Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

11. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


11. இவன் வசம் வாராயோ!



நிரஞ்சனா அன்று தன் குழந்தையை சமாதானம் செய்து தூங்க வைத்துவிட்டு அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள்.

அவள் கிளம்பிப் போன பின்பு, அவள் அவசரத்தில் கிளம்பியதால் அவளுடைய அறையில் பொருட்கள் எல்லாம் கலைந்துள்ளதே என்று எடுத்து வைக்க வந்த மதுரத்தின் கையில் பல வருடங்களுக்கு முந்தைய, பழைய திருமணப் பத்திரிகை ஒன்று கிடைத்தது.

அதை எடுத்து யதார்த்தமாகப் பார்த்த மதுரம் அதிர்ந்தாள்.

அது 1997ம் வருடம் ஜனவரி மாதம் 26ம் தேதியிட்ட, யாரோ, திருநிறைச் செல்வன் ராம்மோகனுக்கும் திருநிறைச்செல்வி குணசுந்தரிக்கும் நடந்த, பழைய திருமண அழைப்பிதழ்.

அதை எடுத்துத் தன் கணவனிடமும் அண்ணன் மற்றும் அண்ணியிடமும் காட்ட அவர்களும் அதிர்ந்தனர்.

டாக்டர் ராம்மோகனை இந்த பொண்ணுக்கு எப்டி தெரியும்!? இல்ல அந்த கல்யாணப் பொண்ணு குணசுந்தரிய தெரியுமோ.. அவளுக்கு சொந்தமா? ஆனா இந்த பத்திரிகைய இவ ஏன் வெச்சிருக்கா.. என்றெல்லாம் எண்ணி எண்ணி பெரியவர்கள் நால்வரும் தவித்துக் கொண்டிருந்தனர்.

நிரஞ்சனா வீட்டுக்கு வந்ததும் வளர்மதி அவளிடம் இந்த திருமணப் பத்திரிகையைக் காட்டிக் கேட்க,

"இது எப்டி உங்களுக்கு கெடச்சது?" என்றாள்.

"நீ அவசரத்தில கிளம்பி போய்ட்டம்மா.. உன் ரூம்ல பொருள் எல்லாம் இரைந்து கிடந்துச்சும்மா.. அத எடுத்த வெக்கறப்ப இது கையில கிடைச்சது.. அதான் கேட்டோம்.." மதுரம் நிதானமாக பதில் சொன்னாள்.

"இது என் சொத்து! இதுக்கு மேல இதப் பத்தி எதும் கேக்காதீங்க.. ப்ளீஸ்!" என்று சொல்லிவிட்டு அதை வாங்கிக் கொண்டு அவள் உள்ளே போய்விட்டாள்.

பெரியவர்களும் தங்களுக்குள் எதையோ பேசிக் கொண்டு இதைப் பற்றிக் கேட்காமல் விட்டுவிட்டனர்.

அன்றிரவு நிரஞ்சனாவால் உறங்க முடியவில்லை. அந்தப் பத்திரிகையை கையில் எடுத்து வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்.

இதைப் பார்த்த கயல் தன் கணவனிடம் கூற, அவன் தமிழிடம் கூற, அவன் தன் அம்மாவிடம் கேட்க, மதுரம் வீட்டில் நடந்ததைக் கூறினாள்.

தமிழ் நிரஞ்சனாவிடம் அவளுடைய அழுகைக்கான காரணத்தைக் கேட்டான்.

"நா எதையோ நெனச்சி அழுதுட்டுப் போறேன்.. என்ன விடுங்களேன்.." என்றாள் நிரஞ்சனா.

"இங்க பாரு ரஞ்சி.. இப்டி நெனச்சி நெனச்சி அழுதுட்டிருந்தா எல்லாம் சரியாகுமா.. என்னன்னு சொன்னா எங்களால எதாவது சரி பண்ண முடியுமான்னு பாக்கலாம்ல.." என்றான் முகிலன்.

"இல்லண்ணா.. இதெல்லாம் சரி பண்ணவே முடியாத ஒண்ணு.. எல்லாம் என்னோட போகட்டும்.. ப்ளீஸ்.. எதையும் கேக்காதீங்க.." என்றாள் நிரஞ்சனா.

