Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA?- 4

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 4

ண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே.​

ம்மாழ்வாரின் சீடனான மதுரகவியாழ்வார் அருளிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற திவ்ய பிரபந்தத்தை மெளனமாக சேவித்துக் கொண்டிருந்தார் கண்ணன்..
அந்தப் பாசுரத்தை சேவித்த படியே அப்பாசுரத்திற்காண பொருளை தான் சமர்த்திற்கு சொன்னது நினைவு வந்தது..
தாய் யசோதையிடம் இனிய மாயம் செய்து, சிறு தாம்புக் கயிற்றால் தம்மை கட்டிவிட சம்மதித்த கண்ணபிரான் என் அப்பன் என்றால், அவனை விடவும் எனக்கு இனியவர் ஒருவர் இருக்கிறார்.
அவர் தெற்கில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அவதரித்த நம்மாழ்வார் ஆவார். "தென் குருகூர் நம்பி" என்று அவர் பெயரைச் சொல்வது எனக்கு பேரின்பம். பெயரைச் சொல்லும் பொழுதே என் நாவில் அமுதம் ஊறும். என்று மதுரகவியாழ்வார் தெரிவிப்பதாக சமர்த்திற்கு தான் சொல்லி கொடுக்கும் போது சமர்த் எல்லாம் புரிந்தவனாக தலைய ஆட்டியது இப்பொழுதுதான் என்று இருந்தது அவருக்கு.
அதற்குள் இருபத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டனவா? என்று யோசித்தவாறே பெருமூச்சு விட்டுக்கொண்டார் கண்ணன்.
“கண்ணா, என்ன யோசிச்சுண்டு இருக்க?” என்றபடியே அங்கே வந்தார் கிருஷ்ணன்.
“நான் சமர்த்தை பத்தி தான் நினைச்சுண்டு இருக்கேன்.. அவன் மட்டுமில்லைன்னா நான், என்னோட சோகத்திலேயே மூழ்கி இருந்திருப்பேன்..” என்று நிறுத்தி சில நொடிகள் பேசாமலே இருந்து விட்டு பின், “கிருஷ்ணன், கொழந்த மீரா தொலஞ்சு போய் அப்புறம் அடுத்தடுத்து பவி, அம்மா, அப்பான்னு எல்லாரையும் தொலச்சிட்டு நிற்கதியா நிக்கறச்ச, நேக்கு இந்த லோகத்துலே வாழறதுக்கு துளி கூட விருப்பமில்லை..
அப்போ எல்லாம் ‘மாமா, இது என்ன?, அவா ஏன் இப்படி இருக்கா?, நீங்க தூங்குவேளா, இல்லையா?’ ன்னு எதாவது ஒண்ணு மாத்தி ஒண்ணு கேட்டுண்டே இருப்பான் சமர்த்.
நான் எதாவது விட்டத்த பார்த்து உட்கார்ந்துட்டேன்னா போச்சு, பின்னாடியே வந்து என்னோட பேசிண்டே இருப்பான். வேற எதயுமே என்னை யோசிக்க விடமாட்டான் சமீர்.
நான் அவன சமர்த்ன்னு அழைச்சா மட்டும் நன்னா மூக்குக்கு மேல கோபம் வந்துடும் அவனுக்கு. ‘நீங்களும் என் மாமி போல சமீர்ன்னு கூப்டுங்கோ’ ன்னு சொல்லிண்டே இருப்பான்.
பவி அவனுக்கு சமீர்ன்னு பேர் வச்சதுனால தான் உன் சுமி மாமியே அப்படி கூப்பிட ஆரம்பிச்சான்னு அவனண்ட சொல்லிண்டே இருப்பேன். அவனைப் பார்த்து தான் நேக்கு வாழ்க்கையில் கொஞ்சம் பிடிமானம் வந்ததே..
எல்லாரும் போனப்றம், நீங்க மட்டும் என்னை இங்க அழைச்சுண்டு வரலைன்னா, தனிமையிலேயே வெந்து, போய் சேர்ந்திருப்பேன்.” என்று ஒருகையை தூக்கி மேலே காண்பித்த கண்ணனைப் பார்த்து,
“மாப்பிள்ளை இப்படியெல்லாம் பேசாதீங்கோ.” என்றாள் சுமி.
