Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பூவாசம் மேனி வீசுதம்மா - 11

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
பூவாசம் மேனி வீசுதம்மா – 10

நாட்கள் அதனதன் போக்கில் செல்ல, கமலக்கண்ணன் கஸ்தூரி இருவருக்கும் இடையில் ஒரு நல்லுறவே இருந்தது. அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்தாலும், அதை இருவருமே பெரிதாய் நினைத்துக்கொள்ளவில்லை.

சந்திரபாண்டி மட்டுமே எப்போதும் போலிருக்க, செல்லப்பாண்டியோ இப்போது தான் மகள் மீதா பாசத்தை பாசமாய் கட்டிடத் தொடங்கியிருந்தார்.

அதுவும் கமலக்கண்ணன் ஒருமுறை சொல்லிக் காட்டவும்.

அதுவும் கூட அவளின் படிப்பு விசயமாய் பேச்சு வரவும்தான்.

கமலக்கண்ணன் அடுத்து கஸ்தூரியிடம் ‘படிக்கிறியா..’ என்று கேட்கவில்லை.

ஒருமுறை சொல்லியாகிவிட்டது. அவளொன்றும் விபரம் அறியாதவள் அல்லவே, ஆக யோசித்து அவளாய் ஒரு முடிவிற்கு வந்து சொல்லட்டும் என்று இருந்துவிட, கஸ்தூரிக்கோ அன்று சொன்னானே, அதன் பின்னே ஒன்றுமே கேட்டிடவில்லையே என்று எண்ணிக்கொண்டே இருந்தாள்.

கமலக்கண்ணனோ அவனாய் வாய் திறப்பதாய் இல்லை. கல்பனா கூட அவனிடம் போனில் கேட்டாள் “எதுவும் சொன்னாளா டா..” என்று.

“இல்லக்கா.. யோசிக்கட்டும்.. எதுவா இருந்தாலும் கம்ப்பல் பண்ணக் கூடாது இல்லையா..” என்றுவிட்டான்.

ஆனால் பொறுத்தது போதுமென்று கஸ்தூரியே அவனிடம் “அன்னிக்கு ஒன்னு கேட்டியே...” என்றாள், அவனின் கையை சுரண்டியபடி.

“நான் தினமும் தான் உன்கிட்ட ஒன்னொன்னு கேக்குறேன்..” என்று கண்ணன் சொல்ல,

“ம்ம்ச்.. அதில்ல..” என்றவள், அவனின் முகம் பார்க்க,

“என்னோட பேசுறதுக்கு உனக்கு எதுக்கு இவ்வளோ திக்கல் திணறல் எல்லாம்.. எதுவா இருந்தாலும் என்கிட்ட நேரடியா கேட்கலாம்.. பேசலாம்.. அது உனக்கு பிடிச்சதா இருந்தாலும் சரி எனக்கு பிடிக்காததா இருந்தாலும் சரி.. புரிஞ்சதா..” என்று மறைமுகமாய் அவளுக்கு தைரியம் கொடுக்க,

“ம்ம் அப்போ எனக்கு பிடிக்காததுன்னா உங்கிட்ட சொல்லக் கூடாதா??!!” என்றாள் பாவனையாய்.

“எனக்கு பிடிக்காததையே என்கிட்டே சொல்லலாம் அப்படிங்கிறேன். அப்போ உனக்கு பிடிக்காததை நான் கேட்க மாட்டேனா??!!”

“ம்ம்...” என்று கஸ்தூரி தலையை ஆட்டிக்கொள்ள, “என்ன விஷயம் கஸ்தூரி..” என,

“அதான் படிக்கிறியான்னு கேட்டியே..” என்றாள்.

“ஆமா..”

“அது வேணாம்...” என்றாள், முகத்தை சுருக்கி.

