Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா‌ - 1

Advertisement

Viswadevi

Active member
Member
மாப்பிள்ளைக்கு வந்த யோகமடா
அத்தியாயம் - 1 "
அம்மா…" என வீடே அதிரும் படி கத்தினாள் அந்த வீட்டின் இளவரசி. என்னமோ ஏதோ என்று கிச்சனில் இருந்து பதறி வந்தாள் மங்கை.

அங்கு மகளோ ஓடி வர… பின்னே துரத்திக்கொண்டு மகன் வர… ' இதுங்க இரண்டையும் திருத்தவே முடியாது.'என் மனதிற்குள் நினைத்தவள்.

தனது மகள் ஹரிணியிடம் திரும்பி, "ஏன் டா இப்படி கத்துற… " என மென்மையாக கேட்டாள். "ஹரிமா… இப்போ உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. இன்னும் நீ சின்னப் பிள்ளை இல்லை… இப்படியெல்லாம் கத்தக் கூடாது. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கடா." என மென்மையாக கூற ...

ஆனால் அந்த வார்த்தையோ, சரியாக ஹரிணியின் இதயத்தை துளைக்க… கரகரவென கண்களில் கண்ணீர் வழிந்தது. நிமிர்ந்து தன் தாயைப் பார்த்த ஹரிணி ஒன்றும் கூறாமல் தனது அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

மங்கையோ தனது மகளை பார்த்து அதிர்ந்து விட்டாள். எதற்கும் கலங்காத தங்கள் மகளின் கண்களில் கண்ணீர். அதுவும் திருமணமான ஐம்பதே நாட்களில்… நேற்று தான் ஆடி சீர் செய்து அவளை அழைத்து வந்திருந்தாள். காலையில் எழுந்தவுடன் தான் இந்த அக்கப்போர். முகத்தில் கலவரத்தோடு மீண்டும் தனது மகளின் அறை கதவை தட்ட…

அவளோ, " அம்மா நான் தூங்க போறேன். என்னை தொந்தரவு செய்யாதே…" என்று கத்த…

அவள் கூறியதைக் கேட்ட அவளது அண்ணன் அரவிந்த் நகைக்க…

அவனை முறைத்துப் பார்த்த மங்கையோ, "ஏன்டா நானே பதறிப் போய் இருக்கேன். நீ என்னடாவென்றால் சிரிக்கிற..‌." என கோபமாக் கேட்க…

"ஐயோ! மா… உன் பொண்ணு இன்னும் மாறவே இல்லை. சின்னப்பிள்ளையில் எப்படி கோபம் வந்தால் தூங்குவாளோ, அதே மாதிரி இப்பவும் செய்துட்டு இருக்கிறா."

ஹரிணிக்கு ஒரு பழக்கம்… கோபம் வந்தால் நன்றாக தூங்குவாள். அதையே இப்பவும் செய்யப் போக அரவிந்த் சிரித்து விட்டான்.

"டேய் கண்ணா… பாப்பா கோபப்படுற மாதிரி என்ன செய்த?" "நான் ஒன்னுமே செய்யவில்லை. அவளைப் பார்த்து நாளாச்சே எப்படி இருக்கிற என்று விசாரிச்சேன். அதுக்கு தான் இந்த கத்து கத்துறா… நீ போய் வேலையை பாருமா." என… மங்கையோ, அசையாமல் மூடிய கதவைப் பார்த்துக் கொண்டே நின்றாள். தன்னுடைய அண்ணன் பேசப்பேச அங்க உள்ளே கதவுக்கு அருகில் நின்றிருந்த ஹரிணி, அதைக் கேட்டு டென்ஷனானாள் 'ஆக்சுவலா தூங்கலாம் என்று தான் அறைக்குள் நுழைந்தாள், ஆனால் இப்போதோ அவனை நாலு சாத்து சாத்தினாள் என்ன.' என்று நகத்தைக் கடித்துக் கொண்டே யோசித்தாள் ஹரிணி. "பின்னே அழுதுட்டு போறாளே தங்கச்சி என்ன என்று விசாரிக்காமல், கவலைப் படுற அம்மாவையும் ஒன்றும் இல்லை மா, நீ போய் வேலையைப் பாரு என்று அனுப்புறானே… ஜாலியா விளையாட்டுத்தனமா இருந்தா என் கண்ணீருக்கு மதிப்பு கிடையாதா?... இப்போ எல்லாம் என்ன பத்தி கவலையே பட மாட்டேங்கிறான்… அவனோட மச்சான் தான் அவனுக்கு முக்கியமா போயிட்டாங்க.' என மனதிற்குள் குமுறிக் கொண்டே இருக்க…

