Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான்; இமையாக நீ--22

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 22

சுஷ்மியை, ஒரு குட்டி தேவதை போல அலங்கரித்து விட்டு, அழகு பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா.

அதனைக் கண்ட சாரதாவுக்குக் கண்கள் கலங்கியது.

அவளது நினைவுகள் மீண்டும் பின் நோக்கிச் சென்றன.

???????????????

" அம்மா , ரம்யாவுக்கு உடம்பு சரியில்லைம்மா. நீங்க உடனே இங்கே கிளம்பி வாங்க. அப்பா கிட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம். முதல்ல நீங்க மட்டும் கிளம்பி வாங்க உடனே " என்று வாசு சொன்னதைக் கேட்டு சாரதா, " ஆமா, இப்ப இவ வேலைக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப் போறா ? அவளை இங்கே வரச் சொல்லுடா .பேசாம ஒரு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணத்த முடிச்சுடுவோம் " என்றாள் சாரதா.

" அம்மா நீ உடனே கிளம்பி வாம்மா. இங்க வந்ததுக்குப் பிறகு பேசிக்கலாம் " என்று வாசு தனது தாயைக் கடிந்து கொண்டான்.

தன் மகன் , சொன்ன தினத்திற்கு மறு நாளே, விடியற் காலையில் கிளம்பிச் சென்ற, சாரதா அங்கே தனக்கு ஒரு பெருத்த அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.

வழக்கம் போலத் தன் பிள்ளைகளுக்குப் பிடித்த தின் பண்டங்களை எல்லாம் செய்து எடுத்துக் கொண்டு , ஆவலுடன் புறப்பட்டுச் சென்றாள் சாரதா.

பேருந்து நிலையத்தில் இருந்து, தன்னை அழைத்துப் போக வந்த வாசு, தன் வீட்டிற்குச் செல்லாமல் , மருத்துவமனைக்குத் தன்னை அழைத்துச் செல்வதைக் கண்ட, சாரதா, " தம்பி , என்னடா இது? நீ இப்ப வீட்டுக்குப் போகலியா? ஏதோ ஹாஸ்பிட்டலுக்கு என்னைக் கூட்டிட்டு வந்து இருக்கே? " என்று சாரதா கேட்ட கேள்விக்கு வாசுவிடம் பதில் இல்லை.


அதற்குள் வாசுவைத் தெரிந்து கொண்ட சில மருத்துவமனை ஊழியர்கள், " சார், உங்க தங்கச்சிக்குத் திரும்பவும், ரொம்ப சீரியஸ் ஆயிடுச்சு, அதனால உடனே சிசேரியன் பண்ணனும்னு , டாக்டர் சொல்லிட்டாங்க. இப்ப டிரிப் ஏறிட்டு இருக்கு " என்று சொல்ல சாரதாவுக்குத் தன் தலையை யாரோ , இரண்டாகப் பிளப்பது போன்ற உணர்வு எழுந்தது.

" என்னது, என்ன சொல்றீங்க நீங்க, சிசேரியனா ? என் பொண்ணுக்கா? ஐயோ , டேய் வாசு, என்னடா சொல்றாங்க இவங்க எல்லாரும். தள்ளு, தள்ளுங்க வழியை விடுங்க, நான் போய் என் பொண்ணைப் பார்க்கணும். ரம்யா , ரம்யா, உனக்கு என்ன தான்டி ஆச்சு ? எப்படி இது நடந்தது? , யாரு கிட்ட போய் சீரழிஞ்சிட்டு இப்படி வந்து கிடக்கறே " என்று கதறினாள் சாரதா.

வாசு, அவளைத் தேற்றும் வண்ணம், தனது தோள்களில் சாய்த்துக் கொண்டு, " அம்மா, அழாதேம்மா, அவளுக்கு எதுவும் தெரியாது, இந்த கர்ப்பமே அவளுக்குத் தெரியாம உருவாக்கப்பட்டது தான். நாம இப்ப அவளுக்கு ஆறுதல் தான் சொல்லணும். அதோட, அவ உடம்பு நல்லபடியா தேறி வரணும். இது நம்ப கையில தான் அம்மா இருக்குது. நீ முதல்ல தைரியமா இரும்மா. அப்பத் தான் நாம அவளைத் தேத்த முடியும் " என்று சொன்னான்.

சாரதா பெருங்குரலில் அழுதிடும் சத்தம் கேட்டு அதற்குள், மருத்துவர் சோனாவும் காரிடாருக்கே வந்து விட்டிருந்தாள்.

" வாசு, நீ வந்துட்டியா ? என்ன ஆச்சுன்னு தெரியலை, வயித்துல இருக்கற குழந்தை கிட்ட, சின்னதா ஒரு அசைவு கூட தெரிய மாட்டேங்குது. ரம்யாவுக்கும் பிளீடிங் ஆக ஆரம்பிச்சிடுச்சு..நான் , அந்த ஹாஸ்பிட்டல்ல, எபிடியூரல் ( பிரசவம் விரைவில் நடந்திட கொடுக்கப்படும் மருந்து ) குடுத்து இருப்பாங்களோன்னு சந்தேகப்படறேன். ப்ச் இப்பப் பேசிட்டு இருக்கறதுக்கு எல்லாம் நமக்கு நேரம் இல்லை. வா, இதுல ஒரு கையெழுத்துப் போடு, நான் தியேட்டருக்குப் போகணும் " என்றாள் சோனா.

