Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 13

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 13

அந்த வாரம் சனிக்கிழமை மேரி டீச்சரைப் பார்க்க வந்தான் ரவி.
'யாரு' என்பது போல் பார்த்த மேரி டீச்சரிடம் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து கால்களில் விழுந்தான்.
'எந்திரிப்பா. யாருன்னு தெரியலயே'
'டீச்சர்! நான் ரவி.'
'நெறய ஸ்டூடண்ட்ஸ்க்கு சொல்லி குடுக்குறோமா பேர் நியாபகத்துல இருக்க மாட்டெங்குதுப்பா.'
'அம்மா. இவங்க மாமா ஊரச்சேந்தவங்க. நம்ம கல்யாணி...' என்று இழுத்தாள் பின்னால் நின்றிருந்த நித்யா.
நினைவு வந்த மேரி டீச்சர் 'ஓ! எப்படிப்பா இருக்க? உக்காருப்பா? என்ன பண்ற?' என்றார்.
சேர் ஒன்றில் அமர்ந்த ரவி, 'டீச்சர்! நான் டவுண்ல பாங்க் ஒண்ணுல க்ளெர்க்கா இருக்கேன்.'
'வெரி குட். அந்த முறுக்கு மீச ரவுடிப் பார்வை எல்லாம் காணோம். ரொம்ப சந்தோசமா இருக்குப்பா.'
'டீச்சர். நான் நேரடியாவே விஷயத்துக்கு வாரேன். நாலு வருஷம் கழிச்சு வரச் சொன்னீங்க. வந்துட்டென் வேலயோட... எங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு எப்ப வரட்டும் டீச்சர்?'
'எதுக்குப்பா?' மனதில் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு கேட்டார் மேரி டீச்சர்.
கல்யாணி ஒன்றும் பேசாமல் ரவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நித்யா 'என்ன அம்மா இப்படி கேக்கறாளே' என்று புகைந்தாள்.
ரவிக்கு முகம் இருண்டது. எப்படி சொல்வது என்று சங்கோஜமாயும் இருந்தது.
நித்யா சட் என்று உதவிக்கு வந்தாள்.
'ரவி! அந்த வெள்ளி ப்ரேஸ்லெட்ட கழட்டுங்களேன்.'
'ஏ நித்யா! அதென்ன பேர சொல்லி கூப்டுறது?'
'ஒரு நிமிஷம்மா.' என்றவள் அவன் தந்த ப்ரேஸ்லெட்டை அம்மாவிடம் நீட்டினாள்.
'இது நல்லாருக்குல்லம்மா.'
மேரி டீச்சர் வாங்கி அந்த மூடி போட்ட பதக்கத்தை பார்த்தார்.
'இதென்ன முருகன் படம், சாமி படம் போட்டு இதே மாதிரி டிசைன் பாத்திருக்கென். இதென்ன மூடியோட?'
'அத தெறந்து தான் பாருங்களேம்மா'
மேரி டீச்சர் அதைத் திறந்து பார்க்க கல்யாணி சிரித்தாள்.
'அட கல்யாணி. ஆமாம். இவ போட்டோவ நீங்க எதுக்கு ப்ரேஸ்லெட்ல வச்சிருக்கீங்க?'
கேட்டவாறு கல்யாணியைப் பார்க்க கல்யாணி தலை குனிந்தாள்.
'அம்ம்ம்ம்மா. ஒங்களுக்கு புரியுதா புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?'
போதும் என்று முடிவெடுத்த மேரி டீச்சர் கல்யாணியிடம் திரும்பி 'கல்யாணி! மாப்பிள்ளைக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வா. அப்படியே எங்களுக்கும்.'
மாப்பிள்ளை என்ற வார்த்தையை கேட்டதும் கல்யாணிக்கு உச்சி குளிர்ந்தது. கால்கள் பரபரத்தன. 'இதோ... இ..தோ டீச்சர்' என்று உளறியபடி கிச்சனில் சென்று அடுப்பைப் பற்ற வைத்தாள்.
'பாத்து கல்யாணி. பாலுன்னு நெனச்சு மோர சுட வச்சிரப் போற.' என்று பின்னால் வந்து கிண்டல் செய்தாள் நித்யா.
'போடி' என்று நாணத்தால் சிவந்தாள் கல்யாணி.
'அப்புறம்... கேக்கணும்னு நெனச்சேன். காதல் கோட்டைல ஹீரா எப்படி நடிச்சிருக்கா?'
'என்னது? ஹீராவா? அவ வரல்லயே. தேவயானி தான வந்தாப்பல.'
காப்பிப் பாத்திரத்தை இறக்கி பால் அதில் சேர்த்தபடியே கேட்டாள் கல்யாணி.
'என்னது! ஹீரா கிடயாதா? அப்ப நீ படம் பாக்கல. சும்மா போய் தியேட்டர்ல ஒக்காந்துட்டு வந்துருக்குற?'
