Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்-11

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-11

வேழவேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற மனச்சோர்வோடு காரில் ஏறி அமர்ந்தாள் அபிநயா. அவனை கண்டுப்பிடிப்பது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்பது தெரிந்தும் அந்த முறையில் இவள் முயற்சி செய்யவில்லை. அதாவது அவனுடைய புகைப்படம் ஒன்று போதும் காவல் துறையிடம் கொடுத்தால் ஒரு மணி நேரத்திலேயே அக்குவேரா அணிவேர அலசி அவனைப்பற்றின முழு விவரத்தையும் கண்டுப்பிடித்து விடுவார்கள்.

ஆனால் அப்படி போவது இவளுக்கு ரொம்ப ஆபத்தானது. இவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும்தான். மாவட்ட ஆட்சியாளர் அதுவும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு பெண் ஆட்சியாளர் ஒரு பையனின் போட்டோவை கொடுத்து தேட சொல்லுவது மீடியாக்கள், மக்கள், காவல்துறை அனைத்து தரப்பினருக்கும் வெறும் வாயிற்கு அவல் கிடைத்த கதையாகிவிடாதா?

எப்போ!!....எப்போ!!...என கண்கொத்திப் பாம்பாய் திரியும் ஊடகங்கள் சும்மா இருக்குமா? அட்டைப்படத்திலிருந்து கடைசி பக்கம் வரை எழுதி தள்ளிவிட மாட்டார்கள்? இப்போ கூட கார் டிரைவருக்குசந்தேகம் தட்டியிருக்கும் அவரைப்பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது. ஏனென்றால் முன்புப்போல் இல்லை. அவரின் பார்வையில் ஒரு கூர்மை தெரிகிறது. அப்படி யாரைத்தான் தேடுறீங்க மேடம்? என்ற கேள்வியை அவர் எப்ப வேணும்னாலும் கேட்கலாம். ஆனால் அவர்ப்பார்க்கும் வேலை நிமித்தமாக அவர் அமைதியாக இருக்கிறார்.
அவள் தலைசாய்த்து கண் மூடி அமர்ந்திருந்ததை கவனித்தவர்,

“மேடம்...மதியம் சா...சாப்பிட்டிங்களா? முகத்தைப்பார்த்தா சோர்வா இருக்கு அதான் கேட்டேன்.”

பளிச்சென்று கண்களை திறந்தவள் “ நீங்க சாப்பிட்டீங்களா சண்முகம்” என்றாள்.

“இல்லமா...சாப்பிட போகல நீங்க வருவீங்கன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்.”

சே...நம்ம பிரச்சனையில இவரை மறந்துட்டமே என்று தலையில் கொட்டிக்கொண்டாள்.

“சரி...பக்கத்துல ஏதாவது நல்ல ஓட்டல் இருந்தா போங்க...சாப்பிடலாம்.”

“சரிங்கம்மா....நீங்க சாப்பிட்டு வங்க நான் ஒரு பார்சல் வாங்கிக்கிறேன்.”

சற்றுநேரத்தில்...

கார் நின்ற இடத்தைபார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தாள்.

“இரண்டு பேருக்குமே பார்சல் வாங்கிக்குங்க...நான் காரிலே இருக்கேன்.”என்று காரின் கதவை மூடிவிட்டு சீட்டில் சாய்ந்துக்கொண்டாள். காரணம் வேழவேந்தனோடு ஓரிருமுறை இந்த ஓட்டலுக்கு வந்திருக்கிறாள். அதே ஓட்டலுக்குள் கார் வந்து நிற்கவும் தர்மசங்கடத்துக்கு ஆளானாள். இயல்பாக ஓட்டலுக்குள்ளே போய் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு அவளின் மனதில் திடமில்லை. அவனோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்த இடம், அவனை உரசியப்படி கை கழுவின ஹான்ட்வாஸ் ரூம் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து இம்சிக்கும். இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நிம்மதியும் காணாமல் போய்விடும்.

