Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-22

Advertisement

லவா குஷா இருவரும் தங்கள் அன்னை சொன்னதையே யோசித்தவாறு தங்கள் அறைக்குச் சென்றனர். உண்மையிலே தங்கள் தந்தையின் இந்த திடீர் மனமாற்றமும் அவருடைய இந்த விந்தையான முடிவும் அவர்களுக்கு பெரிய ஆச்சரியத்தையே கொடுத்தது. போதாக்குறைக்கு இதைப் பற்றி தங்களிடம் கருத்து கேட்காமல் கிட்டத்தட்ட தங்களை நிர்பந்திக்கும் அன்னையின் பேச்சு வேறு அவர்களுக்கு குழப்பம் கொடுத்தது. போதாக்குறைக்கு என்ன தான் அவர்கள் முறைப்பெண்களாக இருந்தாலும் அவர்களை திருமணம் செய்யும் நோக்கத்திலோ இல்லை காதலிக்கும் நோக்கத்திலோ எல்லாம் இவர்கள் ஒரு நாளும் அணுகியதில்லை. ஆம் விளையாட்டிற்கு அவ்வப்போது லவா குஷா இருவரும் மொட்டு அனு ஆகியோரை டீஸ் செய்து இருந்தாலும் அது போல் ஒரு எண்ணம் இதுவரை அவர்களுக்கு இருந்ததில்லை. இதெல்லாம் கடந்த சூரக்கோட்டை பயணத்திற்கு முன்பே இருந்த நிலை. இப்போதோ நிலைமை முன்பு போல் இல்லை. அவர்களுக்குள் ஒரு சொல்லப்படாத இடைவெளி வந்து விட்டதாகவே எண்ணினார்கள். என்ன தான் அனுவிடம் பேசினாலும் பழகினாலும் முன்பிருந்த அந்த ஒட்டுதல் இப்போதில்லை என்பதே நிஜம். அதும் போக தற்சமயம் அவர்கள் திருமணத்தைப் பற்றி எண்ணவே இல்லை. அவர்கள் கவனமெல்லாம் தங்களுடைய பி.எச்.டியிலே இருக்கிறது. ஒரு பக்கம் வேலை மறுபக்கம் தீசிஸ் என்று இருந்த வாழ்வில் திடீரென திருமணம் எட்டிப்பார்க்க அவர்கள் செய்வதறியாது கலங்கினார்கள்.
எல்லாவற்றுக்கும் மேல் சற்று முன் ஜானகியின் முகத்தில் தெரிந்த ஒளிவட்டம் அவர்களை அதிகம் யோசிக்க வைத்தது. இன்னும் தங்களுடைய ஒப்புதலைத் தராமல் இருக்கும் போதே அவர் மனக்கோட்டை கட்ட ஆரமித்து விட்டார் என்றும் புரிந்தது. தங்கள் அறையில் சகோதரர்கள் இருவரும் புரண்டு புரண்டு படுத்தார்களே ஒழிய ஒருவனையும் நித்திராதேவி ஆட்கொள்ளவே இல்லை. இப்போது இதில் வேறொரு குழப்பமும் அவர்களுக்குத் தோன்றியது. இவை யாவும் தங்களுக்கு மட்டும் தான் தெரியப்படுத்தப்பட்டதா இல்லை முன்கூட்டியே பெரியவர்களுடன் கலந்தாலோசித்து நடைபெறுகிறதா என்றும் யோசித்தார்கள். யோசனையில் இருந்தவர்கள் நேரங்கடந்தே உறங்கியதால் காலையில் தாமதமாகவே எழுந்து தயாராகி வந்தார்கள். முதலில் வந்த குஷா கதவைத் திறந்ததும் சமையலறையில் இருந்த ஜானு தன் தலையை நீட்டி ஒரு பார்வைப் பார்த்தார். அப்பார்வையே அவருடைய எதிர்பார்ப்பை குஷாவுக்குப் புரியவைத்தது. மாறாக தங்கள் தந்தையோ சாவர்த்தனமாக சோஃபாவில் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.
குழப்பத்தில் வந்தவன் ஏதும் பேசாமல் இருக்க,"ஏன் டல்லா இருக்க குஷா? நைட் சரியாத் தூங்கலையா? அவன் எங்க காணோம்?" என்னும் போது லவாவும் வெளியே வந்தான். அவனுடைய கண்களும் சிவந்து இருக்க சந்தேகமாய் இருவரையும் பார்த்த ரகுவிடம்,
"நைட் பேசிட்டு இருந்தோம் அதான் லேட் ஆகிடுச்சுப்பா..." என்ற லவா பேப்பரை வாங்கிப் புரட்டினான்.
