Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழுது - 12

Advertisement

Sakthi bala

Active member
Member
ஒரு நாள் மனோரஞ்சனும், மதிவதனியும் வேலை முடித்து வீட்டுக்குச் சென்ற போது சூரியநாராயனன் அவர்களை அழைத்தார்.

“மனோ, அடுத்த வாரம் நம்ம ஊர்ல திருவிழா வருதுப்பா. திருவிழாவுக்கு போய் ரொம்ப வருஷம் ஆகுது. இந்த வருஷம் போயிட்டு வந்துடலாம்”

“என்னப்பா விளையாடுறீங்களா?! எனக்கு இங்க எவ்ளோ வேலை இருக்கு! நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க”

“டேய்! ஊர் திருவிழாவுக்கு போய் எவ்ளோ நாள் ஆகுது. கண்டிப்பா போறோம். கம்பெனில ஏதாவது ஏற்பாடு பண்ணலாம். அசோக் பாத்துபாரு.மதி நீ என்னமா சொல்ற?”

“நம்ம ஊர் எது மாமா?”

“காரைக்குடில ஒரு கிராமம் மா. கானாடுகாத்தான்.ரொம்ப அழகான ஊரு.”

மதிவதனிக்கு அந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்ற பெரும் ஆவல் எழுந்தது. மனோரஞ்சனை பார்த்து ஒத்துக்கொள்ளும்படி கண் காட்டினாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த மனோரஞ்சன் சரியென்று ஒத்துக்கொண்டான்.

“சரி பா. யாரெல்லாம் போறோம்?”

“நாம எல்லாரும் தான் பா. அப்புறம் சகுந்தலா அத்தை, விஸ்வா, நித்யா வராங்க. ஆங்...அப்புறம் வினோதன் கூட வரதா சொன்னான்.”

“என்னது வினோதனா?! அவனை ஏன் பா கூப்புட்டீங்க?”

“டேய்! என்னடா பேசுற நீ? எப்படிடா அவனை கூப்பிடாம இருக்க முடியும்?”

“அப்பா இது நம்ம ஊர் திருவிழா,நம்ம வீட்டு ஃப்ங்சன். இதுல அவனை எதுக்கு கூப்புடுறீங்க?”

அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். மனோரஞ்சனும் வினோதனும் சிறு வயதிலிருந்து இணை பிரியாத நண்பர்கள். ஒருவரை ஒருவர் விட்டு குடுத்துக் கூட பேச மாட்டார்கள்.

“டேய்!நீங்க ரெண்டு பேரும் நட்புக்கு எடுத்துக்காட்டான துரியோதணனும்,கர்ணனும் போல டா” என்று தாத்தா நாராயணன் இவர்கள் சின்னவயசில் அடிக்கடி கூறுவார்.நான் தான் கர்ணன்,நீ துரியோதனன் என்று இருவரும் அடித்துக் கொள்வர்.’சரி, இன்னைக்கு நீ கர்ணனா இரு, நாளைக்கு நான் ஓகே வா’ என்று ஒரு சமரசத்துக்கு வருவர்.

சின்ன வயதில் ஸ்கூலில் ஆசிரியர் மனோரஞ்சனை எதற்கோ அடித்ததற்கு வினோதன் அந்த ஆசிரியரை அடிக்க போய்விட்டான்.
மனோரஞ்சன் மிகவும் நன்றாக படிக்கும் மாணவன் என்பதால் அவனை மன்னித்து விட்டுவிட்டு வினோதனுக்கு டி.சி வழங்கியது ஸ்கூல் நிர்வாகம். ஆனால் வினோதன் படிக்காத ஸ்கூலில் தானும் படிக்க மாட்டேனென்று மனோரஞ்சன் கூறிவிட்டான்.

மனோரஞ்சனுக்காகவே தனக்கு பிடித்த மெக்கானிக்கல் குரூப் எடுக்காமல், தன் நண்பனுக்கு பிடித்த கம்ப்யூட்டர் குரூப் எடுத்து படித்தான் வினோதன். இப்படி பட்டவர்களுக்கு இன்று என்ன ஆயிற்று என்று சூரியநாராயனனுக்கு புரியவில்லை.

“மனோ! என்ன ஆச்சு டா உனக்கு?! என்ன பேசுற நீ? உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன பிரச்னை?”

“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல பா” மனோரஞ்சன் எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.

“என்ன பிரச்சனையா இருந்தாலும் அதை பேசி தீர்த்துக்கோங்க. அவனும் கண்டிப்பா நம்ம கூட வரான். அவ்ளோ தான். கிளம்புறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிடு” கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

ஒரு வாரம் கழித்து அவர்கள் எல்லோரும் காரைக்குடிக்கு செல்ல ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் ஏறினர். சிவகங்கை சென்று அடைந்ததும், அங்கிருந்து கானாடுகாத்தான் செல்ல ஒரு மாட்டுவண்டி அங்கு வந்திருப்பதைக் கண்ட மதிவதனிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

“நாம இதுலயா போக போறோம்?!” அவள் ஒரு சந்தேகத்துடனே கேட்டாள்.

