Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 26

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻




அத்தியாயம் 26

"முடிவா என்ன தான்டா சொல்றே?"



பரிதாபமாக கேட்ட அன்னையை எரிச்சலுடன் பார்த்தான் முரளி.



"இதிலே சொல்றதுக்கு என்னம்மா இருக்கு?என்னால வர முடியாது. அவ்வளவு தான். ஆளை விடு. "



"இப்படி சொன்னா எப்படிடா? என்னிக்குமில்லாமல் அதிசயமா உங்கப்பா உனக்காக பொண்ணு தேடி பார்த்திருக்கார் உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்.அவருக்காக வந்து பொண்ணை பாருடா."



"ம் நல்லாயிருக்கே உன் விளக்கம். அப்பாவுக்காக இப்போ வரச் சொல்லுவே. அப்புறம் அவருக்காக கல்யாணம் பண்ணிக்கோம்பே. உன் பேச்சை நம்ப எனக்கொண்ணும் பைத்தியம் பிடிக்கலம்மா."



"சத்தியமா அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்டா.எனக்கே இந்த சம்பந்தம் சுத்தமா பிடிக்கல.பொண்ணு வீடு சாதாரணப்பட்டவா தான் போல.ஆனால் அன்னிக்கொரு நாள் காலேஜ்ல பார்த்ததிலிருந்து சதா அந்த பொண்ணைப் பத்தியே புராணம் படிச்சுண்டிருக்கார் உங்கப்பா.அப்படியென்ன ஒசத்தியோ அவ நேக்கு புரியல.எங்கண்ணா பொண்ணு சரண்யாவுக்கு ஈடாவாளா அவ?"



"ஏண்டி அந்த பொண்ணோட ஒப்பிட்டு பார்க்க உனக்கு போயும் போயும் சரண்யா தான் கிடைச்சாளா?"



கேலியாக கேட்டுக் கொண்டே உள்ளே வந்த வெங்கட்ராமனை முறைத்தாள் கௌரி.



"ஏன்னா சரண்யாவுக்கு என்ன குறைச்சல்?"



"என்ன குறைச்சலா? அவ பொண்ணாயில்லாதது தான் குறைச்சல்.ஏய்! பொண்ணாடி பெத்து வெச்சிருக்கார் உங்கண்ணா? வானரம் சரியான வானரம்.கண்டபடி ட்ரஸ் பண்ணின்டு கால்ல ரெக்கய கட்டினப்ல எப்பப் பாரு ஊரைச் சுத்திண்டு, ஏன்னு கேட்டால் இதான் அங்கிள் பேஷன்னு வாய்சவடால் வேற. இங்கே பார் கௌரி எனக்கு மாட்டுப் போண்ணு தான் வேணும்.

மாட்டுப் பையனெல்லாம் வேணாம்."



அப்பாவின் நையாண்டிப் பேச்சில் பொங்கி வந்த சிரிப்பை அடக்க கஷ்டப்பட்டான் முரளி.அம்மாவின் முகம் போன போக்கு பார்க்க பாவமாக வேறு இருந்தது.



"இதோ பார் கௌரி! இந்த தடியன் திருந்தனும்றதுக்காக தான் நான் அந்த பொண்ணை முடிவு பண்ணினேன். சரண்யாவை இவனுக்கு ஜோடி சேர்த்தோம்னு வை அவா ரெண்டு பேரையுமே நாம தான் திருத்த வேண்டியிருக்கும். வேலியில போற ஓணானை வீட்ல எடுத்து விடுவானேன் அப்புறம் குத்துதே குடையுதேனு புலம்புவானேன்? ஈவ்னிங் உன மகனை கொஞ்சம் சீக்கிரமா வரசொல்லு. என் ஏற்பாட்டில் அவனுக்கு சம்மதமில்லன்னா நான் அவனுக்கு அப்பான்றதையே மறந்துட சொல்லு. அது சரி.ஏற்கெனவே துரைக்கு அப்பான்னு ஒருத்தர் இருக்கறது

ஞாபகம் இருக்கா என்ன?

