Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது 14

Advertisement

Sakthi bala

Active member
Member
மறுபடியும் அவள் கண் விழித்தபோது கட்டிலில் படுத்திருந்தாள். மனோரஞ்சன் அவள் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ரஞ்சன்....” அவனை பார்த்தவுடன் அவள் அழ ஆரம்பித்தாள்.

“என்னடா? சின்ன புள்ளை மாதிரி அழுவுற?எதை பத்தியும் யோசிக்காம படுத்து தூங்கு.”

“அவள்...அந்த...அந்த சின்ன பொண்ணு....”

“மது. இது விதி. இதை மாத்த நம்மளால முடியாது. அந்த பொண்ணோட சொந்தக்காரங்க அட்ரஸ் கண்டுபுடிச்சி அந்த பொண்ணை அவங்க கிட்ட ஒப்படைச்சாச்சு. இப்ப அந்த பொண்ணு நார்மல் ஆயிட்டா.நீ எதை பத்தியும் கவலைப்படாத. கொஞ்ச நேரம் தூங்க ட்ரை பண்ணு” மெல்லிய குரலில் அவளை தேற்றினான்.

மதிவதனியால் பல மணி நேரம் தூங்க முடியவில்லை. ஏதேதோ கெட்ட, கெட்ட கனவுகள் வந்தது. தூக்கத்திலேயே உளறிக் கொண்டிருந்தாள். திடீர் திடீரென்று அவள் உடம்பு தூக்கித் தூக்கி போட்டது. மனோரஞ்சனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
அவள் வேதனையை அவனால் பார்க்க முடியவில்லை. அவள் பக்கத்தில் அமர்ந்து, அவள் வேதனையை தான் வாங்கிக் கொள்வது போல அவளை இறுக அணைத்துக் கொண்டான். மெல்ல அவள் உளறலை நிறுத்தி அமைதியாக தூங்க ஆரம்பித்தாள்.

மறுநாள் காலையில் அவளுக்கு விழிப்பு தட்டியதும், மனோரஞ்சனின் அணைப்பில் தான் தூங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து வெட்கினாள். அவள் அசைவை உணர்ந்த மனோரஞ்சன்,”இப்போ எப்படி இருக்குமா?” என்று கேட்டான். அவள் ஒன்றும் சொல்லாமல் ஒரு தலையசைப்புடன் எழுந்து குளிக்கச் சென்றாள்.

குளித்துவிட்டு வந்த மதிவதனி தோட்டத்தில் அமர்ந்து நேற்று நடந்த நிகழ்வுகளை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.மனோரஞ்சன் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான்.

“மது.நாம ரெண்டு பேரும் ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஸா இருக்கணும்னு முடிவெடுத்தோமே ஞாபகம் இருக்கா?”

“ஆமா”

“என்னை நீ ஒரு நல்ல ஃப்ரெண்டா நினைச்சா, உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு?”
மதிவதனி சில நிமிடம் தயங்கினாள். பின்பு சொல்ல ஆரம்பித்தாள்.

“எனக்கு சரியா நினைவு இல்லை. எனக்கு அப்போ, நேத்து நாம பார்த்த பொண்ணோட வயசு தான் இருக்கும். என் வீட்டுக்கு பக்கத்துல உள்ளவங்க சொல்லி தான் எனக்கே எல்லா விஷயமும் தெரியும். எங்க அத்தை எதையும் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“அன்னைக்கு ஒரு நாள் நான், எங்க அப்பா, அம்மா மூணு பேரும் மாஞ்சோலை எஸ்டேட்டில் சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு பஸ்சில் திரும்பி வந்திட்டிருந்தோம்னு சொன்னாங்க. அப்போ ஒரு பாலத்துக்கு மேலே போயிட்டு இருந்தப்போ பஸ் நிலைத்தடுமாறி தாமிரபரணி ஆற்றுக்குள் விழுந்துடுச்சி. அப்போ மழை காலம் வேற, அதனால ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்துச்சாம்”

