Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-20

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம்-20

ஒவ்வொரு விடியலும்,அன்றைய விலாசத்தை மட்டுமே சொல்கின்றது...நடக்க இருக்கும் நிகழ்வுகள் பற்றிய விபரங்களை தருவதுமில்லாமால்,பெறுவதுமில்லாமல்,தன்னை புதியதாகவே வைத்துக் கொள்கிறது—மனிதற்கு பரிசளிப்பதற்காக

...இல்லையென்றால்,’’கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே’’ என்று பூரித்துப் போய் கிடந்த தாமரையின் செவிகளில்,மகளின் மன மலர்வில்,தொலைந்து போன தனது மகிழ்ச்சியை தேடிக் கண்டடைந்த சரசுவின் செவிகளில்,இப்படியொரு இடி செய்தி வந்து விழுமா என்ன?

''ரவி வர்மாவிற்கு மின்சார விபத்து....மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்''

காதுகளுக்கு வந்து சேர்ந்த ஒற்றை வரி செய்தியில்,தாய் மகள் இருவருக்கும்,உயிர் போய்த்தான் திரும்பி வந்தது...எந்த நிலையில் இருந்தாலும்,வந்ததை எதிர் கொள்ள வேண்டுமே...! நந்தினி,தாமரை இருவர் குடும்பமும் மொத்தமாய் மருத்துவமனைக்கு ஓடியது..!ஐ.சி.யு வில் கிடத்தப்பட்டு இருந்தான் ரவி வர்மா.
..கண்ணாடி வழியே எட்டிப்பார்த்து விட்டு கதறினாள் தாமரை... என்ன நடந்தது? எப்படி நடந்தது? இப்போதைய நிலை என்ன? என்ற எல்லோரது படபடப்பான கேள்விகளுக்கும் ,அழுகைக்கு நடுவே வெடித்து பதில் சொன்னார் ரவியின் அப்பா தினகரன்...அதை வைத்து ஒருவாறாக எல்லோரும் புரிந்து கொண்டார்கள்.

..காலையில்,அம்மாவுக்கு உதவியாக ,வாசல் கேட்டில் இருந்த பால் பாக்கெட்டை எடுக்கப் போனவனுக்கு,இரும்பு கேட்டில்,மழையின் காரணமாக,தவறுதலாக பாய்ந்து கொண்டிருந்த,மின்சாரம் தாக்கி,அலற,வாசலில் நின்று கொண்டிருந்த எதிர் வீட்டுக்காரர் ஓடி வந்து,கட்டையால் அடித்து ,அவனை விடுவித்து இருக்கிறார்..மூர்ச்சை அடைந்தவனை இங்கே கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள்...

கடவுளே...வாழ்க்கையில் விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது?ரவி வர்மாவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து உண்டா?
‘’உயிருக்கு ஆபத்து இல்லேனுட்டாங்க...ஆனா,கை...’’என தினகரன் நடுங்கிய குரலில்,இழுத்த இழுப்பில்,ஐயோ என கத்தியபடி மயங்கினாள் ரவியின் அம்மா லோகாம்பாள்...தண்ணீர் தெளித்து எழுப்பி, ஆறுதலும் தேறுதலும் சொல்லி உட்கார வைத்தார்கள்....தொடர்ந்தார் தினகரன்....

‘’கரண்ட் ஷாக்ல,முன் கை ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்கு....அதோட,கட்டையால அடிபட்டு இருக்கறதால, முழங்கைக்கு கீழே அழுகக் கூடிய வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொல்றாரு’’
‘’அதனால’’
‘’அதனால,முழங்கைக்கு கீழே உள்ள பகுதியை,அகற்ற வேண்டி இருக்கும்னு சொல்றாரு...உறுதியா இப்ப எதுவும் சொல்ல முடியாது...கடவுளை நல்லா பிரே பண்ணிக்கொங்க அப்டின்னு டாக்டர் சொல்றாரு’’
‘’எந்த கையில அடிபட்டு இருக்கு?’’
‘’வலது கை’’
தாமரை வாய் திறந்து எதுவும் பேசவில்லை...மற்றவர்கள் பேசுவதை கேட்டு புரிந்து கொண்டாள்..வயிற்றில்,அமிலக் கத்தி சொருகியது போல சுருக்கென்றது.
...தொண்டை உலர்ந்து போனது....மனம் அரற்றியது....ஐயோ!என் இறைவா!என்னுடன் கை கோர்த்த,எனக்கு பரசளித்த,எனக்கு ஆறுதலளித்த,எனக்காகத்தட்டிய அந்த கை இருக்காதா என் கண்ணனுக்கு?இருண்ட எதிர்காலம் கண்முன் விரிந்தது--தாமரைக்கு.