கல்யாணிக்கு முகம் குங்குமமாய் சிவந்தது.
'போடி! டீச்சர் அங்க என்ன கேக்குறாங்களோ! அவர் என்ன பதில் சொல்றாரோ?'
'ஆமாம். அம்மா கல்யாணத்துக்கு முகூர்த்த நேரம் பாக்கட்டுமான்னு கேப்பா. இவர் நைட் பத்து மணிக்கு முன்னால இருக்கற முகூர்த்தமா பாருங்கன்னு சொல்லி வழிவார். அவ்ளோ தான.'
அவள் ஒரு செல்ல 'சீ'யை உதிர்த்து விட்டு ட்ரேயில் வைத்த காப்பி டம்ளர்களோடு ஹாலுக்கு விரைந்தாள்.
'மாப்ளைக்கு குடும்மா.'
மறுபடி மாப்ளை. டீச்சர் மறைமுக சம்மதம் தந்து விட்டார். கல்யாணிக்கு குப் என்று வியர்த்தது. ஏதோ ரவியை இப்போது தான் பார்ப்பது போல் பார்த்து தட்டை நீட்ட அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே தட்டை வாங்கிக் கொண்டான்.
நித்யா சிரித்தபடியே சொன்னாள்.
'அண்ணே! உங்களுக்கு ஒரு காப்பி தான். நாங்கள்லாம் குடிக்க வேண்டாமா?'
தன் உணர்வுக்கு வந்த ரவி ட்ரேயை கல்யாணியிடம் கொடுத்து விட்டு ஒரு காப்பி டம்பளரை மட்டும் எடுத்து காப்பியை உறிஞ்சினான்.
மேரி டீச்சர், நித்யா, கல்யாணி எல்லோரும் எடுத்துக் கொண்டு உறிஞ்சினார்கள்.
'என்ன கல்யாணி! இன்னைக்கு காப்பி ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.' என்று கண்ணாடி அணிந்த கண்களால் கண்ணாடிக்கு மேலே கண்களை சுழட்டி கல்யாணியை மேரி டீச்சர் பார்க்க அவள் தலை குனிந்தாள்.
ரவியிடம் திரும்பினார் மேரி டீச்சர்.
'சரிப்பா. ரொம்ப சந்தோஷம். நீ ஜெயிச்சுட்ட. கல்யாணியும் ஜெயிச்சுட்டா. இவ்ளோ நாள் பொறுத்த ரெண்டு பேரும் இன்னும் ஒரு நாலு வருஷம் பொறுக்க முடியுமா?'
இருவரும் அதிர்ந்தனர்.
இன்னும் நாலு வருஷமா? மனதுக்குள் அதிர்ந்த ரவி மெல்ல சொன்னான்.
'கல்யாணி கல்யாணத்துக்கு அப்புறமும் படிக்கலாமே டீச்சர்.'
'கல்யாண வயது 18. அதுக்கு எப்படியும் நீங்க இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும். அதுக்கப்புறம் கல்யாணி எம்பிபிஎஸ் மட்டுமாவது முடிக்கட்டும். அவ டிகிரி முடிக்கவும் ஒங்க கல்யாணம். ஓகேயா?'
ரவி அரை மனதுடன் தலை ஆட்டினான்.
'இன்னும் ஒரு வருஷம் சந்திக்காம இருங்க. அவ காலேஜ் செகன்ட் இயர் வந்ததும் அந்த விதிமுறை தளர்த்தப் படுகிறது. ஆனா ஒங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல. ஜாக்ரதையா இருங்க.'
அப்போது ஜேம்ஸ் உள்ளே நுழைந்தார். ரவியை யார் என்பது போல் பார்க்க மேரி டீச்சர், 'நான் சொல்லி இருந்தேன்லங்க. கல்யாணிய புடிச்சிப் போயி ஒரு பையன் வந்தான்னு. அவர் இவர் தான். பாங்க்ல வேல பாக்கறாரு.' என்றார்.
ஜேம்சைப் பார்த்ததும் நித்யா கல்யாணி உள்ளே போக ரவி எழுந்தான்.
'உட்கார்ங்க. காப்பி சாப்டீங்களா?'
'சாப்டாச்சுங்க சார்.'
'பரவால்ல. இன்னும் கல்யாணிய நெனப்பு வச்சிருக்கீங்க. அவளும் எனக்கு பொண்ணு மாதிரி தான்.'
'தெரியுங்க சார்.'
கல்யாணி ஜேம்ஸ் சாருக்கு காப்பி எடுத்து வந்தாள்.
ஜேம்ஸ் மேரி டீச்சரிடம், 'நீ போயி கல்யாணி அம்மா அப்பாவுக்கு இவர அறிமுகப்படுத்தி வச்சிரு. நாளைக்கு திடீர்னு தெரிஞ்சா சங்கடமாப் போயிரும்.'
கணவரது யோசனை சரி என்று பட மேரி டீச்சர் எழுந்தார். ரெடியாயி நால்வரும் கல்யாணி இருக்கும் தோட்டம் நோக்கி போனார்கள்.
முத்தம்மாள் இவர்களைப் பார்த்ததும் தோட்டத்திலிருந்து ஓடி வந்து வரவேற்றாள்.