சாரதாவும் உடனே, " டாக்டர், நானும் உங்க கூட வர்றேன். என் பொண்ணை நான், ஒரு தடவை பார்க்கணும் " என்று கேட்டாள்.

" அம்மா, ஒரு அரை மணி நேரம் மட்டும் வெளியே வெயிட் பண்ணுங்க. நானே உங்களைக் கூப்பிடறேன் " என்றாள் சோனா .

" அம்மா, டாக்டரம்மா, இந்த பிரசவ வார்டுக்குள்ள தான் இப்ப, வலியில துடிச்சிட்டு இருக்கற பொண்ணோட, புருஷன்மார்களை எல்லாம், போகச் சொல்றாங்களாமே. அதே மாதிரி என்னையும் உள்ளே விடுங்கம்மா " என்று மீண்டும் சாரதா, சோனாவை வற்புறுத்திட , " சரி, வாங்க ,அப்ப வாங்க உள்ளே..நர்ஸ் இவங்களுக்கு ஹாஸ்பிட்டல் ரோப், குடுத்துடுங்க..அப்படியே ஒரு மாஸ்க்கும் குடுத்துடுங்கமா "
என்று சொல்ல, ரம்யாவின் தாய் , தனது மகளைக் காண , ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றாள்.

வாசுவினால் மௌனமாகக் கண்ணீர் விடத் தான் முடிந்தது.

ஆனால், கடும் உதிரப் போக்கின் காரணமாக, சாரதாவினால்
ரம்யாவைக் குற்றுயிராய் தான் காண முடிந்தது.
தனது , வயிற்றுக்குள் வளர்ந்து வந்த , சிற்றுயிரைக் காக்க வேண்டும் என்ற போராட்டத்தில் ரம்யா வெற்றி பெற்று விட்டாள்

குழந்தைக்குத் தனது உயிரைக் கொடுத்து விட்டு , ரம்யா அவர்களை, விட்டு மறைந்தாள்.

உயிர் பிரியும் கணத்தில் கூட, அவள் வாசுவிடம், " அண்ணே நான் எந்தத் தப்பும் பண்ணலை அண்ணே.
அம்மா, என்னை வளர்த்தது போல இந்தப் பிஞ்சுக் குழந்தையையும் நீயே நல்லபடியா வளர்த்துடும்மா . ஆனா, இவளுக்கு உலகத்தில நடக்கிற அத்தனை , நியாய , அநியாயங்களைப் பத்தியும் கண்டிப்பாத் தெரியணும். உங்களை நம்பித் தான்மா, நான் இந்த சிசுவை உங்க கிட்ட ஒப்படைச்சிட்டுப் போறேன். அண்ணா இனி இந்தப் பிள்ளைக்கு நீங்க தான் அப்பா, அம்மா எல்லாமே. இவளை யார் கிட்டயும் கொடுத்துடாதீங்கம்மா. அம்மா, ஒரு பொண்ணாப் பொறந்து உங்களுக்குக் கொடுக்க வேண்டிய, எந்த சந்தோஷத்தையும் உங்களுக்கு என்னால கொடுக்க முடியலை. அதனால ,நீங்களும் என்னை மன்னிச்சுடுங்கம்மா " என்று கேவி அழுதிட,

சோனா, " வாசு, என்ன இது இப்படி எமோஷனல் ஆகிப் பேசறாங்க. அது இப்போதைய அவங்க உடல் நிலைக்கு சரி வராது. நீயும் ஒரு டாக்டர் தானே, வா , வா அம்மாவைக் கூட்டிட்டு வெளியே வா; குழந்தை உயிரோட கிடைச்சதே பெரிய அதிசயம் தான். அடுத்து ரம்யா.." அவள் தொடர்வதற்குள், அடுத்த விசும்பலில் ரம்யாவின், ஆன்மா மொத்தமாக , இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டிருந்தது .

சாரதாவிற்கு, அங்கு நடப்பதை எல்லாம் பார்த்த போது , அவை, எல்லாம் ஓர் வேண்டாத இரவில் கண்ட, கனவாக மாறி விடக் கூடாதா? என்ற பிரமிப்பு தான் எழுந்தது.

தன் மகள் இனி, மீண்டு வரப் போவதில்லை என்பதை அவளால் நம்பக் கூட முடியவில்லை.

சோனா தன் கைகளில் கொடுத்த , குழந்தையையே அவள் பார்த்துக் கொண்டிருந்தாள் .

குறை மாதக் குழந்தை, என்பதால் அவளிடமிருந்து , குழந்தையை, செவிலியர்கள் உடனே வாங்கிக் கொண்டார்கள். அப்போது தான் அவள் தனது சுய உணர்வுக்கே வந்தாள்.

