Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

10. Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member
10. இவன் வசம் வாராயோ!



"என்ன எங்க கூட்டிட்டு போறீங்க?"

ரயிலில் பயணித்தபடியே தமிழிடம் கேட்டாள் நிரஞ்சனா.

"ஏன்? சொன்னாதான் கூட வருவியா?"

"இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?"

"என் வீட்டுக்குதான்! வேற எங்க போவேன்னு நெனச்ச?"

"உங்க வீட்ல யார்லாம் இருக்காங்க?"

"வீட்ல யார்லாம் இருப்பாங்க.. எல்லார் வீட்லயும் இருக்கற மாதிரி என் அப்பா அம்மாதான் இருக்காங்க.." நக்கலாகக் கூறினான்.

"வந்து.. உங்க பொண்டாட்டி குழந்தைலாம்.." இழுத்தாள்.

"ஹேங்.. நீயே வந்து பாத்து தெரிஞ்சுக்கோ.." இன்னும் அதிக நக்கலுடன் கூறினான்.

நிரஞ்சனா கோபமாக அவனை முறைக்க, அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடியபடி இருந்தான்.

ரயில் நுங்கம்பாக்கத்தில் நிற்க, தமிழ் குழந்தையுடன் நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு ரயிலிலிருந்து இறங்கினான்.

அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

அழைப்பு மணிச்சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்த மதுரம்,

"வாம்மா! உள்ள வா!" என்று கூறி அழைக்க, நிரஞ்சனாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

"இவங்க என் அம்மா!" என்றான் தமிழ். அதில் கொஞ்சம் ஏளனம் இருப்பதாக நிரஞ்சனாவுக்குத் தோன்ற, அதுவே அவளுடைய அழுகையைத் தூண்டிவிடப் போதுமானதாக இருந்தது.

தன் கீழுதட்டைக் கடித்து பெரிதும் சிரமப்பட்டு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். அப்படியும் வலது கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தே விட்டது.

எதுவும் சொல்லாமல் தமிழிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் மதுரம்.

அவளுக்காக தனியாக அறை ஒன்று தயாராக இருந்தது.

"நீ இந்த ரூமை யூஸ் பண்ணிக்கம்மா!" என்றாள் மதுரம்.

வாசலில் அழைப்பு மணிச்சத்தம் கேட்க, தமிழ் சென்று கதவைத் திறந்தான்.

வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

"ரொம்ப தேங்க்ஸ் ரங்கசாமி.. இந்தாங்க.. இத அப்டியே எடிட்டர்ட்ட குடுத்துடுங்க.. பத்திரம்.. நா கொஞ்சம் லேட்டாதான் வருவேன்னு சொல்லிடுங்க.. நா ஏற்கனவே சார் கிட்ட பேசிட்டேன்.." என்று கூறி பெரிய அளவிலான தோல் பையை அவரிடம் தந்தான் தமிழ்.

"சரிங்க சார்! நா பத்திரமா குடுத்திடறேன்!" என்று சொல்லி அவர் அதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அவரை அனுப்பிவிட்டு தமிழ் உள்ளே வந்தான்.

மதுரம் குழந்தைக்கு பால் எடுத்து வந்து கொடுத்தாள்.

"நீ போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாம்மா!" என்று கனிவுடன் கூறினாள் மதுரம்.

"ம்.. பாத்ரூம்.." என்று தயங்கிய குரலில் நிரஞ்சனா கேட்க, மதுரம் காட்டினாள்.

நிரஞ்சனா குழந்தையின் பால் பாட்டிலை பிடித்திருந்ததால், நகராமல் அமர்ந்திருக்க,

"நா பாத்துக்கறேன்! நீ போய்ட்டு வாம்மா!" என்று மதுரம் பாட்டிலைப் பிடித்துக் கொண்டு, அவளை அனுப்பி வைத்தாள்.

இது ஏன்? எதுக்கு இப்டி? இன்னும் என்ன என்ன செய்ய காத்திருக்க ஆண்டவா? என்று கடவுளிடம் கேட்டபடியே தன் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு முகத்தில் நன்றாக தண்ணீர் அடித்து கழுவிக் கொண்டு வந்தாள்.

குழந்தை பாலைக் குடித்துவிட்டு தூங்கியிருந்தது.

அவளுடைய கண்களின் சிவப்பிலிருந்தே அவள் அழுத்திருக்கிறாள் என்று மதுரத்துக்கு தெளிவாகத் தெரிந்தது.