“உங்கப் பெண்ணுக்கு கல்யாணம் ஆகி ஆத்துக்கு புதுசா மாப்பிள்ளை வந்தாச்சு மன்னி, இன்னும் என்னத்துக்கு என்னை மாப்பிள்ளைன்னு கூட்டுண்டு இருக்கேள்?”
பவி போன போதே கூடவே இருந்து தன்னை கவனித்துக்கொண்ட கிருஷ்ணனை, கண்ணன் தன் மூத்த சகோதரனாகவே எண்ணிக்கொண்டார். கிருஷ்ணனை பேர் சொல்லி அழைத்தாலும், சுமியை மன்னி என்றே அழைத்தார்.
“அது அப்படி தான் கண்ணன், நீதான் ஆத்துக்கு மூத்த மாப்பிள்ளை.” என்ற கிருஷ்ணனைப் பார்த்து லேசாக சிரித்துக்கொண்டார் கண்ணன்.
“தளிகை(சமையல்) ஆயிடுத்து, சாப்பிட வாங்கோ.” என்றவாறே உள்ளே சென்றாள் சுமி.
இவர்கள் மூவரின் தோற்றத்தில் தான் எவ்வளவு மாற்றம். இவர்களின் தோற்றத்திலேயே அவர்களின் வயதும் தெரிகிறது.
இவர்கள் அனைவருமே என்றாவது ஒரு நாள் மீரா திரும்ப கிடைப்பாள் என்று காத்திருந்தாலும், காலன் மட்டும் யாருக்காகவும், எதுக்காகவும் காத்திராமல் அது பாட்டிற்கு தன்னுடைய வேலையை செவ்வனே செய்து காலத்தை நகர்த்தியது..
ஆனால் மீரா தான் இன்னும் இவர்களுக்கு கிடைக்கவில்லை.
“கிருஷ்ணன், சமர்த் போன் செஞ்சானா?”
“கண்ணா, அவன் நோக்கு முதல்ல போன் பண்ணாம, என்னிக்கு எங்களுக்கு எல்லாம் கால் செஞ்சிருக்கான்?, இன்னும் நாழியாகலை.. சமீர் இனிமே தான் கால் பண்ணுவான்.. லக்ஷ்மி(கிருஷ்ணனின் சகோதரி, சமீரின் அம்மா) கூட கோச்சுக்கறா, ‘சமீர் நேக்கு புள்ளயா, இல்லை கண்ணனோட தத்து புள்ளையா? ஒரு நா(ள்) ஒரு பொழுது என்னை முதல்ல அழைச்சு பேசிருப்பானா?’ன்னு ஒரே புலம்பல்.
நீ என்ன தான் சொக்கு பொடி போட்டு வச்சியோ? அவன் எப்ப பாரு உன்னையே பிடிச்சுண்டு தொங்கறான். சுமிக்கு கூட இதுல வருத்தம் தெரியுமோ? அஞ்சு ஆறு வயசு வரைக்கும் சுமி பின்னாடியே சுத்திண்டு இருந்தவன், நீ வந்ததும் உன் கூடவே சுத்த ஆரம்பிச்சுட்டானே..” என்று தன் கையை மோவாய்கட்டையில் வைத்து கண்ணனைப் பார்த்து தலையை ஆட்டி, தன்னுடைய ஆச்சர்யத்தை காட்டினார் கிருஷ்ணன்.
“அந்த கொழந்தை என் மேல வச்ச பிரியத்துக்கு நான் என்ன செய்ய போறேனோ, தெரியல..? “
“கண்ணா, நீ அவனுக்கு இன்னும் என்ன செய்யணும்? அவன் உன்னை படுத்தினது போறாதா?.”
