Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 22:

அன்றைய இரவு , மதி அவளுடைய வீட்டிற்கு சென்றது கூட , முகிலனுக்கு தெரிந்திருக்கவில்லை. முதல் முறையாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற அவமானம், அவனைப் பிடுங்கித் தின்றது. காலையில் இருந்த வசந்தமான மனநிலை மாறி, இப்போது மதி கூட அவன் நியாபகத்தில் இல்லை.

மகனின் நிலை கண்டு வெம்பிப் போயிருந்த மலருக்கும் தெரியவில்லை. தெரியவில்லை என்று சொல்வதைக் காட்டிலும், பெரியசாமி தெரியபடுத்தவில்லை. மதி சென்றதை பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்து விட்டார் பெரியசாமி.

“எப்படி ஆசையா கல்யாணம் பண்ணி வச்சேன் என் பையனுக்கு. இப்படியாகிப் போய்டுச்சே..!” என்று புலம்பித் தவித்துக் கொண்டிருந்தார் மலர்.

அவமானத்தில் ஒரு இதயம் துடித்துக் கொண்டிருக்க, வேதனையில் ஒரு இதயம் துடித்துக் கொண்டிருந்தது. அது மதி தான். ஒரு வேகத்தில் வந்துவிட்டாளே தவிர, உள்ளே நெஞ்சம், முகிலனை நினைத்து பதறத்தான் செய்தது.

“இப்ப எதுக்கு இப்படி உட்கார்ந்திருக்க..?” என்று வினோதினி கேட்க,

“எனக்கு மட்டும் ஏன் வினோ இப்படி நடக்குது. நான் தான் எந்த தப்பும் பண்ணலையே..?” என்று மதி அழுக,

“நீ எந்த தப்பும் பண்ணலை. படிக்கிற உனக்கு கல்யாணம் பேசினது முதல் தப்பு. பதினெட்டு வயசு ஆகாம இப்பவே செய்யனும்ன்னு நினைச்சது ரெண்டாவது தப்பு. ஆனா இன்னைக்குப் பழி எல்லாம் உன் மேல மட்டும் தான். முகிலன் மாமாவுக்கு தான் எல்லாரும் பாவம் பார்க்குறாங்க. ஏன்னா அவரு படிக்கிறாராம். அப்ப நம்மல்லாம் என்ன மாடா மேய்க்கிறோம்..?” என்று பொரிந்து தள்ளி விட்டாள் வினோதினி.

“மணி மாமாவைப் பத்தி தப்பா பேசாத வினோ..! அவரும் பாவம் தான்..!” என்றாள் மதி.

“நீ இன்னமும் திருந்தலையா...? அங்க இருந்து வந்திருக்க, அதுவே இன்னும் தெரியலை அவருக்கு. நடந்த பிரச்சனையில, உனக்கு தான் பாதிப்பு அதிகம். அங்க எத்தனை பேர், என்னென்ன பேசுனாங்க..! அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம, வந்த உடனே எரிஞ்சு விழறார்...இதெல்லாம் நல்லாவா இருக்கு..” என்றாள் வினோதினி.

வினோதினியும் சின்ன பொண்ணு தான். ஆனால் அவள் வெளியில் இருந்து பார்த்ததால் சில விஷயங்கள் தெரிந்தது.

“முகிலன் நல்ல பையன். அவனைத் தப்பு சொல்ல முடியாது. மதிக்கு ஜாதகத்துல கொஞ்சம் நேரம் சரியில்லை. இப்ப கல்யாணம் முடிச்சாதான், இல்லைன்னா சிக்கல் தான்னு சொன்னாங்க. அதான் நானும் சரின்னு சொன்னேன். நடந்த விஷயமும் அந்த மாதிரி தான் இருந்தது..!” என்று பார்வதி தன் போக்கில் புலம்பிக் கொண்டிருந்தார்.

“அதெல்லாம் சும்மா பெரியம்மா..! இனி போற காலத்துல படிப்புக்கு மட்டும் தான் மதிப்பு இருக்கும். இதுவே மதி, படிச்சு நல்ல நிலைமையில் இருந்தா இப்படி பேசுவாங்களா..?” என்றாள் வினோதினி.

