Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 7

Advertisement

Admin

Admin
Member

7​

சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு அலுப்புடன் ஹால் சோபாவில் வந்தமர்ந்த கமலம் நெற்றி வியர்வையை முந்தானையால் துடைத்துக் கொண்டு ஹால் கடிகாரத்தில் மணி பார்த்தாள். பன்னிரண்டு மணி.​

கணவர் சாப்பிட வருவதற்கு இன்னும் நேரமிருக்கிறது. அதுவரையில் ஒரு சின்ன தூக்கம் போடலாம் என்ற நினைப்பில் சோபாவிலேயே தலையைச் சாய்த்தவள், வாசலில் அழைப்பு மணி அலறவும், உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்.​

"வனி.....இங்கே வா வாசல்ல யாருன்னு பாரூ யாராவது சேல்ஸ்கர்லா இருக்கும் ஒண்ணும் வேணாம்னு சொல்லி அனுப்பிடு........"​

" நீயே பாரும்மா நான் வேலையா இருக்கேன்......"​

வனிதா தான் வரவில்லையே தவிர பதில் என்னவோ படு வேகமாய் வந்தது.​

"பரீட்சை முடிஞ்சு லீவ் கூட விட்டாச்சு. பள்ளிக்கூடம் போறப்போ தான் படிப்பு படிப்புன்னு எந்த வேலையும் பார்க்காமல் பறந்துடுவிங்க. இப்போ லீவுலயாவது அம்மாவுக்கு ஒத்தாசை பண்ணுவோம்ன்ற நெனப்பு கொஞ்சமாவது இருக்கா. எனக்குன்னு வந்து பொறந்திருக்கிங்கடி? இந்த வீட்ல கொஞ்ச நேரமாவது கண்ணசர முடியுதா? ம். எல்லாம் நான் வாங்கி வந்த வரம்....."​

அலுத்துக் கொண்டே எழுந்து வந்து கதவைத் திறந்த கமலம் வெளியே நின்றிருந்த கணவரைக் கண்டவுடன் திகைத்துப் போனாள்.​

"நீங்களா? நான் யாரோ சேல்ஸ§கர்லாக்கும்னுல்ல நெனச்சேன்? ஆமா இன்னிக்கு என்ன இவ்வளவு சுருக்கில கடையடைச்சு வந்துட்டிங்க? சாப்பாட்டு நேரம் கூட இன்னும் ஆகலியே ஏங்க உடம்பு சரியில்லையா? ஏன் என்னவோ போல இருக்கிங்க?"​

கட்டியவளின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் சுளித்த முகத்துடன் வீட்டினுள் நுழைந்த ராகவன் "எங்கடி உன் பொண்ணுங்க?" என்று கேட்ட தொனியில் ஒன்றும் புரியாமல் விழித்தாள் கமலம்.​

'வார்த்தைக்கு வார்த்தை நம்ம பொண்ணுங்க என்று கொண்டாடுபவர் இன்னிக்கென்ன புதுசாய் என் பொண்ணுங்கனு சொல்றார்? இவர் இப்படிக் கோபப்படறாப்ல இவளுக என்ன பண்ணித் தொலைச்சாளுங்களோ தெரியலையே....'​

மனசுக்குள் எதுவோ அச்சானியமாய் குடைந்தாலும் சமாளித்துக் கொண்டு பதில் சொன்னாள்​

"பெரியவள் ஏதோ நுழைவுத் தேர்வுக்காக கோச்சிங் க்ளாஸாமே. அதுக்குப் போயிருக்கா. சின்னவள் உள்ள தான் இருக்கா. ஏங்க என்னாச்சு? ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கிங்க?"​

"என்ன ஆகலேன்னு கேளு......மானமே போச்சுடி. உன் பொண்ணுங்களால என் மானமே போச்சு. பொண்ணாடி பெத்து வெச்சிருக்கே? நம்ம குடியைக் கெடுக்க வந்த கோடரிகாம்புகளைப் பெத்திருக்கே. நாம ரெண்டு பேரும் தெருவுல மானம் மரியாதையோட நடமாடவே கூடாதுன்னு உன் பொண்ணுங்க முடிவே பண்ணிட்டாளுங்கடி முடிவே பண்ணிட்டாங்க...."​