"சரி! எதையும் கேக்கலம்மா. ஆனா டாக்டர் ராம்மோகனை எப்டி தெரியும்னு சொல்லுமா.. இல்ல அந்த பொண்ணு குணசுந்தரிய உனக்கு தெரியுமா? சொல்லுமா!" என்று ஈஸ்வர பாண்டி கேட்டு விட,

"டாக்டர் ராம்மோகனை உங்களுக்குத் தெரியுமா? எப்டி தெரியும்?" என்று அவசரமாகக் கேட்டாள் நிரஞ்சனா.

"முதல்ல நீ சொல்லுமா!?" கொக்கி போட்டார் ஈஸ்வர பாண்டி.

நிரஞ்சனா எதுவும் சொல்லாமல் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.

"தயவு செய்து என்கிட்ட எதுவும் கேக்காதீங்க.. இந்த கல்யாணப் பத்திரிகை என் சொத்து.. இப்போதைக்கு இதத் தவிர எதுவும் சொல்ல நான் விரும்பல.." என்றாள் நிரஞ்சனா.

அதற்கு மேல் யாரும் அவளை எதுவும் கேட்காமல் எழுந்து சென்று விட்டனர்.

ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் கூடிப் பேசி ஏதோ ஒரு முக்கியமான முடிவை எடுத்துக் கொண்டு மறுநாள் காலை தங்களுடைய சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

அவர்கள் சென்ற பின், தமிழ் நிரஞ்சனாவிடம் கேட்டான்.

"நேத்திக்கு உங்க அண்ணி போன் பண்ணியிருந்தாங்க.. உன்ன கண்டுபிடிக்க முடிஞ்சுதான்னு கேட்டாங்க.. நா பதில் எதும் சொல்லல.. சிக்னல் வீக்கா இருக்கு.. அவங்க பேசறது கேக்கல.. அப்றம் பேசறேன்னு சொல்லி வெச்சிட்டேன்.. நீ இங்க பத்திரமா இருக்கன்னு அவங்க கிட்ட சொல்லவா வேணாமா.." என்று கேட்டான்.

"என்னப்பத்தி கவலப்படற ஒருத்தி அவ மட்டும்தான்.. பாவம்.. ஆனா நா இங்க இருக்கேன்னு அவ கிட்ட சொல்ல வேணாம்.." என்றாள் நிரஞ்சனா.

"ஏன்? உன்னப்பத்தி கவலப்படறவங்கன்னு சொல்ற.. அப்றம் என்ன?"

"என்னப்பத்தி கவலப்படறவதான்.. ஆனா ஓட்ட வாயி.. பேச்சோட பேச்சா அண்ணன்கிட்ட சொல்லிடு்ம்.. உடனே அண்ணன் அம்மாவ கூட்டிட்டு வந்துடுவான்.. அப்றம் திரும்பவும் நரகம்தான் என் வாழ்க்கை.. முன்னயாச்சும் நா மட்டும்தான்.. எப்டியோ சமாளிச்சேன்.. இப்ப என் குழந்தையும்.. ரொம்ப கஷ்டம்.. என்ன நோகடிச்ச மாதிரியே என் குழந்தையையும் நோகடிப்பாங்க.. அவங்க முன்னாடி வாழ்ந்து காட்டணும்னுதான் நா அந்த வீட்லேர்ந்து வெளியேறினேன்.. அதனால நா தலை நிமிர்ந்து நிக்கற வரைக்கும் நா இங்க இருக்கேன்னு அவங்களுக்கு தெரிய வேணாம்.. ப்ளீஸ்.. சொல்லிடாதீங்க.." என்றாள்.

தமிழ் அவளுடைய பேச்சைக் கேட்டு வியந்தான்.

எதுவும் தெரியாத பொண்ணுன்னு நெனச்சேன். எவ்ளோ தெளிவா சிந்திக்கறா.. என்று தனக்குள் வியந்து கொண்டான்.

"கண்டிப்பா சொல்ல மாட்டேன். தைரியமா இரு.." என்று கூறிவிட்டுப் போனான்.

பள்ளி வேலைக்குப் போவதால் ஓரளவு தைரியமும் தன்னம்பிக்கையும் வரப் பெற்றவளாய் வலம் வந்தவளை பார்க்கமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் தமிழ்.

"இன்னும் எவ்ளோ நாளுக்குதான் அவள இப்டியே தள்ளி நின்னு பார்த்து ரசிப்ப.." என்று கேட்டான் முகில்.

"அவளா மனசு மாறி என்னைய நிமிர்ந்து பாக்கற வரைக்கும்.." என்றான்.

"ஒரு வேளை அவ நிமிர்ந்து உன்ன பாக்கலன்னா.."

