Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 6

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 6

'என்ன இந்த நேரத்துல? கல்யாணி நல்லா இருக்காள்ல?'
'நல்லா இருக்கா டீச்சர். அந்த சந்தோஷமான விசயத்த ஒங்க கிட்ட தான் மொதல்ல சொல்லணும்னு வந்தேன். அவ நேத்து ராத்திரி பெரிய மனுஷி ஆயிட்டா.'
மேரி டீச்சர் முகம் பிரகாசமாகியது.
'நல்லது. வீட்ல யாரு இருக்கா? அவள தோட்டத்துல விட்டுட்டு நீங்க மட்டும் வந்திருக்கீங்க?'
'பக்கத்து தோட்டத்து குடிசையில இருக்ற செல்லத்த விட்டுட்டு தான் வந்திருக்கேன்.'
ஒரு நிமிடம் யோசித்த மேரி டீச்சர் 'ஒரு நிமிஷம்' என்றபடி உள்ளே போய் கையில் கொஞ்சம் பணத்தோடு வந்தாள். 'இத செலவுக்கு வச்சிக்குங்க' என்றாள்.
முத்தம்மாள் விலகினாள்.
'ஐய! இதெல்லாம் வேண்டாம் டீச்சர். உங்க ஆசீர்வாதம் மட்டும் என் புள்ளைக்கு போதும் டீச்சர்.' என்று கண் கலங்கினாள்.
'சரி. நீங்க போங்க. நான் பின்னாலெயெ வரென்' என்று மேரி டீச்சர் சொன்னதும் முத்தம்மாள் நகர, மேரி டீச்சர் பட பட என்று ரெடி ஆயி நித்யாவுடன் கல்யாணி இருக்கும் குடிசைக்கு வந்தாள்.
அங்கு ஒரு மூலையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்திருந்த கல்யாணியை நெருங்கி அவள் முகத்திற்கு திருஷ்டி சுற்றி தன் விரல்களை தன் நெற்றியில் சொடக்கிட்டார். தன் கையில் கொண்டு வந்திருந்த மஞ்சப்பையில் இருந்து ஒரு ரோஸ் கலர் காகிதத்தைப் பிரித்து ஒரு தங்கச் செயினை எடுத்து அவள் 'வேணாம் டீச்சர்' என்று சொல்லச் சொல்ல அவளுக்கு கழுத்தில் அணிவித்தார். அவள் எழுந்து டீச்சரின் காலில் விழுந்தாள்.
'நல்லா இரும்மா' என்ற டீச்சர் முத்தம்மாளிடம் திரும்ப அவள் கண்கள் கலங்கி இருந்தன.
'ஒங்களுக்கு எதுக்கு டீச்சர் வீண் சிரமம்?'
'இதிலென்ன சிரமம். அவளுக்குன்னே ஏற்கனவே செஞ்சு வச்சுட்டென். நித்யா! நீ ஒரு பத்து நாளைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம். இவ கூடயே இரு. என்னைக்கு ஊரக் கூட்டி தண்ணி ஊத்தப் போறீங்க?'
'அதுக்கெல்லாம் நெறய செலவாகும் டீச்சர்.'
'பரவால்ல. சீக்கிரம் நாள் பாத்து பண்ணுங்க. நான் செலவ ஏத்துக்கறென். நித்யா நீ இருந்துட்டு சாயந்தரம் வந்துரு. அவங்க வேலைக்கு போகட்டும். நான் நாளைக்கு களி செஞ்சு கொண்டு வரேன். நல்லா சாப்பிடணும்மா. இந்த வயசுல சாப்டறது தான் பின்னால பலம் தரும்.'
கல்யாணி மெதுவாக தலை அசைக்க நித்யா அவள் கையைப் பிடித்துக் கொண்டாள்.
அடுத்த ஏழு நாட்கள் காலையில் வரும் நித்யாவிடம் வித விதமாய் பலகாரங்கள் செய்து தருவார் மேரி டீச்சர். மதிய உணவு முத்தம்மாளின் கைப்பக்குவம். சாயந்திரம் வீட்டுக்குப் போய் விடுவாள் நித்யா.