வெளியேவோ மங்கை, " சும்மாயிரு அரவிந்த்… உனக்கு எல்லாமே விளையாட்டுதானா… பாப்பாவை பாரு அழறா… என்றைக்காவது இப்படி அழுதுருக்காளா… எனக்கு என்னவோ பயமா இருக்கு அரவிந்த்… அவசரப்பட்டு விட்டோமோ மாப்பிள்ளையைப் பற்றி நன்கு விசாரித்திருக்க வேண்டுமோ." என…

மங்கையை முறைத்த அர்விந்த், " அம்மா உளறாதீங்க… மாப்பிள்ளை யாரு நம்ம அப்பாவோட க்ளோஸ் ஃப்ரெண்ட் ஓட பையன்… அதுவும் இல்லாமல் அப்பாவோட பிஸ்னஸ் பார்ட்னரும் கூட… எத்தனை வருஷ பழக்கம்… இப்படி சட்டுனு சொல்லிட்டீங்க"

"அது இல்லை டா" என மங்கை எதோ சொல்ல வர... அரவிந்தோ,"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ சொன்னது நம்ம சதா அங்கிளுக்கு தெரிந்தால் கூட சும்மா இருப்பாரு… ஆனால் உங்க வீட்டுக்காரருக்கு தெரிந்தால் அவ்வளவுதான்… சாந்தக்குமார் அப்புறம் நரசிம்ம அவதாரம் எடுத்துடுவார்."

"ஆமாம் டா அதை மறந்துட்டேன்… நம்ம மாப்பிள்ளை சதாண்ணன், ஜானகியோட பையன் என்பதையே மறந்துட்டேன்." என்று மங்கை நொந்துக்கொள்ள…

"மா... இதுக்குத்தான் டிவி சீரியல் பார்க்காதீங்க என்று சொல்றேன்." " டேய் போடா… எதுக்கு எதை முடிச்சு போடுற... நானே என் பொண்ணு அழுததுல மாப்பிள்ளை சதாண்ணன் பையன் என்பதையே மறந்துட்டேன். அதுக்கு எதுக்குடா நான் பார்க்கிற சீரியலை குறை சொல்லுற…"

"பின்னே என்ன பண்றது நீங்க பார்க்கிற சீரியல் எல்லாம் நல்லாவா இருக்கு‌. ஏதாவது ஒரு நல்ல கான்செப்ட்டா இருக்கு. கிடையவே கிடையாது‌. எப்படி அடுத்த குடும்பத்தை கெடுக்கிறது. மருமகளை கொடுமைப் படுத்துவது. அடுத்தவனோட புருஷனை விருபம்பறது என்று தான் எல்லா சீரியலும்… லாக் டவுனால ரெண்டு மாசம் நிம்மதியா இருந்தோம்… இப்ப மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்க… என பெருமூச்சு விட்டவன் சரி அதை விடுங்க… ஹரிணி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் மா… கோபமும் கொஞ்சம் குறையும்… அப்புறமா விசாரிக்கலாம், இப்ப நீங்க எனக்கு சூடா ஒரு கப் காஃபி கொண்டு வாங்க மா…"

"டேய் இப்ப தானே காஃபி கொடுத்தேன். அதுக்குள்ள என்னடா இன்னொரு கப்…" என மங்கை முறைக்க…

"அம்மா... நான் குடிச்ச காஃபியோட எனர்ஜியே போயிடுச்சு. உன்னோடோவும், உன் பொண்ணோடவும் பேசி, அதனால இப்ப சூடா ஒரு கப் காஃபி கொண்டு வாங்க…" இவன் மகளைப் பற்றி பேசவும், எங்கே இதற்கும் தன் மகள் கத்தப் போகிறாளோ, என அங்கிருந்த விருந்தினர் அறையைப் பார்க்க… அவளோ, அம்மாவும், பையனும் பேசத் தொடங்கவும் உறங்கச் சென்றிருந்தாள். அங்கு எந்த அரவமும் தெரியவில்லை என்றவுடன் மகனிடம் திரும்பி, " இப்படி உங்களுக்கு காஃபி ஆத்திக் குடுத்துக் கொண்டே இருந்தால், நான் எப்ப டிஃபன் வேலையைப் பாக்குறது… அப்பா, புள்ளைங்க எல்லாருக்கும் இதே வேலையா போச்சு… சமைக்க கொஞ்சம் தாமதம் ஆனால் மட்டும் போதும், நேரத்தோடு சமைக்கவில்லை என்று சண்டைக்கு வர வேண்டியது." என புலம்பிக் கொண்டே கிச்சனுக்குள் சென்றாள்.