..ரவியின் பெற்றோரும்,தாமரையும் மட்டும் உள்ளே சென்று பார்த்து வர அனுமதிக்கப்பட்டனர்...இரவு வரை மருத்துவமனையில் இருந்து விட்டு,என்ன செய்வதென்று தெரியாமல்,வீடு திரும்பி விட்டனர் இரு குடும்பத்தினரும்....வீட்டிற்குள் வந்ததும்,கதவை தாழிட் டு விட்டு வாய் விட்டு அழுதாள் சரசு....சுவரில் சாய்ந்து அமர்ந்து,கண்ணீர் வடித்தாள் தாமரை.....தாயை தேற்ற தெம்புமில்லை ...மனமுமில்லை ..அவளுக்கு....

‘’நானெல்லாம் வாழ்க்கையில சந்தோசமே படக்கூடாது போல...சொல்லி சொல்லி அடி விழுதேடி தாமரை’’ என புலம்பி அழுதாள்...தைரியமான மகள் கண்ணீர் வாடிப்பதையும் அவளால் தாங்க முடியவில்லை....

‘’ஒரு வேளை ,என்னோட ராசிதான் அவரையும் படுக்கையில தள்ளிடுத்தோ என்னவோ’’ –தாமரை...

இதை கேட்டு பெரும் குரலில் அழுதாள் சரசு....இப்படியே தாய் மகள் இருவரும் அரை மணி அழுது தீர்த்தார்கள்....அழுகையும் ஒரு ஆறுதல்தானே....மன அழுத்தம் சேராமல் பார்த்துக் கொள்ளும்...கலங்காதவள் ,கண்ணீர் விட்டதும்,மனம் துடைத்து விட்டாற்போல பளிச்சென இருக்கவும்,ஒரு சிந்தனை எழுந்தது..
‘’வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை...
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்,
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்..’’

பாடல் வரிகள் நினைவுக்கு வர, படக்கென்று எழுந்து,அம்மாவின் தோளை தொட்டு எழுப்பினாள் தாமரை ... ஆறுதல் சொன்னாள்....பால் சூடு செய்து,தானும் குடித்து ,அம்மாவுக்கும் தந்தாள்....மாடியில் பெரியப்பா வீட்டிலும்,வெகு நேரம் வரை பேச்சு சத்தம் கேட்டு கொண்டிருந்தது.
..இரவு பனிரெண்டு மணிக்கு மேல்,எல்லோரும் படுக்கையில் படுத்தார்கள்....ஆனால் ,தூங்கினார்கள் என்று சொல்ல முடியாது...விடிந்தது ....காலையிலேயே பெரியப்பா குடும்பம் கீழிறங்கி வந்தது...ஒருவர் முகத்தை ஒருவரால் பார்க்க,சகிக்க வில்லை....
‘’கல்யாண வேலைகளைப் பார்க்க வேண்டிய நேரத்துல,கடவுள் நம்மளை ஆஸ்பத்திரிக்கு அலைய வச்சுட்டான்...நாம பார்க்காதது இல்ல...இருந்தாலும்,ஒவ்வொரு கஷ்டமும் மலையாத்தான் தெரியுது’’ என்றார் ராகவேந்த்ரா...
விஜயா ஆறுதலாக சரசுவின் கையை பிடிக்க,நந்தினி எதுவும் பேசாமல் தாமரையின் அருகில் போய் நின்றாள்...தாமரை அனைவருக்கும் காபி போட்டு குடுத்தாள்...மறுக்க மனமில்லாமல் அனைவரும் குடித்தனர்...
‘’சரசு’’
‘’சொல்லுங்கோண்ணா’’
‘’நீ இப்பிடி அழுதுகிட்டே இருந்தா நான் சொல்ல வந்த விஷயத்தை எப்பிடி சொல்றது?’’
கண்கள் துடைத்தாள் சரசு.....
‘’நடக்கக் கூடாதது நடந்துருச்சு....மேற்கொண்டு நடக்க வேண்டியதை பேசுவமா’’
‘’சொல்லுங்க’’
‘’நம்ப தாமரைக்கும்,ரவிவர்மாவுக்கும் கல்யாணம் பண்றதைப் பத்தி அவாகிட்ட....’’
‘’அதுக்கு இப்போ என்ன அவசரம்...ஆற அமர பேசிக்கலாமே’’
‘’கல்யாணத்தை நடத்தறதா இருந்தா,நீ சொல்றப்புல,மெதுவா பேசிக்கலாம்...ஆனா,நிறுத்தறதா இருந்தா இப்பவே பேசியாகனும்ல’’
பெண்கள் அதிர்ந்தார்கள்....தாமரை அச்சப்பட்டாள்...எங்களைப் பிரிக்கும் எண்ணமெல்லாம் உங்களுக்கு எப்படி வருகிறது?

