Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் 32

Advertisement

Admin

Admin
Member

அத்தியாயம் 38​

சின்ன சின்ன சொட்டுகளாக உடம்பில் ஏறிக் கொண்டிருக்கும் க்ளுகோஸ் ட்ரிப். சுலபமாய் சுவாசிப்பதற்காக முகத்தில் பொருத்தப்பட்ட ஆக்சிஜன் மாஸ்க், இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க வென்டிலேட்டர், எல்லாவற்றுக்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நொடிப்பொழுதும் அகலாமல் அக்கறையாய் கவனித்த ஸ்ரீராமும் நந்தகுமாரனும் என எதையுமே உணராமல் வாடிய ரோஜாமலராக, ராதா படுக்கையில் துவண்டுகிடக்க, நந்தகுமாரன் கூட நம்பிக்கை இழந்து பரிதவித்தான்.​

"ராம்! ராதாவை இழந்துடுவோமோனு பயமாயிருக்கு டா. அவ உயிரை காப்பாத்த முடியலன்னா நானெல்லாம் டாக்டர்னு சொல்லிக்கறதில் அர்த்தமேயில்லை…."​

நண்பன் விரக்தியில் மனசு விட்டுப் போய் பேசுவதைப் புரிந்து கொண்ட ஸ்ரீராம் கருமமே கண்ணாக தன் கவனிப்பை இன்னும் தீவிரமாக்கினான்.​

ஸ்ரீராமின் தீவிர வைத்தியமோ, இல்லை வெளியே காத்திருந்த உறவினர்களின் பிரார்த்தனையின் பலமோ ,இரவு நடுச்சாமத்தில் ராதாவின் ஸ்வாசம் சற்றே சீரானது. இரவு முடிந்து பொழுது புலருவதற்குள், ராதாவின் வெளுத்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்து செந்நிறத்தை அடைய, அதிகாலையில் கண் விழித்த ராதா சுற்றியிருந்த குடும்பத்தினரின் வயிற்றில் பாலை வார்த்தாள்.​

"இந்த இருபத்து நாலு மணி நேரத்திற்குள் எங்களையெல்லாம் பதற வெச்சிட்டியே ராதா…"​

ஸ்ரீராம் சிறு புன்சிரிப்புடன் இதைச் சொல்ல, ராதாவோ கண்ணீர் மல்க அவனைப் பார்த்து கதறினாள்.​

"என்னை ஏன் பிழைக்க வெச்சிங்க ? சாக ஆசைப்படறவளை தடுத்து நிறுத்தியிருக்கேள். நான் இனியும் வாழ்ந்து என்ன சாதிக்கப் போறேன் ராம்?"​

"இனிமேல் வாழ்வதில் ஒரு அரத்தமுமில்லைனு நீயா ஏன் நினைச்சுக்கறே ராதா? இனிமேல் தான் உனக்கு வாழ்க்கையே இருக்குனு நெனச்சு அந்த ஆண்டவன் உன்னை பிழைக்க வெச்சிருக்கலாம் இல்லையா? வொய் டோன்ட் யூ டேக் இட் தெட் வே…எப்பவுமே நேர்மறையா சிந்திக்கற ராதா இப்ப எங்கே போனாள் ? ம்…."​

உதட்டுச் சிரிப்பு மாறாமல் சொன்ன ஸ்ரீராமை விரக்தியுடன் பார்த்தாள் ராதா.​

"தண்டனைக்காக காத்துட்டிருக்கற ஒர் கொலைகாரியை நீங்களும் உங்க பங்குக்கு குத்தி வேடிக்கை பார்க்கறிங்களா ராம்?"​

"ஓ காட்! கமான் ராதா.வொய் டோன்ட் யூ அன்டர்ஸ்டாண்ட்? அந்த எமன் கிட்டருந்து போராடி உன்னை காப்பாத்தினவன் தண்டனையிலிருந்தும் காப்பாத்த மாட்டேனா? . ஐ நோ யூ வார் இன்னசென்ட்."​

ஸ்ரீராம் சொல்லி முடிக்கும் முன்னர் கத்தினாள் ராதா.​

"நோ! ஐ ஆம் நாட் இன்னசென்ட். அந்த இன்னசென்ட் ராதா எப்பவோ செத்துப் போயிட்டா. இப்போ இங்க இருக்கறது கொலைகாரி ராதா. புருஷனையே கொன்னுட்ட பாவி நான்….."​

"இன்னும் எத்தனை நாட்களுக்கு இதையே சொல்லி எல்லோரையும் முட்டாளாக்கறதா உத்தேசம் மிஸஸ் முரளி.?"​

