Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 2

Advertisement

Sakthi bala

Active member
Member
1131

மதிவதனி நொடிக்கு ஒரு முறை வாசலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு சிறிய சப்தம் கேட்டாலும் ஓடி சென்று யாராவது வந்திருக்கிறார்களா என்று பார்த்தாள். நகத்தைக் கடித்து கொண்டு பதட்டத்துடன் இருந்தாள்.

எப்பொழுதும் ஏதாவது திட்டி கொண்டிருக்கும் அவள் அத்தை காமாட்சி கூட அவள் பதட்டத்தை பார்த்து பேசாமல் அமைதியாக இருந்தார்.

இன்று மதிவதனி கலந்து கொண்ட வேலைக்கான நேர்முக தேர்வு முடிவு வரும் நாள். அது தான் அவள் பரபரப்புக்கு காரணம். கடைசியாக அவள் பொறுமையை மேலும் சோதிக்காமல் தபால் வந்த சேர்ந்தது. நடுங்கும் கைகளுடன் அவள் அதை பிரித்து பார்த்தாள். ஒரு நிமிடம் அவள் முகம் மலர்ந்து பின் வாடியது.

அவள் வாடிய முகத்தை பார்த்து அவள் அத்தை, “விடு மதி. உனக்கு திறமை இருக்கு. இந்த வேலை இல்லேனா வேற வேலை தேடிக்கலாம்” என்றார்.

மதிவதனி ஆச்சரியத்தின் உச்சிக்குச் சென்றாள். இது நாள் வரை அவள் அத்தை அவளிடம் கனிவாக பேசி அவள் கேட்டதில்லை. சிறு வயதில் ஒரு விபத்தில் அவள் தந்தையும், தாயும் இறந்த பின்னர் அவள் அத்தை தான் அவளை வளர்த்தார். அவளுக்கு அவள் பெற்றோரின் முகம் கூட நினைவுக்கு இல்லை. காமாட்சி மதிவதினியின் தந்தையின் தங்கை.

என்ன தான் அவளை வளர்க்கும் பொறுப்பை காமாட்சி ஏற்று கொண்டிருந்தாலும், அவளிடம் எப்பொழுதும் பாசத்தை வெளி காட்டியதில்லை. சிறு வயதிலேயே மதிவதனி இதை உணர்ந்து கொண்டாள். ஆனால் அவள் படிப்பில் காமாட்சி குறை வைத்தது இல்லை. கஷ்ட்டப்பட்டு அவளை நன்கு படிக்க வைத்தாள். அதை நினைத்து மதிவதனி மனதை தேற்றிக் கொள்வாள். இப்பொழுது அவள் அத்தை கனிவாக பேசியதும் அவள் ஆச்சரியப்பட்டதில் ஆச்சரியம் இல்லையே.

“இல்லை அத்தை எனக்கு வேலை கிடைச்சுடுச்சு”

“ஏய் லூசு பொன்னே? அதுக்கு ஏன் மூஞ்சிய இப்படி வச்சிருக்க?”

‘அதானே பார்த்தேன். இது தான் என் அத்தை’ என்று மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டாள்.

“அவங்க என்னை ஒரு வாரத்திற்குள்ளேயே வந்து சேர சொல்றாங்க” என்று சோகமாக சொல்லி முடித்தாள்.

“இதுவும் நல்ல விஷயம் தானே. இதுக்கு எதுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க? எல்லாம் உங்க அம்மா மாதிரி தான். சரியான லூசு பொண்ணு” என்று புலம்பி கொண்டே அவர் சென்றார்.

மதிவதனி ஏற்கனவே ஊரை விட்டு போவதற்கு மனதை தயார்படுத்தி வைத்திருந்தாள். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று அவள் நினைக்கவில்லை. ஒரு வாரத்திலேயே கிளம்ப வேண்டும் என்று தெரிந்த மாத்திரமே அவள் மனம் துவண்டு விட்டது. அவள் பிறந்து வளர்ந்த இடம் இது தான். இதை விட்டுவிட்டு போக மனமேயில்லை.

எப்பொழுதெல்லாம் அவளுக்கு மனசு சரியில்லையோ அவள் தோழி மித்ராவுடன் பேசிக் கொண்டிருப்பாள். மித்ராவும், மதிவதனியும் சிறு வயது முதல் இணை பிரியா தோழிகள். இருவரும் ஒரே ஸ்கூல், ஒரே காலேஜில் படித்தார்கள். ஆனால் மித்ராவின் வீட்டில் அவளை வேலைக்கு செல்ல கூடாது என்று கூறி அவளுக்கு திருமணம் பேசி முடித்து விட்டனர். இன்னும் சில மாதங்களில் அவள் திருமணம் நடப்பதாக இருந்தது. ஊரை விட்டு கிளம்பும் முன் தன் தோழியை பார்த்து பேசினால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்று நினைத்தவள், அத்தையிடம் சொல்லிவிட்டு பஸ் ஏறி பாபநாசம் சென்றாள்.

