Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 11

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 11

'அவ கூட போகும்போது அந்த புத்தி இருக்கணும். என்ன இருந்தாலும் கட்ன பொண்டாட்டி ஆவுமா? இருக்றவரைக்கும் எல்லா விதத்லயும் ஒன்ன நல்லா உறிஞ்சி எடுத்திட்டு இப்ப முடியாம கெடக்கறப்ப கவனிக்க மாட்டாளாமா அந்த சீமாட்டி? எல்லாம் ஒன்ன சொல்லணும்யா. மைனர் மாதிரி இருந்த சரி. கல்யாணம் ஆயி ஒரு பொண்டாட்டின்னு ஆனப்பிறகு ஒரு குழந்த பொறந்த பிறகு அதுவும் பொண்ணாப் பொறந்த பிறகு அடங்கி இருக்க வேண்டாம்? இப்படி எங்கள அம்போன்னு விட்டுட்டு இப்ப வந்து என்ன கவனிச்சுக்கோன்னா... ஒன்னால எம் புள்ளய வளக்க முடியாம நானும் குணம் கெட்டுப் போயி, ஏதோ அந்த மேரி டீச்சர் இருக்க சாக்கடைல கால மட்டும் விட்டு தப்பிச்சேன்.. இல்ல சாக்கடைல புரண்டு விழற பன்னியா மாறி இருப்பேன்.'
உள்ளே நுழைந்த கல்யாணியைப் பார்த்ததும் மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள் முத்தம்மாள்.
'கல்யாணி. யார் வந்திருக்கான்னு பாரு. இவரு தான் ஒங்கப்பன். ஒன்ன பாத்ததொட சரி. நீ தவழ்ந்ததையும் வளந்ததையும் வயசுக்கு வந்ததையும் எதையும் பாக்கல. நம்மள கஷ்டப்படுத்திட்டு இப்ப வந்து எனக்கு கை கால் வெளங்காமப் போயிடுச்சி. நீ தான் காப்பாத்தணும்னு வந்து நிக்குறாரு. நான் என்ன செய்யட்டும்? மாரியாத்தா என்ன ஏன் சோதிச்சிகிட்டே இருக்க?'
கல்யாணி கட்டிலைப் பார்த்தாள்.
தலையில் முடி கொட்டிப் போய் உடலில் கழுத்தெலும்புகள் தெரிய முகத்தில் கண்கள் மட்டும் பிரகாசம் இழக்காமல் இருக்க, நரைத்த தலையும் தாடியுமாய் இருந்தார் கல்யாணியின் அப்பா. வலது கையும் வலது காலும் அசையாமல் இருக்க, இடது கை கொண்டு கல்யாணியை மெல்ல அருகில் வரச் சொல்லி கை காட்டினார். கல்யாணி கண்களில் படரும் நீரோடு அருகில் சென்று அமர்ந்தாள். இடது கையால் அவள் தலையை கோதி விட்டவர் சட் என்று வலது கையில் மோதிர விரலில் மாட்டி இருந்த தங்க மோதிரத்தை கழற்றி அவளது கையில் வைத்தார். வாயும் வலது புறமாய் கோணி இருந்ததால் பேச்சு வர வில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது.
கல்யாணிக்கு மேரி டீச்சர் சொன்ன கெட்ட குமாரன் நியாபகம் வந்தது. அப்பாவை மன்னிக்க மனம் தயாராகியது. அம்மாவிடம் சொன்னாள்
'பழசெல்லாம் விடும்மா. நம்மள தேடி வந்தவங்கள காப்பாத்த வேண்டியது நம்ம கடமை. இந்த ஒலகத்துக்கு என்ன கொண்டு வந்தவரு.. அவரு என்ன பாத்திருக்காட்டாலும் பரவால்ல.. நான் அவர பாத்துக்கறென்.'
முத்தம்மாள் வாய் பிளந்து மகளைப் பார்க்க, அப்பாவின் கண்ணில் இருந்து கண்ணீர் பெருகியது.
