Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

maayam seithaayadi-14

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் -14
மாமியார் ராஜத்தையும்,மாமியாரின் அண்ணன் மகள் ஷோபனாவையும்,வாசலில் வந்து வரவேற்றாள் சிவசங்கரி...முன்பாக,அவர்களை பேருந்து நிலையம் சென்று காரில் அழைத்து வந்திருந்தான் ஜெயராம்.
‘’சங்கரி..நல்லாருக்கியாம்மா...பிள்ளைக நல்லாருக்காவளா ‘’ படியேறும் போதே மருமகளை விசாரிக்கத்தொடங்கி விட்டாள் ராஜம்,..
‘’ஆமா அத்தை...எல்லாரும் நல்லாருக்கோம்...நீங்கதான் காய்ச்சல் வந்து கஷ்டப்பட்டுப் போனீக....இல்லத்த’’ என்றவள் மாமியாரின் கையில் இருந்து பைகளை வாங்கினாள்..
‘’அட...ஆமாம்மா...ஊருல அம்புட்டு பேருக்கு மாயக் காச்சால்தான்...ஒரு தலையும் தப்பலையே...நம்மளை மட்டும் என்ன வச்சா பாக்கும்...ஊருக்குள்ளது நமக்கு’’ என்றபடி பேரப்பிள்ளைகளை இழுத்து அனைத்து முத்தமிட்டாள்...
‘’என் கண்ணு என் தங்கம்,நல்லா மெலிஞ்சு வளர்ந்துட்டீக....படிப்பு ரொம்பவாப்பு ....’’
ஜெயராமும் சிவசங்கரியும் சிரித்துக் கொண்டார்கள்...
‘’இவளைத் தெரியுமாடா ராசா’’ என ஷோபனாவைக் கை காட்டி கேட்க,தெரியுமென தலையசைத்தான் யுவன்...
‘’யாருன்னு சொல்லு பாப்பம்’’
‘’ஒரு ஆன்‌ட்டி..இவங்களை ஊர்ல பாத்து இருக்கேன்’’
‘’கழுத...ஆன்ட்டி இல்லடா....சித்தி...சித்தி பேரு ஷோபனா’’
‘’ஷோபனா சித்தி’’என்று யாமினி அழைக்க,ஏக மகிழ்ச்சி ஷோபனாவிற்கு...உள்ளே அழைத்து வந்து ,சிறிது களைப்பாறிய பின்,அனைவரையும் அமர வைத்து உணவு பரிமாறினாள் சிவசங்கரி...வத்தல் குழம்பு,ரசம்,அவியல்,அப்பளம்,மாங்காய் ஊறுகாய்,கெட்டி தயிர்,மாம்பழம்.....ருசித்து சாப்பிட்டார்கள்...
‘’சங்கரி,நீயும் உக்காரும்மா’’-ராஜம்.
‘’இல்லத்த..இலை பார்த்துசரியாப் பரிமாற முடியாது...நீங்க சாப்டுங்க...நான் பொறுமையா சாப்ட்டுக்கறேன்’’
‘’சாப்பாடு அருமைக்கா’’-ஷோபனா...
‘’ஆமா சோபனா...சங்கரி கைப்பக்குவத்துக்கு ஒரு கைப்பிடி சோறு கூடுதலாத்தான் இறங்கும்..’’
‘’பாதி சமையல் அத்தைக்கிட்ட கத்துகிட்டதுதான்’’
‘’அதெல்லாம் சும்மா....இப்ப இருக்கற நிலைமைக்கு நான்தான் உன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கணும்...கரண்டியில ஒண்ணுமில்ல,கையில இருக்கு பக்குவம்’’
‘’ஊர்ல மாமா,சித்தி வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களாமா’’
‘’ஆமாம்ப்பா....சித்தியும் உன் வீட்டுக்கு வரனும்னு சொல்லிட்டு இருக்கா...
‘’வர சொல்லும்மா...வந்து பத்துநாள் இருக்கட்டும் ‘’
‘’ஆமா...எல்லாருக்கும் பாடும் சோலியும் சரியா இருக்கு...சங்கரி...ஊர்லெர்ந்து செவப்பு அவல் கொண்டு
வந்திருக்கேம்மா ....பிள்ளைகளுக்கு ஏதாவது தீம்பண்டம் செஞ்சு குடு..’’