இந்த கேள்விதான் மதியின் மனதையும் குடைந்து கொண்டிருந்தது.அவள் மறந்திருந்த அந்த விஷயம், மீண்டும் அவளுக்குள் விஷவரூபம் எடுத்தது.

ஒருவேளை, அவள் வந்த உடன், முகிலன் பின்னே வந்து சமாதானம் செய்திருந்தால், வேறு மாதிரி யோசித்திருக்க மாட்டாளோ? என்னவோ?.ஆனால் இப்போது மனம் கண்டதையும் யோசித்தது.

அங்கே முகிலனின் வீட்டில், கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் பெரியசாமி. மகன் போலீஸ் ஸ்டேஷன் செல்ல காரணமாய் இருந்த மதியை, அவர் வீட்டு மருமகளாக திரும்பவும் அழைத்து வருவதில், அவருக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை.

முத்துவுக்கும், அவளுக்கும் பழக்கம் இருக்கிறது என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தவர், இப்போது உறுதியே பண்ணிவிட்டார். இந்த விஷயத்தை முத்து தான் செய்தான் என்பதையும் நம்பினார்.

“அண்ணன் மக...அப்படி, இப்படி சீராட்டுன..? உன் பாச மருமக செஞ்சு வச்சிருக்க வேலையை பார்த்தியா மலரு..?” என்று சமயம் பார்த்து சொருகினார் பெரியசாமி.

“இதுல மதி என்னங்க செய்வா..? அவளே பாவம். நடந்த கலவரத்துல, நான் அவளை கவனிக்காம விட்டுட்டேன்..!” என்றபடி மதியைத் தேடிச் செல்ல போக,

“எங்க போற..? உன் மருமக வீட்டுல இல்லை..!” என்றார் பெரியசாமி.

“என்னங்க சொல்றிங்க..? எங்க போனா..? எல்லாரும் இங்க தான இருந்தாங்க..!” என்றபடி மலர் பார்வையால் தேட,

“தாலி கட்டுனவன், போலீஸ் ஸ்டேஷன் போய் திரும்பி வந்திருக்கான்னு கவலை இல்லை. கல்யாணம் முடிஞ்சு ஒரு நாள் முழுசா ஆகலை. இப்பவே கோவிச்சுகிட்டு அவங்க வீட்டுக்குப் போயாச்சு..!” என்றார் பெரியசாமி.

“என்னங்க சொல்றிங்க..? மதி அவ வீட்டுக்கு போயிட்டாளா..? நீங்க பார்த்துட்டு தான் இருந்திங்களா..? தடுத்து இருக்கலாம்ல..!” என்று மலர் பரிதவிப்புடன் சொல்ல,

“எதுக்கு தடுத்து நிறுத்த சொல்ற? இங்க நம்ம என்ன நிலமையில இருக்கோம். இப்போ இப்படி போகலாமா..? அவளுக்கு இந்த கல்யாணமே பிடிக்காம இருந்திருக்கணும். அதான் நேரம் கிடைக்கவும் போய்ட்டா..!” என்றார்.

“அப்படி பேசாதிங்க..! கல்யாணம் பண்ண அன்னைக்கே, மருமகளை பிறந்த வீட்டுக்கு அனுப்பிட்டோம்ன்னு... ஊர்ல நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா..?” என்றாள் மலர்.

“கல்யாணம் முடிஞ்ச கையோடு, இப்படி பிறந்த வீட்டுக்கு ஓடிட்டாளேன்னு உன் மருமகளைத்தான் தப்பா பேசுவாங்க. அதைப் பத்தி அவளும், அந்த குடும்பமுமே நினைக்காதப்ப, நாம எதுக்கு கவலைப் படனும்..?” என்றார் பெரியசாமி.

இவர்களின் வாக்குவாதம் எதுவும் முகிலனின் காதில் விழவில்லை. அவன் காதில் கேட்டது எல்லாம்,
“மதி அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்” என்பதைத் தான்.