“உன்னோட இஷ்டம் தான். ஆனா காரணம் மட்டும் சொல்லிடு..” என,

“இல்ல, முன்ன படிக்கணும்னு ஆசை இருந்துச்சு.. அப்போ முடியல.. அதுக்காக நானும் ஒன்னும் அப்புடியே ஒன்னும் தெரியாதவளா எல்லாம் இருந்திடல. இங்க இருந்துட்டு என்னெல்லாம் கத்துக்க முடியுமோ எல்லாம் பண்ணேன்.. இப்போ படிக்கிற.. ம்ம்... மனநிலைமை இல்ல.. ” என,

“ஏன் கஸ்தூரி.. நான் சப்போர்ட் பண்ண மாட்டேன் நினைக்கிறியா?? இல்ல இங்க அப்பா அம்மா எதுவும் சொல்வாங்கன்னு நினைக்கிறியா??” என்றான் முழுதாய் அவளின் காரணம் தெரிந்துகொள்ளும் பொருட்டு.

“ச்சே ச்சே.. இல்ல..”

“பின்ன என்ன??”

“படிச்சா உருப்படியா நல்லா படிக்கணும்.. அதைவிட்டு நானும் போனேன் வந்தேன்னு பண்ணக் கூடாது. இங்க எனக்கு வீட்டு வேல பின்ன தோட்டத்து வேல எல்லாம் சரியா இருக்கு.. அதுபோக, நம்ம வாழ்க்கைக்கு என்னெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கனுமோ அதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கேன்.. அதனால இதுவே போதும்னு தோணுது.. படிச்சாதான் புத்திசாலி எல்லாம் இல்ல..” என்று கஸ்தூரியும் சொல்ல,

“ஓ..!! மேடம் நீங்க புத்திசாலியா..” என்றான் வேண்டுமென்றே கமலக்கண்ணன் கிண்டலாய்.

“பாத்தியா..!! நான் என்னைன்னு சொல்லல.. பொதுவா சொன்னேன். வாழ்க்கை எனக்கு நிறைய பாடம் கத்துகொடுத்திருக்கு.. அதுபோதும்.. இப்போ இருக்க வாழ்கைய சந்தோசமா அதோட போக்குல வாழணும்னு நெனைக்கிறேன். அவ்வளோதான்.. ” என,
இதற்குமேல் கமலக்கண்ணனுக்கு கஸ்தூரியை படி என்று சொல்ல மனம் வரவில்லை.

அவளின் எண்ணங்கள் அதிலிருந்து மாறிவிட்டது என்று நன்கு புரிந்தது.

அதாவது இந்த வாழ்வில் அவள் தன்னை முழுதும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரு உந்துதல் அவளிடம் இருந்தாலும்,
வெளியில் இருந்தும் அதற்கான ஒரு அழுத்தம் இருப்பதாய் தெரிந்தது.

அவனும் தான் அடிக்கடி பார்த்திருக்கிறானே, செல்லப்பாண்டியும் சரி, வடைபாட்டியும் சரி, இன்னும் சில கஸ்தூரி பக்கத்து உறவுகளும் சரி, அனைவருமே சொல்வது

“இங்கபாரு கஸ்தூரி.. நல்ல வாழ்க்க அமைஞ்சிருக்கு.. நல்லபடியா பொழைக்கணும்.. உம் புருஷன் என்ன சொன்னாலும் கேட்டு நட.. அது இதுன்னு அதிகமா பேசக் கூடாது.. நல்ல பேர வாங்கி.. புள்ளக்குட்டி பெத்து நல்லா பொழச்சுக்க.. ” என்பதுதான்.

கமலக்கண்ணன் முன்னேயே இதனைச் சொல்லக் கேட்டிருக்கிறான். அப்போது, அவனில்லாத நேரத்தில் எதனை அறிவுரைகள் அவளுக்கு வந்திருக்கும், அதுவும் எப்படி எப்படி வந்திருக்கும் என்று அவனுக்குப் புரியாது போகுமா என்ன??!

கமலக்கண்ணன் அமைதியாய் இருக்க, கஸ்தூரி அவனைப் பார்த்தவள் “எம்மேல கோவமா??!!” என,

“அட.. எதுக்கு கோவம்..?” என்றான்.

“படிக்கல சொன்னதுக்கு..”