கண்ணன் இங்கு வந்த புதிதில், ‘கண்ணா மாமா தான் எனக்கு எல்லாம் செய்யணும், அவர் தான் நேக்கு பாடம் சொல்லி தரணும்.. ஸ்கூல்க்கு அவர் கொண்டு விடலன்னா, நான் போகவே மாட்டேன். தூங்கறச்ச மாமா தான் கதை சொல்லணும்..’ ன்னு இப்படி நிறைய படுத்தியிருக்கிறான் சமர்த். அதை தான் கண்ணனிடம் கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார்.
“அப்போ அவன் கொழந்தே.. கொழந்தேள் இப்படி பண்ணலைன்னா தான் நாம வருத்தப்படனும். ஆனா சமீர் சமத்து கொழந்த.. பெரியவா சொன்னா உடனே புரிஞ்சு நடந்துண்டுடுவான்.”
“ஆமா, அதை கூட நீதான் சொல்லி தரணும்.” என்றார் கிருஷ்ணன். கண்ணனிடம் வேண்டுமென்று சலித்துக்கொன்டாலும், சமர்த்தின் அறிவிலும், அழகிலும், நடத்தையிலும் மிகுந்த பெருமை அவருக்கு. தன்னுடைய மருமான்(மருமகன்) மீது கொள்ளைப் பிரியம் அவருக்கு.
“இப்போ என்னத்துக்கு என் மருமானை கரிச்சுக்கொட்டியாறது? அவன சொல்லலைன்னா உங்களுக்கு சாப்பாடே உள்ளே இறங்காதே.. ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்ட சுமி, “பாவம் என் மருமான்.” என்றாள்.
“ம்மா, ஆமா நீ எப்ப பாரு அவனையே சொல்லிண்டு இரு.. உன் புள்ள நான், என்னை அப்பா வையறச்சே என்னன்னு கேட்டிருக்கியா?” என்று சலித்துக்கொண்டான் கிருஷ்ணன், சுமியின் மகனான கோவிந்தராஜன் எனும் கோவிந்த்.
“உன்னையெல்லாம் அப்பா வையலன்னா தான் ஏன்ன்னு கேட்கணும்? எப்ப பாரு ஒரு மட்டையை தூக்கிண்டு விளையாட்டு, இல்லன்னா அந்த மட்டையை வச்சிண்டு இருக்கறவாள டிவில பார்க்றது.. இதே வேலை..”
“மம்மி எனக்கு ஒரு டவுட்டு!” என்ற தன் மகனைப் பார்த்து, “எப்ப பாரு டிவில வர மாதிரியே பேச வேண்டியது.. ஒரு நல்ல வழக்கம் இருக்கா? படிப்பு எழுத்து ஒண்ணுமில்லை.. ஏதோ பேருக்கு ஆபீஸ் போக வேண்டியது. நெத்தி எட்டு, பெருமாள சேவிச்சு., ஸ்லோகம் சொல்லிண்டுன்னு இப்படி ஏதாவது ஒரு நல்ல வழக்கம் இருக்கா? எப்ப பாரு டிவி, மட்டைன்னு இருக்க வேண்டியது... இதுல இப்போ உனக்கு என்னடா டவுட்டு?” என்றாள் சுமி.
சுமி சொல்வதை போல் கோவிந்த் ஒன்றும் படிப்பு எழுத்து இல்லாதவனோ, இல்லை நல்ல வழக்கங்கள் இல்லாதவனோ அல்ல. அவன் நன்கு படித்தவன் தான். M.E.ComputerScience படித்து இன்போசிஸ்சில் வேலை பார்த்து வருகிறான்.
அவனிடம் எல்லாவித நல்ல பழக்கங்களும் இருந்தன. இது சுமிக்கும் தெரியும். இருந்தாலும் அவளுடைய மருமானை பற்றி பேசும்போது இவன் எப்படி குறுக்கே வரலாம் என்ற காரணத்தினால் அவனிடம் கோபமாக நடந்துக்கொண்டார்.
கோவிந்திற்கும் இது புரியும். இருந்தாலும் அம்மாவின் வாயைப் பிடுங்குவதே அவனுடைய மிகப் பெரிய பொழுதுபோக்கு.
