Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் - 12

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-12
தமிழ் மன்னர்களும் தமிழகத்தை ஆண்ட பிற மன்னர்களும் சிற்பக் கலையை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டனர் என்பதற்கு பல்வேறு சான்றுகள் பாடல் வரிகளாகவும் கல்வெட்டுக்களாகவும் உள்ளன. ஒரு பெரிய கல்லைப் பார்க்கும் நமக்கு அது வெறும் கல் என்று தோன்றும். சிற்பியின் பார்வையில் அந்தக் கல்லுக்குள் ஒளிந்து கிடக்கும் சிற்பங்கள் தெரியும்.

மனம் நெகிழாத ஒருவரை நாம், உன் மனம் என்ன கல்லா என்று சொல்கின்றோம். அந்தக் கல்லுக்குள்ளேதான் நம் மனதை மயக்கும், நெகிழவைக்கும் சிற்பங்கள் பிறக்கின்றன. கல்லைத் துளைக்கும் உளியின் ஓசையும் செதில் செதிலாக கற் சிதைவுகள் சிதறி விழும் சப்தமும் ஒரு சிற்பம் பிறக்கும் முன்பு ஏற்படும் வலி. அந்த வலி நமக்கு சப்தமாகக் கேட்கிறது.

கண்ணுறுவோர் சிந்தனையைக் கவரும் அழகிய சிற்பங்களை உருவாக்கும் சிற்பிகளை மனிதக் கடவுள் என்றால் தவறில்லை. ஒவ்வொரு சிற்பிக்கும் ஒரு சிலை செதுக்குவது என்பது தவம் போன்றது. உளியின் வழியே தங்கள் நுண் திறத்தால் பல வகை சிற்பங்களை வடிக்கின்றனர். ஒரு கைதேர்ந்த சிற்பியின் உளி, கல்லை நெகிழ வைத்து எழில் கொட்டும் சிலையாக்கிவிடும் விந்தை எப்படித்தான் நிகழ்கிறதோ! அதனால்தான் பழங்கால மன்னர்கள் சிற்பிகளுக்கும் ஓவியர்களுக்கும் பாவாணர்களுக்கும் சிறப்பையும் பரிசுகளையும் அள்ளிக்கொடுத்து ஆராதித்தனர். இதைப் பல வரலாற்று ஏடுகள் நமக்குக் காட்டுகின்றன.
சிற்பக் கலை சோழர் காலத்திலும் பல்லவர் ஆட்சிக் காலத்திலும்தான் செழித்து வளர்ந்தது. ஆனாலும் இரண்டு ஆட்சிக் கால சிற்பங்களுக்கும் வேறுபாடு இருந்தன. காரணம் சிற்பிகள் வடிக்கும் சிற்பங்கள் அவர்களது மனநிலையைப் பிரதிபலிக்கும் என்பது உண்மையென்றாலும், சோழர்கள் காலத்தில் அவர்களுக்கு முழு சுதந்திரமாக இருந்ததாகத் தெரியவில்லை . சிற்பங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் ‘ஆகம’ விதிகள் பல்லவர்களின் காலத்தில்தான் வடிவம் பெற ஆரம்பித்தன. அதனால், பல்லவர் காலத்துச் சிற்பிகள் தங்கள் விருப்பம் போல், தங்கள் கலைத் திறனையெல்லாம் காட்டிச் சிற்பங்கள் வடித்தனர். சோழர் காலத்தில், ஆகம விதிகள் வலுப்பெற்று இருந்தன. எனவே‘ இப்படித்தான் சிலைகளை வடிக்க வேண்டும்’ என்ற கட்டுப்பாடுகளை உருவாக்கி வைத்திருந்தனர். இதனால், தங்கள் கலைத்திறனையும் எண்ண ஓட்டங்களையும் சோழ சிற்பிகளால் முழுவதுமாக சிற்பங்கள் வழியே வெளிக் கொணர முடியவில்லை.


சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரை வென்று இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான் எனச் சிலம்பு கூறுவதில் இருந்து அப்போதுதான் முதன்முதலாக கற் சிற்பங்கள் தென்னிந்தியாவில் தோன்றின என்பது நமக்கு புலப்படுகிறது.

