Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 6

Advertisement

Sakthi bala

Active member
Member
“நீ எங்க எல்லார் கிட்டயும் ஒரு உண்மையை மறைச்சுட்டே” என்று நிலா குற்றம் சாட்டவும் மனோரஞ்சன் குழம்பிப் போய் என்னவென்று யோசிக்கும்போது நிலாவே தொடர்ந்தாள்.

“அது என்ன உண்மைன்னு நான் சொல்லவா? உனக்கு அண்ணியை ஏற்கனவே தெரியும். நீயும் அண்ணியும் ரொம்ப நாள் லவ் பண்றீங்க. இதை எங்க எல்லார் கிட்டயும் சொல்ல பயந்துட்டு அண்ணியை கல்யாணம் பண்ண நீ ஒரு பெரிய பிளான் பண்ணிருக்கே. அதுக்கு தான் நீ பாபநாசம் போயிருந்தே. அப்படிதானே?”

அவள் போட்ட போடில் குடும்பம் மொத்தமும் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அமைதியாக மனோரஞ்சனை பார்த்துக் கொண்டு நின்றது. ஒருவேளை இவள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற ரீதியில் அவர்களை சந்தேகத்துடன் பார்த்தனர்.

மனோரஞ்சனும், மதிவதனியும் ஒரு நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின் மனோரஞ்சன் சிரித்துக் கொண்டே,” ஏய் லூசு போடி. உனக்கு எப்பவுமே விளையாட்டு தான். ஏதாவது காமெடி பண்ணாதே போ” என்று இலகுவாக சிரித்தான்.

அவர்கள் எல்லோரும் சென்றதும், விஸ்வநாதன் அவளிடம் வந்து, “நிலா எப்பவும் இப்படி தான் மா. ஏதாவது கிண்டல் பண்ணிட்டே இருப்பா. நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதே” என்று ஆதரவாக பேசிவிட்டு சென்றார்.

மதிவதனிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மகள் நித்யா அழுவதற்கு அவள் தான் காரணம் என்று சகுந்தலா கூறுகிறார். ஆனால் இவரோ நம்மிடம் பாசமாக பேசுகிறாரே என்று ஆச்சரியப்பட்டாள்.

சிறிது நேரத்தில் மனோரஞ்சன் வெளியே கிளம்பினான். அதை பார்த்த சூரியநாராயணன்,”எங்கபா கிளம்பிட்ட?” என்று கேட்டார்.

”கம்பெனிக்கு”

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். என் ரூமுக்கு வா”
மனோரஞ்சன் அவரை பின் தொடர்ந்து அவர் அறைக்குள் சென்றபின்,”இப்போ ஆபிசுக்கு போறதுக்கு என்ன அவசரம்? கொஞ்ச நாள் ரித்து கிட்ட எல்லா பொறுப்பையும் விட்டுடு. அதை விட முக்கியமான விஷயம் நிறைய இங்க வீட்ல இருக்கு” என்றார்.

“இல்லை பா. இங்க வீட்ல அப்படி ஒன்னும் முக்கியமான விஷயம் இல்லேன்னு நினைக்கிறன். ஏற்கனவே ரெண்டு நாள் வொர்க் பெண்டிங்ல இருக்கு. ரித்துவால எல்லாத்தையும் பாத்துக்க முடியாது”

“என்னப்பா நீ என்ன பேசுறே? எவ்ளோ பெரிய விஷயம் நடந்துருக்கு. உனக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிருக்கு. நீ ஒன்னுமே நடக்காத மாதிரி ஆபீஸ் போறேன்னு சொல்ற?!”

“அப்பா. முதல நான் உங்க கிட்ட சாரி கேட்டுக்குறேன் பா. நடந்தது ஒரு விபத்து. அது....அதான்,,,என்ன நடந்துச்சுன்னு உங்க கிட்ட போன்ல சொன்னேனே. அந்த சமயத்துல எனக்கு, அந்த பொண்ணு வாழ்க்கை என்னால கெட்டு போய்டுமோன்னு பயம் வந்துடுச்சு. அதான் சரினு சொல்லிட்டேன்”

“சரி விடு பா. நாம நினைச்சது நடக்கலேனா, நடந்தத நமக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்க முயற்சி பண்ணனும்.நீ அந்த பொண்ணோட வாழ்க்கைக் கெட்டு போய்ட கூடாதுனு தானே கல்யாணம் பண்ணினே. அப்போ உன் மனசை மாத்திக்கிட்டு நல்லபடியா வாழ்க்கைய ஆரம்பி.”