“என்ன டவுட்ன்னா, இந்த சமர்த்த மட்டும் சமீர்ன்னு கூப்பிடறியே? நேக்கு மட்டும் ஏன் அந்த மாதிரி ஏதும் நிக் நேம் வைக்கல? சரி கூப்பிடறது தான் கூப்பிடற, அழகா, ஸ்டைலா கோவிந்த் அப்படின்னு கூப்பிடாம, கோவிந்தா, கோவிந்தா ன்னு ஏன் மா ஏலம் விடற?”
“கோவிந்தா, அப்படின்னு பெருமாள் பேரை சொல்லி கூப்டா நேக்கு புண்ணியமாவது கிடைக்கும். அதுவுமில்லாம உன்னை அப்படி கூப்பிட்டாலே உன் மேல ஏதோ கோபமா இருக்கேன்னு அர்த்தம்.. அதான் கோவிந்தான்னு கூப்பிட்டாலாவது நேக்கு கோபம் தணியுமோன்னு பார்க்கிறேன்..” என்று நிறுத்திய சுமி திரும்பி தன் மகனைப் பார்த்து, “ம்ஹும்..” என்று தலையை இடமும் வலமுமாக ஆட்டிய படியே “அதெங்க கொறையப் போறது?” என்று தன் உதட்டைப் பிதுக்கினார் சுமி.
“ம்மா, நோக்கே இது ஓவரா தெரியலையா? எப்ப பாரு அவனையே சொல்லிண்டு இருக்கியே? இப்படி ஓரவஞ்சனை பண்றியே, ஒரு கண்ணுல வெண்ணையையும், மறு கண்ணுல சுண்ணாம்பையும் வச்சுண்டிருக்கியே மா, நோக்கே என்னைப் பார்த்தா பாவமாயில்லையா?, இதை கேட்க யாருமே இல்லையா? என்று அழுவது போல் மூக்கை உறிஞ்சிய கோவிந்த், சில நொடிகள் கழித்து,
“பொறுத்தது போதும் கோவிந்தா, பொங்கியெழு கோவிந்தா..” என்று தனக்கு தானே தோளை தட்டியபடி தன் அன்னையிடம் பழைய படமான மனோகராவின் வசனத்தை பேசிக்காட்டினான் கோவிந்த்.
கோவிந்தின் காதைப் பிடித்து திருகியப் படியே “ஏண்டா, இதெல்லாம் அவன் வேலை தானே, நோக்கு சொந்தமா யோசிக்க தெரியாதே, அதுவுமில்லாம நீ தான் ரொம்ப சமத்தாச்சே.. அவன் தான் சொல்லி கொடுத்திருக்கணும். தெனம் இது மாதிரி என்னை என்ன செய்து கத்த வைக்கலாம்னு பிளான் போடுவேளோ? இன்னிக்கு என்னை இப்படி வம்பு பண்ணுன்னு சமீர் சொன்னானா? இதுக்கு தானே அவனும் நீயும் காத்துண்டு இருந்தேள்? வரட்டும் அவன் குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கறானா?”
“ஐயோ மம்மி, நான் மக்கா, சமத்தா? ஏதாவது ஒண்ணு சொல்லேன்மா..”
“டேய் மம்மி, அம்மின்னு கூப்பிட்டுண்டு இருந்த, கூப்பிட்ட வாய்க்கு இன்னிக்கு போஜனம் போட மாட்டேன்.. பார்த்துக்கோ..”
“அதுவா மம்மி, சமீர் மாதிரி என்னால உன்னை மாமின்னு கூப்பிட முடியாதில்லை.. அதே சவுண்ட் எபக்ட்ல மம்மின்னு கூப்பிட்டாலாவது நோக்கு என்னை பிடிக்குதான்னு தான் மம்மி அப்படி கூப்பிடறேன். என்ன பண்றது நேக்கு என்னோட அம்மா பிரியம் கிடைக்க வேற வழி தெரியலை மம்மி தெரியல..” என்றபடியே, ஒரு கையை எடுத்து வழியாத கண்ணீரை துடைத்து தன் அம்மாவைப் பார்த்து பரிதாப லுக் விட்டான் கோவிந்த்.