இத்தனைச் சிறப்புகள் கொண்ட சிற்பங்களை பார்த்ததும் உடனே நினைவில் வருவது உலகப் புகழ் கொண்ட மாமல்லபுரம்தான். மாமல்லபுரம் பல ஆயிரம் ஆண்டுக்காலப் பழமைச் சிறப்புடையது. சங்க இலக்கியத்தில் கூட அந்த ஊரின் பெயர் ‘நீர்ப் பெயற்று’ என்று குறிக்கப்படுகிறது. இங்கு துறைமுகங்கள் இருந்ததையும் வெளிநாட்டு வாணிபங்கள் நடந்ததையும் அறிகிறோம். இங்கு பல்லவ மன்னர் கலைநயங்களைப் பாறைகளிலே சிற்பங்களாகவும், குகைக்கோயில்களாகவும், குடவரைக்கோயில்களாகவும், கடற்கரைக் கோவில்களாகவும் அமைத்துள்ளார்கள். அவைகள் இன்றளவும் பழமையின் கர்வத்தோடு கம்பீரமாய் இருக்கின்றன.

சிற்பங்களை வடிக்கும் கலை பற்றி அறியப்போகிறோம் என்ற பொய்யான காரணத்தோடு அபிநயாவும் குமரேசனும் திரும்பவும் மாமல்லபுரம் பயணமானார்கள். அரசாங்க வாகனத்தை பயன்படுத்தாமல் குமரேசனின் காரில் சென்றார்கள். காரில் போகும்போது வழி நெடுங்கிலும் தொனதொன என பேசிக்கொண்டே வந்தான் குமரேசன். வேழவேந்தனை பற்றின சிந்தனையில் குமரேசனின் பேச்சு இவள் சிந்தையில் பதியவில்லை.

“ஹல்லோ....சிஸ்டர் இந்த உலகத்தில்தான் இருக்கீங்களா?” புருவத்தை சுருக்கி ஒரு ஆராய்ச்சி பார்வையோடு நோக்கினான் குமரேசன்.

“சாரி...நான் எதையோ நினைச்சிகிட்டு இருந்தேனா! நீங்க பேசியதை கவனிக்கல...” பேசிக்கொண்டே அவள் முகத்தை ஏறிட்டவள் அவனுடைய ஆராய்ச்சி பார்வையால் முகம் சிவந்தாள்.

“ம்ம்...நீங்க எதை நினைச்சிகிட்டு வறீங்கன்னு புரியுது.” என்று தலையை சாய்த்து அவன் சிரிக்கவும், இவளுக்கு மேலும் முகம் சிவந்து தர்மசங்கடமாகிப்போனது.

மேகலா உண்மையிலேயே கொடுத்து வச்சவதான். என்று மனதுக்குள் குமரேசனை மெச்சினாள்.

இவள் இன்று காலையில் வீட்டுக்கு போனப்போதுக்கூட எப்படியெல்லாம் கவனிச்சான். ஏன் மேகலாவே தன் கணவனை கிண்டல் செய்தாளே!.

அந்த நிகழ்வை ஒருமுறை மனக்கண்ணில் நிறுத்தினாள்.

முதலில் வேழவேந்தனை கண்டுபிடிக்க வேண்டும். பிறகு தோழி மேகலாவை தேடிச்செல்ல வேண்டும் என்று அவள் நினைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் இத்தனை வருட இடைவெளியில் மேகலாவின் போன் நம்பர் மிஸ்ஸிங். அதே வீட்டில்தான் இருப்பாளா? என்ற சந்தேகம் இப்படிப்பட்டதான பல குழப்பங்களில் மேகலாவை தேடும் முயற்சியில் சற்று பின்னடைவு ஏற்ப்பட்டது. அதாவது அந்த முயற்ச்சியை சற்று பின்னோக்கி வைத்திருந்தாள்.

நேற்று மாலை காரை நிறுத்திவிட்டு டிரைவர் சண்முகம் ஹோட்டலுக்குள் போய்விட, இவளோ அந்த மாலை வேளையின் இதமான காற்றுக்காகா காரின் கதவை பாதி திறந்து வைத்தப்படி கண்மூடி அமர்த்திருந்த வேளையில்,

“காரை சற்று முன்னாடி எடுக்க முடியுமா?” என்று கேட்டவனை கண்திறந்து பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சி பரவியது.

