Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MALARE MOUNAMAA? - 1

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம்: 1


காலை நேர பொழுதில் காஞ்சிபுரத்தில் இருக்கும் அந்த வீட்டிலிருந்து திருப்பல்லாண்டு சத்தம் கேட்டது. அந்த வீடு வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெகு அருகில் இருந்தது. அந்த மாடவீதியை சுற்றி இருக்கும் குழந்தைகள் எல்லோரும் இந்த வீட்டிற்கு வந்து தான் ஸ்லோகம் மற்றும் நாலாயிர திவ்யபிரபந்தம் கற்றுக்கொண்டிருந்தனர்.

தினமும் திருப்பல்லாண்டு சொல்லி தான் ஆரம்பிப்பது வழக்கமாகையால், அன்றும் குழந்தைகள் எல்லோரும் வந்ததும் தாமாகவே சத்தமாக திருப்பல்லாண்டை சேவித்துக்கொண்டிருந்தனர். இந்த சத்தம் தான் நம் எல்லோர் காதிலும் ஒலித்தது.

“அலமேலு, குழந்தேள் எல்லாம் வந்துட்டா, காபி சித்த நேரம் கழிச்சு தரியா?” என்றவாறே அடுக்களைக்குள் நுழைந்தார் வெங்கடேசன்.

“ஏண்ணா! சித்த இருங்கோ ஒரு வாய் காபி சாப்டுட்டு போய்டுங்கோ, நேக்கு இங்க தலைக்கு மேல வேலை இருக்கு.. நான் இன்னும் தளிகையே (சமையல்) ஆரம்பிக்கல.. காபி கடை முடியவே நாழியாகும் போல இருக்கு..“ என்றார் அலமேலு.

“சரிடி அலமு, சீக்கிரம் எடுத்துண்டு வா,” எங்க உன் நாட்டுப்பொண்ண காணோம்?”

“சுமி, இப்போ தான் ஜலம்(தண்ணீர்) இரைச்சுண்டு இருக்கா, இன்னும் கும்முட்டி அடுப்பு பத்த வைக்கல.. உங்க அம்மாக்கு அதுல தான சமைக்கணும்... அதை சுமி இன்னிக்கு பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டா.. ஜலம் இரைச்சுண்டு இப்போ வந்துடுவா.” என்றவாறே காபியை நுரைப்பொங்க அவரிடம் நீட்டினாள் அலமு.

அலமு கொடுத்த காபியை நன்றாக ஆற்றி ஆற்றி சாப்பிட்டுவிட்டு, “நோக்கு என் அம்மாவை சொல்லலைன்னா தூக்கமே வராதே, இப்போ நான் போய் குழந்தேளுக்கு சொல்லித்தரேன்” என்றவாறே அந்த இடத்தை விட்டு அகன்றார் வெங்கடேசன். இப்படி அவர் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசினால் என்ன ஆகுமென்று இத்தனை வருட அனுபவத்தில் அவருக்கு தெரியாதா, என்ன? அதான் இடத்தை காலி செய்தார் அவர்.

“மாமி!!” என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட தன் நாத்தனாரின் ஐந்து வயது மகனை அணைத்துக்கொண்டாள் சுமி என்னும் சுமித்ரா.

சுமித்ராவுக்கு கிருஷ்ணனுடன் திருமணம் முடிந்து பத்துவருடங்கள் ஆகிவிட்டன. கல்யாணம் ஆன முதல் வருடத்திலேயே ஒரு பெண்ணும் அடுத்து மூன்று வருட இடைவெளி விட்டு ஒரு மகனும் இருக்கிறார்கள். கிருஷ்ணன் காஞ்சிபுரத்திலேயே ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவில் மேனேஜர் ஆக வேலை செய்துக்கொண்டிருக்கிறார். அவளுடைய நாத்தனாரும் இதே தெருவில் தான் அவளுடைய புகுந்த வீட்டினருடன் வசிக்கிறார்.

“சமர்த்!!!!!(இவர் தான் கதையின் நாயகன்) என்னடா சந்தை (ஸ்லோகம்) கத்துக்க போல? இங்க என்ன பண்ணிண்டு இருக்க?” என்றாள் சுமி.

அவனிடமிருந்து எந்த பதிலும் வராததைக்கண்ட சுமி, அவன் முகத்தை நிமிர்த்தி பார்த்தாள் சுமி.