அதன் பின் அன்றைய பகல் பொழுதில் பிள்ளைகள் இருவரும் தங்கள் தந்தையிடம் தொழில் நிமித்தமாவும் நடந்து கொண்டிருக்கும் யூரோ கால் பந்து கோப்பையைப் பற்றியும் வரவிருக்கும் படத்தைப் பற்றியும் பேசி பொழுதைக் கழிக்க ஏனோ அவர்கள் ஜானகியைப் பார்க்கவே தயங்கினார்கள். பின்னே இரவு முழுவதும் அவர்கள் யோசிக்க யோசிக்க ஏனோ அதற்கு ஒற்றுக்கொள்ள மட்டும் மனம் வரவில்லை.
அன்றைய தினம் பெரிய ஆர்ப்பாட்டம் இன்றி கடந்தது. ரகுவோ அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதைப் பற்றியோ அவர்களின் அபிப்ராயத்தைப் பற்றியோ எதையும் கேட்கவில்லை. நேற்றிரவே விஷயத்தை பிள்ளைகளின் காதில் போட்டுவிட்டதாக ஜானகி சொல்லிவிட்டாரே! அதனால் அவர்கள் யோசிக்க அவகாசம் கொடுத்து விட்டார். திருமணம் போன்ற பெரிய விஷயங்கள் என்று இல்லை சின்ன சின்ன விஷயத்திற்கும் பிள்ளைகளிடம் அவர்களின் அபிப்ராயத்தைக் கேட்டு அதில் நியாயம் இருந்தால் அதன்படி நடைமுறைப் படுத்துவது தான் ரகுவின் வழக்கம். ரகுவின் உலகம் முடியும் இடமே லவாவும் குஷாவும் தானே? அதனால் பிசினெஸ், கடன் முதலீடு என்று பெரிய விஷயத்தில் இருந்து அன்றாடம் தான் செய்யும் சிறு சிறு வேலைகளில் நிகழும் சம்பவங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் என்று அனைத்தையும் அவர்களின் காதில் போட்டு விடுவார். பெரும்பாலும் அதில் மாற்றுக்கருத்து எதையும் இவர்களும் தெரிவிக்க மாட்டார்கள். சமயங்களின்,"இதெல்லாம் எதுக்குப்பா எங்ககிட்டக் கேக்குறீங்க? உங்களுக்குப் பிடிச்சதைச் செய்ங்க..." என்றும் அவர்கள் சலிக்கும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு.
ஒருவேளை லவாவோ குஷாவோ வைத்தியிடம் பேசுங்கள் என்று எப்போதாவது சொல்லியிருந்தால் அதற்கு அவர் செவிசாய்த்திருக்கவும் கூடும். ஆனால் லவா எக்கருத்தையும் சொல்லாமல் இருக்க குஷாவோ,"நீங்க எப்பயும் இறங்கிப்போகக் கூடாது" என்று சொல்லுவான். அதும் மிக அரிதாகவே சொல்லுவான். ஆனால் குஷா அந்த வார்த்தையைச் சொல்ல முக்கியக் காரணமே மொட்டு தான். பின்னே ஊருக்குச் சென்று அவளுடன் நடக்கும் வாக்குவாதங்களுக்குப் பிறகு தந்தையைச் சந்தித்தால் இவ்வாறு சொல்லிவிடுவான். ஜானகியின் ஸ்கூட்டி சிறு கோளாறு செய்கிறதென்று அதைச் சரிசெய்ய ரகுவும் குஷாவும் வெளியே சென்றிருக்க காலையிலிருந்து தன்னைஸ் எதிர்கொள்ள தயங்கும் மகன்களின் நடவடிக்கையில் வருந்திய ஜானகி லவாவிடம் பேச அவர்கள் அறைக்குள் நுழைந்தார்.
செல் போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தவன் ஜானகியைக் கண்டு தயங்க அவன் அருகில் சென்று அமர்ந்தவர்,
"ஏன் என்னை ரெண்டு பேரும் இப்படி அவாய்ட் பண்றீங்க?" என்று நேரிடையாகவே கேட்டுவிட அதில் திடுக்கிட்டவன் தயங்க,
"ஓகே ஐ யம் சாரி... நான் உங்களைப் புரிஞ்சிக்காம கட்டாயப் படுதிடேனில்ல?" என்று மன்னிப்பும் வேண்ட ஏனோ லவாவுக்கு தர்ம சங்கடமாய்ப் போனது.
