Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-22

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-22
என் மகன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் நான் அவனை பாக்க விரும்பவில்லை என்று தன் மகனைப் பார்க்க மறுத்து வெளியேறிய ராகவனை குழப்பத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தான் கார்த்திக். இவர் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்? என்று புதிராக இருந்தது.

அறையை விட்டு வெளியில் வந்து காரில் ஏறி அமரும் வரை அவனுக்கு அந்த குழப்பம் நீடித்தது.

ராகவனை பொருத்தவரை தன்னுடைய மகளுக்கே தன்னை யாரென்று தெரியவில்லை அப்படி இருக்க மகனுக்கு மட்டும் எப்படி தெரியப்போகிறது? எப்படியோ சட்டத்தோடு போராடி இவன்தான் என் பிள்ளை என்று நிரூபித்து அவனை மீட்டெடுத்தாலும், வளர்க்கும் சூழ்நிலையில் இப்போது அவர் இல்லை. அப்படியே வளர்க்க நினைத்தாலும் இத்தனை நாள் எங்க போயிருந்தீங்க என்று மகன் கை நீட்டினால் என்ன பண்ணுவது என்ற தயக்கம்? இத்தனை வருடங்களாக நாங்க தானே வளர்த்து ஆளாக்கி இருக்குகோம் திடீரென்று வந்து நின்றால் எப்படி அனுப்புவது என்று வளர்த்தோர் கேட்கவும் வாய்ப்புண்டு.

அதையும் தாண்டி பொருளாதார நிலை, வயது முதிர்வு, இரண்டுமே மகனை தன்னோடு வைத்துக் கொள்ள சாத்தியமற்று இருந்தது.

எங்கிருந்தாலும் நல்லா
இருக்கட்டும் என்று இரு கைகளை உயர்த்தி வாழ்த்தும் காலகட்டத்தில்தான் அவர் இப்போது இருக்கிறார். பிள்ளைகளோட நலனை கருத்தில் கொண்டுதான் அவர் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கார்த்திக்கு விளங்கியது.

ஆனால் சொல்ல வந்த இன்னொரு விஷயத்தை சொல்வதற்குள் ராகவன் எழுந்து போய்விட்டார் அதாவது அபிநயாவுக்கும் எனக்கும் நாளை கோயமுத்தூரில் வச்சி நிச்சயதார்த்தம் நடக்கப் போகிறதே என்ற விஷயத்தை சொல்வதற்குள் அவர் எழுந்து சென்று விட்டார்.

ஓகே...பாப்போம்... என்று தோள்களை குலுக்கியபடி காரை ஸ்டார்ட் பண்ணினான்.

கார்த்திக் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது ராஜேந்திரனின் குடும்பம் ஊருக்கு செல்ல ரெடியாகி இருந்தார்கள்.

திரும்பவும் எந்த பிரச்சினையிலும் மாட்டாமல் கவனமாக இருக்குமாறு கார்த்திக்கும் அவன் அம்மாவும், ராஜேந்திரனுக்கு அட்வைஸ் பண்ணி அவர்களை அனுப்பி வைத்தார்கள். வினோத்தையும் ராகவனையும் மீட் பண்ண வைக்கும் கார்த்திக்கின் எண்ணம் மட்டும் நிறைவேறவில்லை.

அடுத்த நாள் மாலை:

கோயம்புத்தூர்...

கார்த்திக் குடும்பத்தார் கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் இறங்கும்போது மணி மாலை ஐந்து 5 :10

அங்கிருந்து ஒரு கால் டாக்ஸி புக் பண்ணி அபிநயாவுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த அரசாங்க வீட்டின் முகவரியை கண்டு பிடித்து இவர்கள் போய் சேரும்போது மணி ஆறு.

வாசலுக்கே வந்து இரு கரம் கூப்பி இவர்களை வரவேற்று அமர வைத்தனர் அபிநயாவின் பெற்றோர்கள்.

தட்டுகள் வைக்கப்பட்டு அதில் வாழைப்பழம், மஞ்சள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, நவதானியங்களும் நாணயங்களும் கொண்ட மஞ்சள் தடவிய முடிப்பு, பூ, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்களப் பொருட்களுடன் ஒரு மெல்லிய தங்கத்தில் வைரம் பதித்த மோதிரமும் அதில் இருந்தது.