காரணம் அந்த குரலுக்கு சொந்தக்காரன் மேகலாவின் கணவன் குமரேசன்தான். அந்த இடத்திலே அதுவும் எதிர்ப்பாராதா விதத்தில் அவனுடைய சந்திப்பு நிகழவும் சொல்லிலடங்கா மகிழ்ச்சியடைந்தாள். காரிலிருந்து இறங்கி வந்தாள்.

“அட...நீங்க...அபிநயாதானே? எப்படி சிஸ்டர் இருக்கீங்க? உங்களை பார்த்துரொம்ப வருஷமாகுது. நல்லா இருக்கிங்களா? எந்த ஊருல இருக்கீங்க?”

“ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க? மேகலா...எப்படி இருக்கா? எத்தனை குழந்தைகள்.” அபிநயாவின் குரலில் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே வெளிப்பட்டது.

“எல்லாரும் நல்லா இருக்கோம். உங்களை பற்றி பேசாதா நாளே இல்லை. தினமும் உங்களை பற்றிதான் பேசிகிட்டு இருப்போம்.”

“அப்படியா...? மேகலாவை நான் உடனே பார்க்கனுன்னு தோணுது. ஆமா எத்தனை குழந்தைன்னு சொல்லவே இல்லை.?“

“ரெண்டு குழந்தைங்கள். பெரியவன் பாஸ்ட் ஸ்டேண்டடு படிக்கிறான். இரண்டாவது பையன் இப்பதான் பொறந்திருக்கான். பொறந்து மூனு மாசமாகுது. சரி வாங்க வீட்டுக்கு போகலாம்.”

“இப்பவேவா...முதல் முதல் குழந்தையை பார்க்க வரும்போது...ஓகே எனக்கு அட்ரஸ் மட்டும் கொடுங்க நாளைக்கு காலையில வரேன்.”

அதன் பிறகு தன்னுடைய பிசினஸ் பற்றியும் அடுத்து மேகலாவின் அப்பா இறந்த செய்தியையும் சொன்னான். இப்போ நாங்க மேகலாவின் வீட்டில்தான் இருக்கிறோம். உங்களுக்குதான் அந்த வீடு தெரியுமே நாளைக்கு அங்க
வந்துடுறீங்களா?”

“ஓ...கண்டிப்பா வந்துடுறேன். ஒரு சின்ன உதவி...நான் அங்க வரப்போகிற விஷயம் மேகலாவுக்கு தெரிய வேணாம். சஸ்பென்சா இருக்கட்டுமேன்னுதான்....”

“ஓகே...நான் உங்களை இங்க பார்த்த மாதிரிக்கூட காமிச்சிக்க மாட்டேன் போதுமா?”

“ஓகே...தேங்கீவ்”

அபிநாயாவின் வீட்டுக்கு பலமுறை இவள் சென்றிருப்பதால் வீட்டை கண்டுப்பிடிப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை. தோழியின் பிள்ளைகளுக்கு ட்ரெஸ், விளையாட்டுப் பொருட்கள் என்று வாங்கிக்கொண்டு அடுத்த நாள் காலையின் மேகலாவை கணச்சென்றாள். இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருந்த மேகலா தோழியின் வரவைக் கண்டு பூரிப்படைந்தாள்.

"இத்தனை நாள் எங்க போயிருந்த அபி? போன் பண்ணினா சுவிட்ச் ஆப் னு வருது... உன்னை பார்த்து எத்தனை வருஷமாகுது தெரியுமா..." என்று கண்கலங்கிய தோழியை அணைத்து கொண்டாள்.

"அழாதே மேகலா எனக்கும் உன்ன பாக்கணும்னு ஆசைதான். ஆனால் என் வாழ்க்கையில எதெல்லாம் நடக்கக் கூடாதோ அது எல்லாம் நடந்துவிட்டது. அதைப்பற்றி உன்கிட்ட நிறைய பேசணும். ஆனா அதுக்கான நேரம் இது இல்ல... நீயும் குழந்தை பெத்த பச்சை உடம்புக்காரி உன்கிட்ட கண்டதெல்லாம் சொல்லி கஷ்டப்படுத்த நான் விரும்பல... ரெஸ்ட் எடுத்துக்கோ. ஒரு உதவிக்காகதான் உன்னை தேடி வந்தேன். நல்ல வேளை உன் வீட்டு அட்ரஸ் எல்லாம் அப்படியே இருக்கிறதால கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸி ஆயிடுச்சு..."

