Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜனின் அனிதாவின் அப்பா 5 2

Advertisement

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே வந்தவருக்குப் பிருந்தாந்தாவை நினைத்து வருத்தமாக இருந்தது. அந்த வேளையில் அவர் கணவர் வெங்கட் அழைத்ததும், அவரிடம் தன் மன வேதனையைக் கொட்ட துவங்கினார்.

“பெத்தவ என்கிட்டையே என் பிள்ளை ரெண்டு வார்த்தை அதிகமா பேசிட்டா அவளுக்குப் பொறுக்காது.... முகத்தைத் தூக்கி வச்சுப்பா.... அவனை இப்படித் தனியா தவிக்க விட்டுட்டு போக அவளுக்கு எப்படி மனசு வந்ததோ.... தெரியலையே....”

தன் மனைவி சொன்னதைக் கேட்ட வெங்கட் “உண்மை தான். அவங்க சந்தோஷத்துக்கு இடைஞ்சலா இருக்க வேண்டாம்ன்னு தானே அவங்களைத் தனிக்குடித்தனம் வைத்தோம்.” என்றார்.

“ஹரி... ஹரின்னு அவனையே சுத்தி சுத்தி வந்திட்டு, இப்ப என் பையனை தனியா நிக்க வச்சிட்டு போயிட்டாளே.... அவளோட வாழ்ந்த வாழ்க்கையை மறக்க முடியாம தான என் பையன் இன்னொரு கல்யாணம் கூடப் பண்ணிக்காம இருக்கான். பாவம்ங்க அவன்.....”

“இந்த மாதிரி கஷ்ட்டம் எல்லாம் அனுபவிக்கனும்ன்னு அவன் தலையில எழுதி இருக்கு..... வேற என்ன சொல்ல?” என்றபடி பெருமூச்சு விட்ட வெங்கட் “ஆமாம் உன்னை எதுக்கு வர சொன்னான்? இப்ப தானே ஒரு மாசம் முன்னாடி வந்து பார்த்திட்டு போனான்.”

“அது அப்புறம் சொல்றேன். எனக்கே இன்னும் சரியா ஒன்னும் தெரியலை.... சரி நீங்க உடம்பை பார்த்துக்கோங்க.... டைம்க்கு சாப்பிடுங்க... ஒரு வாரத்தில நான் வர பார்க்கிறேன்.” என்றவர் போன்னை வைக்க.... அந்தப் பக்கம் வெங்கட்டும் போன்னை வைத்தார்.

மதிய உணவை அவர் சமைத்து முடிக்கவும் ஹரி வரவும் சரியாக இருந்தது. இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். மாலை ஹரி சதுரங்க வகுப்பிற்குச் செல்லும் போது அவரும் உடன் சென்றார்.

ஹரி ஏற்கனவே அனி மாடியில் நிற்பாள் என்று சொல்லியிருந்ததால்.... அவரும் ஆவலாக மாடியை பார்க்க.... அனியும் அந்த நேரம் சரியாக ஓடி வந்து பார்த்தவள், ஹரியின் பின்னால் யாரோ அமர்ந்திருப்பதைப் பார்த்து.... அவள் இன்னும் எட்டி எட்டி பார்க்க.... அதைப் பார்த்த வைஷ்ணவிக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் மறுபக்கம் பாவமாகவும் இருந்தது.

ஹரி வகுப்பு எடுக்கச் சென்றுவிட.... வைஷ்ணவி தன் நாத்தனார் வீட்டிற்குச் சென்றவிட்டார். வகுப்பு முடிந்து ஹரியும் வந்துவிட.... மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். அதன் பிறகும் பெண்கள் தங்கள் பேச்சை தொடர.... பொறுமை இழந்த ஹரி “நாளைக்குப் பகல்ல வந்து பொறுமையா பேசுங்க.... இப்ப கிளம்பலாம்.” என்றான்.

“நாங்க பேசினா உனக்கு என்ன டா? இப்ப வீட்ல போய் என்ன பண்ணப்போற?” வைஷ்ணவி மகனை முறைக்க...