“இது உன்னோட முடிவு.. உன்னைய பத்தி முடிவு செய்றதுக்கு முதல் அதிகாரம் உனக்குமட்டும் தான் இருக்கு.. உன்னைய கல்யாணம் பண்ணிருக்கேன் அப்படிங்கற ஒரே விசயத்துக்காக, நான் என்ன சொன்னாலும் நீ அதை அப்படியே செய்யணும்னோ, உன்னோட கருத்துக்களை என்கிட்டே சொல்லக் கூடாதுன்னோ எதுவுமே இல்லை..” என, கஸ்தூரியின் முகத்தில் மெல்லமாய் ஒரு தெளிவு வந்தது.

கமலக்கண்ணன் அதைப் பார்த்தவன், அவளின் கன்னம் பற்றி தன்னை நோக்கித் திருப்பி “என்னால புரிஞ்சக்க முடியும் கஸ்தூரி.. லைப் பத்தி எனக்கொரு கண்ணோட்டம் இருக்கும்.. அது நான் வளர்ந்து, கடந்து வந்தது எல்லாம் வச்சு. உனக்கு ஒரு கண்ணோட்டம் இருக்கும்.. அது உன்னோட அனுபவங்களை வச்சு..

ஒன்னு நல்லா புரிஞ்சுக்கோ.. நான் உன்னோட பாஸ்... ஆ!! முதலாளி இல்ல.. உன்னோட பார்ட்னர்.. இந்த வாழ்கைய நீயும் நானும் பகிர்ந்துக்கிறோம்.. சம உரிமை உனக்கும்தான் இருக்கு.. புரிஞ்சதா...” என்றும் சொல்ல,

கஸ்தூரியின் முகத்தினில் அப்படியொரு சந்தோசம். இத்தனை நாள் இல்லாத ஒரு சந்தோசம். வாழ்வில் முதல் முறையாய் தன் முடிவுகளை ஒருவன் கேட்டு அதையும் சரி என்று சொல்லும் சந்தோசம்..

திருமணத்திற்கு முன்பு வரைக்கும், அவளின் முடிவுகள் பேச்சுக்கள் எல்லாம் தோட்டத்தில் மட்டுமே. அங்கே வேலை செய்யும் ஆட்களிடம் மட்டுமே.. வீட்டு விசயங்களில் எல்லாம் செல்லப்பாண்டி எது செய்கிறாரோ அதற்கு சரி என்றுமட்டுமே கஸ்தூரி சொல்லிட முடியும்.
கலந்து பேசுவதோ, இல்லை அவளின் கருத்தினையும் கேட்பது என்பதெல்லாம் அவரிடம் எப்போதும் இருக்காது. அது கஸ்தூரியின் மனதில் ஒருவகை தாக்கம் கொடுத்திருக்கிறது என்று கண்ணனுக்கு இப்போது புரிந்தது.

“என்ன நீ.. இப்படி பேசிட்டு இருக்கப்போ யோசனைக்கு போயிடுற.. அப்புடி என்ன கோட்டை கட்டுற, யோசனையிலயே...” என்று கேட்ட கஸ்தூரியின் குரலில் புதுவித உல்லாசம்.

என் கணவனிடம் நான் எதுவும் பேசலாம் என்ற உல்லாசம்.

மற்றவர்கள் சொன்னது போல், அவன் சொல்லும்படி எல்லாம் நடந்துகொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை என்ற உல்லாசம்.

இத்தனை நாள் இருந்ததை விட, கஸ்தூரிக்கு கமலக்கண்ணனை இன்று இன்னும் அதிகமாய் பிடிக்கத் தொடங்கியது.
அதையும் அவள் சொல்லாமல் விடவில்லை.

“எங்க நீ படிச்சுத்தான் ஆகணும்னு சொல்லுவியோன்னு நெனச்சேன்..” என,

“பிடிக்காம படிச்சு நீ என்ன செய்யப் போற.. முழுமனசா செய்யணும்.. இல்லைன்னா விட்டுடனும்.. உனக்கு இங்கதான்
பிடிச்சிருக்குன்னா நீ என்ன செய்யணுமோ அதெல்லாம் செய்யலாம்.. இன்னும் புதுசா எதுவும் தோட்டம் வாங்கனுமா சொல்லு வாங்குவோம்..” என்று கமலக்கண்ணனும் அவளை ஊக்குவிக்கு விதமாய் பேச,

“ம்ம்.. ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் உணர்ந்து..

