Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

17. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


17. இவன் வசம் வாராயோ!



அன்று நிரஞ்சனா வேலைக்குப் போன சுருக்கிலேயே வீட்டுக்குத் திரும்பிவிட்டாள். நட்சத்திர அந்தஸ்துடைய இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் மிகப் பிரபலமான கதாநாயகனின் பிரம்மாண்டமான தயாரிப்பு ஒன்றில் படப்பிடிப்பின் போது க்ரேன் விழுந்து மூன்று திரைத் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்து விட, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அன்று ஒரு நாள் எல்லா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன.

அதனால் நிரஞ்சனா சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டாள்.

அதனால் அவளை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் வேலைகளை முடிக்கலாம் என்று கயல் தன் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்தாள்.

தமிழ், மதியத்துக்கு மேல் சென்றால் தன்னாலும் வர முடியும் என்று சொல்ல, கயல் சரி என்று சொல்லி நிரஞ்சனாவிடம் திருமணப் புடவைகளுக்கேற்ற ரவிக்கை டிசைன்களை காட்டி தேர்ந்தெடுக்கச் சொல்லி அதற்கு வேண்டிய பொருட்களையும் வாங்குவதற்கு பட்டியல் தயார் செய்து கொண்டாள்.

வாங்க வேண்டியவற்றின் பட்டியலை கவனமாகத் தயார் செய்து கொண்டு கிளம்ப, தமிழும் முகிலும் அவர்களுடன் வழியில் வந்து இணைந்து கொண்டனர்.

வீட்டில் குழந்தைகளை மதுரமும் வளர்மதியும் கவனித்துக் கொண்டனர்.

முதலில் ஜவுளிக்கடை சென்று எல்லாருக்கும் புடவைகளை தேர்ந்தெடுத்தார்கள். கடைசியாக, நிரஞ்சனாவுக்காக திருமணப் பட்டுப்புடவையை தேர்ந்தெடுத்தனர்.

தமிழ் பொறுமையாய் பார்த்துப் பார்த்து, அவளுடைய நிறத்துக்கு ஏற்றாற்போல மிகவும் அழகாக டிசைன் செய்யப்பட்ட ஐந்தாறு பட்டுப்புடவைகளை தேர்ந்தெடுத்து அவள் முன் வைத்து எது பிடிக்கிறது என்று கேட்டான்.

அவளோ அவன் காட்டிய, விலையுயர்ந்த பட்டையெல்லாம் ஒதுக்கி விட்டு குறைந்த விலையில் சில புடவைகளை தேர்ந்தெடுத்து அவன் முன் காட்ட, நிரஞ்சனாவை தமிழ் முறைத்தான்.

"இல்ல.. இதுல எல்லாம் ஏற்கனவே நிறைய ஸ்டோன் வொர்க் பண்ணியிருக்கு.. அப்ப ப்ளவுஸ்ல ரொம்ப வொர்க் பண்ணினா நல்லா இருக்காது.. அதான்.." என்று சமாளித்தாள்.

உண்மையில் அவளுக்கு இவ்வளவு விலையில் புடவை வாங்கிவிட்டு அதை ஒரு முறைக்கு மேல் கட்டுவதற்கு வாய்ப்பே அமையப் போவதில்லை; அப்படியே அமைந்தாலும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்துக்கு மேல் கட்ட முடியாது என்று நினைத்தே வேண்டாம் என்று மறுத்தாள்.

வாழ்வின் முக்கியமான நிகழ்வுக்காக வாங்கப் போகும் ஒரு புடவையை, அது மிகவும் விலை உயர்ந்த ஒன்று என்ற காரணத்துக்காக மட்டுமே, ஆசை தீர கட்டி மகிழ முடியாமல் போய்விடக் கூடாதல்லவா? அதனால் விலை குறைந்த புடவையை தேர்ந்தெடுத்தாள்.

தமிழ், கயல் முகில் மூவரும் எத்தனையோ சொல்லியும் அவள் பிடிவாதமாக மறுக்க,

"என்னம்மா நீ.. அண்ணனும் அண்ணியும் சேர்ந்து உனக்கு இவ்ளோ சூப்பரான புடவைய செலக்ட் செய்றாங்க.. இந்த காலத்தில எந்த அண்ணன் இப்டிலாம் செய்யறாங்க.. கட்டிக்கப் போறவர் எவ்ளோ ஆசையா செலக்ட் செய்திருக்காரு.. சந்தோசமா எடுத்துக்கம்மா.." என்று கடைச் சிப்பந்தி அவர்களுக்காக நிரஞ்சனாவிடம் பேசினான்.

