?”
“இப்போ வேற என்ன பண்ண சொல்ற? நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை உதைக்காம சிரிக்கறேனேன்னு சந்தோஷப்படு.”
“சரி சரி, இப்போ போய் வேலைப் பார்க்கலாம் வா. இந்த பிரச்சினையை அப்புறமா பார்த்துக்கலாம் வா” என்றபடியே வேலையைப் பார்க்க சென்றனர் அவர்களிருவரும்.
சிறிது நேரத்தில் விமலா கவிதாவிடம் ஒரு பேப்பரை நீட்டினாள். “கவி இதை வீட்டுல போய் படிச்சு பாருடி.”
“ம்ம் சரி.” என்றுவிட்டு அந்தப் பேப்பரை தனது கைப்பையில் பத்திரப்படுத்தினாள் கவிதா.
வீடு திரும்பியதும் தன் அன்னை நீட்டிய காபியை குடித்ததும், இன்னும் சிறிது வேலை இருப்பதாக கூறிவிட்டு தன்னறைக்கு திரும்பிய கவிதா, காலையில் விமலா கொடுத்த பேப்பரை கையிலெடுத்தாள் கவிதா. அது ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்திருந்த கட்டுரை. அதை எழுதியது சமீரா எனும் சமீர்.
அதிலிருந்த சில வாசகங்கள் அவளை காயப்படுத்தியது. சில அவளை பிரமிப்பில் ஆழ்த்தியது. இன்னும் சில அவளை யோசிக்க வைத்தது. அக்கட்டுரையை முழுதும் படிக்கவிடாமல் அவளின் கைபேசி சிணுங்கியது. கைபேசியில் பேச தொடங்கியதும் அக்கட்டுரையை மறந்தாள் கவிதா. பேசிமுடித்து இரவு உணவு உண்டு பின் படுக்க சென்றபோதும் அக்கட்டுரை பற்றிய நினைவு அவளுக்கில்லை.
மறுநாள் காலை அழகாக விடிந்தது. வழக்கம்போலவே அலுவலகம் வந்த கவிதா, வண்டியின் சத்தம் கேட்டதுமே ஜன்னலில் அருகில் சென்றாள்.
இன்று சமீரா ப்ளூ கலர் டெனிம் முழுக்கை சட்டை மற்றும், கிரீம் கலர் காட்டன் பேன்ட் அணிந்திருந்தாள். ‘முழுக்கை சட்டையை முக்கால் பாகத்திற்கு மடித்தும், சட்டையை பேன்ட்க்குள் இன் செய்தும் அணிந்திருந்தது அவளுக்கு மிக பொருத்தமாகவே இருக்கு’ என்று கவிதா நினைத்துக்கொண்டாள்.
நிமிர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்த சமீரா, கவிதாவைப் பார்த்தும் பார்க்காதவாறே சீப் எடிட்டரின் அறைக்குள் நுழைந்தாள்.
“கவி, வந்ததும் வராததுமா அவ எடிட்டர் ரூம்க்கு எதுக்கு போறா தெரியுமா?”
“தெரியலையேடி.”
“உன் தலை, நீயெல்லாம் எப்படித்தான் பிரஸ் ல வந்து சேர்ந்தியோ? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?”
“விமல் எனக்கு புரியலை டி, ப்ளீஸ்சொல்லிடுடி.”
“நம்ம சீப் கிட்ட கொஞ்சம் ஏத்தி இறக்கி பேசி அவளை இன்டர்வியூக்கு போகசொல்லி சொல்லிட்டேன். சார் அப்போவே கால் செஞ்சுட்டாருன்னு நினைக்கிறேன்.. அதான் அவ வந்ததுமே அங்கே போய்ட்டா.”
“ஹே! சூப்பர்டி, அவர் கிட்ட என்ன சொன்ன?”
“உண்மையை சொன்னேன்.”
“என்ன உண்மை?”