அப்பான்ற மரியாதையும் பயமும்

இருந்தால் இப்படி வீட்டுக்குஅடங்காமல் சுத்துவானா? ஏதோ பெத்துட்ட பாவத்துக்கு இதெல்லாம் பண்றேன். இதுக்கும் அவன் எனக்கு கட்டுப்படலேன்னா எனக்கு பிள்ளையே பொறக்கலேன்னு நெனச்சுக்கறேன். தெட்ஸ் ஆல்…"



அலட்சியமாய் சொல்லிவிட்டு அகன்று விட்ட அப்பாவை கோபத்துடன் வெறித்தான் முரளி.



"ஷிட்! பிள்ளையே பொறக்கலேனு இனிமே தான் நெனச்சுக்கப்போறாராமா? ஏம்மா நான் அவருக்கு பிள்ளைன்ற நெனப்பு என்னிக்காவது உன் புருஷனுக்கு இருந்திருக்கா?."



"ஐயோ! மெதுவாப் பேசுடா.அவர் காதுல விழுந்துடப்போறது."



பயத்துடன் எச்சரித்தாள் கௌரி



"ஏண்டா கண்ணா இப்படி கோபப்படறே? உன் இஷ்டத்துக்கு மாறா இந்த கல்யாணம் நடக்க அம்மா விட்ருவேனா? சரண்யாவைத் தவிர வேற யாரையும் நான் மாட்டுப்பொண்ணா ஏத்துக்க மாட்டேனே.."



அந்த எரிச்சலிலும் முரளிக்கு சிரிப்பு வந்தது.



""வீணா சரண்யா சரண்யானு ஜெபம் பண்ணாதேம்மா.உன் கனவும் பலிக்கப் போறதில்லை.அப்பா ஆசையும் நிறைவேறப்போறதில்லை. நான் கல்யாணம் பண்ணிக்கறதாவும் உத்தேசமில்லை."



சட்டென்று எழுந்தவனை தடுத்து நிறுத்தினாள் கௌரி.



"என்னடா இது இப்படி சொன்னால் நான் என்னனு நெனச்சுக்கறது? ஈவ்னிங் வருவாயா மாட்டாயா?"



"வரமாட்டேன். மா இன்னிக்குனு பார்த்து வேணும்னே லேட்டாத் தான் வருவேன்.பை…"



கௌரி வாயடைத்துப் போய் நிற்க, அவளுடைய சீமந்த புத்திரன் தன் ஆடி காரைக் கிளப்பிக் கொண்டு பறந்தான்.

மாலையில் அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக வேலை சீக்கிரமே முடிந்துவிட எங்கே போகலாம் என்று யோசித்தான்.

சினிமாவிற்கு போக முடிவெடுத்து கிளம்பியபொழுது அன்றொரு நாள் தியேட்டரில் வைத்து ராதா அவமானப்படுத்தியது நினைவிற்கு வந்தது.



நீயேல்லாம் ஒரு ஆம்பளையா? என்று அவள் காறி துப்பியது மனதில் நிழலாய் ஓடியது.

ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நான் ஆம்பளை தான்னு நிரூபிச்சு காட்டறண்டி

என்று கருவிக் கொண்டான்.

காரை பீனிக்ஸ் மால் பார்க்கிங்கில் செலுத்துகையில் செல் ஒலிக்க எடுத்தவனிடம் கௌரி அழாத குறையாகப் பேசினாள்.



"ஏண்டா கண்ணா இப்படி பண்றே? நீ என்னடான்னா வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கறே.அவரானா நீ வந்தேயாகனும்னு சத்தம் போடறார். உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தான் கிடந்து அல்லாடிண்டு இருக்கேன். ஒரு பத்து நிமிஷம் வந்து பொண்ணைப் பார்த்துட்டு போறதுல என்ன குடியா முழுகிப் போய்டும்? இது வெறும் சம்பிரதாயம் தானே? கல்யாணமேவா நடந்துடப் போறது? அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக்க மாட்டேனா நான்? எனக்காக ஒரு தடவை வந்துட்டுப் போ ராஜா…"



"என்னம்மா புரியாமல் பேசறே? இந்த பத்து நிமிஷத்தில நான் எத்தனை காரியம் பண்ணலாம் தெரியுமா?"