"ஹூம்.. இதான் என் விதின்னு விட வேண்டியதுதான்.." என்றான் தமிழ்.

"டேய்.. லூசு.. அவ பாக்கலன்னா அவள உன்ன பாக்க வெய்.." என்று சொல்லிவிட்டு, எல்லாம் நானே சொல்லிக் குடுக்க முடியுமா.. என்று மானசீகமாகத் தன் தலையில் தட்டிக் கொண்டே அங்கிருந்து சென்றான் முகில்.

நீ ஒண்ணும் சொல்லி குடுக்க வேணாம்.. எல்லாம் நானே பாத்துக்குவேன்.. என்று தனக்குள் நினைத்தபடி முகிலைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டான் தமிழ்.

அன்று கயலின் அலுவலகத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் கயல் சீக்கிரமே அலுவலகம் கிளம்பியிருந்தாள்.

காலை பதினொரு மணி இருக்கும். அவசரமாக வீட்டுக்கு அழைத்தாள் கயல்.

வளர்மதிதான் அவள் அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ.. யாருங்க.."

"அத்த.. நா கயல் பேசறேன்.. ரஞ்சிய கூப்பிடுங்க.." என்றாள்.

"அவ பள்ளிக்கூடம் போயிருக்காளேம்மா.."

"ஓ.. சரி.. சரி.. அவ வந்ததும் என்ன கூப்பிட சொல்லுங்க.. ரொம்ப அர்ஜென்ட்டுன்னு சொல்லுங்க அத்த.. மறந்துடாதீங்க.." என்றாள்.

"சரிம்மா.. நா சொல்றேன்.. ஏம்மா.. உடம்பு எதும் சரியில்லயா.. ஏன் அவசரமா பேசற.."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்த.. நா நல்லாதான் இருக்கேன்.. இன்னிக்கு இங்க ஒரு முக்கியமான நிகழ்ச்சின்னு சொன்னேன்ல.. அதான்.. சரி.. அவ வந்ததும் என்ன கூப்பிட சொல்லுங்க அத்த.." என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

அரை மணி நேரம் கழித்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த நிரஞ்சனாவிடம் கயல் கூறியதைக் கூறிய வளர்மதி,

"அவ என்னமோ உன் கிட்ட சொல்லணும் போல.. உன்ன போன் பண்ண சொன்னா.. போன் பண்ணு.." என்றாள்.

நிரஞ்சனாவும் கயலுக்கு அழைத்தாள்.

"அண்ணி! நா ரஞ்சி பேசறேன்."

"ஆங்.. ரஞ்சி.. கரெக்ட்டா போன் பண்ணின.. நீ என்ன பண்ற.. கிளம்பி ரெடியா இரு.. நா கால் டேக்சி புக் பண்ணியிருக்கேன்.. கரெக்ட்டா ஏறி எங்க ஆஃபீஸ் வந்துடு.. சரியா.. ஒரு முக்கியமான வேலை.. சரியா.. ரெடியாகி இரு.. ரெண்டு நிமிஷத்தில கால் டேக்சி வந்துடும்.." என்றாள் கயல்.

"ஐயோ.. அண்ணி.. ஆனா குழந்தைங்க.." என்று நிரஞ்சனா பதற,

"ஓ.. அது ஒண்ணு இருக்கோ.. சரி.. நீ போனை அத்த கிட்ட குடு.." என்றாள் கயல்.

வளர்மதியிடம் தொலைபேசிக் கருவியைத் தந்தாள் நிரஞ்சனா.

"சொல்லு கயல்!"

".."

"ம்.."

".."

"ம்.."

".."

"அதுக்கென்ன.. நாங்க பாத்துக்கறோம்.. நீ எதுக்கும் கவலப்படாத.." என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டு,

"ரஞ்சி.. இதுக்காம்மா பயந்த.. நாங்க இருக்கோம்மா.. புள்ளைங்கள நாங்க பாத்துக்குவோம்.. நீ எதப்பத்தியும் கவலப்படாம போய்ட்டு வா.." என்று கூறி நிரஞ்சனாவை அனுப்பி வைத்தாள்.