கடைசியாக அவன் இவள் வீட்டை விட்டு சென்ற நிகழ்வு நினைவுக்கு வந்தது. அவனைப் பிரிந்து சென்ற அந்த ஒரு வாரக்காலம் பற்றின நினைவுகளை எண்ணி கண்மூடி அமர்ந்தாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர்...!

ஒரு காலத்தில் செண்பககாடாக மண்டிக்கிடந்த இந்த பகுதியை மல்லி என்ற அரசி ஆட்சி செய்தாளாம். அதனால் இப்பகுதி மல்லிநாடு என்றும் வழங்கப்பட்டு வந்துள்ளது, மல்லிக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்தார்களாம். முத்தவன் பெயர் வில்லி. இளையவன் பெயர் கண்டன். இளையவன் வேட்டைக்கு சென்ற இடத்தில் புலியால் கொல்லப்பட்டிருக்கிறான். இதனால் மனமுடைந்த வில்லியின் கனவில் இறைவனாகிய பரந்தாமன் தோன்றி ‘நீ இந்த காட்டை அழித்து நகரமாக செய்வாயாக. பாண்டிய சோழநாட்டு, அந்தணர்களை குடியேறச்செய் என்று சொல்லியதன் பேரில் செண்பகக்காடுகளை அழித்து நாடாக்கப்பட்ட நகரமே திருவில்லிபுத்தூர் எனவும் நாளடைவில் அதுவே ஸ்ரீவில்லிபுத்தூர் என்றும் நிலைபெற்றது. அந்த ஊரின் கதையை ஒரு பாட்டி சொல்ல கண் இமைக்காமல் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தாள் அபிநயா.

அபிநயாவின் கல்லூரியில் எம்எஸ்சி பயின்ற சுபாவின் திருமணத்திற்க்காக சென்னையிலிருந்து வந்திருந்தாள் அபிநயா. சுபா இவளுக்கு ஒரு விதத்தில் உறவுக்கார பெண்தான். அதாவது அம்மாவுக்கு அண்ணன் பெண் முறை. வயதில் மூத்தவளாக இருந்தாலும் இருவரும் பெயரிட்டுதான் அழைத்துக்கொள்வார்கள். அம்மாவின் சொந்தம் என்பதாலோ என்னவோ இந்த கல்யாணத்துக்கு பெற்றோர்களே அழைத்து வந்துவிட்டார்களோ! இல்லை அதற்கு வாய்ப்பில்லை பெற்றோர்களின் இந்த தீடீர் முடிவு சந்தேகத்தை உண்டாக்கியது. அது உண்மை என்பது இங்கு வந்தபிறகுதான் தெரிந்தது. திருச்சி கோவிலுக்கு என்று சொன்னது இந்த கல்யாணத்துக்குதான். இவளுக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. வேழவேந்தன் தன்னிடம் பேசுவதை தவிர்க்கிறான் என்பதை புரிந்துக்கொண்டாள். அப்பா அம்மாவை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடலாம் என்பதில் திடமாக இருந்தாள். இப்போதைக்கு அவளுடைய கவலையெல்லாம் வேழவேந்தனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதுதான். கொஞ்சம் நாட்கள் கடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.

சொந்தக்காரர்கள் நிறையப்பேர் இந்த கல்யாணத்துக்கு வரக்கூடும் என்று யூகித்திருந்ததால் எந்த சூழலிலும் தன் பிரச்சனை வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் கவனமாகவும் இருந்தாள்.

திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் தொடங்கப்பட்டிருந்தது. சம்பந்தி முறை உள்ளவர்கள் வீட்டுக்கு ஒருவர் வந்து பந்தல் போட்டார்கள். இரட்டை எண்ணிக்கையில் வீட்டின் வாசல் அளவுக்கு ஏற்ப கொம்புகள் நடப்பட்டன. மேல் பக்கவாட்டில் ஒரு கொம்புடன் மற்றொரு கொம்பை இணைத்துக்கட்டி மேற்பகுதியில் தென்னை ஓலைகளைப் அடுக்கி கட்டினார்கள். சுவர் போல் நான்கு பக்கமும் அமைக்கப்பட்டு, புங்கன், மாவிலை தோரணம் வாழைமரங்கள் கட்டப்பட்டிருந்தது.