“அப்படி உடனே ஏதோ சட்டை மாத்துற மாதிரி என்னால மனசை மாத்திக்க முடியாது. முயற்சி பண்றேன் பா.”

இதற்குமேல் அவனிடம் ஒன்றும் பேச முடியாது என்பதை உணர்ந்த அவர்,“ஹ்ம்ம்....சரி பா. அப்புறம் இன்னொரு விஷயம். உன் கல்யாணத்த எப்படி எப்படியெல்லாமோ நடத்தனும்னு நாங்க எல்லாரும் பல கனவுகள் கண்டிருந்தோம். அது எதுவுமே இல்லைனு ஆயிடுச்சு.அதனால சிம்பிளா ஒரு ரிசெப்ஷன் மட்டும் வச்சிடலாம்.என்னப்பா சொல்ற?”

சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு பெருமூச்சுடன்,”சரி பா. என்னவோ ஒன்னு. உங்க இஷ்டம்”என்று விட்டேரியாக சொல்லிவிட்டு சென்று விட்டான்.

நாட்கள் வேகமாக நகர்ந்து சென்றுக் கொண்டிருந்தது.தினமும் மனோரஞ்சன் காலையில் சீக்கிரமே ஆபிசுக்கு சென்று விட்டு இரவு லேட்டாக தான் வீட்டுக்கு வருவான்.
அவன் அறையுடன் இணைந்து இன்னொரு அறை இருக்கும். அது அவன் ஆபீஸ் அறை. அவன் வந்ததும் அந்த அறைக்குள் நுழைந்து விடுவான். மதிவதனி அவன் அறையில் தூங்குவாள்.இதனால் பல நாள் மதிவதனியால் மனோரஞ்சனை பார்க்கக் கூட முடியாது. இது அவளுக்குமே வசதியாக இருந்தது.

காலையில் சமயலறையில் ஏதாவது வேலை இருந்தால் பார்ப்பாள்.அவள் இருந்தால் ராஜேஸ்வரி சமையலறைக்குள் நுழைய மாட்டார். பின்பு பாட்டி பார்வதியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பாள். அவருக்கு ஏதாவது கதைகள் படித்துக் காட்டுவாள்.

சிறிது நேரம் தோட்டத்தில் செலவிடுவாள். அந்த பெரிய தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளை பார்த்தாலே மனது மிகவும் லேசானதை போல உணர்வாள்.நிலா அவளுக்கு உற்ற தோழியாக இருந்தாள். அவள் மட்டும் தான் மதிவதனியை ஏதாவது சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாள்.

சூரியநாராயணனும், விஸ்வநாதனும் அவளுக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர்.ரிதுநந்தன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பான். பார்த்தால் ஒரு புன்சிரிப்புடன் போய்விடுவான்.

சகுந்தலா அங்கே வரும் போதெல்லாம் அவளை ஏதாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பார். பாட்டி தான், பெரும்பாலும் சகுந்தலாவிடமிருந்து அவளை காப்பாற்றுவார். நித்யா ஹாஸ்டலில் தங்கி எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தாள்.

சனி,ஞாயிறு விடுமுறைக்கு அவள் வரும்போதெல்லாம் மதிவதனியை ஒரு எதிரி போலவே முறைத்து பார்ப்பாள். காரணம் முழுதாக புரியாவிட்டாலும் தான் மனோரஞ்சனை மணந்தது தான் அவள் கோபத்துக்குக் காரணம் என்பது அவளுக்கு புரிந்தது.

நாட்கள் இப்படியே சென்றுக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் சூரியநாராயணன் மீண்டும் அந்த ரிசெப்ஷன் பேச்சை எடுத்தார்.மதிவதனியை கூப்பிட்டு மறுவாரமே ஒரு நல்ல நாள் இருப்பதாகவும் அந்த நாளில் ரிசெப்ஷன் வைக்கலாமா என்றும் அவளிடம் அபிப்ராயம் கேட்டார்.