“எது தோட்டம் வாங்கணும் சொன்னதா???!!”

“ம்ம்ஹும்.. உன்னைய..” என்று கஸ்தூரி சொல்லவும், கமலக்கண்ணன் அவளை அதிசயமாய் பார்க்க,

“பாட்டி சொல்லுச்சு.. யாரோ ஒருத்தன கல்யாணம் பண்ணிருந்தா எப்படி வாழ்கைய ஆரம்பிச்சு இருப்ப.. அதுபோல இதையும் எடுத்துக்கோன்னு.. அப்போ அது சரின்னுதான் தோணுச்சு.. நானும் அப்புடித்தான் நெனச்சேன்.. ஆனா இப்போ தோணுது, நான்.. நானா இந்த வாழ்கைல சந்தோசமா இருப்பேன்னு.. அந்த நம்பிகைய நீ கொடுத்திருக்க..” என்று சொல்ல,

இதை விட கமலக்கண்ணனுக்கு வேறென்ன வேண்டும்..

அவன் எதிர்பார்த்ததும் இதுதானே..

அவள் தோள் சுற்றி கரம் போட்டவன் “உனக்கு என்ன வேணுமோ சொல்லு, அதுக்கான ஏற்பாடு நான் செஞ்சு கொடுப்பேன்.. எப்பவும் எங்கிட்ட நீ எதுக்கும் தயங்கவே கூடாது..” என்று சொல்ல,

“ம்ம்.. ம்ம்..” என்று தலையை ஆட்டி சிரித்துக்கொண்டாள் கஸ்தூரி.

இப்போதுதான் அவளுக்கு மனம் நிம்மதியாய் இருந்தது. இத்தனை நாளும் மனதில் ஒரு ஓரத்தில் இது உறுத்திக்கொண்டே இருக்க, இன்று அவனிடம் பேசியபின்னே தான் இயல்பாய் அவனோடு இருக்க முடிந்தது.

அவளின் நெருக்கத்தில் வித்தியாசம் உணர்ந்தவன் கூட “இத்தன நாள் இதெல்லாம் நினைச்சு குழம்பிட்டு இருந்தியா??” என,
ஆமாம் என்று கஸ்தூரி சொல்ல, “ம்ம்.. இனிமே உன்னைய செமத்தியா கவனிச்சு வேற எதையும் நினைக்க விடக் கூடாது..” என்றவனும் சொன்னதை செய்ய, வாழ்வு அழகாய் தான் போனது தினம் தினம்.

ஆனால் கமலக்கண்ணனுக்கு செல்லப்பாண்டியின் மீது கோபம் இருந்தது. இப்படியொரு பெண்ணை எப்படி அவரால் புரிந்துகொள்ளாமல் இருந்திட முடிந்தது.

சிறு வயதில் கஸ்தூரி அப்படிப் படிப்பாள். கற்பூர புத்தி அவளுக்கு..

‘நீவேனா பாரு.. நான் பெரிய வாத்தியாரா வருவேன்..’ இதுதான் அவள் எப்போதும் சொல்வது.
அந்த காட்சிகள் எல்லாம் அவனுக்கு இன்னமும் நினைவில் இருந்தது. பார்ப்பதற்கு மட்டுமல்ல அவள் தங்க விக்ரகம், உள்ளத்திலும் அவள் தங்கம்தான்.

இப்போது அவளுக்கு சிந்தனைகள் மாறியிருக்கலாம்.. ஆனால் அவள் இழந்த விஷயங்கள் இழந்தவை தானே. அதை யாரும் திரும்பக் கொடுத்திட முடியாது தானே.