கண்ணனும், கிருஷ்ணனும் “ஹா..ஹா..!” என்று சிரித்தபடியே சாப்பிட உள்ளே சென்றனர். “கோவிந்தா, நீயும் வரயோன்னோ?” என்று வலக்கையை உயர்த்தி சாப்பிட என்பது போல் செய்தார் கண்ணன்.
“ஐயோ! சித்தப்பா, இதை தவிர நேக்கு வேற என்ன முக்கிய வேலை வந்துடப் போகுது?” என்ற கோவிந்தின் தலையில் லேசாக தட்டியவாறே சாதம் பரிமாற சென்றாள் சுமி.
அதே நேரத்தில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தனர்.
“ஹையோ! கவி என்னடி இன்னிக்கு இவ்ளோ வேலையை தலைல கட்டிட்டாங்களே.. இதெல்லாம் முடிச்சு நான் எப்ப போய் என் டார்லிங்க பார்க்கிறது? டெய்லி லேட்டா போறதுக்கு நான் என் டார்லிங் கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே இருக்கேன்.. இந்த வேலைய விட்டுடுன்னு ஒரே அன்பு தொல்லை.. போறப்போக்க பார்த்தா பேப்பர் தான் போடணும் போல இருக்கு.. என்ன ஒண்ணு என் வீட்டுக்கு தெரியாம என் டார்லிங்க மீட் பண்ண முடியாம போய்டுமேன்னு தான் இந்த வேலைக்கே வர வேண்டியதா இருக்கு.”
“அப்போ வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே விமல்.” என்றாள் கவிதா.
“கல்யாணமா, அவனையா? இதெல்லாம் சும்மா டைம் பாஸ்க்கு தான் செய்யறேன்னு உனக்கு தெரியுமே கவி.” என்றாள் விமல் என்னும் விமலா.
“எனக்கென்னமோ அவன் உன்மேல சின்சியரா தான் இருக்கான்னு தோணுது. அதான் உன்னை அவ்ளோ சீக்கிரம் விட்டுட மாட்டான். எதுக்கும் நீ கேர்புல்லா இரு.”
“ம்ம் நீ சொல்றதும் கரெக்ட் தான்.. எனக்கும் கொஞ்ச நாளாவே போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு.. மெது மெதுவா கழட்டி விட வேண்டியது தான்டி..” என்று கலகலத்து சிரித்தாள் அவள்.
“விமல், நெக்ஸ்ட் வீக் வெட்னஸ்டே, நியு கலெக்டர் ஜாயின் பண்றார் இல்ல. அந்த பிரஸ் மீட்க்கு என்னை போக சொல்லிட்டாங்க.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை விமல். நெக்ஸ்ட் வீக் நான் என் காலேஜ் மேட்ஸ் எல்லாரும் அவுட்டிங் போலாம்னு பிளான் பண்ணி இருக்கிறது உனக்கு தான் தெரியுமே.. எங்க வீட்டுல கூட ஆபீஸ் மீட்டிங் வெளியூர்ல இருக்குன்னு சொல்லி பெர்மிசன் எல்லாம் வாங்கிட்டேன்டி.. இப்போ பாரு இப்படி ஆகிட்டது.. நான் என்ன செய்யட்டும்டி?”
“நீ என்னிக்கு கிளம்பணும்? இதை முடிச்சுட்டு கிளம்ப முடியாதா?”
“என்னடி, இன்னிக்கு பிரைடே, நான் இந்த சன்டே கிளம்பி நெக்ஸ்ட் சன்டே தான் வருவேன்னு முன்னாடியே உன் கிட்ட சொல்லி இருக்கேன்ல.. மறந்துட்டியா? இங்க பாரு இன்னிக்கு லீவ் லெட்டர் எல்லாம் ரெடி பண்ணி கொண்டு வந்தா.. இப்படி சொல்றாங்க.. என்ன செய்யறதுடி.”
“நடுல ஒரு நாள் தானே நீ வந்து அதை முடிச்சு கொடுக்க முடியாதா?”