“அதான், நம்ம பத்திரிகைல இப்போ எல்லாம் காரசாரமா எந்த ஒரு இன்டர்வியூமே வரதில்லை.. இப்போ இந்த இன்டர்வியூக்கு நம்ம சமீராவ அனுப்பினோம் என்றால், இந்த வாரத்தின் பத்திரிகை நல்ல அமோகமா விற்கும், அதை விட்டு நம்ம கவிதாவை அனுப்பினால், விற்கிறதும் நின்னுடும்கற உண்மையைதாண்டி கவி சொன்னேன்.” என்று சிரித்தாள் விமலா.
“ஆளைப்பாரு, என்னைப் பத்தி போட்டா கொடுக்கற? உன்னை இருடி கவனிச்சுக்கிறேன்.” என்று அவளும் சிரித்தாள்.
எடிட்டரின் அறையிலிருந்து வெளியே வந்த சமீரா, “கவிதா, அந்த கலெக்டர் பத்தி என்ன என்ன டிடைல்ஸ் கலெக்ட் பண்ணி இருக்கீங்க? முதல்ல அவரோட பேர சொல்லுங்க..” என்ற சமீராவைப் பார்த்து திரு திரு என்று முழித்தாள் கவி.
“மிஸ் கவிதா, கொஞ்சம் சீக்கிரம் சொல்லுறீங்களா?”
சமீராவின் கேள்விகளால், அதுவரை சமீரா என்று அழைத்த கவிதா, சிறிது பயத்துடன், “இல்லை மே..மே.. டம், நெக்ஸ்ட் வெட்னஸ்டே தானேன்னு இன்னும் எதுவும் கலெக்ட் செய்யல.. கிவ் மி சம் டைம்.. ஐ வில் கிவ் மே..ட” என்று பேசிய கவிதாவைப் பார்த்து பேச்சை நிறுத்து என்பதுபோல் ஒரு கையை தூக்கி காண்பித்தாள் சமீரா.
“டோன்ட் கால் மி மேடம், கால் மி சமீரா ஓகே.” என்றவள் “கவிதா, கலெக்டர் பேரு மிஸ்டர் வரதராஜன், காஞ்சீபுரம் தான் அவரோட நேடிவ்.. சிவில் சர்வீஸ் எழுதி முதல் அட்டம்ப்ட்லே அதுவும் தமிழ்நாட்டுலேயே முதலா வந்து பாஸ் செஞ்சு இருக்கார். இப்போ இந்த கோயம்புத்தூர்ல ஜாயின் பண்ணப் போறார். இதெல்லாம் பேசிக் டிடைல்ஸ் மிஸ் கவிதா, இதை உங்க கிட்ட இந்த வேலைய கொடுக்க வந்தபோதே கலெக்ட் செய்து இருக்கலாம்.. எனிவே தேங்க்ஸ் பார் யூவர் டிடைல்ஸ்.” என்று அந்த டிடைல்ஸ்க்கு அழுத்தம் கொடுத்து சிறு திமிருடன் சென்றாள் சமீரா.
அவள் சென்றதும் விமலாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு கிளம்பியது. “கவி, பாரு உன்னை இப்படி தான் இருக்கனும்ன்னு சொல்றேன்.. நாம ஜாலியா இருக்கிறது வேற விஷயம்.. பட் நம்ம செய்யற வேலையை உருப்படியா செய்யணும். அதுவும் நம்மள மாதிரி பிரஸ்ல இருக்கிறவுங்க எள்ளுன்னா எண்ணையாய் இருக்கணும் தெரியுமா? அவளைப் பாரு எவ்ளோ ஷ்ருடா இருக்கா.. நீ அந்த மாதிரி கூட இருக்க வேண்டாம் அதுக்காக ஒரேடியா மந்தமாவும் இருக்க கூடாது. சரி.. சரி நேத்து நான் கொடுத்த பேப்பர் படிச்சுட்டியா?”
