Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்- 26

Advertisement

daisemaran

Well-known member
Member
“நீதான் எந்தன் அந்தாதி!”

அத்தியாயம் 26



வேழவேந்தனையும் அவனுடைய குழந்தையையும் அந்த ஷாப்பில் பார்த்த மறுநிமிடம் அபிநயாவின் மனது படபடத்தது. உடல் மெல்ல நடுங்க தொடங்கியது. நடுக்கத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தாள். சற்று நேரத்திற்குப் பிறகு,

இனிமேலும் இயல்பாக அமர்ந்திருக்க முடியாது என்று தோன்றவே இருக்கையை விட்டு எழுந்தாள் அபிநயா.


"மேடம்... என்ன ஆச்சு மேடம்!! ஏன் எழுதிட்டீங்க... கொஞ்ச நேரம் இருங்க, புது கலெக்ஷன் இருக்கு எடுத்துக் காட்டுகிறேன்...!!"

என்றார் கடையின் ஓனர்.


" இல்ல.. ஆல்ரெடி ரொம்ப லேட்டாயிடுச்சு அம்மா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க, இன்னொரு நாளைக்கு வரேனே..."


" மேடம் வந்துட்டு எதுவும் வாங்காமல் போனீங்கன்னா எப்படி? வந்ததுக்கு ஏதாவது ஒன்னு வாங்கிட்டு போனீங்கன்னா எங்களுக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்..."


என்று தணிந்த குரலில் பேசிய அந்த கடைக்காரரின் பேச்சை அலட்சியப்படுத்திவிட்டு போக மனதில்லாமல் தயங்கி நின்றாள் அபிநயா.


" மேடம் இந்த கம்மல் செட்டு நல்லா இருக்கா பாருங்க!!.. இல்லன்னா இந்த செயின் இது எல்லாமே நியூ மாடல் தான்..." என்று இரண்டு கண்ணாடி பாக்சை அவளுக்கு எதிரில் வைத்தார் கடைக்காரர்.

அவள் அமைதியாய் நிற்கவும்,


"மேடம் இதில் இருக்கிறது எதுவுமே பிடிக்கலையா...?" என்றார் சோர்ந்த குரலில்.


"லாஸ்ட் டைம் எல்லாமே நல்லா இருந்துச்சு, இன்னைக்கு என்னமோ எதுவுமே பிடிக்கல..., ஏதாவது ஒரு மாடலை நீங்களே எடுத்து கொடுத்துடுங்க வந்ததுக்கு எதுவுமே வாங்காம போக கூடாது பாருங்க அதுக்காகத்தான்..." என்று சொல்லும்போது அவள் பார்வை வேழவேந்தன் மேல் படிந்து மீண்டது.


" மேடம் பிரேஸ்லெட் தரவா அது உங்க கைக்கு ரொம்ப அழகா இருக்கும்..."


"ம்ம்... கொடுங்க..."


நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த அழகான பிரேஸ்லெட்டை கடைக்காரர் எடுத்துக் காட்டவும், அதை சரியாக் கூட பார்க்காமல் இதையே பாக்ஸில் போட்டு கொடுத்துடுங்க எவ்வளவு ரூபா..." என்று கேட்டு தன் கைப்பையிலிருந்து பணத்தை நீட்டினாள்.


"டாடி... நீங்க காமிக்கிறது நல்லாவே இல்ல டாடி, எனக்கு இது தான் வேணும்..."
அந்த நேரத்தில் குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டது.


"வாய மூடு.. உன்னுடைய இஷ்டத்துக்கு எல்லாம் வாங்கித் தர முடியாது. நான் எது வாங்கி தரேனோ அதைதான் நீ போட்டுக்கணும் சரியா..."

குழந்தையை மிரட்டும் தொனியில் அவனுடைய குரல்.


அபிநயாவிடம் மீதி பேலன்ஸ்சை கொடுத்தவர் வேழவேந்தன் பக்கம் திரும்பி,


" சார்.. சார்.. ஏன் சார் குழந்தையை திட்டுறீங்க அதுக்கு எது பிடிக்குதோ அதை வாங்கி கொடுத்துடுங்களேன்... பாப்பா உனக்கு எது வேணும்ன்னு சொல்லு நான் எடுத்து தரேன்" என்றார்.