"ஐயோ எனக்கு தலையும் புரியலே வாலும் புரியலே. கொஞ்சம் புரியறாப்ல சொல்றிங்களா?"​

"புரியறாப்ல என்னடி பளிச்சுன்னு பகிரங்கமாவே சொல்றேன். உன் பெரிய பொண்ணு நமக்கு மாப்பிள்ளை தேடற சிரமத்தைக் கொடுக்காமல் தானே ஒரு மாப்பிள்ளையை தேடிகிட்டா. அதுக்கு உன் சின்னப் பொண்ணும் உடந்தை. இப்பப் புரியுதா நா ஏன் கோபப்படறேன்னு?"​

ராகவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனது கமலம் மட்டுமில்லை. அப்பாவின் கோபக்குரல் கேட்டு வெளியே வந்த வனிதாவும் அப்பொழுது தான் கோச்சிங் க்ளாஸ் முடிந்து வீட்டினுள் நுழைந்த மதுராவும் தான்.​

ராகவனின் பார்வையில் ஜொலித்த கோபக் கனலை இதுவரை மதுரா பார்த்ததேயில்லை.​

பாசத்தையும் பரிவையும் மட்டுமே பார்த்திருந்த அந்த விழிகளில் இன்று வெறுப்பும் கோபமும் முழு வீச்சில் படர்ந்திருக்க, மதுராவைப் பார்த்த மாத்திரத்திலேயே கொதிநிலையின் உச்சத்திற்குப போய், இடுப்பு பெல்டை கழற்றி பெண்ணென்றும் பார்க்காமல் வீறி விட்டார்.​

அழுது கொண்டே குறுக்கே புகுந்து தடுத்த கமலமும் வனிதாவும் கூட அடிபட்டனர்.​

"வேணாங்க பொம்பளப்புள்ளையக் கை நீட்டி அடிக்கறது தப்புன்னு சொல்ற நீங்களா இப்டி மாறுனிங்க?"​

ஆத்திரத்துடன் பெல்டை தரையில் விசிறி எறிந்த ராகவன் சீறினார்.​

"மாத்திட்டாளேடி உன் பொண்ணு. தலை நிமிர்ந்து நடந்த என்னை ஆயுசுக்கும் தலையெடுக்க முடியாதபடி செஞ்சுட்டாளே. நம்ம சாதிசனத்துல கல்யாணம் பண்ணினால் சீரு வரிசைன்னு அதிகம் செலவாகும்னு அசல்ல மாப்பிள்ளை பார்த்து செலவில்லாமல் கல்யாணத்தை முடிச்சுட்டயா​

ராகவான்னு அவனவன் நாக்குல பல்லு போட்டு பேசறாப்ல செஞ்சுட்டாளே. கடைக்கு வலிய வந்து வம்பு பேசிட்டுப் போறாங்கடி கடைப் பையனுங்க எதிரில கூனிக் குறுகிப் போய்ட்டேன் தெரியுமா?........"​

விக்கி விக்கி அழ ஆரம்பித்த தந்தையைப் பார்த்த நொடியில் மதுராவின் மனதிலிருந்த காதல் சத்தியமாய் கரைந்து தான் போனது. மகாத் தப்பான காரியத்தை செய்து விட்டாற் போல் மனசு கிடந்து பதைத்தது.​

"ஏண்டி அப்பா சொல்றதெல்லாம் நிஜமா? கல்லூளிமங்கியாட்டம் இருந்துகிட்டு இப்படியரு காரியத்தைப் பண்ணியிருக்கியே. தங்க கட்டிங்களாட்டம் உங்களைத் தாங்குன மனுஷனை இப்படித் தலைகுனிய வெச்சுட்டிங்களேடி. இதுக்குத் தானா உங்க ரெண்டு பேரையும் அருமை பெருமையா​