“படிக்க ஆரம்பிச்சேன் விமல், பட் இன்னும் புல்லா படிக்கலை.. நைட் பிரன்ட் கால் செஞ்சு பேசினதுல மறந்துட்டேன். பட் படிச்ச வரைக்கும் சூப்பர்டி, நானும் அவளை மாதிரி இருக்கனும்ன்னு நினைக்கிறேன் பட் என்னால முடியலை.”
“விடு கவி, அதை புல்லா படிச்சுட்டு வந்து சொல்லு.” என்றபடியே எழுந்து சென்று தன்னுடைய வேலையைப் பார்க்க சென்றாள்.
“சரிடி” என்ற கவிதாவும் தன்னுடைய வேலையைப் பார்க்க தொடங்கினாள்.
“சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே” என்று விஷ்ணு சகஸ்ராம ஸ்லோகத்தை ஆரம்பித்தாள் லக்ஷ்மி. அப்பொழுது தொலைபேசி அழைத்ததால் ஸ்லோகத்தை நிறுத்தி போனை எடுத்தாள் லக்ஷ்மி.
“ஹலோ! மன்னி சொல்லுங்கோ” அந்தப் பக்கம் சுமி தான் அழைத்திருந்தாள்.
“லச்சு, என்ன பண்ணிண்டு இருக்க, கோவிலுக்கு வரயா?”
“இதோ கிளம்பிண்டு தான் இருக்கேன் மன்னி.. விளக்கேத்தி வச்சுட்டு இப்போ தான் சகஸ்ரநாமத்த ஆரம்பிச்சேன்.. முடிச்சுட்டு வந்துடட்டுமா மன்னி..”
“சரி லச்சு, நேரா கோவிலுக்கே வந்துடு.” என்று லக்ஷ்மியிடம் சொல்லிவிட்டு போனை கீழே வைத்தாள் சுமி.
“மாம், நானும் உன்னோட கோவிலுக்கு வரேன்.” என்றான் கோவிந்த்.
“கோவிந்தா, இன்னும் சித்த நாழி ஆகும்டா.. இப்ப தான உள்ள நுழையற..காபி கலந்து தரேன் சாப்பிடு வா.”
“சரிமா, நான் போய் கை கால் அலம்பிண்டு வந்தடறேன்.. நீ காபி கலந்து வை மா. கண்ணன் சித்தப்பா எங்க?”
“இதோ இங்க தான் இருக்கேன் கோவிந்த், சொல்லுப்பா.”
“சமீர் என்ன சொன்னான் சித்தப்பா?”
“நன்னா இருக்கானாம், என்னை தான் அங்க வரசொல்லி சொல்லிண்டு இருக்கான்.. பார்க்கலாம் ஆம்(வீடு) எல்லாம் பார்க்கட்டும், கிடைச்சதுக்கு அப்புறம் போனாலாவது ஏதாவது பிரயோஜனமா இருக்கும்.. இப்போ என்னத்துக்குன்னு தான் பார்க்கிறேன். நம்ம சாரதியும் லட்சுவும் போனா போவா போலிருக்கு.. இன்னும் முடிவாகல.. சாரதியோட உடம்ப பார்த்துண்டு கிளம்புவான்னு நினைக்கிறேன்.”
சாரதி லக்ஷ்மியின் கணவர். சமீரின் அப்பா. அவர் அதிக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர். இரு வாரங்களுக்கு முன்னால் தான் அவர் தனது அரசாங்க உத்தியோகத்தை தனது விருப்ப ஓய்வின் மூலம் விட்டார். அதற்கு முழு காரணமும் அவரின் உடல்நிலையே.
“சரி சித்தப்பா, நான் அத்தைட்ட பேசறேன். ஆனா அவாள மட்டும் தனியா அனுப்ப முடியாது..”
“நேக்கும் புரியறதுடா கோவிந்த், ஆனா அடுத்தவாரம் பவியோட திருவத்யானம்(தெவசம்) வரது.. அதுக்கு நேக்கு இங்க இருந்தாதான் வசதி.. கிருஷ்ணனுக்கும் பாவம் வயசாயிடுத்து.. இருந்தாலும் துணைக்கு போலாம்..”
