Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ 13

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member

அத்தியாயம் 13
தீபக்கின் நம்பிக்கை ஊட்டிடும் பேச்சு ரவிக்கு ஆறுதல் அளிக்கவில்லை.

' என்ன இவன் , என்ன செஞ்சான், ஏது செஞ்சான்னு ஒன்னுமே தெரியல. நம்ம கிட்ட எதையும் ஒழுங்கா சொல்லவும் மாட்டேங்கிறான். ம்ம், இப்ப என்ன செய்யறது ' என்று யோசனையுடனேயே, சிறிதும் சிரத்தை அற்றவனாகத் தனது காலை வேலைகளை முடித்துக் கொண்டு, சாப்பாட்டு மேஜைக்கு முன் வந்து அமர்ந்து கொண்டான்.

ஹாட்பாக்ஸில் இருந்த இட்லிகளைத் தானே எடுத்துத் தட்டில் போட்டுக் கொண்டான்.

சமையல் அறையில் இருந்து ஆவி பறக்கும், சாம்பாருடன் வெளிப்பட்ட சுமதி, " என்னடா ரவி. அம்மாவைக் கூப்பிட்டு இருக்கக் கூடாதா? இப்படி வெறும் இட்லியைத் தின்னுட்டு இருக்கே " என்று கேட்டாள்.

" ம், எப்படியும் நீ உடனே வந்துடுவேன்னு தெரியும். அதான் கூப்பிடலை. வாம்மா நீயும் வந்து சாப்பிட உக்காரேன். அங்கே வேலை முடிஞ்சது இல்லை " என்று கேட்டான்.

" இதோ, ஒரு நிமிஷம் பாலை அடுப்பில வச்சிருக்கேன். அதை சிம்மில மாத்திட்டு வந்துடறேன் " என்றாள் சுமதி.

சற்று நேரம் அங்கே கனத்த அமைதி நிலவியது. இருவரின் மனத்திலும் நேற்றைக்கு இந்த நேரம்? என்ற கேள்வி எழாமல் இல்லை.

சில நேரங்களில், நம் வாழ்விலா இப்படி எல்லாம் நடக்கிறது ,?, நாம் இவற்றை எல்லாம் கடந்து சென்று வாழ்வை ஜெயிப்பது எவ்வாறு? என்ற விடை தெரியாத கேள்விகள் பல நமக்குள் எழுந்திடும்.

அதற்குப் பதில் சொல்வது யார் ? தெரியாது! எப்போது விடை கிடைத்திடும் ? தெரியாது;
நம்மையே, நாம் ஒரு மூன்றாம் நபர் போல எதிரில் நின்று வேடிக்கை பார்த்துக் கொள்ள வேண்டிய பொழுதுகள் அவை!!
கூட்டல், கழித்தல் கணக்குப் போட்டு எளிதாக விடை, கிடைத்தது என்று மார் தட்டி நின்று கொள்வது அல்லவே வாழ்க்கை!

நாம் எதிர்பாராத சமயங்களிலும் கூட எங்கிருந்தோ, வந்திடும் சிக்கல்களையும் தீர்ப்பது அல்லவா வாழ்க்கை.

இருவருக்குமிடையே இடையூறு இல்லா, அமைதி நிலவிய அந்தத் தருணத்தில் தான், ரவியின் மனத்தில் இப்படி ஒரு எண்ணம் எழுந்தது.

' ம் சரி , எதுவா இருந்தாலும் தீபக் அதை நல்லபடியா பார்த்துக்குவான். வெண்ணிலாவும் திரும்பக் கிடைச்சிடுவா
இப்படியே நாம நம்புவோம். அதான் இப்போதைக்கு நல்லது ' என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அதன் பின் அவனது மனமும் சற்றே அமைதி கொண்டது.

" அம்மா, என்ன இது அதுக்குள்ள எழுந்திருச்சிட்டே. இன்னும் ஒரு இட்லி வச்சிக்கோயேன் " என்று தட்டைத் தூக்கிக் கொண்டு எழுந்த தனது தாயிடம் கேட்க

" ம், இப்பத் தான் தம்பிக்கு எதிரில இருக்கிறவங்க கண்ணுக்குத் தெரியறாங்க போல இருக்குது. நான் எப்பவும் போல நாலு இட்லி சாப்பிட்டுட்டேன். நீ தான் அதைக் கவனிக்கலை . சரி , நீ சாப்பிட்டு முடி. அது வரைக்கும் நான் இங்கே உக்காந்து இருக்கேன் " என்றாள் சுமதி.

அதன் பின், சிறிது நேரம் இருவரும் என்றைக்கும் போலப் பேசிக் கொண்டிருந்தனர்.

சாப்பிட்டு முடித்ததும், எப்போதும் போல அன்றைக்குத் தனக்கு என குறிக்கப்பட்டிருந்த வேலைகளை நாளேட்டில் ஒரு கணம் பார்வை இட்டான். அதில் அன்றைக்கும் ரோகிணி மருத்துவமனையின் பெயர் இருந்தது.

