Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ--26

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
26
ரவி ஒரு கணம் தனது அன்னையின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனான். பின், " என் கிட்ட வந்து சேர்ந்த பிறகு அவ என்னோட நிலா தான். அவளோட கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டுமே . அதைப் பத்தி எனக்கு எந்த கவலையும் கிடையாது " என்று சொன்னான்.

தீபக் உடனே , " நிஜமாவாடா? " என்று கேட்க," ஆமாம் , கண்டிப்பா அவ என்னோட நிலா தான். அவளுக்கு எதுவும் ஆகாது. ஆகவும் விட மாட்டேன் " என்று தன் கண்ணுக்குத் தெரியாத யாரிடமோ சத்தியம் செய்வது போல, உறுதியான குரலில் சொல்லிட

சுமதி , " சரிடா ,சரி நிலா விரைவில் கண்டுபிடிக்கப்படுவாள் " என்று சொல்லி அவனது தலையைக் கோதினாள் இதமாக.

" ம்ம், ஓ.கேடா ரவி நான் கிளம்பறேன். அம்மா பார்த்துக்குங்க. நான் இப்ப போய் அந்த இளநீர்க்காரரைத் தான் திரும்பவும் விசாரிக்கணும். போயிட்டு வர்றேன் பா " என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

" டேய் தீபக், கொஞ்சம் இரு. நானும் உன் கூட வர்றேன் " என்று தனது பைக்கை எடுத்துக் கொண்டு முன்னே வந்தான் ரவி.

இருவரும், இணைந்து, முட்டுக்காட்டை நோக்கித் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.அப்போது, தீபக்கின் அலைபேசி நீண்டதாக ஒலி எழுப்பியது.

" ரவி ஒரு நிமிஷம், நான் பேசிட்டு வர்றேன் " என்று சொல்லி விட்டுத் தனது வண்டியைத் தெருவோர மரத்தடி நிழலில் நிறுத்தி விட்டு அலைபேசிக்கு உயிரூட்டினான்.

அது ரோகிணி மருத்துவமனையில் இருந்து வந்த, அழைப்பு. நர்ஸ் பிருந்தாவிடம் இருந்து வந்திருந்தது. அதனைக் கண்டதும், தீபக் மிகவும் பரபரப்புடன் ," என்னம்மா, சொல்லுங்க . என்ன விஷயம் " என்று கேட்டான்.

" சார், டாக்டர் மேமுக்கு இப்ப ஒரு, அனானிமஸ் கால் வந்தது. அதைக் , அட்டெண்ட் பண்ணின உடனே அவங்க, அர்ஜென்ட் ஒர்க்னு சொல்லிட்டு , வெளியே கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க இந்த மாதிரி எல்லாம், கிளம்பிப் போகவே மாட்டாங்க. அதைச் சொல்லத் தான் நான் உங்களுக்குக் கால் பண்ணினேன் " என்று சொன்னாள்.

" ம்ம், டாக்டர் நம்பரை நான் டிரேஸ் பண்ணச் சொல்றேன். அனானிமஸ் கால்னு சொன்னீங்க இல்லையா, அந்த நம்பரையும் கொஞ்சம் எனக்கு அனுப்பி விடுங்க " என்று கேட்டான்.

" இதோ சார்." என்று சொல்லி விட்டு கால் லிஸ்டில் இருந்த சமீபத்திய அலைபேசி எண்ணை தீபக்கின் அலைபேசிக்குப் பகிர்ந்தாள் பிருந்தா.

தீபக் உடனே ,களப் பணியாளர்களிடம் அவ்விரு எண்களையும் அனுப்பி, அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிந்து சொல்லுமாறு பணித்தான். பின் ரவியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

" சுஷ்மி, ஏய் சுஷ்மி எங்கேடி போய்ட்டே நீ. வா ம்மா சாப்பிட. பாட்டிக்கு முடியலைடா பாப்பா. இங்கே வா ம்மா.
உனக்குப் பிடிச்ச கீரைச் சோறு பிசைஞ்சி வச்சிருக்கேன் " என்று டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டு தனது பேத்தியை அழைத்துக் கொண்டிருந்தார் சாரதா.