மனதுக்குள் குமைந்தாலும்,மவுனமாக உரையாடல்களை கேட்டாள்...
‘’நிச்சயம் பண்ணின கல்யாணத்தை நிறுத்தறது,வயித்துல கத்தி சொருகறாப்புல,வலியான ஒண்ணுதான்...வேற வழியில்லாமத்தான் நான் இதை எடுத்துப் பேசறேன் சரசு...ராத்திரி பூரா பொட்டு தூக்கமில்ல ....நன்னா யோசனை பண்ணித்தான் இந்த முடிவுக்கு வந்தேன்...காலையில ரவியோட அப்பா ஃபோன் பண்ணினார்...டெஸ்ட்டெல்லாம் முடிஞ்சு,ரவிவர்மாவுக்கு கையை எடுக்கணும்னு முடிவு பண்ணிட்டாளாம்...ரொம்பப் பரிதாபம்தான்...வாழ வேண்டிய பிள்ளை..கடவுன் இரக்கமில்லாம இப்பிடியொரு தீர்ப்பை எழுதிட்டான்....ஆனா,அவருக்காக,இரக்கப்படலாமே தவிர பொண்ணைக் குடுக்க முடியாதுல்ல...அதனால,ரெண்டு கல்யாணத்துல ஒரு கல்யாணத்தை நிறுத்திடறோம்னு அவா கிட்ட சொல்லிடலாம்,,ப்ச்....ரெண்டு ஜோடியை உக்கார வச்சி,ஊர் கூட்டி நிச்சயம் பண்ணினது திருஷ்டி பட்டாப்புல ஆயிடுத்து....’’

சரசுவும்,விஜயாவும் வாய் பொத்தி அழ....தாமரை மனம் உடைந்தாள்....பெரியப்பாவின் பேச்சுக்கு எவரும் எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை...அப்படியானால் வீட்டில் எல்லோரும் இந்த முடிவை ஏற்கிறார்களா?ஏற்க முடியாது என்னால்..
..நான் வாய் திறந்து பேச வேண்டிய நேரம் வந்து விட்டது...எனக்காக மட்டுமல்ல,ரவிவர்மாவுக்கும் சேர்த்து நான்தான் பேசியாக வேண்டும்...
‘’பெரியப்பா...உங்க வார்த்தைகளை நான் மதிக்கிறேன்...என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கோ.....இதே விபத்து,என் கழுத்துல தாலி ஏறினப்புறம்,நடந்திருந்ததுன்னு வைங்கோ...அப்போ நீங்க என்ன செய்வேள் ?’’ கன்னத்தில் வழியும் கண்ணீரோடு கேட்டாள் தாமரை..’’
‘’அது விதிம்மா’’
‘’இதுவும் அதேதான் பெரியப்பா...ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னே, ரவிவர்மாவுக்கு இந்த விபத்து நடந்திருந்ததுன்னு வைங்கோ...அப்ப,நமக்கு எந்த சம்பந்தமும் இருந்திருந்திருக்காது.....!கேள்விப்பட்டா கூட, ஒரு சின்ன வருத்தத்தோட, கடந்து போயிருப்போம்...ஆனா,இப்ப,நம்ம ரெண்டு குடும்பமும் அறிமுகமாகி,எங்கேஜ்மெண்ட் வரைக்கும் வந்த பிறகு நடக்குதுன்னா,அது நமக்கு ஏதோ ஒரு செய்தி சொல்ல வருதுன்னுதானே அர்த்தம் ?’’

‘’நீ பேசறதுல்லாம் கரெக்டுதான்...விதி சொல்றது இருக்கட்டும்..ஊர் என்ன சொல்லும்னு யோசிச்சிப் பாரு...நடந்த விஷயம் ,நம்ம மனக்குழப்பம் இதெல்லாம் யாருக்கும் தெரியாது...ராகவேந்த்ரா தன் பொண்ணை ,இப்பிடி கையில்லாத பையனுக்கு கட்டி வைப்பானா அப்டின்னு ஈஸியா கமெண்ட் பண்ணிட்டு போயிடுவாங்க....உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாதும்மா’’ என்று ராகவேந்த்ரா தந்தரப்பு நியாயத்தை சொல்ல,
‘’மத்தவங்களை விடுங்க பெரியப்பா...கமெண்ட் அடிக்கற வங்க எந்த காலத்திலேயும் நமக்கு ஹெல்ப் பண்ணப் போற தில்ல ...மைண்ட்ல,பிக்ஸ் பண்ணின ஒரு இமேஜை எப்பிடி வெறுக்க முடியும் சொல்லுங்க...’’