“யாருக்கு நம்ம கிச்சாக்கா வயசாயிடுத்து..? போங்கோ சித்தப்பா, வயசானாலும் என் அழகும், இளமையும் குறையாதுன்னு ஸ்டைலா வசனம் பேசிண்டிருக்கு.. அதுவுமில்லாம கிருஷ்ணன்ன்னு பேருக்கு ஏத்தாப்போலே எப்ப பாரு அவரை சுத்தி கோபிகைகளின் கூட்டம்.. அவா முன்னாடி எல்லாம் கிருஷ்ணன்க்கு வயசாயிடுத்துன்னு சொல்லிடாதீங்கோ.. பாவம் அவா மனசு தாங்காது.. சித்தப்பா தாங்காது..”
“படவா, வந்தோன்னேயே ஆரம்பிச்சுட்டியா, இன்னிக்கு நோக்கு நான் தான் ஆ(அக)ப்பட்டேனா?” என்று கிருஷ்ணன் புலம்ப ஆரம்பித்தார்.
கிருஷ்ணனின் அப்பா திவ்யப்ரபந்தம் மற்றும் மற்ற ஸ்லோகம் எல்லாம் அங்கிருப்பவருக்கு எல்லாம் கற்று தந்தது நாம் அறிந்ததே. அவரின் மறைவுக்கு பிறகு கிருஷ்ணன் அதை சொல்லி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது பணி ஓய்வு கிடைத்தப் பிறகு, மதிய நேரத்தில் கோவிலை சுற்றியுள்ள அக்கம் பக்கத்தில் உள்ள மாமிகளுக்கும் சொல்லி தருகிறார். அதை வைத்து தான் கோவிந்த் கிருஷ்ணனை கிண்டல் செய்துக்கொண்டிருக்கிறான்.
“கோவிந்த், நீ எப்படி இப்படி யோசிக்கற? ரூம் போட்டு யோசிப்பியோ?” என்ற கண்ணனைப் பார்த்து, “சித்தப்பா, இதுக்கெல்லாம் எதுக்கு ரூம் போடணும்? அதெல்லாம் தானா வரும்.. பிகாஸ் நாங்க ரொம்ப புத்திசாலி..” என்றான் கோவிந்த்.
“நாங்க நாங்கன்னு சொல்றியே.. உன்னோட அவனும் கூட்டா, வரட்டும் அவன்.. ரெண்டு பேரையும் கவனிச்சுக்கறேன்.. இந்தா கோவிந்தா காபி எடுத்துக்கோ..” என்ற சுமியைப் பார்த்து புன்னகைத்தான் கோவிந்த்.
“ஏண்ணா, நாங்க கோவிலுக்கு போய்ட்டு வரோம்.. ஆத்த பார்த்துக்கோங்கோ.. மாப்பிள்ளை வரேன்.”
“போய்ட்டு வாங்கோ மன்னி.”
“டேய் வரயா?”
“ந்தோ மா ரெடி.. நெத்தி(நாமம்) மட்டும் எட்டுண்டு வந்துடறேன்.” என்றவாறே உள்ளே சென்றான் கோவிந்த்.
இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்களுடன் லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டாள்.
பெருமாளிடம், தமது பிள்ளைகளுக்கு சீக்கிரம் விவாஹம் நடக்க வேண்டிக்கொண்டு வெளியே வந்த அவர்களிடம் அமைதியே குடிக் கொண்டிருந்தது.
இதேமாதிரியே அடுத்துவந்த சில நாட்களும் இனிமையாக நகர்ந்தன அனைவருக்கும். பத்திரிகை அலுவலகத்தில் எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அந்த புதன் கிழமையும் வந்தது.
“விமலா, வாங்க போகலாம்.” என்றபடியே தன்னுடைய ஹீரோஹோன்டாவை கிளப்பினாள் சமீரா.
