Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் - 16

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம் -16
அபிநயா, குமரேசன் இருவரும் குழலியை பார்ப்பதற்காக பூங்கொடியுடன் அவளுடைய வீட்டிற்கு சென்றார்கள்.

"அம்மா....அம்மா….இங்க வாயேன், நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்கான்னு வந்து பாரு...!" மகிழ்ச்சி பொங்க தன் அம்மாவை அழைத்தாள் பூங்கொடி.

அபிநயா அப்போதுதான் அந்த வீட்டை கவனித்தாள். அது ஒரு திண்ணை வைத்து கட்டப்பட்டிருந்த அழகான பழங்காலத்து ஓட்டு வீடு.

வேழவேந்தனிடம் அவனுடைய வீட்டைப்பற்றி பேசினாலே அவன் முகம் பிரகாசிக்கும். உடனே தாத்தா பாட்டி காலத்தில் கட்டப்பட்ட தன்னுடைய பூர்வீக வீட்டை புகழ்ந்து தள்ளுவான்.

எங்க வீடுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச இடம். அம்மாவோட மடியில் படுத்து கிட்டு அப்பா கையில் உருண்டி தரும் சோற்றை கவளம் கவளமாய் முழுங்கிகிட்டே இருப்பேன் தெரியுமா? அதெல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு உனக்கெல்லாம் சொன்னா புரியாது என்பான். அதையெல்லாம் வார்த்தைகளால் சொல்லவே முடியாது அவ்வளவு சுகம் என்று மன கண் முன்னால் கொண்டு வந்து ரசிப்பான்.

பிறகு வீட்டை பற்றி சொல்ல தொடங்கிவிடுவான்.

“அதாவது முற்காலத்துல, மாலைப் பொழுதை அவங்க அவங்க தங்கள் குடும்பத்தினருடன் ஒய்யாரமாக கழிக்கவும், தெருக்களில் வியாபாரிகள் களைத்துப்போய் இருக்கும் போது இளைப்பாற வசதியாகவும், நிறைய வீட்டில் வெளியே திண்ணைகள் வைத்து கட்டியிருப்பாங்க. எங்க ஊரில் திண்ணைகள் இல்லாத வீடுகளே இல்லை என்று கூட சொல்லலாம். குடிசை வீடாக இருந்தாலும் அதில் கூட திண்ணை வைத்துதான் கட்டுவார்கள். இது மாதிரி திண்ணைகள் அமைக்கும் வழக்கம், மன்னர் காலத்திலிருந்து கடைபிடிக்கப்படுவதாகக் எங்க தாத்தா அடிக்கடி சொல்லுவார்.

தமிழர்களின் விருந்து மற்றும் உபசரிப்பின் அடையாளமாக, திண்ணைகள் கருதப்பட்டதாம். இன்னைக்கு வரைக்கும், கிராமப்புறங்களில் மட்டுமே திண்ணைகள் உள்ளவீடுகளைக் காணலாம்.

ஆனால், நெரிசல் மிகுந்த நகர்ப் பகுதிகளில், சிறு இடத்திலும் ஒரு அறை கட்டி, அதை வாடகைக்கு விட்டு பணம் பார்க்கும் நிலை தோன்றி விட்டதால், திண்ணைகள் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிறது. இப்போது அப்பகுதிவாசிகள் பலரும், திண்ணைகளை மறந்தே போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.” என்று திண்ணை வீட்டை பற்றி ஒரு சொற்பொழிவுவே நடத்துவான். இவள் நிறைய முறை அவன் சொல்வதை வேறுவழியின்றி கேட்டிருக்கிறாள்.

“வேழவேந்தன் உங்க வீட்டை நான் பாக்கணும். என்னை கூட்டிட்டு போறீங்களா? என்று பல முறை கேட்டிருக்கிறாள். அவன் அதற்கு மட்டும் சம்மதிக்கவே இல்லை. முதல் முதலாக என்னுடைய மனைவியாக தான் நீ அந்த வீட்டுக்குள் நுழைய வேண்டும் என்றான்.

ஆனால்... இதுவரை அது நடக்கவே இல்லை.

"அடியே பூங்கொடி வாசலிலேயே நில்லு சாந்தியை ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வரச்சொல்லி இருக்கேன்..."