" அப்படி எல்லாம அவ இஷ்டத்துக்கு விட முடியாதுங்க.. நாம நல்லதுக்கு சொன்னா அதைக் கேட்கனும் இல்லையா? தனக்குத்தான் எல்லாம் தெரியுன்னு பேசுற பாருங்க... பொம்பள பிள்ளைக்கு இந்த அளவுக்கு பிடிவாத குணம் இருக்க கூடாது.."


வேழவேந்தன் திட்டியது அந்த குழந்தையை தான் என்று இவளால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. சின்ன குழந்தைக்கு என்ன தெரியும்? பெரிய அறிவாளி மாதிரி பேசறான். அதுவும் பொம்பளை பிள்ளைங்களுக்கு பிடிவாதம் கூடாதாம்..!! ஆம்பிளைப் பிள்ளை களுக்கு பிடிவாதம் இருக்கலாமா...? கேட்டு விடத்தான் வாய் துடித்தது. ஆனால் பொது இடத்துல தேவையில்லாம அவன்கூட என்ன பேச்சு? என்று தன்னையே கண்ட்ரோல் பண்ணிக் கொண்டு,


" சார் நான் கிளம்பறேன்.." திரும்பிப் பார்க்காமல் கடையை விட்டு வெளியில் வந்தாள் அபிநயா.


அபிநயாவை பொருத்தவரை தன் மனசுக்கு பிடிக்காத எந்த விஷயத்தையும் எளிதாக கடந்து சென்று விடுவாள்.

ஆனால் இந்த வேழவேந்தனின் விஷயம் அப்படியல்ல இவன் விஷயமே வேறு, ஒட்டி உறவாடி உயிருக்கு உயிராய் காதலித்து, எல்லாமே நீயாகி போனாய் என்று மனம் உருகி.. மருகி.. அவன் மார்பில் சாய்ந்து வாழ்க்கையை திட்டமிட்டு, கதைகள் பல பேசி, வெய்யில் மழை என்று பாராமல் பைக்கில் அவனோடு ஒட்டிக் கொண்டு ஊர் சுற்றிய அனுபவங்கள் எல்லாம் பசுமரத்து ஆணி போல் மனதில் இன்றுவரை பதிந்து கிடக்கும் நினைவுகளாய்.. மறக்கமுடியாத ரணங்களாய்...


இந்த ஜென்மத்தில் கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அது வேழவேந்தனொடு தான். அவன் இவள் குடும்பத்தால் பட்ட அவமானத்தில் இவளை விட்டு விலகி சென்றிருந்தாலும், எங்காவது இவளை மறக்க முடியாமல் இவளின் நினைவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பான் என்ற எதிர்பார்ப்பில்,

தன்னுடைய நிலையிலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டு அவனைத் தேடி ஓடியவளுக்கு, அவன் ஏற்கனவே திருமணமாகி வேறு ஒருத்திக்கு சொந்தமாகி குடும்பம் குட்டியோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறான் என்ற செய்தியை கேட்ட பிறகு அவளுடைய மனநிலை எப்படி நொறுங்கிப் போயிருக்கும்.? இடி தன் தலையில் நேரடியாக இறங்கியது போல், அந்தப் பேர் அதிர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாமல் எப்படி எல்லாம் துடிதுடித்து இருப்பாள்.?


"வேழவேந்தன்... ஏன் இப்படி பண்ணீங்க? உங்களையே நினைத்து உருகிக் கொண்டிருக்கும் எனக்கு, இது நீங்கள் கொடுக்கும் தண்டனையா ..?" என்று அவனுடைய சட்டையை பிடித்து கேட்க வேண்டும் என்றுதான் தோன்றியது.


ஆனாலும் நினைத்த மறுகணமே மொத்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு தனக்கு பிடித்தவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்று கைகுவித்து கடவுளிடம் வணங்கிவிட்டு, விதியே என்று பெற்றோரின் ஆசைக்காக அவர்கள் கைகாட்டிய மாப்பிள்ளைக்கு சம்மதித்து, சரி என்று தலையசைத்து, கிட்டத்திட்ட கல்யாணமே முடிவாகி இருக்கும் இந்த சமயத்தில் விட்டகுறை தொட்டகுறை என்பார்கள் அப்படியாக, போகிற இடமெல்லாம் நிழலாய் பின் தொடர்ந்துவரும் இவனை வெறுக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் எத்தனை நாட்கள் ஓடிக் கொண்டிருப்பது.?


