Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான்; இமையாக நீ--20

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 20

மேனகா, " வெண்ணிலா பேசறா , வாங்க நீங்களும் பேசுங்க " என்று தன் கணவர் சபாபதியிடம் சொல்லி, அவரிடம், தனது அலைபேசியைக் கொடுத்த போது, தீபக் இடைமறித்து, " அம்மா, அதை ஸ்பீக்கர்ல போடுங்க. நானும் கேக்கணும் " என்று சொன்னான்.

உடனே சபாபதி, அலைபேசியை வாங்கிக் கொண்டு, ஸ்பீக்கரை அழுத்தினார்.

" அம்மா , நல்லா இருக்கீங்களா ? அப்பா நல்லா இருக்காரா? மிருது எப்படி இருக்கா. என்னால ரொம்ப நேரம் பேச முடியாது அம்மா. ஆனா என்னைப் பத்திக் கவலைப் படாதேம்மா .நான் பத்திரமான இடத்தில தான் இருக்கேன்னு , என் மனசுக்குப் படுது. இப்போதைக்கு இங்கே எந்த ஆபத்தும் இல்லை எனக்கு. கூடிய சீக்கிரம், நான் வீட்டுக்கு வந்துடுவேன் அம்மா " என்று பரபரப்பான குரலில் பேசினாள் வெண்ணிலா.

" அம்மாடி, வெண்ணிலா .நல்லா இருக்கியாம்மா , நீ எங்கேம்மா இருக்கே. யாரும்மா உன்னைக் கடத்தினது. உனக்கு, என்ன ஆச்சோன்னு நெனச்சு, நெனச்சு இங்கே நானும் அம்மாவும், அழுதுட்டே இருக்கோம். எங்கேம்மா இருக்கே?.எப்பம்மா வருவ? " என்று சபாபதி கேட்க, எதிர்பாராத விதமாகத் தனது தந்தையின் குரலைக் கேட்டதும், வெண்ணிலாவிற்கும் அழுகை தான் வந்தது.

" அப்பா, நான் , நான்.. வந்து , அப்பா அது வந்து வா..சு " அவள் முடிப்பதற்குள், வெண்ணிலாவின் கைகளில் இருந்த, அலைபேசி பிடுங்கப் பட்டது. வாசு, தான்!

இணைப்பு, துண்டிக்கப்பட்டதை அறியாத, மேனகா " வெண்ணிலா, வெண்ணிலா.." என்று கதறத் தொடங்கினாள்.

அவளிடம் இருந்து அலைபேசியைப் பெற்றுக் கொண்ட, தீபக், அதில் இருந்த, சமீபத்தில் அழைத்த எண்ணை ஆராய்ந்து, அதனை, களப் பணியாளர்களுக்கு அனுப்பி, வைத்தான்.


பின், அதன், பொறுப்பாளரை அழைத்து, " நான் இப்ப அனுப்பி இருக்கிற போன் நம்பரை, சேர்ச் பண்ணி லொகேட் பண்ணுங்க. சீக்கிரம் ஆகட்டும் " என்று ஏவினான் .
சரியாக, ஐந்து நிமிடங்களில், அவன் கேட்ட தகவல், அவனை வந்து அடைந்துவிட்டது.


" சார், சார் இதுவும் ஓ.எம்.ஆர் ரோட்டைத் தான் காட்டுது. முட்டுக்காட்டுக்கு, கொஞ்சம் முன்னாடி " என்று சொன்னார் அந்த பணியாளர்.


" ம்ம், ஓ.கே சார் " என்று சொல்லி விட்டுத் தனது அலைபேசியைக் கிடத்தினான் தீபக்.


அரை நிமிட யோசனைக்குப் பிறகு, " ம் ஒன்னு செய்யுங்க. நான் இப்ப, கிளம்பி ஓ.எம்.ஆர் போறேன். என் போனோட லொகேஷனையும் ஃபாலோ பண்ணிட்டே வாங்க. அதோட, நான் கொடுத்த போன் நம்பர் ஆன்ல தானே இருக்கு?," என்று கேட்டான்.


" ஓ கே, சார் " என்று சொல்லி விட்டு , அவர்கள் தங்களது பணியைத் தொடர்ந்தார்கள்.

&&&&&&&&&

அறைக் கதவைத் தாழிட்டு விட்டுச் சென்ற சாரதா, சிறிது நேரத்தில் , சுஷ்மிக்காக, அங்கே வர வேண்டி இருந்தது.
' யாராவது புது மனுஷங்களைப் பார்த்தாலே , அழுவா, இப்ப என்னடான்னா இந்த வெண்ணிலா பொண்ணு கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டாளே. ம், ரம்யா நீ தான் மறு பிறப்பு எடுத்துட்டு வந்திருக்கியா? உன் பொண்ணோட, அடையாளத்தை எடுத்துக்கிட்டு ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாறே, வெண்ணிலாவின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் சாரதா.

அங்கே சுஷ்மி இன்னமும் உறங்கிக் கொண்டு தான் இருந்தாள்.