"இல்லம்மா அது வந்து..."
"நீங்க வளர்ந்துட்டீங்க உங்க முடிவை நீங்களே எடுக்க ஆசைப்படுறீங்க ரைட்?" என்று நிறுத்த,
"அப்படி இல்லம்மா..."
"எனக்கு இது தான் புரியல... பசங்க நீங்க எல்லோரும் எட்டு வயசுல நாங்க என்ன சொல்றமோ அதை அப்படியே கேட்டு நடக்கற நீங்க அதையே இருபத்தி எட்டு வயசுல நாங்க சொன்னா அதை ஏத்துக்க தயங்கறிங்க ரைட்? பேரெண்ட்ஸ் நாங்க எப்படி உங்களுக்குக் கெட்டதைக் கொடுப்போம்னு யோசிக்க மாட்டீங்க இல்ல? ஆமா இருபத்தி எட்டு வயசுல உன் சார்ந்த முடிவுகளை எடுக்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு அனுபவமும் இருக்கு. நான் ஒத்துக்கறேன். ஆனா நீங்க ஒன்னை மறந்திடுறிங்க... எட்டு வயசுல உங்களுக்கு நல்லது கெட்டது சொன்ன முப்பது முப்பத்தஞ்சு வயசு பேரெண்ட்ஸான நாங்க இன்னைக்கும் அதே முப்பது வயசுல இல்ல... நீங்க இருபது வயசைக் கடந்தா நாங்களும் அதே இருபத்தைக் கடந்து ஐம்பதுகள்ல இருக்கோம். முப்பது வயசுல உங்களை கைட் பண்ண எங்களுக்கு ஐம்பது வயசுல கைட் பண்ணத் தெரியாதா? பி.இ படிங்கனு நாங்க தான் சொன்னோம். படிச்சதும் வேலைக்குப் போறோம்னு வந்த உங்களை மேற்கொண்டு எம்.இ படிங்க இன்னும் லைஃப் நல்லா இருக்கும்னு சொன்னோம். அதே மாதிரி ஆளுக்கொரு வேலை வாங்கிட்டு வந்திங்க. நாங்களா உங்களை பி.எச்.டி பண்ண சொன்னோம்? நீங்களா தானே பண்றோம்னு சொன்னிங்க? எப்படி வந்தது அந்த ஐடியா உங்களுக்கு? ஏன்னா நாங்க இப்படிப் பண்ணா நல்லா இருக்கும்னு ஒரு கோடு போட்டோம் நீங்க அதை வெச்சு உங்க பாதையைத் தேர்ந்தெடுத்தீங்க... அன்னைக்கு உங்களை வேலை கிடைச்சதுனு பி.இ போதும் விட்டிருந்தா இன்னைக்கு இந்த பொசிசனை நீங்க அடைஞ்சிருக்க முடியுமா? என்னடா அம்மா இதெல்லாம் சொல்லிகாட்டறாங்கனு நினைக்காத... இது தான் எங்க ரெஸ்பான்சிபிலிட்டி. இப்பயும் அதே தான் நாங்க செய்யுறோம். எந்த பேரெண்ட்சுக்கும் அவங்க பிள்ளைங்க கடைசி வரை சந்தோசமா ஒற்றுமையா இருக்கணும்னு தான் ஆசைப்படுவாங்க. கிராமத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க கல்யாணம் ஆகுற வரை தான் அண்ணன் தம்பி எல்லாம். பிறகு எல்லாமே பங்காளி தான். எனக்கு நீங்க ரெண்டு பேரும் எப்பயும் இப்படி ஒத்துமையா இருக்கனும். இருப்பிங்க எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இருந்தாலும் எங்க கடமைக்கு நாங்க எடுத்த முடிவு தான் இது. அதும் போக நாங்க பார்த்தப் பொண்ணுங்க என்ன படிக்கலையா இல்ல அழகா இல்லையா? உங்க குவாலிபிகேஷனுக்கு அவங்க எந்த வகையிலும் குறைஞ்சவங்க இல்லையே? போதாக்குறைக்கு அவங்க என்ன வெளியாளுங்களா? சின்ன வயசுல இருந்து உங்களுக்குத் தெரிஞ்சவங்க தானே? உனக்கே தெரியும் அப்பாக்கும் தாத்தாவுக்கும் ரொம்ப வருஷமா பேச்சு வார்த்தை இல்ல. அதே தான் உன் நந்தா மாமா கூடவும். ஆனா அப்பாவே அதெல்லாம் மறந்து தானே இந்த அலையன்ஸ் பார்க்க சம்மதிச்சிருக்காரு? ஓகே