சமையல் கட்டிலிருந்து அம்மாவின் குரல் அவளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தது. தயக்கத்தோடு திரும்பி அபிநயாவை பார்த்து,

" சாரி மேடம்...எங்க அம்மா எப்பவுமே இப்படித்தான். ஊர் கண்ணு பட்டுடுன்னு ஆரத்தி எடுக்க சொல்லுவாங்க...எடுக்குற வரைக்கும் நான் வாசலிலேதான் நிற்கணும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...”என்று கெஞ்சும் தோரணையில் கூறினாள்."

"ஒன்னும் பிரச்சனை இல்ல நாங்க வெயிட் பண்றோம்." என்றாள் அபிநயா.

அபிநயாவுக்கு உள்ளுக்குள் சற்று உதறலாகத்தான் இருந்தது. காரணம் இந்த குழலி வேழவேந்தனோடு அபிநயாவை பெண் பார்க்க வந்தவர்கள் ஆயிற்றே! இவளைப் பார்த்தால் கண்டிப்பாக அடையாளம் கண்டு கொள்வார்கள். அதன் பிறகு அவங்களுடைய ரியாக்ஷன் எப்படி இருக்குமோ? என்று அபிக்கு சிறு நடுக்கம் தோன்றத்தான் செய்தது.

சற்று நேரத்தில்சாந்தி என்ற அந்த பெண் ஆரத்தி தட்டோடு வாசலில் இறங்க, அவளுக்குப் பின்னால் மலர்ந்த முகத்தோடு வந்தாள் பூங்கொடியின் அம்மா குழலி. அன்று பார்த்த அதே முகம் தான். என்ன உடல் மட்டும் சற்று பூசினார்ப்போல் இருந்தது.
"அடி என் செல்லமே..." மகளின் கன்னத்தைத் தொட்டு திஷ்டி கழித்த குழலியின் பார்வை தற்செயலாக பின்னால் நின்ற இவர்கள் மேல் படிந்து மீண்டது‌.

புருவத்தை சுருக்கி கண்களை இடுக்கி யோசித்தவள் அடையாளம் கண்டுகொண்ட தொனியோடு சட்டென்று அபிநயாவின் பக்கம் திரும்பினாள்.

"நீ.... நீங்க....நீ அபிநயா தானே?" ஆச்சரியத்தோடு தொடங்கியவள் கோபத்தோடு கேள்வியை நிறுத்தினாள்.

"ஆமாம் நான் அபிநயாதான்....' என்று இவள் முடிக்கும் முன் குறுக்கே புகுந்து,

“அம்மா அவங்களை யாருன்னு நினைச்சுகிட்டு பேசுறே? அவங்க தான் புதுசா வந்திருக்கிற கலெக்டர். நம்ம பழைய கலெக்டர் கூட வந்தாங்க இவங்க கையால்தான் பரிசு வாங்கினேன். நீதான் வீட்டுக்குள்ளையே கிடைக்குறீயே, உனக்கு எப்படி இவங்க யாருன்னு தெரியப்போகுது. இப்படி அவங்க பெயரை சொல்லிக் கூப்பிடுறியே இது கொஞ்சம் கூட நல்ல இல்லை. அவங்க நம்பள மாதிரி சாதாரண ஆள் கிடையாது... அவங்க மாவட்டத்துக்கே கலெக்டர் தெரியுமா?."

“உஷ்...பூங்கொடி அம்மாவை இப்படி எல்லாம் பேசக்கூடாது..."
“பின்ன என்ன மேடம் அவர்களுக்கு யார் கிட்ட எப்படி பேசுவது என்று தெரியவே மாட்டேங்குது. மரியாதை இல்லாம பேசிடுவாங்க. எங்க அப்பா இறந்ததிலிருந்து எங்கம்மா இப்படித்தான் மாறிட்டாங்க அவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் மேடம் சாரி மேடம். உள்ள வாங்க வந்து உட்காருங்க மேடம். நீங்களும் உள்ள வாங்க அங்கிள் வந்து சேரில் உட்காருங்க..."

பூங்குழலி சின்னப்பெண் சொன்னாலும் புரியாது சொல்லி புரிய வைக்கிற நிலையிலும் அங்கு யாரும் இல்லை. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ உள்ளே வாங்க” என்றாள் இளகிய குரலில் குழலி.