"என்னடி உதவி சொல்லு உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம்." என்று பேசிக்கொண்டிருக்கும் போதே மேகலையின் கணவன் குமரேசன் உள்ளே வந்தான்.

"ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கீங்க கேட்டவனின் முகத்தில் ஹன்டர் வாட்ஸ் பல்பு எரிந்தது.

"நல்லா இருக்கேன் நீங்க மேகலா குழந்தை எல்லாம் எப்படி இருக்கீங்கன்னு பார்க்கத்தான் வந்தேன்..."

“இந்த கதை தானே வேணாங்கறது பாக்கணும்னு எண்ணம் இருந்தா அப்பவே வந்திருக்கனும். இத்தனை வருஷம் கழிச்சிதான் எங்க ஞாபகம் உனக்கு வந்திருக்குப்போல..." செல்லமாக கோபித்துக் கொண்டாள் மேகலா.

"மேகலா வராதவங்க வந்திருக்காங்க நிற்கவைத்து பேசிகிட்டு இருக்கே முதல்ல உடகாரவச்சி பேசு. நான் போய் உங்களுக்கு எளநீ வெட்டிட்டு வரேன்..."

"ஆமா நீ ஏதோ படிக்கிறதா சொன்னாங்க இப்ப படிச்சு முடிச்சிட்டியா இன்னும் படிச்சுக்கிட்டு தான் இருக்கீயா ?” என்று கேட்ட மேகலாவுக்கு தான் வகித்துக்கொண்டிருக்கும் பதவியை பற்றி கூறினாள் அபிநயா.

இன்ப அதிர்ச்சியில் மடியில் வைத்திருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு எழுந்தே விட்டாள் மேகலா.

“அப்பன்னா நீ கலெக்டரா பெரிய பதவில் இருக்கீ...ங்க உங்கள... உன்ன...நான் பழைய மாதிரியே நினைச்சிகிட்டேன்.” தோழியின் பதற்றம் அபிநயாவுக்கு சிரிப்பை உண்டாக்கியது.

“ஏன் கலெக்டர்னா ரெண்டு கொம்பா முளைச்சிருக்கு அடி போடி எப்போதுமே நான் உன்னுடைய பழைய அபி தான் பதவியோ பணமோ நட்புக்கு முன்னாடி தூசுமாதிரி புரியுதா..?”

“என்னதான் இருந்தாலும் நீ அரசாங்கத்தில் வேலை செய்யுற...மாவட்ட ஆட்சியாளர். என்னுடைய பிரண்ட் ஒரு கலெக்டர்ன்னு சொன்னாக்க எனக்கு எவ்வளவு சந்தோஷமா பெருமையா இருக்கு தெரியுமா..!”

இளநீர்ரோடு உள்ளே நுழைந்த குமரேசனிடம் தன் தோழியை பற்றி பெருமையாக கூறினாள் மேகலா.

"அவன் முகத்திலும் இன்ப அதிர்ச்சி பரவியது. சிஸ்டர் நீங்க கார்ல வந்து இறங்கும்போதே ஏதோ பெரிய பதவில இருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனா இவ்வளவு பெரிய பதவில இருப்பீங்கன்னு நினச்சிப்பார்க்கல. எங்க வீட்டில வசதியெல்லாம் இல்லை கொஞ்சம் அட்சஸ் பண்ணிக்கோங்க என்று சங்கோஜத்தோடு நெளிந்தவனை பார்த்து,

“நீங்க ரெண்டு பேரும் என் மனசை கஷ்டப்படுத்திறீங்க...இன்னொரு முறை இப்படி பேசினீங்கன்னா நான் இங்கேருந்து கிளம்பிடுவேன்..” என்று போய் கோபத்தோடு பேசினாள்.

“ஐயையோ...அப்படியெல்லாம் சொல்லாதீங்க...”குமரேசன் பதறிப்போய் பேசினான்.