“இல்லை விமல், முதல்ல நான் அப்படி தான் நினைச்சேன்.. என்னோட டார்லிங்க்கு நான் அப்படி செய்றது பிடிக்கல.. நீ வந்தா புல் வீக் வா, இல்லன்னா வராதேன்னு படுத்துது..” இப்பத்தானே இவனைப் பிடிச்சேன் அதுக்குள்ள கழட்டி விடவும் மனசு வரல.. அதான் என்ன செய்யறதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்.”
“இதுல என்ன யோசிக்கப் போற? பேசாம நம்ம டெரர் கிட்ட ஹெல்ப் கேட்க வேண்டியது தானே.”
“நானும் யோசிச்சேன் பட்... அது செய்யும்மா?”
“அதெல்லாம் செய்ய வைக்கனும்டி, உன் குடும்பத்துல யாருக்காவது உடம்பு சரியில்லை ஒன் வீக் லீவ் அப்பளை பண்ணியிருக்கேன்.. அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி அதை ஒத்துக்க வச்சிடலாம்.”
“ம்ம் ட்ரை பண்ணி பார்க்க வேண்டியது தான்.. ஆனா அது யாரையும் இன்டர்வியூ பண்ண போறது இல்லைன்னு கேள்வி பட்டேனே.. இதை செய்யுமா டி?”
“இது ஒண்ணும் பர்சனல் இன்டர்வியூ இல்லையே.. எல்லா பத்திரிக்கையிலிருந்தும் தானே வந்து இருப்பாங்க.. ஒன் ஓர் டூ கொசின்ஸ் தானே இது கேட்கணும்.. ஒத்துக்க வச்சிடலாம் கவலைப் படாதே..”
“அது என்னடி டெரர்ன்னு பேரு அதுக்கு?”
“எப்ப பாரு உர்ர்னு மூஞ்சிய வச்சிக்கிட்டு நீதி, நேர்மை, நாணயம்ன்னு பேசிட்டு அது படியே வாழ்ந்துட்டும் இருக்கிற ஜந்துடி அது.. அது முன்னாடியெல்லாம் பர்சனல் இன்டர்வியூ செய்ய வருதுன்னு சொன்னாலே எல்லாரும் பயப்படுவாங்க.
பொலிடிசியன்ஸ்க்கு சும்மா அது பேரை சொன்னாலே போதும். பவ்யமா நடக்க ஆரம்பிச்சுடுவாங்க.. எங்க எதாவது பேசி, அதை பத்திரிக்கையில எழுதி கிழி கிழின்னு கிழிச்சுடுமோன்னு அவனவன் நடுங்குவான். அப்படியிருந்த அந்த டெரர் ஏன் இப்போ எல்லாம் பர்சனல் இன்டர்வியூக்கு போறதில்லைன்னு தெரியல.. “
“ஆனா, விமல் அந்த ஜந்து நல்ல அழகுடி.”
“அதுக்கு இருக்கிற அழகுக்கும், அறிவிற்கும் ஒண்ணும் கொறைச்சல் இல்லை.. ஆனா..” என்று விமலா சொல்லும்போதே வெளியே வண்டி வந்து நிற்கும் ஓசை கேட்க, அவளை நிறுத்தும்படி கை காட்டிவிட்டு ஜன்னலில் அருகே அந்த டெரரைப் பார்க்க சென்றாள் கவி.
அங்கே கருப்பு நிறத்தில் இருந்த ஹீரோஹோண்டா ஸ்ப்ளண்டர் வண்டியை ஒரு உருவம் நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே தலையிலிருந்த ஹெல்மெட்டை கழட்டியது.
நல்ல அடர் காக்கி நிறத்தில் முரட்டு ஜீன்சும், ஹால்ப் வைட் நிறத்தில் காட்டன் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாலும் அந்த உருவத்தைப் பார்த்ததுமே தெரிந்தது அது ஒரு பெண் என்று. தலைமுடியை பாய்கட் செய்திருந்தாள் அப்பெண்.
வண்டியை விட்டு நடக்க ஆரம்பித்ததுமே தெரிந்தது அவளுடைய வேகம். முகத்திலோ எவ்விதமான அலங்காரம் இல்லை. காதுகளிலோ கைகளிலோ எவ்விதமான அணிகலனும் இல்லை.