மித்ராவின் தந்தை கல்யாண தீர்த்தத்தில் உள்ள அகஸ்தியர் லோபமுத்ர கோவிலில் குருக்களாக பணியாற்றி வந்தார். அதனால் அவர்கள் வீடும் கல்யாண தீர்த்தத்தின் அருகில் தான் இருந்தது. அந்த இடம் மதிவதனிக்கு மிகவும் பிடிக்கும். தன் தோழியை சந்திக்கும்போதெல்லாம் நதிக்கரையோரம் அமர்ந்து சிறிது நேரம் இயற்கையை ரசித்து விட்டு தான் வீட்டுக்கு செல்வாள். அங்கு சென்றாலே மனதில் உள்ள பாரம் மொத்தமும் குறைவது போல உணர்வாள். அதற்காகவே அவள் மித்ராவை அடிக்கடி பார்க்க செல்வாள்.

அன்றும் அப்படி அவள் மித்ராவின் வீடு நோக்கி செல்ல, அவள் வீடு பூட்டியிருப்பதை கண்டு குழம்பி நின்றாள்.

‘அடடா....ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கலாமோ? எங்க போன்னாங்கன்னு தெரியலேயே?’ மனதிற்குள் புலம்பியவாறு மித்ராவிற்கு கூப்பிட்டாள்.

“ஹலோ...மித்ரா. எங்கடி போயிருக்க? நான் உங்க வீட்டு முன்னாடி தான் நிக்குறேன்”

“என்னது வீட்டுக்கு வந்திருக்கியா? அய்யயோ! நான் இப்போ திருநெல்வேலில இருக்கேன்டி. கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்கிறதுக்கு ஆர்.எம்.கே.வி வந்தோம். இங்க ஒரு சொந்தக்காரங்க வீட்ல தங்கிட்டு நாளைக்கு தான் வருவோம். சாரிடி. நீ வருவேன்னு தெரியாது. ச்சே நான் போறத ஒரு போன் பண்ணி உன்கிட்ட சொல்ல கூட மறந்துட்டேன். ”
மதிவதனியை பேச விடாமல் ஒரு மூச்சுக்கு அவளே பேசி முடித்தாள்.

“ஏய்...ஏய்....கொஞ்சம் மூச்சு விட்டுட்டு பேசுடி. இப்போ எதுக்கு இவ்ளோ ஃபீலிங்க்ஸ். நான் தான் வறதுக்கு முன்னாடி உனக்கு ஒரு போன் பண்ணி கேட்டுருக்கணும். கேக்காம வந்தது என் தப்பு தான்.”

“சரி என்ன திடீருன்னு வந்துருக்க? ஏதாவது முக்கியமான விஷயமா?”

“அது..அது வந்து......ஒன்னுமில்லேடி....அது” அவள் வேலை கிடைத்த விஷயத்தை ஆரம்பிப்பதற்குள் அந்த பக்கம் மித்ரா,” ஒன்னுமில்லையா? அப்போ சரி நான் நாளைக்கு உனக்கு போன் பண்றேன்டி....இப்போ இங்க என்னை புடவை பார்க்க எங்க அத்தை கூப்புடுறாங்கடி, போலேனா நல்லா இருக்காது. ஓகே பாய் டி....” பட்டென்று போனை வைத்து விட்டாள்.

‘அட பாவி...சும்மா ஒரு பேச்சுக்கு ஒன்னுமில்லேன்னு சொன்னால், ஒன்னுமில்லயானு கேட்டுட்டு போனை வச்சுட்டா! கல்யணம் பிக்ஸ் ஆகுறதுக்கு முன்னாடி எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் நான் மேலே படிக்க போறேன்னு தாம்தூம்னு குதிச்சா! இப்போ இந்த புள்ளையும் பால் குடிக்குமாங்கற மாதிரி எங்க அத்தை, எங்க அவருன்னு ஒரேடியா கவுந்துட்டா. ஒருவேளை கல்யாணம்னு வந்தா எல்லா பொண்ணுங்களும் அப்படி தான் மாறிடுவாங்களோ? நானும் அப்படி தான் மாறிடுவேனோ?’

‘ஐயோ, இன்னும் வேலை கிடைத்த விசயத்தை அவ கிட்ட சொல்லலியே. கோவிச்சுக்குவாளோ? கோவப்பட்டா படட்டும் எனக்கு என்ன வந்துச்சு? அவ தானே போனை டப்புன்னு வச்சா? அவ வந்தப்பின்னாலே சொல்லிக்கலாம்’ இப்படி பலவாறு சிந்தித்துக் கொண்டே சிறிது நேரம் கல்யாண தீர்த்தத்தின் அருகே சென்று உட்கார்ந்து விட்டு போவோமென்று அங்கு சென்று அமர்ந்தாள்.