தலையசைப்போடு இருவரும் உள்ளே சென்றார்கள்.

வரவேற்பு அறையில்,
அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட
மேசைகளும் நாற்காலிகளும்
யார் வருகைக்காகவோ
காத்திருப்பது போல் அபிநயாவுக்கு தோன்றியது.

அழகாக அடுக்கி வைக்கப்பட்ட அலமாரியை பார்த்தவுடன்,

'கண்ணாடி அலமாரிகளில்
அழகாக அடுக்கப்பட்ட கைப்பாவைகள்,
தேடியபடியே இருக்கின்றன
ஆசை பொங்க அணைத்து விளையாடிய அந்த கரங்களை.'

அபிநயாவுக்கு அந்த அலமாரிகளை பார்த்தவுடன் எப்போதோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்துப்போனது.

என்ன பேசுவது என்று புரியாதவளாய் கையை பிசைந்து கொண்டு நின்றாள் குழலி. அபிநயா இயல்பாக இருப்பது போல் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவளுக்கு உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தபடி தான் இருந்தது.

எப்படி ஆரம்பிப்பது எப்படி கேட்பது? பதில் எப்படி வரும்? ஒருவேளை வராமலும் போகலாம் அப்படி வராத பட்சத்தில் அடுத்து என்ன செய்வது? போராட்டத்தை போராடித்தான் ஆகவேண்டும். ஓட்டத்தை ஓடித்தானே முடிக்கவேண்டும். பாதியிலேயே விட்டு விட்டால் அதற்கு பொருளற்றுப் போய்விடும். இவ்வளவு நாள் காத்திருந்தது வீண் என்று ஆகிவிடாதா? அர்த்தமற்ற இந்த காத்திருப்பு இறுதியில் பிரிவில் கொண்டுதானே சேர்க்கும். காதலர்கள் தோற்றாலும் காதல் தோற்காது என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டு வாழ்க்கையை என்னால் ஓட்ட முடியாது.

எப்படியாவது வேழவேந்தன் எங்கிருக்கிறான் எப்படி இருக்கிறான் என்று தெரிந்து கொண்டு அவனை நேரில் ஒருமுறை சந்திக்க வேண்டும். உங்களுக்காக தான் நான் இத்தனை நாட்களாக காத்திருக்கிறேன் என்று மனதில் உள்ளதை எல்லாம் அவனிடம் கொட்டி தீர்க்க வேண்டும். அவன் வார்த்தைகளால் ஆறுதல் அடைய வேண்டும். அவன் என்னை ஏற்றுக் கொள்வானா என்பது தெரியவில்லை. கடவுள்தான் அதை தீர்மானிக்கணும். ஆனாலும் என் காதல் உண்மையானது கண்டிப்பாக அதில் நான் வெற்றி அடைவேன்.

ஆர்ப்பரிக்கும் ஆழ்கடல் போல அவள் மனம் சுழன்று சுழன்று பொங்கி எழுந்து ஆர்ப்பரித்து அடங்கி தரையோடு தரையாக அடங்கிக்கொண்டிருந்தது.

"வந்தவங்களுக்கு டீ காபி ஏதும் கொடுக்க மாட்டியா...?" மீண்டும் தன் தாயை மிரட்டும் தொனியில் கேட்டாள் பூங்கொடி.

"இதோ ஒரு நிமிஷம் எடுத்துட்டு வர்றேன்." என்று சமையல்கட்டை நோக்கி சென்றாள் குழலி.

சிறு புன்னகையோடு பூங்கொடியின் பக்கம் திரும்பிய குமரேசன்

“பூங்கொடி...என்னை எங்கேயாவது பாத்திருக்கீயா?”

ஒரு செகண்ட் கூர்ந்து கவனித்தவள்,

“இல்லே அங்கிள்...உங்களை இதற்கு முன் பார்த்த மாதிரி எனக்கு ஞாபகமே இல்லை.” என்றாள்.

"பார்த்திருப்பே ஆனா மறந்துட்டேன்னு நினைக்கிறேன். நான்... உங்க மாமா வேழவேந்தனோட பிரெண்ட். நானும் வேற வேந்தனும் காலேஜ்ல ஒண்ணா படிச்சோம்."
"அப்படியா எங்க மாமாவை முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?"