வளர்த்தோம்? ஐயோ இப்டி மோசம் பண்ணிட்டிங்களேடி......"​

கமலம் தலையில அடித்துக் கொண்டு கதறுவதைப் பார்த்த மதுராவிற்கு அந்த கணத்தில் தன் மீதே வெறுப்பு வந்தது. ராஜீவ்வோ அவன் மீது கொண்ட காதலோ அந்த ஷணத்தில் நினைவிற்கே வரவில்லை. பாசத்தை கொட்டி வளர்த்த பெற்றவர்களின் மனம் நோகுமாறு நடந்து கொண்டு விட்டோமே என்ற குற்ற உணர்வு மட்டுமே அவளை வாட்டியது.​

என்னை மன்னிச்சிடுங்கப்பா தெரியாமல் தப்பு பண்ணிட்டேன் என்று அப்பாவின் காலடியில் விழுந்து கதற வேண்டும் போல் ஒரு இனம் புரியாத உணர்ச்சி குழப்பத்தில் மதுரா தடுமாறிக் கொண்டிருக்கையில் வனிதா மட்டுமே தைரியமாய் வாய் திறந்து பேசினாள்.​

"இப்போ என்ன நடந்துடுச்சுன்னு இப்படி கத்தறிங்கப்பா? அக்கா என்ன அவரை இழுத்துகிட்டா ஓடிட்டா?....காதலிக்க......."​

வனிதா முடிக்கும்முன் அவள் கன்னத்தில் அறைந்தாள் கமலம்.​

"அப்பாவையே எதிர்த்து பேசற அளவிற்குத் துணிஞ்சுட்டயா? வெட்டி பொலி போட்ருவேன். ரெண்டு பேரும் மனசுல என்னடி நெனச்சுட்டிருக்கிங்க? வேலிக்கு ஓணான் சாட்சியா? நீ என்ன அவளுக்கு வக்காலத்து வாங்கறது? ஏன் நீயும் எவனையாவது பார்த்து வெச்சிருக்கியா?"​

"அம்மா..........."​

கண்கள் தழும்ப அறை வாங்கிய கன்னத்தைத் தடவியபடி தாயை ஏறிட்டாள் வனிதா.​

கமலமோ கீழே உட்கார்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறினாள். ஒரு பாட்டம் அழுது முடித்தவள் தீர்மானத்துடன் தலையை முடிந்து கொண்டு விரக்தியுடன் அமர்ந்திருந்த கணவனை நெருங்கினாள்.​

"போதுங்க.......இவளுங்க ரெண்டு பேரும் படிச்சவரைக்கும் போதும். பொண்ணுங்களை டாக்டராக்கனும் கலெக்டராக்கனுங்கற உங்க நெனப்பையெல்லாம் மூட்டை கட்டி வைக்கறாப்ல இப்டி ஒரு காரியத்தைப் பண்ணியிருக்காளுங்க? இவளுகளை இனிமேலும் விட்டு வைக்கலாமா?​

முதல்ல ரெண்டுக்கும் மாப்பிள்ளை பாருங்க. ஒரே சமயத்துல ஒரே மேடையில கல்யாணத்தைப் பண்ணி அனுப்பிடுவோம்......."​

'கல்யாணமா?........அம்மா உண்மையில் கல்யாணம் பண்ண நினைக்கிறாளா? இல்லை கடனைக் கழிக்க நினைக்கிறாளா?'​

பிரச்னை உச்சகட்டத்திற்கு வந்து விட்டதை அறிந்த பெண்களிருவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போக, ராகவன் மதுராவை வெறித்துப் பார்த்தார்​

"அம்மா உனக்கு உடனடியா மாப்பிள்ளை பார்க்கச் சொல்றா மது. கல்யாண மண்டபம் பார்த்து கல்யாணத்தையும் முடிக்கச் சொல்றா. ஆனால் நான் உடனடியா புக் பண்ண வேண்டியது கல்யாண மண்டபமா இல்லே அட்வான்ஸா ஆஸ்பத்திரியில் பிரசவ அறையான்னு எனக்குத் தெரியலையே.......நான் என்னம்மா செய்யட்டும்? உங்க சந்திப்பு மீனாட்சி அம்மன் சன்னதி வரை​

தானா இல்லே ஓட்டல் அறைகளிலும் சந்தி சிரிச்சுதான்னு எனக்குத் தெரியாதே......."​

ராகவன் நிறுத்தி நிதானமாகச் சொன்ன வார்த்தைகளின் வீரியத்தில் மதுரா ஏறக்குறைய செத்தே போனாள்.​