“ஓ!!!!!!! கொழந்தைக்கு கோபமா? எதுக்குன்னு நேக்கு புரியலையே? ஆனா இந்த கோபத்தை போக்க நேக்கு வழி தெரியுமே சமீர்”. என்றாள் சுமி.

மாமி தன்னை “சமீர்” என்று அழைத்ததும் புன்னகை பூக்க தன் மாமியை ஏறிட்டான் சமீர் என்னும் சமர்த்.

“மாமி, ஸ்வீட் மாமி” என்று மறுபடியும் கட்டிக்கொண்ட சிறுவனை, “சமீர் நேக்கு உள்ள வேலை இருக்கு, நீ இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?”

“இல்லை மாமி, அவா எல்லாம் திருபல்லாண்டு சேவிச்சுண்டு இருக்கா.. நீங்க கொல்லைப்பக்கம் போறத பார்த்தேன் அதான் உங்க பின்னாடியே வந்துட்டேன்” என்றவாறே மறுபடியும் கட்டிக்கொண்டான் சமீர்.

தன மகனை விட ஒரு வயது இளையவனான சமீரின் பேச்சைக்கண்டு சிரித்தாள் சுமி. ஐந்து வயது சிறுவனுக்கு இருக்கும் குறும்பும் அந்த வயது சிறுவர்களுக்கே இருக்கும் மழலை பேச்சையும் ரசித்தாள் சுமி.

சமீருடன் உள்ளே நுழைந்த சுமி அங்கே இருந்த தன் கணவர் கிருஷ்ணனை பார்த்து புன்னகைத்தாள்.

“சுமி, எப்ப பாரு இவன் உன் கூடவே சுத்திண்டு இருக்கான், பேசாம இவனை நோக்கே மாப்பிள்ளை ஆக்கிடலாம்னு பார்த்தா நம்ம பொண்ணு மூத்தவளா இருக்கா.. என்ன பண்ணலாம்?” என்று யோசிப்பதை போல் பாவனை செய்தவர், திடீரென்று நினைவு வந்தவராக “பேசாம அடுத்த குழந்தைக்கு ஏற்பாடு பண்ணிடலாம் சுமி!!” என்று தன் மனைவியை காதல் பார்வை பார்த்தார் கிருஷ்ணன்.

“பெருமாளே! கொழந்த முன்னாடி என்ன பேச்சு?” என்று தலையில் அடித்துக்கொண்டே உள்ளே சென்றாள் சுமி.

“மாமா, மாமிட்ட நன்னா திட்டு வாங்கிண்டேளா?”

“டேய்! குட்டி படவா, பெரியவா வாய பார்த்துண்டு நிக்காம.. தாத்தாட்ட போய் சந்தை கத்துக்கோடா சமர்த்”. என்றார் கிருஷ்ணன்.

“மாமா, என்னை நீங்க மாமி மாதிரியே சமீர் ன்னு கூப்பிடுங்கோ.”

“சரிடா பெரியமனுஷா சமீர்” என்றபடியே அவனை தூக்கிக்கொண்டு ஸ்லோகம் எடுக்கும் அறைக்குள் சென்றார் கிருஷ்ணன்.

காலை நேர பரபரப்பில் இருந்த அந்த வீட்டில் இன்னும் பரபரப்பூட்ட அந்த வீட்டில் இருக்கும் தொலைபேசி சத்தம் போட்டது.

“சுமி, அவா எல்லாம் உள்ள போய்ட்டா போலிருக்கு, நீ போய் சித்த இந்த போனை எடுக்கறியா?” என்று அழைத்தாள் அலமேலு.

“இதோ மா, நானே அதை எடுக்கத்தான் போயிண்டு இருக்கேன்” என்றபடியே தொலைபேசியை எடுத்து காதில் வைத்தாள் சுமி.

“ஹலோ” என்ற தன் தங்கை பவித்ராவின் குரல் கேட்டு மிகுந்த உற்சாகத்துடன் தன் பேச்சை ஆரம்பித்தாள் சுமி.

“பவி, சொல்லுடி எப்படி இருக்க? ஆத்துல எல்லாரும் சௌக்கியம் தானே? மாப்பிள்ளை எப்படி இருக்கார்?”

“ஐயோ! சுமிக்கா, மெதுவா ஒண்ணொண்ணா கேளு பதில் சொல்றேன்”. என்றபடியே சிரித்தாள் பவித்ரா.