நடையிலோ தனி கம்பீரம், பார்வையிலோ ஒரு தீக்ஷண்யம். பொதுவாக ஆண்களுக்கு தான் நடையில் கம்பீரம் இருக்குமென்று யார் சொன்னார்கள்? இதோ இந்தப் பெண்ணின் நடையில் இருக்கும் கம்பீரம் அதற்கு குறைவானதாக இருக்கவில்லையே. அவள் படி ஏறி அந்தப் பக்கம் சென்றதுமே, கவி அவசரமாக உள்ளே வந்தாள்.
தினம் இப்படி செய்வது கவிக்கு பழக்கமான ஒன்று. அவள் இந்த அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், ஜன்னல் வழியாக அந்த வண்டியைப்பார்த்து, இதில் வருபவனை கணக்கு செய்தால், தினமும் ஆபீஸ் வர போர் அடிக்காது என்ற படியே யார் வருகிறார்கள்? என்று ஜன்னல் அருகே சென்றுப் பார்த்ததுமே,
அது ஒரு பெண் என அறிந்து தனக்கு தானே தலையில் தட்டிக்கொண்டு திட்டியபடியே தன் இடத்தில் சென்று அமர்ந்தாலும் அப்பெண்ணின் முகத்தில் இருக்கும் எதுவோ ஒன்று அவளை கவர்ந்து இழுத்தது.
அன்றிலிருந்து அந்த வண்டியின் சத்தம் கேட்டாலே போதும், எழுந்து ஜன்னலில் அருகில் சென்றுவிடுவாள்.
விமலா கூட கிண்டல் செய்வாள் தான்.. அதையெல்லாம் கவி பொருட்படுத்தாமல் தினமும் ஜன்னல் அருகே நிற்பதை வழக்கமாக வைத்திருந்தாள்.
இதையெல்லாம் நினைத்துப்பார்த்தபடியே இருந்த கவியின் தோளை தொட்டு அவளிடம் சென்று பேசுமாறு ஜாடை செய்தாள் விமலா.
அவளின் அருகே சென்ற கவிதாவிற்கு பேச தைரியம் வரவில்லை. அவளிடம் இருக்கும் ஒருவிதமான நிமிர்வு கவிதாவை பேச முடியாமல் செய்தது.
கவிதாவின் செய்கையிலேயே அவளின் பொய்மை தெரிந்ததால்., கவிதாவை அலட்சியமாகப் பார்த்தபடி “என்ன கவிதா, என்னோட ஐடி கார்ட்யே பார்த்துகிட்டு இருக்கீங்க? என்னோட பேர் உங்களுக்கு தெரியாதா? என் பேர் சமீரா @ சமீர்.” என்றாள்.
ஆம் அவள் மீராதான். ஆனாலும் அவள் இன்னும் சமீராவாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவள் ஏன் சமீர் என்ற பெயரில் பத்திரிகையில் எழுதுகிறாள்? அது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
“இல்லை ச..மீ.ரா. எனக்கு நீங்க உதவி செய்ய முடியுமா? அதை எப்படி கேட்கலாம்ன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்.”
“லுக் மிஸ் கவிதா, இப்படி பூசி முழுகாம, நேரா நிமிர்ந்து நின்னு உண்மையான காரணத்தை சொன்னால் மட்டும் தான் என்னால உங்களுக்கு உதவ முடியும்.”
அந்த குரலில் இருந்த கம்பிரத்திலும், அதை அவள் கேட்ட முறையிலும் மனதை பறிகொடுத்த கவிதா, மட மடவென்று எல்லாவற்றையும் ஒப்புவித்தாள்.
இதையெல்லாம் பார்த்த விமலா தலையில் அடித்துக் கொண்டாள். இவளை என்ன செய்தால் தகும் என்று கவிதாவை திட்டி கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில் ‘சமீராவை டெரர்ன்னு சும்மாவா சொல்றாங்க.. பாரு ஒரே கேள்வியில் எல்லாத்தையும் சொல்ல வச்சிட்டாளே.’ என்றும் மனதிலேயே பாராட்டிக்கொண்டாள் விமலா.
 
Top