'கடவுளே அப்பா அவளை பெல்டினால் அடித்த பொழுது கூட அவளுக்கு இவ்வளவு வலிக்கவில்லையே. ஆனால் இப்பொழுது வார்த்தைகள் என்ற பெயரில் விஷ அம்புகளை அல்லவா அப்பா வீசுகிறார்? அவளை இவ்வளவு கேவலமாக எடை போட அப்பாவால் எப்படி முடிந்தது? தங்கமாக அவளைக் கொண்டாடியவர் இப்படி தகரமாய் தரையில் வீசக் காரணம் இந்தக்​

காதல் தானே? குற்றம் அவளுடையதும் தானே? படிக்கும் வயதில் காதலிக்கும் பெண்ணைப் பற்றி ஒரு அப்பாவிற்கு வேறென்ன அபிப்ராயம் இருக்கும்? இவ்வளவு மோசமான அபிப்ராயம் அப்பாவிற்கு ஏற்படும்படி நடந்து கொண்டது அவளுடைய தப்பு தானே தவிர வேறு யாரையும் குறை சொல்வதற்கில்லை.'​

அன்று ராகவனின் பேச்சில் மரித்துப் போன மதுராவின் மனசு இன்று வரை மீண்டும் உயிர்ப்பிக்கவில்லை என்பது தான் நிஜம்.​

பாழாய் போன அந்தக் காதலால் மதுரா பறி கொடுத்தது அப்பாவின் பாசத்தை மட்டுமா?​

'என் பொண்ணுங்களுக்கென்னடி குறைச்சல்? இராமாயணத்துல ஜனக மகாராஜா தன் பொண்ணு சீதைக்கு மாப்பிள்ளை தேட சுயம்வரம் வெச்சாராம். என் செல்லங்களுக்கு சுயம்வரம் வைக்கனுன்ற அவசியமேயில்லை. அதுங்க அழகுக்கும் படிப்பிற்கும் மாப்பிள்ளைங்க வரிசையிலல்ல வந்து நிற்பாங்க........'​

வாய் ஓயாமல் பெருமை பேசிய அப்பா மதுராவின் திருமணத்தை சுயம்வரமாய் இல்லை ஒரு பெருஞ்சுமையாய் நினைத்து பெற்ற கடனைக் கழிப்பதற்குச் செய்யும் ஒரு காரியமாய் அல்லவா அதை ஏற்பாடு செய்தார்?​

அவரைச் சொல்லியும் குற்றமில்லை. காதல் என்ற பெயரில் மகள் படி தாண்டிப் போய்விடும் முன் அவளுக்கு ஒரு கடிவாளம் போட்டுவிட எண்ணிய அந்த பெற்றவரின் நினைப்பில் தவறில்லை.​

மகளை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூக்கி தூர எறிந்து விட்டு அவளை மணமகளாக்கும் ஏறபாடுகளில் ராகவன் தீவிரமாய் இறங்கிய பொழுது மதுரா தன் விதியை நொந்து அழுதாளே தவிர பெற்றவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. அவளுக்கும் சேர்த்து வைத்து அன்று வனிதா தான் பேசினாள்.​

"அப்பா.......ப்ளீஸ் மது இன்னும் மேஜராகலே. அவளுக்கு பதினாறு வயசு தான் ஆறது. கல்யாணம் பண்ற வயசில்லப்பா இது....படிக்கற வயசு"​

"ஓ.......படிக்கற வயசுன்னு இப்பத் தான் தெரியுதா? படிக்கற வயசுல கல்யாணம் பண்றது தப்புனா அப்போ காதலிக்கறது மட்டுமென்ன ரொம்ப நல்ல காரியமோ?"​

பதிலுக்கு பதில் வாயடிக்கும் வனிதா கூட அன்று ராகவனின் நக்கல் பேச்சில் விக்கித்துப் போய் பேச வாய் வராமல் நின்று விட்டாள்.​

 
படிக்கிற வயசுல படிப்பு முக்கியம் தான் அதை உணர்ந்து வயது கோளாறு தான் காதல் என்பது நிதற்சணம் இனி மது நிலைமை 🤔🤔🤔🤔🌺🌺🌺
 
Top