வாய் திறந்தாள் சரசு...
‘’தாமரை...அம்மாடி...பெரியப்பா சொல்றதுதான் சரின்னு தோணுதுடி எனக்கும்’’
எரிச்சலானாள் தாமரை...
‘’அம்மா....மனசாட்சியோட யோசிம்மா...ரவிவர்மாவை நீங்கதான் எனக்கு அறிமுகப்படுத்தினீங்க...!இப்ப கல்யாணம் தேவையான்னு நான் யோசிச்சப்ப கன்வின்ஸ் பண்ணி என்னை சம்மதிக்க வச்சீங்க...பேச சொன்னீங்க..பழக சொன்னீங்க...எங்கேஜ்மெண்டும் பண்ணி வச்சி மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்ப வேணாங்கறீங்க...!நீங்க நினைச்சது எல்லாத்தையும் எழுதறதுக்கும் அழிக்கறதுக்கும் என் மனசு என்ன பிளாக் போர்டாம்மா..?’’ என கொதித்தாள் தாமரை..

.அவள் கேள்வியின் நியாயத்தை உணர்ந்து தலை குனிந்தாள் சரசு..என் விதியின் மிச்சம் என் மகளையும் துரத்துகிறதா என் அழத்தொடங்கினால் மீண்டும்...ராகவேந்த்ராவை பொறுத்த அளவில் அவர் தாமரையின் பேச்சிலும்,முக பாவத்திலும் மிரண்டு போனார்...அவர் அவளை அப்படி பார்த்ததில்லை... மகளின் மனதை எக்ஸ்ரே எடுத்ததுபோல் புரிந்து கொண்டார்...இறங்கி வந்தார்...

‘’தாமரை...பைனாலா நீ என்னதான் சொல்ல வறே’’
‘’‘தயவு செஞ்சு ஆஸ்பத்திரிக்கு போயி இது மாதிரி எதுவும் பேசிடாதீங்க...கை போன ஒரு துன்பமே போதும்...வேற எந்த அதிர்ச்சியையும் அவருக்கு தந்துடாதீங்க ப்ளீஸ்...ரவிவர்மாவோட கஷ்டத்தை,அவஸ்தையை மாத்தணும்னுதான் நினைக்கறேனே தவிர,அவரையே மாத்தணும்னு நினைக்கலை...நினைக்கவும் மாட்டேன்’’ என்ற தாமரையின் உறுதியான பதிலை கேட்டு அனைவரும் அமைதியாகி விட, நந்தினி வேகமாக வந்து தாமரையைக் கட்டிக்கொண்டு அழுதாள்...

‘’பாவி! என்னோட வீதியை குறுக்க வந்து விழுந்து நீ வாங்கிக்கிட்டேயடி..தாங்க முடியலடி தாமரை..என்னால தாங்க முடியலை...’’ என்று பல வாறாக புலம்பி அழுதவள்,கண்களைத் துடைத்துக் கொண்டு இவ்வாறு சொன்னாள்..

‘’தாமரை,,,யு ஆர் கிரேட்...!உன்னைப்போல பெருந்தன்மையா யாராலும் யோசிக்க முடியாதுடி...ஆனா,நீ எடுத்ததுதாண்டி சரியான முடிவு...திடமான முடிவு...!நீ சொன்னாப்புல,இப்பதான் நாம அவருக்கு துணையா நிக்க வேண்டிய நேரம்...தாமரை...நீ ரவிவர்மாவுக்கு துணையா இரு...நாங்க உனக்கு பக்க பலமா இருப்போம்....தூணா நிப்போம்...இது சத்தியம்டி’’ என்றுசொல்லி தங்கையை இழுத்து மார்போடு அனைத்துக் கொண்டாள் நந்தினி...ஒரே குடும்பத்தில் ,ஒன்றாக வளர்ந்த பாசம் அவ்வளவு எளிதில் விட்டுப் போய்விடுமா என்ன?











 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கண்ணம்மாள்ஸ்ரீதர் டியர்
 
Last edited:

Advertisement

Top