அம்மா புலம்பிக்கொண்டே செல்வதைப் பார்த்து அரவிந்தின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. 'நாங்க எதுக்கு சண்டை போடுறோமாம்... வேலைக்கு இத்தனை ஆட்கள் இருக்கும் போது, அவர்களை சமைக்க சொல்ல வேண்டியது தானே…' என மனதிற்குள் நினைத்தவன் வெளியே சென்று கார்டனில் அமர்ந்தான்‌. அங்கு உட்கார்ந்ததும் இவ்வளவு நேரம் இருந்த மலர்ச்சி மறைந்து , காலையில் நடந்தவற்றை யோசிக்கலானான்‌‌. இவன் வழக்கம் போல எழுந்து தோட்டத்தில் ஜாகிங் போய் கொண்டிருக்க… ஹரிணி வழக்கத்திற்கு மாறாக, அதிகாலையில் எழுந்தாள். ஆம் அவளைப் பொறுத்தவரை சூரிய உதயமாகும் நேரம் அதிகாலை தான். எட்டு மணிக்கு முன்பு எழுந்திருக்காதவள், சீக்கிரமே எழுந்து வந்திருந்தாள், அதுவும் இல்லாமல் அதிசயமாக இவனுக்கும் சேர்த்து காஃபி எடுத்து வந்திருந்தாள். அதைப் பார்த்தவுடன் அமைதியாக இருக்க அரவிந்தனுக்கு முடியுமா… ஜாக்கிங் செய்வதை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தவன், அவளை கலாய்க்க ஆரம்பித்தான். வழக்கம் போல தான் வம்பிழுக்க அவளோ, டென்ஷன் ஆகி கத்த தொடங்கினாள். "என்ன என் தங்கச்சி குடும்ப இஸ்திரி ஆகிட்டாங்காப் போல, காலையிலே எழுந்து குளித்துவிட்டு வேற வந்திருக்க… கல்யாணம் ஆகவும் பொறுப்பெல்லாம் வந்துருச்சு போல... ம், அப்புறம் மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்? மாப்பிள்ளையை நல்லா கவனிக்கிறீயா? இங்கே இருக்கிற மாதிரி விளையாட்டுத்தனமா இல்லாமல் பொறுப்பா இரு." என கிண்டலாக ஆரம்பித்து அக்கறையான அண்ணனாக முடிக்க…

அவளோ, " உங்க மாப்பிள்ளைக்கு உள்ள யோகம் எனக்கு கிடையாது " என முணுமுணுத்துக் கொண்டே எழுந்து உள்ளே செல்ல முயல…

"ஹரி நான் என்னக் கேட்குறேன், நீ என்ன உளறுற?" "ஆமாம் நான் லூசு… அதான் உளறுறேன் போடா…" என. போடா என்றவுடன், கோபம் சுறுசுறுவென ஏற, அவளை அடிக்க வர… அவளோ, " அம்மா" என்றுக் கத்திக்கொண்டே உள்ளே சென்றாள்.

