Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

18. விடை தேடி

Advertisement

Aasai"PRABHAAS"

Active member
Member
இன்னும் பொழுது புலரவில்லை. மலைப்பகுதி என்பதால் வாடைக் காற்று மேனியை நடுங்கச் செய்து விரைவிலேயே நாதனை துயில் களைய வைத்தது. கண்விழித்து எழுந்தவருக்கு நேராக, நிலவொளியில் மின்னும் கோயில் கோபுரம் தெரிய, அதை பார்த்தபடி அப்படியே அமர்ந்துவிட்டார். அதிகாலை நிலவொளியில் கோபுர தரிசனம் கிடைக்க, அமர்ந்த சிறிது நேரத்திலேயே மனம் தன் சஞ்சலங்களை மறந்து புத்துணர்வு அடைந்தது போல் இருந்தது. மெல்ல மெல்ல இருள் விலகி கதிரவனின் வெளிச்சம் பரவ, அவரது வேலைகளை முடித்து விட்டு கோயிலில் அம்மனின் தரிசனத்தையும் முடித்து காத்திருக்க, நேற்று பார்த்த பூசாரி முன்னதாகவே வந்திருந்தார்.

அவரும் உள்ளே சென்று பூஜையை முடித்து அவரது தம்பியிடம் சொல்லிவிட்டு நாதனிடம், ம்ம் வாங்க கிளம்பலாம்.

ரொம்ப நன்றி சாமி.

சிறு புன்னகையை உதிர்த்தவர், நீங்க என் கிட்ட வந்த விவரத்தை முழுசா சொல்லலையின்னு எனக்கு தெரியும்.

சாமி அது வந்து....

பரவாயில்லை. ஆனா உங்களுக்கு இன்னிக்கி உதவ சொல்லி எனக்கு உத்தரவு வந்ததால தான் நான் இப்போ உங்க கூட வர்றேன்.

சாமி...

ஆமா, இது அந்த அம்பாளோட உத்தரவு. நான் உங்களுக்கு உதவுறதுக்கு தயங்கி தான் இருந்தேன்.

ஆனா திடீர்னு என்னோட பேத்தி,

குமரவேலா நீ நாளைக்கு நாதனோட பயணிக்க வேண்டியது ரொம்ப அவசியம். தயாரா இரு. உனக்கான பதிலும் அங்க கிடைக்கும்.

அப்பிடினு மட்டும் தான் பேசினா. அதுக்கு அப்புறம் எதுவுமே பேசவே இல்ல.

எனக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்ச நேரம் அங்க என்ன நடக்குதுன்னு கூட எனக்கு புரியல. எப்பிடி இது சாத்தியம்ன்னு தான் யோசிச்சேன்.

ஏன் சாமி.

ஏன்னா அவ பிறவியிலேயே ஊமை நாதன். அப்புறம் தான் புரிஞ்சது அது அம்பாள் எனக்கு இட்ட கட்டளைன்னு. அதான் விடிஞ்சதும் கிளம்பி வந்துட்டேன்.

இந்த பயணம் முடியும் வரை உங்களுக்கு உதவியா நான் இருக்கேன். கவலைப்படாம வாங்க.

எனக்கு.. எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல சாமி. எனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணுறீங்க. ரொம்ப ரொம்ப நன்றி சாமி.

இருவரும் பேசியபடியே அடிவாரத்தை அடைந்து விட்டனர். நல்ல பறந்து விரிந்து பசுமையாய் காட்சியளித்தது நாகர் மலை. அண்ணாந்து பார்த்து கொண்டே நாதன் நிற்க

வாங்க நாதன் அதோ அந்த ஓடையை தாண்டி கொஞ்ச தூரம் நடந்தா தான் புல் அருவி வரும். அங்க இருந்து தான் நாம பயணத்தை தொடரணும்.

ம்ம் சரிங்க சாமி.

ஓடை சலசலத்து ஓடிக் கொண்டிருக்க, அதை கடந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புல் அருவியை அடைந்தார்கள்.

மிகவும் பெரிய அருவி இல்லை தான். ஆனால் எப்போதும் இங்கிருந்து நீர் புல்லளவேணும் வடிந்து கொண்டு தான் இருக்கும். மூலிகை செடிகள் சுற்றிலும் அடர்ந்து வளர்ந்திருக்க, தீரா மர்ம வியாதிகள் இருப்போர், இந்த மூலிகைகளை அரைத்து புல்லருவியில் நீராடிச் செல்வார்கள். பின் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து மறுமுறை நல்ல உடல் நலத்துடன் வந்து மலையை வணங்கி விட்டுச் செல்வார்கள். ஆனால் இங்கு வருவதற்கும் ஒரு பாக்கியம் வேண்டுமாம். ஏனெனில் அவ்வளவு எளிதில் அருவியை அடைய முடியாது. முதல் மேட்டின் அடிவாரத்தை சுற்றி பல நாகங்கள் இருக்கின்றன. கடவுள் உத்தரவு இன்றி யாரையும் மலைக்குள் நுழைய அவை விடுவதில்லை. மீறி நுழைந்தவர்கள் எல்லாம் நாகம் தீண்டி இறந்து தான் போவார்கள்.