முழந்தாளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த ராதா சட்டென்று நிமிர்ந்து பார்க்க ,அங்கே குழுமியிருந்த அத்தனை பேரின் பார்வையும் அறை வாயிலுக்குச் சென்றது.​

இன்ஸ்பெக்டர் ராஜாராமன். முரளியின் கொலை வழக்கை கையாள்பவர்.​

நான் உள்ளே வரலாமா டாக்டர்?​

கம்பீரமாய் கேட்ட மனுஷருக்கு ஸ்ரீராம் பதில் சொல்லும் முன்னர் புயலைப் போல யார் அனுமதிக்காகவும் காத்திராமல் உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண்.​

"ராதாக்கா! நான் உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி இன்ஸ்பெக்டரிடம் எல்லா உண்மையும் சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க."​

ராதாவின் அருகில் அமர்ந்து கதறியவளை அனைவரும் வியப்புடன் பார்க்க ராதாவோ பதட்டத்துடன் அவள் முகத்தை நிமிர்த்தினாள்.​

"ரேகா! உனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படியெல்லாம் உளர்றே?"​

ரேகா இல்லை என்று சொல்லும் பாவனையில் தலையை வேகமாக அசைத்தாள் .பின் உதடுகள் துடிக்க, கண்களிள் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்க, ராதாவின் கரங்களை பற்றிக் கொண்டாள்.​

"நான் உளறலேக்கா. இப்போ தான் தெளிவாயிருக்கேன். மனசுலருந்து பாரத்தை இறக்கி வெச்சுட்டு நிம்மதியா இருக்கேன்."​

"நோ! நான் நம்ப மாட்டேன். உனக்கு என்னவோ ஆயிடுச்சு.அதான் இப்படியெல்லாம் உளர்றே .அன்னிக்கெல்லாம் நல்லாத் தானே இருந்தாய்.இப்போ திடீர்னு என்னாச்சுமா உனக்கு?"​

"ஐயோ! என்னை கொல்லாதிங்கக்கா. நான் சொல்றது அத்தனையும் உண்மைனு உங்களுக்கே தெரியும். அப்புறமும் ஏன் இந்த நடிப்பு? இதுவரை நாம போட்ட வேக்ஷம் போதும்கா. நாம யாருக்காக வேஷம் போட்டோமோ அவனே போய்ட்டான்.இனியும் எதுக்காக உண்மையை மறைக்கனும்?"​

"எ….என்ன சொலறே ரேகா?"​

ராதாவிற்கு பதட்டப் பரபரப்பில் குரல் நடுங்கியது. ரேகா அவள் தோளில் சரிந்து அழ ஆரம்பித்தாள்.​

நீங்க யாரோட நல்லதுக்காக நான் செய்த கொலையை மறைத்து பழியை உங்க மேல சுமத்திகிட்டிங்களோ, அவனே போய்ட்டான்.​

ஆமாக்கா! என் பிள்ளை போய்ட்டான்.இந்த கொலைகார அம்மாவோட இருக்க பிடிக்காமல் அவனும் அவங்கப்பா போன இடத்துக்கே போய் சேர்ந்துட்டான். என்னையும் அவரையும் தனியாத் தவிக்க விட்டுட்டு போய்ட்டான்ங்கா.முதலில்​

சாதாரண காய்ச்சலாத் தானிருந்தது. அவர் கூட டாக்டர்ட்ட போகலாம் ரேகானு தலைப்பாடா அடிச்சுண்டார்.பாவி! நான் கேட்கலையே. சாதாரண காய்ச்சல்னு மெத்தனமா இருந்ததுக்கு கை மேல பலன் கிடைச்சிடுச்சு. மறுநாளே குழந்தைக்கு மூச்சு திணறி கை காலெல்லாம் இழுத்துக்க ஆரம்பிச்சிடுச்சு. டாக்டர் கிட்ட தூக்கிண்டு ஓடினோம். மூளைக் காய்ச்சலாம். டாக்டரும் அவராலான முயற்சியை பண்ணி பார்த்தார். ஆனால் என்ன பண்ணி என்ன? என் பிள்ளை பிழைக்கலே. எங்களை கதற வெச்சுட்டு போய்ட்டான்க்கா…."​

ரேகா குமுறி குமுறி அழுவதும், சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நிற்பதும் ,புரியாமல் ராதா பிரமை பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள். அடி மேல் அடி விழுந்ததில் ஏற்பட்ட தாக்கத்தில் நெஞ்சம் இறுகிப் போய் அழுகையும் கூட மறந்து தான் போனது.​