நேத்து நான் இதெல்லாம் சொன்னவ கடைசியா நல்ல முடிவா எடுக்கன்னு சொன்னது தான் பிரச்சனை ரைட்? நான் சொன்ன நல்லங்கறதுக்கு அர்த்தம் நீங்க அதுக்கு ஓகே சொல்லணும்னு இல்ல... இந்தப் பேச்சை இதோட நிறுத்திடலாம். நாங்க வெளியிலேயே பொண்ணு பார்க்குறோம். அம்மா அன்னைக்குக் கேட்டதை மறந்திடுங்க... இதை அவன் கிட்டயும் சொல்லிடு... அண்ட் இனிமேலாச்சும் முஞ்சைத் தொங்கப்போடாம எப்பயும் போல இருங்க... அண்ட் நேத்து உங்க தூக்கத்தையும் நிம்மதியையும் கெடுத்துக்கு சாரி..." என்று சொல்லி எழ முயன்றவரின் மடியில் படுத்தவன்,
"கொஞ்சம் டைம் கொடுங்கம்மா யோசிச்சு சொல்றோம்..." என்றவனுக்கு,
"உங்களுக்கு நோ சொல்லவும் எல்லா உரிமையும் இருக்கு..." என்றவர் சென்றதும் லவா நீண்ட யோசனைக்குச் சென்றான்.
அதன் பின் வெளியில் சென்ற குஷாவும் ராகுவும் வந்துவிட மறுநாள் அவர்கள் தங்கள் பணிக்குத் திரும்பினார்கள். இம்முறை வண்டியைச் செலுத்திய லவா ஜானகியிடம் பேசியபிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அவன் அன்னையுடைய ஆசை நியாயமானதாகவே பட்டது. அன்னையின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுத்தான். அதே நேரம் மொட்டுவின் மீதான வருத்தமும் குறையவில்லை.
"டேய் குஷா என்ன முடிவெடுத்திருக்க?" என்றவனை விநோதமாகப் பார்த்தான் குஷா.
"அம்மா நம்மகிட்ட ஒரு விஷயம் சொன்னாங்க இல்ல?"
"இதுல முடிவெடுக்க என்ன இருக்கு?" என்றவன் புரிந்தவனாய் லவாவைப் பார்க்க,
"அது... வந்து... நான்... நாம ஏன் அம்மா கேட்டதுக்கு..." என்று முடிக்கும் முன்னே,
"சோ நீ முடிவெடுத்துட்ட? அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாப் போகப்போற ரைட்?"
"டேய் நான் சொல்ல வரதை கொஞ்சம் கேளுடா..."
"அதுசரி எப்போயிருந்து நீ தனியா முடிவெடுக்க ஆரமிச்ச? அப்போ அன்னைக்கு நீ கோவப்பட்டதெல்லாம் சும்மா நடிப்பு இல்ல?" என்றதும் அதிர்ந்த லவா வண்டியை நிறுத்தினான்.
"டேய் நீ ஏன் இப்படிப் பேசுற குஷா?"
"ஓகே இப்போ எதுக்கு இதை என்கிட்டச் சொல்ற? நீ வீட்ல சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே?"
"ஏன்டா இப்படியெல்லாம் பிரிச்சுப் பேசுற? நாம ஒன்னா தானே மேரேஜ் பண்ணிக்கப் போறோம்..." என்ற லவாவுக்கு,
"அது பழைய கதை... இப்போ தான் எல்லாம் மாறிடுச்சு இல்ல? ஆமா எனக்கு உண்மையிலே ஒரு டௌட்... எது உண்மையான லவா? அன்னைக்கு இனிமேல் அந்தக் குடும்பத்துல உறவே வெச்சிக்கக்கூடாதுனு சொன்னவனா இல்ல இப்போ அந்தக் குடும்பத்துல சம்மந்தம் வெக்கலாம்னு சொல்ற நீயா?"
"டேய் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடா..."
"எனக்கு செமயா கோவம் வருது நான் எதையாவது பேசிடப்போறேன் ஒழுங்கா வண்டி எடு..."
"ப்ளீஸ் குஷா அம்மாவைப் பத்தி கொஞ்சம் யோசிடா..."
"இப்போ வண்டி எடுக்குறையா இல்ல நான் இறங்குட்டா?" என்றதும் லவா வண்டியை எடுத்தான்.