அதுவும் அந்த குழந்தையை அள்ளி எடுத்து அவன் தோள்களில் சாய்த்துக்கொண்டபோது மனம் நொறுங்கி தான் போனது. இதற்கு என்ன காரணம் வேறு ஒருபெண் மூலமாக பெற்றெடுத்த அவன் வாரிசை பார்க்கும் தைரியம் தனக்கு கொஞ்சம் கூட இல்லை என்பதா? அல்லது அதற்குக் காரணமானவன் மேல் அவளுக்கு இருந்த காழ்ப்புணர்ச்சியா.?

என்று புரியாத மனநிலையில் வந்தவள் எதிரில் இருந்த கண்ணாடி கதவில் மோதி நெற்றியைத் தடவினாள்.


அபிநயாவை கடந்துசென்ற இளைஞர் கூட்டம் இவளைப் பார்த்து தங்களுக்குள் எதையோ சொல்லி சிரித்து சென்றதை இவள் கவனித்தும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை.

அபிநயா தன் அம்மாவை வெயிட் பண்ண சொல்லி இருந்த இடத்திற்கு வந்து காத்திருந்தாள். 10 நிமிடம் ஆகியும் அவளுடைய அம்மா வரவில்லை. அம்மாவுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில்.


வேழவேந்தன் பர்சேஸ் பண்ணி முடித்துவிட்டு அந்த கடையில் இருந்து வந்து கொண்டிருந்தான்.


அவன் குழந்தை ஷானுவோடு அபிநயாவை கிராஸ் பண்ணும் போது,


"டாடி.... அந்த ஆன்ட்டி அங்க நிக்குறாங்க பாருங்க.." என்று ஷானு கை நீட்டி காட்டினாள். தூரத்தில் வரும்போதே அவனைப் பார்த்துவிட்ட அபிநயா முகத்தை மறைத்து முதுகை காட்டியபடி நின்று கொண்டாள். ஆனாலும் அவளை அந்த குழந்தை கண்டுபிடித்தது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப ஷார்ப்பு தான் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.


"ஓகே!!... ஓகே...!!, இப்படி எல்லாம் கத்தி சொல்லக்கூடாது.." என்று அவளிடம் எதையோ கிசுகிசுத்தபடி அபிநயாவை கிராஸ் பண்ணி சென்றான் வேழவேந்தன்.


அவன் போன ஐந்து நிமிடத்தில் வாங்கிய பொருட்களோடு வந்து சேர்ந்தாள் அம்மா. நல்லவேளை, அம்மா வேழவேந்தனை பார்க்கவில்லை. வேழவேந்தன் இந்த ஊரில் தான் இருக்கிறான் என்று தெரிந்தால், அம்மா அப்பாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று யோசித்தாள்.


அவனால் இவளுக்கு ஏதாவது பிரச்சனை உண்டாகும் என்பதால் ஒன்று டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு ஊரை விட்டுப் போவதற்கு முயற்சி செய்வார்கள். அல்லது உடனே கல்யாண ஏற்பாடு செய்திருப்பார்கள் இரண்டில் ஒன்று கண்டிப்பாக நடந்திருக்கும் என்பது உறுதி.


"அபிநயா... பர்சேஸ் பண்ண பொருளெல்லாம் கார்ல வைக்கணும் பையன வைக்க சொல்லட்டுமா..?" என்றாள் அம்மா.


அம்மாவுடன் வந்த அந்தப் பையன் தலையில் மைக்ரோ ஓவனை சுமந்து கொண்டு நின்றிருந்ததை அப்போதுதான் கவனித்தாள் அபிநயா.


"எல்லாமே வாங்கிட்டீங்களா போகலாம் ம்மா.. வாங்க?" என்று சொல்லிக்கொண்டு முன்னே நடந்தாள் அபிநயா.


வீட்டிற்கு வந்து நைட் டிபன் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் டிவியை ஆன் பண்ணி ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பார்த்தாள். அதில் வரும் நிகழ்ச்சியோ காட்சியோ எதுவுமே மனதில் பதியாமல் போகவே ஒரு வெறுப்போடு எழுந்து தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்.


"அபி.. ஏன் ரொம்ப டல்லா இருக்கே தலகில வலிக்குதா..? சூடா ஒரு கப் பால் சாப்பிடுறீயா...?"
என்று இவள் படுக்கைக்கு செல்லும்போது அம்மா அந்த கேள்வியை கேட்டாள்.