தீபக்!​

இரண்டு வயது கூட இன்னும் முழுமையாக முடியாத தீபக்,​

தத்தி தளர் நடைபோட்டு மழலை மொழி பேசி அவளை மகிழ்விக்கும் தீபக்,​

ஆன்ட்டி! உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கழுத்தை கட்டிக் கொண்டு கொஞ்சும் தீபக்,​

ஒரே மாதப் பழக்கத்தில் அவளுடன் நெருக்கமாய் ஒட்டிக் கொண்ட தீபக்,​

அவனுக்கா மூளைக்காய்ச்சல்?​

தெய்வமே! அவன் தாயை சோதித்தது போதாதா? அந்த குழந்தை என்ன பாவம் பண்ணியது? அதற்கு ஏன் இப்படியொரு கொடூரமான முடிவு? இதற்குப் பெயர் கர்மாவா இல்லை விதியா? முதலில் தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா?​

ராதாவிற்கு சட்டென்று எல்லாமே வெறுத்துப் போயிற்று. அழவும் சக்தியின்றி விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு அவள் அமர்ந்திருக்க, ரேகா தன்னை நிதானித்துக் கொண்டு நிமிர்ந்தாள்.​

"உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா என்ன நடந்ததுனு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?"​

குழப்பத்துடன் கேட்ட ஸ்ரீராமை ஏறிட்டுப் பார்த்த ரேகாவின் விழிகள் பனித்தன. இமைகள் ஈரத்தில் சிறகடித்தன.உதட்டை அழுந்த கடித்துக் கொண்டவள் தழைந்த குரலில் சொல்ல ஆரம்பித்தாள் தன் கடந்த காலத்து சம்பவங்களை.​

முறைப்படி திருமணம் நடக்கும் முன்பே முரளியை முழு மனதாக நம்பி கர்ப்பமானது, விஷயம் தெரிந்த முரளி அவளை தயவுதாட்சண்யம் இன்றி உதறி தள்ளி விட்டுப் போனது, மகள் சீரழிந்தது தெரிந்து அவள் தந்தை அவளை மகளென்றும் பாராமல் தலைமுழுகியது,​

அனைத்தையும் சொன்னவளின் குரல் தழுதழுத்து விம்மியது.​

"அநாதையா வயிற்றில் குழந்தையுடன், எதிர்காலம் பற்றிய பயத்துடன் நான் நடுத்தெருவில் நின்றபொழுது அடைக்கலம் கொடுத்தார் மோகன். பெற்றோரைக் கூட பகைச்சுகிட்டு என்னை மனைவியா ஏத்துக்கிட்டார். என் குழந்தைக்கு நல்ல தகப்பனாகவும் எனக்கு நல்ல நண்பராகவும் இருந்தார். எனக்காக தன் சொந்த வாழ்க்கையையே தியாகம் பண்ண மனுஷரை ஒரு மனைவியா சந்தோஷப்படுத்த முடியலேன்னாலும் குடும்பப்பொறுப்பையாவது நானும் பகிர்ந்துக்க நெனச்சுத் தான் நான் வேலைக்கு சேர்ந்தேன். ஒருமுறை கம்பெனி மீட்டிங் ஈ சீ ஆர்ல ஒரு ஹோட்டல்ல நடந்தப்போ மானேஜருக்கு உதவியா குறிப்புகள் எடுக்க ஒரு பி ஏ ன்ற முறையில் நானும் அங்கே போனப்போ தான் ராதாக்காவை முதன்முதலாய் சந்தித்தேன், அதுவும் ஒரு இக்கட்டான நிலைமையில்…."​

நீளமாகப் பேசியதில் களைப்புற்றவளாக ரேகா தன் பேச்சை நிறுத்தினாள். இன்னமும் விட்டத்தை வெறித்துக் கொண்டு செயலற்றிருந்த ராதாவை கண்ணீர் மல்கப் பார்த்தாள்.​

அன்று அந்த ஹோட்டல் அறையில் அவளை அணைத்துக் கொண்டு​

"நீ யாரோ எவரோ தெரியாது. ஆனால் சமயத்தில் வந்து தெய்வம் போல் உதவி பண்ணிய உன்னை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்மா…"​

என்று குமுறி குமுறி அழுத ராதா இன்று ரேகாவின் நெஞ்சில் நினைவலைகளை ஏற்படுத்தினாள்.​

 
Top