அதன்பின் அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. மறுநாள் லவா ஹைதராபாத் செல்லும் போதுகூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
ஒருவாரம் கடந்தும் லவா குஷாவுடன் பேசாமல் போக குஷா அவனைச் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றாக பிறகு லவா அன்று ஜானகி தன்னிடம் கூறியதை எல்லாம் சொன்னான். குஷாவிற்கும் அன்னையின் ஏக்கம் புரிந்தது.
"ஓகே குஷா... இப்போ சொல்றேன் கல்யாணம் பண்ணா ரெண்டுபேரும் சேர்ந்து தான் செய்யணும். அது எதுவா இருந்தாலும் சரி. உனக்கு இதுல விருப்பமில்லைனா நாம வெளியவே பொண்ணுபார்க்கச் சொல்லுவோம். சரியா?" என்று லவா கேட்க முதல் முறை ஜானகியின் பக்கத்தை யோசிக்க முனைந்தான் குஷா. ஒருபுறம் தந்தைக்கே இதில் ஆட்சேபனை இல்லை என்ற போது தனக்கேன் இத்தனை வீம்பு என்று யோசித்தவன் எப்படியும் மொட்டுவை லவா தானே திருமணம் செய்யப் போகிறான் என்றும் அவனுக்கே இதில் ஆட்சேபனை இல்லை என்று சாந்தமடைந்தான். மேலும் சுசி இருப்பதோ திருச்சியில் தானே? அதனால் தான் எதற்கு சூரக்கோட்டைக்குப் போக வேண்டும் என்று யோசிக்க ஆரமித்தான்.
பிள்ளைகளிடமிருந்து பதிலேதும் இன்றுவரை வராதாக் காரணத்தால் அவர்களுக்கு மேட்ரிமோனியில் பதிவு செய்வதைப் பற்றி ஜானு யோசிக்க அன்று அவரை காண்பெரென்ஸ் காலில் அழைத்தவர்கள் சம்மதத்தைத் தெரிவிக்க அதன்பின் ஜானகியும் ரகுவும் இதைப்பற்றி வைத்தியிடம் பேச கனகாவும் வைத்தியும் ஆனந்த அதிர்ச்சியில் திளைத்து நந்தாவிடமும் சுசியிடமும் பேச நந்தா தான் இவையாவும் கனவா நிஜமா என்று புரியாமல் குழம்பினார்.
விஷயம் மொட்டு மற்றும் அனுவிற்குத் தெரியப்படுத்த எப்படி இவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டார்கள் என்று யோசித்து குழம்பியவர்கள் அவர்களின் கோபம் தணிந்த வரை மகிழ்ச்சி என்று இருக்க அதற்கடுத்து நிச்சயதார்த்த ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றது.
லவாவுக்கும் மொட்டுவுக்கும் திருமணம் என்றும் அதே போல் குஷாவுக்கும் அனுவுக்கும் திருமணம் என்றும் முடிவானது. திருமணத்தை சென்னையில் வைப்பதாகத்தான் முடிவாக அதற்குள் கொரோனா இரண்டாம் அலை பரவியக் காராணத்தால் இறுதிநேரத்தில் திருமணம் சூரக்கோட்டையில் அவர்களின் பூர்விக வீட்டிலே முடிவானது.
நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்திற்கும் இரண்டு மாத இடைவெளி இருக்க வைத்தியின் மனமோ ஆனந்த கூத்தாடியது. தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப அனைத்தும் நடப்பதாக அவர் எண்ண இங்கே சம்மந்தப்பட்ட அந்த நால்வரோ முன்பிருந்த கொஞ்சநஞ்ச நிம்மதியும் இல்லாமல் தவித்தனர்.
பின்னே திருமணம் முடிவானதும் வழக்கமான ஜோடிகளைப் போல தங்களுடைய கோர்ட்ஷிப் இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருக்க இதுவோ அனைத்தும் கடமைக்கென்று மட்டுமே நடந்து கொண்டிருந்தது.
லவாவும் மொட்டுவும் இப்போதும் கூட சரிவர உரையாடவே இல்லை. மொட்டு அவனை அழைக்கும் போதெல்லாம் வேலையிருக்கிறதென்று சொல்லி அழைப்பை வைப்பதிலே குறியாக இருந்தான். அங்கே அனுவுக்கும் குஷாவுக்கும் அதே போலொரு நிலை எல்லாம் இல்லை. ஆனால் வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என்ன பேசுவது என்றே புரியாமல் தவித்தனர். அவர்களால் முயன்றும் கூட திருமணம் நடக்கப்போகும் ஜோடிகளைப் போல் பேசிக்கொள்ள முடியவில்லை.