மில் விட்டு கமலக்கண்ணன் வந்துகொண்டு இருக்க, செல்லப்பாண்டி அங்க டவுன் பஸ் ஸ்டாப்பில் நின்றிருக்க, “என்ன மாமா இங்கன??” என்று பைக்கை நிறுத்தினான்.

“அது மாப்புள.. கடைக்கு சரக்கு போட வந்தேன்.. என்னோட வண்டி நின்னுபோச்சு.. கடையில விட்டிருக்கேன் ரிப்பேருக்கு.. அதான் பஸ்க்கு நிக்கிறேன்..” என,

“சரி வாங்க என்னோட..” என்றான்.

“அட இருக்கட்டும்..” என்று செல்லப்பாண்டி மறுக்க,

“சும்மா வாங்க... உங்கள பார்த்துட்டு அப்புடியே விட்டுட்டு வந்தேன்னு தெரிஞ்சா கஸ்தூரி என்னைய உண்டு இல்லைன்னு செஞ்சிடுவா..” என்று கண்ணன் சிரித்தபடி தான் கூறினான்.

ஆனால் அவன் சொன்னது கேட்டு செல்லப்பாண்டிக்குத்தான் முகம் மாறிப்போனது.

“அம்புட்டு பேசுறாளா.. கழுத.. எம்புட்டு தடவ சொல்லிருப்பேன்.. மாப்புள சொல்றத கேட்டு நடன்னு..” என்று செல்லப்பாண்டி எங்கே கமலக்கண்ணன் எதையும் தவறாய் எண்ணிக்கொள்வானோ என்று பேச,

“மாமா.. போதும் நிறுத்துங்க..” என்றுவிட்டான் பட்டென்று.

செல்லப்பாண்டி திகைத்துப் பார்க்க, “கஸ்தூரிய என்கூட வாழத்தான் அனுப்பியிருக்கீங்க.. எனக்கு அடிமையா இருக்கிறதுக்கு இல்லை.. அவ என்னோட பொண்டாட்டி.. என்கிட்ட என்னவும் பேச அவளுக்கு உரிமை இருக்கு.. அவளுக்கு மட்டும்தான் இருக்கு... அதனால இப்புடி பேசுறது எல்லாம் முதல்ல விடுங்க..” என்று கொஞ்சம் காட்டமாகவே சொல்ல, செல்லப்பாண்டி பேச்சற்று போனார்.

“தப்பா எடுத்துக்காதீங்க மாமா.. கஸ்தூரி பத்தி உங்களுக்குத் தெரியாதுன்னு இல்லை.. நல்லா தெரியும்.. இருந்தும் ஏன் அவளை நீங்க இப்படி நடத்துறீங்க.. அவ தப்பு பண்ணனும்னு நெனச்சிருந்தா இத்தனை வருசத்துல எப்பவோ செஞ்சிருப்பா.. அவ அனுபவிச்ச வலிக்கு உங்களைவிட்டு போகணும்னா என்னிக்கோ போயிருப்பா...” என, இதற்கு செல்லப்பாண்டி என்ன சொல்லிட முடியும்.
இதெல்லாம் உண்மை என்று அவருக்கும் தெரியும்தானே..

மௌனமாய் தலைகுனிந்து நிற்க, “நீங்க சங்கடப் படனும்னு நான் இதெல்லாம் சொல்லல மாமா.. இனியாவது அவளோட நல்லபடியா பேசுங்க.. மனசுக்குள்ள இருக்க உங்களோட பாசத்த வெளிய காட்டுங்க.. அவ இன்னும் சந்தோசமா இருப்பா..” என,

“சரி..” என்று தானாய் அவர் வாய் முனங்கியது.

“ம்ம் இப்போ வாங்க...” என்றவன், அவரைக் கொண்டுவந்து அவரின் கடையில் விட்டுவிட்டுத் தான் வீட்டிற்குச் சென்றான்.

இதனைப் பற்றி கஸ்தூரியிடம் எதுவும் அவன் சொல்லிக்கொள்ளவில்லை. செல்லப்பாண்டியும் சொன்னதாய் தெரியவில்லை.
ஆனால் அவர் கஸ்தூரியோடு பேசும் விதத்தில் நல்லதொரு மாற்றம் தெரிந்தது.