"இந்தம்மா.. காபி குடி. சூடா இருக்கு.." என்று அன்புடன் மதுரம் அவளை உபசரிக்க, தயக்கத்துடன் அவள் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டாள் நிரஞ்சனா.

அந்த பெரிய வீட்டில், வேறு யாரும் அவளுடைய கண்களில் படவில்லை.

கயலும் முகிலனும் உடற்பயிற்சி செய்யப் போயிருக்க, வளர்மதியும் ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் இன்னும் விழித்திருக்கவில்லை.

இவங்க மாட்டும்தான் இருக்காங்க.. அப்ப அந்தாளுக்கு கல்யாணம் ஆகல போல.. இல்லன்னா கல்யாணம் ஆகி பொண்டாட்டி டெலிவரிக்கு போயிருக்காளோ.. இவங்கம்மா வீட்ல இருக்கறதுனாலதான் என்ன இங்க கூட்டிட்டு வந்திருக்கானோ.. ஆனா ஏன் என் புருஷன்னு சொல்லிகிட்டான்.. என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

இப்போது வரை அவன் ஏன் தன் கணவன் என்று தன்னை தேவகி டீச்சரிடம் அறிமுகம் செய்து கொண்டான் என்று அவளுக்குப் புரியவேயில்லை.

என்ன கண்றாவியோ.. இருந்துட்டுப் போகட்டும்.. மதியம் ஆனதும் தேவகி டீச்சரோட மாமா வீட்டுக்குப் போயி அவங்க சொல்ற மாதிரி செய்யணும்.. அப்பதான் நிம்மதி.. என்று நினைத்துக் கொண்டாள்.

அவள் காப்பியைக் குடித்துவிட்டு தம்ப்ளரை கழுவிக் கவிழ்க்கும் போது கயலும் முகிலும் அங்கே வந்தனர்.

இருவரும் தங்களுடைய காலை உடற்பயிற்ச்சியை முடித்துக் கொண்டு வந்திருக்கிறாகள் என்பது வியர்வையால் நனைந்திருந்த அவர்களுடைய ஸ்போர்ட்ஸ் உடையால் தெரிந்தது.

"என்ன? புருஷனும் பொண்டாட்டியுமா சேர்ந்து ஜிம்ல தூங்கிட்டு வரீங்களா.." என்று தமிழ் வழக்கம் போல அவர்களை நக்கலடிக்க,

"டேய்.. அடங்குடா.. எங்கள என்ன உன்ன மாதிரின்னு நெனச்சியா.. ஆபீஸ் வேலையா ஊருக்குப் போறேன்னு சொல்லிட்டு அடுத்த தெருவில இருக்கற பார்க்ல படுத்து தூங்கிட்டு நீ வரது எங்களுகென்ன தெரியாதுன்னு நெனச்சியா?" என்று முகிலன் பதிலுக்கு அவனைக் கலாய்த்தான்.

"அடப்பாவீ.. மனுஷன் நாலு நாளா வெளியூருக்குப் போயி சரியான சோறு தண்ணியில்லாம கடமையாற்றிட்டு வந்திருக்கேன்.. என்னைய போயி.." என்று அங்கலாய்த்தான் தமிழ்.

"சும்மா கடமையாற்றினேன்.. காப்பியாத்தினேன்னு உளறிகிட்டிருக்காதடா.." என்று முகில் மீண்டும் அவனை வாரினான்.

அப்ப முகிலண்ணனும் கயலண்ணியும் கூட இங்கதான் இருக்காங்களா.. தாம்பரத்திலிருந்து இங்க வந்துட்டாங்க போல.. அதானா.. இந்தாள் என்னைய இங்க கூட்டிட்டு வந்திருக்கான்.. கொஞ்சம் நல்லவந்தான் போலிருக்கு.. ஆனா ரொம்ப திமிர் பிடிச்சவனா இருக்கான்.. எப்பவும் என்னைய மிரட்டற மாதிரியே பேசறான்.. என்று தனக்குள் நினைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நிரஞ்சனா.

அதற்குள் அனைவருக்கும் மதுரம் காப்பி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

கயல் நிரஞ்சனாவின் அருகில் சென்று,

"எப்டியிருக்க நிரஞ்சனா!?" என்று கேட்டதுதான் தாமதம். அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது.