“தண்ணி என்னை எங்கோ இழுத்துட்டு போனதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஏதோ நிழல் மாதிரி ஞாபகம் இருக்கு. அப்போ யாரோ என்னை இழுத்துட்டு போற மாதிரி ஞாபகமும் இருக்குது. திரும்ப நான் கண் விழிச்சு பார்த்தப்போ என் அப்பாவும், அம்மாவும் இல்லை.
மதிவதனி கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள். மனதை அடக்கிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“அதனால் தான், எனக்கு தண்ணீரை பார்த்தாலே ரொம்ப பயமா இருக்கு! தண்ணீரில் இறங்கினாலே என் அப்பா அம்மாவின் நினைவு தான் வரும். நேத்து அந்த பெண்ணை பார்த்ததும் அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்தது. அதனால் தான் மயங்கி விழுந்துட்டேன் போல”

மனோரஞ்சன் அமைதியாக இருந்தான்.”ஹ்ம்ம்...மது உனக்கு ஒன்னு தெரியுமா? எனக்கு இது முன்னயே தெரியும்.”

மதிவதனி அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“ஆமா டா. இன்னொரு விசயமும் எனக்குத் தெரியும். ஆனால் அது உனக்கு தெரியாது.”.......

மதிவதனி அவனை குழப்பத்துடன் ஏறிட்டு பார்த்தாள்.

“ஆமா. நமக்கு கல்யாணம் நடந்த அன்னிக்கு உங்க அத்தை என் கிட்ட வந்து பேசுனாங்க”

மனோரஞ்சன் அவர் பேசியதை நினைவு கூர்ந்தான்.

“தம்பி. நீங்க யாரு, என்னனே எனக்குத் தெரியாது. இப்ப வரைக்கும் உங்க பேர் கூட தெரியாது. ஆனால் என் மருமகளை நீங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனும். அவள் இங்கேயே இருந்தா அவள் வாழ்க்கையே கெட்டு போய்டும். யாரும் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. நீங்க என் மருமகளை நல்லா பார்த்துப்பீங்கனு நம்பிக்கையிலே நான் அவளை உங்களுக்கு கட்டிக் குடுக்குறேன். தயவு செஞ்சு அவளை நல்லபடியா பாத்துகோங்க.” அவர் அவனிடம் கைகூப்பிக் கேட்டுக் கொண்டார். அவர் கண்கள் கலங்கி போய் இருந்தது.

மனோரஞ்சன் பதறி போனான். “ஐயோ என்னமா! என்னை போய் கும்பிட்டுகிட்டு?! நான் உங்க மருமகளை நல்லா பார்த்துப்பேன். வாழ்க்கை முழுசும் அவளோட நான் துணை நிற்பேன்.எந்த காரணத்துக்காகவும், நான் அவளை விட்டு விலக மாட்டேன் மா. இது எங்க அம்மா மேல ஆணையா நான் சொல்றேன். நீங்க பயப்படாம இருங்க”

“எனக்கு இது போதும் பா. ரொம்ப சந்தோஷம்.”

“நீங்களும் எங்க கூட வந்துடுங்க மா. இங்க தனியா இருந்து என்ன செய்ய போறீங்க?”

“இல்ல பா. இது தான் என் சொந்த ஊரு. இதை விட்டுட்டு என்னால வர முடியாது. ஆ....அப்புறம் மதி பத்தி முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்”

“சொல்லுங்க.”

“மதிவதனிக்கு ஆறு வயசு இருக்கும்போது, அவளோட அப்பாவும் அம்மாவும் இறந்து போய்ட்டாங்க. அதுவும் ஒரு பஸ் ஆக்சிடண்ட்ல. ஒரு நாள் அவங்க மாஞ்சோலை எஸ்டேட் போயிட்டு வந்திட்டிருந்தாங்க. அப்போ....அப்போ அவங்க வந்த பஸ் ஆத்துக்குள்ள விழுந்துடுச்சு. நிறைய பேர் ஆத்துல்ல குதிச்சி தண்ணியிலே மூழ்கினவங்கள காப்பாத்த போனாங்க.”

அவர் நெஞ்சில் இருந்த வலி, அவர் வார்த்தைகளில் பிரதிபலித்தது, கஷ்டப்பட்டு அவர் தொடர்ந்தார்“அதுல.....அதுல....என் கணவரும் ஒருத்தர். ஆனால் அவருக்கு தன்னோட சொந்த தங்கச்சியும், அவள் குடும்பமும் அந்த பஸ்சில் இருந்தது தெரியாது. அப்போ அந்த பக்கமா போனவரு, நடந்த ஆக்சிடண்ட் பார்த்துட்டு காப்பாத்த போனாரு”

