Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 9

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 9

வெளக்குமாற்றால் மாறி மாறி கல்யாணியை அடித்தாள் முத்தம்மாள்.
'என் வாழ்க்க தான் பாழா போச்சு.. நீயாவது படிச்சு நல்ல வேலைக்கு போய் ஒன் வாழ்க்கய நல்லா வாழுவன்னு பாத்தா இப்படி கண்டவன கட்டிகிட்டு புள்ள பெத்துக்கறதுக்கா ஒன்ன படிக்க வைக்கறென்? என் வாழ்க்கய பாத்தாவது திருந்த மாட்டியாடி'
அழுகையும் கோபமுமாய் அவள் அடிக்க, ஓடி வந்தாள் நித்யா.
'ஆண்ட்டி! அவள அடிக்காதீங்க.'
ரவி என்ன செய்றதுன்னு தெரியாமல் 'ஙீ' என்று விழித்து விட்டு அவனது நண்பர்கள் தூரத்தில் இருந்து கை காட்ட, 'நான் வரேன் கல்யாணி.' என்று சொல்லி விட்டு சைக்கிளை மிதித்து நண்பர்களோடு கலந்து காணாமல் போனான்.
'வறென்.. கல்யாணியா...டேய் பொறுக்கி பயலெ.. இன்னைக்கு தப்பிச்ச.. இனி இந்தப் பக்கம் ஒன்ன பாத்தேன். ஒடம்ப பொளந்து உப்பு கண்டம் போட்டுருவேன். ராஸ்கல்...'
ரவியைப் பாத்து கத்தி விட்டு நித்யாவிடம் திரும்பினாள்.
'ஏம்மா! நீ டீச்சர் பொண்ணு நல்ல பொண்ணுன்னு பாத்தென். இப்படி வெளக்கு புடிச்சிட்டு ஒக்காந்திருக்கியே. இந்த விமலா பரவா இல்லியே. அக்கா! கல்யாணி அங்க எவன் கூடயோ ஒக்காந்து சிரிச்சி சிரிச்சி பேசிட்டிருக்குன்னு சொல்லி என்ன கூட்டிட்டு வந்தா. பிரண்டுன்னா இப்படி இல்ல . நீயும் இருக்கியே!'
விமலா பெருமை கலந்த பார்வை பார்க்க, நித்யா சொன்னாள்.
'ஆண்ட்டி! அவள நம்பாதீங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்த மொத நாளே ஒங்களப் பத்தி தப்பா சொல்லி என்ன கல்யாணி கூட சேராதன்னு சொன்னவ தான் இவ. இன்னைக்கு என்னமோ நல்ல புள்ள மாதிரி நடிக்குறா.'
'அவ கெடக்கட்டும். நீ எப்படி? இதோ இப்பவே உங்கம்மாட்ட சொல்ற பாரு. அந்தப் புண்ணியவதி இப்படி ஒங்களப் படிக்க வைக்க நீங்க ரெண்டு பேரும் இப்படி கூத்தடிக்கிறீங்க. வா மொதல்ல.'
அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு நேரே மேரி டீச்சரின் வீட்டை நோக்கி நடந்தாள் முத்தம்மாள்.
டீச்சர் பள்ளி முடிந்து அப்போது தான் வந்திருந்தார் போல. முத்தம்மாளையும் திருடிகள் மாதிரி முழிக்கும் நித்யா, கல்யாணியையும் என்ன என்பது போல் பார்த்தார். முத்தம்மாள் சொல்லச் சொல்ல அவர் முகம் மாறியது.
'என்ன கல்யாணி இது?' என்று கேட்டார். கல்யாணி அவள் காலடியில்பொத் என்று விழுந்தாள்.