தன் கையில் இருந்த பார்பி பொம்மையுடன் ஓடி வந்த சுஷ்மி, "பாட்டி, அத்தம்மா எங்கே போயிட்டா, நான் அவ கூடத் தான் சாப்பிடுவேன். அவளைக் கூட்டிட்டு வா பாட்டி . நான் தேடி, தேடிப் பார்த்துட்டேன். அவளைக் காணோமே " என்று தனது மழலைக் குரலில் சொன்னாள்.

" எங்கேன்னு தெரியலைடி பாப்பு குட்டி. பாட்டியும் அவளைத் தான் தேடிட்டு இருக்கேன்.ஒன்னு செய். இப்ப உன் மாமன்காரன் வருவான். அவன் கிட்ட கேட்டுப் பாரு. சரி வா, என் மடியிலே உக்காந்துக்கடி செல்லம். பாட்டி உனக்கு ஊட்டி விடறேன். நல்ல கண்ணு இல்லை. நீ சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நான், சாப்பிடணும் " என்று சொன்னாள் சாரதா.

உண்மையில் அவளும் வாசுவிற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தாள் , வெண்ணிலாவைப் பற்றிக் கேட்பதற்கு. ' ம் ம், பாக்கிறதுக்கு நல்ல அம்சமான பிள்ளை. ஒரே நாள்ல, என் மனசிலயும் வந்து ஒட்டிக்கிட்டாளே. காலையில இருந்து அந்தப் பிள்ளையும் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டாளே. இந்த அறிவு கெட்டவன் அவளை எங்கே கொண்டு போய் அடைச்சி வச்சிருக்கான்னே தெரியலியே ' என்று தனக்குள் எண்ணிக் கொண்டவாறே, மடியில் அமர்ந்து கொண்டிருந்த சுஷ்மிக்கு சாதம் பிசைந்து ஊட்டி விட்டாள். அதன் பின் தானும், அதே தட்டிலேயே சாதத்தைப் போட்டுக் கொண்டு, சாப்பிடத் தொடங்கினாள். வாசு இன்னமும் வரவில்லை. உண்மையில் சாரதாவிற்கும் தனது மகனின், மறு பக்கத்தைப் பற்றி முழுமையாகத் தெரியாது. தனது வீட்டின் பின் புறத்திலேயே, வெண்ணிலாவை அடைத்து வைத்திடும் அளவிற்கு ஒரு ரகசிய நிலவறை இருக்கிறது என்பதைப் பற்றி அவளுக்கு ஒரு சின்ன சந்தேகம் கூட எழவில்லை. ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின்னும் வாசு வரவில்லை என்பதால், தன் மடியிலேயே அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த, சுஷ்மியைத் தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்றாள் சாரதா.
---------------------------------------------------------------------------------------

தீபக், இளநீர்ப் பெரியவரை அணுகி விட்டான். அப்போது, மீண்டும் அவனது அலைபேசி, அழைத்தது. அலைபேசி களப் பணியாளர்கள் தான் அழைத்து இருந்தார்கள்.

" சார், டாக்டர் ஷீபாவுடைய நம்பர், இப்ப அதே முட்டுக்காடு ஹைவேஸ் தான் காட்டுது. அந்த அனானிமஸ் நம்பர், நீங்க முதல்ல டிரேஸ் அவுட் பண்ணச் சொல்லிக் கொடுத்தீங்க இல்லையா, அந்த லொகேஷனைத் தான் காட்டுது. சுருக்கமா சொல்லணும்னா, டாக்டர், இஸ் ஆன் த வே டு முட்டுக்காடு " என்று சொன்னான் அவனது உதவியாளர்.

" ஓ, கே .இப்ப என்னோட மொபைல் லொகேஷனை, டிரேஸ் பண்ணுங்க. நான், நீங்க சொல்ற லொகேஷனை நோக்கித் தானே போயிட்டு இருக்கேன் " என்று கேட்டான்.

" ம்ம், ஓ.கே சார் இதோ சொல்றேன் .உங்களுக்கு அந்த லொகேஷனையும், பார்வர்டு பண்றேன் " என்று சொல்லி விட்டான்.