“போடி, எப்படி இருக்கா குட்டி பொண்ணு?”

“அக்கா, எல்லோரும் நன்னா இருக்கோம், இப்போ நான் மெட்ராஸ்க்கு என் நாத்தனார் ஆத்துக்கு வந்து இருக்கேன், இங்க காலைல சாப்டுட்டு கிளம்பி அங்க வரலாம் ன்னு இருக்கோம் அதை சொல்லத்தான் கால் பண்ணினேன்.”

“வாடி பவி, நீயும் மாப்பிள்ளையும் மட்டும் தான் வந்து இருக்கேளா? உன் நாத்தனாரையும் அழைச்சுண்டு வாடி.”

“ம்ம் ஆமாம் க்கா நாங்க தான் வந்து இருக்கோம், என் நாத்தனார் இப்போ வரலை, அவளுக்கு நாள் தள்ளி போய் இருக்கு அவளை பார்த்துட்டு அப்படியே உன்னை பார்க்கலாம்ன்னு தான் நாங்க வந்து இருக்கோம்.”

“காயத்ரி உண்டாயிருக்காளா? ரொம்ப நல்ல விஷயம், பெருமாள நன்னா சேவிச்சுக்க சொல்லு.. நான் அப்றமா அவ கிட்ட பேசறேன் நீங்க கிளம்பி வாங்கோ, இப்போ நேக்கு உள்ள வேலை இருக்குடி வைச்சுடவா?”

“ம்ம் சரிக்கா, அத்திம்பேர அப்புறம் ஆத்துல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லுக்கா.” என்றபடியே போனை வைத்தாள் பவித்ரா.

“அம்மா, என் தங்கை பவித்ரா தான் கால் பண்ணினா, அவ இன்னிக்கு இங்க வராளாம்.” என்றபடியே அன்றைய வேலைகளை தொடர்ந்தாள் சுமி.

பவித்ரா தன் கணவர் கண்ணனுடனும் தன் ஒரு வயது பெண் குழந்தை மீரா(இவள் தான் கதையின் நாயகி) வுடனும் திருச்சியிலிருந்து சென்னைக்கு அன்று காலையில் தான் வந்திருந்தாள்.

“ஏண்ணா, அக்காக்கு கால் பண்ணிட்டேன் நாம சாதம் சாப்டுட்டு புறப்படவேண்டியது தான்” என்றாள் பவித்ரா.

“மன்னி, சுமிக்கா ஆத்துல எல்லாரும் சௌக்கியமா இருக்காளோன்னோ? என்றபடியே அங்கே வந்தாள் காயத்ரி.

“எல்லாரும் நன்னா இருக்கா காயத்ரி, அக்கா உன்னை ரொம்ப விசாரிச்சதா சொல்ல சொன்னா, அப்பறமா உன்னண்ட பேசறேன்னு சொன்னா”.

“சரி மன்னி, வாங்கோ சாப்பிடலாம்.”

“நீ உட்கார்ந்துக்கோ காயு, நான் அவாளுக்கு பரிமாறிட்டு வரேன்.”

“இல்ல மன்னி, நீங்களும் சாப்பிடுங்கோ... நானே எல்லாருக்கும் பரிமாறிடறேன்” என்றபடியே வாழை இலையை எடுத்தாள் காயத்ரி.

காயத்ரியிடமிருந்து இலையை வாங்கிய பவித்ரா, “நாம அவாளுக்கு போட்டுட்டு சாப்பிடலாம்.. ரெண்டு பேரும் சேர்ந்தே பரிமாறிடலாம்.”

“சரி மன்னி”.

“இன்னிக்கு என்ன தளிகை(சமையல்)?” என்றான் கண்ணன்.

“பொரிச்சகொழம்பு, பீன்ஸ்பருப்புசிலி, வாழைக்காய் கரமேது(பொரியல்), சாத்தமது(ரசம்), அப்பளம், வடை, திருக்கன்னம்(பாயசம்) அப்பறம் மாங்காய் பச்சடி” என்றாள் காயத்ரி.

“பவி, நீயும் சீக்கிரம் சாப்ட்டுடு, நாம எம்பெருமானார(ஸ்ரீராமானுஜர்) சேவிச்சுட்டு உங்க அக்கா ஆத்துக்கு போலாம்” என்றான் கண்ணன்.