'என்ன மன்னிச்சிடுங்க டீச்சர். அவன் உங்க ஊருக்காரன் தான். லீவுல உங்க ஊருக்கு கூட்டிட்டு போயிருந்தீங்கள்ல. அப்போ அந்தோணியார் கோவிலுக்கு போனப்ப எங்களப் பாத்து தப்பா பாட்டு படிச்சி கிண்டல் பண்ணான். நான் செருப்ப கழட்டி அவன் கன்னத்தில அடிச்சேன். இந்த சம்பவம் கூட ஒங்களுக்கு தெரியும். அம்மாக்கு தெரியறதுக்காக இப்ப சொன்னேன். அவன் தான் முந்தா நாளு அதுக்குப் பழிவாங்க என்ன கிஸ் பண்ணிட்டு ஓடிட்டான். எனக்கு என்னமோ பண்ணிரிச்சி. அவன் நியாபகமாவாகவே இருந்தது. என் மனசு என்ன அறியாம அவன லவ் பண்ண ஆரம்பிச்சிரிச்சு. அவன் கிட்ட என் லவ்வ சொன்னேன். இன்னைக்கு தான் அவன் தன் லவ்வ சொன்னான். தப்பு தான் டீச்சர். என்ன மன்னிச்சிருங்க. இதுக்கும் நித்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது டீச்சர்.'
கண்ணீரோடு அவள் சொல்லி முடிக்க, மேரி டீச்சர் நிதானமாய் அவளைப் பார்த்தார்.
'அந்தப் பையன மறுபடி பாத்தின்னா மறக்காம நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா. பயப்படாம வரச்சொல்லு. ஏன் நித்யா! இத்தன நடந்திருக்கு. எங்கிட்ட ஒரு வார்த்த சொல்லல பாரு.'
'அம்மா! என்ன மன்னிச்சிரும்மா. எங்க எங்க நட்பை நீங்க இது தெரிஞ்சா பிரிச்சிரிவீங்களோன்னு பயந்து தான் உங்க ரெண்டு பேர்ட்டயும் இது வர சொல்லல. தப்பு தாம்மா. ப்ரேயர் பண்றப்ப ஜீசஸ் கிட்ட கூட மனசார சொல்லி மன்னிப்பு கேட்டுருக்கேன்.' என்று அழ ஆரம்பித்தாள்.
மேரி தீர்க்கமாய் முத்தம்மாளிடம் சொன்னாள்.
'இங்க பாருங்க. நான் ஏற்கனவெ சொன்னது தான். கல்யாணியும் நித்யா மாதிரி தான் எனக்கு. இந்த விவகாரத்துல நான் உங்க பொண்ணுக்கு நல்லது தான் செய்வேன்னு உங்களுக்கு தோணிச்சுன்னா இந்த பிரச்சினய என்கிட்ட விட்ருங்க.'
முத்தம்மாள் துடித்துப் போனாள்.
'என்ன டீச்சர் அப்படி சொல்லிட்டீங்க! பொண்ண அப்படி பாத்ததுனால அடிச்சுப் போட்டேன். விவெரம் தெரியாத பொண்ணு எங்கயும் சிக்கிக்க கூடாதுன்னு வெளக்குமாற எடுத்தேன். அவளுக்கு உங்கள விட யாரு நன்ம செய்ய முடியும். இனி இந்த பிரச்சினைல நான் தலையிட மாட்டென் டீச்சர்' என்றாள்.
முந்தானையை எடுத்து கண்ணை துடைத்து விட்டு நகர்ந்தாள் முத்தம்மாள்.
அடுத்த நாள் கல்யாணி பள்ளிக்கு போகும்போது அந்த மூவர் கேங் நின்றிருந்தது. ரவி ராத்திரி தூங்கியிருக்க வில்லை போல் இருந்தது. கண்கள் சோர்ந்து இருந்தன. கல்யாணியை நெருங்கினான்.
'என்ன ஆச்சு கல்யாணி? லவ் பண்ற தான?'
கல்யாணி அவனைப் பார்த்தாள்.
'இந்த ஜென்மத்துல நீ தான் என் புருஷன். நீனே என்ன விட்டுப் போனாத்தான் உண்டு. இன்னைக்கு சாயங்காலம் எங்க மேரி டீச்சர பாக்க வா. அவங்களும் எனக்கு அம்மா மாதிரி தான். ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அவங்களும் நீ யாரு என்னனு தெரிஞ்சுக்கணும்ல.'
'சரி வர்றென்.'
அன்று சாயந்திரம் ஜேம்ஸ் வருவதற்கு முன் அவர்களை சந்தித்தார் மேரி டீச்சர்.
'இங்க பாருப்பா. கல்யாணி எல்லாமே சொன்னா. அவ சின்ன பொண்ணு. அப்பா அன்பு தெரியாதவ. அன்பா பேசற ஆண்கள் எல்லாம் இந்த வயசுல தேவதூதனாத்தான் பொண்ணுங்களுக்குத் தெரியும். நீயோ காலேஜ் படிக்கிற. ஒனக்கு நல்லது கெட்டது தெரியும். சின்ன பொண்ணு லவ் பண்ணுதேன்னு சுத்தறதுக்கு ஓகே சொன்னியா. இல்ல உண்மையாவே இவள லவ் பண்றியா?'