அப்போதும் கூட ரம்யா , இறந்து விட்டாள் என்ற உண்மை , அவளது இதயத்தில் நங்கூரமிட இன்னமும் காத்துக் கொண்டு தான் இருந்தது.

பிரமை பிடித்தவள் போல அங்கேயே, ரம்யாவின் கட்டிலுக்கு அருகில், அப்படியே அமர்ந்து கொண்டாள் அவள் .

வாசு, மெதுவாக அவளை எழுப்பினான். " அம்மா, வாம்மா, இனிமே ரம்யா நமக்கில்லை . அவ எங்கேயோ போயிட்டாம்மா. வா, வெளியே வா, ஒரு மூச்சு அழுது தீர்த்துடு. வாம்மா.. " என்றபடி அவன் அழத் தொடங்கினான்.

மகனின் அழுகைக் குரல், அவளை, ஏதோ செய்தது. " ரம்யாவை, எப்ப தம்பி டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க. நாம எப்ப ஊருக்குப் போறது? " என்று அவள் கேட்டதும், வாசு அவளிடம், " அம்மா, ரம்யாவை ஊருக்கு எல்லாம் கூட்டிட்டுப் போக முடியாதும்மா. அவ இனிமே நம்ம கூட வர மாட்டா. .." அவள் மேலே தொடர்வதற்குள் சோனா இடைமறித்தாள்.

" வாசு, நீ முதல்ல அழுகையை நிறுத்து, உங்க அப்பாவுக்கு முதல்ல இன்ஃபார்ம் பண்ணிடு. ஏன்னா, உங்கம்மா இன்னும் இப்படியே இறுகிப் போய் இருந்தாங்கன்னா , அது அவங்களை ரொம்ப பாதிச்சிடும் " என்றாள்.

அதன் பின், ரம்யாவின் தந்தை, மற்றும் அவர்களது குடும்பத்தினரை மட்டும் வரவழைத்து ரம்யாவின் ஈமச் சடங்குகளை ஒருவாறு நடத்தி முடித்தனர்.

சுமக்கக் கூடாத மன பாரங்களால் இறுகிப் போய் இருந்த சாரதாவும் ஒருவாறு மீண்டு வந்தாள் சுஷ்மியின் முகம் கண்டு.

???????????????

" பாட்டி, இந்த டிரஸ் எப்படி இருக்கு எனக்கு , ? அத்தைக்கு, இந்த கலர் ரொம்பப் பிடிக்குமாம். அதனால எனக்கு வேணும்னு சொல்லி என் கிட்ட கேட்டாங்க, நான் தர முடியாதுன்னு சொல்லிட்டேன் " என்று சொல்லி வெண்ணிலாவைப் பார்த்து முறைத்திட, வெண்ணிலா, அவளைப் பழித்துக் காட்டி விட்டு, " பாப்பா தரலைன்னா என்ன? நானே எடுத்துக்குவேனே " என்றபடி அவளுக்கு அருகில் வர, " நோ, நோ " என்று சொல்லி விட்டு, ஓடத் தொடங்கினாள் சுஷ்மி.

அவளைத் துரத்திக் கொண்டு வந்த, வெண்ணிலா, எதிரில் வந்த வாசுவின் மீது மோதிக் கொண்டாள்.
தன் மீது மோதிய வெண்ணிலாவின் இடையைப் பற்றிக் கொண்ட வாசு, தன்னை மறந்து அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

ஒரு கணம், வெண்ணிலா தனக்குள் சிலிர்த்துக் கொண்டாள்.
பின், தன்னை விடுவித்துக் கொண்டு விலகி நின்று கொண்டாள் .
சுஷ்மியைத் தூக்கிக் கொண்ட வாசு, அவளது கன்னங்களில், முத்தமிட்டு , " எங்கே? பாப்பா குட்டி இப்படி வேகமா ஓடிப் போறாங்க? யாரு உன்னைத் துரத்திட்டு வர்றாங்களாம் .? " என்று வெண்ணிலாவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே கேட்டான்.

சுஷ்மி, வெண்ணிலாவின் பக்கம் தனது கைகளைக் காட்டி, " என் டிரஸ் கேக்கறாங்க அத்தை " என்று வாசுவிடம் புகார் செய்தாள் .

" அப்படியா, பாப்பா டிரஸ் எப்படி போடுவே அத்தைன்னு கேட்டியா நீ?" என்று குறும்புத் தொனியில் கேட்க அப்போது அவனது அலைபேசி நீண்ட ஒலி எழுப்பியது .

அதற்கு, உயிரூட்டிய அவன் மறு முனை சொன்ன செய்தியைக் கேட்டுத் தனது புருவத்தை நெரித்தான்.

" என்னடா, சொல்றே நீ? நிஜமாவா, ? " என்று அதிர்ந்த குரலில் கேட்டான் வாசு.


மறு முனை என்ன சொன்னது?
தொடர்ந்து வாசித்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே!!!
( வரும்)
 
Last edited:
ரொம்ப ரொம்ப குட்டி ud யா இருக்கு... நல்ல போகுற இடத்தில் STOP ஆகிடுச்சு.... நிலா இருக்குற இடத்தை TRACE பண்ணியச்சா
 
Top