அடுத்து வந்த வருடங்களில் கல்யாணிக்கு படிக்கவும், அப்பாவை கவனிக்கவுமே நேரம் சரியாக இருந்தது. இடை இடையே ப்ராங்க்ளினின் லெட்டரை நித்யாவிடம் கொடுக்கும் போஸ்ட் வுமனாக அவதாரம் எடுக்க வேண்டி இருந்தது.
ரவியின் நினைவு இடை இடையே நினைவுக்கு வர மருகுவாள் கல்யாணி. ப்ராங்க்ளின் அப்பப்போ பாட்டியை இங்கு கொண்டு விட கூட்டிப் போக என்று காதலை வளர்த்துக் கொண்டிருந்தான். நித்யாவும், கல்யாணியும் சிறிது விளையாட்டுத் தனம் மாறி படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினர். ப்ராங்க்ளின் காலேஜ் முடிக்க இருவரும் ப்ளஸ் டூ நல்ல மதிப்பெண்ணில் தேறி இருந்தனர். நித்யா இஞ்சினியரிங் படிக்க ஆசைப்பட, கல்யாணி மெடிக்கல் படிக்க விருப்பப்பட்டாள். இருவரும் என்ட்ரன்ஸ் படிக்க டவுணுக்குச் சென்றனர். தினமும் பஸ்ஸில் ஏறி டவுணில் ஒரு கோச்சிங் செண்டரில் இருவரும் படித்தனர். மெடிக்கல் காலேஜுக்கும் இஞ்சினியரிங்க் காலேஜுக்கும் அப்ளை பண்ணும் நேரம் வந்தது. இருவரும் டவுணில் இருந்த பாங்கின் கிளை ஒன்றில் டிடி எடுக்க விரைந்தனர்.
பாங்கில் தான் கலர் கலராய் ஃபார்ம்ஸ் நிறைய இருக்கின்றனவே! டிடி கலரத் தேடி எடுத்து முழுவதும் படித்து ஃபில் அப் செய்து கவுன்டரின் முன் நின்ற நீண்ட க்யூவில் நின்றனர். கோச்சிங் புத்தகம் மார்போடு ஒட்டி இருக்க, திரும்பித் திரும்பி பேசிக் கொண்டே கவுன்டர் அருகே நகர்ந்தனர். நித்யா கவுன்டரில் உட்கார்ந்திருந்து லெட்ஜரைப் புரட்டிக் கொண்டிருந்த நபரைப் பார்த்ததும் அதிர்ந்தாள்.
கண்களை கசக்கி விட்டுக் கொண்டு திரும்பவும் பார்த்தாள். அவன் போல் தான் தெரிந்தது. ஆனால் கண்ணாடி அணிந்திருந்தான்.
'அடுத்ததா வாங்க.' என்று நீட்டிய நித்யாவின் கையைப் பார்த்ததும் அதில் இருந்த டிடி ஃபார்மை வாங்கி இரு பக்கமும் பார்த்து அவள் முகத்தைக் கூட பார்க்காது 'டினாமினேஷன் போட்டுட்டு வாங்க' என்றான்.
நித்யா செல்லானை எடுத்துக் கொண்டு அடுத்து நின்றிருந்த கல்யாணியையும் இழுத்துக் கொண்டு அதற்கு அடுத்து இரண்டாவதாய் நின்றிருந்த பெண்ணிடம் 'இப்ப நாங்க வந்துருவோம்' என்று சொல்லி விட்டு எழுதும் டெஸ்க்கின் அருகில் வந்தாள்.
கல்யாணி 'ஏதாவது ஃபில் பண்ணலயா' என்று கேட்டாள்.
நித்யா ஒரு கணம் எதுவும் பேச வில்லை. பின்னர் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது 'அந்த கவுன்டர்ல இருந்த ஆள பாத்தியா?' என்றாள்.
இல்லை என்று தலையாட்டிய கல்யாணி கவுன்டரை அங்கிருந்து பார்த்தாள். கிராப் தலை மட்டுமே தெரிந்தது.
'எனக்கென்னமோ ரவி மாதிரி தெரியுதுடி.'
'என்னது?' ரத்தம் உச்சந்தலையில் இருந்து இருதயம் நோக்கி குபீரென்று பாய கவுன்டரின் அருகில் விரைந்தாள்.