சுபாவுக்கும், குருவுக்கும் திருமணம்.

திருமணத்திற்கு அபிநயா தன் பெற்றோருடன் வந்திருகிறாள் என்றதும் சுபாவுக்கு மிகுந்த சந்தோஷம். அபிநயா சுபாவுடன் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லையென்றாலும் சொந்தம் என்ற முறையில் பேச்சில் எப்போதுமே கொஞ்சம் இணக்கம் இருக்கும். மற்ற கல்லூரி தோழிகள் போல் அல்லாமல் சீனியர் என்ற மரியாதையோடு அபி சற்று தள்ளிப்போனாலும் சுபாவே தேடிவந்து பேசுவாள். கல்லூரி படிப்பு முடிந்தக்கையோடு சுபாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தாயில்லாத பெண். நீங்க எல்லாரும் வந்து நின்னு எம்பொண்ணு கல்யாணத்தை நடத்திக்குடுக்கணும். என்று சுபாவின் அப்பா நேரில் வந்து அழப்பிதழ் கொடுத்தபோது,

“எங்க அபிக்கு எக்ஸ்சாம் இல்லன்னா கண்டிப்பா வரோம் மாப்பிள்ளை. ஒரு வேளை எக்ஸ்சாம் இருந்தா உங்க தங்கச்சியை மட்டும் அனுப்பி வைக்கிறேன். நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்க கூடாது.” என்று பட்டும் படாமலும் பேசிய அப்பாதான் இப்போ இரண்டு நாளுக்கு முன்னாடியே கல்யாணா வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். அதற்கான காரணம் அபிக்கு புரியாமல் இல்லை.

சென்னையில்லிருந்து குடும்பத்தோடு வந்து இறங்கியவர்கள் தங்குவதற்காக சுபாவின் அப்பா அந்த ஊரின் தெருக்கோடியில் ஒரு உறவுக்காரரின் வீட்டின் மேல்தளத்தை ரெடிபண்ணியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பே வந்ததால் இவர்களுக்கும் அந்த ஊரை சுற்றிப்பார்க்க வசதியாக இருந்தது. மூன்று நாட்கள் ஊர் சுற்றிப்பார்க்கவென்று ஒதுக்கப்பட்டது. திருமணம் மிக நெருக்கத்தில் இருந்ததால் சுபா குடும்பத்தில் இருந்து யாரும் இவர்களுடன் வரவில்லை. அந்த ஊர்காரர் ஒருவரை கைடாக அனுப்பிவைத்தார்கள். எல்லா ஏற்பாடும் இவள் மனதை மாற்றும் யுத்தி என்பது இவளுக்கு தெரியாமல் இல்லை.

முதலில் சென்ற இடம் ஆண்டாள் திருக்கோயில். கைடாக வந்தவர்தான் ஆண்டாள் கதையை சொன்னார். இந்த கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை பெற்றது. ஆண்டாள் சிறுவயது முதலே கண்ணன் மீது பக்தியும் காதலும் கொண்டு வளர்ந்ததையும் பெரிய வயதை அடைந்ததும் கண்ணனையே மணக்க எண்ணியதையும் இறைவனுக்காக தொடுத்த மாலையை யாரும் அறியாமல் தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்ததையும் அதை அறிந்த அவள் தந்தை விஷ்ணுசித்தர் அந்த மாலையை தூக்கி எறிந்துவிட்டு மற்றொரு மாலையை இறைவனுக்கு சாற்றினாராம்.

