Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 5

Advertisement

Sakthi bala

Active member
Member
மனோரஞ்சனும், மதிவதனியும் படி ஏறிக் கொண்டிருக்கும் போது “அங்கேயே நில்லுங்க” என்று கூறிவிட்டு மனோரஞ்சனின் பாட்டி பார்வதி ஆரத்தி தட்டுடன் அங்கே வந்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த மனோரஞ்சன் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

சூரியநாராயணனும், விஸ்வநாதனும் கூட ஆச்சரியப்பட்டனர். தாத்தா நாராயணன் என்ன சொன்னாலும் அதையே வேதவாக்காக ஏற்பவர் பாட்டி பார்வதி.

அவர் வெள்ளை காக்கை பறக்குது என்று சொன்னால் கூட அதை அப்படியே நம்புவார். நாராயணன் இந்த திருமணத்தை ஆதரிக்காத போது பார்வதி இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டது யாருமே எதிர்பாராத ஒன்று.

ஆரத்தி எடுத்ததும் அவர்கள் இருவரும் உள்ளே சென்றனர்.

பார்வதி மதிவதனியை பார்த்து பரிவாக புன்னகைத்தார். “உன் பேர் என்னமா?”

“மதிவதனி” மெல்லிய குரலில் அவள் பதில் கூறினாள்.

“ரொம்ப அழகான பேர். சரிமா. நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க. களைப்பா இருப்பீங்க. மனோ அவளை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ பா” என்று கூறி விட்டு உள்ளே சென்றார்.

“போய் ரெப்ரெஷ் ஆயிட்டு கீழ வாம்மா. எங்க அம்மா சாப்பாடு ரொம்ப ருசியா இருக்கும்” என்று அவளை பார்த்து புன்னகைத்து அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வர முயற்சித்தார். விஸ்வநாதனும் அவளை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தார்.

தந்தையின் முகத்தை பார்த்த மனோரஞ்சனுக்கு ஒரு பெரிய பாரம் குறைவது போல இருந்தது.”அப்பா! முதலில் தாத்தாவை போய் பார்த்துட்டு வரேன் பா” என்று கூறி விட்டு தாத்தாவின் அறை நோக்கிச் சென்றான்.

ஆனால் அவன் உள்ளே நுழையும் முன் அவன் தாத்தா அவன் முகத்தில் அறைந்தார் போல கதவை சாத்தினார்.அவன் வேதனையுடன் தன் தந்தையை திரும்பிப் பார்த்தான்.

”அம்மா எங்க பா?”

“அவ ரூம்ல இருப்பா. இதெல்லாம் நாம அப்புறம் பார்த்துக்கலாம். முதல மதிவதனியை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ பா”

மனோரஞ்சன் எதுவும் சொல்லாமல் படி ஏற ஆரம்பித்தான்.மதிவதனி அவன் பின்னாலே சென்றாள்.அவள் படி ஏறிக் கொண்டிருக்கும் போது யாரோ தன்னை உற்று பார்ப்பது போல உணர்ந்தாள்.

திரும்பி பார்த்தால் ஒரு பெண் வேகமாக அங்கிருந்து நகர்வது தெரிந்தது. அவள் கண்களில் அந்த பெண் அணிந்திருந்த ப்ளூ சுடிதார் மட்டுமே கண்ணில் பட்டது.மேலே எதுவும் யோசிக்காமல் அவள் மனோரஞ்சனை பின் தொடர்ந்தாள்.

அவர்கள் சென்றதும் சூரியநாராயணன் அவர் அறைக்குச் சென்று தன் மனைவி ராஜேஸ்வரியை பார்த்து பேசினார்.

“ஏன்மா நீ அவங்களை பார்க்க வரலை?”

“என்னால உங்கள மாதிரி உடனே மாற முடியாதுங்க.கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றேன். என்னை புரிஞ்சிக்கோங்க”

“சரிமா. எனக்கு உன்னை பத்தி தெரியும். நீ கூடிய சீக்கிரம் மாறுவே. என் கவலை எல்லாம் அப்பாவும், மனோவும் பத்தி தான். மனோ அப்படியே அவங்க தாத்தா மாதிரி தான். ரெண்டு பேருமே ரொம்ப பிடிவாதக்காரங்க. மனோவ அப்பா எப்படி ஏத்துக்க போறார்னு தெரியல? அதுவும் இல்லாம அந்த பொண்ண அவன் விரும்பி கல்யாணம் பண்ண மாதிரி தெரியல. அந்த பொண்ணு ரொம்ப பாவம்!”

“அந்த பொண்ணு மட்டும் தான் பாவமா?” என்று கூறி விட்டு அவரை ஆழ்ந்து பார்த்தார் ராஜேஸ்வரி.

அவர் எதுவும் பதில் கூறாமல் இருக்கவே, “நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரியுது தானே?” என்று கேட்டாள்.