“போயிட்டாளா..? இங்க நான் என்ன வேதனையில இருக்கேன்னு, கொஞ்சம் கூட கவலைப்படாம போயிட்டாளா..? அப்போ மதிக்கு நான் முக்கியம் இல்லையா..? நான் முக்கியமா பட்டிருந்தா, என்னோட கஷ்ட்டம், அவளுக்கும் தான.ஆனா இதை எதையும் யோசிக்காம, என்னைப் பத்தியும் யோசிக்காம போயிட்டாளா..? இந்த நேரத்துல என் பக்கத்துல இருக்கனும்ன்னு கூட தோணலையா..?” என்று தனக்குத் தானே கேள்விகள் கேட்டுக் கொண்ட மணி முகிலனுக்கு, அந்த நிமிடமே அனைத்தும் வெறுத்துப் போனது.
அவளின் மேலான காதல், அடிமனதில் புதைந்து, வெறுப்பு மேலோங்கி நின்றது.

“நாளைக்கு பஞ்சாயத்த கூட்டி, அத்து விடுறது தான் முதல் வேலை..! அங்க வந்து சும்மா அது இதுன்னு பேச கூடாது..!” என்று பெரிசாமி சொல்லிக் கொண்டிருப்பது முகிலனின் காதில் விழுந்தது.

இனி, என்ன விழுந்து என்ன பயன்..? உடன் இருந்து புரிய வைக்க வேண்டியவளே தள்ளி சென்று விட்டாள்.

அன்றைய இரவு, உறங்காத இரவு இருவருக்கும். மதியின் நினைவிலேயே அவனுக்கு தூக்கம் வரவில்லை. நடந்த கல்யாணத்தை நினைத்து அவளுக்கு தூக்கம் வரவில்லை. அவ்வளவு வேதனையிலும் முகிலனின் முகமும் அவளுக்குள் மின்னி மறைந்து கொண்டிருந்தது.

எப்பவும் கம்பீரமாகவும், திமிராகவும் பார்க்கும் முகிலனின் முகம், இன்று அவமானத்தில், கூனிக் குறுகிய தோற்றம் மட்டுமே அவள் மனதில். அவன் மேல் அவளுக்கு காதல் இல்லை என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க, அளவு கடந்த காதல், அவனை விட அவளுக்கு தான் உண்டு என்பதை அவள் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

இருட்டின் அமைதியும், காரிருள் வண்டுகளின் சத்தமும் ஒலித்துக் கொண்டிருந்த அந்த இரவின் ஓசையில், அந்த இரண்டு குடும்பமும் விடிந்தால் நடக்க போகும் பஞ்சாயத்தை எண்ணி உறங்காமல் விழித்துக் கிடந்தது.

மறுநாள் காலை, அவ்வளவு நல்ல காலைப் பொழுது இல்லை. ஊரே இவர்கள் பற்றிய பேச்சு தான். இவர்களின் திருமண நிகழ்வு தான், அன்றைக்கு ஊராரின் வாய்க்குத் தீனி.

காலையில், பால் கறக்கும் இடம் தொடங்கி, வாய்க்கால்,வரப்பு வரை இவர்களின் பேச்சாகத்தான் இருந்தது.

பார்வதியின் வீட்டில், அலங்கோலமாய் இருந்தாள் வண்ண மதி. கணவனின் கைகளால் கசங்க வேண்டிய பட்டு சேலை, அவளின் கண்ணீரால் கசங்கியிருந்தது.

கணவனின் இதழ் தீண்டி அழிய வேண்டிய விழி மை, கண்ணீர் தீண்டி அழிந்திருந்தது.

கணவனின், நெஞ்சம் எனும் மஞ்சத்தில் உதிர வேண்டிய பூக்கள், அவளின் நிலை கண்டு உதிர்ந்திருந்தது. அந்த பூக்களின் நாரும், அவளைப் போல் கிழிந்த நாராய் இருந்தது.

மகளைப் அப்படிப் பார்த்த பார்வதிக்கு, ஈரக்குலை எல்லாம் நடுங்கியது. அழுததால் வீங்கியிருந்த அவள் கண்ணம், சிவப்பாய் உப்பி இருக்க, கண்களைச் சுற்றிலும் தூக்கம் தொலைத்த கருவளையம். மொத்தத்தில் வண்ண மதி, வண்ணம் கலைந்த மதியாக இருந்தாள்.