அதற்குள், இளநீர் விற்றுக் கொண்டிருந்த பெரியவரிடம் வந்து விட்ட தீபக், " பெரியவரே. வணக்கம். உங்க பொண்ணைக் கொஞ்சம் வரச் சொல்லுங்க. நான், அவங்க கிட்ட கொஞ்சம் பேசணும் " என்று கேட்டான்.

" அதுக்கென்ன சார், இதோ போனைப் போட்டு இங்க அவளை வரச் சொல்றேன். " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசியைக் கையில் எடுத்தார்.

" ஐயா, உங்க வீடு ரொம்ப தூரமா இருந்ததுன்னா, சொல்ல வேணாம். நானே பார்த்துக்கறேன். " என்றான் தீபக்.

" இந்தா, கூப்பிடு தூரம் தான் தம்பி. இப்ப வந்துடுவா. இந்த சார் யாரு? தம்பிக்கு உதவியா வந்திருக்காரா ? " என்று ரவியைப் பார்த்துக் கேட்டார்.

" ஆமாம் பெரியவரே " என்று சுருங்கச் சொல்லி விட்டு ,அவர் சீவிக் கொடுத்த இளநீரை உறிஞ்சத் தொடங்கினான் தீபக்.

அவருடைய பெண், தூரத்தில் வந்து கொண்டிருந்தாள். தனது தந்தைக்கு அருகில் வந்ததும் " என்னய்யா என்னை எதுக்கு வரச் சொன்னீங்க? இவங்க யாரு? " என்று கேட்டாள். தீபக் , " ஒன்னும் இல்லைம்மா. நீங்க ஒரு ஆம்புலன்ஸ்ஸை ஃபாலோ பண்ணிட்டுப் போனீங்கன்னு உங்க அப்பா சொன்னாங்க. அதைப் பத்திக் கேட்கத் தான் வந்து இருக்கோம் " என்று கேட்டான் தீபக்.

தீபக் கேட்டது தான் தாமதம் உடனே அந்தப் பெண், " சார், ஆம்புலன்ஸ்ஸில ஒரு பொண்ணு இருந்தாங்க சார். அவங்களுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலை, வழி எல்லாம் ரொம்பக் கத்திக்கிட்டே போனாங்க. அவங்களை ஆம்புலன்ஸ்ல இருந்து இறக்கும் போது தான் பார்த்தேன். வயிறெல்லாம் வீங்கிப் போய் இருந்துச்சு. பிள்ளைத்தாச்சி பொம்பளை போல இருக்குது. " என்றாள்.

" சரிம்மா , நீங்க அந்த ஒரு பொண்ணை மட்டும் தான் பார்த்தீங்களா ? அவங்க கூட வேற யாரும் வரலியா? " என்று கேட்டான்.

" இல்லியே , கூட வேற யாரும் வரலை சார்... " என்றவள் ஒரு கணம் யோசித்து விட்டுப் பின், " ஆங் இல்லை சார், ஒரு அம்மா இறங்கினாங்க. அவங்க, ஏதோ இங்கிலீஷ்ல பேசிக்கிட்டே அவசர, அவசரமா உள்ளார போயிட்டாங்க " என்றாள்.

தீபக் பலத்த சிந்தனையில் ஆழ்ந்து விட்டான் .' அப்ப கூட வந்தது டாக்டர் ஷீபாவா இருக்குமோ? அப்படி வச்சிக்கிட்டாலும், தன்னோட ஹாஸ்பிட்டலை விட்டுட்டு, ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு டிரீட்மெண்ட் கொடுக்கறதுக்கு எதுக்காக அவங்க இவ்வளவு தூரம் வரணும் ' என்ற கேள்வி எழுந்தது அவனுள்.

' அப்படின்னா, ரவி அம்மா சொன்னது மாதிரி, அந்த வீட்டுக்கு உள்ளேயே, நம்மளோட தேடலைக் கண்டினியூ பண்ணனும் போல இருக்குது ' என்ற எண்ணம் உறுதிப் பட்டது அவனுக்குள்.