மதிவதனி நதி கரையோரம் உட்கார்ந்து தண்ணீர் சுழித்து ஓடுவதை ரசித்துக் கொண்டே ஏதேதோ நினைவுகளில் மூழ்கி இருந்தாள். லேசாக மழை வேறு தூறல் போட ஆரம்பித்ததால் இங்கும் அங்கும் சில ஆட்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் மதிவதனிக்கு இது மிகவும் பழக்கப்பட்ட இடம் என்பதால் எந்த பயமும் இல்லாமல் தன் சிந்தனைகளில் மூழ்கி இருந்தாள்.

சிறிது இருட்ட வேறு தொடங்கியதால் அங்கு இருந்தவர்கள் ஒவ்வொருவராக சென்று கடைசியில் அவள் மட்டுமே தனித்து விடப்பட்டாள். இது எதையுமே கவனிக்காமல் தன் மனம் போன போக்கில் அவள் இருந்தாள்.

அப்பொழுது திடிரென்று எங்கிருந்தோ ஒரு காலொடிந்த புறா தண்ணீரில் தத்தளித்துக் கொண்டு வந்தது. எப்படியாவது அது கரை ஏறி விட போராடிக் கொண்டிருந்தது. தண்ணிரில் அது அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தது. சில நேரம் கரைக்கு மிக அருகில் வந்து மீண்டும் விலகி சென்றது.

மதிவதனியால் அதை பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. எழுந்து நதியின் பக்கம் சென்றாள். கரையில் இருந்து கை நீட்டி அந்த புறாவை தூக்க முயற்சி செய்தாள், ஆனால் முடியவில்லை.

மதிவதனிக்கு எப்பொழுதும் தண்ணீரில் இறங்குவதென்றால் பயம். ஆற்றில் கால் எடுத்து வைத்தாலே அவளுக்கு ஏதேதோ உருவமறியா எண்ணங்கள் உருண்டோடும். அதற்கு பயந்தே அவள் நீச்சல் பழகவில்லை.மித்ராவும் அவள் மற்ற தோழியரும் கூட அவளை கிண்டல் பண்ணுவர்,’தாமிரபரணி கரையோரம் பிறந்துட்டு நீச்சல் தெரியாதுன்னு வெளிய சொல்லாதே. நம்ம ஊருக்கே அது அவமானம்’ என்று.

யார் என்ன சொன்னாலும் அவள் தண்ணிரில் இறங்க மறுத்து விட்டாள்.ஆனால் இப்பொழுது அதை எல்லாம் நினைத்து பார்க்க நேரமில்லை. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்று அவளுக்கு தோன்றியது. இன்னும் கொஞ்சம் கை நீட்டி அந்த புறாவை பிடிக்க முயன்றாள்.

புறா அவள் கைக்கு எட்டி விடும் நேரத்தில் அது நீரின் வேகத்தில் தள்ளி செல்லவே, அதை பிடிக்கும் முயற்சியில் மதிவதனி தலை குப்புற நீரில் விழுந்தாள். அவள் விழுந்த இடத்தில் நீரின் சுழிவு அதிகமாக இருந்ததால் அவளால் தாக்கு புடிக்க முடியவில்லை. நீரின் வெளியே தலையை நீட்டி காற்றை சுவாசிக்க முயற்சி செய்தாள், ஆனால் யாரோ அவளை பிடித்து அமுக்குவது போல அவளால் மேல வரவே முடியவில்லை. ஏதோ பாறையில் முட்டி மோதி புரண்டு அவள் சென்று கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.பல முயற்சிகளுக்கு பின் அவள் ஓய்ந்து போனாள்.

தான் சாக தான் போகிறோம் என்று நினைத்தாள். அவள் அப்பா அம்மாவின் நினைவு அவளுக்கு வந்தது. இப்பொழுது அவர்கள் இருந்திருந்தால் தன்னை காப்பாற்றி இருப்பார்கள் அல்லவா? அதனால் என்ன? இப்பொழுது அவளும் சென்று அவர்களுடன் சேர போகிறாள். இனி கவலை இல்லை. ஆனால் இந்த அத்தை நம்மை தேட மாட்டார்களா? ஹம்...அது சரி, அவர்கள் ஏன் நம்மை தேட போகிறார்கள்? நல்லதாய் போயிற்று என்று நினைப்பார்கள். இவ்வளவும் அவள் மனதில் தோன்றி மறைந்தன. ஏதேதோ உருவங்கள் தோன்றின. கடைசி முயற்சியாக ஒரு முறை உதவிக்கு அழைக்கலாம் என்று மீதமிருந்த சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அலறல் சத்தத்தை வெளியிட்டாள். கடைசியாக அவள் நினைவிழக்கும் முன்பு யாரோ அவளை நோக்கி ஓடி வருவது தெரிந்தது. தன் பிரமை என்று அவள் நினைத்தாள். அதன் பின் இருள் சூழ்ந்தது.......

புலரும்

 
Top