"திரும்பவும் உங்களுக்கு தொந்திரவா வந்துட்டேன்.. என்ன மன்னச்சிடுங்க அண்ணி.." என்று அவள் அழுகைக்கு நடுவே புலம்ப,

"அப்டிலாம் சொல்லவே கூடாது! இவ ஒனக்கு அண்ணின்னா இது உன் அண்ணன் வீடும்மா.. நீ என் பொண்ணு.. எங்களுக்கு தொந்திரவான்னு ஏன் நெனக்கிற.. இப்டிலாம் இனிமே பேச மாட்டேன்னு சொல்லுமா.." என்று சொல்லிக் கொண்டே அவளுடைய தலையைக் கோதினாள் அங்கே வந்த வளர்மதி.

மதுரமும் கயலும் வளர்மதியை வியப்புடன் பார்க்க, வளர்மதி அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

இதையெல்லாம் தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த தமிழும் முகிலும், தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

"அத்ததான் பிரச்சன பண்ணுவாங்கன்னு நெனச்சேன்.. ஆனா அத்த ஈசியா அவள மகளா ஏத்துகிட்டாங்களே.. ஆச்சர்யமா இருக்கு.." என்று தமிழ் கூற,

"ஆமாடா.. எனக்கும்தான்.." என்று முகிலும் ஆமோதித்தான்.

"உங்களுக்கு மட்டுமா? எங்களுக்கும் கூட ஆச்சர்யமாதான் இருக்கு.." என்று கிசுகிசுத்த குரலில் கூறிக்கொண்டே அவர்களருகில் வந்தார்கள் முகிலின் அப்பா ஈஸ்வர பாண்டியும் தமிழின் அப்பா சொக்கலிங்கமும்.

"அப்றம் என்ன? கல்யாணப் பேச்ச ஆரம்பிச்சிடு முகில்!" என்றார் ஈஸ்வர பாண்டி.

முகில் சரியென்று தலையாட்டியபடி தன் வாயைத் திறப்பதற்குள் வளர்மதியே ஆரம்பித்தாள்.

"போனதெல்லாம் போச்சு.. விடுமா! யப்பா தமிழு.. என் மகளை கல்யாணம் கட்டிகிட்டு அவள கண் கலங்காம பார்த்துக்கப்பா.." என்று யதார்த்தமாகக் கூறுவது போல கல்யாணப் பேச்சைத் தொடங்க,

நிரஞ்சனாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.

"இதெல்லாம் உங்க ப்ளானா? அதுக்குதான் என்ன இங்க கூட்டிட்டு வந்தீங்களா?!" என்று தமிழைப் பார்த்து கோபமாகக் கேட்டாள்.

"என்னம்மா இது? ஏன் இப்டி? இப்ப என்ன நடந்துச்சுன்னு இவ்ளோ கோவப்படற.." என்று எல்லாருமே வேறு வேறு வார்த்தைகளில் இந்தக் கேள்வியைக் கேட்டனர்.

"நா யாரு என்னன்னு தெரியுமா? என் பிரச்சனை என்னன்னு தெரியுமா? நீங்க பாட்டுக்கு வரீங்க.. புருஷன்னு சொல்றீங்க.. உங்களோட கூட்டிட்டு வரீங்க.. சரி.. அந்த தெரு நாய்கிட்டேந்து காப்பாத்ததான் இப்டி சொல்றீங்கன்னு நெனச்சா இப்ப என்ன நெஜமாவே கல்யாணம் பண்ணிக்க ப்ளான் போட்ருக்கீங்க.. இதான் நீங்க படிச்ச லட்சணமா? ஒரு பொண்ணு தனியா இருந்தா வந்துடுவீங்களே.. ஆதரவு தரேன்னு.. ச்சே.." என்று மள மளவென்று பொரிந்து தள்ளினாள்.

தமிழ் அவளைப் பார்த்து,

"சரி! போதும்! நீ கோவமா இருக்கற மாதிரி நடிக்கறன்னு இங்க எல்லாருக்கும் தெரியும். உள்ள போ!" என்று நிதானமாகக் கூறினான்.

அவள் இன்னும் கோபமாக அவனை முறைத்தாள்.

"அதான் சொல்றேன்ல.. உள்ள போன்னு.." என்று கொஞ்சம் கடுமையாகக் கூறினான் தமிழ்.

"இங்க பாருங்க! நா கல்யாணம் ஆனவ.. ஒரு குழந்தையும் இருக்கு.. அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட இப்டி அநாகரீகமா நடந்துக்கறீங்களே.. உங்களுக்கு வெக்கமா இல்ல.." என்று கோபமாகக் கேட்டாள்.