எட்டாவது நாள் ஊரைக் கூட்டி பண்ணையாரிடம் அனுமதி கேட்டு தோட்டத்திலேயே விமரிசையாகப் பண்ணினாள் முத்தம்மாள். பண்ணையாரும் வந்திருந்து வெள்ளிக்கொலுசு ஒன்றை பரிசளித்தார்.
விழா முடிந்த அந்த சாயந்திரம் நித்யா உட்கார்ந்து விட்டாள். அடுத்த பத்து நாள் மேரி டீச்சர் வீட்டில் கல்யாணியின் பொழுது கழிந்தது. நித்யாவின் விழா மேரி டீச்சரின் வீட்டில் நடந்தது. மேரி டீச்சர் எவ்ளவோ தடுத்தும் கேளாமல் பட்டு பாவாடை தாவணி வாங்கி வந்து தந்தாள்முத்தம்மாள். மாங்கு மாங்கு என்று எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.
இருபது நாட்கள் கழித்து இருவரும் பள்ளிக்கு சென்றனர். முதன் முறையாக தாவணி பாவாடையில் செல்லும்போது கூச்சமாயிருந்தது. மீனா அக்கா கேங் இவர்களை கேலி செய்தது. காலாண்டு பரீச்சை நெருங்கியதால் இருவரும் முழு மூச்சுடன் படிப்பில் இறங்கினர். விட்டுப் போன பாடங்களைப் படித்து எழுதி நேரத்தை கடத்தினர்.
காலாண்டு பரீச்சை முடிந்து விடுமுறை வந்தது.
விடுமுறையில் மேரி டீச்சர் குடும்பத்துடன் மேரி டீச்சரின் அம்மா வீட்டுக்கு சென்றார். கல்யாணியை கட்டாயப்படுத்தி அழைத்துப் போனார்.
மேரி டீச்சரின் அம்மாவும் மேரி டீச்சர் போலவே கல்யாணியை நன்கு கவனித்துக் கொண்டார். அங்கே மேரி டீச்சரின் அண்ணன் ஆரோக்கிய ராஜாவின் குடும்பம் இருந்தது. ஆரோக்கிய ராஜா அந்த ஊரில் பெரிய மளிகைக்கடை வைத்திருந்தார். அவரது மனைவி குளோரியும் கணவனுக்கு உதவியாய் மளிகைக்கடைக்கு சென்றார். அவர்களின் ஒரே மகன் பிராங்க்ளின். பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
அத்தையிடம் நன்கு பேசிய பிராங்க்ளின் நித்யா கல்யாணியிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. ரெக்கார்டு எழுதுவது, படிப்பது என்று இருந்து விட்டான்.
ஞாயிற்றுக்கிழமை அன்று பக்கத்தில் இருந்த புகழ்பெற்ற அந்தோணியார் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றாள் நித்யா. ஊசி கோபுரம் என்று அந்த கோபுரத்தை அழைத்தார்கள். அவ்வாறே அதன் மேல் முனை குறுகி ஊசி போலவே இருந்தது. சர்ச்சில் பின் ட்ராப் சைலன்ஸ்- இல்லை ஒருவர் மூச்சு விடும் சப்தம் கூட கேட்கும் அளவுக்கு அமைதியாய் இருந்தது. வளையம் போல சுற்றிலும் முடி வைத்து நடுவில் முடி இல்லாமல் கருணை பொங்க பார்த்த அந்தோணியாரை பார்த்த உடனே பிடித்துப் போனது கல்யாணிக்கு. நித்யா செய்த மாதிரியே ப்ரேயர் செய்தாள்.
திடீரென்று 'ஏய்ய்ய்ய்ய்ய்ய் அந்தோணி' என்று நிசப்தத்தை குலைத்த குரல் வந்த வாசல் பக்கம் அனைவரும் பார்த்தனர்.