விமலாவும் அவளுடன் வருவதாக கூறவே அவளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.
காலையிலேயே பதவி ஏற்றிருந்த அந்த மாவட்ட ஆட்சியர் அறையினுள் அன்றைய அலுவலுக்கான மீட்டிங் நடந்துக்கொண்டிருந்தது.
மாலை நான்கு மணிக்கு பத்து நிமிடங்கள் முன்பாகவே அன்றைய கூட்டத்தை முடித்துக்கொண்டு எழுந்த ஆட்சியர், “நன்றி இதே போல் மத்த எல்லா விஷயத்திலும் உங்கள் எல்லோருடைய ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறேன்.” என்ற கூறி விட்டு ப்ரெஸ் மீட்டிங் நடக்கும் இடம் நோக்கி சென்றார்.
“பிரண்ட்ஸ் இன்னிக்கு தான் இங்க வந்து இருக்கேன்.. இந்த ஊரு எனக்கு புதுசு.. உங்க எல்லோரின் ஒத்துழைப்பும் எனக்கு வேணும்.” என்றார்.
“சார் கூடிவ்நிங், எங்க சப்போர்ட் எப்போதுமே உங்களுக்கு கிடைக்கும். அதே மாதிரி எதாவது தப்பு இருந்தால் அதை சுட்டி காட்டவும் தயங்கமாட்டோம்.” என்றார் ஒரு பத்திரிக்கையாளர்.
“கண்டிப்பா, என்னோட நிறைகளை நீங்க கோடிட்டு காட்டுறீங்களோ இல்லையோ, ஆனா, என்னோட குறைகளை கண்டிப்பா சுட்டிக்காட்டிடனும். அது எப்போதுமே எனக்கு பேருதவியாகவும் மற்றும் அதேப் போன்ற தவறுகளை செய்யாமலிருக்கவும் உதவி செய்யும்.”
“நன்றி சர்., நீங்க இந்த மாவட்டத்தைப் பற்றி என்ன நினைக்கறீங்க?” என்றார் பத்திரிக்கையாளரின் மத்தியில் இருந்த ஒருவர்.
“இன்று தான் பதவி ஏற்றிருக்கிறேன்.. இங்க இது தான் என்னோட பர்ஸ்ட் விசிட்.. இங்க நாலு நாட்கள் முன்பாகவே நான் வந்துட்டேன்.. இங்க சின்ன குழந்தைகளிடம் கூட மரியாதையாக பேசுவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று நிறுத்தியவர் அப்புறம் இன்னும் சில இடங்களில் குறிப்பிட்ட ஜாதியினரை ஒதுக்கி வைப்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. குழந்தை தொழிலாளர்களையும் நிறையப் பார்க்க நேரிட்டது. இன்னும் கோவை மாவட்டத்தை சேர்ந்த குக்கிராமங்கள் அடிப்படை வசதி கூட இல்லாம இருப்பது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை.” என்று அவர் பாட்டுக்கு சொல்லிக்கொண்டிருக்க விமலாவிற்கு பொறுமை போனது.
வந்ததிலிருந்தே அவள் சமீராவை தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளிடம் எப்பொழுதும் இருக்கும் நிமிர்வு இருந்தாலும். அவளுடைய முகத்தில் ஒரு ஆச்சர்யம் கலந்த வெற்றுப் பார்வையை அடையாளம் கண்டுக்கொண்ட விமலாவிற்கு தான் ஆச்சர்யம் தாங்கவில்லை.
‘என்னடா இவள் இப்படி உட்கார்ந்து இருக்கா? இவளோட வந்தா இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்ன்னு நினைச்சு வந்தா, இவ வாயே திறக்க மாட்டேங்கறாளே.. என்ன செய்யறது?” என்று யோசித்தப் படியே சற்று அவளின் புறம் குனிந்து, “சமீரா, நீ.ங்க ஏதாவது கேளுங்க.” என்று அவளின் காதை கடித்தாள் விமலா.