அன்றிரவு அவள் கனவில் தோன்றிய இறைவன் கோதை சூடிக்கொடுக்கும் மாலையே தனக்கு உகந்தது அதையே தான் அணிய விரும்புவதாகவும் கூறி மறைந்தாராம். இதனாலேயே கோதை ‘சூடி கொடுத்த சுடர்க்கொடி’ என்று அழைக்கப்படுகிறாள். அந்த கதையை கேட்டு முடித்ததும் மெய் சிலிர்த்துப்போனாள் அபிநயா. அடுத்தநாள் குற்றாலத்துக்கு போகலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் கைடாக நியமிக்கப்பட்டவர் குற்றாலம் வேண்டாம் என்று மறுத்தார். அருவியில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் குளிக்க தடைவித்திக்கப்பட்டுள்ளது. என்ற கூடுதல் தகவலையும் தெரிவித்தார். அதனால் அங்கு போவதை நிறுத்திவிட்டு அடுத்த முறை வந்தால் பார்த்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். எப்படியோ குளிக்கலாம் என்று சொன்னாலும் தன்னை குளிக்க அனுமதிக்க போவதில்லை என்று பெருமூச்சி விட்டாள் அபிநயா.

அதன் பிறகு சுற்றி பார்ப்பதை விட்டுவிட்டு சுபாவின் திருமணத்திற்கு கூட மாட உதவிகள் செய்வதென்று இறங்கிவிட்டார்கள். நகைநட்டு சீர்வரிசை பாத்திரங்கள் என்று அபிநயாவின் அப்பா அம்மா கிளம்பிவிட அபியை அழைத்துக்கொண்டு பர்சேஸ் பியூட்டிபார்லர் என்று சுபாவும் அபியும் நேரத்தை கடத்தினார்கள். அப்படி இப்படி என்று நாள் நகர்ந்து திருமணத்தேதி நெருங்கி வந்துவிட்டது. விடிந்தால் திருமணம்.

மாப்பிள்ளை அழைப்பு;

திருமணத்திற்கு முதல் நாள், மாப்பிள்ளை அழைப்பு வெகு விமர்சையாக நடைபெற்றது. வெளியூரிலிருந்து வந்திருந்த நண்பர்கள், உறவுக்காரர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் என தடபுடல்பட்டது.

மாப்பிளை அழைப்பை தொடர்ந்து பெண்அழைப்பு நடைபெற்றது.

சுபாவிற்க்கு அறுகு, காசு, பால் தலையில் வைத்து நீராட்டினார்கள். பிறகு மணப்பெண் போல் அலங்கரித்தார்கள் ஊருக்கு வெளியே அம்மன் கோயில் அருகே அலங்கார பதுமையாய் நின்றிருந்தாள் சுபா. அம்மன் கோயில்தான் அவங்களுக்கு குலதெய்வகோயில் என்பதால் அங்கு பூசை செய்யப்பட்டு, மணப்பந்தலுக்கு அதாவது திருமணமண்டபத்துக்கு சுபாவை அழைத்து சென்றார்கள்.

அன்று இரவெல்லாம் தோழிகள் இருவரும் கேலிப்பேசி சிரித்து இரவை கடத்தினார்கள். அடுத்தநாள் அதிகாலை முகூர்த்தம் என்பதால் பெண்ணுக்கு அலங்காரம் பண்ண தனி அறைக்கு அழைத்து சென்றார்கள். இரவெல்லாம் தூங்காததால் ஒரு குட்டி தூக்கம் போடலாம் என்ற எண்ணத்தோடு கண்களை மூடி சுருண்டுகிடந்தாள் அபிநயா. திடீரென்று அருகில் இருந்த சுபாவின் போன் அடிக்கவே அவளை தொந்தரவு பண்ண வேண்டாம் என்று இவளே காலை அட்டன் பண்ணினாள்.

“அலோ...”
மறுமுனையில் ஒரு ஆணின் குரல் கேட்டது.