“தண்ணியிலே ஒரு சின்ன பொண்ணு, மூழ்க போறத கவனிச்சு, அந்த பொண்ணைக் காப்பத்திக் கரை சேர்த்தார். கரைக்கு வந்த பின் தான் அது தன் சொந்த மருமகள்னு அவருக்கு தெரிஞ்சிச்சு. அப்புறம் அவரோட தங்கச்சியையும், அவள் கணவரையும் தேடிப் பார்த்தார். ஆனால் அவங்க ரெண்டு பேரும் கிடைக்கல. ஆத்துல்ல வேற தண்ணி கூடிக்கிட்டே போச்சு. எல்லாரும் தேடுனது போதும் வந்துருங்கன்னு சொன்னாங்க”

“ஆனால்.....அவரு....” அவரால் அதற்கு மேல் தொடரவே முடியவில்லை.

“கஷ்டமா இருந்தா அப்புறமா சொல்லுங்க மா”

“இல்லப்பா, இப்பவே எல்லாத்தையும் சொல்லிடுறேன்”

“அவர் தங்கச்சிய எப்படியாவது கண்டுபுடிச்சுடனும்னு ஒரு வைராக்கியத்தோட தேடிட்டே இருந்தார். அதுக்குள்ள வெள்ளம் அவரையும் இழுத்துட்டு போய்டுச்சு....அங்கேயே....அங்கேயே.....அவர்....” அவர் வாயை பொத்திக் கொண்டு அழுதார்.

மனோரஞ்சன் அவரை எப்படி சமாதானம் செய்வது என்றே தெரியாமல் நின்றான்.

சிறிது நேரத்தில் தன்னை சமன்படுத்திக்கொண்டு அவர் பேச்சை தொடர்ந்தார்.

“எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தப்போ எனக்குன்னு யாருமே இல்ல. நானும் மதியும் மட்டும் தனந்தனியா நின்னோம். என்ன செய்யுறதுனே புரியல. உண்மைய சொல்லனும்னா எனக்கும், மதிவதனியோட அம்மாவுக்கும் நல்ல உறவு கிடையாது. எனக்கு அவளை பிடிக்காது. என் கணவருக்கு அவர் தங்கைனா ரொம்ப புடிக்கும். அது எனக்கு பல நேரம் பொறாமையா இருக்கும். அதனாலேயே எனக்கு அவளை பிடிக்காம போய்டுச்சு”

“அதே கோபத்த தான், நான் மதி கிட்டயும் காட்டினேன். ஆனால் இந்த உலகத்தில அவளை விட்டா எனக்கு வேற உறவே இல்லைனும், எனக்கு புரிஞ்சுது. என் கணவரும் இவளை காப்பாத போய் தான், உயிரையே விட்டாரு. அதனால் இவளை நல்லபடியா வளக்கணும்னு முடிவு பண்ணினேன்.அவ கிட்ட நான் பாசமா நடந்துக்கிட்டதே கிடையாது தான்”

“ஆனால் எவ்ளோ கஷ்ட்டப்பட்டுனாலும் அவளுக்கு தேவையானதை செஞ்சேன். பல இடங்களில் வேலை பார்த்து, அவளைக் காப்பாத்தினேன். பல நாள் நான் பட்னி கிடந்து, அவளுக்குச் சோறு போட்டிருக்கேன். எப்படியாவது அவளை நல்ல படிக்க வைக்கணும்னு போராடினேன். அப்புறம் எப்படியோ ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்தாச்சு.ஆனால் இது எதுவும் மதிக்கு தெரியாம பாத்துக்கிட்டேன். அவகிட்ட பாசமா பேச என் மனசு ஒத்துக்காது.அதனாலேயே அவளுக்கு என்னை பிடிக்காது.”

காமாட்சி ஒரு பெருமூச்சுடன் முடித்தார்.

“இதெல்லாம் நான் ஏன் உங்க கிட்ட சொல்றேனா, அவ வாழ்க்கைல சந்தோஷமா இருந்தது ரொம்ப கம்மி. பாசம்னா என்னனு தெரியாம வளர்ந்துட்டா. ஆனால் இனிமேலாவது அவள் நல்லா இருக்கனும். அது உங்க கையில தான் இருக்கு.”

மனோரஞ்சன் இது எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். மதிவதனி வாயடைத்து போய் உட்கார்ந்திருந்தாள். அவள் மனதில் சோகம்,பரிதாபம்,குற்றவுணர்ச்சி,சந்தோஷம் இப்படி பலபல எண்ணங்கள் முட்டி மோதின.