“எந்திரிச்சு குளிச்சுட்டு வேற சேலையைக் கட்டு மதி. இப்படியே இருந்தா, பார்க்குறவங்க என்ன நினைக்க மாட்டாங்க..?”என்றார் பார்வதி, ஆதங்கமாய்.

“இப்ப கூட மத்தவங்க எப்படி பார்ப்பாங்க, அவங்க என்ன பேசுவாங்க, அப்படின்னு தான் உங்களுக்கு கவலை. என்னைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையாம்மா. நான் என்ன நினைக்கிறேன்..? நான் என்ன நிலைமையில் இருக்குறேன்..? இதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லையா..?” என்றாள் ஒரு முடிவுடன்.

“என்ன மதி..வாய் கூடுது. என் பிள்ளைக்கு என்ன வேணுமின்னு எனக்குத் தெரியாதா...? எதிர்த்து பேச வேற ஆரம்பிச்சுட்டியா..?” என்றார்.

“எனக்கு என்ன வேணுமின்னு உங்களுக்கு தெரியலைம்மா..! ஏன்,

இதோ அப்பான்ற பேருக்கு ஒருத்தர் இருக்கார் பாருங்க...அவருக்கும் ஒன்னும் தெரியலை. இவர் சரியா இருந்திருந்தா,இன்னைக்கு எல்லாரும் இப்படி பேசுவாங்களா...? “ என்றாள்.

“என்னாச்சு உனக்கு..? எப்பவும் நீ இப்படி பேச மாட்டியே..? என் பிள்ளைக்கு காத்து, கருப்பு ஏதும் அடிச்சிருச்சா..?” என்றபடி பார்வதி குழம்ப,

“இல்லை...! இத்தனை நாள் பிடிச்சிருந்த பேய், இன்னைக்கு தான் விலகியிருக்கு..!” என்று தீர்மானமாய் சொன்னவள், எழுந்து குளிக்க சென்றாள்.

அவள் மனதில் பிறந்த திடம், அனுபவத்தில் வந்தது கிடையாது.அந்த வயதிற்கே உரிய கோபம், நடத்திக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் என்று கூட சொல்லலாம்.

அவளுடைய தெளிவிற்கு முக்கிய காரணம், வினோதினி என்றால் அது மிகையில்லை. படிப்பைப் பற்றி பேசிப் பேசியே, கொஞ்சம் தளர்ந்திருந்தவளை, நிமிர செய்து விட்டாள்.

“என்னங்க இவ இப்படி பேசிட்டு போறா..?” என்று பார்வதி, மனோகரனிடம் புலம்ப,

“நான் ஒரு சரியான தகப்பன் இல்லைன்னு, நடுமண்டையில ஆணி அடிச்ச மாதிரி சொல்லிட்டு போகுது புள்ளை. நானும் இந்த குடியை விட்டுடனும்ன்னு தான் நினைக்கிறேன்..! ஆனா முடிய மாட்டேங்குது...” என்று மனோகரன் வருத்ததுடன் சொல்ல,

“நிறுத்தித் தான் ஆகணும்..!” என்று குரலில் திரும்ப, அங்கே உள்ளே சென்ற மதி, மீண்டும் வந்து நின்றாள்.

“இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க..! நீங்க இன்னையில இருந்து குடிக்கவே கூடாது. மீறி நீங்க குடிச்சிங்க, நான் அரளிக்காயை அரைச்சு குடிச்சுட்டு உசுர விட்டுடுவேன்..!” என்று சாதரணமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்.

ஆனால், அவள் சொன்ன வார்த்தையின் தாக்கம், பார்வதியிடத்தும், மனோகரனிடத்தும் அப்படியே இருந்தது.

“என்ன வார்த்தை சொல்லிட்டு போறா..?” என்று பார்வதி அழுக,

மனோகரன் அப்படியே இடிந்து அமர்ந்து விட்டார். இத்தனை வருடங்கள் யார் சொல்லியும் கேட்காத மனம், இன்று அவர் மகள் சொல்லக் கேட்டு, தலை குனிந்து அமர்ந்தார்.