என்ன எதுக்கு அவங்க ஆஃபீசுக்கு வர சொல்லியிருக்காங்க.. அது டீவி டேசன்னு சொல்லிருக்காங்க.. அங்க எனக்கென்ன வேலை இருக்க முடியும்.. ரொம்ப பதட்டமா பேசினாங்களே.. ஒரு வேள கீழ கீழ விழுந்து அடி கிடி பட்டுகிட்டாங்களோ.. எழுந்து நடக்க முடியலயோ.. அதான் துணைக்கு என்ன வர சொன்னாங்களோ.. அம்மா கிட்ட சொன்னா பதட்டப் படுவாங்கன்னு நெனச்சி என் கிட்ட சொல்லியிருக்காங்க போல.. பாவம் கயலண்ணி..

கயலின் அலுவலகத்துக்கு கால் டேக்சியில் பயணித்தபடியே யோசனை செய்து கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

அங்கே போய் இறங்கியவளை ஒருவன் வந்து அழைத்துச் சென்றான். அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரம்மாண்டமான கட்டிடங்களைப் பார்த்து பிரமித்தபடியே உள்ளே சென்றாள்.

ப்பா.. எவ்ளோம் பெரிய ஆஃபீஸ்.. இவ்ளோம் பெரிய ஆஃபீஸ்லயா அண்ணி வேல பண்றாங்க.. ரொம்ப பெரிய படிப்பு படிச்சிருக்காங்க போல.. இது கூட இவங்கண்ணன் வேல பண்ற பேப்பர் கமபெனியோட டீவிதான.. அப்ப அந்தாளோட ஆஃபீசும் கூட இப்டி பெரிசா இருக்குமோ.. அப்ப அந்தாளும் பெரிய படிப்பு படிச்சிருக்கான் போல.. என்று வியந்தபடியே, வந்தவன் பின்னால் சென்றாள்.

அங்கே போனவள், ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்த கயலைப் பார்த்துக் குழம்பினாள்.

இவங்களுக்கு அடி எதுவும் படல.. அப்றம் எதுக்கு என்ன வரச் சொன்னாங்க.. என்று யோசித்தபடி அவளருகில் சென்றாள் நிரஞ்சனா.

நிரஞ்சனாவைப் பார்த்த கயல்,

"ஹப்பாடா.. நல்ல வேளை.. நீ கரெக்ட் டைமுக்கு வந்துட்ட.. வா.. வா.." என்று அவளை அவசரமாக ஒப்பனை அறைக்கு அழைத்துச் சென்றாள்.

"என்ன அண்ணி.. என்ன எதுக்கு இங்க வர சொன்னீங்க.." கேட்டபடியே அவள் பின்னால் சென்றாள் நிரஞ்சனா.

ஒப்பனை அறைக்குள் நுழைந்த கயல்,

"ரஞ்சி! இன்னும் ஒரு மணி நேரத்தில முக்கியமான ஒரு ப்ரோக்ராம் இருக்கு.. அதுக்கு நாந்தான் ஹோஸ்ட்.. இந்த புடவை கட்டணும்னு எடுத்துட்டு வந்தேன்.. ஆனா இதோட ப்ளவுஸ் இப்டி நேரங் கெட்ட நேரத்தில தையல் விட்டிருக்குப்பா.. எப்டி இழுத்து போத்திகிட்டாலும் இந்த இடத்தை மறைக்க முடியல.. ரொம்ப அவசரம்.. ஏதாச்சும் பண்ணேன்.. ப்ளீஸ்.. முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதப்பா.." என்றாள்.

"ப்பூ.. இவ்ளோதானா.. நா என்னமோ ஏதோன்னு நெனச்சி பயந்தே போனேன்.. குடுங்க.." என்று சொல்லி கவலை விலகியவளாய் அந்த ரவிக்கையை வாங்கி முன்னும் பின்னும் பார்த்தாள்.

"தையல் மிசினு இருக்கா அண்ணி.. இல்லன்னா ஊசி நூல்.."

"இதோ. இங்க எல்லாமே இருக்கு.." என்று காட்டினாள் கயல்.

சரியாக பதினைந்து நிமிடத்தில் நிரஞ்சனா அந்த ரவிக்கையைின் டிசைனை மாற்றி அழகு படுத்தி கயலிடம் தந்தாள்.

"ரஞ்சின்னா ரஞ்சிதான்.. சூப்பர்.. அதுக்குதான் உன்ன கூப்பிட்டேன்.." என்று சொல்லி நிரஞ்சனாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் கயல்.

"ஐயோ.. என்ன அண்ணி.. இந்த சின்ன விசியத்துக்கு போய்.." என்று வெட்கத்துடன் புன்னகைத்துச் சொன்னாள் நிரஞ்சனா.