நடந்தவற்றை எல்லாம் தன் தாயிடம் சொன்னால், இருவருக்குமே திட்டுக் கிடைக்கும்… மரியாதை இல்லாமல் பேசியதற்காக அவளுக்கும், பொம்பளைப் பிள்ளையிடம் எதுக்கு கை ஓங்குற என அவனுக்கும் மண்டகப்படி நடக்கும். அதனால் தான் இருவரும் சொல்லவில்லை. 'ஹரிணி தன்னிடம் இருந்து தப்பிப்பதற்காக உள்ளே ஓடியதை நினைத்து சிரிப்பு வந்தாலும், மாப்பிள்ளை பற்றிக் கேட்டவுன், அவளுடைய ரியாக்ஷனை பார்த்து இப்பொழுது யோசனையானான். இருவருக்குள்ளும் ஏதும் பிரச்சனையா?' மாப்பிள்ளை குடும்பம் மிக நெருங்கிய நட்புக்குடும்பம். சாந்தகுமாரின் நண்பன் சதாசிவம் பிரபல நகை கடைக்கு சொந்தக்காரர். பரம்பரை பணக்காரர். புதிதாக துணிக்கடை ஆரம்பிக்கும் போது, அதில் அனுபவ அறிவு உள்ள நண்பனையும் பார்ட்னராக சேர்த்துக் கொண்டார். எஸ்.எஸ் சில்க்ஸ் இப்போது பிரபலமானத் துணிக்கடை. கூடிய சீக்கிரத்தில் சில்வர் ஜுப்ளியே கொண்டாடப் போகிறார்கள். ஒரு கடையாக ஆரம்பித்தது, இன்று சென்னையில் பல கிளைகள் உள்ளன. இருபத்தி ஐந்து வருட நட்பு… சதாசிவத்தின் மனைவி ஜானகி அமைதியானவர், அதனால்தான் அவர்களுடைய நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களுக்கு மூன்று மக்கள்... இரண்டு பையனும் ஒரு மகளும்… மூத்தவன் கிருஷ்ணன், அவனது மனைவி யாமினி. திருமணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகிறது. அடுத்தது நந்தன் தான் ஹரிணியின் மாப்பிள்ளை. வெளிநாட்டில் எம்.பி.ஏ படித்து விட்டு இப்போது தான் சென்னை வந்து ஒரு வருடமாக பிஸ்னஸ் பார்த்துக் கொள்கிறான். நந்தனுக்கு பெண் பார்க்க… அவனோ,யாரையும் பிடிக்கவில்லை என்றுத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்க… ஹரிணியின் ஜாதகத்தை வாங்கி ஜானகி பொருத்தம் பார்க்க… பக்காவாக பொருந்தியிருக்க, அவனை எதுவும் யோசிக்க விடாமல் திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள். வாகினி, ஹரிணியின் உயிர் தோழி, அந்த வீட்டின் கடைக்குட்டி. பிரச்சனை இல்லாத குடும்பம்… கிருஷ்ணனும், அரவிந்தும் ஒன்றாகப் படித்தவர்கள்… நந்தன் அவ்வளவாக இவர்களோடு ஒட்ட மாட்டான். அவனும் இங்கு அதிகம் இருந்தது இல்லை. சிறு வயதில் இருந்தே ஹாஸ்டலில் தங்கிப் படித்தான். அப்புறம் காலேஜ் படிப்பு, மேற்படிப்பு என்று இங்கு அதிகம் வருவதில்லை. படிப்பு முடிந்ததும், நகைக் கடையில் தான் ஆர்வம் காட்டினான். அதனால் நந்தனைப் பற்றி சரியாகத் தெரியவில்லை.

" டேய்… அரவிந்தா… " என மங்கை கத்த… யோசனையிலிருந்து மீண்ட அரவிந்த், "ஏன் மா இப்படி கத்துறீங்க…" "சொல்லமாட்ட… எவ்வளவு நேரமா நான் கூப்பிட்டே இருக்கேன்... என்ன யோசனை... இந்தா காஃபி... இதை வாங்கிட்டு வந்து இங்க உட்கார்ந்து கனவு காண வேண்டியது தானே… எனக்கு என்ன சின்ன வயசா… சமையலறைக்கும், தோட்டத்துக்கும் நடந்துக் கிட்டே இருக்க... இதுக்குதான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லுறேன். தங்கச்சிக்கு முடியட்டும் என்று இவ்வளவு நாள் சொன்ன… இனி என்ன? அப்பாவிடம் சொல்லி உனக்கு பார்க்கட்டுமா?" என மங்கை ஆர்வமாக வினவ…

அவனோ, " மா… இப்ப என்ன அவசரம். ஹரிணி முதலில் அந்த வீட்டில் செட் ஆகிட்டாளா என்று பார்க்கணும்.கொஞ்ச நாள் போகட்டும்" என எரிந்து விழ…

"அதுக்கு ஏன் டா? இப்படிக் கத்துற… இனி உன் கல்யாணப் பேச்சே எடுக்கவில்லை போதுமா? நீயா வந்து அம்மா எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று நிக்கப் போற பாரு." எனக் கூறி விட்டு உள்ளே சென்றாள்.

அரவிந்தோ, நந்தனைப் பற்றி யோசித்து கொண்டிருக்க…

நந்தனோ, அவர்களது வீட்டின் பால்கனியில் இருந்து, நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு தனது இதய தேவதை தெரிகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான். பால்கனியில் இருந்த சந்தன முல்லைக்கொடி காற்றில் அசைந்துக் கொண்டிருந்தது.


தொடரும்…..
 

Attachments

  • IMG-20200817-WA0001.jpg
    IMG-20200817-WA0001.jpg
    92.1 KB · Views: 5
Last edited:
உங்களுடைய "மாப்பிள்ளைக்கு
வந்த யோகமடா"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
விஸ்வதேவி டியர்
 
Last edited:
Top