Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 15

Advertisement

Sakthi bala

Active member
Member
ரிதுநந்தன் ஒளிந்து, ஒளிந்து ஒரு மரத்தின் பின்னால் சென்றான். அங்கு அவன் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. யாரென்று மறைவாக நின்று எட்டிப் பார்த்தாள் மதிவதனி. அங்கு, நேற்று கோவிலில் பார்த்த அந்த பெண்ணுடன் நின்று ரிதுநந்தன் பேசிக் கொண்டிருந்தான். அந்த பெண்ணின் தந்தை கோபமாகச் சென்றதும், சூரியநாராயனன் இதை பற்றி தாத்தாவிடம் சொல்லக் கூடாது என்று கூறியதும் அவள் நினைவுக்கு வந்தது.

அந்த பெண் ரிதுநந்தனிடம் ஏதோ கூறி அழுதுக் கொண்டிருந்தாள். அவர்கள் பேசுவது அவளுக்கு காதில் விழவில்லை. இரு குடும்பத்திற்கும் நடுவில் என்ன பிரச்சனை என்பதும் புரியவில்லை
ஆனால் இவர்கள் இருவரையும் தன் குடும்பத்திலோ, அந்த பெண்ணின் குடும்பத்திலோ யாராவது பார்த்தால் பெரிய பிரச்சனை வரும் என்பது மட்டும் புரிந்தது.

“இங்க என்ன பண்ணிட்டிருக்க மது?”

தன் காதருகே கேட்ட மனோரஞ்சனின் குரலில் அவளுக்குத் தூக்கிவாரி போட்டது.’அய்யயோ! இப்போ இவர் அவங்க ரெண்டு பேரையும் பார்த்துட்டா ஏதாவது பிரச்சனை வருமோ? இப்போ என்ன பண்றது?’

“ஏய்! என்னாச்சு?! என்ன பிரச்சனை?’ கேட்டுக் கொண்டே அந்த மரத்தின் பக்கத்தில் வந்தவன் அதன் மறுபக்கம் நின்று பேசிக் கொண்டிருந்த ரிதுநந்தனையும், அந்த பெண்ணையும் பார்த்து விட்டான். அதே சமயம் சத்தம் கேட்டு அவர்களும், மனோரஞ்சனையும், மதிவதனியையும் பார்த்து விட்டனர். ஒரு நிமிடம் யாரும் எதுவும் பேசவில்லை.

“அண்ணா...அது....அது வந்து....” ரிதுநந்தன் உளறிக் கொண்டிருந்தான்
மனோரஞ்சன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் அந்த பெண்ணை பார்த்து சிரித்துக் கொண்டே, “தாமரை! எப்படிமா இருக்க? நல்லா இருக்கியா?’

“மாமா! நான் நல்லா இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க?”

“ஹ்ம்ம்... நல்லா இருக்கேன் டா. அது சரி நீங்க ரெண்டு பேரும் ஏன் என்னை பார்த்து இப்படி பயப்படுறீங்க?”

“இல்ல மாமா. நீங்க திட்டுவீங்களோனு தான்.......”

“நான் ஏன் உன்னை திட்ட போறேன்? உன் மேல எனக்கு என்ன கோபம்? நீ எப்பவுமே என்னோட செல்ல அத்தை பொண்ணு தான். நான் மட்டுமில்ல நம்ம வீட்ல யாருமே உன்னை திட்ட போறதில்ல. வாயேன், போய் அப்பா அம்மாவை பார்த்துட்டு வரலாம்.”

“ஐயோ மாமா! எங்க அப்பாக்கு இது தெரிஞ்சா அவ்ளோ தான்”

“என்ன பண்ணுவாரு உங்க அப்பா? எங்கள வெட்டி போட்டுடுவாரா? அவர் பெரிய மீசை வச்சிருந்தா நாங்கெல்லாம் பயந்துடனுமா?!” மனோரஞ்சன் கிண்டலாக அவளிடம் கேட்டான்.

“ஐயோ! அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா. சும்மா அந்த மீசையை வச்சி சீன் போட்டுட்டு இருக்காரு. இந்த ரித்து தான் எங்க அப்பாவுக்கு ரொம்ப பயப்படுறான்.அவன் கிட்ட கொஞ்சம் சொல்லுங்க.”