தாங்கள் எதை எண்ணி இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்களோ அது நடைபெறும் சாத்தியக்கூறுகளே தென்படவில்லை என்று வருந்திய பெண்கள் தாங்கள் அவசரப்பட்டு விட்டோமோ என்று முதன்முதலாய் யோசிக்க ஆரமித்தனர். இதோ அதோ என்று திருமண நாளும் நெருங்கியிருந்தது. எபிசோட் ஒன்று மற்றும் இரண்டின் முக்கிய பகுதிகள்,
அங்கே திருமணத்திற்கு நேரம் ஆக மணமக்களை எல்லோரும் தயாராகினார்கள். வழக்கமாக திருமணம் என்றால் எல்லோருக்கும் குறைந்த பட்ச ஆசையாக வண்ண உடைகள், ஆர்ப்பரிக்கும் அணிகலன்கள், மேக் அப், போட்டோ ஷூட் என்று கனவு இருக்கும் தானே? அது இந்நால்வருக்கும் கூட இருந்தது தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் இப்படி வீட்டில் அதும் இவ்வளவு எளிமையாகவே தங்களுடைய திருமணம் நடக்கும் என்று அவர்கள் நால்வரும் கனவில் கூட நினைக்கவில்லை.
அந்தப் பெரிய வீட்டின் மாடியில் இடம் வலமாக இருக்கும் அந்த இரண்டு அறைகளில் இன்றைய விழா நாயக நாயகிகள் அமர்ந்திருக்க அவர்களைச் சுற்றி அலங்கரிக்கிறேன் என்ற பேர்வழியில் ஒரு கூட்டம் அமர்ந்து கதை பேசிக்கொண்டும் அவர்களை வம்பிழுத்துக்கொண்டும் இருந்தது. ஆனால் அந்த நால்வரின் உள்ளமோ வேறு சில யோசனையில் மூழ்கியிருந்தது. நிச்சயம் அதில் திருமணம் என்பதற்கான ஒரு எக்ஸைட் மென்டோ உற்சாகமோ அவர்கள் மனதில் துளியும் இல்லை என்பதை அங்கிருந்தவர்கள் யாரும் அறியவில்லை.
இத்தனைக்கும் இது ஒன்றும் கட்டாயத் திருமணம் இல்லை. அதேபோல் இவர்களின் சம்மதம் பெறாமலும் நடக்கவில்லை. ஆனாலும் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் பெரிய 'ட்விஸ்ட்' ஒன்று நிகழ்ந்துவிட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணங்கள் தோன்ற சில விஷயங்களை அன்றே தெளிவாகப் பேசியிருக்க வேண்டுமோ என்று தற்போது தான் யோசித்தனர். ஆனால் இன்று போல் ஒரு நிலை அன்று இல்லையே? ஒருவேளை அன்றே அனைத்தும் பேசியிருந்தால் இன்று எல்லாம் சுமுகமாகவே நடந்திருக்குமோ என்னவோ? கிட்டத்தட்ட இன்றிலிருந்து எட்டு நாட்களுக்கும் முன் தான் இவர்களின் திருமணம் உறுதியானது. கொரோனா காலகட்டம் என்பதால் எப்படியும் எல்லோரையும் அழைக்க முடியாது என்றும் மீறி அழைத்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் வந்திருக்க முடியாது என்றும் அறிந்து திருமணத்தை தற்போது எளிமையாக வைத்துக்கொண்டு நாளை சூழ்நிலை சரியாகும் பட்சத்தில் வேண்டுமென்றால் ஒரு வரவேற்பை வைத்துவிடலாம் என்று முடிவெடுத்து உறுதியானது தான் இத்திருமணம் சாரி திருமணங்கள்.
அப்போது அங்கே வந்த வைத்தியலிங்கமும் கனகாவும் தங்கள் பேரன்களின் அறைக்கதவைத் தட்ட கதவைத் திறந்தான் லவா.
"வாங்க தாத்தா, வா அம்மாச்சி..." என்றவன் ரெஸ்ட் ரூமில் இருந்த குஷாவை அழைக்க,
"அவன் வரட்டும்யா... எங்க உன் தோஸ்துங்க யாரையுமே காணோம்?" என்னும் வேளையில் உள்ளே வந்தான் ஸ்ரீ, குஷாவின் பெஸ்டி.
"எங்க அவன்? இன்னுமா பாத்ரூம்ல இருக்கான்?" என்று ஸ்ரீ வினவ, மெலிதாய் ஒரு முறுவல் செய்தேன் லவா.