கதவைத் திறந்திடும் ஓசை கேட்டு எழுந்து கொண்ட வெண்ணிலா, கதவுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சாரதாவைக் கண்டதும்,
சற்றே நிம்மதி அடைந்தாள்.
கண்களை நீவி விட்டபடி எழுந்து கொண்ட வெண்ணிலா, " அம்மா, உங்க போனைக் கொஞ்சம் தர்றீங்களாம்மா. பிளீஸ், நான் என் அம்மா கிட்ட கொஞ்சம் பேசணும். அவங்க என்னைக் காணாம அழுதுட்டே இருப்பாங்கம்மா. "என்று கண்ணீர் மல்க சாரதாவிடம் கேட்க..
" நானே அதைத் தான் நெனச்சேன். இதுக்குப் போய் எதுக்கு, நீ அழறே. நானும் ஒரு பொண்ணைப் பெத்தவ தானே. அதுவும் ஒரு, அதிர்ஷ்டம் இல்லாத பொண்ணை , ஒரு வாழத் தெரியாத பொண்ணை.." என்று, சொன்னாள் சாரதா.


அவளின் நினைவுகள், ரம்யாவை நோக்கிச் சென்றன.

###########
ஆறு மாத கருவைத் தாங்கிக் கொண்டிருந்த ரம்யாவுக்குத் தெரியவில்லை, தனது வயிற்றுச் சுமையை இறக்கி வைத்திடும் வேளையில், அதனை விரும்பி ஏற்றுக் கொள்ள, ஒருவரும் வரப் போவதில்லை என்பது!

வேண்டா வெறுப்பாக, கருவைச் சுமந்த போதும், தனது கடமையைச் சரி வர செய்திட வேண்டுமே என்ற, கலக்கத்துடன் அவள், இறைவனைத் தொழாத நாளே இல்லை!

ஆனால், அது யாருக்குமே வேண்டாத உயிர் ஆகிப் போனதே, அவளின் வாழ்வை மீளாத பள்ளத்தில் இறக்கி விட்டு விட்டது.

மும்பையில் நடந்த, மருத்துவர் கான்ஃபரன்ஸில் கலந்து கொண்டு, ஊர் திரும்பியவுடன், ரம்யாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்த வாசுவுக்குத் தோல்வியே மிஞ்சியது.

' என்ன ஆச்சுன்னு தெரியலியே. போனையும் எடுக்க மாட்டேங்கிறா. இன்னிக்கு மதியத்துக்கு மேல அவ வேலை பார்க்கிற , ஹாஸ்பிட்டலுக்கே நேரா, போயி விசாரிக்கணும் ' என்று தனக்குள் முடிவு செய்தவன் அவ்வாறே செய்தான் .

ஆனால் ,முதலில் அங்கே ரிசப்ஷனில விசாரித்த போது, " இங்கே அப்படி யாருமே வேலை செய்யலியே " என்ற பதில் தான் கிடைத்தது.

பின், ரிசப்ஷனில் பணியில் இருந்த சிஸ்டரிடம், தான் தலைமை மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்று சொல்லி விட்டு காத்திருக்கத் தொடங்கினான்.


" சார், அவங்களைப் பார்க்கறதுக்கு எல்லாம் நீங்க, ஒரு வாரம் முன்னாடியே அப்பாயின்ட்மெண்ட் போட்டிருக்கணும். இப்படி உடனே எல்லாம் பார்க்க முடியாது சார் " என்று மீண்டும் அந்தப் பெண் மறுத்திட, வாசுவுக்குக் கோபம் வந்தது.


" என்ன, நடக்குது இங்கே. என் தங்கை ரம்யா இந்த ஹாஸ்பிட்டல்ல தான், ரெக்கார்டு மேனேஜ்மெண்ட் செக்ஷனில வேலை பார்த்துட்டு இருக்கா. நீங்க என்னடான்னா தெரியவே தெரியாதுன்னு சொல்றீங்க. நான் எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி, அந்த டாக்டரம்மாவைப் பார்த்துட்டுத் தான், போவேன் " என்று உறுதியான குரலில் சொல்லி விட்டு காத்திருக்கத் தொடங்கினான்.


பின் மருத்துவமனை வாசலில் இருந்த கான்டீனில், தனக்காகக் காபி ஆர்டர் செய்து விட்டு, அங்கிருந்த சலசலப்புகளைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது வாசலில், ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது.

மயக்கத்தில் இருந்த ஓரு பெண்ணை, ஸ்டிரெச்சரை எடுத்து வந்து, அதில் படுக்க வைத்து, அழைத்துச் சென்று கொண்டிருந்தனர், அங்கிருந்த பணியாளர்கள்.

நல்ல வேளையாக, அந்தப் பெண்ணின் முகம், வாசுவின் கண்களில் பட்டது ஆம்! அந்தப் பெண், அவனது தங்கை ரம்யாவே தான்.

" ரம்யா, ஐயோ ரம்யா! என்ன ஆச்சு உனக்கு ? ஏன் இப்படி இருக்கே?