"உனக்கு நடந்தது கல்யாணமேயில்ல.. உனக்கு முன்னாடியே உன்ன மாதிரி பல பொண்ணுங்கள கல்யாணம் பண்ணி ஏமாத்தினவன்தான் உனக்கு புருஷனா இருந்தவன்.. அதனால உனக்கு நடந்த கல்யாணம் செல்லாது.. உன் குழந்தையும்.." என்று சொல்லி மேற்கொண்டு சொல்லாமல் நிறுத்தினான் தமிழ்.

இதைக் கேட்ட நிரஞ்சனா அதிர்ந்து அவனைப் பார்க்க,

"உன்ன ஏமாத்தின அந்த நாய் இப்ப ஜெயில்ல களி தின்னுகிட்டிருக்கான்.." என்றான்.

தன் மொத்த பலமும் அழிந்தது போல உணர்ந்தவளாகத் தரையில் பொத்தென அமர்ந்தாள் நிரஞ்சனா.

"உன்ன பயமுறுத்தணும்னோ இல்ல வருத்தப்பட வைக்கணும்னோ இத சொல்லல.. உண்மையாவே உன்ன உனக்காகவே கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறேன். இத்தன நாள் நீ வடிச்ச கண்ணீருக்கு மருந்தா இருப்பேன்னு சொல்லல.. இனிமே உன் கண்ணில கண்ணீர் வராம பார்த்துக்குவேன்னுதான் சொல்றேன்.." என்றான் தன்மையான குரலில்.

நிரஞ்சனா வேதனையின் உச்சத்துக்கே சென்றாள்.

"இல்ல.. இல்ல.. வேணாம்.. ப்ளீஸ்.." என்று முணுமுணுத்தாள்.

"ஆனா ஏன்.." என்று தமிழ் விடாமல் கேட்க,

"ஏன்? ஏன் எல்லாரும் ஒரு இக்கட்டில நிறுத்தி என்னை பணிய வைக்க பாக்கறீங்க.. என் முடிவுகளை என்னைக் கேக்காமலேயே நீங்களாவே எடுத்துட்டு, அத ஏன் என் மேல திணிக்கறீங்க.. நானும் மனுஷ ஜென்மம்தானே! எனக்குன்னு ஒரு மனசு இல்லையா? அதுல எனக்குன்னு ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் எல்லாம் இருக்காதா? ஏன் இப்டி எல்லாரும் உங்க விருப்பத்துக்கு என்னை ஆட்டி வெக்கறீங்க.." என்று கோபமும் அழுகையும் ஆற்றாமையும் கலந்த குரலில் கேட்டுவிட்டு வெடித்து அழுதாள்.

தமிழ் அதிர்ந்தான்.

இதற்கு என்ன பதில் சொல்வான். அவள் கேட்பது உண்மைதானே! அவளுக்கான முடிவை அவள் எடுக்க யாரும் அவளை விடவில்லை தானே!?

எதுவும் பேசாமல் தமிழ் நிற்க, வளர்மதி அவளருகில் வந்தாள்.

"சரிமா! சரி! அழாத! இப்ப என்ன? உனக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்ல.. அவ்ளோதானே?! விடு.. இதுக்கு அழுவானேன்? நீ இந்த வீட்ல என் மகளா, உன் முகிலண்ணன் கூடவும் உன் கயலண்ணி கூடவும் பத்திரமா இரு! நாங்க யாரும்.. உன்ன எதுக்கும் கட்டாயப் படுத்த மாட்டோம்! நீ நிம்மதியா இருமா!" என்றாள்.

"இல்லங்க.. நா போயிடறேன்.. நா யாருக்கும் பாரமா இருக்க விரும்பல.."

"எங்கம்மா போவ.." மதுரம் கேட்டாள்.

"எங்க தேவகி டீச்சர் அவங்களோட மாமா வீட்டுக்குதான் போகச் சொல்லி என்ன அனுப்பி வெச்சாங்க. ஆனா அதுக்குள்ள இவரு வந்து என்னை காட்டி தன் பொண்டாடின்னு சொல்லி அங்க இருக்கறவங்கள நம்ப வெச்சி என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாரு.. என்னை அவங்க மாமா வீட்டுக்கு அனுப்பி வெச்சிடுங்க.. ப்ளீஸ்.." என்று கம்மிய குரலில் கூறினாள் நிரஞ்சனா.