அப்படியென்றால் இவளுடைய மனசோர்வை முகம் காட்டிக் கொடுத்திருக்கிறது அப்படித்தானே அர்த்தம்!? இல்லனா அம்மாவுக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்?


"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா தூங்கினா சரியாயிடும் அப்பா எங்க தூங்கிட்டாறா?"


" அப்படித்தான் நினைக்கிறேன் சரி நீ போய் தூங்கு..."


"ம்ம்..." என்று தலையசைப்புடன் தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு விட்டு படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். ஆனால் தூக்கம் வரத்தான் வெகு நேரம் ஆனது. அந்த ஷாப்பிங் மாலில் குழந்தையுடன் அவனை பார்த்த அதே நினைவு மீண்டும் மீண்டும் நினைவுக்குள் வந்து அவளை இம்சித்தது. நாளைக்கு கார்த்திக் வருகிறார் அவரை மீட் பண்ணனும் என்று தன்னுடைய மனதை வேழவேந்தனிடமிருந்து திருப்ப முயற்சி செய்து முடியாமல் போய் கிட்டத்தட்ட நடுச்சாமம் தாண்டிய பிறகுதான் அவளுக்கு அந்த பாழாப்போன தூக்கம் வந்தது. ஆழ்ந்த தூக்கம் சற்று தாமதமாகத்தான் எழுந்தாள்.


அன்று ஆபீஸ் போய் அமர்ந்தவுடன் முதல் போன் காலே கார்த்திக்கிடம் இருந்து தான் வந்தது.


போனை எடுத்து பேசியபோது கோயம்புத்தூர் வந்து இறங்கி விட்டதாகவும், அன்று மதியம் வரை ப்ரோக்ராம் இருக்கு அதனால் ப்ரோக்ராம் முடிந்த பிறகு கால் பண்ணு வதாகவும் கூறினான்.


ஆபீஸ் வேலை அதிகமாக இருந்ததால் தன்னுடைய கவனம் முழுவதையும் அதில் செலுத்தி மொத்த வேலையையும் முடித்து விட்டு அவள் நிமிர்ந்த போது மணி ஒன்றைத் தொட்டு இருந்தது.


அம்மா அனுப்பியிருந்த சாப்பாட்டை எடுத்து பிரித்து பிளைட்டில் போட போன போது கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் அபிநயாவின் பிஏ சந்தானம்.


" மேடம் சாரி மேடம் சாப்பிட்டுட்டு இருக்கீங்களா அப்புறமா வரேன்..." பிஏ சந்தானம் திரும்பி கதவை நோக்கி நடக்க,


" பரவாயில்லை சந்தானம் சொல்லுங்க என்ன விஷயம் எதாவது முக்கியமான விஷயமா...?"


" உங்கள பாக்க... வேழவேந்தன் சார் வந்திருக்கார், அதுதான் சாப்டீங்களா இல்லையான்னு பார்த்துவிட்டு அதுக்கு அப்புறம் அனுப்பலான்னு வந்தேன். நீங்க சாப்பிட்டு முடிங்க மேடம் மெதுவா அனுப்புறேன்..."


" இல்ல பரவால்ல அனுப்புங்க என்னன்னு பேசிட்டு அதுக்கப்புறம் சாப்பிடுறேன்..." என்றாள் படபடப்பை மறைத்தபடி.


"சரிங்க மேடம் இதோ அனுப்புறேன் மேடம்.." என்று சந்தானம் வெளியில் சென்ற கேப்பில் சாப்பாட்டு கேரியரை மூடி பழைய இடத்திலேயே வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.


இவன் எதுக்கு திரும்பவும் வந்திருக்கான்? இனிமே வரவே மாட்டான் அவனுடைய தொல்லையே இருக்காதுன்னே நெனச்சா திரும்பத் திரும்ப வந்து உயிரை எடுக்குறானே? என்று மனசுக்குள் புலம்பியபடி அமர்ந்திருந்தாள்.


" எக்ஸ்க்யூஸ் மீ மேடம்..." என்று கூறியபடி உள்ளே நுழைந்தான் வேழவேந்தன். அவன் பின்னாலேயே ஒட்டிக்கொண்டு வந்த ஒரு சிறுவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் அபிநயா. அவளின் பார்வை சென்ற திசையை நோக்கித் திரும்பிய வேழவேந்தன் தன்னுடன் வந்த அந்தப் பையனை கவனித்துவிட்டு,


"டேய்... ஷியாம் வெளியில் வெயிட் பண்ணு டாடி பேசிட்டு வரேன்." என்றான்.