“அப்பன்னா...இந்த வாங்க போங்க..உங்கார வசதியில்லை இப்படியெல்லாம் பேசக்கூடாது ஓகே வா?”

“ஓகே...ஓகே...” இரண்டுபேரும் கோரசாக குரல் கொடுத்தனர். அதைப்பார்த்து இவளுக்கு தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.

“சரி...குட்டிப்பையனை இப்படி கொடு...” என்று மேகலா மடியில் இருந்த குழந்தையை தூக்கி தன் மடியில் போட்டுக்கொண்டு வாங்கிவந்திருந்த புது ட்ரெஸ்சை போட்டுவிட்டாள்.

“ஏய் மேகலா இப்படி மசமசன்னு உட்கார்ந்திருக்கேயே வராதவ வந்திருக்காளே அவளுக்கு பிடித்த கறி மீனு இதெல்லாம் சமைச்சிப்போடனுன்னு உனக்கு தோணுதா?”

தோழியை ஆச்சரியத்தோடு பார்த்தாள் மேகலா.

“என்னடி அப்படி பார்க்குறே?”

“இல்ல... இதெல்லாம் நீ சாப்பிட மாட்டியே அதனாலதான்...”

“அதெல்லாம் அப்போ இப்ப சாப்பிட மாட்டேன்னு சொன்னேன்னா?”

“அட இது தெரியாம போயிடிச்சே இந்த மரமண்டைக்கு, செத்த நேரம் உக்கார்ந்திரு ஒரு அரைமணி நேரத்திலே நீ கேட்ட எல்லாத்தையும் செஞ்சி முடிச்சிடுறேன்.”

தோழிகள் பேசுவதை சற்று தூரத்திலிருந்து கேட்டுக்கொண்டிருந்த குமரேசன் உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

மேகலா சொன்னதுப்போல விதவிதமாக சமைத்து தள்ளிவிட்டாள். வேழவேந்தனுக்காவே பல வருடங்களாக பழகிக்கொண்ட உணவுப்பழக்கம் என்பதால் முகம் சுளிக்காமல் ரசித்து சாப்பிட்டாள்.

வேழவேந்தன் மேல் எவ்வளவு காதல் இருந்தால் இப்படில்லாம் தன்னை மாற்றிக்கொண்டிருப்பாள் என்று எண்ணியப்படி கணவனை ஏறிட்டாள் மேகலா. அவனும் அவள் சொல்ல நினைத்ததை ஆமோதிப்பதுப்போல் தலையை அசைத்தான்.

அதன் பிறகு...

குமரேசன் வேழவேந்தனை தேட வந்ததே அபிநயாவின் உண்மையான காதலை வாழ வைக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடுதான்.

காரிலிருந்து அந்த இடத்திற்கு அருகில் செல்லச் செல்ல பல்லவர் காலத்தில் சிற்பிகள் சிலைகளை வடிப்பது போன்ற ஒரு காட்சி மனத் திரையில் ஓடியது. கடற்கரை காற்றில் கலந்து செவிகளுக்குள் சிற்பம் செதுக்கும் ஓசை விழுவது போல் தோன்றியது. மாமல்லைக் கடற்கரை சிற்பங்களை காணச் செல்வதற்கு முன்பே கிழக்குக் கடற்கரை சாலையின் ஓரத்தில் சிற்பக் கூடங்கள் காணப்படுகின்றன. அவை இவள் கவனத்தை இழுத்தன. அவர்களிடம் விசாரித்தால் அவனைப் பற்றின செய்தியை தெரிந்துக்கொள்ளாலாம் என்று தோன்றவே அதற்குள் சென்றார்கள். ஒவ்வொரு சிற்பக் கூடத்திலும் நான்கு ஐந்து பேர் பணியாற்றுகின்றனர். சிற்பக் கூடங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதி கல்லாகவும் மீதி உருவமாகவும் இருக்கும் சிற்பக் கற்கள் நின்றுகொண்டு இருக்கின்றன. சிற்பம் படைக்க வழி கொடுத்து விலகிய சிறு சிறு கற் துண்டுகள் தரையில் சிதறிக் கிடக்கின்றன.