தலை விரி கோலமாய் இவர்கள் வயதை ஒத்த பெண் ஒன்று நாக்கை மடித்து கண்களை உருட்டி அந்தோணியாரைப் பார்த்து 'ம்ம்ம்ம்ம்ம்ம்' என்று உறுமியது. அவளது அப்பா அம்மாவாய் இருக்க வேண்டும். பக்கத்தில் நின்று இருவர் அவளைப் பிடித்துக் கொள்ள, பாதிரியார் அவர்களை நோக்கி விரைந்து சில அறிவுரைகள் சொல்ல அவர்கள் அங்கிருந்து அந்தப் பெண்ணை இழுத்துக் கொண்டு நகர்ந்தனர்.
வெளியே வரும்போது சொன்னாள் நித்யா.
'நெறய பேர் பேய் பிடிச்சு இங்க வருவாங்க. சர்ச் பின்னால ஒரு மடம் மாதிரி இருக்கு. அங்க இவங்கள அடச்சு வச்சு ப்ரேயர் பண்ணிட்டே இருப்பாங்க. அந்தோணியாருக்கு ஜெபம் பண்ண பண்ண ஒரு வாரத்துல குணமாயி அவங்க ஊருக்கு போயிருவாங்க. இது இங்க ரெகுலரா நடக்கும்.'
'நான் இப்ப தான் மொத மொறயா பாக்குறேன். எங்க ஊர்ல மாரியம்மன் கோவில்ல தீ மிதிக்க வைப்பாங்க. இல்ல கோயில் பூசாரி சூடு வைப்பாரு. சீக்கிரமே சரியாயிரும். ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரி.'
இருவரும் வீடு நோக்கி வரும்போது எதிரே மூன்று வாலிபர்கள் வந்தனர்.
'ஏண்டா! பக்ஷிகள்லாம் புதுசா இருக்கு.'
'வெளியூர் பறவைங்க போல.'
''எளசா இருக்கும்போல.'
'ஆமாண்டா. எளசு.. புதுசு.. தினுசு..'
'என்ன இது இவன் புஷ்பா தங்கதுரை கத தலைப்பு மாதிரி சொல்றான்.'
கும்பல் கொல் என்று சிரிக்க கல்யாணிக்கு கோபம் வந்தது.
தலையை குனிந்து கொண்டு இருவரும் அவர்களைத் தாண்டிச் சென்றனர்.
'வா... வா.. அன்பே பூஜை உண்டு.. பூஜைக்கேத்த பூக்கள் ரெண்டு... தனிமை அழைக்குது. இரவினில் அனலும் அடிக்குது. இதயம் துடிக்குது. துணை தரத்தான்...' என்று ஒருவன் பாட்டை பாடாமல் வாசிப்பது போல் வாசிக்க, மற்ற ரெண்டு பேரும் 'சூப்பர் மச்சி' என்றனர்.
கல்யாணி சட் என்று திரும்பினாள். அவர்களை நோக்கி நடந்தாள்.
நித்யா அவள் கையைப் பிடித்தாள்.
'வேணாம்டி. வந்துரு. எதுக்கு வம்பு?'
'நீ சும்மா இரு நித்யா. அவன் பாட்ட பாத்தியா? எவ்ளொ ஆபாசமா இருக்கு. கவனிச்சிட்டு வந்துர்றென்.'
சீறிய கல்யாணி அவர்கள் அருகில் போனாள்.
மூவரும் ஆச்சரியமாய் அவளைப் பார்த்தனர். யாரை கிண்டல் செய்தாலும் தலை குனிந்து போகும் பெண்களையும் 'தூ' என்று துப்பி விட்டுப் போகும் பெண்களையுமே பார்த்த அவர்களுக்கு கண்ணில் நெருப்புடன் வரும் கல்யாணி புதிதாய் இருக்கவே ஒரு கணம் திகைத்தனர்.
பாட்டு பாடின அந்த முறுக்கு மீசை வாலிபனை நெருங்கினாள்.
காலில் இருந்த செருப்பை கழட்டினாள்.

(தொடரும்)
 
Top