“ஏய்! யாருக்கு பயம்? எனக்கா? உங்கப்பா இறா மீசை வச்சிருந்தாலும் சரி, ஹாக்கி பேட் மீசை வச்சிருந்தாலும் சரி எனக்கு ஒரு பயமும் இல்லை! இப்ப கூட உங்க அப்பாவ இங்க வரச் சொல்லு. நேருக்கு நேர் ஒரு கை பாத்துடலாம்.”

“கிழிச்சே போ. அவரு தூரத்துல வந்தாலே நீ ஓடி போய்டுவே” என்றாள் தாமரை கிண்டலாக.

“சரி...சரி..உங்க சன்டைய அப்புறம் வச்சிக்கோங்க. தாமரை.இது மதிவதனி என் பெட்டர் ஹாஃப்.” அவன் அறிமுகப்படுத்திய விதம் மதிவதனியை கவர்ந்திழுத்தது.

“ஹாய் அக்கா. நான் தாமரை. இவங்க ரெண்டு பேரோட அத்தை பொண்ணு. கண்டிப்பா இவங்க என்னை பத்தி உங்கக் கிட்ட சொல்லிருக்க மாட்டாங்க. அப்புறம் அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! நீங்களும் மாமாவும் சூப்பர் ஜோடி”

“மது. இவளும் நிலா மாதிரி தான். சரியான வாயாடி. வாயை திறந்தா மூட மாட்டா.”

“சரி மாமா. என்னை கிண்டல் பண்ணினது போதும். இப்போ நான் கிளம்புறேன். அப்பாக்கிட்ட பால்குடம் பார்க்க போறேன்னு பொய் சொல்லிட்டு வந்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல தேட ஆரம்பிச்சிடுவாரு. நான் வரேன்.”

“சரி மா. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். எதுக்கும் கவலைப்படாதே.”

“சரி மாமா. நான் வரேன் அக்கா.”அவர்களிடம் சொல்லிச் சென்ற தாமரை, ரிதுநந்தனிடம் ஒரு கண்ணசைவில் விடை பெற்றாள்.
அவள் செல்லவும் நிலா அந்த இடத்துக்கு வரவும் சரியாக இருந்தது.

“ஹேய்...எல்லாரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”

“தாமரை வந்திருந்தா. அவ கூட பேசிட்டு இருந்தோம்”

“என்னது தாமரை வந்திருந்தாளா? டேய் ரித்து என்னை ஏன்டா கூப்பிடல? நீ மட்டும் பேசுனா போதுமா? நான் பேச வேண்டாமா? இது சரிபட்டு வராது. நான் நேரா அவங்க வீட்டுக்கே போறேன்”

“ஏய் லூசு! மாமா உன்னை கொன்னு போட்டிருவாறு. நானே இதெல்லாம் தாத்தாவுக்கு தெரிஞ்ச என்ன ஆகுமோன்னு பயந்துட்டு இருக்கேன்!”

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா. தாத்தாக்கு மாமா மேல தான் கோபம். தாமரை என்ன தப்பு பண்ணினா? நீ வீணா எதையாவது நினைச்சு மனசை குழப்பிக்காத! சரி, வாங்க எல்லோரும் கோவிலுக்குள்ள போகலாம்” என்ரு மனோரஞ்சன் கிளம்பினான்.
மதிவதனி மட்டும் நிலாவை பிடித்து நிறுத்தி, “நிலா உங்க மாமா குடும்பத்துக்கும், உங்க குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை?”

“அதுவா? அது ஒரு பெரிய கதை” நிலா சொல்ல ஆரம்பித்தாள்......

“எங்க மாமாவும், அப்பாவும் சின்ன வயசிலிருந்து ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். மாமா எங்க அத்தையை காதலிச்சார். அது தெரிஞ்ச எங்க அப்பா, அவங்க காதலுக்கு ஓகே சொல்லி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சார்”

“நாங்க ரெண்டு குடும்பமும், அப்புறம் வினோ அண்ணா குடும்பமும், ஒன்னா தான் இருந்தோம். இப்போ நாம இருக்கிறோமே அந்த பெரிய வீட்ல”