“மன்னி நீங்களும் உட்காருங்கோ.. நாழியாயிடுத்து” என்றபடியே பவித்ராவுக்கும் ஒரு இலையை போட்டாள் காயத்ரி.

பவித்ரா சாப்பிட உட்காரும் சமயம் குழந்தை மீரா அழுதாள்.

குழந்தையை தூக்கி கொண்ட பவித்ரா, “நீங்க சாப்ட்டு வந்து கொழந்தையை பார்த்துக்கோங்கோ, நான் அப்றமா சாப்பிடறேன்” என்றபடியே வேறு அறைக்குள் புகுந்தாள்.

அறைக்குள் நுழைந்ததும், “மீராகுட்டி எதுக்கு அழறா? அம்மா கிருஷ்ணர் கதை சொல்லவா? என்று ஆரம்பித்து கிருஷ்ணரின் கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

மீரா குட்டி அழுகையை நிறுத்தி அம்மாவை பார்த்து சிரித்தது. கதை ஒன்றும் புரியாவிட்டாலும் தன் அம்மா சொல்லும் அழகில் மயங்கி சிரித்தது. குழந்தை சிரிப்பதை பார்த்த பவித்ரா குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்து விட்டு கதையை தொடர்ந்தாள்.

பவித்ரா கதை சொல்லும் அழகை பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன். இவள் தான் எவ்வளவு அழகாய் இருக்கிறாள்? கண்களை உருட்டி கதை சொல்லும்போது கூடவே சேர்ந்து அவளின் ஜிமிக்கி ஆட, குழந்தை சிரிப்பதை பார்த்ததும் தன் முல்லைபற்கள் தெரிய இவளும் சிரிக்க, இதையெல்லாம் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை கண்ணனுக்கு. குழந்தை மீராவும் அவளின் ஜாடையில் இருப்பதில் ரொம்ப பெருமை அவனுக்கு.

கண்ணன் வந்ததை கவனிக்காமல் தன் கதையை மேலும் தொடர்ந்தாள் பவித்ரா.

மீராகுட்டி, “ப்ப்பா” என்று சொன்னதும் தான் திரும்பி கண்ணனை பார்த்தாள் பவித்ரா.

“வந்துட்டேளா, இப்போ எதுக்கு இந்த பார்வை?, நமக்கு கல்யாணம் ஆகி நாலு வர்ஷம் ஆறது.. மறந்துட்டேளா?”

கண்ணன் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்த வண்ணம் இருந்தான். இன்று என்னவோ அவள் மிகவும் அழகாக இருப்பது போலிருந்தது. அவள் அணிந்திருந்த அடர் மெரூன் நிற மடிசார் புடவை அவளை மிகவும் அழகாக காட்டியது. தங்கையின் புகுந்த வீட்டிற்கு வந்ததை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் கண்ணன்.

இவன் இப்படி பார்த்துக்கொண்டிருந்ததை ரசித்துவிட்டு குழந்தையை எடுத்து அவனின் கையில் திணித்துவிட்டு அவனை பார்த்து புன்னகைத்தப்படியே வெளியே சென்றாள் பவித்ரா.

குழந்தையை கையில் வாங்கிய கண்ணனின் முகத்திலும் புன்னகை விரிந்தது.

“மன்னி, வாங்கோ சாப்பிடலாம்”.

“இதோ வந்துட்டேன்”

இருவரும் ஏதோதோ பேசியபடியே சாப்பிட்டார்கள் இவர்களுக்கு காயத்திரியின் மாமியார் பரிமாறினார்.

சாப்பிட்டு முடித்ததும் வெத்தலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள் தம்பதிகள் இருவரும்.

“மாமி, நாங்க கிளம்பறோம் அஞ்சாம் மாசம் வந்து அழைச்சுண்டு போறோம்” என்றாள் பவித்ரா.

இருவரும் கிளம்ப வாசலுக்கு வந்த போது காயத்ரிக்கு ஏதோ தோன்ற கிட்டே வந்து பவித்ராவை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பவித்ரா, “காயத்ரி என்னமா இப்படி ஓடி வர, இந்த மாதிரி சமயத்துல ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும் சரியாம்மா” என்றாள்.

“சரி மன்னி”

எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர்.

கண்ணனும் பவித்ராவும் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறினார்கள். பஸ்சில் கடைசி இருக்கை தான் கிடைத்தது.