“அலோ... சாரிடா செல்லம், என்னால் உன் கல்யாணத்துக்கு வரமுடியவில்லை. சாரி...நான் எவ்வளவோ ட்ரை பண்ணினேன்... லீவு கிடைக்கலை. உனக்கு என்ன வேணும் சொல்லு... உடனே வாங்கி அனுப்புறேன்.”
அபிக்கு தர்மசங்கடமாவும் அதே சமயம் கோபமாகவும் வந்தது. ஒருவருக்கு போன் பண்ணினால் அந்த போன்காலை யாரு வேண்டுமானாலும் அட்டன் பண்ணலாம் அல்லவா? மறுமுனையில் யார் பேசுகிறார்கள் என்று உறுதி படுத்தாமலே லொடலொட வென்று பேசிக்கிடே போனால் என்ன அர்த்தம்?

“அலோ.. என்னடா எதுவும் பேசமட்டுறே...”
மீண்டும் அவன் குரல்.

“அலோ... மிஸ்டர் உங்களுக்கு யார் வேண்டும். முதலில் அதை சொல்லிவிட்டு அப்புறம் பேசுங்கள்...”
சற்று நேர அமைதிக்குப்பின் அனலாய் இறங்கியது அவனுடைய குரல்.

“அலோ.. நீங்க யாருங்க? இது சுபாவோட போன் இதை நீங்க ஏன் அட்டன் பண்ணுறீங்க? மத்தவங்க போனை அவங்க பர்மிஷன் இல்லாமல் எடுக்க கூடாதுன்கிற காமன் சென்ஸ்கூடவா இல்லை..”
அவ்வளவுதான் அபிக்கு வந்ததே கோபம்.

“இதோ பாருங்க மிஸ்டர்... அவங்க அவங்க போனை அவங்க அவங்கத்தான் எடுக்கனுங்கிற சட்டம் ஒன்னும் கிடையாது. எமர்ஜென்சிக்கு யார் வேணுனாலும் எடுக்கலாம். இதுகூட தெரியாத நீங்க காமன் சென்சைப்பத்தி பேசுறிங்களா...?”

“உங்ககிட்ட என்னங்க பேச்சி... நீங்க சுபா கிட்ட போனை கொடுங்க நான் அவகிட்ட பேசிக்கிறேன்...”

“ம்ம்... அதை முன்னாடியே சொல்லி இருக்கலாமில்ல தேவையில்லாம என் தூக்கத்தை கெடுத்து.... “
கோபத்துடன் முனுமுனுத்தப்படி எழுந்து சென்று சுபாவிடம் போனை கொடுத்தாள்.

“யாரோ உன் கிட்ட பேசணுமாம். காலக்காத்தல உயிரை எடுக்குது சாவு கிராக்கி..”
சத்தமாக பேசியப்படி வெளியில் வந்தவளை ஒரு நிமிடம் நில்லு என்று செய்கை காட்டிவிட்டு போனில் பேசினாள் சுபா. அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாக நின்றாள் அபிநயா.

“ஏய்... என்னாச்சிடீ ஏன் இவ்வளவு கோபமா இருக்கே? மும்பயிலிருந்து அண்ணன் பேசினிச்சி... அதுவால கல்யாணத்துக்கு வர முடியலையாம். ஆமாம் உங்கிட்ட ஏதாவது ஏடாகூடமா பேசினிச்சா?”

“ அதெல்லாம்... ஒன்னுமில்ல , நீன்னு நினச்சி பேசினாரு போல...ஆமாம் உனக்குத்தான் அண்ணனே இல்லையே இது யாரு?”

“பெரியம்மா பையன்டி... அதாவது அம்மாவோட அக்கா பையன்... மும்பையில மாஸ்டர் டிகிரி படிக்குது. பேரு கார்த்திக் நான் அடிக்கடி சொல்லுவேனே மனோஜ் அண்ணன்னு டாக்டருக்கு படிச்சிகிட்டு இருக்குன்னு சொன்னேனே அந்த அண்ணனோட தம்பிதான் இது. பெரியம்மா மட்டும் கன்னியாக்குமரியில இருக்காங்க இதுங்க ரெண்டும் வெளியூர்ல படிக்குதுங்க. பெரியம்மா கல்யாணத்துக்கு வருவாங்க அவங்களை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.”