ஏதோ தூக்கத்திலிருந்து எழுந்தாற்போல் “ஹா.ன்.! என்ன விமலா சொன்னீங்க?” என்றாள் சமீரா.
‘என்னடா இது நமக்கு வந்த சோதனை?’ என்று நினைத்தவாறே, “ஒண்ணுமில்லை. நீங்க அவர் பேசறதை கவனீங்க.” என்று சொல்லிவிட்டு அமைதி காத்தாள் விமலா.
அதுவரை அவர் பேசியதை சரியாக கவனிக்காத சமீரா சற்று நிமிர்ந்து அமர்ந்து அவரின் பேச்சை கவனிக்க ஆர்மபித்தாள்.
“நம்ம நாட்டுல லஞ்சம் பெருகிட்டு வருது.. உங்களை மாதிரி பதவில இருக்கிறவங்களுக்கு அதற்கான வாய்ப்பு நிறைய இருக்கும். நீங்க இந்த லஞ்ச விஷயத்தில் எப்படி சார்?”
“வெளிநாட்டுல எல்லாம் அவங்க கடமையை செய்யாமலிருக்க தான் லஞ்சம் தரப் படுகிறது. ஆனா நம்ம நாட்டுல அவங்க கடமையை செய்ய வைக்கவே லஞ்சம் தேவைப் படுகிறது. இது மாறுமோ, மாறாதோ தெரியாது. ஆனா, நான் என் கடமையை செய்ய தயங்கமாட்டேன்.. அதுக்கு எந்தவிதமான லஞ்சமும் பெற்று கொள்ளமாட்டேன். நான் யாருக்கு பயப்படுகிறேனோ, இல்லையோ, என் மனசாட்சிக்கு பயப்படுகிறவன்.”
“சார் நீங்க பேசறத கேட்க நன்றாக தான் இருக்கிறது.. பட் நடைமுறை அதை நம்ப மறுக்கிறதே? என்ன சொல்றீங்க?”
“என்னைப் பற்றி நீங்க போக போகத்தான் புரிந்துக்கொள்ள முடியும். எனக்கு எப்படி இவ்விடமும், இம்மக்களும் புதுசோ, அதே மாதிரி தானே இம்மக்களுக்கும், உங்களுக்கும் நான் புதுசு.. சீக்கிரமே என்னைப் புரிந்துக் கொள்வீர்கள்.. நெக்ஸ்ட் கொசின் ப்ளீஸ்.”
“எந்தப் பிரச்சினை என்றாலும் இங்க உள்ள சாதாரண குடிமக்கள் நேரடியா உங்களை தொடர்பு கொள்ள முடியுமா?”
“கண்டிப்பா, ஆனா அது அந்தப் பிரச்சினையைப் பொறுத்தது.. கலெக்டர் தான் சொல்லிட்டாரேன்னு, குழாயடி சண்டையையும், சொந்த வீட்டு பிரச்சினையும் கொண்டு வரக்கூடாது.”
இதை கேட்டு எல்லோரும் புன்னகைப் புரிந்தாலும், சத்தமாக யாரும் சிரிக்கவில்லை. சமீரா அந்த புன்னகையை கூட சிந்தாமல் அந்த கலெக்டரையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘உனக்கு என்னையெல்லாம் நினைவிருக்குமா?’ என்று நினைத்தவள்.. ‘இவர் பேரு என்ன? என்று யோசித்து, ‘ஹான்! வரதராஜன்.. இன்னும் உன் வாழ்க்கையில் இருக்கும் ரகசியத்தால் எனக்கு என்ன பாதிப்பு வரப்போகிறதோ? இந்த இன்டர்வியூக்கு முன்னால் போகும்போது, சிவில் சர்விஸ் எக்ஸாம் ரிசல்ட் பேப்பர் பார்த்தேனே..