அப்போது வேகமாய் வந்த கங்கா,

“எங்கத்தை அவ..?” என்றாள் கோபமாய்.

“குளிக்க போயிருக்காமா..!” என்றார் பார்வதி.

“இவ, அங்க சொல்லாம கொள்ளாம வந்துட்டாளா அத்தை. அங்க பெரிய சாமி பெரியப்பா, பஞ்சாயத்தை கூட்டி வச்சிருக்கார். இவ எதுக்கு இப்படி பண்ணினா..? பேசாம அங்கயே இருந்திருக்கலாம்ல..?” என்று கங்கா கேட்டுக் கொண்டிருக்கும் போதே, வந்தாள் மதி.

“வா கங்கா..!” என்றாள் அமைதியாய். அவள் முகத்தில் இருந்த அமைதி கண்டு, கங்கா தான் திகைத்துப் போனாள்.

“எதுக்குடி இப்படி பண்ணின?” என்றாள்.

“நான் என்ன பண்ணினேன்..? என்றாள் மதி.

“தெரியாத மாதிரி கேட்காத..? யானை தன்னோட தலையில தானே மண்ணை வாரிப் போட்டுக்குமாம்..! நீ பண்ணிட்டு வந்தது அப்படித்தான் இருக்கு..!” என்றாள் கங்கா.

“என்ன சொல்ல வர இப்போ..?”

“அங்க பஞ்சாயத்து கூடியிருக்கு. உங்களை வர சொன்னாக..!” என்றாள் கங்கா, முகத்தில் சிறு பதட்டத்துடன்.

“அவ்வளவு தான..? இதோ வரோம்..!” என்று அவள் சாதரணமாக சொல்ல, அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர் அனைவரும்.

“உனக்கு வருத்தமா இல்லையா..? கல்யாணம் முடிஞ்ச கையோடு பஞ்சாயத்தா..?” என்றாள் கங்கா.
 
“எனக்கு எது நல்லதா நடந்திருக்கு. இப்ப மட்டும் நான் வருத்தபட...?” என்று விட்டேறியாய் சொன்னவள், பார்வதியைப் பார்த்தாள்.

இனி அவளிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டார் பார்வதி. நடந்த அத்தனையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள் வினோதினி. ஏனோ பஞ்சாயத்திற்கு செல்ல விருப்பமில்லை அவளுக்கு.

அவர்கள் கிளம்பி வெளியே வர, வேகமாய் ஓடி வந்தான் முத்து.

“என்ன மதி இதெல்லாம்..?” என்றான் முத்து.

“உன்னால நாங்க பட்டதெல்லாம் பத்தாதாடா..! பேசாம போய்டு..!” என்று மனோகரன் முதன் முறையாக வாய் திறந்தார்.

“மாமா..! நான் ஒன்னும்..” என்று அவன் பேசி முடிக்கவில்லை,

“யாருக்கு யாருடா மாமா..! பேசாம போய்டு. இருக்குற கோவத்துக்கு என்ன பண்ணுவேன்னு தெரியாது..!” என்று மனோகரன் மிரட்ட,

அவரின் கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன், கசங்கிய சட்டையை சரி செய்து கொண்டே, அவர்களைப் பார்த்து நக்கல் சிரிப்பு சிரித்து விட்டு சென்றான்.

“பார்த்தியா..? எப்படி சிரிச்சுட்டு போறான்னு...” என்று மதியைப் பார்த்து கங்கா சொல்ல, அது எதுவும் மதியின் காதில் விழவில்லை.

சினிமாவில் காட்டுவதைப் போல், ஆலமரம் எல்லாம் கிடையாது. ஊர்த் தலைவரின் வீடு. அது தான் பஞ்சாயத்து நடக்கும் இடம்.

அந்த இடத்திற்கே, வர மனமில்லாமல் வந்திருந்தான் மணி முகிலன். ஏற்கனவே பட்ட அவமானங்கள் மிச்சம் இருக்க, இப்போது என்ன காத்திருக்கோ என்ற மனப்பான்மை தான் அது.