“ஏன் தெரியாது நல்லாவே தெரியும்...அஞ்சு வருஷம் நாங்க ரெண்டு பேரும் ஒன்னாத்தானே படிச்சோம்...."

“ஓ.... “அப்படியா என்று ஆச்சரியப்பட்டாளே தவிர அதன் பிறகு வேழ வேந்தனை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாகி விட்டாள்.

அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக அபிநயா மெல்ல பேச்சுக் கொடுத்தாள்.

“பூங்கொடி இந்த சின்ன வயசுல உனக்கு ரொம்ப அறிவு ஜாஸ்தின்னு நினைக்கிறேன். இல்லன்னா கோசாலையை பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி படம் எல்லாம் வரையிரீயே அதை சொல்றேன். ஆமா கோசாலை பத்தி உனக்கு என்ன தெரியும் எப்படி தெரியும்? உனக்கு தெரிஞ்சது சொல்லு நான் தெரிஞ்சுக்கிறேன்.” என்றாள் அபிநயா.

கேட்டதுதான் தாமதம் உடனே கோசாலையை பற்றி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் ஒப்பிக்கத்தொடங்கினாள் பூங்கொடி.
"கோசாலையின் முக்கிய நோக்கமே நாட்டு பசு மாடுகளையும், காளை கன்றுகளை இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்குறதும்தான். நாட்டு மாட்டின் மூலம் கிடைக்கும் சாணம், கோமியம் போன்றவற்றை பயன்படுத்தி பஞ்சகவ்யம், அமிர்தகரைசல் போன்ற இயற்கை உரங்களை உருவாக்கவும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துறோம். இயற்கை விவசாயத்தை எல்லாரையும் பின் பற்ற வைக்கணும்ங்குறதுதான் எங்களின் நோக்கம்."

“சூப்பர் நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கே...”

“இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசைதான். ஆனால் அது யாரு கிட்ட போய் கேட்கறதுன்னு ஒரு தயக்கம் உங்களுக்கு இதப்பத்தி தெரியுமா மேடம்.?"

“ம்ம்ம்....”

“முதலில் எனக்கும் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது மேடம். எங்க குடும்ப சூழ்நிலைக்காக இரண்டு பசு மாடுகளை வாங்கி பால் கறந்து வித்துகிட்டு இருந்தோம். எட்டாவது படிக்கும்போது எங்க தமிழ் வாத்தியார்தான் இதைப் பற்றியெல்லாம் பாடம் நடத்துவார். அதை கேட்டு கேட்டு அப்படி கோசாலையில் இருக்கும் மாடுகளை பற்றி தெரிந்து கொண்டேன். பொதுவாக உழவு மாடுகளையும் வண்டி இழுக்கும் மாடுகளையும் பார்க்கும் போது என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கிவிடும். வாயில்லாத ஜீவன் தாங்கள் படும் கஷ்டத்தை கூட யாரிடமும் சொல்ல முடியாது என்றபோது என் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை என்னாலேயே தடுக்க முடியாது.
அம்மாதான் என்ன அடிக்கடி திட்டுவாங்க அரசாங்கமே அதைப்பற்றி கவலைப்படாதப்போ நீ ஏன் இந்த ஆடு, மாடுகளைப் பற்றி கவலை பட்டுட்டு இருக்கேன்னு அவங்க திட்டாத நாளில்லை. ஆனால் என்னையே என்னால மாத்திக்க முடியல.


“உன்னுடைய ஆர்வமும் சமுதாய பற்றும் என்னால புரிந்துகொள்ள முடியுது. ஒவ்வொரு செயலுக்குப் பின்னரும், பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்கள் பிழைக்கவேண்டும் என்ற திட்டமிடலும் செயல்வடிவமும் இருந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், அது தான் ஆணித்தரமான உண்மையும் கூட. ஆம். அசலான நாட்டுமாடுகளையும் பசுக்களின் மரபு இனங்களையும் காக்கவேண்டும் என்ற நுண்ணறிவில் தான் கோசாலைகளும், காளைகளைப் பராமரிக்கும் கூடங்களும் கோயில்களில் நிர்மாணித்து இருக்கிறார்கள், நம் முன்னோர்கள்.