' ம்ப்ச் ' என்று உதட்டைப் பிதுக்கிக் கொண்டே கிளம்பத் தொடங்கினான்.

தனது, எதிர்பார்ப்புகளை எல்லாம், மூட்டை கட்டி வைத்து விட்டு, சுமதியிடம் விடை பெற்றுக் கொண்டு, தனது காரைக் கிளப்பினான், ரவி.

----------------------
ஒரு வழியாக, பூட்டி இருந்த அறைக் கதவு திறக்கப்பட்டது. வெளியில் இருந்து கதவைத் திறந்த வாசுவைக் காலோடு கட்டிக் கொண்டாள் சுஷ்மி.

" மாமா, நான் பல் தேச்சுட்டேன்.
நீ ஏன் இவ்வளவு லேட்டா வர்றே. எனக்குப் பசிக்குது மாமா " என்றாள்.

" மாமாவுக்குத் தெரியுமே, அதான் பாப்பாக்கு பூஸ்ட் கலக்கி எடுத்துட்டு வந்துட்டேன் " என்று சிறு குழந்தைக்கு இணையான குரலில், அவளிடம் பேசினான் வாசு .

சொன்னது போலவே, அவனது கைகளில் இருந்த தட்டில் நான்கு டமளர்கள் இருந்தன.

சுஷ்மியிடம் ஒரு கப்பை முதலில் கொடுத்த அவன், தட்டினை சாரதாவிடம் நீட்டினான்.

சாரதா, தான் ஒன்றை எடுத்துக் கொண்டு, வெண்ணிலாவிடம் இன்னொன்றைக் கொடுத்தாள்.

" ம், எதுக்குடா இப்படி கதவைப் பூட்டிட்டுப் போனே; ஏதாவது அவசரம்னா, உன்னைக் கூப்பிட்டுச் சொல்ல நான் என் போனைக் கூட எடுத்துட்டு வரலை " என்று வாசுவைக் கடிந்து கொண்டாள், சாரதா.

வாசுவின் கவனம் அவளது வார்த்தைகளில் இல்லை!

சுஷ்மியுடன் சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தமையால் சற்றே தெளிவு பெற்றிருந்த, வெண்ணிலாவின் முகத்திலேயே இருந்தது .

ஆனால், வெண்ணிலாவின் கவனம், காபியிலேயே இருந்தது!

இரவு , சரியாகச் சாப்பிடவில்லை என்பதால் அவளுக்குப் பசிக்க ஆரம்பித்து விட்டிருந்தது.

அதனை உணர்ந்து கொண்ட, வாசு " என்ன வெண்ணிலா பசிக்குதா உனக்கு.
காபி பிடிச்சிருக்கா உனக்கு? என்னோட தயாரிப்பு தான் . ஒரு கால் மணி நேரம் வெயிட் பண்ணு, சூடா சப்பாத்தி பண்ணித் தர்றேன் " என்றான் வாசு.

அதனைக் கேட்ட, சாரதா சிரித்தபடி, " ம், உனக்கு அது ஒன்னு தான் செய்யத் தெரியும் . வழியை விடு நான் வெளியே போய் என் வேலையைப் பார்க்கறேன் " என்று சொன்னாள் சாரதா.

" ம், அதுவும் சரி தான். நீ போய் ஏதாவது செஞ்சி எடுத்துட்டு வா. நான் இங்கே வெயிட் பண்றேன் " என்று சொல்லி விட்டு வெண்ணிலாவை நோக்கிக் கண்ணடித்தபடி சிரித்தான் .

உடனே சரேலென எழுந்து கொண்ட வெண்ணிலா , அதீத வேகத்துடன் கதவைத் திறந்து கொண்டு ஓடத் தொடங்கினாள்.

சாரதா, ஸ்தம்பித்துப் போனவளாய் அங்கேயே நின்று கொண்டிருக்க, சுஷ்மி, "அத்தை, அத்தை , நில்லுங்க அத்தை" என்றபடி வெண்ணிலாவின் பின்னே ஓடத் தொடங்கினாள்.

மின்னல் வேகத்தில், பாய்ந்தோடி வந்த வாசு, அவளைப் பிடித்து விட்டான்.

" வாசு , என்னை விட்டுடு. நான் போயிடறேன். இப்பவே ஒரு நாள் கடந்துடுச்சுடா. நீ ரம்யா இடத்தில ஏன் என்னை வச்சிப் பார்க்க மாட்டேங்கறே? வீட்டில தேடுவாங்க வாசு. பிளீஸ் வாசு " என்று கெஞ்சாத குறையாக அவனைக் கேட்டாள், வெண்ணிலா.

வாசு, அதனைக் கேளாதவன் போல, நடந்து கொண்டான்.

மீண்டும் அவளை இழுத்து வந்து, அறைக்குள் தள்ளினான். " ம், இது தான் உன் இடம். இங்கேயே கிட " என்று சொல்லி விட்டு சாரதாவை, வெளியேற்றி விட்டு, கதவைத் தாழிட்டான்.