" சரிங்க பெரியவரே . அப்ப நான் கிளம்பறேன். அம்மா, இது போல ஏதாவது, சந்தேகப் படும்படியான சம்பவங்கள் இங்கே நடந்துச்சின்னா, உடனே எனக்குத் தெரியப் படுத்துங்க. மறந்துடாதீங்க " என்று அவரது மகளிடம் சொல்லி விட்டு அங்கிருந்து, விடை பெற்றுக் கொண்டான் தீபக் .
----------------------------------------------------------------------------------

வெண்ணிலாவிற்குப் பசிக்கத் தொடங்கியது. சிறை வாசமே ஆனாலும், தனக்கும் நேரத்திற்கு உணவு கொடுத்து ,தான் பெற்ற மகளைப் போல கவனித்துக் கொண்ட சாரதாவின் நினைவு எழுந்தது.' அதை எல்லாம் நெனச்சிட்டு இருந்தா, நமக்கு ஒரு வேலையும் ஆகப் போறது இல்லை. இந்த இடத்தை விட்டு எப்படியாவது எஸ்கேப் ஆகிடணும். அது தான் முக்கியம் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட வெண்ணிலா, மீண்டும் அந்த, பீப் ஹோல் வழியாக அடுத்த அறையை உற்று நோக்கிட, அதன் வழியே தென்பட்ட ஒரு உருவம், அவளுக்குப் பழக்கப்பட்ட அசைவுகளுடன் நகர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு அவள் மீண்டும் ஒரு முறை துளைக்குள் உற்று நோக்கிட, அது மருத்துவர் ஷீபாவின் உருவம் என்பதை அறிந்து கொண்டு, கொதிப்புற்றாள்.

' இவங்களுக்கு இங்கே என்ன வேலை, இங்கே எதுக்காக வந்திருக்காங்க ' என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் அவள்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உருவாகிடும் போதே ஊனமுற்றதாக , வளரும் கருக்கள், சில நேரங்களில், வயிற்றுக்குள் தங்கிடப் பிடித்தம் இல்லாமல், சிதைந்து போய் விடும் வாய்ப்புகளும் உண்டு . அப்படி ஒரு சிதைவுறும் நிலையில் இருந்த, ஆறு மாதக் கருவினை , கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, எடுத்து அதனை இன்குபேட்டருக்கு மாற்றிடத் தான் மருத்துவர் ஷீபா அந்த இடத்திற்கு வந்திருந்தாள். ஏனென்றால் தனது மருத்துவமனையில், இது போன்ற மரபணு குறைபாட்டினை உடைய குழந்தை பிறந்து விட்டது என்றால், அவளது பெயர் கெட்டு விடும் அல்லவா! அவள் , எண்ணியது போலக் குழந்தை, இன்குபேட்டரின் இதமான வெப்பத்தில் பிழைத்துக் கொண்டது.
ஆனால் அந்தப் பெண், இறந்து போய் விட்டாள்!

---------------------------------------------------------------------------------------------------------------------
வெண்ணிலா எண்ணியது போல, சற்று நேரத்தில், வாசு அங்கே வந்தான், அவளுக்கான மதிய உணவுடன். ஏனோ இப்போது, அவனைப் பார்க்கவே, அவளுக்கு அருவருப்பாக இருந்தது.

" டேய் எங்கேடா உங்க அம்மா, அவங்களுக்கு நீ பண்ணிட்டு இருக்கற காரியத்தைப் பத்தி அவங்களுக்கு ஏதாவது தெரியுமா ? " என்று கேட்டாள்.

" நான் என்ன பண்ணிட்டேன்னு இப்ப உனக்கு இவ்வளவு கோபம் வருது.இந்தா முதல்ல சாப்பிடு. நீ ரொம்பப் பசியோட இருக்கேன்னு உன் கண்ணைப் பார்த்தாலே தெரியுது " என்று சொன்னான்.

" எனக்கு சாப்பாடும் வேணாம், ஒன்னும் வேண்டாம். முதல்ல இதுக்கு என்ன அர்த்தம்? அதைச் சொல்லு "என்று தன் இது வரையில் படித்துக் கொண்டிருந்த ஃபைலை அவனிடம் நீட்டினாள்.

வாசுவின் பதில் என்ன?

(வரும்)

ஹாய், ஃபிரெண்ட்ஸ் தொடர்ந்து வாசித்து உங்களது கருத்துக்களைச் சொல்லுங்கள்.
மிக்க நன்றி.


 
வாசு இதுக்கு தீர்வு கண்டுபிடிக்க தான் முயற்சி பண்ணிட்டு இருகாணா
 
Top