“ஆமா. இதுல தான் போறோம். முன்னெல்லாம் இதுல மட்டும் தான் போவாங்க.இப்போ எல்லாம் மாறிடிச்சு.மாட்டு வண்டியெல்லாம் யாரும் யூஸ் பண்றது இல்லை.சரி, இதுல போனா வித்தியாசமான அனுபவமா இருக்குமேன்னு நான் தான் அனுப்ப சொன்னேன்.ஏன்? மேடம் கார்ல தான் போவீங்களோ?”

“ச்சே!ச்சே! மாட்டு வண்டி ஒன்னும் எனக்கு புதுசு இல்லை. நான் அம்பாசமுதிரத்துல இருக்கிறப்போ நிறைய தடவை போயிருக்கேன். ஆனால் திடீர்னு இங்க பார்த்ததும் சர்ப்பரைஸா இருக்கு. எனக்கு மாட்டு வண்டி மேல ரொம்ப லவ்.”

“ஓ...மாட்டுவண்டி மேல மட்டும் தானா?” மனோரஞ்சன் முணுமுணுத்தான்.

“ஆங்...என்ன?!என்ன? இப்போ என்ன சொன்னீங்க”

“ஹ்ம்ம்...சுரைக்காய்க்கு உப்பில்லேனு சொன்னேன். வா போகலாம்”இவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டே பேசுவதை நித்யா பார்த்துக்கொண்டே நின்றாள்.

எல்லோரும் அங்கு இருந்த மூன்று மாட்டு வண்டியில் ஏறினர்.

“ஹேய் நான் தான் இங்கே, நான் தான் இங்கே. எனக்கு காலை தொங்க போட்டுட்டு வர தான் ரொம்ப பிடிக்கும்.” என்று நிலா ஓடிச் சென்று மனோரஞ்சன், மதிவதனி பக்கத்தில் அமர்ந்தாள்.இடம் குறைவாக இருந்ததால் மனோரஞ்சனும், மதிவதனியும் இடித்துக் கொண்டு அமர்வது போல இருந்தது.

வேண்டுமென்றே நிலா மேலும் மதிவதனியை இடித்ததால் அவள் மனோரஞ்சனை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள்.நிலா தன் திட்டம் பலித்துவிட்டதை நினைத்து சிரித்துக்கொண்டே ரிதுநந்தனை பார்த்து ‘எப்புடி’ என்று கண்ணடித்தாள்.’ஹய்யோ! இதெல்லாம் சரியான விளைஞ்சது.எப்புடி பிளான் பண்ணுது பாரு!’என்று வினோதன் ரிதுநந்தனிடம் சொல்ல,”ஆமாண்ணா எங்க வீட்ல இது மட்டும் தப்பி பிறந்துடுச்சு.நாங்கல்லாம் எவ்ளோ அமைதி! இது மட்டும் சரியான வாலு”

மதிவதனிக்கு, மனோரஞ்சன் பக்கத்தில் அமர்வது கரண்ட் ஷாக் அடிப்பது போலவே இருந்தது. அந்த பயணம் ஒரு இன்ப அவஸ்த்தையாக அவளுக்கு இருந்தது.

மனோரஞ்சன் முகத்தில் இருந்து அவன் என்ன நினைக்கிறான் என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவனும் சந்தோஷமாக இருப்பது போல தான் தெரிந்தது. அவன் உதடுகள் ஏதோ ஒரு பாட்டை முனுமுனுத்துக்கொண்டே இருந்தன.

சுற்றிலும் பச்சை பசேல் என்ற வயல்வெளி. அதை சுற்றி ஓடிய சின்னஜ் சிறு கால்வாய்கள், அந்த கால்வாயில் சுளித்து ஓடிய நீர், பாட்டு பாடிக் கொண்டே வேலை பார்க்கும் உழவர்கள், சுற்றித் திரியும் குயில்கள்,ஆங்காங்கே தென்படும் ஏதோ ஒரு சிறிய கோயில், அந்த கோயிலை சுற்றி விளையாடும் சிறுவர்கள் இவை அனைத்தும் மதிவதனிக்கு அழகாக தெரிந்தன. அதுவும் தன் மனம் கவர்ந்தவன் பக்கத்தில் அமர்ந்து பார்க்கின்றபோது அது சொர்க்கலோகமாக அவளுக்குக் காட்சி அளித்தது.

சிறிது நேரத்தில் அவர்கள் வீடு வந்தது. இறங்கி அந்த வீட்டை பார்த்த மதிவதனி இமைக்க மறந்து நின்றாள்.

அது வீடே அல்ல ஒரு பெரிய மாளிகை, அப்படித்தான் தோற்றமளித்தது மதிவதனிக்கு. அந்த வீட்டின் முன்னால் ஒரு மிகப்பெரிய தோட்டம் இருந்தது. தோட்டத்தில் இல்லாத செடிகளே இல்லை எனலாம்.அந்த தோட்டத்தின் நடுவே கிருஷ்ணர் ராதை சிலை இருந்தது.