“அவரு யாராவேனா இருந்துட்டு போகட்டும். ஆனால் மத்தவங்ககிட்ட எப்படி பிகேவ் பண்ணுறதுன்னு கூட தெரியலை. நீயாவது கொஞ்சம் சொல்லிக்கொடு...” என்றவள் அதற்குமேல் அங்கு நிற்காமல் அறைக்கு வந்து புகுந்துக்கொண்டாள்.

அவளின் மனது சமாதானம் அடைய மறுத்தது. எவ்வளவு திமிராக பேசினான். முன்னே பின்னே தெரியாதவர்களிடம் எப்படி பேசுவது என்கிற இங்கிதம் கூட தெரியாதவனெல்லாம் எப்படித்தான் கல்லூரி வரை வந்துச்சிங்களோ? மனது குமைந்துகொண்டிருக்க அந்த நேரத்தில் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள் அபிநயாவின் அம்மா.

“என்னம்மா... இன்னமும் ரெடியாகலையா! மணி அஞ்சாகப்போவுது பாரு...”

“இதோ... பைவ்மினிட்ல குளிச்சிட்டு வந்துடுறேன்மா...”

"சீக்கிரம்....வா" அம்மா கோபத்தோடு கூறினாள்.

முன்பெல்லாம் மிகவும் கருசணையோடு பேசுவாள். அதை நினைத்தமாத்திரம் கண்களில் குளம் கட்டியது.

“தலைக்கு ஊத்திக்காதே உன் தலைமுடி காய ரொம்ப லேட்டாகும்...”
அம்மா சொல்லுவது உண்மைதான் இடுப்புக்கும்கீழ் நீண்டு கிடக்கும் அடர்ந்த கூந்தலை காயவைப்பது மிகமிக கடினம்தான். இவளும் எத்தனையோ முறை சொல்லிப் பார்த்துவிட்டால் ‘அம்மா இந்த முடியை மெய்ன்டன் பண்ணவே முடியவில்லை. கட் பண்ணிடவா? என் ப்ரண்ட்ஸ்களெல்லாம் எவ்வளவு அழகா முடி வெட்டிகிட்டு திரியுராளுங்க தெரியுமா?”’
பொண்ணுக்கு முடிதாண்டி அழகு அந்த காலத்திலே என் மூடி மேல் ஆசை வச்சிதான் உன் அப்பாவே என்னை கல்யாணம் பண்ணிகிட்டாரு தெரியுமா? என்று அம்மா சொல்ல, அம்மாவை முந்திக்கொண்டு பாட்டியும் அதே கதையை சொல்லுவாள். அம்மாவும் பாட்டியின் பேச்சிக்கு ஒத்து ஊதவே மறு பேச்சி பேசமுடியாமல் விலகி சென்றுவிடுவாள்.. இந்த முடி அவளுக்கு பெரும் பிரச்சனைதான். நேற்றுக்கூட திருமணத்திற்கு வந்திருந்த இரண்டு பெண்கள் இவள் காதுபடவே கிண்டல் அடித்துவிட்டு சென்றார்கள். இந்த காலத்துல இவ்வளவு நீட்டு முடியா? இதை பின்ன இதுங்களுக்கெல்லாம் எப்படித்தான் நேரம் கிடைக்குதோ? எனக்கு என்னமோ அது ஜவுரி முடியாஇருக்குன்னு தோணுது. என்று மற்றொருத்தி சொல்ல, ‘நீங்க வேணுன்னா இழுத்துப்பாருங்க இது உண்மையான முடித்தான்.’ என்று இவள் கத்திய சத்தம் தொண்டை குழிக்குள்ளே சுருண்டுவிட்டது.


“என்னம்மா... கல்யாணப்பொண்ணு ரெடியா? நேரமாகுதா சீக்கிரம் வரசொல்லுறாங்க, நம்ம அபி ரெடியாயிட்டாளா?” அறைக்கு வெளியில் அப்பாவின் குரல் கேட்டது.