வரிசையாக உள்ள சிற்பப் பட்டறைகளில் ஒன்றில் மட்டும் சிலைகள் நிறைய காணப்பட்டது. அந்தப் பட்டறைக்குள் சென்று நாங்கள் ஊடகத்திலிருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் துவங்கினார்கள். அந்த சிற்பக் கூடத்தின் உரிமையாளர் சிற்பம் வடிக்கும் முறைகள், உளிகளின் வகைகள் பற்றி விளக்கினார். அவர் கூறியது;-

“கல்லினால் வடிக்கப்படும் சிற்ப வடிவங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

பிரதிமை உருவங்கள் என்பவை சிலரை அப்படியே சிலை வடிவம் போல உருவாக்குவனவாகும்.​
தெய்வ உருவங்கள் என்பவை சிவன், முருகன், திருமால் உள்ளிட்ட கடவுள் உருவங்கள் ஆகும்
கற்பனை உருவங்கள் என்பவை காமதேனு, கற்பகமரம் போன்றவை ஆகும். இயற்கை உருவங்கள் என்பன மரம், செடி, கொடிகளாகும்.

சிற்பங்களை செதுக்கும் கற்களை காஞ்சிபுரம் மாவட்டம் வாலாசாபாத் அருகில் லிங்கபுரம் என்ற கிராமத்தில் இருந்து வாங்கி வருகிறோம். கன அடி மதிப்பில் இந்தக் கற்களை வாங்கி வருகிறோம். திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களிலும் சிற்பம் செய்யும் கற்கள் கிடைக்கின்றன. இந்த லிங்கபுரம் எங்களுக்கு பக்கம், இந்த ஊர் கல் விலையும் குறைவு. அதனால் லிங்கபுரத்திலேயே கல் வாங்குகிறோம். பக்கத்தில் இருக்கும் அரசு சிற்பக் கல்லூரியில் எனது தாத்தா, எனது தந்தை ஆகியோர் பேராசிரியர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் சிற்பம் செய்வதைக் கற்றுக் கொண்டேன். நாங்கள் கருங்கல் சிற்பம், சுதை (சிமெண்ட்) சிற்பம் போன்ற சிற்பங்களை செய்கிறோம். இதோ இந்த சிற்பம் செய்ய (மூன்று அடிகொண்ட கல் சிற்பத்தைக் காண்பிக்கிறார்) பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை ஆகும். இதன் விலை 15000 ரூபாய். இங்கு சிலைகளை செய்து கடற்கரைக் கோவில் அருகில் உள்ள எங்கள் விற்பனைக் கூடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வோம்.


“அப்படி என்றால் விற்ப்பனைக்கூடம் வைத்திருந்த வேழவேந்தனை தெரியுமா?” பட்டென்று கேட்டே விட்டாள்.

அவர் முகத்தில் அதிர்ச்சி கலந்த வியப்பு தெரிந்தது.

“ஓ...நல்லாவே தெரியுமே!”

குமரேசனும் அபிநயாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“இப்ப எங்க இருக்கிறார்? அவரைப்பத்தின விஷயம் ஏதாவது தெரியுமா?” என்ற குமரேசனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“நீங்க...போலீஸ்சா?” குரலில் சிறு நடுக்கம் தெரிந்தது.

“போலீஸ் எல்லாம் இல்லைங்க...சும்மா அவரைப்பத்தி...”

“இல்லம்மா...எனக்கு அவரைப்பத்தி ஒன்னும் தெரியாது.”

“பிளீஸ் சார்...உங்களுக்கு தெரிஞ்சா தயவுசெய்து சொல்லுங்க.?”

“அந்த பையனுக்கு ஒரு பெரிய பிரச்சனையாம் அதனால தலைமறைவாயிட்டதா சொன்னாங்க மத்தப்படி எனக்கு ஒன்னும் தெரியாது. உங்களுக்கு மேற்கொண்டு விவரம் தேவைன்னா என் மச்சாகிட்ட கேட்டீங்கன்னா சொல்லுவாரு. கடை அட்ரஸ் எழுதிக்குடுக்குறேன் அவருகிட்ட கேட்டீங்கன்னா சொல்லுவாரு.”