ராதை தன் கையில் ஒரு குடம் வைத்திருக்க அதிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தது. வீட்டின் முன்னால் ஒரு சிறிய பிள்ளையார் சிலை இருந்தது. வெளியிலிருந்து பார்க்கும் போது அந்த அரண்மனை போன்ற வீட்டில் நூறு அறைகளாவது இருக்கும் போல தோன்றியது.

“என்னமா? நம்ம வீடு எப்படி மா இருக்கு? இது ரொம்ப பழைய காலத்து வீடு. என் தாத்தாவோட தாத்தாவோட தாத்தா கட்டினது. செட்டிநாடு கட்டிட கலைக்கு பேர் போனது. இந்த வீடு முழுக்க சுண்ணாம்புக்கல்லால் ஆனது மா. அந்த காலத்திலே....”

“ராமா!ஆரம்பிச்சுட்டீங்களா உங்க ஊர் புராணத்தை? உங்க மருமகக்கிட்ட ஊர் டமாரத்தை எல்லாம் அப்புறம் போட்டுக்கலாம். முதல உள்ள வாங்க” என்று அவர் மனைவி ராஜேஸ்வரி அவரை அழைத்துக் கொண்டு செல்லவும்,”எங்க ஊரை பத்தி பேசுனா உனக்கு பொறுக்காதே”என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

வெளியே இருந்து பார்ப்பதை விட உள்ளே சென்று பார்த்தால் மதிவதனிக்கு மயக்கமே வரும் போல இருந்தது. அவ்வளவு கலைநயம் மிக்கதாய் இருந்தது.அங்கங்கே அழகான ஓவியங்களும் சின்ன சின்ன சிற்பங்களும் மிகவும் புராதானமாக இருந்தது. அவை அனைத்தையும் நல்ல முறையில் பாதுகாக்கப்படுவதையும் அவள் புரிந்து கொண்டாள். ஏனனென்றால் வீடு சுத்தமாக பளிங்கு மாதிரி இருந்தது.

“ரஞ்சன். இங்கே யாரு தங்கியிருக்காங்க?”

“யாரும் இல்லை. ஒரு சில வேலைக்காரங்க மட்டும் தான் தங்கியிருக்காங்க. அவங்களும் நைட் அவங்க வீட்டுக்கு போய்டுவாங்க”

“என்னது? இவ்ளோ பெரிய வீட்ல யாருமே தங்கலயா? ஏன்? மாமாவோட சொந்தக்காரங்க யாரும் இல்லையா?”

அவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு தயங்கியபடி,” ஹ்ம்ம்..இல்லை” என்றான் மொட்டையாக.

“ஆங்....நீங்க எல்லோரும் எதுக்கு சென்னைக்கு போய் செட்டில் ஆனீங்க? இங்கேயே இருந்திருக்கலாமே? இங்கேயே பிசினஸ் பண்ணிருக்கலாமே?!” இவ்வளவு அழகிய வீட்டை இப்படி விட்டு விட்டார்களே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.

“அது....அது வந்து...” அவன் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன் சூரியநாராயணன் அங்கு வந்தார்.

“என்ன பா? இன்னும் இங்க நின்னு பேசிட்டு இருக்கீங்க! முதலில் போய் குளிச்சு ரெடி ஆகுங்க, மத்ததை அப்புறம் பேசிக்கலாம்”

மதிவதனி அங்கிருந்து சென்றவுடன், சூரியநாராயனன்
மனோரஞ்சனிடம் திரும்பி,”மனோ இப்பவே எல்லா விஷயத்தையும் மதி கிட்ட சொல்லி அவளையும் மனசு கஷ்டப்படுத்த வேண்டாம். அவளே எப்படியும் தெரிஞ்சிக்குவா”

“சரி பா, நான் எதுவும் சொல்லல”

மதிவதனி இது எதையும் கவனிக்கவில்லை. அவள் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். அந்த வீட்டின் பின்புறம் ஒரு அழகிய தாமரை குளம் இருந்தது. ஆண்கள் எல்லோரும் அதிலேயே குளித்தனர். பின்னர் அங்கிருந்த சமையல்காரர் ராமையா காரைக்குடிக்கே உரித்தான பல உணவுகளை சமைத்திருந்தார்.

இடியாப்பம் தொட்டு கொள்ள வெள்ளை குருமா,அடை அவியல், இட்லி, சாம்பார்,சட்னி,கருப்பட்டி பணியாரம்,கந்தரப்பம் என்று ஒரு கலக்கு கலக்கியிருந்தார்.அதை மதிவதனி ஒரு பிடி பிடித்தாள். சின்ன ஓய்வுக்கு பின் அனைவரும் அமர்ந்து சீட்டு விளையாடினர்.பொழுது போவதே தெரியாமல் விளையாடிவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றனர்.

தன் அறைக்குள் சென்ற மதிவதனிக்கு அப்பொழுது தான் ஒரு விஷயம் உரைத்தது. என்ன செய்வதென்று அறியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.....

புலரும்
 
Top