“நான் அப்போ டென்த் படிச்சிட்டு இருந்தேன். மனோ அண்ணாவும்,வினோ அண்ணாவும் காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க. ரித்து, தாமரை ப்ளஸ் டூ படிச்சிட்டு இருந்தாங்க. நான், தாமரை, மனோ அண்ணா, ரித்து,வினோ அண்ணா எல்லாரும் எப்பவும் ஒன்னா தான் சுத்துவோம். ரொம்ப சந்தோஷமா இருந்தோம்”

“அப்பாவும், மாமாவும் இங்கே சின்ன அளவுல டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வினோ அண்ணாவோட அப்பா, நம்ம கடைல தான் வேலை பார்த்தாரு”

“அப்பாவுக்கும்,மாமாவுக்கும் சின்ன வயசிலிருந்தே டிசைனிங் மேல ரொம்ப ஆர்வம். அப்போ சென்னைல வருஷா வருஷம் நடக்கும் ‘இந்தியா ஸ்கில்ஸ்’ போட்டி ஆரம்பிச்சிச்சு. அதுல கலந்துக்கணும்ங்கிறது அப்பாவுக்கும், மாமாவுக்கும் ரொம்ப வருஷ கனவு. அந்த வருஷம் ரெண்டு பேரும் அதுல கலந்துக்கிட்டாங்க. ரெண்டு பேரும் தனி தனியா டிசைன் பண்ணினாங்க”

“போட்டி நடக்குற அன்னிக்கு உண்மையிலேயே என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கெல்லாம் தெரியாது. ஆனால் போட்டியில மாமா பண்ணின டிசைனை வேறு ஒருத்தர் ப்ரசென்ட் பண்ணி அவருக்கே முதல் பரிசும் கிடைத்தது. அந்த டிசைனை அவரிடம் விற்றது அப்பா தான், என்று மாமா அப்பாவிடம் சண்டை போட்டாரு”

“தனக்கு துரோகம் பண்ணிட்டதா சொல்லி அப்பாவிடம் பேச மாட்டேனு சொல்லிட்டாரு. நாங்க எல்லோரும் மாமாவ சமாதானம் படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணினோம். ஆனால் என்ன சொன்னாலும் மாமா கேக்கவே இல்லை. சும்மாவே அவருக்கு ரொம்ப கோபம் வரும். அதுக்கப்புறம் அவர் அப்பாவோட பேசவே இல்லை.எல்லோரும் அப்பாகிட்ட உண்மையிலேயே என்ன நடந்துச்சுன்னு கேட்டதுக்கு, அவர் எதுவும் சொல்ல மறுத்துட்டார். என் உயிர் நண்பன் என்னை நம்பலை. இனிமேல் என்ன பேசி என்ன பிரயோஜனம்னு? சொல்லிட்டாரு”

"எங்க அத்தை கூட மாமா பேச்சைக் கேட்டுக்கிட்டு தன் சொந்த அண்ணன் கிட்ட கூட பேசாமயே இருந்துட்டாங்க. ஒரு ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி தான், நாங்க காரைக்குடிலிருந்து சென்னை வந்து செட்டில் ஆனோம்.வினோ அண்ணாவோட அப்பாவுக்கு, அப்பா மேல ரொம்ப விஸ்வாசம். அதனால அவங்களும் எங்க கூடவே கிளம்பி வந்துட்டாங்க. அதுக்கப்புறம் இப்போ தான் இந்த ஊருக்கு வரோம்”

“அப்பா மேல உள்ள கோவத்தில வீடு தனக்கும், தன் மனைவிக்கும் தான் சொந்தம்னு கோர்ட்ல கேஸ் போட்டுட்டாரு, மாமா. இப்போ கூட கேஸ் நடந்துட்டு இருக்கு. அதனால தான் அந்த வீட்ல இப்போ யாரும் குடி இருக்கலை.” நிலா சோகத்துடன் முடித்தாள்.

மதிவதனிக்கு இதில் ஏதோ ஒன்று இடிப்பதாகத் தோன்றியது. எப்படி ஒருவரால் தன் சொந்த அண்ணனிடம் கோபப்பட்டு இத்தனை வருடம் எதுவுமே பேசாமல் இருக்க முடியும்? அதிலும் நிச்சயமாக அவள் மாமா சூரியனாராயனன் தப்பு செய்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்பினாள் அவள். இதை பற்றி ஒரு தடவை மாமாவிடம் பேச வேண்டுமென்று மனதில் குறித்துக் கொண்டாள்.