மதியின் மேல் அவ்வளவு கோபத்தில் இருந்தான். அவள் சென்ற கோபம் அவனை விட்டு இன்னும் போகவில்லை. போலீஸ் ஸ்டேஷன் சென்றது கூட இரண்டாம் பட்சமாகிப் போனது அவனுக்கு.

தூரத்தில் வரும் போதே, மதியைக் கண்டு விட்டான். இவ்வளவு நேரம் அவள் மேல் அவன் கொண்டிருந்த கோபம், அவளைப் பார்க்க பார்க்க கொஞ்சம் குறைவதைப் போல் இருந்தது.

கோபம் குறைந்தாலும், அதை குறையவிடாமல் பார்த்துக் கொள்ள, அங்கு நின்றிருந்தார் திலகா.

“கொஞ்சம் கூட மனசுல இவளுக்கு கவலை இருக்கான்னு பாருங்க அண்ணே..! எப்படி ஆடி, அசைஞ்சு வரா பாருங்க..!” என்றார் திலகா.

“அது தெரிஞ்ச விஷயம் தான திலகா..! விடும்மா பார்த்துக்கலாம்..” என்றார் பெரிசாமி.

மலருக்கு மட்டும் தான், அண்ணன் மகளைக் கண்டதும் துடித்தது. அவளுடைய சோர்ந்த தோற்றம் அவருக்கு மட்டும் தான் தெரிந்தது போல.

நேராக அங்கே வந்தவள், பார்வதியின் அருகிலேயே நின்று கொண்டாள். மருந்துக்கும் நிமிர்ந்து முகிலனைப் பார்க்கவில்லை.

“பார்க்குறாளான்னு பாரு..! சண்டாளி, உனக்காகத் தான இவ்வளவு அவமானத்தையும் தாங்கிக்கிட்டு இங்க வந்து நிக்குறேன். கொஞ்சமாவது அந்த அசமந்தத்துக்கு புரியுதான்னு பாரு?” என்று மனதிற்குள் வெம்பிக் கொண்டிருந்தான் முகிலன்.

“என்ன பெரியசாமி..? இப்ப எதுக்கு பஞ்சாயத்தை கூட்டி இருக்கீங்க..?” என்றார் பெரியவர் ஒருவர்.

“எங்க குடும்பத்துக்கும், அவளுக்கும் சரிப்பட்டு வராது. அத்து விட்ருங்க..! மைனர் பொண்ணைக் கூட்டிட்டு போய் குடும்பம் நடத்தக் கூடாதுன்னு போலீஸ் ஸ்டேஷன்லே சொல்லிட்டாங்க. நாங்களும் சரின்னு சொல்லி தான், எங்க பையனை மீட்டுட்டு வந்திருக்கோம்.” என்றார் பெரியசாமி.

அவரின் வாயில் இருந்து அப்படி ஒரு வார்த்தை வரும் என்று, பார்வதி கனவிலும் நினைக்கவில்லை.

“என்னண்ணே சொல்றிங்க? அத்து விடுறதா..? நேத்து கல்யாணம் பண்ணி, இன்னைக்கு அத்து விடுறதைப் பத்தி பேசுறிங்களே...இது உங்களுக்கே நல்லா இருக்கா..?” என்றார் பார்வதி, கண்களில் கண்ணீருடன்.

“நாங்க என்ன, அத்துவிடனுமின்னா கல்யாணம் செஞ்சு வச்சோம்.நடந்த இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் யாரு..? உம்மக தான் காரணம். அவ தான், அந்த முத்துப் பயல விட்டு, கம்ப்ளைன்ட் கொடுக்க வச்சிருப்பா..!” என்றாற பெரியசாமி.

“அபாண்டமா பேசாதிங்க..!” என்றார் பார்வதி.

“உள்ளதை சொன்னால் கோபம் வருமாம். ஏற்கனவே ஊர் அறிஞ்ச விஷயம் தான..? ஏதோ என் பொண்டாட்டி உலகம் அறியாதவ. அண்ணன் மக மேல பட்ட அழுக்கை, என் மகனைக் கொண்டு சுத்தம் பண்ண நினைச்சா..?