“எனக்கு புரியுதுமா. பார்ப்போம் என்ன செய்யலாம்னு யோசிப்போம்!”என்று ஒரு பெருமூச்சுடன் முடித்தார்.

மனோரஞ்சனின் அறைக்குள் அவன் யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான். மதிவதனி என்ன செய்வது என்று புரியாமல் அங்கிருந்த பால்கனிக்குச் சென்று கீழே உள்ள தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஏதோ சத்தம் கேட்கவும் என்ன என்று கீழே எட்டி பார்த்தாள். பார்த்ததும் அதிர்ந்தாள்.

அங்கே ஒரு ஊஞ்சலில் அமர்ந்து அந்த ப்ளூ சுடிதார் பெண் அழுது கொண்டிருந்தாள்.அவள் ஏதோ இன்றோடு அவள் உலகமே முடிந்தது போல அழுதுக் கொண்டிருந்தாள்.அவளுக்கு மதிவதனியின் வயது தான் இருக்கும்.

மதிவதனிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் அங்கு நிற்பதைக் கண்ட மனோரஞ்சன் அவள் பக்கத்தில் வந்தான். அதன் பின் தான் அவனும் கீழே பார்த்தான்.

பார்த்ததும்,”நித்யா” என்று கூப்பிட்டான்.

அந்த நித்யா என்ற பெண் மேலே நிமிர்ந்து அவர்கள் இருவரையும் பார்த்தாள். பின் கண்ணை துடைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து ஓடி விட்டாள். மதிவதனிக்கு அவள் யார், ஏன் அழுகிறாள் என்று ஒன்றும் புரியவில்லை.

மனோரஞ்சன் ஒரு பெருமூச்சுடன் மதிவதனியிடம் திரும்பி,”நான் உன் கூட கொஞ்சம் பேசணும்” என்றான்.

என்ன என்பது போல அவன் முகத்தை பார்த்தாள்.

“இதோ பாரு. இனிமேல் இது உன் வீடு. நீ இங்க சுதந்திரமா இருக்கலாம்.உனக்கு பிடிச்சத செய்யலாம். ஆனால் இந்த வீட்ல உள்ளவங்களை கொஞ்சம் நீ பொறுத்துக்கணும். அவங்க எல்லாருக்கும் நம்ம கல்யாணம் ஒரு பெரிய அதிர்ச்சி. அதனால எல்லாரும் இத ஏத்துப்பாங்கனு சொல்ல முடியாது. கொஞ்சம் நீ விட்டுக்குடுத்து போக வேண்டி இருக்கும்”

“மத்தபடி நீ உன் இஷ்டம் போல இருக்கலாம். நான் என் இஷ்டம் போல இருக்கேன். நம்ம ரெண்டு பேரோட விருப்பம் இல்லாம என்னனவோ நடந்துடுச்சு. என்னால உடனே மனச மாத்திக்க முடியாது. காலம் போற போக்குல என்ன நடக்குதோ நடக்கட்டும்”

“ஹ்ம்ம்...வேற ஏதாவது என் கிட்ட நீ சொல்லனுமா?” அவன் கேக்கவும் அவள் மௌனமாக இருந்தாள்.

“என்ன சீக்கிரம் சொல்லு?” என்று அவன் கடிந்தான்.

“ஆ...அது...வந்து...உங்க முழு பேர் என்ன?”

மனோரஞ்சன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னைகை தோன்றி மறைந்தது.”என் பெயர் மனோரஞ்சன். வீட்ல எல்லோரும் என்ன மனோனு கூப்புடுவாங்க.” பேசியது போதும் என்பது போல அவன் வெளியே சென்று விட்டான்.

“என்ன இது இவர் என்னைக்குமே நம்ம என்ன நினைக்கிறோம்னு கேக்கவே மாட்டார் போல. நம்ம எண்ணத்துக்குக் கூட மதிப்பு குடுக்காம இருக்கிறது, இது என்ன வாழ்க்கை? முதல நான் ஏன் இப்படி மாறுனேன்? ஏன் இப்படி எதுவும் பேசாம மௌனமா இருக்கேன்?ச்சே...” யோசித்து யோசித்து அவளுக்கு தலை வலிப்பது போல இருந்தது.

மதிவதனி குளித்து விட்டு கீழே இறங்கிச் சென்றாள். அவளுக்கு எங்கு செல்வதென்றே தெரியவில்லை. மெதுவாக சமயலறைக்குச் சென்று பார்த்தாள்.
அங்கே பாட்டி பார்வதியும், அவள் மாமியார் ராஜேஸ்வரியும் சமைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஏதாவது உதவலாம் என்று உள்ளே நுழைந்தாள். அவளை பார்த்தவுடன் ராஜேஸ்வரி அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.