"தெரியாமல் என்ன? நன்னாவே தெரியும்.இந்த பத்து நிமிஷத்தில பப்புக்கு போகலாம்.ஊரை சுத்தலாம்.இன்னும் என்னென்னவோ பண்ணலாம்.ஆனால் அம்மா பேச்சை மட்டும் காதுலயே வாங்கக்கூடாது."



வாஸ்தவத்தில் முரளிக்கு தந்தையிடம் தான் சுமுக உறவில்லையே தவிர அன்னையிடம் ஓரளவு அன்பு உண்டு. அதனாலேயே கௌரியின் வேண்டுகோளுக்கு இணங்கி வீட்டிற்கு சென்றவனை வெங்கட்ராமன் கோபமாக வரவேற்றார்.



"தொரைக்கு காலையில் சொன்னது எதுவும் காதில் ஏறலையா? ஏன் இவ்வளவு லேட்? நான் அஞ்சு மணிக்கெல்லாம்

வரச் சொன்னேனே…."



"ஐயோ! ஏன்னா வீணா விவகாரத்தை வளர்க்கறேள்? அதான் வந்துட்டானே.அவன் வந்ததே பெரிய விஷயம்.முரளி நீ போடா.போய் சட்டுனு ரெடியாகி வா..இல்லேன்னா அதுக்கு வேற உங்கப்பா கத்துவார்….டேய் போடா நாழியாயிட்டிருக்கு."



கௌரியின் கெஞ்சலில் முரளி முறைத்தபடி தயாரானான்.



" ராதா! இந்தாம்மா இதைக் கட்டிக்கோ…"



காயத்ரி கொண்டு வந்து கொடுத்த புடவையை பார்த்தாள் ராதா.மயில் கரையுடன் கூடிய அழகான அரக்கு வண்ண பட்டுப்புடவை.வெட்டிக் கொண்டு எழுந்த கோபத்தை சிரமப்பட்டு அடக்கினாள்.



"ஏம்மா இன்னும் பெரிசா ஒன்பது கஜம் புடவையை கொண்டு வந்து கொடுத்து மடிசார் கட்டிக்கச் சொலறது தானே?"



"மடிசாரெல்லாம் கல்யாணத்துக்குதான்"

என்று சொல்ல வந்த காயத்ரி மகளின் கோபம் கண்டு நிறுத்தினாள்.



"ஏண்டி கோவிச்சுக்கறே? வர்றவா பெரிய இடம்.நாமளும் கொஞ்சம் அவா அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி நடந்துக்க வேண்டாமா?"



"என்னை ஏம்மா இப்டி படுத்தறே? எனக்கு எதுவுமே பிடிக்கல. சுத்தமா பிடிக்கல. என்னை இந்த ஆத்துலேயிருந்து வெளியே அனுப்பறதுக்கு உனக்கு ஏன்மா இவ்வளவு அவசரம் ஆசை?"



அதற்கு மேல் பேசமுடியாமல் ராதா தலையை முழங்காலில் புதைத்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, காயத்ரி ஆதங்கத்துடன் அருகில் வந்து ஆதரவாய் ராதாவின் முதுகைத் தடவினாள்.



"நல்லநாளும் அதுவுமா இதென்ன அசட்டுத்தனம் ராதா? இப்போ என்ன நடந்துடுச்சுனு இப்படி அழறே? பொண்ணா பொறந்தவ என்னிக்கிருந்தாலும் இன்னொரு அகத்துக்கு மருமகளா போக வேண்டியவ தானே? பொறந்தாத்துல சின்னஞ்சிறு சுடராய் இருக்கறவ புகுந்தாத்துல குத்துவிளக்கா பிரகாசிக்கனும்ங்கற நல்ல நோக்கத்தோட தான்மா பெத்தவங்க பொண்ணுங்களை கன்னிகாதானம் செய்து வைக்கறாங்க. பொண்ணை வெளியே தள்ளறதுக்கில்ல.