அப்போது வெளியே வந்த குஷா,
"டேய் ஸ்ரீ இந்த வேஷ்டி மட்டும் நிக்கவே மாட்டேங்குது டா..." என்று நிமிர்ந்தவன் எதிரில் தன் தாத்தாவைக் கண்டதும் சிரிக்க,
"என்னலே பசங்க நீங்க? உங்களுக்கு ஒழுங்கா ஒரு வேட்டி கட்டி நடக்ககூடத் தெரியல..." என்று சலித்துக்கொள்ள,
"ஐயோ தாத்தா அதெல்லாம் இவன் நல்லாவே கட்டுவான்... ஒருவேளை கல்யாணம்னு சொன்னதும் எல்லாம் மறந்திடுச்சோ?"
என்று வார அதற்கு எல்லோரும் மெலிதாய்ச் சிரித்தனர்.
பிறகு மணமகன்களிடம் சிறிது பேச வேண்டும் என்று உரைத்தவர் ஸ்ரீயைப் பார்க்க அவன் வெளியேறியதும்,
"ஐயா லவா, மொட்டைப் பத்தி நான் உனக்கு எதையும் புதுசா சொல்ல வேண்டியதில்லை... அவ நம்ம குடும்பத்துப் பொண்ணு..." என்னும் போது அவரை ஒருவாறு பார்த்த குஷாவின் பார்வையை உணர்ந்தவர்,
"அனுவும் நம்ம வீட்டுப் பொண்ணு தான். இருந்தாலும் அவ பட்டணத்துல வளர்ந்தவ... ஆனா..." என்று முடிக்கும் முன்னே,
"தாத்தா மொட்டைப் பத்தி நீங்க எனக்குப் புதுசா சொல்லனுமா என்ன?" என்னும் வேளையில் கதவு தட்டப்பட அதை குஷா திறந்தான். வெளியே தன் தந்தையைக் கண்டவன்,"வாங்கப்பா..." என்று அழைக்க அவரோ தன் மாமனார் இருப்பதைக் கண்டு,"சீக்கிரம் ரெடி ஆகுங்க..." என்றுரைத்து விட்டுச் சென்று விட ஜானகி உள்ளே வந்தார்.
"டேய் லவா நீ தான் முதல வரணும்... ரெடியா இரு..." என்றுரைத்தவர் அங்கே தன் தந்தையைக் கண்டு,"என்னப்பா? என்ன விஷயம்?" என்றதும்,
"ஒன்னும் இல்ல ஜானு. சும்மா தான்..." என்றார் கனகா. தற்போது பேரன்களிடமிருந்த எண்ணம் சற்று முன்னர் வந்து சென்ற ரகுநாத்தின் மீது செல்ல அதை உணர்ந்தவர்,"அப்பா அவரை நான் சமாளிக்குறேன்..." என்று ஜானு சிரிக்க,
"மாப்பிள்ளைக்கு இதுல ஒன்னும்..." என்று இழுத்த கனகாவிடம்,
"அம்மாச்சி, இந்த விஷயத்துல என் அம்மா உன்னை மாதிரியே..." என்று இடைவெளி விட்ட குஷா,"நீ எப்படி தாத்தாவைச் சேலையில் முடிஞ்சி வெச்சியிருக்கையோ அப்படியே தான்..." என்று முடிக்கும் முன்னே அவன் காதைத் திருகிய ஜானகி,
"இரு இரு இதையே அனு கிட்டயும் சொல்றேன்..." என்ற அன்னைக்கு,
"அதுக்கு அவசியமே இல்லம்மா அவனை தான் ஏற்கனவே அனு வசியம் பண்ணிட்டாளே..." என்று லவா உரைக்க சில சிரிப்பொலியுடன் அவர்கள் வெளியேறி மணமகளின் அறைக்குச் சென்றனர்.
ஏனோ இதுவரை இருந்த கலகலப்பு மறைந்து சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருத்தர் அர்த்தமாய்ப் பார்த்தனர்.
அதன் பின் நேரம் காலில் சக்கரத்தைக் கட்டியது போலே சுழல அபி, பாரி ஆகியோர் உள்ளே வந்து மாப்பிள்ளை இருவரையும் அழைத்துச் சென்று வீட்டின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மனையில் அமர வைத்தனர்.