“நீங்கப்போயி... மத்த வேலையை கவினிங்க நாங்க பொண்ணை கூட்டிட்டு வரோம்.”

சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மணமகனின் இடது புறத்தில் அமர்ந்தாள் மணப்பெண் சுபா.

வேத மந்திரங்கள் முழங்க யாகத்தின் முன்பாக குத்துவிளக்கு ஏற்றி மாங்கல்ய பூஜை செய்து பின்னர் மாங்கல்யத்தை உறவினர்கள் தொட்டு ஆசிர்வதித்தனர். அதனை தொடர்ந்து பல்வேறு சாஸ்த்திர சம்பிராதயங்கள் நடைபெற்றன. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். தொடர்ந்து நெற்றியில் குங்குமம் இட்டு மாலையும் மாற்றிக்கொண்டனர். அதனை தொடர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து மெட்டி அணிவித்தார் மாப்பிள்ளை. அதன் பிறகு அரசாணிக்கால் அக்குராப்பணம் இரச்சாபந்தனம் என்று பல சடங்குகள் செய்தார்கள்.


இதையெல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்தப்படி நின்றிருந்தாள் அபி.

“என்னம்மா எல்லாமே புதுசா இருக்கு? இவ்வளவு நேரமா பார்மாலிட்டீஸ் எல்லாம் பண்றாங்களே இப்படித்தான் எல்லா கல்யாணத்திலேயும் பண்ணுவாங்களா?” தாயின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்..

“இதெல்லாம் பார்த்து தெரிங்கிக்கனும் என்பதால்தான் உன்னை இந்த கல்யாணத்திற்கு அழைத்துவந்தோம். ஏன்னா நம்ம இனத்து கல்யாணமெல்லாம் இப்படிதான் பண்ணுவாங்க. உன் கல்யாணமும் இப்படி நடக்கனுன்னுதான் நாங்க ஆசைப்படுறோம். நீ என்னடான்னா... ” என்று பேசிக்கொண்டே போனவள் அபியின் முகம் சோர்வதை பார்த்துவிட்டு,


"சரி...சரி...மசமசவென நிக்காம சுபா பக்கத்துல போய் நில்லு... இன்னும் ஒன்னு தெரியாத சின்னப்பிள்ளையாவே இருக்குறா என்று அருகில் நின்ற பெண்ணிடம் பேச்சை திசை திருப்பி சமாளித்துக்கொண்டிருந்தாள்"


அம்மா சொல்லுவது உண்மைதான். பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். அவளின் பத்தாவது வயதில் அப்பாவின் வேலை பெங்களுருக்கு மாற்றலாகியதால் குடும்பத்தோடு இவர்கள் பெங்களூர் போக வேண்டிய சுழ்நிலை. ஆனால் அபியில் படிப்பை காரணம் காட்டி மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வரவேண்டியதாகிவிட்டது.

வீட்டிற்கு தலைப்பெண் என்பதால் பொத்திபொத்தி வளர்த்தார்கள். வெளிவுலக அனுபவம் என்பது அவளுக்கு சுத்தமாகவே இல்லை.

சுபாவின் திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. திருமணத்திற்கு வந்திருந்த உறவு காரர்களிடம் இன்முகம் மாறாமல் பேசி சிரித்தபடி வலம் வந்து கொண்டிருந்தாள் அபிநயா.
இறுதியாக மணமக்களுக்கு பரிசளிக்க தன் பெற்றோருடன் மேடைக்கு ஏறியபோது,


"பெரியம்மா இவ அபிநயா!! அபி இது எங்க பெரியம்மா...பேரு சுந்தரியம்மா கன்னியாகுமரியில் ‘விஏஒ’ வாக இருக்காங்கன்னு சொன்னேனே அவங்கதான்.”

சுபா சொன்னதுப்போல் நியாபகம் இல்லை என்றாலும் சும்மா தயையாட்டி வைத்தாள்.