இப்படியே எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை கமலக்கண்ணனுக்கு இருக்க, அன்றைய தினம் கூட ஒரு சந்தோசமான மனநிலை தான் அவனுக்கு. சீக்கிரமே வீடு செல்லவேண்டும் என்று வேலைகளை கவனித்துக்கொண்டு இருக்க, முருகேஸ்வரி அழைத்தார் அவனை.

எப்போதும் முருகேஸ்வரி இப்படி அவன் வேலையில் இருக்கும் நேரம் அழைப்பது எல்லாம் அரிது.

இன்று அழைக்க “என்னம்மா??” என,

“கண்ணா.. சாமி.. கஸ்தூரி கோவிச்சிட்டு அவங்கப்பா வீட்டுக்கு போயிட்டா..” என்று அவர் பதறியபடி சொல்ல,

“என்னது??!!” என்றான் வேகமாய்..

“ஆமாடா..”

“ஏன் என்னாச்சு.. எதுவும் சண்டையா??!!”

“அதெல்லாம் எதுவுமில்ல..” என்று முருகேஸ்வரி இழுக்க,

“அப்புறோ என்னதான் ம்மா ஆச்சு.. சொல்றத முழுசா சொல்லு.. உசுர வாங்காம..” என்று கண்ணன் எகிற,

“நம்ம விநாயகம் அண்ணே சம்சாரம் வந்திருந்தா கண்ணா.. அவங்க கஸ்தூரியோட அம்மாவ கொஞ்சம் பேசிப்புட்டா..” என,

“ம்ம்ச் என்னம்மா இதெல்லாம்.. நீயேன் பேச விட்ட.. அவளே இப்போதான் எல்லாம் மறந்து சந்தோசமா இருக்கா..” என்று கமலக்கண்ணன் சொல்லும்போதே அவனுக்கு சலிப்பாய் இருந்தது.

“நா என்னத்தடா கண்டேன்.. அவ பேசுவான்னு.. இவளும் பொசுக்குனு கெளம்பி போயிட்டா..” என்றார்.

நடந்தது இதுதான், அன்றைய தினம் மதியம் போல் வீட்டிற்கு வந்துது முருகேஸ்வரியின் தூரத்து உறவு விநாயகம் என்பவரின் மனைவி.. போன வருடம் வரைக்கும் தோப்புப்பட்டியில் இருந்தவர்கள், இப்போது பட்டினவாசிகள்.

கமலக்கண்ணன் கஸ்தூரியின் திருமணத்தை விசாரிக்கவென வந்திருந்தார் அந்த பெண்மணி கமலா..
முருகேஸ்வரியும் “வா கமலா... என்ன திடீர்னு இந்த பக்கம்.. ஊரு ஆளுங்க எல்லாம் மறந்து போச்சு போல..” என்று குசலம் விசாரிக்க,

“கல்யாணத்துக்கு வர முடியல மதினி.. அதான் விசாரிக்கனும்ல..” என,

“பரவாயில்ல.. அந்தமட்டும் பழசு மறக்கல...” என்று முருகேஸ்வரியும் சொல்ல,

“நாங்க வேற ஊருக்கு போனாலும் பழசு மறக்கல.. ஆனா நீங்க மறந்துப்புட்டீங்க..” என்றார் கமலா..

“என்ன கமலா சொல்லுற..” என்றபடியே முருகேஸ்வரி “கஸ்தூரி...” என்றழைக்க,

“இதோ வர்றேன்த்த..” என்று மாடியில் இருந்து பதில் கொடுத்தவள், அடுத்த இரண்டு நொடியில் வர, வந்திருந்த கமலாவோ கஸ்தூரியை மேலும் கீழும் பார்த்து வைத்தார்.

அன்றைய தினம் தோட்டத்தில் நிலம் உழுது வேலை நிறைய இருந்தது. எல்லாம் அதிகாலையில் இருந்தே ஆரம்பித்துவிட்டதால், கஸ்தூரி வெள்ளனமே அங்கே சென்று அப்போதுதான் சிறிது நேரம் முன்னம் வந்திருந்தாள்.