'வாங்க. வாங்க' என்றவள் இரண்டு பாயை எடுத்து விரித்து வைத்தாள்.
உட்காருங்க. டீ சாப்ட்றீங்களா?' என்றவள் ரவியை யார் என்பது போல் பார்த்தாள்.
கட்டிலில் இருந்த கல்யாணியின் அப்பாவும் மெல்ல தலையைத் திருப்பி வந்தவர்களை கவனித்தார்.
'முத்தம்மா! இவரு பாங்க்ல வேல பாக்கறாரு. எங்க ஊருக்காரரு தான். கல்யாணியை புடிச்சிப் போயி அவ எட்டாம் வகுப்பு படிக்கறப்ப கேட்டாரு. நான் தான் வேலயோட வாப்பான்னு சொன்னேன். இப்ப வேலயோட வந்து கேக்கறாரு' என்றார் மேரி டீச்சர்.
முத்தம்மாள் ரவியை ஂ மேலும் கீழும் பார்த்து முகம் மலர்ந்தாள்.
கல்யாணியின் அப்பா முகத்திலும் வெளிச்சம்.
'அதனாலென்ன டீச்சர்? ஒங்களுக்குப் புடிச்சிருந்தா வர்ற தைல நல்ல முகூர்த்தமா பாத்து கல்யாணத்த வச்சுகிட்டா போகுது.' என்றாள்.
'என்னது! இப்படி பட்னு சொல்லிபுட்ட. நான் இவங்கள சமாதானப்படுத்தி கூட்டி வந்திருக்கேன். நீ அத ஒடச்சிருவ போல இருக்கே. கல்யாணி டாக்டருக்கு படிக்கட்டும். படிச்ச பொறகு வச்சுக்கலாமே.'
'நல்ல சம்பந்தம் கெடச்ச ஒடனே அத சட் புட்டுனு முடிக்றது தானே நல்லது டீச்சர்! நாலு வருசத்துல நாளைக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ யாரு கண்டா?'
'ஐயோ முத்தம்மா! இங்க பாரு. ரவியின் ப்ரேஸ்லெட் எடுத்து அவளிடம் நீட்டினார் மேரி டீச்சர்.
'நாலு வருசத்துல இதுல கல்யாணி. அடுத்த நாலு வருசத்துல பச்சயே குத்திருவாரு மாப்பிள்ள. அந்த அளவுகு கல்யாணிய புடிச்சிருக்கு அவருக்கு. கொஞ்சம் காத்திருக்கட்டும்.'
முத்தம்மாளுக்கு இதில் உடன்பாடில்லை என்றாலும் மேரி டீச்சருக்காக சரி என்பது போல் தலை ஆட்டினாள்.
ரவி மெல்ல எழுந்து கல்யாணியின் அப்பா படுத்திருந்த கட்டிலில் அவர் அருகே அமர, அவர் ஒரு கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் பல கதைகள் பேசின.
'சரி அப்ப நாங்க புறப்படறோம்.' மேரி டீச்சர் எழ முனையவே, பதறினாள் முத்தம்மாள்.
'மாப்ள மொத தடவயா வீட்டுக்கு வந்துருக்காரு. ஒக்காருங்க. ஒரு நிமிசத்துல சோடா வாங்கிட்டு வந்துர்றேன்.'
சொல்லி விட்டு விரைந்தாள் முத்தம்மாள்.
ஐந்து நிமிடத்தில் காளி மார்க் சோடா வர அனைவரும் குடித்து விடைபெற்றுக் கொண்டார்கள்.
வரும் வழியில் மேரி டீச்சர் உரக்க சொன்னார்.
'அப்பாடா. இந்த லீவ்ல நான் எங்க ஊருக்குப் போலாம். நான் பொறந்த வீட்ட பாத்து நாலு வருசமாச்சு. நானும் கல்யாணியும் மட்டும் போயிட்டு வந்துர்ரோம் நித்யா. நீ அப்பாவ பாத்துக்க.'
நித்யா முகம் சுண்டியது. கல்யாணி டீச்சரிடம் 'டீச்சர்! அவளும் பாத்து நாலு வருசமாச்சுல்ல. வரட்டுமே.' என்றாள். ரவியும் 'ஆமாம். அப்படியேஎங்க வீட்டுக்கும் நீங்க எல்லோருமே வந்தா சந்தோஷப்படுவேன் டீச்சர்.' என்று ஒத்து ஊதினான்.
'என்ன நீங்க ரெண்டு பேரும் நித்யாவோட ரூட்ட க்ளியர் பண்ற மாதிரி இருக்கு.'
மேரி டீச்சர் சிரித்தபடியே சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர்.

(தொடரும்)
 
Nice epi.
So 4 years program cancellation Nithyavukaga thana? Kalyanikaga illaya enna oru puthisallithamam, Mary teacher vera level, chance illa.
 
கல்யாணத்துக்கு எல்லாரும் சம்மதிச்சாச்சு ஆனா படிப்பு முடிந்ததும் தானா
நித்யா விசமும் மேரி டீச்சருக்கு தெரியுதே
 
Top