“அனி காத்திட்டு இருப்பா வாங்க மா...” என்று அவரை இழுத்துக்கொண்டு சென்றான். அவன் சொன்னது போல் இவர்கள் செல்லும் போதும் அனி நின்று பார்த்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் வைஷ்ணவி ஷாப்பிங் செல்வது, தன் நண்பர்களைப் பார்க்க செல்வது என்று நேரத்தை செலவு செய்தார். அவர் பெங்களூரில் தான் முப்பது வருஷமாக இருந்தார். இப்போது ஐந்து வருடங்களாகத் தான் ஊட்டியில் வசிப்பது. அவர்களுக்கு என்று ஒரு பெரிய வீடும் இங்கு இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டு இருக்கின்றனர். அதைச் சென்று பார்த்துவிட்டு வந்தார்.
அப்போது அவரைத் தேவ் அழைத்தான்.

“அம்மா நீங்க சொன்னா மாதிரி எல்லாம் விசாரிச்சிட்டேன்.” என்றவன் விவரம் சொல்ல.... அதை முழுவதும் கேட்டு முடித்தவர், மீனாவோட முதல் கணவன் ஆகாஷ் பற்றியும் விசாரித்தார்.

“அது ஒன்னும் பிரச்சனை இல்லைமா.... ரெண்டு பக்கமுமே எழுதி வாங்கி இருக்காங்க. அதோட ஏழு வருஷம் ரெண்டு பேரும் பிரிஞ்சும் வாழ்ந்திருகிறதுனால... நாளைக்குக் கோர்ட் அது இதுன்னு போனாலும் கேஸ் நிக்காது.”

“இல்லைடா நாளைக்கு அனி பத்தி தெரிஞ்சு அவன் என்னோட குழந்தைன்னு கேட்டு வந்திட்டா.....”



“வரமாட்டான் மா.... அவனுக்கு இப்படி ஒரு பொண்ணு இருக்கிறதே தெரியாது. அதோட சட்டபடி அவனால அனியை நெருங்க முடியாத அளவு நாம பார்த்துக்கலாம். அதுக்கு நான் பொறுப்பு.” என்றான் தேவ் உறுதியாக.

“சரிடா.... ரொம்பத் தேங்க்ஸ்.” என வைஷ்ணவி சொன்னதும்,

“எனக்கு நீங்க தேங்க்ஸ் சொல்வீங்களா... எனக்கும் ஹரியோட வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு ஆசை இருக்காதா... அம்மா இப்ப நீங்க என்ன பண்ணப் போறீங்க?” என அவன் ஆவலாகக் கேட்க....

“அனியை பத்தி பிரச்சனை இல்லை... மீனாவை நான் இன்னும் பார்க்கலை... அவளைப் பார்த்ததும் தான் முடிவு செய்வேன்.” என்றவர், மறுநாள் பள்ளி விடுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பே அனியை பார்க்க ஹரியுடன் சென்றார்.

ஹரியும் தன் அம்மா அனியுடன் பழகி அவளுக்குப் புரிய வைத்து விடுவார் என்று நினைத்து தான் அழைத்துச் சென்றான். அவனுக்குமே அப்போது அவன் அம்மா வேறு விதமாக யோசிப்பார் என்று தெரியவில்லை.

அனிக்கு அப்போது உடற்பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்ததால்.... அவள் வெளியே தான் இருந்தாள். ஹரியை திடிரென்று பார்த்தும் அவள் முகம் மலர... அதை வைஷ்ணவியும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்.

உடற்பயிச்சி ஆசிரியர் சொன்னது போல் செய்து கொண்டிருந்தாலும் பார்வை எல்லாம் ஹரி மீது தான். அனியின் பார்வை அடிக்கடி வைஷ்ணவியையும் தொட்டுச் சென்றது.

அவளுக்கு அவர் யார் என்று தெரியாவிட்டால் மண்டை வெடித்து விடும் போல இருக்கவும். அவர் யார்ரென்று ஹரியிடம் அனி ஜாடையில் கேட்க.... அம்மா என்று ஹரியும் அவளைப் பார்த்து உதடு அசைக்க.... அதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

பள்ளி முடிந்ததும் அனி புத்தகப் பையோடு வெளியே வர.... ஹரி சென்று அவளை வாரி தூக்கிக் கொண்டான். இத்தனை நாள் தள்ளி இருந்து மட்டும் தானே பார்க்க முடிந்தது. அவளை அழைக்க வந்த விஸ்வத்திடம் சிறிது நேரத்தில் தானே கொண்டு விடுவதாகச் சொல்லி தன் அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

மகனின் கழுத்தை கட்டிக்கொண்டு வந்தவளை வைஷ்ணவி ஒரு புன்னகையோடு பார்த்திருக்க.... அவரைப் பார்த்ததும் ஹரியின் காதில் “அவங்க உங்க அம்மாவா....அப்ப அப்பா” என்று அனி ரகசியமாகக் கிசிகிசுக்க.... “அவர் ஊர்ல இருக்கார்.” என்றான்.