இதற்குமேல் இவருகிட்ட கேட்குறது வேஸ்ட் என்று எண்ணியப்படி அவர் கொடுத்த அட்ரஸ்சை கண்டுபிடித்து அந்த இடத்துக்கு சென்றார்கள்.

அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு கோயில் சிலைகள் என்று பேச்சை ஆரமிக்க, உடனே அவர் மட மட வென்று தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் ஒப்பிக்க ஆரமித்தார்.

பெரும்பாலும் கோவில்களுக்குத்தான் அதிகமான சிலைகள் செய்யக் கேட்டு வந்து முன்பணம் கொடுப்பார்கள். அதிலும் வட மாநிலங்களில் இருந்துதான் நிறைய பேர் வருவார்கள். தமிழகத்தில் உள்ள பெரும் பணக்காரர்கள் தங்கள் பண்ணை வீடுகளில் வைக்க இயற்கை உருவங்கள், கற்பனை உருவங்கள் போன்ற வகைகளில் சிலைகளை செய்யச் சொல்வார்கள். அந்தக் காலத்தில் வெறும் உளியைக் கொண்டுதான் சிற்பம் செதுக்கினார்கள். இப்போது கற் துண்டுகளை அறுக்க இயந்திரம் இருக்கிறது. முதலில் கல்லில் சாந்துக் கலவையால் குறித்து விடுவோம். பின்னர் அறுத்து எடுக்க வேண்டிய பகுதிகளை கல் அறுக்கும் இயந்திரத்தால் நீக்கிவிட்டு உளிகளால் சிலை செய்யத் தொடங்குவோம். உளிகள் கூர்மை மழுங்கினால் பக்கத்தில் (பள்ளம் தோண்டியுள்ள பகுதியை காட்டுகிறார்) உள்ள உளி தீட்டுக் கலனில் கரித் துண்டுகள், உமி போன்றவற்றை போட்டு விசைக்காற்று செலுத்தும் இயந்திரத்தால் தீ உருவாக்கி உளிகளை கூர் தீட்டுவோம்.
சிற்பம் செய்யும் வேலைக்கு வருவதில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. பக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்து சிற்ப வேலைக்கு வரும் மாணவர்களை விட, தன் தந்தையிடமோ அல்லது வேறு எவரிடமோ தொழில் கற்றவர்கள்தான் சிற்ப வேலைக்கு வருகின்றனர். மன்னர் காலத்தில் பெரும் புகழோடு இருந்த கல் சிற்பக் கலைஞர்கள் நாளைடைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு கல் சிற்பங்கள் மூலம் கோவில்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவது குறைந்தது. கல் சிற்பத் தொழிலாளர் பலர் வேலையிழந்து மாற்றுத்தொழிலுக்குச் சென்று விட்டனர். தற்போது குறைந்தளவே தொழிலாளர்கள் கல் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும் சிற்பம் செய்யும் பணி ஒரு ஆத்ம சுகத்தைக் கொடுக்கிறது.” என்று அவர் கூறினார்.

“உங்ககிட்ட பேசினதுல நிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டோம். ரொம்ப நன்றி சார்...எங்களுக்கு ஒருத்தரை பத்தின டீட்டெயில் வேணும் சொல்ல முடியுமா?”

“ஓ...சொல்லுங்க யாரைப்பத்தி தெரியனும்?”

“வேழவேந்தன்....”

பெயரை கேட்ட மறுநிமிடமே அவர் முகம் கறுத்துப்போனது.

“சார்...அவன் ஒரு பிராடு அவன் அப்பன் ஒரு குற்றவாளி ரெண்டு பேரும் ஜெயில்ல களி தின்றதா கேள்விப்பட்டேன். மத்தபடி அவனைப்பற்றி ஒன்னும் தெரியாது. அவனை விசாரிக்கிறீங்கன்னா அவனுக்கும் உங்களுக்கும் ஏதோ கொடுக்கல் வாங்கல் இருக்குன்னு தெரியுது. உங்களுக்கு ஒன்னு சொல்லட்டா அவனைப்பத்தின எல்லா விஷயமும் தெரிந்தவர் அவனுடைய சித்தப்பாதான் அவரை புடிச்சா எல்லாத்தையும் கறந்துடலாம்.”