அப்போது அங்கு வந்த கயலின் மற்ற தோழிகள் எல்லாம் கயலின் புதிய ரவிக்கையைப் பார்த்து விட்டு வியந்து பாராட்டினார்கள்.

"வாவ்.. திஸ் இஸ் அமேசிங்.. ஷீ இஸ் ஹைலி டேலன்டட்.."

"ஃபன்டாஸ்டிக்.." என்றெல்லாம் ஆங்கிலத்தில் கூறிப் புகழ, நிரஞ்சனாவின் முகம் வெட்கச் சிவப்பை நிரந்தரமாகப் பூசிக் கொண்டது போல் ஆனது.

"சரி அண்ணி. நா கிளம்பட்டுமா.." என்று கிளம்ப,

"ஹே கயல்.. உன் பிரச்சனை முடிஞ்சது.. ஆனா அடுத்த பெரிய பிரச்சனை ஆரம்பிச்சிருக்குடீ.." என்று ஓடி வந்தாள் மற்றொரு தோழி.

"என்னடீ.." என்று கயல் கேட்க,

"அந்த மேக்கப்மேன்.. நல்லா ஏத்திகிட்டு வந்திருக்கான் போல.. மட்டையாகிட்டான்.. என்னென்னமோ பண்ணிப் பாத்தாச்சு.. மனுஷன எழுப்பவே முடியல.."

"ம்ச்.. அந்தாளுக்கு இதே வேலையாப் போச்சு.. மொதல்ல அவன வேலைய விட்டு நிறுத்தணும்.. சரி.. அத அப்றம் பாக்கலாம்.. நீ பக்கத்து தெருவில இருக்கற ப்யூட்டி பார்லர்லேர்ந்து ப்யூட்டிசியன் வர வை.. நமக்கு இப்போதைக்கு வேற வழியில்ல.." என்றாள் கயல்.

"அண்ணி.. ப்யூட்டி பார்லர் எதுக்கு.. நா வேணும்னா ஹெல்ப் பண்ணவா.." என்று நிரஞ்சனா கேட்க,

"ஒனக்கு மேக்கப் போட தெரியுமா ரஞ்சி.."

"கொஞ்சம் கொஞ்சம்.. அரை குறையா.. போட்டு காட்டறேன்.. ஓகேவான்னு பாருங்க.. பிடிச்சிருந்தா என்னையே வேலைக்கு வெச்சுக்கோங்க.." என்றாள்.

"சரி! போடு.." என்று கயல் நிரஞ்சனாவுக்கு அனுமதி கொடுக்க, நிரஞ்சனா ஒரு பெண்ணுக்கு மேக்கப் போட்டு விட்டாள்.

அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் எந்தப் பொருளையும் வீண் செய்யாமல், மிகவும் நேர்த்தியாக அவள் அந்தப் பெண்ணுக்கு ஒப்பனை செய்து விட, மீண்டும் அங்கே பாராட்டு மழையில் நனைந்தாள் நிரஞ்சனா.

"நீ ப்யூட்டிசியன் கோர்ஸ் எதும் படிச்சியா ரஞ்சி.." கயல் கேட்க,

"நீங்க வேற அண்ணி.. நானாவது ப்யூட்டீசியனாவது.. காமெடி பண்ணாதீங்க.." என்றாள் நிரஞ்சனா.

"பின்ன எப்டி.. இவ்ளோ பர்ஃபக்ட்டா.. இவ கலருக்கு ஏத்த மாதிரி பர்ஃபக்ட் காம்பினேஷன்ல.. செம்மயா மேக்கப் போட்டிருக்க.. அப்டியே சினிமால போடற மாதிரி.. எப்டி.."

"எங்க அண்ணி எங்க ஊர்ல ப்யூட்டி பார்லர்லதான் வேல பண்ணிச்சு.. அப்பல்லாம் அம்மா திட்டினா.. நா அங்கதான் போய் உக்காந்துப்பேன்.. அப்றம் அண்ணன லவ் பண்ணி கல்யாணம் கட்டினப்றம் அண்ணன் அதுக்கு ப்யூட்டி பார்லர் வெச்சி குடுத்திருக்கான்.. அப்பவும் அந்த பார்லர்லதான் இருப்பேன்.. அப்டியே அண்ணியும் மத்த பொண்ணுங்களும் மேக்கப் போடறத பாத்து பாத்து நானும் கொஞ்சம் கத்துகிட்டேன்.. பேசியல்.. த்ரடிங்.. பெடிக்யூர் மெனிக்யூர்.. கலரிங்.. வேக்சிங்.. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.." என்றாள்.

"கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சதுக்கே இவ புகுந்து வெளையாடறா.. முழுசா தெரிஞ்சிருந்தா ஆஸ்கர் அவார்டே வாங்குவா போல.." என்று ஒருத்தி சொல்லிவிட்டுப் போக, கயல் நிரஞ்சனாவைப் பெருமையாகப் பார்த்தாள்.

"இனிமே ஒனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லாத ரஞ்சி.. சரி.. சீக்கிரம்.. இவங்களுக்கெல்லாம் நீ மேக்கப் போடணும்.. சீக்கிரம்.. வேலைய ஆரம்பி.. இன்னும் ஒரு மணி நேரத்தில இவங்க ப்ரோக்ரம் ஆரம்பிக்கும்.. அதுக்கு முன்னாடி.. எனக்கு போடு.. என் ப்ரோக்ராமுக்கு டைம் ஆச்சு.." என்று கூறிக் கொண்டே கயல் ஒப்பனை செய்து கொள்ள அமர்ந்தாள்.

அன்று நிரஞ்சனா அந்த தொலைக்காட்சி அலுவலகத்தின் பேசு பொருளாக மாறிப் போனாள். அவள் அன்று செய்துவிட்ட ஒப்பனை அவளுக்கு மிகப் பெரிய வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது.

ஆம். அன்று கயல்விழி பேட்டி கண்டது தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகி ஒருவரை. அவள் நிரஞ்சனாவின் கைவண்ணத்தை நேரில் கண்டு வியந்து பாராட்டினாள்.

பாராட்டியதோடல்லாமல் இப்போது தான் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் தனக்கு ஒப்பனை செய்யும் ஒப்பந்தத்தை கையோடு வழங்கி, அதற்கு முன்பணமாக ரூ. இருபத்தி ஐந்தாயிரத்துக்கான காசோலையை வழங்கிவிட்டு,

"நீங்கதாம்மா இனிமே எனக்கு மேக்கப் ஆர்டிஸ்ட்.. அது மட்டுமில்லாம.. எனக்கு காஸ்ட்யூம் டிசைனரும் நீங்கதான்.. நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வீட்டுக்கு வண்டி வரும்.. ரெடியா இருங்க.." என்று சொல்லிவிட்டுச் சென்றவளை அங்கிருந்த அனைவரும் விழியசைக்காமல் பார்த்தார்கள்.

நிரஞ்சனாவுக்கு எதுவுமே புரியவில்லை! கண்களில் கண்ணீருடன் கயலின் கையைப் பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டாள்.

"அண்ணி.. நீங்க என் வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சிருக்கீங்க.. உங்களுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியல.." என்று அழுதவளை கட்டிக் கொண்டு தேற்றினாள் கயல்.

"எவ்ளோ பெரிய விஷயம் இது.. சந்தோஷப்படறத விட்டுட்டு இப்டி அசடு மாதிரி அழறியே.. வா.. இந்த நல்ல செய்திய வீட்டுல இருக்கறவங்களுக்கு சொல்லணும்.. அம்மா.. அத்தையெல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.." என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றாள் கயல்.

அவர்கள் வீட்டுக்குப் பயணம் செய்கையில் தமிழ் கயலுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

"எல்லாம் சக்ஸஸ்தானே?"

"சக்ஸஸா? க்ராண்ட் சக்ஸஸ்.. நீ வீட்டுக்கு வா.. பெரிய சர்ப்ரைஸ் காத்துகிட்டிருக்கு உனக்கு.. நிரஞ்சனா ஓவர் நைட்ல ஒபாமா ஆயிட்டா.." என்று பதில் அனுப்பினாள்.

"என்ன சொல்ற.. புரியும்படி சொல்லு.." என்று கேட்டவனுக்கு வீட்டுக்கு வந்து தெரிஞ்சுக்கோ என்று பதில் அனுப்பிவிட்டு தனக்குள் சிரித்துக் கொண்டாள் கயல்.






நிரஞ்சனாவின் வாழ்வில் இனி வசந்தம்தானே வீசும்! இதில் சந்தேகமென்ன?






- தொடரும்....

 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
சூப்பர் நிரஞ்சனா..இவ்வளவு திறமைய வச்சிட்டு ஒன்னும் தெரியாதுன்னு சொல்ற...நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு...இனி வாழ்வில் ஏறுமுகம் தான்
 
Top