அன்று இரவு திருவிழாவின் நிறைவாய் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தது. எல்லோரும் மகிழ்ச்சியுடன் அனைத்தையும் கண்டு களித்தனர். ரித்துநந்தன் மட்டும் மௌனமாகவே இருந்தான். மறுநாள் அவர்கள் சென்னைக்குக் கிளம்பி விட்டனர். மதிவதனி, மனோரஞ்சன் கூறிய அந்த சர்ப்ரைஸ் பற்றி மறந்தே விட்டாள்.

வீட்டிற்குச் சென்றதும், மனோரஞ்சன் தங்கள் அறையில் அவளுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாகக் கூறி, சென்று பார்க்க சொன்னான். அங்கே சென்று பார்த்த மதிவதனி ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டாள். அங்கே தன் அத்தை காமாட்சி நின்றுக் கொண்டிருந்தார்.

அவள் வருவதை பார்த்த அவள் அத்தை,’வாடி வா! இங்க பாரு உன் ரூம் எப்படி இருக்குது?! குப்பையா போட்டு வச்சிருக்கிற. கொஞ்சமாவாது உனக்கு பொறுப்பு இருக்கா? என்ன பொண்ணோ நீ?அப்படியே உங்க அம்மா மாதிரி!...உன்னை என்னதான்....” அவள்
அத்தை பேசிக் கொண்டே செல்ல மதிவதனி ‘அத்தை’ என்று கூறிக்கொண்டே ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள். அவள் அத்தை எதுவும் சொல்லாமல் அவள் முதுகை தடவி குடுத்தார். சில நிமிடங்களுக்கு பின் அவள் அழுகை அடங்கியவுடன், தன் அத்தையை நிமிர்ந்து பார்த்தாள். அவர் கண்களும் கலங்கி இருந்தது. மதிவதனிக்கு தெரியாமல் கண்ணை துடைத்து கொண்டார்.

“ஏய்! இப்போ எதுக்குடி சின்ன புள்ளை மாதிரி அழுதிட்டு இருக்க? ஒரு கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா நடந்துக்கிற? ஸ்கூல் போற பிள்ளை மாதிரி. ச்சே! போடி”

மதிவதனி அதை கேட்டு கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள். இப்பொழுது தான், அத்தைக்கு தன் மேல் இருக்கும் பாசம் அவளுக்கு முழுவதும் புரிந்தது.வார்த்தையால் வெளிப்படுத்தினால் மட்டுமே ஒருவரிடம் அன்பு இருப்பதாக அர்த்தம் இல்லை, அவர்களின் சின்னஞ்சிறு செய்கை கூட அன்பை வெளிப்படுத்தும் என்பதை மதிவதனி உணர்ந்து கொண்டாள். இனிமேல் அவர், அவளை என்ன திட்டினாலும் அதற்காக அவள் கவலைப்பட போவதில்லை.

“ஏய்! என்னடி லூசு மாதிரி சிரிக்கிற?!”

“என் செல்ல அத்தை...ஐ லவ் யு அத்தை” என்று கலகலவென்று நகைத்துவிட்டு அவர் கன்னங்களை கிள்ளிவிட்டு ஓடி விட்டாள். அவள் சென்றதும் காமாட்சி அவளை பற்றி யோசித்து தனக்கு தானே சிரித்துக் கொண்டார். வாழ்க்கை மிக குறுகியது, அதற்குள் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளியிட்டு கொள்வதில் தான் சந்தோஷமே என்பது அவர்களுக்கு புரிந்தது....

மனோரஞ்சனை உடனே பார்க்க வேண்டுமென்று பேராவல் அவள் மனதில் தோன்றி நாடி நரம்பெல்லாம் ஊடுருவியது.அவனை பற்றி யோசித்துக் கொண்டே தோட்டத்தில் நின்று கொண்டிருந்தாள்.அப்பொழுது......

புலரும்
 
Eelayavar kalin kuthukalam,pirinthavarkalin santhipu,uravugalin ethirparpu,pasathin veli kathal,ellam,ellamae super.Arumaiyana kalavai.thuliyum bore adikalai.valthukkal sakthi.
 
Top