“எதுவும் வருத்தப்படாதே மா. காலம் எல்லாத்தையும் மாற்றும்.” என்று பார்வதி அவளை பார்த்து புன்னகைத்தார்.

தனக்கு ஆறுதலாக பேசிய பாட்டியை அவளுக்கு மிகவும் பிடித்து போயிற்று.”சரி பாட்டி” என்றாள். பாட்டியிடம் அந்த ப்ளூ சுடிதார் பெண்ணை பற்றி கேட்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது.

“ஆ...பாட்டி...நான் வரும்போது ஒருத்தங்க...அதான் ப்ளு சுடிதார் போட்டிருந்தாங்களே....அவங்க....அவங்க யாரு?”

அவள் கேட்டவுடன் பார்வதியின் முகம் மாறியது.”அவள் மனோவின் அத்தை பொண்ணு மா. என் ரெண்டாவது பொண்ணு சகுந்தலாவோட மக நித்யகல்யாணி. அவளை தான் நீ பார்த்த. ஏன் மா அவள பத்தி கேக்குறே?”

“ஆ...அது வந்து பாட்டி, அவங்க தோட்டத்துல உட்கார்ந்து அழுதுட்டு இருந்தாங்க. அதான்...”என்று இழுத்தாள்.

பாட்டி அவளுக்கு பதில் அளிக்கும் முன்பு “அவ அழுவுறதுக்கு நீதான் காரணம்” என்று ஒரு குரல் குற்றம் சாட்டியது.

மதிவதனி அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தாள். அங்கே சகுந்தலா நின்றுக் கொண்டிருந்தாள்.

“சகுந்தலா என்ன பேசுறதுன்னு யோசிச்சு பேசு. முதல இங்கிருந்து போ”

“அம்மா...”

“நா போனு சொன்னேன். போ”

மதிவதனியை கோபமாக முறைத்து விட்டு அவர் அந்த இடம் விட்டு அகன்றார்.மதிவதினிக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னால் ஏன் அந்த பெண் நித்யா அழ வேண்டும்? அவளுக்கு புரிந்தும் புரியாதது போல இருந்தது.

எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர். மதிவதனியும், மனோரஞ்சனும் அங்கு வந்து அமர்ந்ததும் தாத்தா நாராயணன் உடனே எழுந்து சென்று விட்டார். மனோரஞ்சன் அவரை கூப்பிட்டான். ஆனால் அவர் கேட்காதது போல சென்று விட்டார்.வேதனையுடன்
மனோரஞ்சனும் சாப்பிடாமலேயே எழுந்து மேலே சென்று விட்டான். மதிவதனி என்ன செய்வது என்றே தெரியாமல் பார்வதியை பார்த்தாள்.

“சாப்பிடு மா” என்று அவர் எத்தனித்தார்.

“இல்ல பாட்டி. எனக்கு பசி இல்லை” என்று அவளும் எழுந்து மேலே செல்ல படி ஏற போனாள்..

அப்பொழுது திடீரென்று யாரோ பின்னாலிருந்து வந்து மதிவதனியை அணைத்தார்கள். அவள் பயந்து போய் யாரென்று திரும்பிப் பார்த்தாள்.

“ஹய்யோ! நீங்க தான் எங்க அண்ணி யா? ஹய்யோ! ரொம்ப அழகா இருக்கீங்க. ச்சே.....கரெக்டா இந்த நேரம் பார்த்து நான் காலேஜ் டூர் போய்ட்டேன். இல்லேனா நீங்க வரும் போது நான் உங்கள வரவேற்க நின்னுருப்பேன்”

“எங்கே அந்த திருட்டு மனோ அண்ணன்? கடைசி வரைக்கும் உங்கள பத்தி என் கிட்ட சொல்லவே இல்ல பாத்தீங்களா! இந்த ரித்து கூட என் கிட்ட ஒன்னுமே சொல்லல. இருக்கு அவனுக்கு. எங்க அவன்?அட நானே பேசிட்டு இருக்கேனே. நீங்க எதுவுமே பேச மாட்டிக்கிறீங்க?” என்று பேசிக் கொண்டே போனாள்.

“ஏய் வாலு. உன் பேச்சை கொஞ்சம் நிப்பாட்டு.அவ பயந்துற போறா” சூரியநாராயணன் தன் மகள் நிலாவை அடக்கினார்.
நிலாவின் குரலைக் கேட்டு மனோரஞ்சனும் இறங்கி வந்தான்.

“அண்ணா. நீ ரொம்ப மோசம் போ அண்ணா.நீ எங்க எல்லார்கிட்டயும் ஒரு பெரிய உண்மையை மறைச்சுட்டே!” என்று குற்றம் சாட்டினாள்.
அதைக் கேட்ட மனோரஞ்சன் என்ன உண்மை என்று குழம்பி போய் நின்றான்.....

புலரும்
 
Top