“போயி குளிச்சுட்டு செத்த நேரம் தூங்கு..” என்று முருகேஸ்வரி அனுப்பியிருக்க, சும்மா கட்டிலில் படுத்தபடி, கண்ணன் வாங்கி வந்து போடும் மாதாந்திரிகளை புரட்டிக்கொண்டு இருக்க, முருகேஸ்வரி அழைக்கவும் அப்படியே எழுந்து வந்துவிட்டாள்.

குளித்தவள் வீட்டில் தானே இருக்கிறோம் என்று தலை கூட சீவாது இருக்க, பார்ப்பவருக்கு நன்றாய் உறங்கி எழுந்து வந்தது போலிருக்கும் அவளின் தோற்றம்.

கமலா அவளை அப்படியொரு பார்வை பார்க்க, கஸ்தூரிக்கு அது துளியும் பிடிக்கவில்லை.

“வாங்க...” என்றவள், கஸ்தூரியைப் பார்க்க “எலும்பிச்சம் பழம் இருக்கும்.. சீனி போட்டு சாறு போடு..” என,

“ம்ம் சரிங்கத்த..” என்றவள் சமையல் அறைப்போக,

“என்ன மதினி.. மருமக உங்களுக்கு ஆக்கிப் போடுவான்னு பார்த்தா.. இங்க அதெல்லாம் நடக்காது போல..” என்று கமலா பேச,

“ஷ்...!! மெல்ல பேசு..” என்று கடிந்தார் முருகேஸ்வரி.

“அதுசரி.. பேசக்கூட பயமோ.. இப்புடி மாறிட்டீகளே..” என்ற கமலா, “எங்க வீட்ல பொண்ணு எடுத்திருந்தா இந்த நெலம வந்திருக்குமா.. ஓடிப்போனவ பொண்ண எல்லாம் வீட்டுக்கு கொண்டு வந்து... ஹ்ம்ம்.. நாளைக்கு எங்க உறவு எல்லாம் சொல்லிக்கும்படியா இருக்கும்..” என,

“கமலா இந்த பேச்செல்லாம் எதுக்கு..” என்றார் முருகேஸ்வரி.

“ஏன்.. இதுக்கு முன்ன நம்ம பேசினது இல்லையா..??!! இப்போ என்னவாம்.. இவ பவுசு தெரியாது நமக்கு..” என்று கமலா வாய் விட,

முருகேஸ்வரி பதில் சொல்லும் முன்னமே கஸ்தூரி வந்து அங்கே எலும்பிச்சை ஜூஸை வைத்தவள், இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, வெளியே வந்து செருப்பினை மாட்டிக்கொண்டு அவள்பாட்டில் நடந்துவிட்டாள்.




 
:love: :love: :love:

ஐயய்யோ ஐயய்யோ புடிச்சிருக்கு உனக்கு என்னை புடிச்சிடுருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு எனக்கும் உன்னை புடிச்சிருக்கு
துணிச்சல் புடிச்சிருக்கு உன் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம்தான் புடிச்சிருக்கு என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு
புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தெரியல........

கஸ்தூரி முடிவு சூப்பர்........ இனி படிச்சி என்னபண்ணப்போறேன் :D:D:D
இனி வேற கஸ்தூரினு பார்த்தால் இப்படி போய்ட்டாளே.........
இதுக்குனே வருவாங்க விசாரிக்க வந்தேன்னு...........

பெற்றோர் செய்யும் தப்பு பிள்ளைகளை துரத்தி கொண்டேதான் இருக்கும்........
அதுவும் பெண் பிள்ளைகளை.......
தெரிந்தாலும் அதை செய்றதுல அற்ப சந்தோசம்..........

கமல கண்ணா திரும்பவும் முதலில் இருந்தா தான்........
ஓடு ஓடு சீக்கிரம் சரி பண்ணி கூட்டிட்டு வா...........
 
Last edited:
Top