இதோ நாதன் தனக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அருவியின் கீழ் வந்து நிற்க, திடீரென சரசரவென ஆறடி நீளத்திற்கு ஒரு நாகம் அவர் முன் படமெடுத்து சீரியபடி நின்றது.

கையெடுத்து வணங்கி கும்பிட்ட நாதன் சாஸ்டாங்கமாக அதன் முன் விழுந்து கும்பிட, அப்படியே சிறிது நேரம் நின்று அவரையே சீற்றத்துடன் பார்த்தது, பின் நொடிக்குள் காணாமலும் போனது.

நடந்தது நிஜம்தானா என குமரவேலை பார்க்க அவர் கண்ட காட்சியில் மெய்யுறுகி நின்றிருந்தார்.

சாமி... சாமி....

ஆங்... நாதன்.

எவ்வளவு பெரிய பாக்கியம்...
அநேகமா வந்தது இங்க வாழும் ஒரு சித்தரா இருக்கலாம் நாதன். நான் சின்ன வயசா இருக்குறப்போ எங்க அப்பா சொல்லியிருக்கார். நாகர் மலையில பல வருஷங்களா வாழும் சித்தர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க பெரும்பாலும் நாகங்களாக தான் இருப்பாங்கன்னும் சொல்லியிருக்கார். ஆனா இப்போ தான் நேர்ல பார்க்குற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு.

நீங்க சொல்லுறதெல்லாம் கேட்கும் போது புல்லரிக்குது சாமி.

ஆமா நாதன். இந்த மலையே ஒரு தெய்வீக மலை தான். ஆண்டவனின் சித்தமே சித்தன். வாங்க போகலாம். நேரம் கடந்துட்டு இருக்கு.

மீண்டும் அருவியில் நின்று உடலை நனைத்துக் கொண்டு ஈர உடையுடன் நீர் சொட்ட சொட்ட நடக்கத் துவங்கினார்கள் இருவரும்.

மதியம் நெருங்குவதற்குள்ளாகவே இரண்டாம் மேட்டையும் கடந்து விட்டார்கள். இப்போது உச்சி வெயில் பயங்கரமாக தகித்துக் கொண்டிருக்க, கரடு முரடான பாதை நாதனின் கால்களை குத்திக் கிழித்து பாதமிரண்டும் இரத்தத்தில் சிவந்து போய் இருந்தது.

அவரால் நடக்க முடியவில்லை தான், ஆனால் பிரச்சினையின் தீவிரம் அவரை ஒரு நொடி கூட பின்வாங்க வைக்கவில்லை.

எது வந்தாலும் சரி நாளைக்கு என் குடும்பம் நிம்மதியா அதைவிட, முக்கியமாக உயிரோட இருக்கனும்னா நான் அங்க போய் தான் ஆகனும். நான் செஞ்ச தப்புக்கு நான் தான் பரிகாரம் பண்ணனும். ம்ம்ம்கூம் தளரக் கூடாது. தளரக் கூடாது. முயற்சி செய் நாதா.... ஆண்டவன் காட்டுன வழிய விட்டுடாத... ம்ம் நடந்திரு, நடந்திரு.. என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு எங்கும் நிற்காமல் அந்த கொளுத்தும் வெயிலிலும் நடந்து கொண்டே இருந்தார். ஆனால்

குமரவேலுக்கு அவ்வளவாக காயமும் இல்லை. சோர்வும் இல்லை. சாதாரணமாகத் தான் நடந்து கொண்டிருந்தார். ஒரு வழியாக மூன்றாவது மேட்டினையும் அடைந்து விட்டார்கள்.

நாதன் உங்க கிட்ட அடியார் சொன்ன மத்திய மேடு இது தான். ஆனா இதுல எந்த இடம்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

சாமி அவர் உனக்கான பதில் மத்திய மேட்டுல தான் பொதிஞ்சு இருக்குன்னு சொன்னாரு. ஆனா எந்த இடம்னு குறிப்பிட்டு சொல்லல.

ஓ... அப்போ அதை நீங்க தான் தேடிக் கண்டுபிடிக்கனும்னு நினைக்கிறேன். ம்ம் சீக்கிரம் தேடுங்க நாதன். உங்களுக்கான தீர்வ நீங்க தான் தேடனும். நம்பிக்கைய கைவிட்டுடாதிங்க.. அந்த அம்பாள் கைவிட மாட்டா... ம்ம் தேடுங்க.

தேடலில் கிடைக்க போவது என்ன????



விடை தேடி பயணம் தொடரும்....
Prabhaas...
 
Top