Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 15

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
அத்தியாயம் 15

மிருதுளா அதன் பின் தன் தாயிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. தானும் அவர்களுடன் இணைந்து ஒரு டம்ளர் காபி குடித்துவிட்டு மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள்.

இரவு சரியான தூக்கம் இல்லாததனால உடனே சற்று அயர்ந்து உறங்கியும் விட்டிருந்தாள்.

அப்போது, அவளது அலைபேசி நீண்டதாக ஒலித்தது. எங்கோ தூரத்து பள்ளி எழுச்சி இசை போல அவளது செவிகளுக்குள் ஊடுருவிச் சென்றது அதன் அழைப்பு.

சட்டென கண் விழித்துக் கொண்ட அவள், அலைபேசியைக் கைகளில் எடுத்தாள். அதன் இசை முடிவுக்கு வந்திருந்தது.
தவறிய அழைப்பினை ஆராய்ந்த போது, அது ரவியின் எண்களைக் காட்டியது.
அலைபேசியை, ஆன் செய்து விட்டு, தனது அலைபேசியில் இருந்து அவனது எண்களுக்கு அழைத்தாள்.

" மாமா, தூங்கிட்டு இருந்தேன். அதான் எடுக்கலை. சொல்லுங்க மாமா. வெண்ணிலா அக்கா பத்தி ஏதாவது தெரிஞ்சுதா ? அக்கா எங்கே இருக்கா? " என்று நொடிக்கு ஒரு கேள்வியை, அவனை நோக்கி வீசிட ரவி ஒரு கணம் செய்வதறியாமல் தவித்துப் போனான்.

" இங்கே, அம்மாவும் அப்பாவும் அழுதுட்டே இருக்காங்க மாமா. இன்னும் யாரும் எழுந்திருக்கவே இல்லை. அதோட அம்மா என்னையும் காலேஜ் போக வேண்டாம்னு சொல்லிட்டாங்க மாமா " என்று அழாத குறையாகக் கூறினாள் அவனிடத்தில்.

" ம், நான் நெனச்சேன், இப்ப நீ வீட்ல தானே இருக்கே. இரு, ஒரு அரை மணி நேரத்தில நானே வந்து உன்னை காலேஜுக்குக் கூட்டிட்டுப் போறேன் " என்றான் ரவிச்சந்திரன்.

உடனே மிருதுளாவின், பேச்சில் சிறிதான உயிர்ப்பு தெரிந்தது .

" ம், சரிங்க மாமா. அப்ப நான் கிளம்பட்டுமா? " என்று கேட்டாள்.

" சரி , நீ கிளம்பி ரெடியா இரு. இதோ நான், ஒரு அரை மணியில வந்துடுவேன் " என்று சொல்லி விட்டு அலைபேசியைக் கிடத்தினான் ரவி.

***************************************
வாசுவின் அழுகை, வெண்ணிலாவின் இதயத்தைக் கசக்கியது. உண்மையில், ரம்யா இறந்து விட்டாள் என்ற செய்தியை அவளால் இப்போதும் கூட நம்ப முடியவில்லை.

ஆனால், சொல்பவன் அவளது உடன் பிறப்பல்லவா? நம்பித் தானே தீர வேண்டும்!

" வாசு, பிளீஸ் அழாதேடா. என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அமைதியா இரு. உனக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு என் மனசுல தெம்பு இல்லை.!!
சொல்லு , அவ ஏன் செத்துப் போனா? எப்படி இது நடந்தது ? கேட்டுட்டு இருக்கிற என்னாலயே, அதைத் தாங்கிக்க முடியலியே. உன் மனசு எவ்வளவு தூரம் ரணப்பட்டுப் போயிருக்கும்னு, என்னால அளக்க முடியலை . சொல்லுடா " என்று மீண்டும் கேட்டாள்.

பெண் மனம், அது அடுத்தவர் தவிப்பைக் கண்டு துடித்துப் போனது.

இந்தத் தவிப்பிற்கும் காதல் என்று பெயரிடுவரோ??

காதல் என்பது, ஆண், பெண் இருவரின் விழிகளும் ஸ்பரிசித்துக் கலந்திடும், அழகான பொழுதினில், இதயத்தினுள், நுழைந்து , அதுவே தத்தம் வாழ்வினில், எந்த விலை கொடுத்தாலும் பிரிக்க இயலாத பந்தம் என இருவரின் மனங்களும் ஒரே கணத்தில் நினைத்துக் கொள்ளும் போது , பிறந்திடும் அற்புத உணர்வு அல்லவா அது?