"சரிம்மா. அந்த அட்ரஸை தமிழ் கிட்டு குடு.. அவன் நாளைக்கு விசாரிச்சிட்டு உன்ன அங்க கூட்டிட்டு போவான்.." என்றாள் மதுரம்.

"தமிழ் யாரு.." என்று நிரஞ்சனா தன் கண்களைத் துடைத்துக் கொண்டே மதுரத்தைப் பார்த்து வெள்ளந்தியாய்க் கேட்க,

"கெட்டுது போ.. உங்கண்ணன் பேர் கூட அவளுக்குத் தெரியல.. அவன் என்னடான்னா அவள நெனச்சி உருகிட்டிருக்கான்.." என்று கயல் காதில் முகிலன் முணு முணுத்தான்.

"சும்மா இருங்க.." என்று கடுகடுப்புடன் சொன்னாள் கயல்.

"எம்பையன் பேர்தாம்மா தமிழ். தமிழ்வாணன்." என்று மதுரம் சொன்னாள்.

"ஓ.. சரிங்க.. எனக்கு தெரியல. முகிலண்ணனையும் கயலண்ணியையும் தெரியும். இவர ரெண்டு முறை அவங்க வீட்ல பார்த்திருக்கேன். அவரு முகிலண்ணனுக்கு சொந்தமா இல்ல கயலண்ணிக்கு சொந்தமான்னு கூட தெரியாது.." என்றாள்.

இப்போது "சூப்பர்!" என்றான் முகிலன் நக்கலாக.

"ஏங்க.. சும்மா இருங்களேன்.." என்று கெஞ்சுவது போல மெல்லிய குரலில் சொன்ன கயல், நிரஞ்சனாவின் அருகில் சென்று,

"நீ வா நிரஞ்சனா. உன்ன அண்ணன் நீ சொல்ற அட்ரசுக்கு கூட்டிட்டு போவான். அது வரைக்கும் நீ ரெஸ்ட் எடு! வா!" என்று சொல்லி அவளைக் கூட்டிச் சென்றாள்.

நிரஞ்சனா தன் பையிலிருந்து தேவகி டீச்சர் கொடுத்த அவளுடைய உறவினரின் முகவரி எழுதிய சீட்டை எடுத்து வந்து தமிழிடம் கொடுத்துவிட்டு, கயலுடன் சென்றாள்.

மதுரம் தமிழின் தோளில் தட்டிவிட்டு,

"எல்லாம் சீக்கிரம் சரியாகும்டா.. வருத்தப்படாத.." என்று சொல்லிவிட்டுப் போக,

"அவளைப் பத்தி நாந்தான் நெனச்சிட்டிருந்திருக்கேன்.. என்னப்பத்தி அவளுக்கு எதுவும் தெரிஞ்சிருக்காதுன்னு கூட புரிஞ்சிக்கல.. எவ்ளோ லூசா இருந்திருக்கேன்.." என்று விரக்தியுடன் சொன்னான் தமிழ்.

இப்பதான் புரிஞ்சிதா.. என்று கூறி தமிழைக் கலாய்க்க வந்த முகில், தமிழின் முகத்தில் தோன்றிய வேதனையைக் கண்டு எதுவும் சொல்லாமல் அவன் தோளில் ஆதரவாகத் தட்டினான்.

"எல்லாம் சீக்கிரம் சரியாகும்.. உள்ள போய் ரெஃப்ரஷ் ஆகுடா.. நானும் ஆஃபீஸ் கௌம்பணும்.." என்று முகில் தமிழை அழைத்துக் கொண்டு போனான்.

முத்தழகி நிரஞ்சனாவின் குழந்தையை வியப்புடன் பார்த்து சிரிக்க, முத்தழகியைப் பார்த்து நிரஞ்சனா வியக்க, மீண்டும் குழந்தைகளுடன் குழந்தையாக ஐக்கியமானாள் நிரஞ்சனா.

முத்தழகி இரும்பில் ஒட்டும் காந்தமாக நிரஞ்சனாவுடன் சட்டென்று ஒட்டிக் கொண்டுவிட்டாள்.

நிரஞ்சனாவுக்கு முத்தழகியுடன் நேரம் செலவிட மிகவும் பிடித்துப் போக, கயல் இன்னும் ஆனந்தமாகத் தன் அலுவலகத்துக்குக் கிளம்பினாள்.