அவன் பிடிவாதமாக அங்கேயே நிற்க கதவை திறந்து,


" சார் இவனை கொஞ்சம் சேர்ல உட்கார வையுங்களேன்..." தலையை நீட்டி வெளியிலிருந்த யாரிடமோ சொல்லி விட்டு திரும்பவும் உள்ளே வந்தான்.


"என்ன விஷயம் மிஸ்டர் வேழவேந்தன் இப்படி தினமும் வந்து தொல்லை கொடுத்துட்டு இருக்கீங்க.., எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நான் ஒன்னும் வேலை வெட்டி இல்லாம இங்க சும்மா ஒக்காந்து இருக்கல... உங்களுடைய விஷயம்தான் முடிஞ்சிருச்சில்லே திரும்பத் திரும்ப எதுக்கு இங்கே வந்து தொல்லை கொடுத்துட்டு இருக்கீங்க? ஒருவாட்டி சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா? இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்.. என்ன விஷயம்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருங்க..." என்று மொத்த கோபத்தையும் அவன்மேல் கொட்டினாள் அபிநயா.


" சாரி சாரி மேடம் அது வந்து..." அவன் தொடர்ந்து சொல்வதற்குள் அபிநயாவின் செல் ஒலித்தது இடது கையை நீட்டி செல்லை எடுத்தாள் பட்டென்று முகம் மலர்ந்தாள்.


"ஹலோ கார்த்திக் சொல்லுங்க கார்த்திக் ப்ரோக்ராம் முடிஞ்சிடுச்சா உங்களுடைய போன் கால்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அப்படியா!!.. ஓகே கார்த்திக்... ஒன்னும் வேலை இல்ல ப்ரீயா தான் இருக்கேன். சொன்னீங்கன்னா உடனே கிளம்பி வந்துடுறேன். இன்னும் சாப்பிடல கார்த்திக் இங்க சின்ன பிரச்சினை.. அதெல்லாம் ஒன்னும் இல்ல புதுசா வந்த ஒரு சின்ன தலைவலி அதனால தான் சாப்பிட முடியல சரியாகிடும். வெளியே போய் சாப்பிடலாமா ஓகே இப்போ கிளம்பினேன்னா ஆப்னவர்ல வந்துடலாம் நான் வந்துடுறேன் அங்கேயே வெயிட் பண்ணுங்க ஓகே பாய்..." புன்னகை மாறாத முகத்துடன்,


" ஓகே சொல்லுங்க என்ன விஷயம்...?" என்று அப்போதுதான் அவனை புதுசாக பார்ப்பது போல் பார்த்து கேட்டாள் அபிநயா. அவன் தாடை இறுகி இருந்தது கண்கள் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.


இருக்கட்டும் இருக்கட்டும் என்னை எந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி இருப்பான்.. அந்த கஷ்டம் என்னன்னு அவனுக்கு புரியனுமில்லையா..? என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்.


"நான் அர்ஜெண்டா வெளியில போகணும் வந்த விஷயத்தை சொல்லிட்டு கிளம்புனீங்கன்னா நல்லா இருக்கும் .."என்றாள்.


" இந்தாங்க இத கொடுத்துட்டு போகத்தான் வந்தேன்..."


" என்ன இது..? கையில் எடுக்காமல் யோசனையோடு கேட்டாள் அபிநயா.


" நேத்து கடையிலேயே விட்டுட்டு வந்த பொருள் உங்களிடம் எப்படி கொடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார் அந்த கடை ஓனர். அந்த வழியாதான் பிள்ளைகளை ஸ்கூல்ல விடப்போவேன் கொடுத்திடுறேன்னு வாங்கிட்டு வந்தேன். வந்தது தப்புதான்னு இப்ப நல்லாவே புரியுது.." என்றவன் அடுத்த நிமிடம் கோபத்தோடு கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.


அவன் முதுகையே வெறித்து கொண்டிருந்தாள் அபிநயா.
 
Last edited:
Nice update..
Abi konj telva visarichirukalamnu thonudu
Collectir ah irundukitu nee ivlo dathi ah irukakoodathu
Marupadium abi tapu seira feel enaku
Vezhan avamathichi anupiyadu abi family thana
Adaye innum sari seiyala
Iva melum sikkal akikaporalo
Karthi ku seekram iva story triyanum apa tan problem ila hoom
 
Top