"இங்க பாரு.. இப்ப இத நீ வாங்கிக்கலன்னா.. என்ன உனக்கு பிடிக்கலன்னு அர்த்தம்.. இந்த கல்யாணம் பிடிக்கலன்னு அர்த்தம்.. அதுதான் உண்மைன்னா இந்த புடவைய நீ எடுத்துக்க வேணாம்.." அவளுக்கு மட்டும் கேட்பது போல தமிழ் அவளருகில் வந்து சொன்னான்.

"அப்டி எதுவும் இல்ல.. நீங்க ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்டிலாம் பேசறீங்க.." என்று அவசரமாக மறுத்தாள்.

"அப்ப நா செலக்ட் செய்த புடவைகள்ள எதையாவது ஒண்ணை வாங்கிக்க.."

"ம்.. சரி.." அரை மனதுடன் சன்னமான குரலில் சம்மதம் சொல்லி அவன் காட்டிய புடவைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தாள்.

"ப்பா.. உன்ன ஒரு புடவை வாங்க சம்மதிக்க வெக்கறதுக்குள்ள.. எங்க தொண்டை தண்ணி வத்திருச்சி.." என்றாள் கயல்.

"ஆமாடீ.. வா ஜூஸ் குடிக்கலாம்.." என்று முகில் சொல்ல,

"தமிழ்! நீ பணம் குடுத்து புடவைங்கள வாங்கிட்டு வந்துடு.. நா போய் ஜூஸ் குடிச்சிட்டு வரேன்.." என்று சொல்லி அவன் பதிலுக்குக் காத்திராமல் கயல் கணவனுடன் சென்றுவிட, தமிழ் பில் போட்டுக் கொண்டு வந்தான்.

"கடையில ரொம்ப கும்பலா இருக்கு! நம்ம பேக்கேஜ பார்த்துட்டே இங்க நில்லு.. நா பணம் கட்டிட்டு வந்துடறேன்.. இல்லன்னா பேக்கேஜை தேடறதில டைம் வேஸ்ட் ஆகிடும்.." என்று கூறி நிரஞ்சனாவை டெலிவரி செக்ஷனில் நிற்க வைத்துவிட்டு பணம் செலுத்தப் போனான்.

அவளும் தங்களுடைய புடவை பேக்கேஜை கவனித்தபடி அங்கே நின்றிருக்க, திடீரென்று ஒருவன் அவளருகில் வந்து அவளைப் பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டினான்.

".. என் சோத்தில மண்ணள்ளிப் போட்டு.. இங்க வந்து ஸாப்பிங்கு பண்றியா.. எம்மா கொல்ஸ்ட்ரால் ருந்தா.. நீ என் வேலயில மூக்க நொய்ப்ப.. கஸ்மாலம்.." என்று கத்தத் தொடங்க, நிரஞ்சனா கொஞ்சம் பயந்துதான் போனாள். ஆயினும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு,

"யார் நீங்க.. எதுக்கு எங்கிட்ட வந்து இப்டி தப்பு தப்பா பேசறீங்க.." என்று கேட்டாள்.

"அந்த நடிகை கூட சேந்துகிட்டு நீயும் நல்லாத்தான் நடிக்கற.. இருடீ.. ஊனியன்ல சொல்லி உன் வேலைக்கு நா வேட்டு வெக்கறேன்.." என்று கறுவினான்.

இதற்குள் பணம் செலுத்திவிட்டு வந்த தமிழ் நிரஞ்சனாவின் அருகில் வந்து,

"என்ன ரஞ்சனி.. என்ன பிரச்சனை.. யார் இவன்.." என்று கேட்டான்.

"தெரீலங்க.. திடீர்ன்னு என் கிட்ட வந்து கத்த ஆரம்பிச்சான்.. என்னன்னு கேட்டதும்.. யூனியன்ல சொல்வேன்னு மிரட்டறான்.. ஒண்ணும் புரியல.." என்றாள்.

"ஏய்.. யாரு நீ.. எதுக்காக தனியா நிக்கற பொண்ணுகிட்ட வந்து வம்பு பண்ற.." என்று தமிழ் அவனிடம் அதட்டலாகக் கேட்டான்.

"ஏய்.. அடியாள் வச்சி மெரட்டறியா.. நீ வாடீ.. நாளைக்கி உனுக்கு இருக்கு.." என்று மிரட்டிக் கொண்டே அங்கிருந்து நழுவினான்.