இவரோட போட்டோவை என்னால் அடையாளம் காண முடியலையே. அந்தப் படம் கருப்பு வெள்ளையாய் இருந்ததால் தானோ, என்னமோ என்னால் அடையாளம் காண முடியலை. அதுமட்டுமில்லை முகமும் மங்கலாகத்தான் தெரிந்தது. எனக்கு மட்டும் முன்பே தெரிந்திருந்தால் இந்த மீட்டிங்க்கு வராமலாவது இருந்திருக்கலாம். அட்லீஸ்ட் இந்தப் பேர் எனக்கு அப்போதே தெரிந்து இருந்தால் என் மனதில் சலனம் தோன்றி இருக்காதோ..?’ என்று தன்னுள் மூழ்கியிருந்த சமீராவை விமலா தொட்டு திருப்பினாள்.
“சமீரா, ஆர் யூ ஆல்ரைட்?, நீங்க ஒண்ணுமே கேட்கலையே? உங்க கூட இங்க வந்ததுக்கு ரீசனே நீங்க கேட்கிற கொசின்ஸ் தான்.. பட் இன்னிக்கு நீங்க இப்படி இருக்கிறதைப் பார்த்தா..” என்று நிறுத்தி
“சாரி டு சே திஸ்” என்று சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தாள். “நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டீங்களோன்னு இருக்கு.. உங்களின் விருப்பம் இல்லாமல் இதில் முக்கை நுழைத்து விட்டேனேன்னு ரொம்ப கில்டி யா இருக்கு.. சமீரா, ப்ளீஸ் நான் தான் உங்களை இந்த இண்டர்வியூக்கு வரவேச்சேன்.. அதுக்கு ரொம்ப சாரி கேட்டுக்கிறேன். ப்ளீஸ் நீங்க இயல்பா இருங்க.”
விமலாவின் குற்ற உணர்ச்சி இப்பொழுது சமீராவை தொற்றிக்கொண்டது. “சாரி விமலா, நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் நான் நினைக்கவேயில்லை.. என்னுடைய மௌனம் உங்க மனச காயப்படுத்திட்டதுன்னு நினைக்கிறேன். சாரி இந்த மௌனம் உங்களால் வரலை.. என்னால இவ்ளோ தான் சொல்ல முடியும்.. பிகாஸ் அது என்னோட பர்சனல்.. ப்ளீஸ் நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன். இதோ நான் கேட்க ஆரம்பிக்க போகிறேன்.”
“இட்ஸ் ஓகே சமீரா, ஐ அண்டர்ஸ்டான்ட்.” என்ற விமலா சமீராவின் கையைப் பிடித்து லேசாக அழுத்தினாள்.
“தேங்க்ஸ் விமலா.” என்று சமீராவும் புன்னகைத்தாள். அதுவரை யாருக்குமே இடையுறு செய்யாமல் மெதுவாகத்தான் பேசினர்.
“சார் லாஸ்ட் கொசின், நீங்க லஞ்சம் வாங்காம நேர்மையா இருந்தா, இந்த மாவட்டத்துல எவ்வளவு நாள் தாக்கு பிடிக்க முடியும்?” கேட்டது ஒரு பெண் நிருபர்.
“மேடம், இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு நிஜமாலுமே தெரியல.. என்னோட நேர்மை எனக்கு தடையா இருந்தா, நான் என் பதவியைத்தான் விட்டு தருவேனேயொழிய என்னுடைய நேர்மையை ஒரு போதும் விடமாட்டேன். உங்களுக்கு பத்திரிகை சுதந்திரம் இருக்கு. அதை வைத்து நீங்க எங்க வேணும்ன்னாலும் நுழையாலாம் இல்லையா?, அந்தப் சுதந்திரத்தை யாரேனும் பறித்தால் நீங்க என்ன செய்வீங்களோ, அதே போல என் நேர்மையை பறிக்க முயற்சி செய்தால் அதையே தான் நானும் செய்வேன்.. தங்க்யூ பிரண்ட்ஸ், மீட்டிங் முடிச்சுக்கலாமா?” என்று எழப்போனவர், பத்திரிக்கையாளர்களின் மத்தியில் இருந்து ஒருவர் கை தூக்கியிருந்ததைப் பார்த்து மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்தார்.