“ஹாய் அனிதா....” என வரவேற்ற வைஷ்ணவியைப் பார்த்து வெட்கப்பட்டுப் புன்னகைத்தாள். ஹரி அவளைச் சோபாவில் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான்.

“என்ன சாப்பிடுற...” எனக் கேட்ட வைஷ்ணவியிடம் “ஸ்கூல் போயிட்டு வந்து, உச்சா போயிட்டு, கை கால் கழுவி டிரஸ் மாத்திட்டு தான் சாப்பிடணும்ன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க.” என அவள் ஒரு மாதிரி நெளிந்து கொண்டே சொல்ல....


அவளையே கவனித்துக்கொண்டிருந்த ஹரி “உனக்கு இப்ப உச்சா வருது தானே...” என்றதும், ஆமாம் இல்லை என்ற இரண்டுமாக அவள் தலையசைக்க… சட்டென்று எழுந்தவன், அவளைத் தூக்கி சென்று பாத்ரூமில் விட.... பாத்ரூம் சென்றுவிட்டு வந்தவளுக்கு முகம் கைகால் கழுவி அழைத்து வந்தான்.

இப்போது தான் அனி ரிலாக்ஸ்டாக இருந்தாள். வைஷ்ணவி அவளிடம் கேக் இருந்த தட்டை கொடுத்தவர், ஹரியிடம் அவனுக்கு வேண்டுமா என்று கேட்க அவன் வேண்டாம் என்றான்.

“அவங்க கேக் எல்லாம் சாப்பிட மாட்டாங்க.” அனி தனக்குத் தான் ஹரியை பற்றித் தெரியும் என்பது போலப் பேச....

“ஏன் கேக் சாப்பிடமாட்டார்? அவருக்குச் சுகரா...” என வைஷ்ணவி மகனை கிண்டலாகப் பார்க்க....

“ஆமாம் இதுல சுகர் இருக்கு இல்ல... அதுதான் பிடிக்காது. ஆனா நான் குடுத்தா சாப்பிடுவாங்க.... இல்ல அப்பா...” என்று சொல்ல வந்தவள், ஹரியின் முகத்தைப் பார்த்துவிட்டு அப்பா என்ற வார்த்தையை மட்டும் மென்று முழுங்கினாள்.

அவனுக்குச் சிறிது கேக் ஊட்டி விட்ட பிறகே அவள் சாப்பிட்டாள்.

“உனக்கு ஹரி சார் பத்தி நிறையத் தெரியுதே.... அவர் வீடு ஆபீஸ் இதெல்லாம் கூட எங்க இருக்கு தெரியுமா?....”

“வீடு தெரியாது... ஆனா இது தான் ஆபீஸ்.” வேலை பார்க்கும் இடம் தானே ஆபீஸ் என்ற அர்த்தத்தில் சொன்னாள்.

“உங்க ஹரி சார் ரொம்பப் பேட் பாய் தெரியுமா....”

“இல்லை....நீங்க பொய் சொல்றீங்க. ரொம்பக் குட் பாய்....” என்றவள், ஹரியை பார்த்து சிரிக்க... அவன் உதட்டிலும் அடக்கப்பட்ட புன்னகை இருந்தது. அனி அவன் மடியில் ஏறி அமர்ந்து கொண்டாள். அனி இதுவரை ஹரியை சார் என்று அழைக்கவில்லை... அதை மற்ற இருவருமே கவனித்தனர்.

“ஆமாம் ஹரியை ஏன் அப்பான்னு கூப்பிட்ட?.... அங்கிள்னு தான கூப்பிடனும்.” சும்மா கேட்டு தான் பார்ப்போமே... என்ன சொல்கிறாள் பார்ப்போம் என்ற எண்ணத்தில் தான் வைஷ்ணவி கேட்டார்.