பஸ் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி அந்த பஸ்சை முந்தும் பொருட்டு வேகமாக வந்ததால்..
பஸ்சின் டிரைவர் பஸ்சின் வேகத்தை குறைக்க.. அதை லாரி டிரைவர் கவனிக்காத காரணத்தால் அந்த பஸ்சின் பின்னாலேயே இடித்தது. அரத பழசான அந்த பஸ் லாரியின் இடி தாங்காமல் பின்னால் இருந்த தகரம் உடைந்து திறந்தது.

திறந்த வேகத்தில் பவித்ரா குழந்தையுடன் கீழே எறியப்பட்டாள். அந்த நிலையிலும் தன்னிச்சை செயலாக குழந்தையை இறுக்க அணைத்து உடம்பை குறுக்கிக்கொண்டாள். கண்ணனுக்கோ தலையில் அடிபட பஸ்சின் உள்ளேயே மயங்கி சரிந்தான்.

பகல் நேரமாக இருந்ததால் அங்கு இருந்த அனைவருமே உதவிக்கு வந்தனர். அதில் இப்ராஹிமும் ஒருத்தர். ஆம்புலன்ஸ் வரும் வரை தங்களால் முடிந்த உதவியை செய்தனர்.

தூக்கி எறியப்பட்ட பவித்ரா மயக்கத்தில் இருந்ததால் அவள் கைகளுக்குள் இருந்த மீரா அழுதபடியே தவழ்ந்து ரோட்டிருக்கு வந்தது. இதை யாருமே கவனிக்கவில்லை.

தவழ்ந்து தவழ்ந்து பவித்ராவை விட்டு தள்ளி சென்றது. அருகே தனக்கு தெரிந்த முகம் எதுவுமே இல்லாமல் இருந்ததால் அழுகையின் சத்தம் கூடியது.

இதை எதேச்சையாக கவனித்த இப்ராஹீம் அந்த குழந்தையை தூக்கி சுற்றும் முற்றும் பார்த்தார். குழந்தையின் பெற்றவர்கள் யாரென்றே தெரியாத காரணத்தால் அவரே தூக்கி வைத்து சாமாதனப்படுத்திகொண்டே அங்கே இருந்தவர்களுக்கு உதவி செய்தார்.

“அய்யா, நீங்க உங்க குழந்தையை வச்சுக்கிட்டு இங்க இருக்க வேண்டாம், நீங்க கிளம்புங்க பாருங்க புள்ள எப்படி அழுது.. வீட்டுக்கு கூட்டிப்போங்க..” என்று யாரோ ஒருவர் சொன்னதும் அதிர்ந்தார் இப்ராஹீம்.

தங்களுக்கு குழந்தையில்லையே என்ற ஏக்கம் அவருக்கும் அவருடைய மனைவி பேகத்திற்கும் நிறையவே உண்டு. யாரோ ஒருவர் இது உங்க குழந்தை என்றதும் ஒரு நிமிடம் அதிர்ந்த இப்ராஹீம், இது தான் அல்லாவின் விருப்பமோ என்று நினைத்துவிட்டு குழந்தையுடன் தன் வீட்டிற்கு சென்றார்.

வீட்டின் உள்ளே சென்று தன் மனைவி பேகத்திடம் எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டு அந்த குழந்தையை அவளிடம் கொடுத்தார்.

மிகுந்த சந்தோஷத்துடன் குழந்தையை வாங்கிக்கொண்ட பேகம் “ஏங்க, இந்த குழந்தையோட அப்பா அம்மா வந்து கேட்டா கொடுத்துடலாமா?” என்றார்.

“இல்லை பேகம் இது இனிமே நம்ம குழந்தை தான், நீ இன்னிக்கே குழந்தயை எடுத்துக்கிட்டு கோயம்புத்தூர்க்கு போயிடு, நான் இங்க எல்லா வேலையும் முடிச்சுட்டு ஒரு மாசம் கழிச்சு அங்க வந்துடுவேன்.. நாம இனிமே அங்கேயே இருந்திடலாம்.”

“ஏங்க இது தப்பில்லையா?”

“எனக்கு தெரியல பேகம், ஆனா இந்த குழந்தை நம்ம குழந்தை தான்.”

“சரிங்க வரது வரட்டும்ங்க, நம்ம பார்த்துக்கலாம்”.

இருவரும் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர். குழந்தை பெண் குழந்தை என்று அறிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டு அவளுக்கு “சமீரா” என்று பெயரிட்டன
ர்.
 
Top