பன்னெடுங்காலம் முன், மூவேந்தர்கள் நிர்மாணித்த கோயில்கள் பல ஊரின் மிகப்பெரிய கட்டடப்பரப்பாக இருந்திருக்கின்றன. அப்படி பரந்துபட்டு கட்டப்பட்டகோயில்கள் வழிபாட்டுக்கு மட்டும் இருந்திருக்கவில்லை. தானியங்கள் மற்றும் விருட்சங்களைப்பாதுகாக்கும் களஞ்சியமாகவும், மருத்துவம் பார்க்கவும், ஆநிரைகளைப் பாதுகாக்கும் இடமாகவும் திகழ்ந்திருக்கிறது என்றால், அது மிகையில்லாத உண்மை. கோசாலை' என்பது நாட்டுக்காளைகள் மற்றும் பசுக்களின் புகலிடம்."

“ரொம்ப சந்தோசமா இருக்கு மேடம் இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு... எங்க ஊர்ல கோசாலை அமைக்க அரசாங்கம் ஏதாவது உதவி செய்யுமா மேடம்....?”

"கண்டிப்பாக கொஞ்ச நாள் வெயிட் பண்ணு அதற்கான ஏற்பாடுகளை நானே முன்னின்று அரசாங்கத்தின் உதவியோடு செய்கிறேன்..."

"வந்ததுல இருந்து ஏண்டி தொனதொனன்னு பேசிக்கிட்டே இருக்கே போய் முகம் கைகால் கழுவிட்டு வா உனக்கும் சேர்த்துதான் காபி கலந்துட்டு வந்திருக்கேன்." சமையலறையிலிருந்து வெளிப்பட்ட குழலி கோபத்தோடு கூறினாள்.

"ஒரு நிமிஷம் மேடம் கைகால் கழுவிட்டு வந்துடுறேன்..." என்று பூங்கொடி அங்கிருந்து எழுந்து செல்ல, அவள் கொல்லைப்பக்கம் சென்று விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு இவர்கள் பக்கம் திரும்பினாள் குழலி.
"நீங்க வந்த விஷயம் என்ன என்று நான் தெரிஞ்சுக்கலாமா? என் பொண்ணு வரதுக்குள்ள சொல்லிட்டு கிளம்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும். நான் ஏற்கனவே ரொம்ப பிரச்சினையில இருக்கிறேன். மனசு வெறுத்துப் போயி வீட்டை விட்டு வெளியில் கூட போகாம வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறேன். என்னை மேலும் கேள்வி மேல கேள்வி கேட்டு துன்பப்படுத்தாம உடனே கிளம்பிட்டீங்களா நல்லா இருக்கும்." என்று பட பட என்று பொரிந்தாள் குழலி.

“அக்கா முதல்ல இவங்கள பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும். நீங்க நினைக்கிற மாதிரி இவங்க பழைய அபி இல்லை. இப்போ மாவட்ட கலெக்டராக இருக்காங்க அவங்க எதுக்கு இங்க வந்து இருக்கிறாங்கன்னா....”

“தெரியும்...அவங்க எதுக்காக இங்க வந்து இருக்காங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்....”

இருவரும் அதிர்ச்சியோடு குழலியை நோக்க,

"என் தம்பி வேழவேந்தனை தேடி வந்திருக்கீங்க....அவன புடிச்சு ஜெயில்ல போடறது தான் உங்களுடைய எண்ணமாக இருக்கும். அது ஒருக்காலும் நடக்காது. கண்டிப்பா எங்கிட்ட இருந்து எந்த உண்மையையும் நீங்க தெரிஞ்சிக்க முடியாது. தயவுசெய்து கையெடுத்து கும்பிடுறேன் இங்கிருந்து போயிடுங்க..."
 
பொருமை இல்லாத அளவு துண்பம் நேரும் போது . எதிரில் இருப்பவர் பேச்சும் எடுபடாது
 
குழலி பாவம்ப்பா
எவ்வளவு துன்பம் அனுபவித்திருந்தால் இப்படி பேசுவாள்?
பொறுமையாகப் பேசித்தான் குழலியின் நம்பிக்கையை அபிநயா பெற முடியும்
 
Top