அசடாட்டம் பேசி அழுதுண்டிருக்காமல் எழுந்து இந்த புடவையை கட்டிண்டு வா.பாட்டி நீ அழறது பார்த்தால் அவ வேற கோவிச்சுப்பா..எழுந்துக்கோ …அம்மா சொல்றேன்ல…"



காயத்ரி உரிமையுடன் அதட்டவும் ராதா சேலையை வாங்கிக் கொண்டு அறையினுள் சென்றாள்.



"அம்மா! அவாள்ளாம் வந்தாச்சு.ராதா ரெடியாய்ட்டாளா?"



வீட்டின் மூத்தவன் பாலச்சந்தர் பரபரப்பாக வந்தான்.



"ம் ஆச்சுப்பா.இதோ உள்ளே புடவை கட்டிண்டிருக்கா…"



"என்னம்மா இவ்வளவு நேரமா என்ன பண்ணின்டிருந்தா? சரி சரி.அவளுக்காக காத்திருக்காமல் நீ வந்தவாளை கவனி சந்தியா ராதாவை அழைச்சுண்டு வரட்டும்."



அவசரமாக ஹாலுக்கு செல்லத் திரும்பிய மகனிடம் மெதுவாக கேட்டாள் காயத்ரி.



"ஏண்டா பாலு! மாப்பிள்ளை எப்படியிருக்கார்? நம்ம ராதாவுக்கு பொருத்தம் தானா?"



"ரொம்ப நன்னாயிருக்கார்மா.நம்ம ராதாவுக்கு ஏத்தவர் தான்.முகத்தில என்னவொரு களை தெரியுமோ? சரி நீ சீக்கிரம் வாம்மா.நான் போய் மாப்பிள்ளைக்கு கம்பெனி கொடுக்கறேன்."



அவசரப்படுத்திவிட்டு பாலச்சந்தர் போய்விட தட்டுக்களில் ஸ்வீட்டும் காரமும் வைத்து கொடுத்து வந்தவர்களை உபசரித்த கையோடு ராதாவை அழைத்து போக வந்தாள் காயத்ரி.



ராதாவின் சந்தன நிறத்தை அந்த அரக்கு வண்ண பட்டுப்புடவை இன்னும் மெருகேற்றியது.கைகளில் தங்க வளையல்கள் காதுகளில் குடை ஜிமிக்கி கழுத்தில் சின்னதாக ஒரு டாலர் செயின் என்று அழகே ஆபரணமாக பாந்தமாக நின்ற மகளின் எளிய அலங்காரம் காயத்ரியின் மனதை கொள்ளை கொண்டது.ராதாவின் அழகை பெருமையில் முகம் பூரிக்க ரசித்தவள் மகளின் முகத்தில் மருந்துக்கு கூட மலர்ச்சியில்லாததை கவனித்து , தழைந்த குரலில் ,

"முகத்தை சிரிச்ச மாதிரி வெச்சுக்கோம்மா" என்றாள்.

ராதா பதிலேதும் சொல்லாமல் தலைகுனிந்து கொண்டாள். காயத்ரி அவளை ஹாலுக்கு அழைத்து வந்த பின்னும் தலையை நிமிர்த்தினாளில்லை.



"என்னம்மா ராதா என்னை நினைவிருக்கிறதா?"

வெங்கட்ராமன் சிரித்துக் கொண்டே கேட்கவும் தலை நிமிர்ந்த ராதா புன்னகையுடன் தலையசைத்தாள்.



"இவன் தான் என் ஓரே பிள்ளை முரளி."



வெங்கட்ராமன் சிரித்துக் கொண்டே அறிமுகப்படுத்த, அதுவரையில் கைகடிகாரத்தையே பார்த்துக் கொண்டு எப்பொழுதடா கிளம்பலாம் என்று நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்த முரளியும் இப்பொழுது நிமிர, அதே சமயத்தில் ராதாவும் அவன் புறமாக திரும்ப, இருவருமே எதிர்பாராத அதிர்ச்சியில் திகைத்துப் போனார்கள்.
 
Top