“இது எதுவுமே தெரியாமல் உன் வாழ்நாள் முழுவதும் நீ உன் அத்தையை பத்தி தப்பாவே புரிஞ்சிட்டு இருந்திருக்க! இறந்து போன உன் அப்பா, அம்மா மேல நீ வச்சிருந்த பாசம் உன் கண்ணை மறச்சு, உன் அத்தையோட அன்பை புரிஞ்சிக்க விடாம பண்ணிடிச்சு. இப்பவும் நீ இதை தான் பண்ணிட்டு இருக்கே. உன் கண்ணை இறுக மூடிக்கிட்டு உன் மேல யாரும் பாசம் வைக்கலைன்னு நினைச்சுக்கிற. ஆனால் அது உண்மை கிடையாது.கண்ணை திறந்து பாரு மதி....”

மதிவதனி எதுவும் பேசாமல் அமைதியாக அவனை பார்த்தாள். இப்பொழுதும் அவன், ஏதோ ஒரு செய்தியை சொல்வது போல அவளுக்குத் தோன்றியது.அது புரிந்தும் புரியாதது போல அமர்ந்திருந்தாள்.அவள் மனதில் இருந்த பல்வேறு குழப்பங்கள் அவளுக்கு அதை புரியவிடாமல் செய்தன.

அவள் மனதில் ஒரு பெரும் புயல் வீசிக் கொண்டிருந்தது. இப்பொழுதே தன் அத்தையை பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் போல அவளுக்கு தோன்றியது.

“மது. இதை பத்தி ரொம்ப யோசிக்காத. இது எதையும் உன் கிட்ட இப்போ சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். ஏதோ ஒரு வேகத்துல சொல்லிட்டேன்.மது நாளைக்கு திருவிழா.இது எல்லாத்தையும் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு. ப்ளீஸ்” அவள் கையை பிடித்துக் கொண்டு கெஞ்சினான். மெதுவாக தலையை ஆட்டினாள் அவள்.

“ஹ்ம்ம்...அப்புறம் இன்னொரு விஷயம்.நாம சென்னைக்கு போனதும் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”

அவள் இருந்த மனநிலையில் அது என்ன சர்ப்ரைஸ் என்று கூட கேட்க தோன்றாமல் வெறுமனே தலையை ஆட்டினாள்.

மறுநாள் திருவிழாவின் கடைசி நாள். ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது. காரைக்குடி முத்துமாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெறும் திருவிழாவில் பலர் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற காப்புக் கட்டி விரதம் இருப்பர். திருவிழாவில் பால் குடம் எடுப்பது, காவடி எடுப்பது, வேல் குத்துவது போன்ற பல விதங்களில் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். பறவைக் காவடி அங்கு மிகவும் பிரசித்தம்.

மதிவதனி நேற்று நடந்த நிகழ்வுகளை சற்று மறந்து, திருவிழாவின் கோலாகலத்தில் மூழ்கினாள். ஆயிரக்கனக்கானோர் பால் குடம் எடுப்பதையும், பறவைக் காவடி எடுப்பதையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே சென்றாள் மதிவதனி. மனோரஞ்சனும் மற்றவர்களும் அவளுக்கு சற்று தள்ளி நின்றுக் கொண்டிருந்தனர்.

அப்படியே வேடிக்கைப் பார்த்து கொண்டே சென்றவள், தூரத்தில் ரிதுநந்தன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே, ஏதோ திருட்டுத்தனம் செய்பவன் போல ஒளிந்து, ஒளிந்து எங்கோ சென்றுக் கொண்டிருப்பதை பார்த்தாள். ‘இவன் இப்படி மறைந்து, மறைந்து எங்கே போறான்?’ என்று யோசித்தபடியே அவனை பின்தொடர்ந்தாள்.......

புலரும்
 
Konjam kanamana pathivu than aanalum thiramaiya kaiyandu irrukinga.muthal kathiya irrunthalum,korvaiya, thoyvu illama arumaiya solluringa. Ella penn kalum ethir parkum kanavanin kanivana kavanipu kurichi sirapa solli poramai poda vachutingo.nice epi.
 
அந்த கோயில்ல பார்த்த பொண்ணு பின்னாடி போறாரோ ரித்து
 
Top