"என்ன நிரஞ்சனா.. யார் இந்த ஆளு.. வேலை செய்யற இடத்தில உனக்கு ஏதாச்சும் பிரச்சனையா.. யாராவது உன் கிட்ட தகராறு எதுவும் செய்றாங்களா.." பதட்டமாகக் கேட்டான் தமிழ்.

"அப்டி எதுவுமில்லங்க.. எல்லாரும் என் கிட்ட மரியாதையாதான் நடந்துக்கறாங்க.." என்றாள். ஆனால் அவளுடைய முகம் எதையோ யோசித்ததைக் காட்டியது.

"என்ன யோசனை? எதாச்சும் பிரச்சனைன்னா தைரியமா சொல்லு நிரஞ்சனா.." என்று அவளிடம் சொல்லிக் கொண்டே பணம் கட்டிய ரசீதை டெலிவரியில் தந்தான்.

"இல்லங்க.. அப்டி எதுவுமில்ல.. இருந்தா.. உங்ககிட்ட சொல்ல எனக்கென்ன பயம்.." என்றாள் அவள்.

"ஆர் யூ ஸ்யூர்.." என்று அவன் கேட்க,

"அப்சல்யூட்லீ.." என்றாள்.

"ம்.. அம்மா நல்லா ட்ரெயின் பண்ணியிருக்காங்க போல.. இங்க்லீஷ்லாம் ஈசியா பேசற.." என்று சிரித்தான்.

அவளும் அவனைப் பார்த்து சிரித்தாள்.

"சார்.. இந்தாங்க.." என்று பேக்கேஜ் டெலிவரியில் கடைச் சிப்பந்தி அழைக்க, அவர்கள் இருவரும் தங்கள் பேக்கேஜை வாங்கி சரி பார்த்துக் கொண்டு கடையிலிருந்து கிளம்பினர்.

ஜவுளிக்கடையிலிருந்து வெளியே வந்தவர்கள் முகிலையும் கயலையும் கண்களால் தேட, அவர்கள் அருகிலிருந்த பழரசக் கடையில் அமர்ந்திருந்தார்கள். தமிழும் நிரஞ்சனாவும் வெளியே வருவதைப் பார்த்த முகில் தமிழை அழைக்க, இவர்களும் அவர்களுடன் சென்று சேர்ந்து கொண்டார்கள்.

அடுத்ததாக டிசைனர் ப்ளவுசில் வைத்து தைப்பதற்காக அலங்கார குந்தன் கற்கள், பட்டு நூல், ஜர்தோசி போன்ற பொருட்கள் வாங்க, கயலும் நிரஞ்சனாவும் மட்டும் அந்த அங்காடித் தெருவிலிருந்த சிறிய சந்துக்குள் சென்றார்கள்.

"சீக்கிரம் வந்துடுங்க.. நாங்க இந்த கடையில எங்களுக்கு பெல்ட் பார்த்துட்டு இருக்கோம்.." என்றான் முகில்.

"சரிங்க.." என்றபடியே அவர்கள் சந்தில் மெதுவாக நடந்து சென்றார்கள்.

அந்த சிறிய சந்தில் எதிரும் புதிருமாக, குட்டி குட்டியாக நிறைய கடைகள் இருந்தன. கண்ணாடி வளையல் கடைகள், கவரிங் நகைக் கடைகள், கைப்பைக் கடைகள் என்று எல்லாம் பெண்களைக் கவரும் வகையான கடைகள் இருக்க இருவரும் வேடிக்கை பார்த்தபடியே சென்றனர்.

சில கடைகளில் நின்று தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கவும் செய்தனர்.

கைவேலை செய்யும் அலங்காரப் பொருட்கள் விற்கும் கடை அந்த சந்தின் கடைசியில் இருந்தது. அந்தக் கடையில் தங்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொண்டனர். சில கைவேலை செய்யும் பொருட்களைப் பார்த்து நிரஞ்சனா ஆசைப்பட, அதையும் கயல் வாங்கினாள்.

"பாக்கறதெல்லாம் வாங்கணும் போல இருக்குல்ல அண்ணி.. கண்ணப் பறிக்கிது.." என்று சிறு குழந்தையின் உற்சாகத்தோடு கூறிய நிரஞ்சனாவைப் பார்த்து புன்னகைத்தாள் கயல்.

"உனக்கு என்ன பிடிக்கிதோ எல்லாம் வாங்கிக்கோ ரஞ்சி.." என்றாள் கயல்.