கூந்தலை மறைக்கும் பூச்சரங்கள், கழுத்தில் நிறையும் தங்க ஆபரணங்கள், கைகளில் கலகலக்கும் வளையல்கள், காதை அலங்கரிக்கும் பொன் ஜிமிக்கிகள் என்று எந்த ஒரு எக்ஸ்ட்ரா ஆபரணங்களும் அலங்காரமும் இல்லாமல் மிகவும் எளிமையாக, கழுத்தில் மெல்லிய தங்க செயின் காதை ஒட்டி சின்ன வைரக் கம்மல் வலது கையில் ஒரு பிரேஸ்லெட் இடது கையில் தங்க கோட்டிங் வாட்ச் என மிகவும் எளிமையாகவே இருந்தாள் அபிநயா.

சபையில் வந்து அமர்ந்தபோது பெண்களுக்கே உரிய நாணத்தோடு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

இருவீட்டாரும் திருமணத்தி‌ற்கு சம்மதம் தெரிவித்து தாம்பூல தட்டு மாற்றிக்கொண்டார்கள். தாங்கள் எடுத்துட்டு வந்த பட்டை அணிந்து வரும்படி கார்த்திக்கின் அம்மா சொல்ல,

மறுப்பு தெரிவிக்காமல் பட்டுப் புடவையை வாங்கி கொண்டு அறைக்குள் சென்று பத்து நிமிடத்தில் அழகான தேவதையாய் மீண்டும் சபையில் வந்து அமர்ந்தாள்.

மணப்பெண் அபிநயாவிற்கு மணமகன் கார்த்திக்கின் அம்மா சுந்தரியம்மாள் தலையில் பூவைச்சூடி அவள் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்தார்கள்.

இறுதி நிகழ்வாக தங்கத்தில் வைரம் பதித்த மோதிரத்தை எடுத்து மகனிடம் கொடுத்தாள் சுந்தரியம்மாள்.

"கார்த்திக் இந்த மோதிரத்தை அபிநயா கையில போடு..."

தட்டில் இருந்த மோதிரத்தை கையில் எடுத்தவன் அதை அபிநயா கையில் போடுவதற்கு சற்று தயங்கினான். என்னதான் நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்திருந்தாலும் அபிநயாவுக்கும் இவனுக்கும் இடையில் புரிதலோ, இயல்பான பேச்சோ எதுவுமே இல்லை. பெரியவர்களின் தூண்டுதலாலும் கட்டாயத்தாலும் இந்தத் நிச்சயதார்த்தம் நடக்கிறதே தவிர அவளாக ஒரு முறை கூட இவனுக்கு கால் பண்ணி பேசியது இல்லை. இவன் பேசினாலும் பட்டும் படாமல் பேசி பேச்சை முடிப்பதில் குறியாய் இருப்பாள்.

அது மட்டுமல்ல அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் என்று ஒரு முறை ராகவன் சொன்னது இவன் மனதுக்குள் அப்படியே கிடக்கிறது. அது விஷயமாக அவளிடம் பேசலாமென்றாலோ எப்போ கால் பண்ணினாலும் பிஸியாகவே இருந்தாள். அபிநயா படிப்பறிவு இல்லாத பொண்ணும் இல்லை வெளி உலகம் தெரியாத பொண்ணும் இல்லை. ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்க கூடிய பொறுப்பில் இருப்பவள்.

பெண்கள் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று இவன் படித்திருக்கிறான். இதனால்தான் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறைவுதான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். பெண்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் எல்லா பிரச்சனைகளையும் ஆண்கள் மேல் திணித்துவிட்டு இயல்பாக இருக்கிறார்களோ?? என்று இவன் கூட கிண்டலாக யோசித்தது உண்டு.

ஆனால் இந்தப் அபிநயா விஷயத்தில் அவனால் எந்த ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அபிநயா இந்த கல்யாணத்தில் உங்களுக்கு முழு சம்மதம்தானே? என்று நேருக்கு நேராக அவளிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகுதான் இந்த நிச்சயதாரத்தையே வைத்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தான். ஆனால் அதற்கான சந்தர்ப்பமே அவனுக்கு வாய்க வில்லை.

ஒருவேளை இந்த நிச்சயதார்த்தம் கல்யாணம் இதெல்லாம் பிடிக்காமல் இருந்தால் நேரடியாகவே சொல்லியிருப்பாள் அதுமாதிரியான எந்த முயற்சியும் அவள் எடுக்கவில்லை. அப்படி என்றால் அவளுக்கு இதில் முழு சம்மதமாகத்தான் இருக்கும் என்று உறுதியாய் நினைத்தான் கார்த்திக்.