ரவிக்கும், வெண்ணிலாவிற்கும் இடையே அது நிகழ்ந்து விட்டது. காதலில் விழுந்த நிலாவின் மனம், தனது இணையான ரவி, எப்படியேனும் தன்னை மீட்டெடுக்க வந்திடுவான் என்ற நேர்மறை எண்ணத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு காத்திருக்கத் தொடங்கி விட்டிருந்தது.

ஒரு கருவைச் சுமந்து கொண்டிருக்கும் அன்னையைப் போல அவளது இதயம் முழுக்க ரவியைத் தான் சுமந்து கொண்டிருந்தாள்.

ஆனால் வாசு? வாசுவின் மனமானது தன்னுடன் பிள்ளைப் பிராயத்தில் ஒன்றாக விளையாடிக் களித்த ,வெண்ணிலாவிற்குத் தன்னைத் தாண்டி ஒரு புதிதான உறவு எப்படி நெருங்கி வந்திட முடியும்? என்று தனக்குள் ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதன் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை வேறு கொண்டிருக்கிறது.

வெண்ணிலா, எவ்வாறு தன் மனத்தை வாசுவிற்குப் புரிய வைக்கப் போகிறாள்?

புரிந்து கொண்டாலும், அதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவனுக்கு வந்திடுமா?

************************************************
தீபக், ரோகிணி மருத்துவமனைக்கு வந்து விட்டிருந்தான்.வந்தவுடன், மருத்துவமனை முகப்பில் இருந்த காத்திருப்போர் அறையிலேயே அங்கிருந்த நோயாளிகளுடன் அமர்ந்து கொண்டான்.

ஆனால் அவனது, விழிகள் அனைவரின் முகங்களையும் ஆராய்ந்து கொண்டு தான் இருந்தன.

ரிசப்ஷனில் இருந்த செவிலியர்கள் வெண்ணிலாவைத் தேடி பரபரத்துக் கொண்டு இருந்ததையும் அவன் கவனிக்கத் தவறவில்லை .

அப்போது தான், பிருந்தாவும் வந்து தனது, இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தாள்.

அவளது முகம், ஒரு இனம் புரியாத பயத்தை வெளிக் காட்டியது. அதனை அவளது நெற்றியில், தென்பட்ட வியர்வை கோடுகள் காட்டிக் கொடுத்தன.

ஏனோ அவளும், நிமிடத்திற்கு ஒரு முறை வாசலைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

' என்ன ஆச்சு? வெண்ணிலா ஏன் இன்னும் வரலை ? அப்படின்னா நேத்திக்கு அந்த இன்ஸ்பெக்டர் சொன்னது நிஜம் தானா? அப்போ அவ தான் நேத்திக்குக் காணாமப் போயிட்டாளா? .அதே நேரம், டாக்டரும் எதுக்காக அவளைத் தேடிட்டு இருக்காங்க? இங்கே என்ன நடக்குது ? எதுவுமே புரியலியே எனக்கு ' என்று குழப்பம் மேலிட , தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு சற்று ஆசுவாசம் கொண்டாள்

மருத்துவர் ஷீபாவும், அதே குழப்பத்துடன் தான் , தனது அறையில் அமர்ந்து கொண்டு இருந்தாள்.

' என்ன இந்தப் பொண்ணு? ஏன் இப்படி ஒரு லீவு கூட சொல்லாம, வீட்டில உட்கார்ந்துட்டு இருக்கா ? எப்படியாவது பேசிப், பேசிக் கரைச்சுடலாம்னு நெனச்சுட்டு இருந்தேன். போன் வேற சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்காளே ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

அதன் பின், எப்போதும் போலவே தனது வேலைகளில் ஆழ்ந்து போனாள்.
என்ன இருந்தாலும், மருத்துவப் பணி அல்லவா?

ரிசப்ஷனை ஆராய்ந்து கொண்டு இருந்த, தீபக்கின் கண்களுக்குள் பிருந்தா அகப்பட்டுக் கொண்டாள்.

அவளது அசாதாரணமான முக பாவத்தை அவனது ஆழ் மனம் குறித்துக் கொண்டது.

தீவிர யோசனைக்குப் பின்னர், அவன் மருத்துவர் ஷீபாவை சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவ்விடத்தை விட்டு எழுந்து கொண்டான்.

அவன் எழுந்த நிமிடத்தில், சட்டைப் பையில் இருந்த அலைபேசி, அவனை அழைத்திட, கைகளில் எடுத்து அதற்கு உயிர் ஊட்டிய போது, அது அவனது நண்பன் ரவியின் எண்களைக் காட்டியது
.
" ஹலோ , சொல்லுடா ரவி? இப்ப எங்கே இருக்கே நீ? " என்று கேட்டான் தீபக்.