எதுவுமே பேசாமல் சித்தப்பா போன் நம்பரை வாங்கிக்கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.
வேழவேந்தனின் சித்தப்பாவை சந்திக்க கல்லூரிக்குள் சென்று அங்கு இருந்த வேழவேந்தனின் சித்தப்பாவை சந்தித்தனர். அவரை பார்த்தவுடன் அபிநயா அதிர்ந்துப்போனாள். இதற்கு முன் அவரை எங்கோ பார்த்ததுப்போல் தோன்றியது. அவரிடம் சிற்பப் படிப்புப் பற்றி கேட்பதுப்போல் பேச்சிக்கொடுத்தார்கள். அவர் கூறியது: “தமிழகத்திலேயே மாமல்லபுரத்தில் மட்டும்தான் அரசு சிற்பக் கல்லூரி உள்ளது. இங்கு கோவில், கட்டடக் கலை, மரபு சிற்பம், கல் சிற்பம், சுதை சிற்பம், மரச் சிற்பம், உலோக சிற்பம், மரபு ஓவியம் மற்றும் வண்ணம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இவைகள் நான்கு ஆண்டு படிப்பு ஆகும். ஆண்டுக்கு மாணவர்களிடம் மிகவும் குறைந்த அளவே அதாவது ஆண்டுக்கு 2500 ரூபாய் மட்டுமே கட்டணமாகப் பெறுகிறோம். ஆனாலும் ஆண்டுதோறும் புதிய மாணவர் சேர்க்கை குறைந்த அளவே இருக்கிறது. இக்கல்லூரியில், கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை வடித்த சிற்பி கணபதி ஸ்தபதி கல்லூரி முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது”

அந்தக் கல்லூரியை பார்த்தபோது, ராசராச சோழன் தஞ்சை பெரிய கோயில் அமைக்க சிற்பிகளை இருத்தி வைத்த இடம் போல் காட்சியளித்தது. கூடவே, பொறியியற் கல்லூரிகளை போட்டி போட்டுக் கொண்டு தனியார்கள் தொடங்குகின்றனர். அதற்கு அரசும் நிதி உதவியும் ஊக்கமும் அளிக்கிறது. இந்த சிற்பக் கல்லூரிக்கு இன்னும் நிதி அளித்து ஊக்கம் தந்து சிற்பக் கலையின் சிறப்பைப் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்லூரியை மேம்படுத்தினால் சிற்பக் கலை சிதையாமல் இருக்குமே என்ற எண்ணமும் தோன்றியது. அரசு ஆவன செய்தால் நல்லதுதான். செய்வார்களா? என்ற கேள்வியோடு இருவரின் முகங்களையும் ஏறிட்டார்.

இருவரும் வேழவேந்தனைப்பற்றி மெல்ல பேச்சிக்கொடுத்தார்கள்.

அடுத்த நொடியே அவர் பார்வையில் ஒரு கூர்மை தெரிந்தது.

“இதற்கு முன்பு உங்களை நான் பார்த்திருக்கிறேன்...”

“எனக்கும் அப்படித்தான் தோணுது ஆனால் எங்கே என்றுதான் தெரியல...”

“எஸ்...இப்ப எனக்கு நினைவு வந்துடிச்சி, நீங்க வேழவேந்தன் கூட எங்க ஊருக்கு வந்திருக்கீங்க அப்ப உங்களை பார்திருக்கிறேன்.”

“ஆமாம்....அமாம்...”என்று மகிழ்ச்சியோடு தலையசைத்தாள் அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் தழும்பியது.

சுமார் அரைமணிநேரம் அவரோடு பேசிவிட்டு அவர் சொன்ன தகவலை உள்வாங்கி விடைபெற்றுக்கொண்டு வெளியில் வந்தப்போது எதிரில் ஒரு கல்லை உளியைகொண்டு சுத்தியலில் அடிக்க அந்த அடியை வாங்கிக்கொண்டிருந்த கல்லில் இருந்து கடவுள் சற்று நேரத்தில் வெளிப்பட்டார். என்ன ஆச்சர்யம் அப்போதுதான் அபிநயாவுக்கு புரிந்தது பல அடிகள் வாங்கினால்தான் பக்குவம் அடையமுடியும் என்று .
 
Last edited:
Top