அன்று மாலை வரை எந்தப் பிரச்சனையுமின்றிக் கழிய, அதற்கு மேல் நிரஞ்சனாவுக்கு தமிழ் எப்போது வந்து தன்னை தேவகி டீச்சர் தந்த முகவரிக்கு அழைத்துச் செல்வான் என்று தோன்றத் தொடங்கியது.

ஏழு மணிக்கு முகில் வீட்டுக்கு வந்து சேர, எட்டறைக்கு கயல் வந்தாள்.

அன்று இரவு வேலையெல்லாம் முடிந்து மிகவும் தாமதமாகவே வந்தான் தமிழ். அவன் வரும் போது இரவு பத்து மணியாகியிருந்தது.

அவன் வந்ததும் நேராக அவனிடம் வந்த நிரஞ்சனா,

"அந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு பாத்துகிட்டீங்களா.. நாளைக்கு என்ன அங்க கூட்டிட்டு போய் விட்டுடுவீங்கதானே.." என்று கேட்டாள்.

"ம்.. நாளைக்கு போலாம்." என்று கூறிவிட்டு உள்ளே போய்விட்டான்.

மறுநாள் மற்றவர்கள் எல்லாம் அலுவலகத்துக்குக் கிளம்ப, நிரஞ்சனாவும் கிளம்பினாள்.

வீட்டிலுள்ள எல்லாரிடமும் முறையாக நன்றி சொல்லிவிட்டு தன் கைப்பையை மாட்டிக் கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

அவள் எங்கோ கிளம்புவதைப் பார்த்த முத்தழகி அழத் தொடங்க, மதுரமும் வளர்மதியும் அவளை சமாதானம் செய்ய முடியாமல் திணறினார்கள்.

"நம்ம போய் அந்த அட்ரச பார்த்துட்டு வந்துடலாம். அது வரை குழந்தைய இங்க அம்மா கிட்ட விட்டுட்டு வா.. குழந்தை இங்க இருந்தா முத்தழகியும் கொஞ்சம் சமாதானம் ஆவால்ல.." என்றான் தமிழ்.

"இல்ல.. வந்து.. நா அப்டியே அவங்க வீட்லயே.." இழுத்தாள் நிரஞ்சனா.

"ஒரு வேளை நீ அவங்க வீட்ல இருக்க ஒத்துகிட்டா, நாம திரும்ப வந்து உன் பொருள் எல்லாத்தையும் எடுத்துகிட்டு குழந்தையும் தூக்கிட்டு போலாம். அதுக்குள்ள முத்து தூங்கிடுவா.." என்று தமிழ் கூற, வேறு வழியின்றி குழந்தையை மதுரத்திடம் கொடுத்து விட்டு தன் மூட்டை முடிச்சுகளை அங்கேயே வைத்துவிட்டு தமிழுடன் கிளம்பினாள் நிரஞ்சனா.

தமிழ் மனதுக்குள் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி அவளைத் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான்.

தேவகி டீச்சர் கொடுத்தனுப்பிய முகவரி தமிழின் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்திலேயே இருந்தது.

ஆனால் அந்த முகவரியில் தேவகியின் மாமாதான் இருக்கவில்லை.

"இதானே அந்த அட்ரஸ்.. நீங்க என்ன சரியாதானே கூட்டிட்டு வந்திருக்கீங்க.." என்று சந்தேகமாய்க் கேட்டவளை பாவமாய்ப் பார்த்தான் தமிழ்.

இவ நிலையில யார் இருந்தாலும் இப்டிதான் நெனக்க தோணும்.. பாவம்.. என்றும் நினைத்துக் கொண்டான்.

அவளுக்காக அக்கம் பக்கத்து வீடுகளில் விசாரித்தான். பலருக்கும் தெரியவில்லை என்றனர். சிலருக்கு அவர்களைத் தெரிந்தது. ஆனால் அவர்கள் எங்கே போனார்கள் என்று தெரிந்திருக்கவில்லை.

கடைசியாக அந்தத் தெருவின் கடைசி வீட்டிலும் நிரஞ்சனாவுக்காக விசாரித்தான்.

"ஆமாங்க.. அவங்க இங்கதான் இருந்தாங்க.. ஆனா ரெண்டு மாசம் முன்னாடிதான் அவருக்கு டெல்லிக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சுன்னு இங்கேர்ந்து காலி பண்ணிட்டு போனாங்க.." என்ற பதில் கிடைத்தது.

"இப்ப என்ன பண்றது.. நா அவரைப் பார்த்தே ஆகணுமே.." என்றாள்.