அவள் யோசித்து பார்த்தாள். எப்படியும் இந்த விஷயத்தை முதலில் மனோரஞ்சனிடம் பேசியிருப்பார். அவன் சம்மதம் சொல்லாமல் தன்னிடம் வந்து இவர் இதை பற்றி கேட்க மாட்டார் என்று தோன்றியதால் அவளும் சரி என்று சொன்னாள்.

அன்று மதிவதனி கொஞ்சம் சந்தோஷத்தில் இருந்தாள். அவள் சந்தோஷத்துக்கான காரணம் அவளுக்கே புரியவில்லை, ஆனால் உற்சாகமாக வலம் வந்து கொண்டிருந்தாள், எல்லாம் சிறிது நேரம் தான்.அவள் கணவன் வந்து மிகவும் கோபமாக அவளிடம்,”ஏன் எப்படி செஞ்ச?” என்று கேட்கும் வரை தான்......

மதிவதனிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.இவர் இவ்வளவு கோபப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்று யோசித்தாள்.

“நான் என்ன செஞ்சேன்.எனக்கு ஒன்னும் புரியலை?!”

“அப்பா கிட்ட என்ன சொன்னே?”

“நான் என்ன சொன்னேன்? தெரிய....”
அவள் முடிக்குமுன்னே அவன் பொறுமையிழந்து,”அப்பா உன் கிட்ட ரிசெப்ஷன் வைக்கலாமான்னு கேட்டதுக்கு நீ என்ன சொன்ன?”

“அது....சரின்னு சொன்னேன்”

“எதுக்கு அப்படி சொன்னே? வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே? இப்ப ரிசெப்ஷன் ஒன்னு தான் கொறச்சலா ச்சே!” அவன் ஆத்திரத்துடன் கத்தினான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.”மாமா உங்க கிட்ட இத பத்தி பேசலையா?”

“ஆ...இல்லை.....அவரு என் கிட்டயும் கேட்டாரு....”

“அப்போ ரிசெப்ஷன் வேண்டாம்னு நீங்களே சொல்லிருக்கலாமே? எனக்கு தெரிஞ்சு மாமா உங்க கிட்ட தான் முதல இத பத்தி பேசிருப்பாருனு நினைக்கிறன். அப்போ நீங்களே இது வேண்டாம்னு சொல்லிருக்க வேண்டியது தானே”

“என்னாலே அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்ல முடியல. ஏற்கனவே அவர் கிட்ட எதுவும் சொல்லாம ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன். இதுக்குமேலையும் அவரை எதிர்த்து நான் பேசுனா நல்லா இருக்காது. அவரு உன் கிட்ட கேப்பாரு, நீ வேண்டாம்னு சொல்லுவேன்னு நினைச்சேன். ச்சே சரியான இம்சை....” அவன் முனுமுனுப்புடன் முடித்தான்.

மனோரஞ்சன் பேசவும் மதிவதனிக்குள் தூங்கிக் கொண்டிருந்த எல்லா உணர்வுகளும், கோபங்களும் வெளியே வந்தன, “ஹலோ....கொஞ்சம் நிறுத்துங்க. உங்களுக்கு இந்த ரிசெப்ஷன் வேண்டாம்னா அதை நீங்க தான் மாமா கிட்ட சொல்லிருக்கணும். என்னால ஒன்னும் பண்ண முடியாது. ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சுகோங்க.. எனக்கும் இந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட விருப்பம் கிடையாது”

“நீங்க என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையை காப்பாத்துனதா நினைச்சுட்டு இருக்கீங்க. அப்படி இல்லை, என்னை அப்படியே விட்டுருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன். பெருசா என்னை காப்பாத்துறதா நினைச்சுகிட்டு என் வாழ்க்கையை கெடுத்துட்டீங்க! இப்போ வந்து என்னை குத்தம் சொல்றீங்க. ச்சே எல்லா ஆம்பளைங்களும் இப்படி தான். சரியான ஆனாதிக்கவாதீகள்.” என்று பொரிந்து தள்ளி விட்டாள்.

ஒரு நிமிடம் அவன் அவளை ஆழ்ந்து நோக்கினான். பின்பு......

புலரும்
 
Top