நாயைக் குளிப்பாட்டி,நடுவீட்ல வச்சாலும்..அதோட புத்தி போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க..?” என்றார் பெரியசாமி.

“அப்பா..! “ என்று அதட்டினான் முகிலன்.

“நீ பேசாம இரு முகிலா...!” என்று அவனை அதட்டினார் திலகா.

“மதியைப் பத்தி யாராவது தப்பா பேசுனிங்க... வெட்டிடுவேன்..!” என்றான் முகிலன்.

“அட என்னப்பா...? உங்கப்பா உனக்காகத் தான் பேசிட்டு இருக்காரு..அது புரியாம நீ இப்படி பேசிகிட்டு இருக்க?” என்று கூட்டத்தில் ஒருவர் சொல்ல,

முகிலனின் வார்த்தைகளில் நிமிர்ந்தாள் மதி. கண்கள் கலங்க அவனின் முகம் மங்களாகத் தான் தெரிந்தது.

“சரி, தப்பான பொண்ணு இல்லை. நேத்து ராத்திரி வீட்ல ஒருத்தர்கிட்ட கூட சொல்லாம, வீட்டை விட்டுப் போயிருக்கா. இன்னைக்கு இப்படி போன பொண்ணு, நாளைக்கு வேற எப்படியும் போக மாட்டான்னு என்ன நிச்சயம்..?” என்றார் பெரியசாமி.

அந்த வார்த்தைகளைக் கேட்ட, பார்வதிக்கு பத்திக் கொண்டு வர,

“வாயை மூடுங்க....! அந்த நேரத்துல என் பிள்ளை தனியா வந்திருக்கான்னா, நீங்க என்ன புடுங்கு புடுங்குனிங்களோ..! இப்பவே இப்படி பேசற நீங்க, நேத்து என்ன பேச்சு பேசுனிங்களோ..?” என்றார் பார்வதி.

“வார்த்தையை அளந்து பேசுங்க மதினி..! மதியை நாங்க ஒன்னும் சொல்லலை..!” என்றார் மலர்.

“ஒன்னும் சொல்லலை,ஒன்னும் சொல்லலைன்னு..என் பிள்ளையை இப்படி பஞ்சாயத்துல வச்சு, இந்த மனுஷன் இப்படி அசிங்கமா பேசுவாரு.அதை நீங்க கேட்டுட்டு நிப்பிங்க..? கட்டுன புருஷன், இவன் கூட அப்படித்தான் நிக்குறான்..!” என்றார் பார்வதி.

முகிலனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. மதியின் முகத்தைப் பார்த்து அமைதி காத்தவன்,

“நான் எப்படின்னும், அவ எப்படின்னும் எனக்குத் தெரியும்..? யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அவளை அத்து விடுற எண்ணமும் எனக்கு இல்லை. என்னைக்கா இருந்தாலும் மதி தான் என் பொண்டாட்டி. நான் படிச்சு முடிக்கிற வரை அவ உங்க வீட்ல இருக்கட்டும். தேவையில்லாத எதையும், யாரும் பேச வேண்டாம்..!” என்றான் முகிலன் கோபமாய்.

“என்னடா நீ..? இன்னும் இந்த ஒழுக்கங்கெட்டவளை பொண்டாட்டின்னு சொல்லிட்டு இருக்க?” என்று பெரியசாமி சொல்ல,

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த மதிக்கு, இதற்கு மேல் தாங்க முடியாது என்ற பட்சத்தில் வெடித்தாள்.
“கொஞ்சம் எல்லாரும் நிறுத்துங்க..!” என்று கண்ணீருடன் சொன்னவள்,

“ஆமா..! நான் அப்படித்தான். என்ன செய்ய முடியும் உங்களால. நான் இப்படித்தான்னு ஒவ்வொருத்தருக்கும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனா ஒன்னும் மட்டும் சொல்றேன், என் வாழ்க்கை இப்படிப் போகணும்ன்னு யார் யார் நினைச்சாங்களோ, அவங்க நல்லா இருக்க மாட்டாங்க..! நாசமாத்தான் போவாங்க...!” என்று ஆக்ரோஷமாய் சொன்னவள்,

பெரியசாமியைப் பார்த்து,

“நீ என்ன, என் ஒழுக்கத்தைப் பத்தி பேசுறது..? நீ என்ன என்னை அத்துவிடுறது...? நான் சொல்றேன் இப்போ. எனக்கு உன் குடும்பத்துல வாழ விருப்பம் இல்லை. இந்த சந்தேக கூட்டத்துக்குள்ள வாழ, இந்த மடத்தனமான கூட்டத்துல வாழ எனக்கு விருப்பம் இல்லை..!” என்று சொல்லிக் கொண்டிருக்க,

“மதி..!” என்று அதட்டினார் பார்வதி.