சொல்லுமா, என்ன ஆச்சு?." என்ற அவனது கதறல் ஒலி, அவளது செவிகளுக்குள் எட்டவே இல்லை. உடன் வந்த மருத்துவமனை ஊழியர்களும், " சார் வழியை விடுங்க. இவங்க கொஞ்சம் சீரியஸா இருக்காங்க. கொஞ்சம் நகருங்க " என்று அவனை அப்புறப் படுத்துவதிலேயே குறியாக இருந்தனர்.


ஒரு கணம் செய்வதறியாது திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த அவன் பின், அவன் தன்து சீனியர் மாணவன், ஒருவன் காவல் துறை உயர் அதிகாரி ஒருவரின் மகன் என்று சொன்னதை நினைவு கூர்ந்து, அவனைத் தனது உதவிக்கு அழைத்தான்.
அவனிடம், தனது தங்கை ஆபத்தில் இருக்கிறாள் என்று சொல்லி மருத்துவமனையின் பெயரைச் சொல்லிட, அவனோ, " டேய் வாசு நீ முதல்ல பிரச்சினை என்னன்னு முழுசாத் தெரிஞ்சுக்க. இதோ நானும் புறப்பட்டு வர்றேன். என்ன, ஏதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, அப்புறமா அப்பாவோட உதவியைக் கேட்கலாம் " என்று சொன்னான்.


அவன் சொன்னதில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட வாசு, உடனே ஸ்டிரெச்சரைப் பின் தொடர்ந்து, தானும் செல்லத் தொடங்கினான்.
பின்னோடு சென்ற ஒரு செவிலிப் பெண்ணை அழைத்து, " சிஸ்டர், இவ என் தங்கை. இந்த ஹாஸ்பிட்டல்ல தான் வேலை பார்க்கிறா. இவளுக்கு என்ன ஆச்சு? இப்ப ஏன் இப்படி இருக்கிறா. சொல்லுங்க சிஸ்டர் . இந்த ஊரில அவளைத் தனியா விட்டுட்டுப் போனது என் தப்பு தான். ஆனா இப்படி ஒரு கோலத்துல அவளைப் பார்ப்பேன்னு நான் நெனச்சுக் கூடப் பார்க்கலை. உங்களை என் தங்கையா, இல்லை தெய்வமா நெனச்சு கேக்கறேன். பிளீஸ் சொல்லுங்க சிஸ்டர் " என்று அழுத குரலில் கேட்டான் .


அவனது, தவித்த முகம் கண்டு அந்தப் பெண் சற்று மனம் இரங்கினாள். " சார், நான் இப்ப சொல்லப் போற விஷயத்தைப் பத்தி நீங்க யாரு கிட்டயும் சொல்லாதீங்க. பாவம் சார், இந்தப் பொண்ணு. இவங்க கிட்ட சொல்லாமலேயே, இவங்களை ஒரு வாடகைத் தாயா மாத்தி, ஒரு கருவைச் சுமக்க வச்சிட்டாங்க. இன்னிக்குக் காலையில இவங்க பாத்ரூமில வழுக்கி விழுந்துட்டாங்களாம். பிளீடிங் ஆயிடுச்சு. அதான், இப்ப சிசேரியன் பண்ணிக் குழந்தையை எடுக்கறதுக்காகத் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க " என்று சொன்னாள்.


அதனைக் கேட்ட வாசுவுக்கு, பூமியே தலை கீழாக சுற்றுவது போலத் தெரிந்தது .

." என்னது ., என்ன சொல்றீங்க நீங்க ? இதென்ன இப்படி எல்லாம் கூட நடக்குமா ?.ஏன் அவளை இப்படி பண்ணினீங்க " என்று உரத்த குரலில், கதறிட அதனைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண், " சார், சார் டாக்டர் வர்றாங்க. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க " என்றாள்.


" இல்லை, இந்த மாதிரி அநியாயம் இங்கே எவ்வளவு நாளா நடக்குது ., நான் இப்பவே போலீஸ் கிட்ட போறேன். அத்தனைக்கும் உங்க டாக்டர் தானே காரணம். அவங்களை,..." என்று சொல்லித் தனது பற்களை நறநறவென்று கடித்தான்.
பின் சற்றே ஆசுவாசம் கொண்ட அவன், " சிஸ்டர் இப்ப நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே." என்று கேட்டான்.

அவன் என்ன உதவி கேட்கப் போகிறான்?
( வரும்)


தொடர்ந்து வாசித்து உங்களது ,
கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே !!
ஏதேனும் குறைகள் இருந்தாலும் எடுத்துக் கூறுங்கள் . உங்களது, விமர்சனங்களே எனது ஊக்கம். ??










 
முன்ன பின்ன நீகழ்வுகள்வருவதால் குறை னு ஒன்னும் தெரியல எல்லாம் முடிச்சிச்சும் அளவிலும் போது இன்னும் சுவாரஸ்யம் இருக்கும்
 
Top