"எதுக்குன்னு நா தெரிஞ்சுக்கலாமா?" என்று கேட்டான் தமிழ்.

"அத தெரிஞ்சிகிட்டு நீங்க என்ன பண்ணப் போறீங்க?" என்று கோபமாகக் கேட்டாள்.

"என்னால உனக்கு ஏதாவது உதவ முடியுமான்னு.." என்று அவன் சொல்ல, அவள் அவனை முறைத்தாள்.

"சரி! பரவால்ல.. அந்த தேவகி டீச்சருக்கு போன் பண்ணி கேக்கறியா?" என்றான்.

"எ.. எனக்கு அவங்க நம்பர் தெரியாதே.." என்றாள்.

"சரி! அங்க வேற யாரோட நம்பராவது தெரியுமா?"

"அங்க டீச்சரத் தவிர வேற யார் கூடவும் நா பேச மாட்டேன். என் குடிசைக்கு பக்கத்து வீட்டு அக்கா மட்டும் என் கூட பேசுவாங்க.. ஆனா அவங்க கிட்ட போன் கிடையாது.." என்றாள் கம்மிய குரலில்.

"ம்.. சரி.. கவலப்படாத.. நம்ம இதுக்கு என்ன பண்லாம்னு யோசிக்கலாம்.." என்றான் தமிழ்.

"ம்.."

"சரி.. இப்ப வீட்டுக்கு போலாமா?" அவன் கேட்டான்.

அதற்கும் "ம்.." என்றாள் அவள்.

அவளை அழைத்துப் போய் தன் வீட்டில் விட்டுவிட்டு தமிழ் தன் அலுவலகம் சென்றுவிட்டான்.

வீட்டுக்கு போன பின்னரும் அவள் தவித்தபடியே இருந்தாள். தனக்குள் புலம்பிக் கொண்டும் அழுது கொண்டும் இருந்தவளை மதுரமும் வளர்மதியும் என்னவென்று விசாரித்தனர்.

மிகுந்த தயக்கத்துக்குப் பின்னர் நிரஞ்சனா, கூறினாள்.

"தேவகி டீச்சர் குடுத்த அட்ரஸ்ல அவங்க மாமா இல்ல.. நா அவரை பார்த்தே ஆகணும்.. அவருதான் எனக்கும் என் குழந்தைக்கும் வழி காட்டுவாங்கன்னு நம்பிட்டிருந்தேன்.. ஆனா இப்டி அவர பாக்கவே முடியாமப் போகும்னு நா நெனக்கவேயில்ல..இப்ப நா என்ன பண்ணுவேன்.. என் வாழ்க்கையே இப்டி பெரிய கேள்விக் குறியா மாறும்னு நான் நெனக்கல.. நெனக்கவேயில்ல.." என்றாள்.

"இப்ப இந்த வீட்ல உனக்கு என்ன குறை? இல்ல இங்க இருக்கறதுலதான் உனக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டாள் வளர்மதி.

"இல்லங்க.. நான் எப்டிங்க இங்க இருப்பேன்.. உங்களுக்கு பாரமா இங்க இருக்க என் மனசு தடுக்குதுங்க.. ஆனா வேற எங்கியாவது போகணும்னா.. எனக்கு ஒரு வேலை வேணும்.. தங்க வீடு வேணும்.. குழந்தைய நல்லபடியா பாதுகாத்து வளர்க்கணும்.. என் எதிர்காலத்தை நெனச்சா எனக்கு மலைப்பா இருக்கு.." என்றாள் கவலையுடன்.

"தமிழ் கிட்ட உனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ண சொல்றேன்.. நீ என்ன படிச்சிருக்க?" கேட்டாள் மதுரம்.

"நா என்னத்த படிச்சேங்க.. பத்தாவது பாஸ் பண்ணேன்.. அதுவும் ரொம்ப கம்மியான மார்க்ல.. அதுக்கு மேல எனக்கு படிப்பு வரல.. யாரும் என்ன அடிச்சி படிக்கவும் வெக்கல.." என்றாள் வருத்தமான குரலில்.

"இங்க பாருமா.. உனக்கு உன் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கும். கவலப்படாம இரு." என்றாள் வளர்மதி.

"அது வரைக்கும்.. நா எங்க போவேன்.. எப்டி இருப்பேன்னு ஒண்ணும் புரியல.." என்றாள் நிரஞ்சனா.