“நீங்க பேசாம இருங்கம்மா. இன்னும் கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருந்தா, நம்ம எல்லாரையும் பாடையில அனுப்பிடுவாங்க..! இப்படி கெஞ்சி தான்... நான் அங்க போய் வாழனும்ன்னா, அப்படி ஒரு வாழ்க்கையே எனக்குத் தேவையில்லை...” என்றாள்.

“கொஞ்சம் மரியாதை குடுத்து பேசுமா..?” என்று அனைவரும் ஒவ்வொன்றாய் சொல்லிப் பேச, அனைவரையும் ஒரு முறை பார்த்தவள், முகிலனைப் பார்த்தாள்.

முகம் சிவக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில், அப்படி ஒரு தீ ஜுவாலை. அதைப் பார்த்த மதிக்கு உள்ளே அப்படி ஒரு பயம். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள வில்லை.

“இதுக்கு என்ன தீர்வு..?” என்று அனைவரும் கேட்க,

“இதுக்கு மேல பேச என்ன இருக்கு.. அத்து விட்ருங்க..!” என்றார் பெரியசாமி.

மதியின் வாயில் இருந்து வரும் வார்த்தைக்காக காத்திருந்தான் முகிலன். மதியோ எதுவும் பேசவில்லை. யாரையும் பார்க்கவில்லை. பார்வதியைக் கூட பார்க்கவில்லை. புது மஞ்சள் ஈரம் கூட காயாத தாலியை, அப்படியே கழட்டி விட்டாள்.

அவளின் செய்கையைப் பார்த்த முகிலன் அந்த நொடியே செத்து விட்டான். வெறும் உடல் தான் அங்கு இருந்தது.
முகிலனின் அருகில் சென்றவள், அவனின் கையைப் பிடித்து, உள்ளங்கையில் தாலியை வைத்து , அவனின் கைகளை மூடி விட்டு,

“இப்ப எல்லாருக்கும் சந்தோஷமா..?” என்றபடி திலகா, பெரியசாமி என அனைவரையும் ஒரு தீர்க்க பார்வை பார்த்தவள், அடுத்த நிமிடம் அங்கு நிற்கவில்லை.

“பார்த்திங்களா தெனாவெட்டை..! நாங்க சொன்னப்ப நம்பலை. இப்ப இதான் சாக்குன்னு தாலியைக் கழட்டி குடுத்துட்டு போறா..? இனி இவ என்ன பண்ணாலும் கேட்க யாருமில்லை. இவ சுதந்திரமா அந்த முத்து பய கூட சுத்தலாம்..!”என்று பெரியசாமி சொல்ல,

மதி செய்த செயலில் கோபமாக இருந்த பார்வதிக்கு கூட, இப்போது ஆத்திரம் வந்தது. மதியின் பக்கமும் கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினார்.

ஆனால் மணி முகிலனின் நிலைமை....காதல் கொண்ட அவனின் மனம்..? அப்படியே அந்த இடத்திலேயே, எல்லாம் செத்துப் போனது. அவன் மனம், அதில் இருந்த காதல், அவன் மனைவி இப்படி எல்லாம்.

சொந்தங்களின் பகைக்கும், ஊராரின் அர்த்தமற்ற பேச்சுக்கும், வீண் பொறாமைகளுக்கும் அவர்கள் கொடுத்த விலை..அவர்களின் வாழ்க்கை.





 
எல்லோரும் சேர்ந்து
அழகான சின்ன பிள்ளைகள் வாழ்க்கையில்
விளையாடிட்டாங்க
 
Top