அந்த கைக்கு சொந்தக்காரி சமீராவே தான். தான் கேட்கபோகும் கேள்வி அபத்தமாக இருந்தாலும், அவளுக்கு அதி முக்கியமாக இருந்ததால் கேட்க முடிவு செய்தாள்.
“எஸ் , கேளுங்க.” என்றவரைப் பார்த்து, “உங்களுக்கு வேற பேர் ஏதாவது இருக்கா?” என்றவளை பக்கத்தில் அமர்ந்திருந்த விமலா ‘இவ என்ன லூசா?’ என்பது போல் பார்த்தாள். மற்ற பத்திரிக்கையாளர்களோ, அவளை ஏதோ வேற்று கிரகவாசி போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த கலக்டரோ அந்த கேள்வியை கேட்டது யாரெனப் பார்த்தார். ஒருவேளை தமக்கு தெரிந்தவரோ, என்றுப் பார்த்தார். பார்த்தவரை அது ஒரு பெண் என்பது புரிந்தது. ஆனால் தெரிந்தவர் போல் எதுவும் தோன்றவில்லை. சிறிது யோசித்தவாறே பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“இதுவரை யாருமே என்னை பர்சனல் கேள்வி கேட்கலைன்னு நினைச்சேன். இனியும் யாரும் கேட்க வேண்டாம்.. நானே சொல்லிடறேன்.” என்று லேசாக சிரித்தவர், “நான் என் அப்பா அம்மாக்கு ஒரே பையன், சொந்த ஊர் காஞ்சிபுரம், அம்மா ஹவுஸ் வைப், அப்பா கவர்ன்மென்ட் ஜாப்லேர்ந்து வாலண்டரி ரிடைர்மென்ட் கொடுத்துட்டாங்க.. இந்த வரதராஜன் என்கிற பெயர் என்னோட அபிசியல் நேம். வீட்டுல என்னோட பேரு சமர்த். போதுமா நான் கிளம்பறேன்.” என்றவாறே எழுந்து கிளம்பினான் வரதராஜன் எனும் சமர்த்.
கலெக்டரின் அறையினுள் நுழைவதற்கு முன் திரும்பி பார்த்தான். அங்கே கடைசி கேள்வி கேட்ட பெண்ணும் இவனையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள். சில நொடிகள் அவளின் கண்களை பார்த்து விட்டு, அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த அடையாள அட்டையைப் பார்த்தான். அது அவசர அவசரமாக திருப்பபட்டதை தொடர்ந்து திரும்பவும் அவளைப் பார்த்துக்கொண்டே அறையினுள் சென்றுவிட்டான் சமர்த்.
 
அன்பு வாசக தோழமைகளுக்கு,
"நள(ன்)தமயந்தி" கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கும், கருத்துக்கள் மற்றும் விருப்பங்களை பகிர்ந்துக்கொண்டதிற்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் தனி தனியே என்னுடைய நன்றியை தெரிவிக்க இயலாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
"பூக்கள் பூக்கும் தருணம்" மற்றும் "மலரே மௌனமா?" கதைகளுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து கதைகளைப் படித்து உங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் மற்றும் ஆதரவையும் பகிர்ந்துக்கொள்ளுங்கள் வாசக தோழமைகளே!!

அடுத்த அடுத்த அத்தியாயங்களில் இருந்து உங்கள் கருத்துக்களுக்கு தனி தனியே நன்றிகளையும், பதில்களையும் தருகிறேன். என்னால் முடிந்தவரை அனைவருக்கும் தருகிறேன். நன்றி!! நன்றி!! நன்றி!! அனைவருக்கும் மிக்க நன்றி!!.
 
Top