'இங்க பாருங்கம்மா. இந்த செல்லான் இல்லம்மா. அந்த டேபிள்ல ஒரு வெள்ள கலர் செல்லான் இருக்கும். அதுல எழுதிட்டு வாங்க.'
புதிதாய் கண்ணாடி போட்டு இருக்கிறான். கொஞ்சம் கன்னத்தில் சதை போட்டிருக்கிறது. முறுக்கு மீசையை காணவில்லை. மீசை ட்ரிம் பண்ணப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உதடுகள்.. அவளுக்கு மறக்குமா என்ன? கல்யாணிக்கு அப்போதே அவனை கண்ணாடி கவுன்டரை உடைத்து உள்ளே நுழைந்து அவனைக் கட்டி கதற வேண்டும் போல் இருந்தது.
கண்கள் பெருக, இதயம் பட பட என்று துடித்தது.
நித்யா வந்தாள்.
கவுன்டரின் பக்கம் சென்று 'நீங்க ரவி தானே?' என்றாள்.
அவன் சட் என்று நிமிர்ந்து அவளை உற்றுப் பார்த்தான். அவள் நான்கு வருடங்களுக்கு முன்பு பார்த்ததை விட சற்று மெருகேறி இருந்தாள். முகமும் சற்று நீண்டு போய் விட அடையாளம் தெரியாமல் விழித்தபடி 'ஆமாம்.. நீங்க...?' என்று இழுத்தான்.
அவள் செல்லானை நீட்ட, வாங்கி நேம் என்ற காலத்தைப் பார்த்து நித்யா என்று வாசித்தவன் சட் என்று எழுந்தான்.
'நி.. நித்யாவா?' என்றவன் 'எப்படி இருக்கீங்க? வளந்துட்டீங்க..அடையாளம் தெரியல' என்று புன்னகைத்தான். 'ஒரு நிமிடம்' என்றவன் பக்கத்தில் இருந்த உடன் வேலை செய்பவரிடம் ஏதோ சொன்னவன் கவுன்
டரை விட்டு வெளியே வந்தான். நித்யா நிற்பதைப் பார்த்தவன் கல்யாணியை காணவில்லை.
'வாங்க அங்க போய் பேசலாம்.' என்று பக்கத்து அறையில் இருந்த சோபாவிற்கு அழைத்து சென்றான். நித்யா பின்னே தொடர்ந்தாள்.
'உட்காருங்க' என்றான். 'என்ன இங்க டவுனுக்கு? என்ன படிக்கிறீங்க?'என்றான்.
அவன் கல்யாணியைப் பற்றி கேட்பான் என்றும் அல்லது அவளை அவனது கண்கள் துழாவும் என்றும் நினைத்த நித்யா ஏமாந்தாள். அவன் பதிலுக்காக அவளையே பார்க்க அவள் வெளியே நின்றிருந்த கல்யாணியைப் பார்த்தாள். கல்யாணி மெதுவாக அந்த அறைப் பக்கம் வந்தாள்.
அப்போது உள்ளே சுடிதாரில் நுழைந்த அழகிய பெண் ஒருத்தி ரவியின் பக்கத்தில் சகஜமாய் வந்து உட்கார்ந்து அவனது தோளைப் பற்றித் திருப்பினாள்.
'ஏன் ரவி? வெட்டிங் கார்டு இங்கிலீசுல ஒண்ணு நம்ம கலீக்சுக்கு தமிழ்ல ஒண்ணு சொந்தக்காரங்களுக்குன்னு அச்சிட வேண்டியது தான?'
நித்யா அதிர்ச்சியோடு கல்யாணியைப் பார்க்க, கல்யாணி அதிர்ந்து ரவியின் கண்களில் படாமல் அந்த அறைக் கதவோரம் ஒதுங்கினாள்.

(தொடரும்)
 
ரவியின் கண்ணுக்கெட்டாமல் கல்யாணி இருந்ததால் கருத்தில் பதியவில்லையா.
பாவம் கல்யாணி
 
Nice epi.
Ippadi often leave potta attendance short age aagidumallo . Regularity maintain pannanum author ji. Seri vidungo.leave letter ellam vendam.
Enna murukku meesa velaya kattiducha??Avasara pattutiye Kalyani.
MBBS aavathu olunga padi.
 
Top