‘’எதுக்கு அத்தை இதெல்லாம் சுமந்துகிட்டு’’
‘’ஆம....பெரிய சொமை...பஸ்ஸுல ஏத்தப் போறோம்...இங்குட்டு என் புள்ள வந்து கார்ல வச்சி
பொத்துனாப்புல கூட்டியாரப் போறான்...’’
சிரித்துக் கொண்டாள் சிவசங்கரி....தன்னால் இயன்றவரை பிறருக்கு நல்லதே செய்ய எண்ணும் பெரிய மனுஷி...வயது ஆனவர்கள் எல்லோரையும் பெரியவர்கள் லிஸ்டில் சேர்க்க முடியுமா என்ன....ஆனால் மாமியார் ராஜத்தை சந்தேகத்திடமின்றி,சேர்க்கலாம்...உணவை முடித்து விட்டு,
ஜெயராம் கடைக்கு கிளம்பி விட்டான்...ஷோபனா பிள்ளைகளுடன் அமர்ந்து டீவி பார்த்துக்கொண்டிருக்க,சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த மருமகளின் அருகே வந்தாள் ராஜம்....
‘’சொல்லும்மா...நான் என்ன உதவி பண்ணட்டும்..?’’
‘’எதுவும் வேண்டாம் அத்தை..வந்த இடத்துல பேசாம ரெஸ்ட் எடுங்க...அதுவும் போக,பஸ்ல வந்தது வேற டயர்டா இருக்கும்’’
‘’பொல்லாத பிரயாணம் போ...இது ஓடியாடுன உடம்பு....ஒரு இடத்துல உக்காரவெல்லாம் முடியாது....துணி கோண்டா...அடுப்பை துடைக்கிறேன்’’
எடுத்துத் தந்தாள் சிவசங்கரி...
‘’இது திடீர் பயணம் சங்கரி...போனவாரம் இந்நேரம் கூட இங்க வருவேன்னு நினைச்சிப் பார்க்கலை பார்த்துக்க...’’
‘’உங்க மகன் வீட்டுக்கு நீங்க வர்றதுக்கு கால நேரம் பாக்கணுமா என்ன.”’
‘’அதுக்கு சொல்லலைம்மா...இந்த ஷோபனா பொண்ணால திடீர்னு கிளம்ப வேண்டியதாயிடுச்சி..போட்டது போட்டபடி இருக்கு...அப்பிடியே வந்துட்டேன்...அத சொன்னேன்’’
‘’சிறிது நேர மவுனம்...
‘’சங்கரி....நீ என்ன விசயம்னு கேக்கவே இல்லையே’’
‘’சொல்லக்கூடிய விஷயம்னா நீங்களே சொல்லமாட்டேங்களா..நானாக் கேட்டு,எதுக்கு உங்களை தர்ம சங்கடப் படுத்துவானேன்னு கேக்கலை’’
‘’சொல்லக்கூடாத விஷயம் தான்...ஆனா,சொல்ல வேண்டிய நேரம் வந்துருச்சே...ஷோபனா அவ புருஷன்கிட்டேயிருந்து விவாகரத்து கேட்டுருக்காம்மா’’
கையிலிருந்த பாத்திரத்தை அதிர்ச்சியில்’’ டம் ‘’என்று கீழே போட்டாள் சிவசங்கரி...