"இல்லண்ணி.. இது போதும்.. இந்த கடை தெரிஞ்சிடுச்சில்ல.. இனிமே எதாச்சி வேணும்னா நானே வந்து வாங்கிக்கறேன்.. இப்ப நீங்க வாங்கி குடுத்தத செய்து முடிக்கவே ஆறு மாசம் ஓடிடுடும்.." என்று சிரித்தாள் நிரஞ்சனா.

"இதெல்லாம் வெச்சி என்ன செய்வ ரஞ்சி?"

"இத வெச்சி குட்டி குட்டி பொம்மை செய்லாம் அண்ணி.. அழகி வௌாடறதுக்கு.. அந்த பொம்மைய அழகியோட கவுன்ல அழகா தைக்கலாம்.. இதோ தொங்கிட்டிருக்கே.. இது மாதிரி கீ செயின் செய்யலாம்.. கார்ல தொங்க வுடற பொம்மை செய்யலாம்.. அப்றம் வாசல்ல மாட்ற தோரணம் செய்யலாம்.." என்று அடுக்கிக் கொண்டே போனாள் நிரஞ்சனா.

"முதல்ல ஒண்ணு சொல்லு ரஞ்சி.. உனக்கு என்னல்லாம் தெரியும்.. ஒரு புள்ளிய வெச்சா நீ கோலமே போடற.. ஒரு கோடு போட்டா நீ ஹைவேஸே போட்டுடற.." என்று கேட்க,

"ஹையோ அண்ணி.. நீங்க வேற.. இது எதோ மனசுக்கு தோணினத சொன்னேன்.. எனக்கு எதுவும் தெரியாது.." என்றாள்.

இருவரும் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் சரிபார்த்து வாங்கிக் கொண்டு கடையிலிருந்து வெளியே வந்தனர்.

கயல் முன்னால் நடக்க, நிரஞ்சனா பின்னாலேயே கடைகளை வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்தாள்.

ஒரு கடைக்குள்ளிருந்து ஒருவன் அவசரமாக வெளியே வரும்போது கவனிக்காமல் நிரஞ்சனாவின் மீது மோதிக் கொள்வது போல வந்து,

"சாரி மேடம்.." என்று சொல்லிக் கொண்டே அவளை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தான்.

"ஏய்.. நீ இன்னும் சாகலயா.. அடிப்பாவீ.." என்று சொல்லிக் கொண்டே தன் கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க, நிரஞ்சனா முகம் வெளிறினாள்.

அண்.. அண்.. அண்ணீ.. என்று குரலெழுப்ப முயன்றவள் முடியாமல் போக, அதற்குள் அந்த ஆள் நிரஞ்சனாவின் வாயைப் பொத்தி அந்தக் கடைக்குள்ளேயே இழுத்துச் சென்றான்.

ஆனால் நிரஞ்சனா பின்னால் வருகிறாளா என ஏதேச்சையாகத் திரும்பிப் பார்த்த கயல், நிரஞ்சனாவை யாரோ இழுத்துச் செல்வதைப் பார்த்து,

"தமிழ்.. முகில்.." என்று பெரிய சத்தத்துடன் அலறிக் கொண்டே அவளை நோக்கி ஓடினாள்.

அந்த சந்து முனையில் இருந்த ஒரு பெல்ட் கடையின் வாசலில் இவர்களு்காகக் காத்திருந்த தமிழும் முகிலும் கயலின் அலறல் கேட்டு அதிர்ந்து போய் சந்துக்குள் ஓடினார்கள்.




நிரஞ்சனாவை கடைக்குள் இழுத்துச் சென்றவன் யார்? அவள் உயிரோடிருப்பதைக் கண்டு அவன் ஏன் அதிர்ந்தான்? அடுத்தடுத்த அத்தியாயங்களில்..





- தொடரும்....
 
இன்னும் பிரச்சினை தீரலையா
ஆள் ஆளுக்கு வர்றாங்க
 
மிகவும் அருமையான பதிவு
அன்னபூரணி தண்டபாணி டியர்

இது யாரும்மா புதிய வில்லன்?
நிரஞ்சனா உயிரோடு இருப்பதில் இவனுக்கென்ன பிரச்சனை?
 
Last edited:
Oii babiii nee enna ipdi beethi ah kelapi utute iruke
Onnum puriyala
Inda pemaninga yara irukum
 
முருகா...இந்த ரைட்டரோட முடில.....புதுசு புதுசா பஞ்சாயத்து கொண்டுவந்து எங்களை கன்பியூஸ் பன்றாங்க
 
Top