“ஐயோ...இது கூடத் தெரியாதா....” என்று அவள் தலையில் அடித்துக்கொண்ட அழகை பார்த்து ஹரி சிரிக்க... வைஷ்ணவி அவளை ஆர்வமாகப் பார்த்திருந்தார்.

“அங்கிள் கூப்பிட்டா.... அவங்க போய்டுவாங்க. அப்பா கூப்பிட்டா தான் என் கூடவே இருப்பாங்க.”

அங்கிள் எப்படி அப்பாவை போல நெருக்கமான உறவு ஆகும். அவள் சொல்வது சரிதானே என வைஷ்ணவி நினைத்தார். அவளை மேலும் சீண்டி பார்க்கும் எண்ணத்தில் “ஹரியும் என்னோட ஊருக்கு வரப்போறான். நான் போகும் போது அவனையும் கூடிட்டு போய்டுவேன்.” என்றதும், அனியின் முகம் மாறிவிட்டது. அவள் அப்படியா என்பதைப் போல் ஹரியை பார்க்க..... ஹரி இல்லை என்று தலையாட்டியதும் தான் இயல்புக்கு வந்தாள்.

ஹரியையும் அனியையும் பேசவிட்டு வைஷ்ணவி உள்ளே சென்றவர், அங்கிருந்தே அவர்கள் இருவரையும் கவனித்தார். அனி ஹரியின் மீது நன்றாகச் சாய்ந்து கால்மேல் கால் போட்டுக்கொண்டு உரிமையாகப் பேசிக்கொண்டு இருந்தாள். ஹரியின் முகமும் புன்னகையில் மலர்ந்து இருந்தது. இப்படி அவன் சிரிப்பதை பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

பிருந்தாவுக்குக் காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால்.... அவர்கள் குழந்தைக்கும் அனியின் வயசு தான் இருந்திருக்கும். அவளும் பெண் குழந்தை வேண்டும் என்று தான் ஆசைபட்டாள். ஒருவேளை அதனால் தான் மகனுக்கு அனியின் மீது இவ்வளவு பாசமோ என்று நினைத்தார்.

சிறிது நேரம் சென்று அனி ஹரியோடு கிளம்ப.... “நான் இன்னைக்கு உங்க வீட்டுக்கு வரேன்.” வைஷ்ணவி சொன்னதும், அனிக்குக் குஷியாகிவிட்டது. சரி என்பதாகத் தலையை நன்றாக ஆட்டி வைத்தாள்.

அனியை அழைத்துக்கொண்டு ஹரி செல்லும் போது... அந்தத் தெருவில் இருப்பவர்கள் இருவரையும் பார்த்து குசுகுசுவென்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். விஷயம் இந்நேரம் கண் காது மூக்கு வைத்து ஜோடிக்கபட்டிருக்கும் என்று ஹரிக்குப் புரிந்தது. இது வேறு மீனாவுக்குத் தொல்லையாகி விடுமோ என்று அவனுக்குக் கவலையாக இருந்தது.

மீனா இன்னும் அலுவலகத்தில் இருந்து வந்திருக்க மாட்டாள் என்பதால்.... அனியை அவள் மாமாவின் வீட்டில் விட்டுவிட்டு ஹரி வகுப்பு எடுக்கச் சென்றான். பள்ளி முடிந்து வந்த தன் நாத்தனாரிடம் மீனாவை பற்றி வைஷ்ணவி பேசிக்கொண்டு இருந்தார்.

அவரும் மீனாவை பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். ஏற்கனவே தேவ்வும் மீனாவை பற்றி நல்ல விதமாகத்தான் சொன்னான். இருந்தாலும் ஒரு குழந்தையோடு இருக்கும் பெண்ணைத் தன் மகனுக்குத் திருமணம் செய்வது ஒத்துவருமா... முதலில் இதற்கு ஹரியும் மீனாவும் ஒத்துக்கொள்ள வேண்டுமே.... என்று பலவாறு சிந்தித்தபடி இருந்தார்.
அருமையான பதிவு
 
அனிதா விவரம்
அப்பானு கூப்பிட்டா கூடவே இருப்பாங்க
வைஷ்ணவி என்ன சொல்ல போகிறார்
 
Top