" இதோ, நான் வெண்ணிலா தங்கையை அழைச்சிட்டு அவங்க காலேஜ்ல டிராப் பண்றதுக்காகப் போயிட்டு இருக்கேன்டா. நீ ரோகிணி ஹாஸ்பிட்டல் போயிட்டியா? " என்று கேட்டான் ரவி .

" ம்ம், அதெப்படி நான் இங்கே வந்து இருக்கிறது உனக்குத் தெரியும்? நான் உன் கிட்ட அதைப் பத்தி சொல்லவே இல்லையே " என்று கேட்டான் தீபக்.

" அது, வந்து பட்சி சொல்லிச்சி .அட ஏன்டா நீ வேறே. எல்லாம் ஒரு கெஸ்ஸிங்ல தான் கேட்டேன் " என்று சொன்னான் ரவி .

பின் அவன், " எனக்கு காலையில் அப்பாயின்ட்மென்ட் அங்கே தான் . ஷீபா டாக்டரைத் தான் பார்க்கணும். அதான் கேட்டேன் " என்றான்.

அதற்குள் மிருதுளாவின் கல்லூரி வந்திருக்கவே, அவளை இறக்கி விட்டு, " சாயந்திரம், நீ எனக்குக் கால் பண்ணு. நானே உன்னை அழைச்சிட்டுப் போய் வீட்டில விட்டுடறேன். டேக் கேர் " என்று சொல்லி விட்டு அங்கிருந்து அகண்றான்

ரவி. அதற்குள் அழைப்பின் மறு முனை துண்டிக்கப்பட்டு இருக்கவே , ' ஓ.கே நேரில பார்த்துப் பேசிக்கலாம் ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

*************************************************
அனைவருக்குமான காலை உணவுடன், வாசுவின் அறைக் கதவைத் தட்டினாள் சாரதா.

வாசு, தனது கண்களைத் துடைத்துக் கொண்டான். பின், கதவைத் திறந்திட முதலில் உள்ளே நுழைந்து கொண்ட சுஷ்மி, " அத்தை, அத்தை. இந்தா உனக்கு இட்லி " என்று சொல்லியவாறே , வெண்ணிலாவின் கைகளில் தான் எடுத்து வந்திருந்த தட்டினைக் கொடுத்தாள் சுஷ்மி.

உள்ளூர பயம் இருந்தாலும் வாசுவின் வெளிப்படையான பேச்சினால்
சற்று தெளிவு பெற்றிருந்த வெண்ணிலா சுஷ்மியிடம், " எனக்கா, அப்போ பாப்பாவுக்கு எங்கே? " என்று கேட்டாள்.

" பாப்பா, சாப்பிட்டாச்சு. அம்மா ஊட்டுச்சு " என்று சொன்னாள் சுஷ்மி.

வெண்ணிலாவிடம் சுஷ்மி ஒட்டுதலாகப் பழகுவதைக் கண்டு சாரதாவின் மனம் சற்றே நிம்மதி அடைந்திருந்தது.

'அம்மா, முகம் பார்க்கற கொடுப்பினை இல்லாமப் போயிடுச்சு உனக்கு . இன்னும், இந்த உலகத்தில நீ, என்னென்ன பாடெல்லாம் படப் போறியோ தெரியலை ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், தன் மகனிடம், " போ வாசு, டைனிங் டேபிள்ள உனக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். போய் சாப்பிடு நீயும் " என்று சொன்னாள்.

அவன் சென்றதும் , வெண்ணிலாவிடம், " ம், சாப்பிடும்மா . .." என்றவாறே உபசரிக்கத் தொடங்கினாள்.

வெண்ணிலா, சாப்பிடத் தொடங்கினாள்.

அவளுக்கு அப்போது அம்மா மேனகாவின் நினைவு தான் வந்தது.

இட்லிக்குள், அம்மாவின் முகம் தெரிந்திட, ' அம்மா நீ சாப்பிடும்மா. நான் இங்கே பத்திரமாத் தான் இருக்கேன். கண்டிப்பா திரும்பவும் நம்ப வீட்டுக்கு வருவேன். நீயும் , அப்பாவும் கவலைப் படாம சாப்பிடுங்கம்மா ' என்று எண்ணிக் கொண்டே, அடுத்த விள்ளலை வாயில் போட்டுக் கொண்டவளுக்குப் புரை ஏறியது.

உடனே அவளுக்கு ரவியின் முகம் தான் நினைவுக்கு வந்தது.

' ரவி, உனக்காகத் தான் நான் காத்துட்டு இருக்கேன். நீ எப்படியாவது நான் இருக்கும் இடம் கண்டுபிடிப்பனு என் உள் மனசு சொல்லுது ... நீ எப்ப வருவ?? ' என்று கண்ணுக்குத் தெரியாத தனது, காதலனிடம் மனதால் கேட்டாள் வெண்ணிலா .

( வரும்)







 
Top