இப்போது, அறைக்குள் வெண்ணிலாவும், வாசுவும் மட்டுமே தனித்து இருந்தனர்.

" வாசு, கதவைத் திற வாசு. ஏன்டா நீ இப்படி பண்றே. டேய் பாவம்டா அந்தப் பொண்ணு. கதவைத் திறடா " என்று அறைக்கு வெளியில் இருந்தபடி சாரதா கத்தினார்.

வெண்ணிலா , செய்வதறியாமல் " வாசு நீ வெளியே போயிடு, போயிடு வாசு .இல்லைன்னா என்னை எதுக்காக இப்படி போட்டு அடைச்சு வச்சிருக்கே? அதுக்கான காரணத்தையாவது கொஞ்சம் சொல்லு. வாசு , பிளீஸ் வெளியே போயிடு " என்று திரும்பத் திரும்ப தான் சொன்னதையே, சொல்லிக் கொண்டே இருந்தாள்.

" சரி, உன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும். அதுக்காகத் தான் நான் மட்டும் உள்ளே வந்தேன். ஒரு பொண்ணோட விருப்பத்தைத் தெரிஞ்சுக்காம, அவளோட குடும்பம் நடத்தற அளவுக்கு நான், கேடு கெட்டவன் இல்லை . அதை முதல்ல நீ புரிஞ்சுக்கணும் " என்று சொல்லி நிறுத்தியவன் , அவளிடம் ஒரு ஃபைலை நீட்டினான்.

" இங்கே பாரு, நீ ஷீபா டாக்டர் கிட்ட ஒரு பொறுப்பான நர்ஸா வேலை பார்த்துட்டு இருக்கே, குறைந்த பட்சம் ஒரு நாலு வருஷமாவது இருக்கும் இல்லையா நீ வேலை பார்க்க ஆரம்பிச்சு? " என்று கேட்டான்.

வெண்ணிலாவும் அதற்கு ஆமோதிப்பாய்த் தலை அசைத்தாள்.

வாசு தொடர்ந்தான்.
ஒரு சிசேரியன் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து செலுத்துவதற்காக ரோகிணி மருத்துவமனைக்கு வந்த போது தான், வாசு, அங்கே வெண்ணிலாவைப் பார்த்தான்.
வெண்ணிலாவைக் கண்டதுமே, வாசுவிற்கு அடையாளம் தெரிந்து விட்டது.

ஆனால், அது ஒரு ஆபரேஷன் தியேட்டர் என்பதால், அவன் ஒரு முறை அவளை நிமிர்ந்து பார்த்து " ஹாய் " என்று சொல்லி சிரிக்க மட்டுமே செய்ய முடிந்தது.

பதிலுக்கு ஒரு ஹாய் மட்டுமே சொல்லி விட்டு, அதன் பின் அவனை ஏறெடுத்தும் கூட பார்க்கவில்லை வெண்ணிலா.

அதுவே வாசுவிற்கு ஏமாற்றமாகப் போனது. ' என்ன இவ , என்னை மறந்து போயிட்டாளா. இப்படி என்னை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டேங்கறாளே ' என்று எண்ணிக் கொண்டான்.

அதன் பின், அவளைப் பார்க்கும் வாய்ப்பு, அவனுக்குக் கிட்டவில்லை.

அடுத்தாற் போல, மீண்டும் ஒரு முறை மயக்க மருந்து செலுத்துவதற்காக, ரோகிணி மருத்துவமனைக்கு சென்றபோது தான் வாசுவிற்கு அங்கு , பணி புரிந்து வரும் பெண் செவிலியர்களுக்கு நடந்திடும் அசம்பாவிதம் பற்றித் தெரிய வந்தது.

ஒரு கரு முட்டை சேகரித்திடும், பணியின் போது, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் , வலி தாங்க முடியாமல் அரற்றிட. அதனால், அதற்கான மிதமான மயக்க ஊசியை அந்தப் பெண்ணிற்குச் செலுத்துவதற்காக அவன் அழைக்கப் பட்டிருந்தான்.

அப்போது தான் தனது அலைபேசியில் வெண்ணிலா என்ற பெயரைச் சொல்லி யாரிடமோ மருத்துவர் ஷீபா பேசிக் கொண்டிருந்தது, அவனது செவிகளில் விழுந்தது.

" இல்லை, இல்லை சார், அவங்களை இயல்பான முறையிலே இதுக்கு சம்மதிக்க வைக்கிறது, என்னோட பொறுப்பு. என்னை நீங்க தாராளமா நம்பலாம் " என்று வாக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள், மருத்துவர் ஷீபா.

( வரும்)















 
அப்போ ரெண்டு பேரோட டார்கெட் யும் ஷீலா டாக்டர் தான் ரோகிணி ஹாஸ்பிடல் தான்..
 
Top