அங்கே மணமக்கள் இருவரும் சிறு சிறு சம்பிரதாயங்கள் செய்யவும் மணப்பெண்களும் அங்கே வந்தனர். அதுவரை ஜானகியும் ரகுநாத்தும் இதர வேலையில் மூழ்கியிருக்க நிர்மலாவும் உமாவும் தான் மணமக்களுடன் இருந்தனர். போட்டோஸ் வீடியோஸ் ஆகியவற்றை எடுக்க வேதங்கள் ஏதும் ஓதப்படாமல் வீட்டின் பெரியவர்களின் ஆசிர்வாதத்தில் வைத்தியலிங்கமும் கனகாவும் தம்பதி சகிதமாய்ப் பொன்தாலியை எடுத்து லவாவிடம் நீட்டும் நேரத்தில் தான் அங்கே வந்த ஜானகியும் ரகுநாத்தும் அதைக் கவனிக்க அவர்கள் ஏதும் பேச ஆரமிக்கும் முன்னரே மேடையில் லவாவாக வீற்றிருந்த ஆழியன் மொட்டு என்கின்ற பனித்துளியின் கழுத்தில் அதைப் பூட்டியிருந்தான்.
தற்போது இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணரும் நிலையிலோ இல்லை அதைத் தடுக்கும் நிலையிலோ ஜானகியும் ரகுநாத்தும் இல்லவே இல்லை. அதற்குள் குஷாவாக வீற்றிருந்த ஆர்வலன் அனு என்கின்ற புல்வெளியின் கழுத்தில் பொன் தாலியைக் கட்டிவிட இனி என்ன நடக்கப்போகிறதோ என்ற பீதியில் ஜானகியும் ரகுநாத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
Super super
 
Aaga ivanunga 2 perum ammakaga ok sollirkanunga...mottu anu 2 perum kovam poi normal agi Ellam onna irukalam asaila ok sollirkanga...mathapadi 4 perukum entha interest illa marriage la.interest vida no solla Karanam illa.athan ok solliyachu....ragupa always semma❤️...januma mela konjam upset irunthuchu.but ipo lava ta pesinathu patha avanga asaiyum niyayam thanenu yosika vaikuthe.ivlo varusa misunderstanding ah maraka vaika uravugala onnu serka kidaicha vaippa miss panna kitathundra yekkam nallave puriyuthu........ finally flashback mudinju story starting ku vanthachu....super.....ama Nan annaike kekanum ninaichen writer ji Ramayanam fan oh?illa ramar family ah mothama kondu vanthu iraki irukingale athan?
 
Aaga ivanunga 2 perum ammakaga ok sollirkanunga...mottu anu 2 perum kovam poi normal agi Ellam onna irukalam asaila ok sollirkanga...mathapadi 4 perukum entha interest illa marriage la.interest vida no solla Karanam illa.athan ok solliyachu....ragupa always semma❤...januma mela konjam upset irunthuchu.but ipo lava ta pesinathu patha avanga asaiyum niyayam thanenu yosika vaikuthe.ivlo varusa misunderstanding ah maraka vaika uravugala onnu serka kidaicha vaippa miss panna kitathundra yekkam nallave puriyuthu........ finally flashback mudinju story starting ku vanthachu....super.....ama Nan annaike kekanum ninaichen writer ji Ramayanam fan oh?illa ramar family ah mothama kondu vanthu iraki irukingale athan?
அடுத்த எபி படிச்சதுனால உங்களுக்கு கதை தெரிஞ்சிடுச்சு. சோ நோ கமெண்ட்ஸ்? எஸ் இனிமேல் கதை கரெண்ட்ல நகரும்... ஹா ஹா உண்மையிலே நான் கிருஷ்ணர் fan. எனக்கு ராமாவதாரம் பிடிக்காது. ஊரார் பேச்சைக் கேட்டு சீதையை ஒதுக்கிவெச்சதுல எனக்கு உடன்பாடில்லை. அதும் அக்கினி பிரவேஷத்துக்குப் பிறகும்... அண்ட் சீதாவோட முடிவும் பிடிக்காது? இது சும்மா வெச்சது...
 
அடுத்த எபி படிச்சதுனால உங்களுக்கு கதை தெரிஞ்சிடுச்சு. சோ நோ கமெண்ட்ஸ்? எஸ் இனிமேல் கதை கரெண்ட்ல நகரும்... ஹா ஹா உண்மையிலே நான் கிருஷ்ணர் fan. எனக்கு ராமாவதாரம் பிடிக்காது. ஊரார் பேச்சைக் கேட்டு சீதையை ஒதுக்கிவெச்சதுல எனக்கு உடன்பாடில்லை. அதும் அக்கினி பிரவேஷத்துக்குப் பிறகும்... அண்ட் சீதாவோட முடிவும் பிடிக்காது? இது சும்மா வெச்சது...


Agreed? enakum kannan than pidikum
 
Top