‘’அத்தை..என்னத்த சொல்லுதீக...போன மே மாசம் இவ கல்யாணம் எவ்ளோ ஜாம் ஜாம்னு நடந்துச்சு...இப்ப ,விவாகரத்து வரைக்கும் போயிட்டுதா....என்னத்த விஷயம்’’
‘’ஆ..மா...நம்ம புள்ள கோடிவருசம் புருசனோட கூடி வாழப்போறாள்னு, எங்க அண்ணன் காசை காசுன்னு பாக்காம,அப்டி போடு போடுன்னு போட்டு கல்யாணத்தை முடிச்சு வச்சான்...நேரா ஒரு வருசமாகல...இந்த புள்ள கண்ணை கசக்கிட்டு வந்து நிக்குது..என்னத்த சொல்ல’’
‘’காரணம்’’
‘’அது வந்தும்மா,என்னவோ புருஷன் பொஞ்சாதிக்குள்ள ஒத்துபோகலையாம்...நித்தம் சண்டை..சச்சரவாம்....எனக்குப் பாதி புரிஞ்சுது...பாதி புரியல...கழுதை....கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு...கல்யாண வாழ்க்கை அமையல இவளுக்கு....தோண்டி துழாவி காரணத்தை கேட்டு என்ன செய்யப்போறோம்னு பேசாம இருந்துட்டேன்...நாம பார்த்து பொறந்து வளர்ந்த பிள்ளைக....அதுக வாழ்க்கை இப்பிடி மண்ணாப் போகும் போது. சங்கடமா இருக்குமா’’
‘’ஆமாத்தை,,,,ஆடையும்,ஆம்படையானும் வாய்க்கணும்பாக’’
‘’அதை சொல்லு...என்னதான்,பொன்னால,பொருளால,முழுக்காட்டினாலும்,புருஷன்-பொஞ்சாதி மனசு ஒத்துபோகலைன்னா,அப்புறம் என்ன இருந்து என்ன பிரயோசனம்?’’
மாமியாரும்,மருமகளும்,சிறிது நேரம் அமைதியாக,.ஏதோ சிந்தனையில் கை வேலையைபார்த்தார்கள்...,
‘’வாங்கத்தை...கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்’’
‘’ஆத்தா...இதை மட்டும் கேட்டுட்டுப் போயிரு...இந்த ஷோபனா பிள்ளையால எங்க அண்ணன் வீட்டுல ஒரே பிரச்சினை....கூச்சலும் குழப்பமும்...விட்ட பாடில்லை...ஆளாளுக்கு நான் சாவுதேன் வைக்கேன்னு கிளம்புதாக...அதான் பூப்போல,இந்த பிள்ளையை கூட்டிக்கிட்டு வந்துட்டேன்....அங்க,அண்ணன் வீட்டுல எல்லாரும் நிதானத்துக்கு வார வரை,இவ கொஞ்ச நாளைக்கு இங்க இருக்கட்டும் சரியாம்மா....என் பிள்ளை வீட்டுலதான நான் நம்பிக்கையா ஒருத்தியை விடமுடியும்...’’
‘’இதென்ன கேள்வி...தாராளமா இருக்கட்டும்...பெறகு சொந்தபந்தம்னு எதுக்கு இருக்கோம்....நீங்க செஞ்சது சரிதான்...அந்த பொண்ணுக்கும் மாறுதலாயிருக்கும்...பாவம்....வாழ்க்கையில கஷ்டம் வரத்தான் இருக்கும்....எதுவும் யோசிக்காம விட்டுட்டுப் போங்க,,,,,நான் என் தங்கச்சி மாதிரி பாத்துகிடறேன்’’
என்று உறுதியாக சொன்ன மருமகளை பார்க்கையில் பெருமிதமாக இருந்தது...வாய்ப்பந்தல் போடுபவள் இல்லை...செய்யக்கூடியவள் தான்...நான் என் பிள்ளையைப் பற்றி கவலை கொள்ளாது ,வயதான காலத்தில் நிம்மதியாக சோறு சாப்பிட முடிகிறதென்றால்.அது இவளால்தானே...! எல்லோரது வீட்டிலும் என் மருமகள் மகாலக்ஷ்மி போலிருக்கிறாள் என்று ஒரு ஒப்புக்கு சொல்வார்கள்...ஆனால்,எனக்கு மகாலக்ஷ்மியே மருமகளாக வந்திருக்கிறாள்..எந்த ஜென்ம புண்ணியமோ தெரியவில்லை என்று தனக்கு தானே இறுமாந்து கொண்டாள் ராஜம்...ஒரு மருமகள் நல்ல மனுஷியாக இருப்பது பெரிதல்ல...ஆனால் அது ஒரு மாமியாரால் புரிந்து கொள்ளப்படுவதுதான் பெரிதினும் பெரிது...அத்தகையதொரு பாக்கியசாலி சிவசங்கரி...s
 
இப்போ எதுக்கு இந்த ஷோபனா பெண் இங்கே ஜெயராமின் வீட்டுக்கு வரணும்?
இவளால் ஏதாவது பிரச்சனை வருமோ?
சிவசங்கரி பாவம்ப்பா
அப்பிராணி
 
Top