'டேய் கார்த்திக் என்னடா இவ்வளவு வெட்கப்படுறே மோதிரத்தைப் போடுடா அபிநயா எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க...?" என்று கார்த்திக்கின் அண்ணன் மனோஜ் கேலி செய்தான்.

இதற்குமேலும் அமைதியாக இருப்பது நல்லதல்ல என்று எண்ணிய கார்த்திக் மோதிரம் வைத்திருந்த கையை அவள் புறமாக கொண்டு செல்ல அவள் தன்னுடைய இடது கையை நீட்டினாள்.அந்த ஒரு நொடியில் மகிழ்வான தருணத்தில் அவளுடைய மோதிரவிரலில் வைர மோதிரத்தை அணிவித்தான் கார்த்திக்.

எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். சந்தனம், குங்குமம், பூ போன்றவற்றை மணமகளுக்கு, மணமகன் வீட்டிலுள்ளோர் வைத்து விடுதல் நடந்தது.

அதன் பிறகு மணப்பெண் வீட்டில் மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் உணவு எடுத்துக்கொள்ளுதல் என்ற நிகழ்வு தொடங்கியது.

திருமண தேதி பற்றிய விஷயத்தை மட்டும் தள்ளி வைத்தார்கள். இருவருக்கும் எப்போ லீவு கிடைக்குதோ அதை அதை சார்ந்து மண்டபத்தை முடிவு பண்ணலாம் என்பது பெரியோர்களின் அபிப்பிராயம்.

அன்று இரவு தங்குவதற்கு ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருந்தார்கள் மாப்பிள்ளை வீட்டார். அந்த இடத்திற்கு அவர்கள் கிளம்பி செல்ல, அவர்களை வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு அபிநயாவின் பெற்றோர் உள்ளே வந்தபோது அபிநயாவின் அறை உட்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது.

அடுத்த நாள்...

நீண்ட ஒரு வார கால விடுமுறைக்கு பிறகு அடுத்த நாள் காலையில் அலுவலகத்துக்கு கிளம்பினாள் அபிநயா.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:

அபிநயாவை பார்க்க வேண்டும் என்று கைக்குழந்தையோடு கையில் ஒரு மனுவோடு அமர்ந்திருந்தாள் ஒரு இளம் பெண்.

கோயம்புத்தூர் அடுத்த மேட்டு பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி சுதா என்பவர் தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார். அதில் தனது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் பலியாகினர். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுயிருந்தார். மனுவை வாங்கி படித்த மாவட்ட ஆட்சியர் அபிநயா, அந்த பெண்மணியை காத்திருக்க சொன்னார்.

உடனடியாக சமூக நலத்துறை அதிகாரிகளிடம் பேசி, அந்த பெண்ணிடம் உள்ள ஆவணங்களை வாங்கி ஆய்வு செய்தனர் அதிகாரிகள். அவர் வைத்திருந்த ஆவணங்கள் சரியாக இருந்ததை பார்த்து, உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவி தொகை வழங்க உத்தரவிட்டு ஆணையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர். கோரிக்கை மனு தந்த ஒரு மணி நேரத்தில் தனது பிரச்சனை தீர்ந்ததை தொடர்ந்து அந்த பெண் கண்ணீர் விட்டு அழுது, நன்றி தெரிவித்து ஆணையுடன் வீட்டுக்கு சென்றார்.

அடுத்து இரண்டு மனுவை எடுத்துட்டு வந்து மேஜை மேல் வைத்தார் பி ஏ.

" மேடம் ரெண்டு மனு இருக்கு ஒருவர் தான் இரண்டு மனுவையும் கொடுத்திருக்கிறார்..." என்றார்.

முதல் மனுவை கைகளில் எடுத்து பிரித்து படித்தாள் அபிநயா.

மதிப்பிற்குரிய கலெக்டர் அவர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் என்று அந்த மனு ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

கலெக்டர்களே தெய்வம் : இன்னும் நம்மூர் கிராமங்களில், கலெக்டர் தான், 'கண்கண்ட தெய்வம்!' அவரிடம் மனு அளித்தால் போதும், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அதை, கனிவுள்ள பல கலெக்டர்கள் நிரூபித்தும் உள்ளனர்.

அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, பொது இடத்தில் குறைதீர்க்கும் மனுக்களை வாங்கினார். பின்னர், கருணாநிதி முதல்வரானதும் ஆங்காங்கே மனுநீதி நாள் நடத்தப்பட்டு மனுக்கள் வாங்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., முதல்வரான போது, ஒவ்வொரு வாரமும், திங்கள் கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்துவதை கட்டாயமாக்கினார். பொதுமக்களிடம், கலெக்டர் மனுக்கள் வாங்க வேண்டும். மாவட்ட பொறுப்பில் உள்ள, அனைத்து துறை அதிகாரிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதிகாரிகள் திங்கள் கிழமை வெளியூர் 'கேம்ப்' போகக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இதன் நோக்கம், பொதுமக்கள் மனுக்கள் தந்தவுடன், அங்குள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், கலெக்டர் அதுகுறித்து உடனடி விளக்கம் கேட்பார். துறை அதிகாரியின் பதில், மனுதாரருக்கு உடன் தெரிந்து விடும். தனது கோரிக்கை நியாயமானதா, நடக்குமா, நடக்காதா, தீர்வு என்ன என்பது எல்லாம் அங்கேயே தெரிந்து விடும்.

கலெக்டர்களுக்கும் பணிப்பளு. டெங்குவிற்கு சாக்கடைகளை சோதனை செய்வது முதல், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் வரை கவனிக்கின்றனர். மந்திரிகள் மாவட்டத்திற்கு வந்தால், அவர்கள் கூடவே செல்ல வேண்டும். முதல்வரும், கவர்னரும் வந்தால், வரவேற்க, வழியனுப்ப, பூங்கொத்து கொடுக்க என்று அவர்களுக்கும் வேலைகள் பல.

சரி, பிற துறை அதிகாரிகளாவது கூட்டத்திற்கு வருகிறார்களா? துணை இயக்குனர் வருவதற்கு பதில் உதவி இயக்குனர், ஆர்.டி.ஓ.,வுக்கு பதில் தாசில்தார், போலீஸ் எஸ்.பி.,க்கு பதில் டி.எஸ்.பி.,அல்லது அவருக்கு பதில் இன்ஸ்பெக்டர், சி. இ.ஓ.,வுக்கு பதில் டி.இ.ஓ., என்ற அளவிலையே குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.

குறைதீர் கூட்டங்களில் அதிகாரிகள் குறட்டை விட்டதும், அரட்டை அடிப்பதும், அலை பேசியில் பேசிக்கொண்டிருந்ததும் நாளிதழில் புகைப்பட செய்தியாக வந்துவிட்டன.

இப்படி ஏனோதானோ என்று குறைதீர்க்கூட்டங்கள் நடக்கின்றன. அப்படியே மனுக்கள் பெறப்பட்டாலும் என்ன நடக்கிறது... அதற்கான தீர்வுகள் மக்களுக்கு கிடைப்பதில்லை இதெல்லாம் என் மனதில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் வேதனைகள் அடுத்து என்னுடைய கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். இதனுடன் இணைக்கப்பட்ட மற்றொரு மனுவில் என்னுடைய கோரிக்கைகள் எழுதப்பட்டு இருக்கின்றன தயவுகூர்ந்து அதை தாங்கள் தான் முன்னின்று நல்லதொரு தீர்ப்பை பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு ஒரு இந்திய குடிமகன்.

என்று அந்த மனு நிறைவு பெற்று இருந்தது. அபிநயாவுக்கு புருவமத்தியில் ஒரு முடிச்சு விழுந்தது. லேசாக தலை வலிப்பது போலிருந்தது. விஷயத்துக்கு நேராக வராமல் சுத்தி வளைச்சி இப்படி ஒரு மனுவா? என்று தோன்றினாலும் பெல்லை அடித்து பிஏ வை அழைத்தாள்.

இந்த மனு கொடுத்த நபரை கொஞ்சம் உள்ளே வர சொல்லுங்க என்றாள் அபிநயா.

சுமார் ஐந்து நிமிடத்திற்கு பிறகு கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த அந்த நபரை ஏறிட்டு பார்த்தவள் அதிர்ச்சியோடு பட்டென்று எழுந்து நின்றாள். அவளுடைய உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது.

யாரை இனி பார்க்கவே முடியாது, யாரை இனி பார்க்கவே கூடாது என்று எண்ணி இருந்தாளோ அவனுடைய வருகைதான் இவளுடைய இந்த அதிர்ச்சிக்கு காரணம்.

அவளின் அறைக்குள் வந்து நின்றவன் சாட்சாத் வேழவேந்தனேதான்...!!!
 
Last edited:
Top