“பெரியம்மா இவ என்னுடைய சின்ன அத்தையோடு பொண்ணு... நீங்க பார்த்திருக்க மாட்டீங்க இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் எங்க ஊருக்கே வந்திருக்கா... இவங்க என் மாமா என்னுடைய சின்ன அத்தை" என்று பரஸ்பரம் இரு தரப்பினரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் சுபா.

“இவங்க நிம்மியோட அண்ணன் அண்ணி தானே? நல்லாவே தெரியும். உங்க தங்கை நிம்மி என்னுடைய கிளாஸ் மேட்.” என்று அபியின் அப்பாவை பார்த்து சொன்னாள் அந்த பெரியம்மா.

"பொண்ணு சென்னையில் படிக்கிறாளா? பல வருஷத்துக்கு முன்னாடி உங்கள சந்திச்சு இருக்கேன்னு நினைக்கிறேன். அதுதான் சட்டெனு அடையாளம் கண்டு கொள்ள முடியல " என்று ஆவலோடு பேசினாலும் அந்த பெரியம்மாவின் பார்வை முழுவதும் அபி மேல்தான் இருந்தது.
அதன் பிறகு அபியின் அப்பா அம்மா அந்த பெரியம்மா சுந்தரியோடு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்று அவர்கள் பேசியது என்னவென்று இப்பொழுதுதான் இவளுக்கு புலனானது. அன்றே என் இரண்டு மகன்களில் யாராவது ஒருத்தனுக்கு உங்க பெண்ணை தரவேண்டும் என்ற ஒப்பந்தம் பண்ணியிருக்கிறாள். சில வருடங்களுக்குப் பிறகுதான் அதை இவள் அம்மா இவளிடம் சொன்னாள்.

முதல் பையன் டாக்டராகியவுடன் அவனுக்கு அபிநயாவை பெண் கேட்டிருக்கிறார்கள். அப்போ அபிநயா இருந்த மனநிலையில் பெற்றோர்கள் வாக்கு கொடுப்பதற்கு தயங்கியிருக்கிறார்கள். அவள் படிப்பு இன்னும் முடியவில்லை. ரெண்டு மூணு வருஷம் ஆகும் நீங்க வெயிட் பண்ண வேணாம். ரெண்டாவது பையனுக்கு வேணா பாக்கலாம் என்ற முடிவை சொல்லி இருக்கிறார்கள்.

பெரிய பையன் மனோஜ்கு வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் நடந்தேறியது. இப்போது இரண்டாவது மகன் கார்த்திக்காக அடி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முறை பெற்றோர்களின் தீவிரம் இவளை யோசிக்க வைத்தது. இனியும் காலம் கடத்தாமல் வேழவேந்தன் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலோடு இங்கு வந்து இறங்கினாள்.

" ஹலோ.... ஹலோ... காரை கொஞ்சம் முன்னாடி எடுக்க முடியுமா...?" வெளிக்காற்று வேண்டி இடதுபுறம் டோர் கண்ணாடியை பாதி இறக்கி வைத்திருந்தாள் அபிநயா. அதன் வழியாக யாரோ அழைக்கும் குரல் கேட்கவும்,

பழைய நினைவிலிருந்து விடுபட்டவள் கண்களைத்திறந்து இடது பக்கமாக திரும்பினாள். அங்கே அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
 
Last edited:
என்னம்மா சுந்தரியின் மகன் கார்த்திக் போலீஸ்காரனை அபிநயாவுக்கு வில்லனாக்கிட்டீங்களே
கார்க் கதவைத் தட்டியது வேழவேந்தன்தானே
 
என்னம்மா சுந்தரியின் மகன் கார்த்திக் போலீஸ்காரனை அபிநயாவுக்கு வில்லனாக்கிட்டீங்களே
கார்க் கதவைத் தட்டியது வேழவேந்தன்தானே
ஹா ஹா ஹா அதுதான் சஸ்பென்ஸ்
 
Top