'டீச்சர்! நான் காலேஜ்ல எத்தன பொண்ணுங்கள பாக்கறென். அவங்க யார்ட்டயும் நான் பாக்காத ஏதோ ஒண்ணு இவ கிட்ட இருக்கு. கண்டிப்பா நான் இவள கல்யாணம் பண்ணுவென்.'
'இவ நல்ல இண்டெலிஜண்ட். வயசுக்கு மீறி விஷயங்களத் தெரிஞ்சு வச்சிருக்கா. படிச்சா உங்க வாழ்க்க நல்லா இருக்கும். அப்புறம் சட்டப் படியும் இது தப்பு. இவள் மேல உண்மையிலேயே ஒனக்கு லவ் இருக்குன்னா ஒரு நாலு வருஷம் இவளுக்காக நீ காத்திருக்கணும். இவள நீ பாக்கவே கூடாது. கடித போக்குவரத்து கூடாது. நான் ஒங்க ஊருக்கு இவள கூட்டிட்டு வர மாட்டேன். நீயும் இங்க வரக்கூடாது. இதெல்லாம் நீ ஓகே சொன்னா ஒங்க லவ்வுக்கு நான் சம்மதிக்கிறென். முடியாதுன்னா நீ ஒதுங்கிக்கோ. வேற பொண்ணா பாத்துக்க. கல்யாணி. என்ன சொல்ற?'
'அவர் எனக்காக காத்திருப்பாரு டீச்சர்.!'
'கல்யாணி சொன்னா சரியா இருக்கும். அவ அறிவுப்பூர்வமா முடிவு எடுக்கறவ. நீ என்ன சொல்ற ரவி?'
'கண்டிப்பா டீச்சர். அதுக்குள்ள நான் காலேஜ் முடிச்சு வேல வாங்கறென். ஆனா ஒரெ ஒரு ரிக்வஸ்ட்.'
'சொல்லுப்பா.'
'அவ போட்டோ ஒண்ணு மட்டும் வாங்கிக் குடுத்துருங்க டீச்சர். அத பாத்துட்டே நான் நாலு வருசத்த ஓட்டிருவேன். இது என் போட்டோ.'
என்று டீச்சரிடம் தன் போட்டோவை நீட்டினான்.
மேரி டீச்சருக்கு மெதுவாக புன்னகை வந்தது. அதை வாங்கி கல்யாணியிடம் கொடுத்து விட்டு 'ஒன் போட்டோ ஒன்ன எடுத்துட்டு வா' என்றார்.
கல்யாணி உள்ளே சென்று போட்டோ எடுத்து வந்து மேரி டீச்சரிடம் ரவியைப் பார்த்துக் கொண்டே கொடுக்க மேரி டீச்சர், 'கை இங்க இருக்கு' என்றார். அப்போது தான் நீட்டிய கையை விட்டு தள்ளி தான் போட்டோவை நீட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்த கல்யாணி வெட்கப்பட்டாள்.
போட்டோ மாற்றிக் கொள்ளப்பட்டது. இருவரும் கண்களால் விடை பெற்றுக் கொண்டனர். ரவி அவனது நண்பர்களுடன் போன பிறகு கல்யாணியிடம் திரும்பினார் மேரி டீச்சர்.
'கல்யாணி. பெண்கள் இன்னும் காதல், கல்யாணம், குடும்பம்னு வாழ்க்கயை முடிச்சுக்க கூடாது. அதுக்கும் மேல போறதுக்கு வருங்காலத்த வழி நடத்தணும். நீயும் ஒரு நாலு வருசம் மனச அலபாய விடாம படிக்கிற வழிய பாரு. நல்ல மார்க் எடுத்து நல்ல காலேஜ்ல படிச்சு நல்ல வேலைக்குப் பொனா ஒன் வாழ்க்க தான் நல்லா இருக்கும். அந்த நாலு வருஷமும் நான் எங்க அம்மா வீட்டுக்கு போகப் போறதில்ல.'
கல்யாணி தலையை ஆட்ட, நித்யா கல்யாணியைப் பார்த்து முறைத்தாள்.
எதுக்கு இவள் முறைக்கிறாள் என்று புரிந்ததும் கல கலவென்று சிரிக்கத் தொடங்கினாள் கல்யாணி.

(தொடரும்)

 
கல்யாணி உண்மையா அவனை விரும்புறாளா, இல்லை பழிவாங்க பிளான் பண்றாளா.
என்னமோ நடக்குது.
 
அடப்பாவி இவ காதலுக்கு
அவங்க ஊருக்கு போகாம
நித்யா காதல் என்ன ஆகுமோ
 
Top