"எங்கயும் போக வேண்டாம்! இங்க எங்க கூட இரு.. நாங்க இத்தன பேர் குடுக்காத பாதுகாப்பையா அந்த உன் தேவகி டீச்சரோட மாமா குடுப்பார்ன்னு நீ நெனக்கற.." என்று கேட்டாள் வளர்மதி.

"இங்க பாருமா.. எங்கியோ போய் கஷ்டப்படறதுக்கு இங்க இரு.. உனக்கும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். எங்களுக்கும் முத்தழகியோட விளையாட ஒரு துணை கிடைக்கும்." நயமாகக் கூறினாள் மதுரம்.

மதுரத்தின் கூற்றில் இருந்த நியாயத்தினால், நிரஞ்சனா வேறு வழியின்றி தமிழ் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது.

நிரஞ்சனாவுக்கு அந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

சும்மா இருக்கிறாள் என்று யாரும் தன் மீது குற்றம் சொல்லிவிடக் கூடாது என்பதற்காகவே வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய ஆரம்பித்தாள்.

வீட்டிலுள்ள அனைவரும் அவளிடமும் அவளுடைய குழந்தையிடமும் அன்பாகவே பழகினார்கள்.

எல்லாருக்கும், நிரஞ்சனா ரஞ்சனாவாகி, ரஞ்சனா ரஞ்சனியாகி அதுவும் பெரிதென, ரஞ்சியாக சுருங்கிப் போனாள்.

முத்தழகியைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அஞ்சத்த.. அஞ்சத்த.. (ரஞ்சி அத்தைதான் மழலை மொழியில் அஞ்சி அத்த.. அஞ்சத்த.. ஆகியது. ரஞ்சி அஞ்சி ஆனது சரி! அத்தை எப்டீன்னு.. அட ஆமாங்க.. கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க.. இது தமிழோட வேலையேதான்!) என்று கூவிக்கொண்டே அவள் பின்னாலேயே வால் பிடித்துக் கொண்டு சுற்றினாள் எனலாம்.

முத்தழகிக்கு தன் தலையையும் கைகயும் ஆட்டியபடி, கண்களை உருட்டி உருட்டி கதை சொல்லி மகிழ்விக்க, இவளுடைய கதைக் கேட்பதற்காகவே அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாம் தமிழ் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினார்கள்.

இவளுடைய கதை சொல்லும் திறனைப் பார்த்து வியந்த பகக்கத்து வீட்டு பள்ளி ஆசிரியை ஒருவர் தான் வேலை பார்க்கும் பள்ளியில், குட்டிக் குழந்தைகளுக்கு கதை சொல்லும் வேலைக்கு பரிந்துரை செய்ய, இப்போது நிரஞ்சனா அந்தப் பள்ளியில் பகுதி நேர கதை சொல்லும் டீச்சராக வேலை செய்ய ஆரம்பித்தாள்.

இது ஒரு வகையில், தன்னாலும் தன் சொந்தக் காலில் நிற்க முடியும் என்ற தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அவளுக்குள் வளர்த்தது.

நிரஞ்சனா தமிழின் வீட்டுக்கு வந்து மூன்று மாதங்கள் மூன்று நிமிடங்களாய் ஓடி விட்டன.

அன்று அவள் குழந்தை ரொம்ப அழுது கொண்டேயிருந்தது என்பதால் பள்ளி வேலைக்கு கிளம்ப முடியாமல் குழந்தையுடன் இருக்க நேர்ந்தது.

ரொம்ப நேரம் குழந்தையை வைத்துக் கொண்டிருந்து அதனைக் கொஞ்சி தூங்க வைத்து விட்டு அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்பினாள்.

அவள் கிளம்பிப் போன பின்பு, அவள் அவசரத்தில் கிளம்பியதால் அவளுடைய அறையில் பொருட்கள் எல்லாம் கலைந்துள்ளதே என்று எடுத்து வைக்க வந்த மதுரத்தின் கையில் பல வருடங்களுக்கு முந்தைய, பழைய திருமணப் பத்திரிகை ஒன்று கிடைத்தது.

அதை எடுத்து யதார்த்தமாகப் பார்த்த மதுரம் அதிர்ந்தாள்.









- தொடரும்.
 
Last edited:
அருமை மேம், அடுத்து என்ன பிரச்சினையோ தெரியலையே நிரஞ்சனாக்கு.....
 
அடுத்த பிரச்சனை வருமா ரஞ்சுவிற்கு...
என்ன இருந்தது பத்திரிகையில் ????
 
Top